Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –19

”உன் கதை ரொம்ப சோகமா இருக்கு குணா, ஏறக்குறைய உன்னை போலதான் நானும், என் அப்பா அம்மாவும் லவ் மேரேஜ்தான், ரொம்ப எதிர்ப்புக்கு அப்புறமா அவங்க ஒண்ணு சேர்ந்தாங்க, ஆனா ஊரே அவங்களை விலக்கி வைச்சிடுச்சி, சொந்த பந்தம் யாரும் உதவலை, ஆனாலும் கஷ்டப்பட்டு குடும்பத்தை பார்த்துக்கிட்டாரு, எங்கப்பாவும் எங்கம்மாவும் சின்ன சின்ன வேலைகளை செய்து என்னை வளர்த்தாங்க

நான் வளர வளர ஊரே என்னை கேவலமா பேச ஆரம்பிச்சது, நானும் அவங்களை போல லவ் பண்ணி ஓடப்போறேன்னு சொன்னாங்க, என்னை ஒரு பொண்ணா இல்லை ஒரு மனுஷியா கூட யாரும் மதிக்கலை, அழகா வேற பிறந்து தொலைச்சிட்டேனா, எங்களுக்கு ஒண்ணுன்னா கேள்வி கேட்க கூட யாரும் இல்லைங்கற நினைப்பில 17 வயசுல இருந்து 60 வயசு வரை ஆம்பளைங்க என்னை பார்க்காத நாள் இல்லை

அவங்களோட வக்கிர புத்தி அவங்க கண்ல தெரிஞ்சது, அவங்க கண்பார்வையில இருந்து என்னை காப்பாத்திக்க நான் ரொம்ப பாடுபட்டேன், என்னை காப்பாத்த என் அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க, காலேஜ்ன்னு வந்ததும் அவனவன் என்னை சொந்தம் கொண்டாட வந்தானுங்க

கல்யாணம் செய்துக்க மாட்டானுங்களாம், நல்லபடியா பார்த்துப்பானுங்களாம், அந்தளவுக்கு நான் கேவலமா போயிட்டேன், அப்ப எனக்குள்ள ஒரு கோபம் வந்தது, தைரியம் வந்தது, ஊரை எதிர்க்க முடியாது, சரி ஊரை விட்டு ஒதுங்கிடலாம்னு நினைச்சி படிக்க ஆரம்பிச்சேன், நல்லா படிச்சி பெரியாளாகி அப்பா அம்மாவை நம்ம கூட கூட்டிட்டுப் போயிடலாம்னு நினைச்சேன்



Advertisement

சொந்தமா வீடு கூட இல்லை வாடகை வீடுதான், ஏதோ கூலி வேலை செய்து அப்பாவும் அம்மாவும் அவங்களை பார்த்துக்கறாங்க, நான் பார்ட் டைம் வேலை பார்த்து என்னையும் என் படிப்பையும் பார்த்துக்கிறேன்” என கண்மணி சொல்ல அவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது

”கண்மணி ஒண்ணு சொல்லவா“

”என்ன“

Advertisement

”இத்தனை நாளும் எனக்கு வந்த கஷ்டம்தான் பெரிய கஷ்டம், என்னை போல யாரும் கஷ்டப்பட்டதில்லைன்னு நினைச்சி எல்லாரையும் வெறுத்தேன், ஆனா உன் கஷ்டத்தை பார்க்கறப்ப என்னோடது ஒண்ணுமேயில்லை”

Advertisement

”அவங்கவங்களுக்கு அவங்கவங்க கஷ்டம்தான் பெரிசு குணா, காதலை ஏன் நான் வெறுத்தேன்னு இப்ப உனக்கு தெரிஞ்சிருக்குமே, ஒரு காதலால என் குடும்பமே இப்ப வரைக்கும் கேவலப்பட்டுக்கிட்டு இருக்கு, அவங்க நிலைமை எனக்கு வரக்கூடாதுன்னுதான் யார் என்னை தேடி வந்தாலும் அவங்களை விரட்ட ஆரம்பிச்சேன், ஆனா உன் விசயத்தில என்னால அப்படி செய்ய முடியலை, அது ஏன்னு தெரியலை” என பெருமூச்சு விட்டுச் சொல்ல குணாவோ

