Skip to content
Post Views: 247
”ஆமா நீ சின்ன குழந்தை பாரு, உன் மனசை கலைச்சா உன்னால நல்லது எது கெட்டது எதுன்னு புரிஞ்சிக்க முடியாதா, உன் தங்கச்சிதானே அவள், தப்பு செய்றவளை திட்டி அறிவுரை சொல்லி சரியாக்கற வழியை பார்க்காம அவள்கூட சேர்ந்து நீயும் இப்படி கேவலமான வேலையை செய்திருக்கியே, இது உனக்கே தப்புன்னு தெரியலை“
”தப்புதான் நான் செய்தது பெரிய தப்புதான் என்னை மன்னிச்சிடு”
“மன்னிப்பா தெரியாம செய்ற தப்புக்குதான் மன்னிக்க முடியும், நீ தெரிஞ்சே என் வாழ்க்கை அழியனும்னே எல்லாம் செய்திருக்க, உன்னை எப்படி நான் மன்னிப்பேன் முடியாது”
”கண்மணி நான் வேணா கமலியை கூட்டிட்டு வரேன் அவள் சொன்னா நீ என்னை மன்னிப்பல்ல சொல்லு“
Advertisement
”அவசியம் இல்லை, உனக்கே என்னைப் பத்தி எல்லாம் தெரியும், கஷ்டப்படற குடும்பம் என்னை நம்பித்தான் என் குடும்பமே இருக்கு, நான் படிப்பை நம்பியிருக்கேன், படிச்சி பெரியாளாகி என் குடும்பத்தை நான் பார்த்துக்கனும்னு கஷ்டப்படறேன், என் கஷ்டம்லாம் உனக்கு பெரிசாவே தெரியலைல்ல
என் லட்சியத்துக்கு குறுக்க இருக்கற இந்த காதலை நான் வேணாம்னு நினைச்சது என் தப்பா, நான் என்ன உன்னை மட்டுமா ரிஜக்ட் பண்ணேன், என் பின்னாடி சுத்தின எல்லாரையும்தானே நான் ரிஜக்ட் பண்ணேன், உன்னை மாதிரி அவங்களும் என்னை பழிவாங்க நினைச்சா என் வாழ்க்கை என்னாகிறது
ஆக மொத்தம் நான் நாசமா போகனும்னுதானே இவ்வளவும் செய்த, அது நடக்கலைன்னதும் வருத்தப்படற, ஒருவேளை நான் அழிஞ்சிப் போனா நீ சந்தோஷப்படுவ, சே இதுவா உன் காதல், நீயெல்லாம் ஒரு மனுஷனா போ இங்கிருந்து” என அவள் விரட்ட அவனோ பாவமன்னிப்பு கேட்பது போல அவளின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கைகூப்பி கெஞ்சிக் கொண்டிருக்க அவ்விடம் வந்தான் குணா
Advertisement
நடப்பதைக்கண்டு கோபத்தில் வெகுண்டான், அதற்குள் கமலி வந்தாள், கவினின் செயலைக்கண்டு கோபம் கொண்டு அவனை எழுப்பினாள்
Advertisement
”இரு கமலி எல்லாம் உன்னாலதான்”
”போதும் வா என்கூட” என கமலி அழைக்க கண்மணியோ கமலியிடம்
”கமலி, உன்னோட பழிவாங்கற எண்ணத்தில உன் வாழ்க்கையை நீயே அழிச்சிக்காத, படிப்புதான் முக்கியம், உன்னை ஒருத்தன் வேணாம்னு சொன்னதுக்காக அவனை பழிவாங்க நினைக்கறது முட்டாள்தனம், ஏன் நீயும் அழகாதானே இருக்க, உன்னை எத்தனை பேர் காதலிக்கிறேன்னு சொல்லியிருப்பாங்க, சொன்னாங்களா இல்லையா, அவங்களை நீ ரிஜக்ட் பண்ணியிருப்பல்ல, அவங்க எல்லாம் உன்னை பழிவாங்க நினைச்சிருந்தா உன் கதி என்ன யோசி பார்க்கலாம்” என சொல்ல அவளோ குழம்பினாள்
Advertisement
கண்மணி சொன்னது உண்மைதானே என மூளை சொன்னது, ஆனால் மனதோ அதை ஏற்க மறுத்தது, அதில் அவள் கோபத்துடன் கவினை இழுத்துக் கொண்டு சென்றாள்.
