Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Contest Stories 2026

திசை மாறா காதல்

திசை மாறா காதல்

❤️ பகுதி – 1 ❤️

அது நள்ளிரவு வேளை . கருங் கொண்ட இருள்.. புவி முழுவதையும் தன் வசம் செய்து இருக்க , அங்கே நிழல்களுக்கும் இடம் இல்லாமல் போனது .

எங்கும் இருட்டு , எதிலும் கருமை..



Advertisement

மனித மனதில் பயத்தை மட்டுமே விதைக்க கூடிய இடமாக இருந்தது .

விண்ணை முட்டும் உயர்ந்த , அடர்ந்த மரங்களுக்கும் , மண்டிக் கிடக்கும் புதர்களுக்கும் இருப்பிடமாக அவ்விடம் இருக்க.. வீசும் ஊதற்காற்று , அவள் மேனியை அதீத குளிரால் நடுங்கச் செய்து இருந்தது .  கொடுமையிலும் கொடுமையாக , கறை படிந்த  மஞ்சள் நிலவிற்கும் அம்மரங்கள் வழி விடவில்லை  .

அத்தகைய பெரிய காட்டிற்கு நடுவில் , தனித்து.. தன்னந்தனி ஆளாக நின்று இருந்தாள் சுடர் ஒளி . சுடரின் மேனி எங்கும் அச்சம் பரவி இருந்தது .

Advertisement

‘ அவளுடன் வந்தவர்கள் எங்கே சென்றார்கள் ? ‘ ,  என்று அவளுக்கு தெரியவில்லை . ‘ அவள் எப்படி தனித்து இங்கு வந்தாள் ?’,  என்று முற்றிலும் புரியவில்லை . தட தடக்கும் இதயத்தை இறுக்கிப் பிடித்தவாறு பெரும் தவிப்புடன் நின்று இருந்தாள்  ‌.

Advertisement

சுடர் ஒளி.. பெயருக்கு ஏற்றார் போல் என்றும் புன்னகை என்ற சுடரை , தன் இதழ்களில் ஒளிர வலம் வருபவள் . ஆனால் , இந்த நொடி , அவள் முகத்தில் அப்பிய பீதியாலும், முத்து முத்தாக அரும்பிய வியர்வைத் துளிகளாலும் ,  தன் ஒளி இழந்து , மிரண்டு போய் காணப்பட்டாள் ‌.

ஊசி இலை காட்டில் , எங்கோ ஒலித்த ஓநாயின் ஊளை சத்தத்தால் அதிகமாக கிடு கிடுத்தவளுக்கு.. தனக்குப் பின்னால் , ஏதோ கரிய உருவம் நெருங்கி வருவது போன்ற அச்சுறுத்தலையும் தவிர்க்க முடியவில்லை.. இலைகளை உரசி சலசலத்து வீசிய குளிர் காற்றினாலும் , அவளது வியர்வை நிற்காது  , தொப்பலாக நனைந்தவளாக நின்று இருந்தாள் .

‘ நான் தைரியமானவள்.’,  என்று பீற்றிக் கொள்வதற்காக , நக்கல் அடித்துக் கொண்டு நண்பர்களோடு பார்த்த பேய் படங்களின் நினைவுகள் வேறு அதிகமாய் வதைக்க.. எந்த பக்கத்தில் இருந்து என்ன வருமோ.. என்ற பயமும் சேர்ந்துக் கொண்டதில் , பின்னால் திரும்பிப் பார்க்கவும் அஞ்சியவளாக நடுங்கிக் கொண்டு இருந்தவளின்  அருகே , திடீரென்று ஒலித்த அந்த வித்தியாசமான அலறலில் ,  பின்னங்கால் பிடரியில் தெறிக்க.. அக்கம் பக்கம் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு ஓடத் தொடங்கி விட்டாள்.

Advertisement

பாவம் , அவள் கால் அருகே இருந்த.. அந்த பெரிய தவளை , சுடரின் நிலையை உணராது ..அதன் இணையை அழைப்பதற்காக கரைதல் ஒலியை ஓங்கி எழுப்பியது என்று அவளுக்கு யார் கூறுவது !