”கரெக்டா சொன்ன எனக்கு அப்பா அம்மா இல்லை அதை நினைச்சி நான் என்னிக்குமே வருத்தப்பட்டதில்லை, ஆனா அப்பா அம்மாவை பேசின வார்த்தைகள் என்னால சாகற வரைக்கும் கூட மறக்க முடியாது கண்மணி, காதலாலதான் அவங்க வாழ்க்கை ஆரம்பிச்சது அதே காதலாலதான் அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க, அதனாலயே எனக்கு காதலை பிடிக்கலை

அதுக்காக எனக்கு குடும்பமே வேணாம்னு நான் சொல்லலை, எனக்கும் குடும்பம் வேணும்னு ஆசைப்பட்டேன், மனைவி குழந்தைகள்ன்னு நிம்மதியா வாழனும், அதுக்கு பணம் தேவை, அதுக்காக படிக்கனும்ங்கறதை லட்சியமா வைச்சிருக்கேன், என்ன ஆனாலும் சரி லைப்ல செட்டில் ஆனபின்னாடிதான் கல்யாணம்னு அப்பா அம்மா இறப்பு அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்

Advertisement

எனக்கு அப்பா அம்மா இல்லை அதனால எனக்கு பிரச்சனையில்லை ஆனா, உனக்கு உன் அப்பா அம்மா இருக்காங்க, நாளைக்கே நான் வந்து உன்னை பொண்ணை கேட்டா அவங்க தரனும், ஆனா அவங்க மனசுல என்ன இருக்கோ தெரியலை, அவங்க எனக்கு உன்னை தருவாங்களேன்னு சந்தேகமா இருக்கு”

”ஏன் இப்படி யோசிக்கற எல்லாம் நல்லதே நடக்கும்”

”இதுநாள் வரை நான் நல்லதை பார்த்ததில்லை, ஏதோ உன்னால நான் கொஞ்ச நாளா சந்தோஷமா இருக்கேன், நீயில்லைன்னா என் மொத்த சந்தோஷமும் என்னை விட்டு போயிடும் கண்மணி”

”சரி அதுக்கு என்ன செய்யலாம்ங்கற”

”கோவையில இருக்கற என் வீட்டை வித்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

என சொல்ல அவளோ அதிர்ந்து

”முட்டாளா நீ சொந்த வீட்டை விக்கலாம்னு சொல்ற, என்னாச்சி உனக்கு, இப்ப அதை வித்து என்ன செய்யப் போற”

”கையில பணம் இல்லை, அதனால அந்த வீட்டை வித்தா நல்ல பணம் கிடைக்கும்ல“

”இப்போ பணத்துக்கு என்ன அவசரம்”

”உன்னை கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் கண்மணி”

என சொல்ல அவளோ வியப்பின் உச்சிக்கே சென்றாள்

”கண்மணி ஏய் கண்மணி என்னாச்சி“

”இப்ப என்ன திடீர்ன்னு கல்யாணம்லாம்”

”டெஸ்ட் முடிஞ்சிடுச்சி ரிசல்ட் வந்துடும், அதுக்கு அப்புறம் வாடகைக்கு வீடு பார்க்கனும், தங்கறதுக்கு சாமான்கள் வாங்கனும், அப்படியே உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு வையேன் நிம்மதியா இருக்கும், பயப்படாத, என்னால உன் படிப்புக்கு எந்த பாதகமும் வராது, நீ படிச்சி முடிச்சி லைப்ல செட்டில் ஆகறவரைக்கும் உன் நிழலை கூட நான் தொட மாட்டேன், சத்தியமா வேணும்னா உன் அப்பா அம்மாவை கூட நம்ம கூடவே தங்க வைச்சிக்கலாம், உனக்கும் துணையா இருக்கும்” என சொல்ல அவளோ அதைக்கேட்டு கலகலவென சிரித்தாள்

”எதுக்கு சிரிக்கற நான் இப்ப சொன்னதை எல்லாம் கண்டிப்பா செய்வேன் கண்மணி என்னை நம்பு”

”லைப்ல செட்டில் ஆனபின்னாடிதானே கல்யாணம்னு சொன்ன இப்ப என்ன அவசரம்”