அவர்கள் இருவரும் சென்றதும் குணா கண்மணியிடம் வந்தான்
”குணா இங்க என்ன நடந்ததுன்னா“
”தேவையில்லை எல்லாம் நான் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன், கமலி எல்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்கு போய் அறிவுரை சொல்றியே, இவ்ளோ நேரம் நான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைச்சும் அவள் புரிஞ்சிக்கலை, நீ சொல்லியா அவள் புரிஞ்சிக்கப் போறா, அவள்லாம் பட்டுதான் திருந்துவா, அறிவுரையை விட அனுபவம்தான் ஒருத்தனை மாத்தும், அதுபோல அவளுக்கும் ஏதாவது ஒரு அனுபவம் வந்தா தன்னால தன் தவறை உணர்ந்து திருந்துவா, அதுவரைக்கும் அவள் நம்மளை சும்மா விடமாட்டா”
”அவள் என்ன செய்தாலும் சரி, நாம அவளை போல இறங்கிட கூடாது, நாம தெளிவா இருக்கலாம் என்ன ஆனாலும் சரி, நாம பிரியக்கூடாது” என அவள் உறுதியாகச் சொல்ல அவனோ கையை அகலமாக விரித்துக் காட்டினான்
”என்ன செய்ற குணா”
“ப்ச் என்னை இப்பவே பிடிச்சி வைச்சிக்க, அப்பதான் யார் மூலமும் நாம பிரிய மாட்டோம், வா வா வந்து அணைச்சிக்க” என சொல்ல அவளுக்கு வெட்கம் வந்து தலையை தாழ்த்திக் கொண்டு உடலை முறுக்கிக் கொண்டு நிற்க அந்த கண்கொள்ளா காட்சியை தன் மனதில் புகைப்படமாக எடுத்து பதிந்து வைத்துக் கொண்டான் குணா.
கண்மணியின் வெட்கத்தை ரசித்துக் கொண்டிருந்த குணாவைக்கண்ட கண்மணியோ மறுபடியும் ஓடி ஒளிய எண்ணி முயல அவனோ அவளது கையை பிடித்துக் கொண்டான்
”போதும் உன்னோட கண்ணாமூச்சி விளையாட்டு இதோட நிப்பாட்டு”
”ஏன் எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் கொஞ்ச நேரம் விளையாடலாமே”
”அதுசரி இப்படியே இருக்கற நேரம்லாம் விளையாடிக்கிட்டே இருந்தா எப்படி, வா அப்படி போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசலாம்“
”என்ன பேசறது”
”ஏதாவது பேசலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு ஒரு இடமாக அமர்ந்தான்
”குணா கோயில் என்ன காலியா இருக்கு யாரும் இல்லையே”
”இன்னிக்கு சன்டே வேற, புதுபடம் ரிலீஸ் ஆகியிருக்கு, மழை வேற வர்ற மாதிரியிருக்கு அதனால மக்கள் வரத்து குறைவா இருக்குப் போல”
என சொல்ல கண்மணியின் கவனம் வேறு பக்கம் இருந்தது.
அவள் எதை பார்க்கிறாள் என அவனும் பார்த்தான், அங்கு ஒரு இளம் பெண் நெய் விளக்கு ஏற்றிவிட்டு மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தாள், அடுத்து அவளின் தாயாரோ அவளிடம் அடிபிரதட்சனம் செய்யுமாறு சொல்ல அவளும் அடிபிரதட்சனம் செய்ய கண்மணியோ ஆர்வம் தாங்காமல் அந்த பெண்ணின் தாயிடம் சென்று விவரம் கேட்க அவரோ
”இன்னிக்கு நல்ல நாள் நெய் விளக்கேத்தி அடிபிரதட்சனம் செய்து மனமுருக வேண்டிக்கிட்டா நல்ல மணவாழ்க்கை அமையும், மனசுல நினைச்சவனையே கல்யாணம் செய்துக்கலாம்”
”ஓ அப்படியா” என்றவள் உடனே குணாவிடம் ஓடிவந்தாள்
”குணா குணா எனக்கு நெய்விளக்கு வாங்கித்தா” என கேட்க அவனுக்கு வேடிக்கையாக இருந்தது
”உனக்கெதுக்கு கண்மணி, அதான் குத்துகல்லாட்டம் நான் இருக்கேனே அப்புறம் என்ன, அந்த பொண்ணுக்கு இனிமேலதான் ஆள் வரனும், உனக்குதான் ரெடியா நான் இருக்கேன்ல, எதுக்கு பரிகாரம் செய்ற, படிச்சி முடிச்சி வேலை கிடைச்சதும் நமக்கு கல்யாணம் போதுமா”
”அது நடக்கறப்ப நடக்கட்டும் இப்ப நான் கேட்ட நெய்விளக்கு வாங்கித்தா வா எழு வா” என அவனை உலுக்க அவனும் அவளுடன் நடந்தான்.
