Skip to content
Post Views: 280
”அதுசரி என்னிக்கு அவள் என் பேச்சை கேட்டிருக்கா, எப்பவுமே அவள் பேச்சைத்தானே நான் கேட்கறேன், சரி அவள் சொல்றதும் தப்பில்லையே, சாதாரண ஒப்புத்தாம்பூலத்துக்கு எதுக்கு 5000 ரூபாய் செலவு செய்யனும், கல்யாணத்துக்கு வேணா பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கலாம், ஆனாலும் இந்த புடவை நல்லாயிருக்கே, கண்ணுக்குள்ளயே இருக்கே, இதுல மட்டும் கண்மணி வந்து நின்னா அய்யோ இப்பவே தாலி கட்டிடுவேனே” என குணா வாய்விட்டு அந்த பொம்மையிடம் புலம்பிக் கொண்டே இருக்க அதைக்கவனித்த கண்மணிக்கு வேடிக்கையாக இருந்தது.
சிலர் அவனது செயலைக்கண்டு சிரித்தார்கள், அவன் யாரையும் கவனிக்கவில்லை, அவனது கவனம் முழுவதும் அந்த பொம்மை அணிந்திருந்த புடவை மீதே இருந்தது, அவனின் ஏக்கத்தைக்கண்ட கண்மணிக்கும் பாவமாக இருந்தது.
அரை மணி நேரம் கழித்து
”குணா” என கண்மணி அழைக்க அவனோ
Advertisement
”ஆச்சா”
”ப்ச் திரும்பி என்னைப் பாரு“
”புடவை எடுத்தியா இல்லையா இன்னும் எவ்ளோ நேரம்”
Advertisement
”பொம்மை கூடவே பேசினது போதும், என்னை பாரு புடவை எடுத்துட்டேன் எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லு”
Advertisement
”அதைப்பத்தி எனக்கென்ன தெரியும், இந்த புடவை என் கண்ணுக்குள்ளயே நிக்குது ஆனா நீதான் வேணாம்ங்கற, இதை விட்டா வேற என்னத்த வாங்கப் போற, வா வா பில் போடலாம்”
”இப்ப நீ என்னை பார்க்கப் போறியா இல்லையா” என அவள் சத்தம் போட அவனோ நொந்துப்போய் அந்த பொம்மையை விட்டு திரும்பி பார்த்தான்
அவனுக்கு எதிரே 5 அடி தொலைவில் கண்மணி ஒய்யாரமாக அந்த பொம்மை அணிந்திருந்த அதே புடவையை அணிந்து நின்றிருந்தாள், அவளை அப்படி கண்டதும் அவனுக்கு கனவு போல தெரிந்தது, அவளையே ஆஆஆ என பார்த்தான், அவளோ பொம்மை போலவே ஒய்யாரமாக நின்று போஸ் தர அதை சுற்றியிருந்த மக்களும் கண்டு புன்னகை பூத்தார்கள், குணாவோ ஆர்வமாக அவளிடம் வந்தான்
Advertisement
”கண்மணி” என இளித்துக் கொண்டே ஆசையாக அழைக்க அவளோ
”பிடிச்சிருக்கா”
”ரொம்ப” என அவளை கட்டியணைக்க வர அவளோ சட்டென அவனை தட்டிவிட்டு விலகி நின்றாள்
”கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே உனக்கு”
”ஏய் அப்படியில்லை நீ இதுல அட்டகாசமா இருக்க தெரியுமா”
”அப்படியா“
”ஆமாம் பொம்மையை விட உனக்குதான் இந்த புடவை பொறுத்தமா இருக்கு”
”அதுசரி ஆனா விலைதான்”
”அட விலையை விட்டுத்தள்ளு, எனக்கு இப்பதான் மனசு நிறைவா இருக்கு, பார்க்க பார்க்க ரொம்ப பிடிச்சிருக்கு இதையே வாங்கிடலாம்”
”பின்ன வாங்காம இருக்க முடியுமா புடவையை கட்டியாச்சே பில் போட்டாச்சி குணா”
”சரி சரி வா பணம் கட்டிட்டு கிளம்பலாம்“
”இரு இப்படியேவா உடை மாத்திக்கிறேன்”
”பரவாயில்லை இப்படியே வாயேன்“
“வழியாத குணா எல்லாரும் நம்மளையே வேடிக்கைப் பார்க்கறாங்க, பேசாம இரு நான் உடை மாத்திக்கிட்டு வரேன், நான் வர்ற வரைக்கும் அந்த பொம்மை கூடவே இரு“
”இனி அந்த பொம்மை எனக்கெதுக்கு அதான் நீயிருக்கல்ல, நீ வர்ற வரைக்கும் நான் உனக்காக காத்திருப்பேன் சட்டுன்னு வந்துடு” என சொல்ல அவளும் சிரிப்புடனே உடை மாற்ற சென்றவள் 5 நிமிடத்தில் வெளியே வந்தாள்.
