Skip to content
Post Views: 274
கமலியோ கண்மணியின் முகம் வாட்டத்தைக்கண்டுக் கொண்டாள், என்ன பிரச்சனை என தெரிந்துக் கொள்வதற்காகவே பெல் அடிக்கும் வரை காத்திருந்தாள், கூடவே அவள் ஏற்கனவே எழுதி கொண்டு வந்த கடிதத்தை வேறு அவளின் பையில் வைக்க வேண்டுமே என ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
கவினும் குணாவின் குழப்பமான முகத்தைப் பாரத்தான், ஏதோ தவறாக உள்ளதே என நினைத்தபடியே கையில் கடிதத்துடன் சரியான வாய்ப்பு கிடைக்குமா என குணாவின் பையை பார்த்துக் கொண்டே பாடத்தை கவனிக்கலானான்
அந்நேரம் சர்குலர் வந்தது, அதை வாத்தியார் படித்துவிட்டு
”முக்கியமான தகவல் வந்திருக்கு, வர்ற வெள்ளிக்கிழமை ஃப்ரஷர்ஸ்க்கான விழா நடக்கப் போகுது, அதுல பாட்டு டான்ஸ்ன்னு விதவிதமான நிகழ்ச்சிகள் நடக்கப் போகுது, யாருக்கு என்ன திறமையிருக்கோ அதை விழாவுல வெளிப்படுத்தலாம், விருப்பம் இருக்கறவங்க பெயர் கொடுக்கலாம், வாங்க யாரெல்லாம் பாட்டு பாடப் போறீங்க, யாரெல்லாம் டான்ஸ் ஆடப்போறீங்க, வேற ஏதாவது தெரிஞ்சா கூட சொல்லுங்க, அதையும் விழாவுல சேர்த்துக்கலாம், வாங்க ஒவ்வொருத்தரா பேர் கொடுங்க” என அழைக்க மாணவ மாணவிகளுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
Advertisement
அவரவர்கள் தங்களது திறமையை வெளிகாட்டும் விதமாக தங்கள் பெயரை விழாவில் சேர்க்க வாத்தியாரிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதில் கவனம் கலைந்த கண்மணியும் தனது பெயரை சேர்க்க சென்றாள், அதைக்கண்ட குணாவும் எழுந்தான், ஏற்கனவே அவனது பெயரை சேர்க்கும் எண்ணத்தில் இருந்தான், அதிலும் கண்மணி செல்லவும் அவள் எதில் கலந்துக் கொள்ள போகிறாள் என தெரிந்துக் கொள்ளவே அவனும் சென்றான்.
கவினோ கமலியிடம் வந்தான்
”நீ எதுலயும் கலந்துக்கலையா”
Advertisement
”நீ எதுல கலந்துக்கப் போற”
Advertisement
”எனக்கு பாட்டெல்லாம் வராது டான்ஸ் ஓகே”
”அப்போ நான் பாட்டு பாடறேன்“
”ஏய் என்கூட சேர்ந்து டான்ஸ் ஆடு”
Advertisement
”உன்கூடவா“
”ஆமாம்”
”எந்த பாட்டுக்கு”
”அதான் எங்க வீட்டு பிள்ளையில சிவகார்த்திகேயன் பாடுவாரே அண்ணன் தங்கச்சி பாட்டி அதுதான், நாம இரண்டு பேரும் ஆடினா ஸ்டேஜே களைகட்டும் என்ன சொல்ற“
”சரி ஓகே வா நாமளும் போய் பேர் தரலாம்”
”அங்க பாரேன் கண்மணியும் குணாவும் கூட பெயர் தர போயிருக்காங்க“
”அட ஆமாம் அவங்களும் எதுலயோ கலந்துக்க போறாங்க போல இருக்கு வா வா என்ன ஏதுன்னு பார்க்கலாம் வா”
”இரு அவங்க பிசியா இருக்காங்க, இதுதான் நல்ல வாய்ப்பு, கடிதத்தை அவங்க பையில போட்டுட்டு வந்துடலாம்” என சொல்லிவிட்டு கவின் குணாவின் பையிடம் சென்று அதில் கடிதத்தை போட்டுவிட்டு ஏதும் அறியாதவன் போல கமலியிடம் வர அவளும் கண்மணியின் பைக்குள் கடிதத்தை போட்டுவிட்டு இயல்பாக தங்களின் பெயரை கொடுக்க வாத்தியாரிடம் சென்றாள்.