தன் உயிரை வெளியே எடுத்து விடுவது போல் , மிக அருகில் கேட்ட சத்தத்தை ஆராயும் எண்ணம்.. கடுகளவும் இல்லாதவளாக , நட்ட நடுக்காட்டில்  , கண் மண் தெரியாமல் விழுந்து புரண்டு ஓடியவள் , மறந்தும் அவளது விழிகளை திறக்கவில்லை ‌. ஒரு கட்டத்திற்கு மேல் , சுடர் ஒளியின் கால்கள் வலுவிழந்து , மூச்சும் அதிகமாக வாங்கிய பிறகே , இரு முட்டிகளையும் குனிந்த நிலையில் பற்றிக் கொண்டவளாக , சற்று தன்னை ஆசுவாசம் செய்து கொண்டு நிமிர ,  நிமிர்ந்தவளின் விழிகள் மேலும் அகலமாய் விரிந்து , தெறி விழுவது போல் ஆனது .

மிகப் பெரிய மாளிகை.. ‘ இங்கே இது எப்படி.. ? “, என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படியே , அவளுடைய ஒரு மனம் ஆராய்ச்சியில் ஈடுபட.. மற்றொன்றோ , “முதல்ல இங்கு இருந்து போய் தொலை டீ..!  “, என்று அவசரப்படுத்தியது .

அம்மாளிகை  மிகவும் பழமையானதாக இருந்ததாலோ என்னவோ.. வயோதிகரின் மேனியை அலங்கரத்த கிழிசல் ஆடை போல் துகில் உரிந்த நிலையில் வெளிப்புறச் சுவர்களின் சுண்ணாம்புப் பூச்சு , ஆங்காங்கே கிழிந்து தொங்கிக் கொண்டு இருக்க..

அந்த இருட்டிலும் , அக்கட்டிடத்தை கண்டவளுக்கு ,  செதுக்கப்பட்ட கரும்பாறை போலவே காட்சி அளித்து‌ பிரம்மிக்க செய்து , அதன் எழிலும் கம்பீரமும் தொலையாததாகவே தோன்றச் செய்தது.

கட்டடக்கலையை பற்றி விரும்பி படித்து.. அந்த துறையிலேயே வேலைப் பார்ப்பவளுக்கு கண்முன் வியப்பை ஏற்படுத்தும்.. அந்த பிரம்மாண்ட பழைய மாளிகையை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாதவாள்.. உள்ளே சென்று பார்க்க , அவளது கால்கள் பரபரக்க.. எச்சரிக்கும் மனத்தை துச்சமாக தூக்கிப் போட்டவளாய் , உள்ளே செல்ல முடிவு எடுத்தாள் .

அவ்வாறு , அவள் முடிவு செய்த போதிலும்..சுடரின் இதயம் ரயில் இன்ஜினை விட வேகமாக தட தடக்க.. அந்த ஓசையும் , புது ஒலியாய் இருட்டில் எதிரொலித்து , அவளுக்கு அதிகமாக பயமுறுத்தியது . அதனை அலட்சியம் செய்து , குருட்டு தைரியத்தை வருவித்தவளாக , ஓர் அடி எடுத்து வைப்பதற்காக..  அவளுடைய இடது காலை தூக்கிய கணம் , பின்னிருந்து ஒற்றை வலிமையான கரம் அவளுடைய வலது தோளை அழுத்தமாக பற்றிக் கொள்ள…

” ஆ… ஆ.. ” என்று அலறியவளாய்..  திடுக்கென்று , விழிப்பு ஏற்பட்டு அமர்ந்துவிட்டாள்  . அரை விநாடி , சுற்றத்தை மறந்து , காய்ந்த தொண்டையை எச்சில் விழுங்கி நனைத்த பிறகே , இருக்கும்  இடம் புரிய.. திரு திருத்தவளாக , விழிகளைச் சுழற்றி சோர்ந்தவளாய் ஆராய .. இதுவரை ,  கண்டது அனைத்து கனவு என்று தெளிவாக புரிந்துக் கொண்டாள் .

சுடர் மெத்தையில் அமர்ந்த நிலையிலேயே , கைகளால் முகத்தை மூடிக் கொண்டு ‘ உஃப்..’, என்று காற்றை வெளியேற்றி தன்னை ஆசுவாசம் செய்த பிறகும்.. அதில் இருந்து சிறிதளவும் அவளால் வெளி வரவே முடியவில்லை. அனைத்தும் , உண்மையான நிகழ்வு போலவே இருந்தது .