அவள் தந்த புடவையை கடைக்காரன் அழகாக மடித்து பில்லுடன் தர அதற்கான பணத்தை குணா தந்தான், இருவரும் திருப்தியாக கடையை விட்டு வெளியேறி வந்தார்கள்.
அடுத்து நகைகடைக்குச் சென்றார்கள் குணாவும் கண்மணியும் இருக்கும் பணத்திற்கு ஏற்ப நார்மலான ஒரு தங்கமோதிரத்தை வாங்கினான் குணா
”சாரி கண்மணி என்கிட்ட இருக்கற பணத்தில ஒண்ணுதான் வரும்”
”பரவாயில்லை” என்றவள் அவனுக்காக ஒரு மோதிரம் வாங்கினாள்
“ஏய் என்ன செய்ற“
”இது உனக்குதான்”
”எனக்கு எதுக்கு”
”பின்ன நீ எனக்கு மோதிரம் போடறப்ப நானும் உனக்கு போடனும்ல“
”ஆனா உன்கிட்ட ஏது பணம்”
”நான்தான் தினமும் வேலைக்கு போறேன்ல, என் செலவு போக மீதி பணத்தை சேர்த்து வைச்சேன்”
“இருந்தாலும்“
”ஷ்ஷ் எதுவும் பேசக்கூடாது, நீ புடவை வாங்கும் போது நான் சம்மதிச்சேன்ல, இப்ப நீயும் இதுக்கு ஒத்துக்கனும் ஓகேவா”
”ஓகே கண்மணி கிளம்பலாமா”
”ம் சரி அடுத்து எங்க போகனும்”
”பழம் ஸ்வீட்”
”பொறு இதெல்லாம் ஊருக்கு போய் கூட வாங்கலாம், முக்கியமானதை வாங்கியாச்சி நாளைக்கு விடிகாலையில கிளம்பிடலாம், ஆமா எதுல போகலாம் பஸ்ஸா ட்ரெயினா”
“ட்ரெயின் டிக்கெட் கூட போட்டாச்சி, காலையில 5 மணிக்கு ஹாஸ்டலுக்கு வந்துடறேன், ரெடியா இரு, 6 மணிக்கு ட்ரெயின்” என சொல்ல அவளும் அதை கவனமாக கேட்டுக் கொண்டாள்.
அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்டலில் இறக்கி விட்டவன் அவளிடம் புடவை நகை என அனைத்தும் தந்துவிட்டு தனது லாட்ஜ்க்கு சென்றான், ஏதோ ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியதால் ஏற்பட்ட மனநிறைவுடன் நிம்மதியாக உறங்கினான் குணா
மறுநாள் விடிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்து முடித்து 5 மணி ஆவதற்குள்ளேயே கண்மணியின் ஹாஸ்டல் முன் கெத்தாக காத்திருந்தான் குணா.