இரண்டு நெய்விளக்குகளை வாங்கி வந்தான் அதைக்கண்டவள்
”இரண்டு எதுக்கு”
”உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு இந்தா இது உனக்கு” என சொல்லி ஒரு விளக்கை அவளிடம் தர அவளும் அதை வைத்து மனமுருக விளக்கேற்றிவிட்டு நின்றாள் அவனும் விளக்கேற்றிவிட்டு பார்த்தான்
”என்ன அடிபிரதட்சனம் செய்யனுமா”
”ஆமாம் வா வா” என அழைக்க அவனும் சரியென்றான்
இருவரும் அடிபிரதட்சனம் செய்யலானார்கள், மனம் உருகி அவர்கள் வேண்டிக் கொண்டே வர காற்றடித்து அவர்கள் ஏற்றி வைத்திருந்த விளக்குகள் அணைந்துவிட்டது, அதை தொலைவில் இருந்து கவனித்துவிட்ட குணாவோ அதை கண்மணி கண்டு மனம் வருந்தக்கூடாது என நினைத்து அவசர அவசரமாக நடந்து வந்து அந்த விளக்குகளை ஏற்றிவிட்டு அவளிடம் சென்று சேர்ந்து நடந்தான்.
இருவரும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றார்கள் அப்போதும் காற்றடித்து அந்த இரண்டு விளக்குகளும் அணைந்துவிடவே அதிர்ந்தாள் கண்மணி, குணாவோ நொந்துப் போனான்
”குணா அங்க பாரு விளக்கு அணைஞ்சிடுச்சி” என்றாள் கவலையாக
”விடு கண்மணி காத்து பலமா அடிக்குதுல்ல அதான்”
”இல்லை இது அபசகுனம், இப்படி அணைஞ்சா நாம நினைச்சது நடக்காதுன்னு சொல்வாங்க”
”ப்ச் அப்படியெல்லாம் இல்லை கவலைப்படாத“
”இல்லை எனக்கு பயமாயிருக்கு”
”ரொம்ப பயமாயிருக்கா“
”ஆமாம் எங்க உன்னை நான் இழந்துடுவேனோன்னு பயமாயிருக்கு” என வருந்த அவனோ சட்டென அங்கு வைக்கப்பட்டிருந்த குங்குமத்தை கையில் எடுத்து அவளைப் பார்த்தான், அன்று அவள் தடுத்தாள் ஆனால் இன்று அவள் தடுக்கவில்லை
”வைக்கவா” என அவன் கேட்க அவள் எதிர்க்காமல் சரியென்பது போல் தலையாட்ட அவனுக்கு வியப்பாக இருந்தது
”ஏய் என்னாச்சி உனக்கு இந்தளவுக்கா பயப்படற”
”ஆமாம் என்னால எதை வேணும்னாலும் இழக்க முடியும் ஆனா உன்னை என்னால இழக்க முடியாது”
”உன் படிப்பு“
”ப்ச் உன்னை விட அது எனக்கு பெரிசில்லை”
”காதல் உன் கண்ணை மறைக்குது, அதனாலதான் தப்பு தப்பா யோசிக்கற” என சொல்லியவன் அந்த குங்குமத்தை அவளது நெற்றி வகிட்டில் வைக்காமல் அவள் இட்டிருந்த பொட்டின் கீழ் சிறியதாக வைத்தான்
”என்ன அவ்ளோதானா”
”இது போதும் கண்மணி அதுக்கெல்லாம் நேரம் வரும்”
”அன்னிக்கு மட்டும் வைக்க ஆசைப்பட்ட”
”அது அன்னிக்கு நான் ரொம்ப குழப்பத்தில இருந்தேன், ஆனா இப்ப தெளிவாயிருக்கேன், நீயே என்னை வெறுத்தாலும் நான் உன்னை விடமாட்டேன், இது சத்தியம்” என அவளுக்கு சத்தியம் வேறு செய்து வைத்தான், ஆனாலும் அவளின் முகம் கவலையாக தெரியவே
”சரி வா உன்னை ஹாஸ்டல்ல விடறேன், நாளைக்கு டெஸ்ட் இருக்கு எதை பத்தியும் நினைச்சி கவலைப்படாம ரிலாக்ஸா இரு ஓகேவா” என சொல்ல அவளும் அரைமனதுடனே சரியென தலையாட்டினாள்.