மடக்..மடக்.. என்று அருகில் இருந்த  நீரை எடுத்து அவசரமாக குடித்தவளாள்.. இதுவரை , கண்ட காட்சிகளில் இருந்து விடுபட முடியாமல் போனதாய் . எத்தனை மணி நேரமாக , திக்..திக்… என்ற நிலையில் , கனவிலேயே மூழ்கி இருந்தாளோ தெரியவில்லை. இந்நொடி வரை , கடுகளவும் அதன் தாக்கம் குறைந்து இருக்கவில்லை .

சொல்ல போனால் .. நேரத்தை ஆராயவும் அவளுக்கு அச்சமாக இருந்தது . இப்பொழுதும் , மணி சாமத்தை கடக்கவில்லை என்றால் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் அவள் உயிர் நிச்சயம் பறி போய்விடும் என்றே அவளுக்கு தோன்றியது ‌.

ஆனாலும் , அவளது கண்கள் அடங்காமல் ஆராய , அது அதிகாலை ஐந்து முப்பது என்று காண்பித்த பிறகே , சுடரின் உயிர்மூச்சு நெஞ்சுக்குழிக்குள் நிம்மதியாக அமர்ந்துக் கொண்டது .

‘ ச்சே.. என்ன கனவுடா இது. மணியை தெரிஞ்சுக்கவும்  ஈரக்குலைய நடுங்க வச்சிடுச்சு ‌.. ச்சே.. இப்பவும் ஓடின ஃபீல் குறைய மாட்டேங்குதே .. ஆ..ஹா.. வெறும் கனவுக்கா இப்படி என் ஹார்ட் துடிக்குது.. அம்மாடி..  “, என்று தன் நெஞ்சில் கை வைத்து ஆராய்ந்தவளால், அதன் தாக்கத்தில் இருந்து வெளி வர முடியாது போகவே , தன் பின்னந்தலையை தட்டிக் கொண்டு வெளி வரத் துடித்தவளாக ,  பொத்தென்று மெத்தையில் வீழ்ந்தாள் .

” உஃப்.. ஜஸ்ட் ட்ரீம் சுடர்.. ரிலாக்ஸ்.. நல்லவேளை அந்த கௌசிகா .. இங்க இல்லை.. இருந்திருந்தா.. என் கதி அதோகதிதான்.. ஒரேடியா ஓட்டி எடுத்திருப்பா.. ” என்று உச்சந்தலையில் தட்டிக் கொண்டே தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டாலும்  ,

அந்த தொடுகையில் இருந்து அவளால் வெளி வரவே முடியவில்லை . தன் போல் சுடரின் இடக்கரம் வலத் தோளை பற்றிக் கொண்டு , ” யாரு என்னை தொட்டது.. அண்ணனா இருக்குமோ.. ச்சே.. ச்சே.. அது அண்ணன் மாதிரி இல்லை.. வேற யாரு.. ஸ்..ஸ்.. “, என்று உடல் சிலிர்த்தவள்..

” அது எதுவோ.. ஆனா மொத்தத்தில அல்லுவிடுதுடா  சாமி.. பார்ப்பியா.. கண்ட பேய் படம் உதார் விட பார்ப்பியா..”, என்று வேகமாக கன்னத்தை தட்டிக் கொண்டு தன்னைத்தானே திட்டிக் கொண்டவளுக்கு .. அதற்கு மேல் படுக்கையில் இருக்கவும் விருப்பமற்று போக , தங்கி இருந்த அறையின்  திரைசீலையை மெதுவாக  விலக்கினாள். இளவேனிற் காலமாக இருக்கவே.. சூரியனும் நன்கு புலர்ந்திருந்தான்.

அதன் இதமான வெளிச்சமும் , தென்றலின் வருடலும்.. கீச்..கீச்சென்று கேட்ட பறவைகளின் சத்தமும் சுடரின் மனதை மெது மெதுவாக இளைப்பாற்றியது .

********

தன் அலைபேசியில் அடித்த அலாரத்தை  நிறுத்திய ரித்தன்யா, படுக்கையறையில் கதவை திறந்து வெளிவர , தினமும் அவளது பார்வை பதியும் இடம்.. நடுவறையில் நேராக , மாட்டப்பட்டிருக்கும் ஓவியத்தின் மீதுதான் .

அது ஒரு எழில் மிகு நவீன ஓவியம் .  தாய் தன் ஐந்து வயது சிறுமியை வயிற்றில் அமர வைத்த நிலையில் இதழ் பதித்துக் கொண்டிருக்கும் படம் , அதன் கீழ்..