கண்மணியும் ரெடியாகி வர நேரம் சரியாக இருந்தது, அவளை அழைத்துக் கொண்டு நேராக ரெயில்வே ஸ்டேஷன் சென்றான், அங்கு பைக்கை பார்க் செய்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக உள்ளே சென்றான்
நல்லவேளை ட்ரெயின் இருந்தது உடனே அதில் ஏறிக் கொண்டார்கள் இருவரும், தங்களது டிக்கெட்டில் இருந்த நெம்பரை வைத்து தங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அமர்ந்தார்கள், ரயிலும் புறப்பட்டது, அதன்பின் அவன் நிம்மதியாகி நீண்ட பெருமூச்சுவிட அவளோ
”எதுக்கு இப்படி பதட்டப்படற”
”சும்மாயிரு உனக்கென்ன எனக்குதான் ரொம்ப பயமாயிருக்கு”
”எதுக்கு பயம்“
”பின்ன பொண்ணு பார்க்கப் போறேன் பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்னாகிறது” என சொல்ல அவளோ கலகலவென சிரித்துவிட்டு
”உன்னை போய் யாராவது வேணாம்னு சொல்வாங்களா, நீதான் ஹீரோ போல இருக்கியே”
”ம்க்கும் உனக்குத் தெரியுது அவளுக்குத் தெரியனுமே கண்மணி கண்மணி” என புலம்ப
”ரொம்ப புலம்பாத எல்லாம் அந்த பொண்ணுக்கும் உன்னை பிடிக்கும் பாரு”
”பிடிச்சா சரி அவளோட அப்பா அம்மாவுக்கும் என்னை பிடிக்கனுமே“
”பொண்ணுக்கு பிடிச்சிருந்தாலே அவளோட அப்பா அம்மாவுக்கும் பிடிக்கும் கவலைப்படாத“
”சொல்லத் தெரியலை கண்மணி ஒரு மாதிரியா பயமா இருக்கு”
”ஏன் என்னாச்சி வேணும்னா இன்னொரு நாள் போகலாமா”
“இல்லை நல்ல விசயத்தை ஆரம்பிச்சாச்சி ஊருக்கும் கிளம்பிட்டோம், இன்னொரு நாள்லாம் எதுக்கு வேணாமே“
”சரி கொஞ்சம் நிம்மதியா இரு தூக்கம் வந்தா தூங்கு”
”தூங்கறதா அதுசரி ஒரு பொட்டு தூக்கம் கூட எனக்கு வரலை, பாரு எப்படி விழிப்பா இருக்கேன்னு”
”அதுவும் சரிதான் ஆனா உன் முகத்தில பயமும் தெரியுதே”
“ஆமாம் பயமாதான் இருக்கு கண்மணி நல்லதே நடக்கனும்”
”கண்டிப்பா நடக்கும் அமைதியா இரு” என அவள் ஆறுதலாக பேச அவனும் தன்னை சமாதானமாக்கிக் கொண்டான், நீண்ட தூர பயணம் என்பதால் குணாவும் கண்மணியும் கலகலவென கதைகளை பேசிக் கொண்டே வந்தார்கள்
”கண்மணி உனக்கு என்னெல்லாம் பிடிக்கும் சொல்லு, கல்யாணத்துக்கு அப்புறம் அதையெல்லாம் நான் உனக்கு செய்றேன்”
”நான் சொல்லி அதை நீ செய்றதுக்கு நீயே கண்டுபிடிச்சி செய்துக்காட்டினா நல்லாயிருக்கும்ல“
“ம்க்கும் நான் என்ன ஞானியா, ஞானதிருஷ்டியில கண்டுபிடிச்சி செய்றதுக்கு, சொல்லு கண்மணி உனக்கு எதெல்லாம் பிடிக்கும்”
”சொல்ல மாட்டேன்”
”ப்ளீஸ் கண்மணி ப்ளீஸ்” என கெஞ்ச அவளோ தனக்கு பிடித்தவற்றை அவனிடம் சொல்ல அவனும் அவனுக்கு பிடித்தவற்றை எல்லாம் அவளிடம் சொன்னான்
அடுத்து அவர்களின் குடும்ப கதை, சொந்தங்கள் கதை, அவர்கள் பட்ட சோக கதை என இதற்கே நேரம் சரியாக இருந்தது, மதுரையே வந்துவிட இருவரும் உற்சாகமாக ரயிலை விட்டு இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியேறி சென்றார்கள்.
ஒரு ஆட்டோ பிடித்து நேராக கண்மணி அவளது தாய் தந்தை உள்ள வீட்டில் இறங்கினாள், குணாவும் பயத்துடனே இறங்கினான்.