”லைப்ல செட்டில் ஆகற வரைக்கும் நாம ஏன் நம்ம வாழ்க்கையை வாழாம காத்திருக்கனும், லைப்ல செட்டில் ஆகறப்ப ஆகலாம், அதுக்குள்ள நாம ஒரு குடும்பமா மாறிடலாமே, ப்ளீஸ் கண்மணி”

”குணா என்னை உனக்கு எத்தனை நாளா தெரியும்”

”என்ன”

”எத்தனை நாளா என்கூட பேசற பழகற என்ன ஒரு மாசம் இருக்குமா”

”அதனால என்ன”

”ஒரு மாசம்தான் ஆச்சி நாம பழகி, அதுக்குள்ள கல்யாணம் அது இதுன்னு அவசரப்படற, இது தப்பு, நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கனும், கஷ்ட நஷ்டங்களை சமாளிக்கனும், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நாம ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம சண்டை போடாம ஒத்துமையா இருக்கனும், இன்னும் நாம முழுசா காதலிக்கவேயில்லை, முதல்ல நாம காதலிக்கனும், அலுப்பு தட்ட தட்ட காதலிக்கனும், போதும் காதலிச்சதுன்னு ஒருநாள் தோணும், அப்ப கல்யாணம் செய்துக்கலாம், அதுவரைக்கும் காத்திருக்கலாமே”

”ப்ச் அதுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்து நீயும் நானும் பிரிஞ்சிட்டா“

”அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் பிரச்சனை வந்தா என்ன செய்வ என்னை விட்டுடுவியா“

”கண்மணி விளையாட்டுக்கு கூட அப்படி பேசாத ப்ளீஸ்“

”சரி முதல்ல நாம படிக்கலாம், வேலை கிடைக்கட்டும், அதுக்கு அப்புறம் கல்யாணம் செய்துக்கலாம், அதுவரைக்கும் நாம காதலிக்கலாம், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்”

”கண்மணி புரிஞ்சி்க்க, ப்ளீஸ், உன் கால்ல கூட விழறேன், நாம கல்யாணம் செய்துக்கலாம், அதுக்கு அப்புறம் நான் நிம்மதியா இருப்பேன் ப்ளீஸ் ப்ளீஸ்” என கெஞ்ச அவளோ குழம்பினாள்

யோசித்தாள்

”சரி எதுவாயிருந்தாலும் அப்பா அம்மாகிட்ட கேட்கலாம் அவங்க என்ன சொல்றாங்களோ அதுபடி செய்யலாம் ஆனா ஒண்ணு”

”என்ன”

”உன் வீட்டை நீ விக்க கூடாது”

”ப்ச் விக்காம எப்படி பணம் வரும் எப்படி கல்யாணம் செய்துக்கறது”

”முதல்ல அப்பா அம்மாகிட்ட சம்மதம் வாங்கனும்”

”இதுவேறயா சரி உன் வீட்டு அட்ரஸ் சொல்லு நான் போய் உன் அப்பா அம்மாவை பார்த்துட்டு வரேன்”

”ஹலோ பொண்ணு பார்க்க போறப்ப பொண்ணும் அங்க இருக்கனும்ல, தனியா போய் எந்த பொண்ணை பார்க்கப் போறீங்களாம்”

”உன்னைத்தான் தினமும் பார்க்கிறேனே புதுசா பார்க்க என்ன இருக்கு”

”அப்படியில்லை நானும் வரேன், அப்பா அம்மாகிட்ட நானும் பேசி புரிய வைக்கறேன்”

”இதுவும் சரிதான், ஒருவேளை அவங்க சரின்னு சொல்லிட்டா உடனே நாம கல்யாணம் செய்துக்கனும், அது இதுன்னு காரணம் காட்டி கல்யாணத்தை தடுக்க கூடாது“

”சரி சரி எப்ப ஊருக்கு போகலாம்“

”இப்பவே கூட போகலாம்”

”இப்பவே வேணாம் நாளைக்கு காலையில போகலாம்” என சொல்ல அவனும் சரியென அவளை அழைத்துக் கொண்டு கிளம்ப இவ்வளவு நேரமும் இவர்கள் பேசியதை ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த கவினும் கமலியும் ஒருவரை ஒருவர் கோபமாக பார்த்துக் கொண்டார்கள்

