Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –5

”பரவாயில்லை பொழைச்சிக்குவ, சரி இந்தா, இந்த நாளுக்கான தினக்கூலி, மத்தவங்களுக்கு 200 ரூபாய்தான் ஆனா நீ திறமையா கணக்கு போட்டு பில் தர்ற, ஒரு தப்பும் நடக்கலை படிக்கற பொண்ணு வேற, அதனால 300 ரூபாய் தரேன் ஆனா ஒண்ணு“ என கடை முதலாளி சொல்லவும் கண்மணி குழம்பினாள்

”என்ன சார்“ என கேட்டவளிடம்

”லீவு நாள்ல கூட நீ இங்க வந்து வேலை செய்யனும்”

”கண்டிப்பா சார் நான் வரேன்” என சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பி தனது ஹாஸ்டலை அடைய மணி பத்தானது, அந்நேரம் சாப்பாடு கூட தீர்ந்துவிட வெறும் வயிற்றில் தனது அறைக்குச் சென்று தனது கல்லூரி பாடத்தை படிக்கலாம் என நினைத்து பையில் கையை விட அவளின் கையில் முதலில் சிக்கியது புதிய கடிதம்தான், அதைப் பிரித்துப் பார்த்து முழுவதும் படிக்காமல் சட்டென பையை துலாவி பழைய கடிதத்தை எடுத்தாள்



Advertisement

”என்ன இது இரணடு இருக்கு இப்படியே விட்டா நல்லாயிருக்காது நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டறேன், அவன் யார்ன்னு பார்க்கிறேன்” என நினைத்துக் கொண்டே படிக்க முயன்றாள், முடியவில்லை, அசதி பசி என அவளை தாக்க உறக்கத்தை நாடினாள்.

மறுபக்கம் கவினும் கமலியும் நாளைக்காவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்பார்த்து கடவுளை வேண்டிக் கொண்டே உறங்கினார்கள்.

மறுநாள் பொழுது விடிந்ததும் குணா அவசர அவசரமாக குளித்து முடித்து சாப்பிட கையேந்தி பவனுக்குச் செல்ல அங்கு பெரிய லைனே இருந்தது, காலேஜ்க்கு வேற போக வேண்டுமே என்ன செய்வது என தெரியாமல் அவன் தவிக்க, கடைக்காரனோ அவனது கவலையைக்கண்டு மனம் இரங்கி அவனை அழைத்து டிபன் தர அவனோ அவசரகதியில் சாப்பிட்டு பணம் தந்துவிட்டு மீண்டும் தன் அறைக்கு வந்து தனது கல்லூரி பையை எடுத்துக் கொண்டு பைக்கில் கிளம்பினான்

Advertisement

என்னதான் வேகமாக சென்றாலும் கோட்டை கோயில் முன் இருந்த சிக்னலில் நின்றுவிட்டான், பொழுது போகவில்லை, அக்கம் பக்கம் நோட்டமிட்டான், அந்த ஊரே புதிது என்பதால் அவனுக்கு வேடிக்கைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமானது

Advertisement

அந்நேரம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலை செய்பவர்கள் என அனைவரும் வண்டியில் செல்வதால் ஒரே ட்ராபிக் ஜாம் ஆனது. எப்படியும் 10 நிமிடமாவது ஆகும் என நினைத்தவன் அந்த நேரத்தை ஏன் வெட்டியாக செலவழிக்க வேண்டும் என நினைத்து பைக்கை ஆப் செய்துவிட்டு தனது புத்தக பையை திறந்து புத்தகத்தை எடுக்க முனைய அவன் கண்ணில் அந்த 2 கடிதங்கள் பட்டது.

என்ன நினைத்தானோ புதிய கடிதத்தை எடுத்துப் பிரித்து படித்தான்.

”என் மன்னவனே என் காதலனே ….