அங்கு வாத்தியாரோ வரிசையாக பெயர் எழுதிக் கொண்டேயிருக்க குணா இருப்பது கண்மணி பார்க்காமலே தெரிந்துக் கொண்டாள், கண்மணி எதில் கலந்துக் கொள்ள போகிறாள் என்பதை தெரிந்துக் கொள்ளவே குணாவும் காத்திருந்தான்.
அதில் அவளின் முறை வந்தது
”சார் நான் பாட்டு பாடறேன்“ என்றாள் அதைக்கேட்ட குணாவோ வியந்தான்
”சரி நாமளும் பாட்டே பாடலாம்“ என நினைத்துக் கொண்டு அவரிடம்
”சார் நான் நல்லா பாட்டு பாடுவேன் சார்”
”என்னப்பா எல்லாருமே பாட்டே சொன்னா எப்படி டான்ஸ்க்குன்னு கொஞ்ச பேர்தான் சொல்லியிருக்காங்க, பேசாம நீ டான்ஸ் ஆடலாமே” என சொல்ல அவனோ தயங்க அந்நேரம் கவினும் கமலியும்
”சார் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா டான்ஸ் ஆடறோம்“
”நோ நோ ஆணும் பெண்ணும் ஒண்ணா ஆடக்கூடாது”
”சார் நாங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி சார், இவள் என்கூட பிறந்த தங்கச்சி, நாங்க அண்ணன் தங்கச்சி சென்ட்டிமென்ட் பாட்டுக்குதான் டான்ஸ் ஆடப்போறோம்”
”ஓ அப்படியா சரி சரி எழுதிக்கிறேன்” என லிஸ்ட் பேப்பரில் எழுதியவர் குணாவையும் கண்மணியையும் பார்த்து
”எல்லாருமே பாட்டுன்னு சொல்லிட்டாங்க நீங்களும் அதேதானா”
”ஆமாம் சார்” என்றனர் இருவரும் ஒன்றாக
”அப்ப ஒண்ணாவே பாடிடுங்களேன்“
”சார்” என இருவரும் அலற அவரோ
”அதுக்கில்லை இங்க பாருங்க லிஸ்ட்ல நிறைய பேர் சேர்ந்திருக்காங்க ஜோடியா டான்ஸ் கூட இருக்கு, ஆனா ஜோடியா பாட்டு பாட யாரும் இல்லை, நீங்க வேணா முயற்சி செய்றீங்களா” என கேட்க குணாவும் கண்மணியும் யோசித்தார்கள்
கவினும் கமலியும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என பதட்டமாக இருந்தார்கள் அதில் கண்மணியோ சட்டென
”சார் நான் இந்த விழால கலந்துக்கலை” என சொல்ல உடனே குணாவோ
”சார் நான் கலந்துக்கலை” என சொல்ல வாத்தியாரோ
”என்ன இரண்டு பேரும் கலந்துக்கலைன்னு சொன்னா எப்படி நான் ஒண்ணும் தப்பான எண்ணத்தோட சொல்லலை, இங்க பாருங்க லிஸ்ட்ல காலியா இருக்கறது ஒரு இடம்தான், அதுல ஒருத்தருக்குதான் இடம் தரமுடியும், நீங்க ரெண்டு பேரும் வந்து கேட்டதால ஜோடியா சேர்ந்து பாடுங்கன்னு சொன்னேன், அவ்ளோதானே”
”இல்லை சார் வேற யாரையாவது பார்த்துக்குங்க நான் கலந்துக்கலை” என சொல்லிய கண்மணியை தொடர்ந்து குணாவோ
”சார் நானும் கலந்துக்கலை சாரி சார்” என சொல்லிவிட்டு தன் இருக்கையை நோக்கி நடந்தான்
முதலில் கண்மணி இருக்கவே யாரும் பார்க்காத வண்ணம் சட்டென அவளின் ஐடி கார்டை அவளின் மேஜையில் விழுமாறுதான் வைத்தான், ஆனால் அது தவறி அவளின் மடியில் விழுந்துவிடவே அதை கவனியாமல் அவன் சென்றுவிட்டான், மடியில் விழுந்த ஐடி கார்டை எடுத்துப் பார்த்தாள்
அவனின் மேனின் வாசம் அதில் வீச அதை அவள் முகர்ந்துப் பார்த்தாள், ஏனோ அந்த வாசம் அவளை ஈர்த்தது, மெய்மறக்க வைத்தது, அதை பத்திரமாக தனது பைக்குள் வைத்தவள் அவனது ஐடி கார்டை எப்படி தருவது என யோசிப்பதற்குள் பெல் அடிக்கவும் அனைவரும் கிளம்பினார்கள்