”கல்யாணம் வரைக்கும் பேச ஆரம்பிச்சிட்டாங்க, இனியும் இவங்களை சும்மா விட முடியாது, நாம நினைச்சது என்ன? நடக்கறது என்ன? அவங்களை கஷ்டப்பட வைக்கனும்னு பார்த்தா அவங்க கல்யாணம் வரைக்கும் போறாங்களே, இல்லை இந்த கல்யாணம் நடக்க கூடாது” என கமலி கோபத்தில் பொங்க கவினும் ஆத்திரத்தில் இருந்தான்

”ஆமாம் கமலி ஏதாவது செய், இந்த கல்யாணம் நடக்ககூடாது கண்மணி எனக்குத்தான் வேணும்”

”என்னடா சொல்ற“

”ஆமாம் என்னால அவளை விட்டுக் கொடுக்கமுடியலை“

”லூசு அவள் குணாவோட காதலி”

”நிப்பாட்டு, இதை உருவாக்கினதே நீதான், அவள் பாட்டுக்கு ஒழுங்கா இருந்தா, நீயா லெட்டரு கிப்ட்டுன்னு கொடுத்து அவங்களை காதலிக்க வைச்ச, இப்ப கல்யாணம் வரைக்கும் அவங்க போயிட்டாங்க, இனி அவங்களை பிரிக்க முடியாது, பழிவாங்கறதா நினைச்சி அவங்களை ஒண்ணு சேர்த்து விட்டிருக்க, சே உன்னை நம்பி நான் மோசம் போனேன், எப்படியாவது அவங்களை காதலிக்க வைச்சி அவங்களை பிரிச்சி காதல் தோல்வியோட வலியை அவங்களை சுமக்க வைக்கனும்னு டயலாக் விட்ட

ஆனா நீ சொன்ன ஒரு விசயம் கூட நடக்கலை, நானும் கண்மணி லவ் பெயிலியர்ல கஷ்டப்படுவா அவள் கஷ்டத்தை போக்க ஆதரவா பேசி அவள் மனசுல இடம்பிடிச்சி அவளை கல்யாணம் செய்து செட்டில் ஆகலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன், என் ஆசையில  மண்ணை வாரி இறைச்சிட்டியே, சே உன்னை பார்த்தாலே எனக்கு கோபம் கோபமா வருது, என் கண் முன்னாடி இருக்காத போ” என கவின் கமலியை விரட்ட அவன் சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட கமலியோ

”இந்தளவுக்கு நீ கண்மணியை விரும்பறேன்னு நான் எதிர்ப்பார்க்கலை, அவளை நீ விட்டுட்டேன்னு நினைச்சேன்”

”எப்படி விடமுடியும் என்னோட முதல் காதலாச்சே அதான் விடமுடியலை”

”சரி இப்ப என்னாச்சி, விசயம் ஒண்ணும் கைமீறி போகலை, அவங்களை இப்ப கூட பிரிக்கலாம்”

”எப்படி”

”அவங்க காலையிலதானே ஊருக்கு போறாங்க நாம இப்பவே கிளம்பி மதுரைக்கு போகலாம், அங்க கண்மணியோட அப்பா அம்மாகிட்ட அவங்களை பத்தி தப்புதப்பா சொல்லி வைக்கலாம், குணாவை பத்தி கேவலமா சொன்னா தன்னால அவங்க நம்புவாங்க, நாம அவங்களை பிரிக்க வேணாம் அவங்களே இவங்களை பிரிச்சிடுவாங்க“ என  கமலி சொல்ல கவினின் முகம் மலர்ந்தது

”இதுவும் நல்ல ஐடியாதான் பரவாயில்லையே, உனக்கு கூட அறிவு இருக்கே, ஆனா குணா கண்மணியை விடுவானா எனக்கு நம்பிக்கையில்லை”

”நம்பு கண்மணிக்கு எல்லாமே அவளோட குடும்பம்தான், அப்பா அம்மா பேச்சை அவள் மீறமாட்டா, கண்டிப்பா அவங்க சொல்படி நடப்பா”

”அப்புறம் ஏன் வெயிட் பண்ணனும் கிளம்பு வா இப்பவே கிளம்பலாம்”

”அவசரப்படாத நாம சொன்னா அவங்க நம்புவாங்களா, நம்மளை சின்ன பசங்கன்னு நினைச்சிடுவாங்க”

”அப்படி நினைக்க மாட்டாங்க”