Advertisement

உன்னிடம் எனக்குப் பிடித்தது உனது அழகோ அறிவோ அல்ல, உனது குணம், எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காத குணம் என்னை ஈர்த்தது, மற்றவர்களிடம் பேசும் போது கூட கன்னியமாக 4 அடி தள்ளி நின்று பேசும் உனது குணம் என்னை வாயடைக்க வைத்தது, படிக்கவே கல்லூரிக்கு வந்த நான் இப்போது உன்னை காணவே கல்லூரிக்கு வருகிறேன்,

உன்னை காணாமல் ஒரு நொடி கூட என்னால் இருக்க இயலவில்லை, கடைசி வரிசையில் நீயிருந்தாலும் என் கண்கள் உன்னையே தேடுகிறது, அதுவே எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது, மற்ற பெண்களின் மனதிலும் கண்டிப்பாக உன்னை பற்றின எண்ணம் ஓடாமலா இருக்கும், இருப்பினும் அவர்களை விட உன்மீது நான் கொண்ட அன்பில் எந்த களங்கமும் இல்லை, கள்ளம் கபடும் அறியாத உன் முகமே காட்டுகிறது நீ எந்தளவுக்கு நல்லவன் என்று

உன்னை பரிட்சை செய்ய வேண்டிய அவசியம் கூட எனக்கு இல்லாமல் போய்விட்டது, கண்ணை மூடி உன்னுடன் வாழ என் வாழ்க்கையையே உன் காலடியில் சமர்பிக்கிறேன் என்னை ஏற்றுக் கொள்

பிரியமுடன்

கண்மணி”

என எழுதியிருக்க அவனுக்கு சிரிப்பே வந்தது

”எல்லாரும் மனசுல இடம் கேட்பாங்கன்னு பார்த்தா இவள் என்ன புதுசா காலடியில இடம் கேட்கறா, வர வர காலை கூட விடமாட்டாங்களா, என்னை மத்த பொண்ணுங்க பார்த்தா இவளுக்கென்ன வந்தது, பொறாமையில பொங்கறாளே, கண்டிப்பா இவளை பார்த்து அம்மா தாயே காலடியில கூட உனக்கு என்னால இடம் தரமுடியாது, வேற ஆளை பார்த்துக்கன்னு சொல்லிடனும் இல்லைன்னா மறுபடியும் லெட்டர் தருவா, ஆமா எந்த நேரத்தில லெட்டர் வைக்கறாள்ன்னு தெரியலையே ம்ம் முதல்ல யார் இந்த கண்மணின்னு தெரிஞ்சிக்கனும்” என நினைக்கும் போதே சிக்னல் மாறவும் அவசரமாக அந்த கடிதங்களை தனது பைக்குள் ஒரு பகுதியில் மறைத்து வைத்துக் கொண்டு பைக்கை ஓட்டியபடியே கல்லூரியை அடைந்தான்

அந்நேரமே அனைவரும் வந்திருந்தார்கள், பெல் அடிக்கவில்லை, கமலியோ கண்மணி வராமல் போனதை நினைத்து குழம்பினாள், கவினோ கண்மணி வரவில்லையே என ஏங்கித்தவித்தான், குணாவோ யார் அந்த கண்மணி என தெரிந்துக் கொள்ள ஆர்வமானான், பெல் அடித்தது, அந்நேரம் வாத்தியார் வருவதற்குள் அவசரகதியில் அந்த வகுப்புக்குள் நுழைந்து சட்டென தன் இருக்கையில் அமர்ந்தாள் கண்மணி, வேர்த்து விறுவிறுத்து வந்திருந்தாள்

அவளது ஹாஸ்டலில் தண்ணீர் பிரச்சனை குளிக்க கூட தண்ணீர் இல்லாமல் போகவே தெரு குழாயில் சென்று தண்ணீரை பம்பு மூலமாக இறைத்து கொண்டு வந்து குளித்து முடித்து கான்டீன் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு நடந்து வருவதற்குள் நேரமாகிவிட்டது.