அவளை அவளது ஹாஸ்டலில் இறக்கிவிட்டு தனது லாட்ஜ் அறைக்கு வந்தான், அங்கோ அந்த அறையில் தங்கும் ஒருவன் காதல் திருமணம் செய்துவிட்டானாம், தன் காதல் மனைவியை எங்கு தங்க வைப்பது என தெரியாமல் தடுமாற அவனுக்கு ஆளுக்கொருவர் உதவி செய்தனர், அவர்களே பார்த்து அவனுக்கு சிறியதாக ஒரு போர்ஷன் வீடு அமைத்து தந்தனர், அதற்காக நன்றி கூற வந்தவன் குணாவிடம்
”நண்பா நீயும் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்னு எனக்குத் தெரியும்”
”அதெல்லாம் இல்லை“
”எல்லாம் நான் பார்த்திருக்கேன், அந்த கிப்ட் லெட்டர்ங்க எல்லாமே நீ பத்திரமா வைச்சிருக்கற. ஒரு விசயம் சொல்றேன், என் அனுபவத்தில சொல்றேன், காதலிக்கலாம் தப்பில்லை ஆனா லைப்ல செட்டில் ஆகாம கல்யாணம் செய்துக்க கூடாது, அவசரப்பட்டு கல்யாணம் செய்தா பெரிய பிரச்சனையாகும், நம்மளை நம்பி வந்த பொண்ணை வேற நாம கஷ்டப்பட வைக்கனுமா சொல்லு”
”அப்படியெல்லாம் இல்லை நான் வந்து”
”என்னைப் போல நீ அவசரப்படமாட்டேன்னு நம்பறேன், நீ நல்லா படிக்கற பையன், படிப்பை மட்டும் பாரு, அதுக்காக காதலிக்க கூடாதுன்னு சொல்லலை, காதல் பண்ணு ஆனா அதை ஒரு அளவோட செய்”
”ஏன் என்னாச்சி”
”என்னை போல நீ அவசரப்பட்டுட்டாத, அப்புறம் கல்யாணத்தை கூட அவசர அவசரமா செய்யனும், அப்புறம் தங்கறதுக்கு வீடு பார்த்து குடுத்தனம் நடத்த தேவையான பொருள் வாங்கி செட்டில் ஆகறதுக்குள்ள படாத பாடுபடுவோம், நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு”
என அறிவுரை சொல்லிவிட்டு அவன் சென்றுவிட குணா பலமாக யோசித்தான்
மறுநாள் கல்லூரிக்கு உற்சாகமாக வந்தாள் கண்மணி, ஆனால் குணாவோ அழுது வடிந்து வந்து நின்றான்
”என்னாச்சி உனக்கு படிக்கலையா”
”அதெல்லாம் படிச்சாச்சி“
”அப்புறம் ஏன் உன் முகம் டல்லாயிருக்கு“
”ஒண்ணுமில்லை இதுவரைக்கும் எந்த கவலையும் இல்லாம ஜாலியா இருந்தேன் ஆனா இப்ப அப்படி ஜாலியா இருக்க முடியாதே”
”ஏன் என்ன பிரச்சனை”
”என் வாழ்க்கையில யாரும் இல்லை நான் மட்டும்தான் தனியாளு, அதனால எனக்கு பிடிச்ச மாதிரி நான் வாழ்ந்துட்டேன், ஆனா இப்ப அப்படியில்லையே, நீ வேற இருக்க, உனக்காகவும் நான் வாழனும்”
”குணா என்னாச்சி உனக்கு, எதுக்கு இப்படி ஒரு மாதிரியா பேசற, நான் உனக்கு பாரமா தெரியறேன்னா”
”அய்யோ கண்மணி நான் அப்படி சொல்வேனா, நீ என் உசுரு, உன்னைப் போய் பாரமா நான் எப்படி நினைப்பேன், உனக்கு ஒரு பாரம் தரக்கூடாதுன்னு கவலைப்படறேன், நீ மகாராணி போல வாழனும், அப்படிதான் உன்னை நான் வாழ வைக்க ஆசைப்படறேன்”
”சரி அதனால என்ன இப்ப”