”இல்லை நாம போய் பேசினா குணா நம்மளை ஒருவழியாக்கிடுவான், நாம சொன்ன மாதிரியிருக்க கூடாது, நம்மளை அவங்க பார்க்க கூடாது, அப்பதான் நம்ம மேல குணாவுக்கும் கண்மணிக்கும் சந்தேகம் வராது”

”அதுக்கு என்ன செய்யப் போற“

”அவங்க சொந்த பந்தங்கள் ஊர்க்காரங்ககிட்ட குணா கண்மணியை பத்தி வதந்தியை கிளப்பிடலாம், அவங்க போதும், இந்த விசயத்தை பெரிசாக்கறதுக்கு, கண்மணியோட அப்பா அம்மாவுக்கு அவமானம் ஏற்படனும், அப்ப குணாவும் கண்மணியும் அவங்க முன்னாடி போய் நின்னா கண்டிப்பா அவங்க ஒத்துக்க மாட்டாங்க, குணாவை விரட்டத்தான் பார்ப்பாங்க”

”அப்படி நடக்காம அவங்களை ஒண்ணு சேர்த்து வைச்சிட்டா”

”கல்யாணம் வரைக்கும் நமக்கு நாள் இருக்கு, ஏதாவது செய்து கல்யாணத்தை நிப்பாடிடலாம், எனக்குத் தெரிஞ்சி இந்த ஐடியாவே ஒர்க்அவுட் ஆகும்னு தோணுது”

”எனக்கும் அப்படித்தான் தோணுது”

”அப்புறம் என்ன இப்பவே கிளம்பலாம் அவளோட அட்ரஸ் தெரியுமா”

”ஏன் தெரியாம தெரியாமதான் அவளை காதலிச்சேனா, அவள் பின்னாடியே நாயா அலைஞ்சிருக்கேன், அவளோட அப்பா அம்மா சொந்த பந்தம்னு எல்லார் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும்”

”ஐஐ சூப்பர் அப்ப நாம நினைச்சது சுலபமா நடந்திடும் கிளம்பு வா” என அப்போதே கவினை அழைத்துக் கொண்டு கமலி மதுரை நோக்கி பயணமானாள்.

குணாவோ நாளை கண்மணியின் வீட்டிற்குச் செல்லும் போது வெறும் கையுடன் செல்லக்கூடாதென நினைத்தான், அதனால் பெண் பார்க்க செல்லும் போது என்னென்ன கொண்டு போவார்கள் என தெரிந்து வைத்துக் கொண்டான், அதிலும் அவர்கள் சம்மதம் என சொல்லிவிட்டால் உடனே வீட்டை விற்று கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என நினைத்தவன் அந்நேரம் வீட்டை யாருக்கு விற்பது என யோசித்தான்

முன்பே அவனது அப்பா அம்மா இறந்த போது வீட்டை வாங்க முன் வந்த ஒருவரின் நினைவு வந்தது, சரி அவருக்கே விற்கலாம் என முடிவுக்கு வந்தான், மாலை நேரம் ஆனதும் அவனுக்கு கண்மணியின் நினைவு வந்தது

”பேசாம கண்மணியை கூட்டிக்கிட்டு நாம கடைக்கு போய் தேவையானதை வாங்கிக்கலாம், அவள் இப்ப சூப்பர் மார்க்கெட்டுக்குதான் போயிருப்பா, அங்கயே அவளை மடக்கி பிடிக்கலாம்” என நினைத்தபடியே கண்மணியை காண தனது பைக்கில் விரைவாகச் சென்றான், கண்மணியும் அப்போதுதான் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைய முயல குணாவின் அழைப்பு அவளை தடுத்து நிப்பாட்டியது

”கண்மணி இரு கண்மணி வா இங்க”

என அழைக்க அவளோ வியப்புடன் அவனை தேடி வந்தாள்

”என்ன குணா இந்நேரம் ஆமா வேலைக்கு போகலையா நீ“

”நான் லீவு சொல்லிட்டேன்”

”லீவா எதுக்கு“

”நாளைக்கு நான் பொண்ணு பார்க்க மதுரைக்கு போறேன்னு சொல்லி லீவு கேட்டேன் உடனே கொடுத்துட்டாங்க”

”நாளைக்கு காலையிலதான் ஊருக்குப் போறோம், இப்பவே எதுக்கு லீவு ஒழுங்கா போய் வேலையை பாரு“