வாத்தியார் வந்துவிடவும் மாணவ மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்துவிட்டு அமர்ந்தார்கள் வந்தவர்

”அட்டன்டன்ஸ் வந்துடுச்சி, கூடவே உங்க எல்லாருக்குமான ஐடி கார்டும் வந்திருக்கு, வரிசையா நான் கூப்பிடறேன் வந்து வாங்கிக்குங்க, அதுக்கு முன்னாடி அட்டன்டன்ஸ் எடுத்துடறேன்” என சொல்லிவிட்டு அவர் வரிசையாக பெயர் சொல்ல சொல்ல அங்கிருந்த மாணவர்களும் எஸ் சார், பிரசன்ட் சார் என சொல்லிக் கொண்டே வந்தார்கள், அதில் குணாவின் முறை வரவும்

”குணா” என வாத்தியார் அழைக்க கண்மணி பரவசமானாள், பின்னாடி வரிசையில் இருந்த குணா அங்கிருந்தபடியே ப்ரசன்ட் சார் என கம்பீர குரலில் சொல்ல வாத்தியாரே அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு

”நல்ல குரல்வளம் உனக்கு” என சொல்லிவிட்டு அடுத்தடுத்தவர்களை அழைத்தார். கண்மணியின் பெயர் வந்தது

”எஸ் சார்“ என்றாள் அவளது இனிமையான குரலைக் கேட்டதும் வாத்தியாரோ

”நல்ல இனிமையான குரல் உனக்கு, பாட சொன்னா பாட மாட்டேங்கற பரவாயில்லை புதுசா மாணவர்கள் வந்திருக்கறதால வெல்கம் விழா நடக்கப் போகுது, அதுல நீ கலந்து பாடனும் சரியா” என கேட்க அவளோ மென்மையாக புன்னகைத்து

”எஸ் சார்” என்றாள்

”நல்லது” என சொல்லிக் கொண்டே அடுத்தவர்களை அழைத்தார்

அதில் கவின் கமலி இருவரின் பெயரும் வர வர அவர்களும் எஸ் சார் என சொல்லி முடித்தார்கள், அதற்கே அவர்கள் பயந்தார்கள், எங்கே தங்களது பெயரைக் கண்டுக் கொண்டு குணாவோ கண்மணியோ தங்களை கண்டு முறைப்பார்கள் என எதிர்பார்த்தார்கள், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை

குணாவிற்கும் கண்மணிக்கும் இவர்களின் பெயர்கள் மறந்தேப் போய் விட்டது, இப்போது அவர்களின் மனதில் குடிக் கொண்டிருக்கும் பெயர்கள் கண்மணி குணாதான், குணாவோ முன் வரிசையில் இருந்தவள்தான் கண்மணி என தெரிந்துக் கொண்டான், ஆனால் முகம் தெரியவில்லையே என வருந்தினான்

கண்மணியோ பின் வரிசையில்தான் குணா இருக்கிறான் ஆனால் பின்னால் திரும்பிப் பார்த்தால் தன்னைத்தான் பார்ப்பதாக மற்ற ஆண்கள் நினைப்பார்கள், அந்த தவறை ஒரு போதும் செய்யக்கூடாது என நினைத்து அவள் திரும்பியே பார்க்கவில்லை.

அட்டன்டன்ஸ் எடுத்து முடித்ததும் ஐடி கார்டு கொடுக்க வாத்தியார் தயாராக அந்நேரம் அவருக்கு போன் வரவும் உடனே வேறொரு மாணவனிடம் அதை தந்து அனைவருக்கும் தருமாறு சொல்லிவிட அவனும் பெயரை அழைத்தபடியே ஒவ்வொருவரிடமும் தந்தபடி வந்தவனை பிடித்தாள் கமலி, அவனோ அவளது அழகில் மயங்கி ஈஈ என இளிக்க அவளோ

”என்னோடதை நானே எடுத்துக்கறேன்” என சொல்லிவிட்டு வேண்டுமென்றே கண்மணி, கமலி, கவின், குணா என நான்கு ஐடி கார்டுகளையும் எடுத்துக் கொண்டாள், அது கூட அவன் கவனியாமல் அவளைப் பார்த்து ஜொள்விட்டபடியே நின்றான், அவளோ காரியம் ஆனதும்

”பார்த்தது போதும் போ” என விரட்ட அவனோ ஏமாற்றத்துடன் மற்ற மாணவர்களிடம் சென்றான்.