”இல்லை லைப்ல செட்டில் ஆகற வரைக்கும் எனக்காக நீ காத்திருப்பியா“
”என்ன கேள்வி இது“
”பதில் சொல்லு கண்மணி, எனக்காக நீ காத்திருப்பியா இல்லை உன் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு என்னை விட்டுடுவியா” என கேட்டதும் தாமதம் அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது, அங்கிருந்து அவள் விறுவிறுவென சென்றுவிட அவனோ நொந்துப் போனான்
பெல் அடித்தது, பரிட்சை தொடங்கியது, அனைவரும் அமைதியாக பரிட்சை எழுத கண்மணியோ அவசரகதியில் எழுதி முடித்து பேப்பரை வாத்தியாரிடம் தந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட குணா திடுக்கிட்டான்
”போச்சி செம கோபத்தில இருக்காப்போல, இவளை எப்படி சமாதானம் செய்றதுன்னு தெரியலையே” என நினைத்துக் கொண்டே அரைகுறையாக பரிட்சை எழுதி முடித்தான், பெல் அடிக்கவும் தன் பைக்கிடம் வந்தான், அங்கு கண்மணி இருக்கவும்
”கண்மணி” என பாசமாக அழைக்க அவளோ
”வண்டியை எடு”
என அதட்ட அவனும் அமைதியாக வண்டியை எடுத்தான், கண்மணி பின்னால் ஏறிக் கொள்ள வண்டியை செலுத்தினான், இந்த காட்சியைக்கண்ட கமலிக்கு வயிறு எறிந்தது, கவினுடன் இணைந்து அவர்களை பின்தொடர்ந்தாள்.
”கண்மணி எங்க போறோம்”
”நான் சொல்றேன் நேரா ரெயில்வே ஸ்டேஷன் போ”
”அங்க எதுக்கு”
”மதுரைக்கு போகனும்”
”ஏய் என்ன சொல்ற மதுரைக்கா”
”ஆமாம் மதுரைக்குதான், அங்க என் அப்பா அம்மா இருக்காங்க, அவங்ககிட்ட உன்னை அறிமுகம் செய்யப் போறேன், கண்டிப்பா அவங்க என் ஆசைக்கு மறுப்பு சொல்லமாட்டாங்க, அவங்களுக்கு என் சந்தோஷம்தான் முக்கியம், நிச்சயம் அவங்க உன்னை ஏத்துப்பாங்க”
”இப்ப என்ன அவசரம்“
”சந்தேகம்னு ஒண்ணு வந்தபின்னாடி அதை சால்வ் பண்றதுதான் சரியான வழி”
”வேணாம் கண்மணி, நான் சந்தேகப்படலை, ஒருவேளை அப்படியாயிடுச்சின்னா என்ன செய்றதுன்னு”
”ஆஆ இப்படி ஒரு குழப்பத்தோட நாம இனி காதலிக்க வேணாம், அப்புறம் நமக்குள்ள வீணா சண்டை வரும்”
”சாரி கண்மணி நான் எதையோ நினைச்சி உன் மனசை காயப்படுத்திட்டேன், இனி இது போல நடக்காது என்னை மன்னிச்சிடு”
”மன்னிப்பு எதுக்கு வேணாமே, என் அப்பா அம்மா உத்தரவாதம் தந்துட்டா போதும்ல”
”போதும் நிறுத்து கண்மணி” என கோபத்தில் வண்டியை ஓரம்கட்டி நிப்பாட்டிவிட்டு அவளையும் வண்டியை விட்டு இறங்க வைத்தான்
”என்னால முடியாது கண்மணி, நான் வரலை, எனக்கு நம்பிக்கையிருக்கு, நீ நடந்தே ஹாஸ்டலுக்கு போ, நான் கிளம்பறேன்”
”குணா மறுபடியும் குழப்பத்தோட என் முன்னாடி வந்துடாத, அப்புறம் நான் பொல்லாதவளாயிடுவேன்“
”சரி எனக்கு எந்த குழப்பமும் இல்லை போதுமா“