கண்மணியோ தன் வீட்டைக்கண்டதும் புன்னகைத்தவள் சுற்றி முற்றி பார்த்தாள், அந்த தெருவே அவளை விநோதமாக பார்த்தது
”எதுக்கு எல்லாரும் நம்மளை வித்தியாசமா பார்க்கறாங்க, ஓ நான் குணாவோட வரவும் எல்லாருக்கும் சந்தேகம் வந்துடுச்சி போல” என நினைத்துக் கொண்டே குணாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள்.
அந்த வீடோ சிறிய ஓடுவீடுதான், வசதி குறைவாக இருந்தது, ஆனாலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமின்றி இருக்கும், ஆனால் இன்றோ அந்த வீடு இழவு வீடு போல அழுது வடிந்துக் கொண்டிருந்தது, வீட்டிற்குள் நுழைந்த இருவரும் அங்கு கண்கள் கலங்கி அழுதுக் கொண்டிருந்த கண்மணியின் பெற்றோரைக்கண்டு அதிர்ந்தார்கள், கண்மணி ஓடிச் சென்று தன் தாய் தந்தையிடம் கவலையாகப் பேசினாள்
”அப்பா அம்மா என்னாச்சி? ஏன் அழறீங்க” என கேட்க அவர்களோ அவளை விடுத்து குணாவை பார்த்தனர், அவனோ மரியாதைக்காக கைகூப்பி வணக்கம் வைக்க அவர்களோ குலுங்கி குலுங்கி அழவும் அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
கண்மணியோ அவர்களிடம் கவலையாக விசாரித்தாள்
”அம்மா என்னாச்சிம்மா, ஏன் அழறீங்க? அப்பா என்னாச்சிப்பா ஏதாவது பிரச்சனையா சொல்லுங்கப்பா” என அவள் கேட்க குணாவோ கவனித்தான்
வீட்டிற்கு வெளியில் இருந்த தெரு மக்கள் அந்த சின்ன வீட்டிற்குள் நுழைந்தார்கள், அதோடு நில்லாமல் குணாவை ஒரு வெறுப்புடன் பார்க்க அவனுக்கு சந்தேகம் எழுந்தது
”கண்மணி நான் வெளிய இருக்கேன்” என குணா சொல்லிவிட்டு அவன் வெளியே செல்ல கண்மணி அப்போதுதான் என்னவென கவனித்தாள்
எதற்காக அனைவரும் தங்கள் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள் என அவள் குழப்பத்துடன் பார்க்க அந்நேரம் வீட்டிற்கு வெளியே ஒரே கூச்சல், என்னவென அனைவரும் சென்று பார்க்க குணாவை ஒருவன் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்க, அவனோ அவனிடம் கோபமாக நடந்துக் கொண்டான்
”யோவ் யார்யா நீ எதுக்குய்யா என்னை உலுக்கற விடுய்யா” என குணா கத்த வந்தவனோ
”இதே வேலையா போச்சி, உங்களாலதான் இந்த ஊருக்கே அவமானம், ஏற்கனவே இந்த வீட்டுக்கு ரொம்ப மதிப்பு மரியாதை பாரு, இருக்கற கொஞ்ச மானத்தையும் பறக்கவிடறதுக்குன்னே வந்திருக்கியா, மரியாதையா சொல்றேன் இங்கிருந்து போயிடு” என மிரட்ட குணா அசரவில்லை
அவன் அசால்ட்டாக தன்னை பிடித்திருந்தவனை விலக்கிவிட்டு சுற்றி முற்றி பார்த்து கண்மணியிடம்
”கண்மணி இங்க என்னதான் நடக்குது” என கோபத்துடன் கேட்க அவளோ
”கோபம் வேணாம் குணா, எனக்கே ஒண்ணும் புரியலை இரு நான் விசாரிக்கிறேன்” என சொல்லும் போதே கண்மணியின் தாயும் தந்தையும் நேராக குணாவிடம் வந்து கைகூப்பி நின்று
”தம்பி என் பொண்ணை விட்டுடுப்பா” என சொல்ல குணாவுக்கு தூக்கிவாரிப்போட்டது கண்மணியோ பதறினாள்