அனைவருக்கும் ஐடி கார்டு வந்துவிட்டது, கண்மணியும் குணாவும் தனக்கு வரவில்லையே என நினைத்து குழம்பினார்கள், அந்நேரம் கமலியோ அதைப் புரிந்துக் கொண்டு அவசர அவசரமாக கண்மணியிடம் குணாவின் ஐடி கார்டை தந்தாள்

”சாரி இது உங்களோடது போல இந்தாங்க” என தந்துவிட்டு சட்டென அவ்விடம் விட்டு விலகி கவினிடம் சென்று அவனிடம் இரண்டு ஐடி கார்டுகளை தந்து சைகையில் குணாவை காட்டிவிட்டு அவனிடம் தருமாறு ஜாடையாக சொல்ல கவினோ அவள் தந்த இரண்டு ஐடி கார்டில் இருந்த கண்மணியின் ஐடி கார்டைக்கண்டு பரவசமானான்

”இவளோட அழகு போக போக அதிகமாகுதே தவிர குறையலை, எவ்ளோ மெருகேறியிருக்கா கண்ணாடி போல கன்னம் பளபளன்னு மின்னுதே” என அவன் ஜொள் விட அதைக்கண்ட கமலியோ அவனது தலையில் பட்டென அடித்துவிட்டு முறைக்க அவனோ

”சாரி கமலி” என சொல்ல அவளோ நொந்துப் போய் தன் இடத்திற்கு வந்தாள்.

கவினோ அந்த கண்மணியின் ஐடி கார்டை குணாவிடம் தந்தான்

”இது எக்ஸ்ட்ராவா வந்துடுச்சி இந்தாங்க” என சொல்லிவிட்டு அவன் மற்ற மாணவர்களிடம் கதை பேச சென்றுவிட குணா பார்த்தான், அது அவனது ஐடி கார்டு இல்லை, மாறிவிட்டது, அது கண்மணியுடையது, அதில் அவளின் முகம் இருப்பதைக்கண்டு

”ஓ நீதானா அந்த கண்மணி, எப்படி உன்னோடது என்கிட்ட வந்திருக்கு, அப்போ என்னோடது யார்கிட்ட இருக்குன்னு தெரியலையே, முதல்ல நீ எங்க இருக்கன்னு தெரியலையே, முதல் வரிசையிலதான் இருக்கனும், அன்னிக்கு போர்ட்ல நோட்ஸ் எழுதினது நீதானே

அன்னிக்கே உன் கையெழுத்து அழகா இருந்தது ஆனா லெட்டர்ல மட்டும் ஏன் கோழி கிறுக்கற மாதிரி எழுதி வைச்சிருக்க, ஒருவேளை மாட்டிக்கூடாதுன்னு புத்திசாலித்தனமா எழுதியிருக்க போல, ம்ம் இதை எப்படியாவது அவள்கிட்ட தரனுமே, கூடவே அவள் எழுதின லெட்டர்களையும் தந்து இனிமேல எனக்கு லெட்டர் தராதன்னு கோபமா சொல்லிடனும், அப்பதான் நம்மளை தொல்லை பண்ண மாட்டா, முதல்ல இதை எப்படி தர்றது” என அவன் தவிக்க கண்மணியோ தன்னிடம் இருந்த குணாவின் ஐடி கார்டைக் கண்டதும் ஒரு நொடி திடுக்கிட்டாள் பின்

”குணாவா? இவன் இந்த க்ளாஸா, பார்த்த மாதிரியே இல்லையே, அதுசரி நாம யாரைதான் பார்த்திருக்கோம், எனக்காக உருகி உருகி கடிதம் எழுதினது இவனா? அய்யோ புதுசா அவன் எழுதின கடிதத்தை நான் படிக்கலையே, அதை என்னத்துக்கு படிக்கனும், இந்த ஐடி கார்டை அவன்கிட்ட தர்றப்ப அந்த கடிதங்களையும் சேர்த்து தந்துட்டு அவனை நல்லா திட்டிவிடனும்” என நினைத்துக் கொண்டே தனது பையில் மறைத்து வைத்திருந்த கடிதத்தை எடுத்தவள் என்ன தோணியதோ புதிய கடிதத்தை அந்நேரம் படிக்கலானாள்