  ” இருப்பவன் மறப்பது

இழந்தவன் தவிப்பது 

தாய் அன்பு ” 

–  கிறுக்கனின் கிறுக்கல் ..

என்று சிறு கையெழுத்தும் தெரியும் .  கவிதையுடன் மாட்டப்பட்ட வரைப்படத்தின் மீது பார்வை பதிக்காத நாட்கள் என்பதே அவளுக்கு இல்லை .

அது கிறுக்கனின் கிறுக்கல் அல்ல கோர்த்திற்கும் சொற்களால் மட்டுமல்லாது வரைப்படத்தின் மூலமாகவும் பளிச்சிடும் இருவருடைய இழப்பின் வெளிப்பாடு .

ரித்தன்யாவிற்கு  மட்டும் பிடித்தமான ஓவியம் அல்ல  சன்னலின் வழியாக கோடாய்  விழும் சூரியனுக்கும் அப்படத்தின் மீது அலாதி பிரியம் உண்டு.

கடல் நீலம் , பாசி பச்சை மற்றும் வெள்ளை என்ற நிறங்களால் தீட்டப்பட்டு இருக்கும் உருவங்களின் மீது  பட்டு தெறித்து , தன் இயற்கை ஒளியாலும் பளிச்சிட செய்து , கூடுதல் அழகை சேர்த்து விடுவான் . அந்த அழகு ஓவியத்தை இரு நிமிடங்களாவது ரசிக்காமல் , இதுவரை அவளுடைய பொழுதுகள் புலர்ந்தது இல்லை ‌ .

மிகவும் அருமையான கவிதையை.. கிறுக்கனின் கிறுக்கலாக எழுதியவன் அவளின் அருமை காதல் கணவன் அறிவழகன் என்றால் அவ்வோவியத்தை தீட்டியவள்.. அவனது அருமை தங்கை , அவளது ஆருயிர் தோழி சுடர் ஒளி .

அவன் அவ்வாறு எழுதிய பின் ,  ” நீ எப்படி அவ்வாறு எழுதலாம் “, என்று.. அன்று சுடர் போட்ட சண்டையும் , நாள் முழுவதும் அழுது செய்த ஆர்ப்பாட்டமும் கொஞ்ச நஞ்சமல்ல.. அவளை சமாதானம் செய்ய இரவு உணவிற்காக ஆடம்பர உணவு விடுதிக்கு , அவர்கள் சென்று வர நேர்ந்தது .

அந்த படம் கண்ணில் படும் சமயம் எல்லாம்.. சுடர் செய்த கூத்து நினைவில் எழுந்து, தன் போல்  ரித்துவின் இதழ்களில் புன்னகை அரும்பச் செய்துவிடும்  .

இன்றும் மாற்றமே இல்லாமல் , அவளது இதழ்கள் புன்னகை புரிந்தாலும் ஏனோ ,  இரு பெரிய குழந்தைகளின் தாய் இல்லா ஏக்கம் அப்பட்டமாக தெரிவதை தவிர்க்க முடியாது போனதாய்  .

ஒருவேளை , இருவரின் ஏக்கத்தை அவள் கண்டுப் பிடித்து விடக் கூடாது என்றே சிறுமியை போல் , அன்று ஆர்ப்பாட்டம் செய்து இருப்பாள் போலும் , அது என்னவோ , இன்றே.. முதல்முறையாக இந்த நினைப்பு எழுந்து..சுடரின் நினைவால் அவளுடைய மனம் அதிகமாக பிசைய ,

” ச்சே.. என்னடா இது.. காலையிலேயே.. இந்த மாதிரி  நினைப்பு வருது.. டைம் கிடைக்கும் போது எட்டு முதல்ல சுடருக்கு அழைக்கணும்..  “, என்று கூறிக் கொண்டவளாய் , தன் தலையை சிலுப்பியவளாக.. விறுவிறுவென நகர்ந்து வாயில் கதவை திறந்து , கோலம் போட சென்றுவிட்டாள் .

இரு படுக்கை அறைகள்.. ஒரு பெரிய நடுவறை , நெருக்கடிகள் இல்லாத சற்று புழக்கத்திற்கு ஏதுவான சமையற்கட்டு என்று மிகவும் கச்சிதமான தனி வீடு. அவர்களது  சொந்த வீடும்  கூட.. அவள் , அவளது கணவன் , மகள் சிவா மற்றும் சுடர் ஒளி  என்று நால்வர் வசிப்பதற்கு மிகவும் தாராளமான வீடு என்றே கூறலாம் . அவர்கள் வசிக்கும் தெருவில் பல வீடுகளில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கு என்று ஆட்களை நியமித்து இருக்க.. ஏனோ , அதில் ரித்துவிற்கு முற்றிலும் விருப்பம் இல்லை .