அதில் கவினும் கமலியும் கூட விழாவுக்கு எப்படி டான்ஸ் ஆடுவது, என்ன உடை அணிவது என அதை பற்றி பேசிக் கொண்டே சென்றுவிட்டார்கள், இப்போது அந்த வகுப்பில் கண்மணி குணா இவர்களை தவிர யாருமில்லை, குணாவோ தனது பையை பார்த்தான், அதில் ஒரு கடிதம் இருக்கவே அதிர்ந்து கண்மணியைப் பார்த்தான்
”இவள் எப்ப இதை நம்ம பையில கடிதத்தை போட்டா, ஆமா ஏன் கிளம்பாம இங்கயே இருக்கா, ஒருவேளை இந்த கடிதத்தில ஏதாவது சொல்லியிருக்காளோ, அதுக்கு நான் பதில் சொல்லனும்னு காத்திருக்காளோ” என நினைத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து கடிதத்தை பிரித்துப் படிக்கலானான்
”கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடா ….
பொங்கல் பானை போல என் காதலும் பொங்கி என் முகத்தில் வழிந்து ஓடுவதை நீ பார்க்கவில்லையா, பார்க்க பார்க்க தெவிட்டாத உன்னை பார்க்கவே கூடாது என என் மனது ஆயிரம் முறை கூறியும் என்னால் அதன் பேச்சை கேட்க முடியாமல் ஒவ்வொரு முறையும் உன்னை பார்த்து பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்
எனக்குத் தெரியும், உன் மனதில் என்ன உள்ளது என்று, நிச்சயம் என் மீதான கோபமாக இருக்கலாம் இல்லை வெறுப்பாக இருக்கலாம், இதை எப்படி அறிந்தேன் தெரியுமா, உன் முகத்தில் தெரிந்த கடுமையை வைத்தே தெரிந்துக் கொண்டேன், இத்தனை கடுமையான முகத்தில் காதலை தேடி நான் ஓய்ந்துவிட்டேன்
ஏன் இந்த கோபம்? உன் உயிரையா கேட்டேன், கேட்டிருந்தால் தந்திருப்பாயோ! ஆனால் நான் காதலைத்தானே கேட்டேன், அதை தரகூடவா நீ யோசிக்கிறாய், அல்லது வேறு யாராவது உன் மனதில் குடிகொண்டிருக்கிறாளா, அதனால்தான் என்னை உன் மனதில் குடிவைக்க யோசிக்கிறாயோ, இந்த கேள்விக்கு பதில் அறியாமல் என்னால் ஒவ்வொரு நொடியும் நிம்மதியாக இருக்க இயலவில்லை
சொல், ஒரு முறை சொல், உன் மனதில் வேறு எந்த பெண்ணும் இல்லை என்ற அந்த பொண்ணான வார்த்தையை சொல்ல அதை காதார கேட்க நான் காத்திருக்கிறேன், அதோடு உன் மனதில் குடிகொள்ள நான் ஆசைப்படுகிறேன், அதற்காக வாடகை தரவும் நான் தயாராக உள்ளேன், நீ கேட்கும் வாடகையை மறுக்காமல் தருகிறேன், என்னை உன் மனதில் குடிவைத்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே சொல், உன் மனதில் குடிகொள்ள வரலாமா,
பதிலுக்காக ஏங்கும் அப்பாவி காதலியான கண்மணி”
என எழுதியிருக்கவே குணாவிற்கு அடக்க முடியாத சிரிப்பே வந்தது
”இவளுக்கு ஏன் இந்தளவுக்கு பயம் வந்துடுச்சி, என் மனசுல போய் யார் இருக்கப் போறா, அங்க யாரும் இல்லை, அது தெரியாம பாவம் இவள் இப்படி பயப்படறாளே, அந்தளவுக்கா என்னை விரும்பறா, இதுல வீட்டுக்கு குடிபோகற மாதிரி வாடகை தரேன்ங்கறா, அப்போ அட்வான்ஸ் கேட்டா அதுவும் தருவாளா என்ன