”என் கண்மணி என் காதலி இளமாங்கனி ……

என்னை பார்த்து நீ சிரிக்கும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன், நீ என் வாழ்க்கையில வந்தால் எனக்கு ஒரு குடும்பம் உருவாகும், காரணம் எனக்கு அப்பா அம்மா என யாரும் இல்லை, அதற்காக நான் அநாதையும் கிடையாது, அவங்க சீக்கிரமாவே என்னை தனியா விட்டுட்டு பிரிஞ்சிப் போயிட்டாங்க, நான் இதுநாள் வரை தனியாதான் இருந்தேன், என்னை அவங்க பாரமா நினைச்சி ஒதுக்கிட்டாங்க

ஆனா நீ என்னை பாரமா நினைக்க மாட்டேன்னு நம்பறேன், அப்பா அம்மாவோட பாசத்தை அறியாதவன் நான், இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையில கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்துட்டேன், உன்னை பார்த்த பின்னாடிதான் என் வாழ்க்கையே கலர்புல்லா மாறிடுச்சி, எதுக்காக வாழனும்னு இருந்த எனக்கு உனக்காக வாழலாம்ங்கற நம்பிக்கை வந்திருக்கு

நீ என்னை ஏத்துக்கிட்டாலே போதும், உன்னோட அன்பு கூடவே உன் அப்பா அம்மாவோட பாசம் அவங்களையும் நான் என் அப்பா அம்மாவா ஏத்துக்குவேன், அவங்ககிட்டயாவது நான் எதிர்பார்க்கற பாசம் கிடைக்கும்னு நம்பறேன், தனியாளா இருக்கற எனக்கு உன் வரவு நல்வரவா அமைஞ்சிருக்கு

எனக்குன்னு வீடு கூட கிடையாது, குடும்பமா கூட நான் வாழ்ந்ததில்லை, 10 பேர் கூட ஒரு ரூம்ல தங்கறேன் இந்த நிலைமையில உன்னை நான் காதலிக்கிறேன்னா கண்டிப்பா உன்னை கஷ்பட வைக்க மாட்டேன், எனக்கு இல்லைன்னாலும் உன்னோட பசியை நான் போக்குவேன்,

உனக்கு அரண்மனை வாழ்க்கை போல வசதியான வாழ்க்கை முறையை தரமுடியலைன்னாலும் என் மனசுக்குள்ள உன்னை மகாராணி போல நினைச்சி உன்னை உள்ளங்கையில வைச்சி பார்த்துக்குவேன், என்னால உனக்கு எந்த கஷ்டமும் வராது, வாழ்நாள் முழுக்க சந்தோஷம் மட்டும்தான் கிடைக்கும்னு உறுதியா சொல்லி உன் வரவிற்காக காத்திருக்கும் உனது காதலன் குணா”

என எழுதியிருக்க அவளுக்கு சிரிப்பதா வெறுப்பதா என தெரியவில்லை, இரண்டுங்கெட்டான் நிலைமைக்கு தள்ளப்பட்டாள், அந்த கடிதம் அவளை வெகுவாக யோசிக்க வைத்தது, இது உண்மையா, பொய்யா, என தெரிந்துக் கொள்ள முயன்றாள், ஒரு கையில் அவனது கடிதம், மறுகையில் அவனது ஐடி கார்டு, அதில் இருந்த அவனது முகம் ஏனோ காரணம் இன்றி அந்த முகத்தையே அடிக்கடி பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