”பார்க்கலாம்” என சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட அவனோ ஆயாசப்பட அந்நேரம் கமலியும் கவினும் வந்து நின்றார்கள்
”என்னாச்சி குணா, அவள் கோபமா உன்னை விட்டுப் போறாளே, ஏதாவது பிரச்சனையா நான் வேணா தீர்த்து வைக்கவா” என கிண்டலாக கேட்டாள் கமலி அதற்கு கவினோ
”நீ நினைக்கற மாதிரி ஆள் கண்மணி கிடையாது, அவள் சொக்கத்தங்கம், வீணா அவள் வாழ்க்கையை அழிச்சிடாத, அவளை விட்டு விலகிடு”
”அப்புறம் முடிஞ்சிடுச்சா பேசிட்டீங்களா கிளம்புங்க இங்கிருந்து”
”ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவள் உன்னை தவிக்கவிட்டு போயிடுவா, அவள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியாம நீ பைத்தியக்காரன் மாதிரி அலையத்தான் போற, அந்த நாள் ரொம்ப தூரத்தில இல்லை குணா, என்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தினதுக்கு தக்க தண்டனை உனக்கு கிடைக்கும், இது என்னோட சாபம்” என கமலி சாபமிட குணாவிற்கு திக்கென்றது. கவினோ
”எப்படியும் கண்மணி உன்னை விட்டுடுவா, அவள் உன்னை விட்ட அடுத்த நொடி அவளை நான் சொந்தமாக்கிக்குவேன், என் மனைவியா கண்மணியிருப்பா, அதை பார்த்து நீ பொறாமைப்படதான் போற பாரு” என சொல்ல குணாவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அவர்கள் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றி விட்டு சென்றுவிட குணாவோ நிலை குலைந்துப் போனான், அந்நேரம் தூரத்தில் இருந்து கண்மணி நடந்து அவனிடம் வந்தாள், அவளது பையை வண்டியிலேயே விட்டுச் சென்றுவிட அதை எடுக்க வந்தவள் கவின், கமலி சொன்னதைக் கேட்டு குணா கலங்கியிருப்பதைக்கண்டு நொந்துப் போனாள்
”இவங்களை நினைச்சா நீ பயப்படற“
”அப்படியில்லை ஆனாலும்”
”குணா அவங்களை விட்டுத்தள்ளு, உனக்கு என்ன தோணுதோ அதுபடி செய்” என அமைதியாக சொல்லிவிட்டு அவள் தனது பையுடன் சென்றுவிட குணாவோ கண்கள் மூடினான், அவன் மனது அமைதியாகும் வரை காத்திருந்தான், அதற்கு சில நொடிகள் ஆனது, அதன்பின் அவன் தெளிவானான்
”டெஸ்ட் முடிஞ்சதும் கண்மணி வீட்ல பொண்ணு கேட்டு அவளை கல்யாணம் செய்துக்கனும், அதுக்கு முன்னாடி ஒரு வாடகை வீட்டை பார்க்கனும், அவளை கல்யாணம் செய்துக்க தாலி வாங்கனும், அவளுக்கு துணிமணி, நகை நட்டு எல்லாம் வாங்கனும், அதுக்கு பணத்துக்கு எங்க போறது” என பலமாக யோசித்தவனுக்கு அவனது தாய் தந்தை வாழ்ந்த வீடு நினைவுக்கு வந்தது
”பேசாம அந்த வீட்டை வித்துட வேண்டியதுதான்” என நினைத்துக் கொண்டு அதற்கான வேலையில் அப்போதே இறங்கினான்.