ஆமா வாடகைன்னா எதை மனசுல வைச்சி சொல்றா, ஒருவேளை வாடகை கேட்டா எதை தருவா? முத்தம் கித்தம் தந்துடுவாளோ” என நினைத்த குணாவின் முகம் அதிசயமாக வெட்கப்பட்டது, அதில் அவன் முகம் சிவந்துவிட அவனுக்கே ஆச்சர்யமாகிப் போனது.
அதே போல மறுபக்கம் கண்மணியும் அவனிடம் ஐடி கார்டு தருவதற்கு முன் தனது ஐடி கார்டை பைக்குள் பத்திரமாக வைக்கும் போது கடிதம் கைக்கு வர வியந்தாள்
”இதை எப்போ பையில வைச்சான், அதுசரி ஐடி கார்டை என் மடியில போட்டவனுக்கு காதல் கடிதத்தை பையில வைக்கவா முடியாது, ரொம்ப துணிச்சல்தான் இவனுக்கு, ஆமா ஏன் இன்னும் இவன் கிளம்பலை, இவன் கிளம்புவான், இப்படி நம்மளை கடந்து வரும் போது அவனோட ஐடி கார்டை தரலாம்னு பார்த்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எழ மாட்டேங்கறானே
ஒருவேளை இதுல ஏதாவது எழுதி அதுக்கான பதிலுக்காக காத்திருக்கானா, சரி பார்க்கலாம், இதுல ஏதாவது தப்பாயிருந்தது இன்னிக்கு இவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன்” என நினைத்துக் கொண்டே அவளும் கடிதத்தை படிக்கலானாள்.
”கண்ணே கண்மணியே
ஒவ்வொரு நொடியிலயும் உன் நினைவுகள் என்னை வாட்டி வதைக்குதடி, காதல் என்ன பெரும் குற்றமா, அதுவும் அன்பின் ஒரு வெளிப்பாடுதானே, உன்னிடம் அன்பு கேட்டால் தருவேன் என சொன்னாயானால் காதலை கேட்க மாட்டேன், உன்னிடம் இருந்து எனக்கு தேவை அன்பு ஒன்றே போதும், ஒரு முறை உனது அன்பை நான் பெற்றுவிட்டால் நான் பாக்கியவனாகிவிடுவேன்
அதன்பின் தனிமை என்ற பேய் என்னை ஆட்டிப்படைக்காது, தனிமை ஒரு கொடுமை, அதில் நான் பலமுறை பலியாகி சித்ரவதைப்பட்டிருக்கிறேன், என் தனிமை துயரை நீக்க யாருமே முன்வரவில்லை, நானும் யாரையும் அழைக்கவில்லை, முதலும் முடிவாகவும் உன்னை மட்டும்தான் என் வாழ்க்கைக்குள் வருமாறு அழைக்கிறேன்
நீயும் வராமல் போனால் என் வாழ்க்கை தனிமை என்ற நரகத்தில் மாட்டி அல்லல்படும், நீ வந்தால் என் வாழ்க்கை சொர்க்கமாகிவிடும், நான் நரகத்தில் வாடுவதும் சொர்க்கத்தில் வாழ்வதும் உன் கையில்தான் உள்ளது, என் அன்பே உனது இந்த மௌனம் நரகத்தை விட கொடுமையாக உள்ளதே, மௌனம் கலைந்து ஒரு வார்த்தை பேசு, அது என்னை வெறுப்பதாக இருந்தாலும் சரி, திட்டுவதாக இருந்தாலும் சரி, அப்படியாவது உன் மௌனம் கலையட்டும்
வாழும் போதே சொர்க்கத்தையும் நரகத்தையும் ஒன்று சேர்த்து காட்ட உன்னால்தான் முடியும் அன்பே, சொர்க்கத்தை தர உனக்கு பிடிக்கவில்லையா சரி நரகத்தையாவது கொடு. அதைகூட நான் விரும்பி ஏற்பேன், பேசு நீ பேச அதை நான் கேட்கவே காதலுடன் காத்திருக்கிறேன், காதலுக்காக ஏங்கும் பாவப்பட்ட பிறவியான குணா” என எழுதியிருக்கவே அவளுக்கு வெறுப்போ கோபமோ வராமல் சிரிப்புதான் வந்தது, தன்னையும் அறியாமல் உள்ளுக்குள் சிரித்தாள், அதில் அவளின் முகமே பிரகாசமாக மாறியது.