அதற்கு , அவளுடைய அன்னை ஏற்படுத்திய பழக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம் .

கோலம் போட துவங்கியதில் இருந்து மடமடவென அவளது அன்றாட வேலைக்குள் , மற்றதை மறந்து மூழ்கிவிட்டாள் .ஏழு மணியளவில் ,  பள்ளிக்கு ஆயத்தமாக மகளை எழுப்ப வந்தவளுக்கு , குப்புறப்படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கணவனை எழுப்ப மனம் வரவில்லை .

அவன் வேலைகளை முடித்து , உறங்க வர நள்ளிரவை தாண்டியிருந்தது . அதனால், சத்தமில்லாமல் உறங்கும் மகளை தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று , சிறுமியின் முகத்தை நீரால் துடைத்து விழிக்கச் செய்தாள் .

தூக்க கலக்கத்தில் சிணுங்கி ,தொல்லை செய்தவளை நிதானத்திற்கு கொண்டு வருதற்குள் ரித்தன்யாவிற்கு பெரும்பாடாகிவிட்டது .

‘ சுடர் இங்கு இருந்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருப்பாள்..’, என்ற எண்ணத்தோடு .. மகளை மிரட்டி உருட்டி பல் துலக்கிவிட்டவள்.. காலை கடனை முடித்து அழைக்க கட்டளையிட்டு ,  அறை குறையாக விட்டு வந்த சமையலை கவனிக்க சென்றுவிட்டாள்  .

எட்டு முப்பது மணிக்கு சிவாவை ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பும் வரை , வீடே போர்க்களமாகிப் போனது.

‘ அப்பா ஒருவழியா கிளம்பீட்டா.. ‘, என்று  முணுமுணுத்துக்  கொண்டே இரும்பு கதவினை தாழிட்டு வந்தவள்.. நொடியும் தாமதிக்காமல் , அவள் பணிபுரியும் பள்ளிக்கு தயாராக தொடங்கி விட்டாள் .

அணிந்து இருந்த சுடிதாரில் இருந்து, புடவைக்கு மாறியவள்.. கண்ணாடி முன் நின்று தலைமுடியை பின்னிக் கொண்டு  இருக்க.. உறக்கம் கலைந்தும்.. கலையாததுமாய் , அரைகுறையாக விழித்த அறிவு , மனைவியை ரசித்துக் கொண்டு இருந்தான் .

கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல்வாகு , பளிச்சென்ற மஞ்சள் நிற தேகம்.. உருண்டயான வட்ட நிலவு முகம் . அதில் ,  கோழிக்குண்டு கண்கள் , கடித்து திண்ண தூண்டும் இரு கன்னங்கள் ,  செதுக்கிய செம்பவள இதழ்கள் என்று இதமான ரசனையை ஏற்படுத்தும் அழகு உடையவளை படுத்த நிலையிலேயே அணுவணுவாய் பார்வையால் பருகிக் கொண்டிருந்தவன்.. அவள் கிளம்புவதில் மட்டுமே முனைப்பாக இருப்பதைக் கண்டு , ” குட் மார்னிங்.. டீச்சரம்மா..”, என்று உறக்க கரகரப்புடன் கூறி அவளது கவனத்தை ஈர்க்க ,

வேகமாக திரும்பியவள் , “முழிச்சுட்டீங்களா.. டீ எடுத்து வரவா.. “, என்று பரபரத்து வெளியேற போக ,

அவள் மணிக்கட்டை பிடித்து தடுத்துவாறே , எழுந்து அமர்ந்தவன் , “எதுக்கு இப்படி ஓடுற ? ஏன் எழுப்பலை.. சிவா குட்டி கிளம்பிட்டாளா..? “, என்று மென்மையாக விசாரித்தான் .