”அப்பா அம்மா என்ன செய்றீங்க” என கண்மணி கேட்க அவர்களோ மகளை ஒதுக்கிவிட்டு குணாவிடம்
”தம்பி ஏற்கனவே காதலிச்சி நாங்க பட்டபாடு போதாதா, இப்ப என் பொண்ணும் கஷ்டப்படனுமா, வேணாம் தம்பி, இப்பவே உங்களை பத்தி ஊருக்குள்ள பேச்சா ஓடுது, அவள் வாழ வேண்டிய பொண்ணு, ஏற்கனவே எங்க மேல யாருக்கும் மதிப்பு கிடையாது, இப்ப நீ வந்திருக்க, இருக்கற கொஞ்ச மானத்தையும் வாங்கிடாதப்பா, எப்படி வந்தியோ அப்படியே போயிடு” என சொல்ல குணாவோ
”இதப்பாருங்க நான் கண்மணியை காதலிக்கிறேன், அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டு பொண்ணு கேட்டு வந்திருக்கேன், என்னை நம்புங்க, என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது, நான் கண்மணியை கண்ணுக்குள்ள வைச்சி பார்த்துக்குவேன்”
”போதும்பா இப்படியெல்லாம் நானும் ஒரு காலத்தில பேசினவன்தான், ஆனா அதுபோல என்னால நடக்க முடியலை, என் குடும்பமே கஷ்டப்படுது, இப்ப நீயும் அதையே சொல்ற உன்னால என் பொண்ணு கஷ்டப்படகூடாது” என கண்மணியின் தந்தை நொந்துக்கொண்டே பேச அதற்கு குணாவோ
”சே சே நான் ஏன் அவளை கஷ்டப்படுத்தப் போறேன், அவளை நான் நல்லா பார்த்துக்குவேன்” என உறுதியளித்தான்.
”எப்படி பார்த்துக்குவ சொல்லு, என்ன இருக்கு உன்கிட்ட, ஆமா யார் நீ? உன் அப்பா அம்மா யாரு? நீ என்ன செய்ற? எதுவும் தெரியாம எப்படி நாங்க எங்க பொண்ணை தர்றது“
”என் பேரு குணா, நான் கண்மணியோட வகுப்பில படிக்கறேன், அப்பா அம்மா உயிரோட இல்லை, இறந்துட்டாங்க, எனக்குன்னு கோவையில சொந்த வீடு ஒண்ணு இருக்கு, அதை வித்தா கூட லட்சக்கணக்கில பணம் வரும், நான் படிச்சி முடிச்சதும் நல்ல வேலை கிடைக்கும், கைநிறைய சம்பாதிப்பேன் அது எல்லாமே கண்மணிக்குதான்”
”போதும்பா போதும் உனக்கு புண்ணியமா போகும் இங்கிருந்து கிளம்பு“
”என்ன பிரச்சனை உங்களுக்கு, இவ்ளோ தூரம் இறங்கி வந்து பேசறேன், நீங்க என்னடான்னா என்னை விரட்டறதிலேயே குறியா இருக்கீங்களே, என்னாச்சி உங்களுக்கு, என்னை பத்தி தெரியாம பேசாதீங்க, கண்மணியை வேணா கேட்டுப்பாருங்க, அவள் சொல்வா என்னைப் பத்தி“
”எல்லாம் உன்னைப் பத்தி எங்களுக்கு தெரியும், எங்களுக்கு மட்டும் இல்லை, இந்த ஊருக்கே தெரியும், நீ யார்? எங்கிருந்த வந்த, என்ன செய்ற, எப்படி நீ எங்க பொண்ணை பார்த்த எல்லாத்தையும் எல்லாரும் சொல்லி எங்களை அவமானப்படுத்திட்டாங்க, எங்க மானமே போச்சி” என சொல்ல குணாவோ அதிர்ச்சியுடன் கண்மணியை பார்க்க அவளோ தடுமாறினாள்
”கண்மணி ஏதாவது செய்” என குணா கத்த அதில் அவள் கவனம் கலைந்து தன் தாய் தந்தையிடம்
”அப்பா என்ன பேசறீங்க குணாவால நம்ம மானம் போச்சா என்ன உளர்றீங்க” என கேட்க அவளின் தந்தையோ பட்டென கண்மணியின் கன்னத்தில் விட்டார் ஒரு அறை, அதைக்கண்டு துடித்துப் போன குணாவோ சட்டென கண்மணியின் தந்தையின் சட்டையை கொத்தாக பிடித்து
”அவளை அடிக்கற வேலையை வைச்சிக்காதீங்க” என கர்ஜிக்க அவர் அரண்டார் கண்மணியோ