அடுத்தடுத்த பரிட்சைகளில் குணாவும் கண்மணியும் நல்லபடியாகவே எழுதி முடித்தார்கள், பரிட்சை முடிந்ததும் உடனே விடுமுறை அறிவித்தார்கள், அதைக்கேட்ட குணாவோ கண்மணியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று அவளிடம் தன் மனதில் இருப்பதை கூறினான்
”கண்மணி ஒரு வாரம் லீவு விட்டாங்க அதனால நான் கோவைக்கு போய் வந்துடறேன் சரியா”
”கோவையா என்ன விசயம்”
”சொந்த ஊருக்கு போய் ரொம்ப நாளாச்சி அதை எட்டிப்பார்த்துட்டு வந்துடறேன்”
”எனக்கும் அப்பா அம்மாவை பார்த்து ரொம்ப நாளாச்சி, பார்க்கனும் போல இருக்கு அவங்ககூட பேசினாலே ஏக்கமா இருக்கு குணா”
”அப்போ வாயேன் ஒண்ணா ஊருக்கு போய்ட்டு வரலாம்”
”சரி முதல்ல கோவைக்கு போகலாம்”
”கோவைக்கு நீ எதுக்கு”
”சொந்த ஊருக்குதானே போற ஏன் நான் வரக்கூடாதா”
”அங்க என் அப்பா அம்மா வாழ்ந்த வீடுதான் இருக்கு, அதுவும் இப்ப காலியா இருக்கு, யாரும் இல்லை சொந்தபந்தங்கள் எல்லாம் டச்ல இல்லை”
”ஏன் அப்படி”
”அப்பாவும் அம்மாவும் வேற வேற சமூகத்தை சேர்ந்தவங்க, லவ் மேரேஜ் வேற, அவங்களை இரண்டு பக்கமும் ஏத்துக்கலை, நான் பிறந்தப்ப கூட யாரும் எட்டிக்கூட பார்க்கலை, அதோட பணக்கஷ்டம் வேற பயங்கரமா இருந்தது, அப்பாவால சமாளிக்க முடியலை, ஊருக்குள்ள யாரும் கடனும் கொடுக்கலை, கடனை அடைக்க முடியாம ஒரு நாள் அவரு அம்மாவோட சண்டை போட்டாரு, எங்கம்மாவை கல்யாணம் செய்ததாலதான் அவருக்கு நஷ்டம் வந்ததாம், வாழ்க்கையை தொலைச்சிட்டாராம்
நீ அதிர்ஷ்டம் கெட்டவ அப்படி இப்படின்னு வாய்க்கு வந்ததை பேசி பாவம் எங்கம்மா மனசை ரொம்ப நோகடிச்சிட்டாரு, காதலிச்சதை தவிர எங்கம்மா எந்த தப்பும் செய்யலை, அப்பா பேசினது அவங்களை ரொம்ப காயப்படுத்திடுச்சி, ஏமாற்றம் வலி வேதனை எல்லாம் சேர்ந்து ஒருநாள் அவங்க தற்கொலை செய்துக்கிட்டாங்க
அவங்க இறந்த துக்கம் தாங்காம எங்கப்பாவும் குடிச்சி குடிச்சி அழிஞ்சி செத்தாரு, அவரு பட்ட கடனுக்கு வீட்டை தவிர எங்களுக்குன்னு சொந்தமா இருந்த நிலம் புலம் எல்லாம் கடன்காரங்க எடுத்துக்கிட்டாங்க, அப்பவே எனக்கு 15 வயசு, யாருமில்லாத வீட்ல நான் மட்டும் தனியா வாழ்ந்தேன், அது ஒரு கொடுமை, நரகத்தை போல ஒரு வாழ்க்கை, பள்ளி படிப்பு முடியறவரைக்கும் அங்க தங்கினேன், அதுக்கு அப்புறம் காலேஜ்ன்னு வரும் போது இப்படி லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கினேன், அதுக்கு அப்புறம் அந்த பக்கமே நான் போகலை” என தன் கதையை சொல்லி முடித்தான் குணா
…. தொடரும்
error: Content is protected !!