அதற்குள் லன்ச் பெல் அடிக்கவும் அனைவரும் கான்டீன் நோக்கி செல்ல கண்மணியோ செல்பவர்களில் குணா வருவான் என்ற நம்பிக்கையில் திரும்பி பாராமலே அமர்ந்த இடத்தை விட்டு எழாமலே பார்த்தபடி இருந்தாள், குணாவும் அனைவரும் செல்வதைக்கண்டு கண்மணி யார்? என ஒவ்வொரு பெண்ணிலும் தேடினான், அனைவரும் சென்றதும் கடைசியாக முன்வரிசையில் இருந்தவளைப் பார்தது

”இவள்தான் கண்மணியா இருக்கனும் இதோ வரேன்” என நினைத்துக் கொண்டு அவளது ஐடி கார்டு மற்றும் அவள் தந்ததாக தன் கையில் வைத்திருந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு அவன் எழுந்து நிற்க கண்மணியோ அந்நேரம்

”எல்லாரும் போயிட்டாங்க குணா போகலைன்னா அப்ப அவன் அவனோட இடத்திலதான் இருக்கனும், கண்டிப்பா இந்த ஐடி கார்டுக்காக இருக்கனும், இல்லைன்னா அவன் தந்த கடிதத்துக்கு நான் என்ன பதில் சொல்லப்போறேன்னு தெரிஞ்சிக்க காத்திருக்கனும், அப்ப நம்ம ஐடி கார்டு அவன்கிட்டதான் இருக்கனும், பேசாம நாமளே போய் அவன்கிட்ட இதையெல்லாம் தந்துட்டு நம்ம கார்டை எடுத்துக்கிட்டு அவனை திட்டிட்டு வரலாம்” என நினைத்துக் கொண்டே அவளும் எழுந்து திரும்பி நின்றாள்

அந்நேரம் குணாவும் கண்மணியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்தார்கள், அவர்களுக்கு நடுவில் 10 அடி தொலைவுதான் இருந்தது, ஆனாலும் அவர்களால் ஒரு அடி கூட எடுத்து முன் வைத்து வர இயலாமல் சிலையாகிப் போனார்கள், ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து அவர்களின் முகமே பரவசமாகிவிட்டது, அதைக்காண அங்கு யாரும் இல்லை, முக்கியமாக கவினும் கமலியும் கூட அங்கு இல்லாமல் போனதுதான் விதியின் விளையாட்டு.

குணாவும் கண்மணியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தார்களே தவிர ஒரு அடிகூட நகரவில்லை, எவ்வளவு நேரம் அப்படியிருந்தார்கள் என அவர்களே அறியவில்லை, கால் கூட வலிக்கவில்லை, லன்ச் முடிந்து பெல் அடிக்கும் சத்தம் கேட்டபின்புதான் இவருக்குமே அசைவு வந்தது

சட்டென பதட்டமாகி இருவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்துவிட்டார்கள், கையில் வைத்திருந்த ஐடி கார்டு ஏதோ பெரிய பாதுகாப்பு தருவது போல அதை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தார்கள் இருவரும், வகுப்பிற்குள் ஒவ்வொரு மாணவ மாணவியாக வர வர அவர்களின் பதட்டம் சற்று அடங்கியது, கவினும் கமலியும் கூட வந்தார்கள், கண்மணியும் குணாவும் தலைகுனிந்து அமர்ந்திருப்பதைக்கண்டு குழம்பிப் போய் பார்த்தபடியே தங்கள் இருக்கையில் அமர்ந்தார்கள்

வாத்தியார் ஒருவர் வந்தார், அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்துவிட்டு அமர்ந்தார்கள், அவர் பாடம் எடுக்க எடுக்க அனைவரும் பாடத்தைக் கவனிக்க குணாவிற்கும் கண்மணிக்கும் மட்டும் பாடத்தின் மீது கவனம் செல்லவில்லை, மறுபடி மறுபடி அவர்களை ஒருவரை ஒருவர் பார்த்ததே நினைவுக்கு வந்தது