”குணா அவர் என் அப்பா அவரை விடு” என கத்த அதில் அவனும் அவரை விட்டு விலகி கண்மணியை பிடித்தான்
”கண்மணி ஏதோ தப்பாயிருக்கு என்ன நடந்துச்சின்னு தெரியலை எனக்கு பயமாயிருக்கு இப்ப நான் என்ன செய்றது”
”அமைதியா இரு குணா நான் பேசறேன்” என சொல்லி முடிப்பதற்குள் கூடியிருந்த மக்கள் குணாவை பற்றி கேவலமாக பேசலானார்கள், கண்மணியின் தாய் தந்தை கூட அவனை வெறுப்பாக பார்த்து இழிவாக பேச பேச அவனுக்கு கோபம் கொந்தளித்தது
”போதும் நிறுத்துங்க ஏன் இப்படி பேசறீங்க” என கத்த கண்மணியின் தந்தையோ
”இதப்பாரு தம்பி நீங்க எங்களுக்கு வேணாம், தயவு செய்து கண்மணியோட வாழ்க்கையை விட்டு போயிடுங்க தம்பி, உங்க கால்ல வேணா விழறேன்” என சொல்லியதோடு நில்லாமல் அவனின் காலில் விழ போக அவன் பதறி விலகி நின்றான், கண்மணியோ குணாவைப் பார்த்து
”குணா நிலைமை சரியில்லை ஏதோ தப்பாயிருக்கு, நீ கிளம்பு நான் என்ன ஏதுன்னு பார்த்துட்டு ஊருக்கு வந்து பேசறேன்”
”இல்லை கண்மணி, இப்ப இந்த நிலைமையில உன்னை விட்டு என்னால போக முடியாது, என்கூட வா நாம போகலாம்“
”குணா நான் எப்படி வர்றது இங்க என்ன பிரச்சனைன்னு தெரியலையே அதை சரியாக்க வேணாமா“
”ஒண்ணும் வேணாம் கிளம்பு, இவங்களை பார்த்தா உன்னையும் என்னையும் பிரிச்சிடுவாங்க போல இருக்கு, வா போலாம் வா” என அவளின் கையை பிடித்து இழுக்க அதைக்கண்டு அனைவரும் பொங்கி அவனை இழுக்க அங்கு ஒரு கலவரமே வெடித்தது
”குணா நீ போ நான் வரேன்”
”இல்லை நீ வரமாட்ட நீ வா இப்பவே வா”
”எப்படி வர்றது, அப்பா அம்மாவை இந்த நிலைமையில விட்டுட்டு என்னால வரமுடியாது“
”அப்போ என்னைவிட உனக்கு இவங்கதான் முக்கியமா“
”ஆமாம் உனக்குதான் யாருமில்லை, எனக்கும் யாரும் இருக்க கூடாதா என்ன, நீ போ நானே உன்னை தேடி வரேன் போ” என கத்த அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க இயலவில்லை, கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் கண்கள் கலங்க அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
ஊருக்கு வெளியே குணா காத்திருந்தான், அவனால் கண்மணியை இழக்க முடியவில்லை, என்ன காரணம்? ஏது காரணம் என தெரியாமல் தவித்தான், அவளின் வரவிற்காக காத்திருந்தான், வரவில்லை, நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது, இரவும் வந்துவிட்டது, ஆனாலும் அவன் அங்கிருந்து கிளம்பாமல் இருந்தான், அவனை கடந்து செல்வோர் வருவோர் கூட அவனை ஒரு ஈனப்பிறவியை பார்ப்பது போலவே பார்த்தனர், அவர்களின் அந்த பார்வையை வெறுத்தான்
தனக்கு கண்மணிதான் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தபடியால் யார் எப்படி பார்த்தால் நமக்கென்ன என்பது போல அவளின் வரவிற்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தான், உறக்கமே வரவில்லை, விடிகாலையில் தானாக உறக்கம் வர ரோட்டு ஓரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான், அந்நேரம் கலகலவென சிரிப்புச் சத்தம் கேட்டது, உறக்கத்தில் இருந்தவனின் உறக்கம் கலைந்தது, கண்மணிதான் என நினைத்து ஆசையாக எழுந்து பார்க்க அங்கு கமலி இருந்தாள், அவளைக்கண்டதும் அவனின் முகம் வெளுத்துவிட்டது