”இவன் என்ன நரகம் கொடு சொர்க்கம் கொடுன்னு பிச்சை கேட்கறான், காதலை சொர்க்கம்னு நினைக்கிறானா, இல்லை வேற ஏதாவது எதிர்பார்க்கறானா தெரியலையே, ஆனா இப்படியும் பிச்சை எடுக்கலாம்னு போல இருக்கே, நான் பேசனும்னு இவ்ளோ ஆசைப்படறானே, அப்போ இந்த கடிதத்தை எப்ப எழுதினான், லன்ச் டைம்ல நாம பேசாம அவனை பார்த்தது வைச்சி அதுக்கு அப்புறம் எழுதியிருக்கான் போல, அதான் பேசுங்கறான்
தனிமைங்கற கொடுமை எனக்கு மட்டும்தான் இருக்குன்னு நினைச்சேன், பாவம் இவனுக்கு இருக்கு போல நமக்காவது அப்பா அம்மா இருக்காங்க. ஆனா இவனுக்கு அவங்க கூட இல்லை, அதான் இப்படி அன்புக்காக ஏங்கறான்
ஆனா அதை ஏன் நம்மகிட்ட கேட்கனும், வேற பொண்ணுங்களா இல்லை, அவங்ககிட்ட கேட்டா தருவாங்களே, இல்லை என்கிட்ட மட்டும்தான் கேட்கனும்னு தோணுதா இவனுக்கு, கேட்டா நான் தருவேனா, மாட்டேன் நான் ஏன் தரனும் முடியாது” என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாலும் அந்த பேச்சில் உறுதியே இல்லை, அவளுக்கு அவளே தன்னை ஏமாற்றிக் கொள்கிறாள் என அப்பட்டமாக தெரிந்தது
அதனால் இனியும் இங்கு இருப்பது சரியல்ல, நேரமாகிறது வேலைக்கு செல்ல வேண்டுமே என நினைத்து சட்டென கண்மணி தனது பைக்குள் கடிதங்களை வைத்து பத்திரப்படுத்திவிட்டு எழுந்துக் கொள்ள, அந்த சத்தம் கேட்டு குணாவும் அவசரகதியில் கடிதங்களை பைக்குள் போட்டுக் கொண்டு அரக்க பரக்க தனது பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்
அவளை கடந்து செல்லும் போது கூட அப்படியொரு வேகம், அவனின் வேகத்தைக்கண்ட கண்மணிக்கு சிரிப்பாக இருந்தது, ஆனாலும் அவனது ஐடி கார்டை தரவேண்டுமே இல்லையென்றாள் மறுநாள் கல்லூரிக்குள் அவனை விடமாட்டார்களே என நினைத்து அவனை காண விரைந்தாள்.