” அப்பப்பா.. ஒருவழியா உங்க பொண்ணு கிளம்பீட்டா.. ப்பா..”, மனைவியின் சலிப்பை கேட்டதில் மென்னகை புரிந்தவனாய் ,

” நானும் என் தங்கச்சியும் இல்லாமல் என் பொண்ணை சமாளிக்க முடியலையோ.. “, என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவனாக கேலியை தொடர ,

” ரொம்ப தான்.. இன்னைக்கு நீங்களும் உங்க தொங்கச்சியுமா என் பொண்ணை கிளப்பிவிட்டீங்க.. “, என்று தெனாவட்டாக அவளும் சிலுப்பிக் கொள்ள ,

சுழித்த அவளின் கீழ் உதட்டை இரு விரல்களால் அழுத்தமாக  பற்றியவன் , “இப்போ இந்த வாய் தான டீ ஓவரா சலிப்பா பேசுனது.. “, என்றவாறே , மேலும் இருவரின் நெருக்கத்தை அதிகரிக்கவே ,

” ஸ்.. விடுங்க அறிவு.. டைம் ஆச்சு.. வம்பு செய்யாம சீக்கிரம் ரெஃபரஷ் ஆகிட்டு வாங்க.. “, என்று கணவனுக்கு தடைவித்தவளாக நகர்ந்துக் கொள்ள , நேரத்தை கவனித்தவன்.. தொடராது நகர்ந்துவிட்டான் .

ரித்தன்யா , வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் , ஆசிரியையாக பணி புரிகிறாள் . அறிவு அறையில் இருந்து வெளி வரவும்  , ” டீ.. “, என்று திணிக்க..

“ச்சு.. இப்போ இதுக்கு என்ன அவசரம் . அங்கே வை .. வந்து குடிக்கிறேன்.. டைம் ஆச்சு பாரு.. வா.. கேட் சாவி மட்டும்  எடுத்திட்டு வா.. “, என்று அவள் தடுத்ததையும் கண்டுக் கொள்ளாமல் வண்டியின் சாவியை எடுத்தவனாக வாயில் படிகளில் இறங்கி வாகனத்தை இயக்கி இருந்தான்..

ரித்தன்யாவும் , ” டீ குடிக்க எவ்வளவு நேரமாக போகுது . ஏன் அறிவு இப்படி செய்றீங்க.. மதியத்துக்கு சாப்பாடு செஞ்சு ஹாட்பேக்ல வச்சிருக்கேன்.. என்னை விட்டு வந்ததும் இட்லியும் ஹாட்பாக்ஸ்ல சூடா இருக்கும் . முதல்ல அதை சாப்பிடுங்க.. சாப்பிடாமா  படுக்க கூடாது.  காலையிலும் சாப்பிடாம.. மத்தியானமும் சாப்பிடாம நான் வர வரை தூங்கீட்டே  இருந்தீங்க..  மனுஷியாவே இருக்க மாட்டேன்.. இப்பவே , சொல்லீட்டேன்.. போனதும் முதல்ல சூடு பண்ணி அந்த டீய குடிங்க..”, என்று வாகனத்தில் ஏறியமர்ந்ததில் இருந்து  வரிசைக் கட்டியவள்.. கடைசியாக , மிரட்டல் விடுக்க ,

” போதும் ரித்து.. ஸ்கூல் வந்தாச்சு.. இறங்கு.. “, என்று சிரித்திருந்தான் .

” சிரிச்சு ஏமாத்தாதீங்க அறிவு.. நான்  சொன்னது கேக்கல..  உங்க கூட பேசவே மாட்டேன். பாய்..”, என்று கூறிக் கொண்டே பள்ளிக்குள் நுழைந்து மறைந்துவிட்டாள்.

அறிவு , சென்னை ஐடி நிறுவனத்தில் மேனேஜராக பணி புரிகிறான்.. இன்று , அவனுக்கு வார விடுமுறை . சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளை  தவிர , வரும் விடுமுறை நாட்களில் , அவன் செய்யும் ஒரே வேலை , தூங்குவது மட்டுமே.. உணவையும் மறந்துவிடுவான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் , மனைவியின் அதட்டலை நினைத்து மலர்ந்தவன்.. வேலை நிமித்தமாக சேலத்திற்கு சென்றிருக்கும் தங்கைக்கு அழைக்க ,

” சொல்லு அண்ணா.. சிவாக்குட்டி , ரித்து  ரெண்டு பேரும் கிளம்பீட்டாங்களா.. “, என்று சகோதரனின் அழைப்பால் உண்டான உற்சாத்தில் , துள்ளலாகவே சுடர் ஒளியின் குரல் ஒலித்தது .