”அய்யோ என்ன இவள் இப்படியிருக்கா, எனக்கு என்னாச்சி, நானா இப்படி இல்லை, இது சரியில்லை பெல் அடிக்கட்டும், அவள்கிட்ட ஐடி கார்டு கொடுத்துடனும்” என குணா நினைத்துக் கொண்டே போர்டு பார்க்கிறேன் என கண்மணியிருந்த இடத்தைக் கண்டான்

அவளின் பின்புறம் தெரிந்தது, அவள் அணிந்திருந்த சுடிதார், கால் கொலுசு, தலையில் சூடியிருந்த பாதி காய்ந்துப் போன பூ, நீளமான கூந்தல், அவள் அப்படி இப்படி அசைகையில் அவளின் காதோரம் தொங்கிக் கொண்டிருந்த சின்ன ஜிமிக்கி ஊஞ்சலாடுவது, இதுவே அவனுக்கு தெரிந்தது, அதை அவன் தன்னையும் அறியாமல் ரசிக்கலானான்

கண்மணியோ போர்டில் ஒரு பார்வை, தன் கையில் இருந்த ஐடி கார்டில் தெரிந்த குணாவின் முகத்தில் ஒரு பார்வை என பிசியாக இருந்தாள்

”இவனைப் பார்த்தா சினிமா ஹீரோ போல இருக்கான், 3 நாள் தாடி, நீட்டான ஹேர்கட், இவன் முகத்தைப் பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியலை, அதோட இவனைப் பார்த்தா காதலிக்கற முகம் மாதிரி தெரியலையே, இதுவரைக்கும் எத்தனையோ பேர் என்கிட்ட வந்து காதலிக்கறதா சொல்லியிருக்காங்க

ஆனா அவங்க முகத்தில ஒரு கள்ளத்தனம் இருக்கும், ஏதாவது கிடைக்குமான்னு எதிர்பார்ப்போட இருப்பாங்க, முக்கியமா அவங்க பார்வை என் முகத்தையும் கடந்து முழு உடம்பையும் ஸ்கேன் பண்ணிடும்

ஆனா குணா அப்படியில்லை, என் முகத்தை, என் கண்ணை தவிர அவன் வேற எங்கயும் பார்க்கலை, மத்தவங்க என்னை பார்த்த விதமே வேற, இவன் என்னை பார்க்கற விதமே வேற, அவன் கண்ல ஏதோ ஒண்ணு இருக்குது, என்னமோ சொல்ற மாதிரி, அது என்னவா இருக்கும்,

ஐடி கார்டுக்காகவா? இல்லையே, அப்படியிருந்தா அதை கேட்டிருப்பானே, இவனா நமக்கு காதல் கடிதம் எழுதினது, கடிதத்தில உருகி உருகி எழுதி வைச்சிருக்கான், ஆனா நேர்ல பார்க்கறப்ப வாயடைச்சிப் போய் நிக்கறான், ஆக கடிதத்தை தர்ற தைரியம் இருக்கு, ஆனா பேச தைரியம் இல்லை போல, பயமா இல்லை, நான் ஏதாவது சொல்லிடுவேன்னு தயங்கறானா

அவனைப் பார்த்தா பயப்படற மாதிரி தெரியலை, முகம் தெளிவா இருக்கு, ஆளும் நல்ல உயரமா வாட்டசாட்டமாதான் இருக்கான், பேசாம இவன் சினிமாக்கு போனா ஹீரோவாகலாம், எல்லா பொண்ணுங்களுக்கும் காதல் மன்னனா இருப்பான்” என நினைத்த உடனே தனது நாக்கை அவளே கடித்துக் கொண்டு

”என்ன இது இப்படியெல்லாம் நினைக்கிறேன், தப்பு தப்பு, நமக்கென்ன பெல் அடிக்கட்டும், இந்த ஐடி கார்டை தந்துட்டு கடிதத்தையும் தந்துட்டு இனி இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு வார்ன் பண்ணிடனும்” என நினைத்தவளுக்கு ஏனோ மனசு கனத்துவிட்டது, துக்க பெருமூச்சுவிட்டபடியே பாடத்தை கவனிக்க இயலாமல் தடுமாறிப் போனாள்

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!