”ஹலோ குணா எப்படியிருக்க, என்ன இது ரோட்டுக்கே வந்தாச்சா சூப்பர்” என சொல்லி சிரிக்க அவனுக்கு கோபமே வந்தது
”ஏய் என்ன வேணும் உனக்கு”
”உன்னை இப்படி பார்க்கனும்னுதானே நான் ஆசைப்பட்டேன், என் ஆசை நிறைவேறிடுச்சி இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்”
”ஓ அப்படியா உனக்கு நிம்மதி கிடைச்சிடுச்சா சந்தோஷம், உன்னோட பழிவாங்கற எண்ணம் முடிஞ்சிடுச்சா இப்ப திருப்தியா”
”ஓ முழு திருப்தி”
”அப்புறம் ஏன் இங்க இருக்க கிளம்பு போ”
”அதெப்படி போறது, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்ல வந்தேன்”
”என்னை கேவலப்படுத்தப் போற அதானே தாராளமா” என சொல்லிவிட்டு அவன் படுக்க முயல தடுத்தாள் கமலி
”இரு பொறு அவசரப்படாத, இது ரொம்ப முக்கியமான விசயம், கண்மணியை பத்தி” என அவள் நிப்பாட்ட அவனோ ஆர்வமானான்
”கண்மணியா அவளுக்கு என்னாச்சி ஆமா முதல்ல இங்க நடக்கற பிரச்சனை என்னன்னு உனக்குத் தெரியுமா“
”பிரச்சனையை உருவாக்கினதே நாங்கதானே, எப்படி ஊரே உன்னை அடிச்சி விரட்டிடுச்சி போல“
”ஓ நீ செய்த வேலைதானா இது, ஆமா உன் பேச்சை எப்படி இங்கிருக்கறவங்க நம்பினாங்க“
”நம்பற மாதிரி சொன்னேன் நம்பிட்டாங்க, நீயும் கண்மணியும் மேடையில பாடின பாட்டை போட்டு காட்டினேன், அப்புறம் உன்னை பத்தி எவ்ளோ கெட்டதா சொல்ல முடியுமோ அந்தளவுக்கு கெட்டதா சொல்லி எல்லாரையும் நம்ப வைச்சேன், பாவம் அவங்க உன்கிட்டயிருந்து கண்மணியை காப்பாத்த நினைச்சி உன்னை விரட்டிட்டாங்க”
”அதுசரி என்னை ஊர் விரட்டிட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சா, கண்மணி என்னை விரட்டமாட்டா அவள் என்னை காதலிக்கறா”
”யாரு அவளா அய்யோ பாவம், நீ இன்னுமா அவளை நம்பற, அவளை பத்தி நீ புரிஞ்சி வைச்சிக்கிட்டது அவ்ளோதானா”
”என்ன உளர்ற”
”உளறலை உண்மையை சொல்றேன், கண்மணி நீ நினைக்கற ஆள் கிடையாது, அவள் அப்பா அம்மாவுக்கு ஒண்ணுன்னா உசுரையே கொடுக்கறவ, அப்படியிருக்கறப்ப உன்னை தூக்கி எறிய எவ்ளோ நேரம் ஆகும் சொல்லு“
”என்ன“
”ஓ ரொம்ப ஷாக்காகாத, அப்புறம் ஹார்ட் அட்டாக் வரப்போகுது“
”இல்லை இதை நான் நம்பமாட்டேன்”
”அப்படியா இப்ப என்ன மணி அச்சோ 7 மணியாகுது பாரேன்”
”கமலி” என அவன் கோபத்தில் பொங்க
”அட கோச்சிக்காத குணா, நான் எதுக்கு மணியை பார்க்க சொன்னேன் தெரியுமா, இந்நேரம் கண்மணிக்கும் என் அண்ணன் கவினுக்கும் கோயில்ல கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்” என சொல்லவும் அதிர்ந்து எழுந்து நின்றான் குணா.
…. தொடரும்
error: Content is protected !!