அதற்குள் குணாவோ தனது பைக்கை எடுத்துக் கொண்டு வருவதற்குள் கண்மணி பார்த்தாள்
”இவன்கிட்ட போய் தரனுமா, தரலாம் ஆனா அந்நேரம் ஏடாகூடமா எதையாவது சொல்லிட்டா கஷ்டமாயிடுமே, வேணாம் பேசாம தரையில கிடந்துச்சின்னு சொல்லி வாட்ச்மேன் கிட்ட தரலாம், சே சே அது அவ்ளோ நல்லாயிருக்காது, இப்ப என்ன செய்றது” என யோசித்தபடியே அவள் நிற்க குணாவோ வண்டியை ஓட்டிக் கொண்டே அவள் இருந்த இடம் நோக்கி வந்தான், அவள் பலமாக யோசிப்பதைக்கண்டு குழம்பினான்
”இவள் ஏன் போகாம இங்கயே நிக்கறா, ஒருவேளை நமக்காகதானா, இது வேற காலேஜா இருக்கு, இப்போ இங்க யாருமில்லைதான், ஆனாலும் ரிஸ்க், இதனால தேவையில்லாம இரண்டு பேருக்கும் கெட்ட பேர் வரும், காலேஜ் விட்டு போற வழியில இவளை பார்க்கலாம்” என நினைத்துக் கொண்டே விர்ரென வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றுவிட அவளோ அதிர்ந்தாள்
”அய்யோ என்ன இது கிளம்பிட்டானே, இப்ப எப்படி இதை தர்றது போச்சி, இனி நாளைக்கு காலையிலதான் தரனுமா” என நொந்தபடியே அவளும் கல்லூரியை விட்டு வெளியேறி வந்தாள்.
கொஞ்சம் தூரம் சென்றிருப்பாள், ஒரு இடத்தில் குணா வண்டியை நிறுத்திவிட்டு அவளுக்காக காத்திருந்தான், அவன் காத்திருப்பது தனக்காகதான் என தெரிந்தும் வேண்டுமென்றே மெதுவாக நடந்தாள்
”என்னாச்சி இவளுக்கு, அடிபிரதட்சனம் பண்றாளா, இவள் எப்ப என்கிட்ட வர்றது, நான் எப்ப வேலைக்குப் போறது, சுத்தம் நாமளே போய் அவள்கிட்ட பேசிடலாம்” என நினைத்தபடியே அவனும் அவளை நோக்கி நடந்து வந்தான், அவன் வருவதைக்கண்டதும் கண்மணியின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது, மூச்சு வாங்கவே சிரமப்பட்டாள்
”அய்யோ இவன் ஏன் நம்மகிட்ட வர்றான், என்ன சொல்வானோ தெரியலையே, ப்ச் வசமா மாட்டிக்கிட்டேன் போச்சி” என நினைப்பதற்குள் சட்டென அந்நேரம் மழை வர அதிர்ந்தார்கள் இருவரும், மழையில் நனையக்கூடாதென அங்கிருந்த ஒரு கடைக்குள் இருவரும் சென்று நின்றுக் கொண்டார்கள்
”என்ன இது இந்நேரம் இப்படி மழை போடுது, சே வேலைக்கு வேற நேரமாகுது, வேற வழியில்லை ரூமுக்கு போக வேணாம், நேரா வேலை செய்ற இடத்துக்குப் போகலாம்” என இருவரும் மனதுள் நினைத்தபடியே மழை நிக்குமா என பார்த்தார்கள், அது நிற்பது போலவே தெரியவில்லை
அதற்குள் இன்னும் சிலர் மழைக்கு ஒதுங்க அதே கடைக்குள் வர இவர்கள் இருவரும் ஓரிடமாக சென்று நின்றுக் கொண்டார்கள், இரண்டடி இடம் விட்டு நின்றிருந்தார்கள், அதற்கே இருவருக்கும் குப்பென வேர்த்துவிட்டது, அவளுக்கு அவனது மேனி வாசம் மழையின் மண் வாசனை தாண்டி வர அவளோ கண்கள் மூடி அதை ரசித்தாள், அவனுக்கோ அவளின் அருகாமை அவனை ஈர்த்தது, இரண்டடி இடம்விட்டு நின்றவன் என்ன நினைத்தானோ சட்டென இரண்டடி எடுத்து வைத்து அவளின் பக்கம் நின்றே விட்டான்