” ம்.. ஆச்சு டா.. உனக்கு வேலை எப்படி போகுது .  நீ தங்கியிருக்கும் ரூம் பாதுகாப்பா , சௌகரியமாயிருக்கா.. நீ எப்போ கிளம்பி வர.. “, என்று அக்கறை மிகுந்தவனாக விசாரிக்க ,

“நான் வந்து ரெண்டு  நாளாச்சு.. ரூமையே காலி பண்ண போறேன்.. இப்பவும் இதையே கேக்குறியேண்ணா..”, என்று நக்கலடித்தாலும் ,..

” வேலை சக்சஸ் அண்ணா.. பதினொரு மணிக்கு ஜஸ்ட் ஃப்ரெண்லி மீட்டிங் இருக்கு. அது முடிஞ்சதும்..  சைட்ட ஒரு விசிட் பண்ணீட்டு கிளம்பீடுவோம்..  நைட்  வீட்டுக்கு வந்திடுவேன் அண்ணா..”, என்றாள் சுடர் ஒளி.

” பிக் பண்ண நான் வரவாடா.. “,  என்று காலை உணவை உண்டவனாகவே பேச்சினை தொடர ,

” ம்ஹூம்.. வேண்டா அண்ணா.. நம் நவீன் கார்ல வரேன்.. இம்சைங்க வரதுக்குள்ள.. நீ நிம்மதியா தூங்கு.. “, என்று ரித்தன்யாவையும் சிவாவையும் அவள் வம்பிற்கு இழுக்க ,

” என் பொண்டாட்டிக்கு தெரிந்தது.. “, என்று சிரிப்புடன் தங்கையை எச்சரித்தவனையும் , முழுவதுமாக தொடரவிடாதவளாய் ,

” அய்யோ.. பாசக்கார அண்ணா..  போட்டுக் கொடுத்திடாதடா.. உனக்கு புண்ணியமா போகும்.. “, என்று வேகமாக கும்பிட்டவளிடம்  ,

” ம் .. அந்த பயம்.. “, என்று சிரித்தான் அறிவு .

” எல்லா என் தலையெழுத்து.. நண்டு சிண்டுக்கு எல்லாம் பயப்பட வேண்டியதா இருக்கு.. “, என்று மூத்தவனோடு தொடர் கதைப்பில் ஈடுபட்டிருந்தவளுக்கு.. இரண்டாம் அழைப்பாக கௌசிகா விடாமல் தொடர்பு கொள்ள ,

” ம்..  ண்ணா.. கௌசி செகண்ட் லைன்ல கூப்பிட்டேயிருக்கா ..  பாய் ண்ணா..”, என்று அறிவின் அழைப்பை துண்டிக்கவும் செய்யாது , தோழியின் அழைப்பை சுடர் ஏற்க ,

” ஏய்.. சுடர்.. ரூம்ல இன்னும் என்னடி பண்ற.. சீக்கிரமா கீழ வா.. “, என்று தங்களது உயர் அதிகாரியிடம் அவள் திட்டு வாங்குவதை விரும்பாதவளாக அவசரப்படுத்த ,

” பீ கூல்.. லாக் பண்ணீட்டு இருக்கேன்.. வரேன் வை.. “, என்று சொல்லியவள்.. தன் பொருட்களை சரி பார்த்து,  அறையை பூட்டியவள்.. அதன் சாவியை நடுவிரலில் சுழற்றியவாறு , தோளில் மாட்டிய பையோடு லிஃப்ட்டை நோக்கி நடக்கலானாள் .

சுடருக்கு  லிஃப்ட்டின் கதவு திறப்பது போல் தெரிய.. மிக அவசரமாக அடி வைத்து வந்தவளின் காலை சட்டென்று ,  வளவளப்பாக இருந்த தரை அவளது காலை வழுக்கி விட்டது .

‘ தான் அவ்வளவு என்று முடிவிற்கு வந்தவள்.. ‘, இறுக்கமாக மூடிய விழிகளோடு ,  புவியீர்ப்பு விசைகேற்ப  அவளது உடல் சரிய.. ,

சுடர் ஒளியின் வலது தோளை பின்னிருந்து , அழுத்தமாக பிடித்தது ஒற்றை வலிய ஆணின் கரம்..

கனவில் , சுடர் ஒளியை கிடுகிடுக்கச்  செய்த.. அதே அழுத்தமான தொடுகை.. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!