”நாளைக்கு ஊருக்கு போறோம் சரி அதுக்காக வெறும் கையோடவா போக முடியும், ஏதாவது வாங்கிட்டு போகனும்ல”

”பழம் ஸ்வீட் இதானே இது மதுரையில கூட கிடைக்கும்”

“அது எனக்கும் தெரியும், ஒருவேளை பொண்ணு பார்க்க போன இடத்தில ஓகேவாயிடுச்சின்னா அப்பவே சின்னதா ஒரு ஒப்புத்தாம்பூலம் செய்துக்கலாம்னு இருக்கேன்”

”ஒப்புத்தாம்பூலமா என்ன விளையாடறியா”

”ஷ்ஷ் ஏன் கத்தற”

”இதெல்லாம் தேவையில்லாத வேலை“

”இதப்பாரு உன்கிட்ட நான் அட்வைஸ் கேட்கலை கிளம்பு”

”எங்க கூப்பிடற”

”கடைக்கு”

”எந்த கடைக்கு”

”துணி கடைக்கு“

”அங்க  எதுக்கு”

”பொண்ணு ஓகேயாயிடுச்சின்னா ஒப்புத்தாம்பூலம் செய்றப்ப புடவை தரனும்ல, அப்படியே ஒரு தங்க மோதிரம் வாங்கிடலாம்”

”நீ ரொம்ப அவசரப்படற அவங்க சம்மதிக்கலைன்னா என்ன செய்வ”

”உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா, நானே ஒரு முடிவோட இருக்கேன், நீ வேற குழப்பாத இப்ப வர்றியா இல்லை நான் மட்டும் போகவா“

”போறதாயிருந்தா போ என்னை ஏன் கூப்பிடற“

”எனக்கு வாங்கத் தெரியாதுன்னுதானே வந்து கூப்பிடறேன், ரொம்ப அலட்டிக்காத, தயவு செய்து வா ப்ளீஸ், புடவையும் மோதிரமும் எடுக்கலாம்”

”ப்ச் என்னவோ போ” என அலுத்துக் கொண்டே அவனுடன் பைக்கில் ஏறிக் கொண்டாள்.

அவனும் பிரபலமான ஜவுளிக்கடைக்கே அவளை அழைத்துச் சென்றான்.

அங்கு புடவை செக்ஷனுக்கு அவளே அழைத்துச் சென்றாள், ஏகப்பட்ட புடவைகள் இருக்கவே அதை மலைப்புடன் பார்த்தனர் இருவரும்

”குணா எவ்ளோ பட்ஜெட்”

”எவ்ளோன்னா ஒப்புதாம்பூலத்துக்கு எவ்ளோ விலையில புடவை எடுக்கனும்”

”அப்படி ஒண்ணும் கன்டிஷன் இல்லை 500 ரூபாய்ல இருந்து கூட எடுக்கலாம்”

”என்கிட்ட இப்போதைக்கு இருபதாயிரம் இருக்கு, இதை வைச்சி புடவை, மோதிரம், பழம், ஸ்வீட், பூன்னு எல்லாம் வாங்கனும், அப்படியே எனக்கு ஒரு வேட்டி சட்டை கூட வாங்கனும் அப்படியே”

”அப்படியே ஒரு தாலியும் வாங்கிடலாமா, ஒப்புத்தாம்பூலம் எதுக்கு கல்யாணம் முடிச்சிடலாம்”

”ஐஐ இதுவும் நல்ல யோசனைதான் அப்படியே செய்யலாம்”

”ஆசையை பாரு”

”எதுக்கு இப்படி திட்டற”

”பின்ன நீ செய்ற அலப்பறை தாங்க முடியலை”

”நான் ஒண்ணும் ரொம்ப அலட்டலை, நீ சட்டுப்புட்டுன்னு புடவையை பாரு, நேரமாகுது 10 மணிக்குள்ள உன்னை ஹாஸ்டல்ல விடனும் ஆகட்டும் ம்ம்”

”ரொம்ப அவசரப்படாத புடவை எடுக்கறது ஒண்ணும் அவ்ளோ சுலபம் இல்லை கொஞ்ச நேரமாகும், அதுவரைக்கும் நீ வேணா உனக்கு வேட்டி சட்டை வாங்கிட்டு வாயேன்”