அவனது அருகாமை அவளை தீண்ட, அந்த அதிர்ச்சியில் அவள் பதற, அதில் அவள் கையில் வைத்திருந்த அவனது ஐடி கார்டு தரையில் விழப்போக அதை அவன் விழாமல் பிடித்துக் கொண்டான், அதைக்கண்டவள் எது எப்படியோ கார்டு அவனிடம் சேர்ந்துவிட்டதில் நிம்மதியாகி மழையாவது ஒண்ணாவது தற்சமயம் அவனது அருகாமையை விட்டு செல்வது மேல் என நினைத்து மழையை கூட பாராமல் அவசர அவசரமாக ஓடிவிட்டாள்
அவளின் செயலைக்கண்ட குணாவிற்கு உடல் அனலாக கொதித்தது, தனக்கென காய்ச்சல் வந்துவிட்டதோ என நினைத்து பயந்தான், உடல் சூட்டை தணிக்க அவனும் அந்த மழையில் நனைந்தபடியே பைக்கில் சென்றான், இருவருக்குள்ளும் சில நொடியில் மின்சாரம் தாக்கியது போல கைகால் வெடவெடத்துப் போனது, அவளால் சரிவர நடக்க முடியாமல் தடுமாறி நடக்க அவனால் சரியாக வண்டி ஓட்ட முடியாமல் தடுமாறி ஓட்ட என ஒருவழியாக தங்களின் இடத்திற்குச் சென்றார்கள்.
அவசர அவசரமாக இருவரும் வேறு உடை மாற்றிக் கொண்டு தங்களின் வேலைக்கு புறப்பட்டார்கள், சரியாக குணா எங்கு கம்ப்யூட்டர் க்ளாஸ் எடுக்கறானோ அதே கட்டிடத்திற்கு எதிர் கட்டிடமான சூப்பர் மார்க்கெட்டில் கண்மணி வேலையில் இருந்தாள், அதுகூட இருவருக்கும் தெரியவில்லை.
அவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே பார்க்கும் போது கூட மழை வெளுத்து வாங்கியது, இந்த மழையில் எப்படி செல்வது என தெரியாமல் சூப்பர் மார்க்கெட் வாசலில் கண்மணி நின்றிருந்தாள், கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும் கட்டிடத்திற்கு முன் குணா நின்றிருந்தான்.
மழையை இருவரும் வேடிக்கைப் பார்த்தார்கள், மதியமும் இருவரும் சாப்பிடவில்லை, பசி வேறு வயிற்றை கிள்ளியது, இதற்கு மேல் எங்கே சாப்பாடு கிடைக்கும் என நினைத்து நொந்துக் கொண்டே அக்கம் பக்கம் பார்த்தபடியே எதேச்சையாக எதிரே பார்த்து ஆச்சர்யத்தில் மிதந்தார்கள் இருவரும்.
கண்மணியை சூப்பர்மார்க்கெட் வாசலில் பார்க்கவும் குணாவால் நம்ப இயலவில்லை, அவளுக்கும் அதே நிலைமைதான், அவனை கோட் சூட்டில் பார்க்கவும் தானாகவே அவனை ரசிக்க தொடங்கினாள், அவனது உருவத்திற்கு அந்த சூட் அப்படி பொருத்தமாக இருக்கவே மென்மையாக அவளின் இதழ் புன்னகையை தவழவிட அவனோ
”இவளை நினைக்காமலே கண்ல படறாளே, எத்தனை பொண்ணுங்களை நான் விரட்டியிருக்கேன், ஆனா இவளை என்னால ஏன் விரட்ட முடியலை, மத்த பொண்ணுங்ககிட்ட இல்லாத ஏதோ ஒண்ணு இவள்கிட்ட இருக்கு, அதனாலதான் என்னால இவள்கிட்ட பேச முடியலை அது என்ன?” என தனக்குதானே கேள்விகளை கேட்டுக் கொண்டான்.
…. தொடரும்
error: Content is protected !!