”அதுவும் சரிதான் சரி சரி நான் போய் வரேன்”

“பட்டு வேட்டி சட்டையா வாங்காத, கல்யாணத்துக்குதான் பட்டுல வாங்கனும், இது வெறும் ஒப்புத்தாம்பூலம்தானே அதனால நார்மல் வேட்டி சட்டை வாங்கிக்க”

”சரி சரி நீ புடவையை செலக்ட் பண்ணு” என சொல்லிவிட்டு குணா அவசர அவசரமாக ஆண்கள் பகுதிக்குச் சென்று தனக்காக ஒரு சாதாரண வேட்டி சட்டையை 5 நிமிடத்தில் வாங்கிக் கொண்டு கண்மணியிடம் வந்து நின்றான்

”ஆச்சா” என கேட்க அவளோ அவனை முறைத்தாள்

”இப்ப எதுக்கு முறைக்கற”

”என்ன அவசரம் பார்த்துக்கிட்டுதானே இருக்கேன், நீ போய் வேட்டி சட்டையை பாரு”

”எல்லாம் பார்த்து வாங்கிட்டேன் பாரு” என சொல்லி அவன் வேட்டி சட்டையை காட்ட அவள் முகம் மலர்ந்தாள்

”சூப்பராயிருக்கு குணா”

”நல்லாயிருக்குல்ல எனக்கும் பார்த்த உடனே பிடிச்சிருச்சி, இங்க பாரு பார்டர் கூட இருக்கு துண்டு கூட தந்தாங்க, கைகுட்டை கூட ஃப்ரீயாம்”

”நல்லாயிருக்கு”

”ஆமா இன்னுமா புடவை எடுக்கலை”

”அட இருப்பா பார்க்கறேன்ல”

”எப்ப பார்த்து எப்ப எடுக்கறது சீக்கிரம் ஆகட்டும், இன்னும் நகை கடைக்கு வேற போகனும்”

”போகலாம் இரு” என சொல்லிவிட்டு அவள் புடவைகள பார்க்க அவனோ நொந்துப் போய் அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்த்தான்.

அங்கு புடவை ஒன்று கட்டப்பட்ட நிலையில் பெண் பொம்மைகள் ஒய்யாரமாக காட்சி பொருளாக வைக்கப்பட்டிருக்க அதில் ஒரு பொம்மையிடம் சென்று நின்றான், அது அணிந்திருந்த உடை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது, அதையே வைத்தக்கண் வாங்காமல் பார்க்க எதேச்சையாக அதைக்கவனித்த கண்மணியோ அவனிடம் வந்தாள்

”என்ன பொம்மையையே உத்துப் பார்க்கற பாவம் அது வெட்கப்பட போகுது”

”கிண்டலா இந்த புடவையை பாரேன், அழகா இருக்குல்ல, இந்த புடவையில இந்த பொம்மை அப்படியே உன்னை போலவே இருக்கு, அழகா இருக்கு”

”ம் நல்லாதான் இருக்கு” என்றவள் அதன் விலையைக்கண்டு அதிர்ந்தாள்

”அய்யோ 5000 ரூபாயாம்“

”ஆனா நல்லாயிருக்கே கண்மணி இதையே எடுத்துக்கலாமா”

”ஒண்ணும் வேணாம் சாதாரண ஒப்புத்தாம்பூலத்துக்கு 5000 ரூபாய்க்கு புடவையா, ஆயிரம் இல்லைன்னா ஆயிரத்து ஐநூறு வரைக்கும் புடவை எடுத்தா அதுவே அதிகம்”

”ப்ச் கண்மணி இது நல்லாயிருக்கு, இங்க பாரு இந்த புடவை இந்த பொம்மைக்கே இவ்ளோ அழகா இருக்குன்னா உனக்கு எப்படியிருக்கும், இந்த புடவையை கட்டி இந்த பொம்மை நிக்கற மாதிரி நீயும் ஒய்யாரமா நின்னேன்னு வையேன் அப்படியிருப்ப, பொண்ணுங்க கூட உன் மேல பொறாமைப்படுவாங்க”

”ஒண்ணும் வேணாம்” என அவள் கடுமையாக சொல்லிவிட்டு சென்றுவிட அவனுக்கு ஆயாசமாக இருந்தது

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!