Skip to content
Post Views: 2,794
அன்பு – 14
“ஹேய்!!! பிரபா!!! சூப்பர்!! சூப்பர்!! கலக்கிட்ட டா!!!” என மூச்சிரைக்க பிரபஞ்சனை நோக்கி ஓடி வந்த கவியின் முகத்தில் தான் எவ்வளவு ஆனந்தம்!!
Advertisement
“எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா??? சாதிச்சிட்ட டா பிரபா நீ!!! இப்போவாச்சும் சிரி டா கொஞ்சம்!!!” என ஓடி வந்ததில் மூச்சு வாங்க பேசிக் கொண்டிருந்த கவியை மென் புன்னகையுடன் பார்த்திருந்த பிரபஞ்சன்,
“உன் ரிசல்ட் பார்த்தியா???” என்றான் ஆவலாக.
Advertisement
Advertisement
“ப்ச்!! அது கிடக்குது!! அதான் நீ சொல்லி கொடுத்தியே, கண்டிப்பா பாஸ் ஆகிடுப்பேன்!!” என தோளைக் குலுக்கியவள்,
“இப்போ அது ரொம்ப முக்கியமா?? நீ ஸ்டேட் லெவல்ல தேர்டா வந்திருக்க!! எவ்வளவு பெரிய சாதனை இல்லையா இது!!! கண்டிப்பா இதுக்கு நீ எனக்கு ட்ரீட் வச்சே ஆகணும்!!!”
Advertisement
“உனக்கு இல்லாததா?? உனக்கு என்ன வேணும்னு சொல்லு கவி!! என்னால முடிஞ்சதை கண்டிப்பா நான் செய்வேன்!!!” என்றான் உளமாற!!
“உனக்கு அவ்வளவு கஷ்டம் எல்லாம் கொடுக்க மாட்டேன்.. உன்னால செய்ய முடிஞ்சது மட்டும் தான் கேட்பேன்.. பட் இப்போ இல்லை!! நேரம் வரப்போ சொல்றேன்!!” என அவள் பூடகமாக சொல்ல,
என்னவென்று புரியாவிட்டாலும், அவளுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்துக்கொண்ட பிரபஞ்சன் புன்னகையுடன் தலையசைத்தான்.
அவர்களுக்கு அதற்கு மேல் அவகாசம் வழங்காமல், வகுப்பு ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் என அனைவரும் பிரபாவை சூழ்ந்து கொண்டு, வாழ்த்தி, புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்க, ஒரு ஓரமாய் அமர்ந்திருந்து, அவளின் பிரபா கொண்டாடப்படுவதை மனநிறைவுடன் பார்த்திருந்தாள் கவி!!
எப்போது அவனின் கதை தெரிந்ததோ, அன்று தொடங்கி அவன் மீது சொல்ல முடியாத பாசம் ஒன்று உருவாகியிருக்க, அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நேசமாய் உருமாறியிருந்ததை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை!!
கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வந்தவன், இனியாவது ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என அவனுக்காக கடவுளிடம் பிரார்த்திப்பதை இப்போதெல்லாம் வழக்கமாக்கி வைத்திருந்தாள் கவி!!
அவளின் பிரார்த்தனையின் முதல்படியாக, இதோ இன்று படிப்பில், பள்ளியிலே முதன் மாணவனாக தேர்ச்சி பெற்றிருக்கும் பிரபஞ்சனைக் காண்கையில், கவியின் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது!!
கவி கூட பிரபாவின் உதவியால் ஆயிரத்தி நூற்றி பன்னிரண்டு மதிப்பெண் பெற்றிருக்க, சேதுராமனைக் கையில் பிடிக்க முடியவில்லை!!
கவியைத் தலையில் தூக்கி வைத்து சுற்றாதது ஒன்று தான் குறை!! அந்த அளவிற்கு அவளைக் கொண்டாடிவிட்டார் மனிதர்!!
“நிஜமாவே நீயா தான் எழுதுனியா இல்லை யாரையும் பார்த்து காப்பி அடிச்சியா??” என பொற்கொடி கூட சந்தேகம் கொண்டு கேட்டுவிட,
அவரை முடிந்தமட்டும் முறைத்த கவி,
“தாயா நீயெல்லாம்!! பெத்த பொண்ணு மேல கொஞ்சமாச்சும் நம்பிக்கை இருக்கா உனக்கு??” என்றவள்,
“என் பிரெண்ட் பிரபா சொல்லிருக்கேன்ல!! அதான் ஸ்டேட் தேர்ட் எடுத்தானே!! அவன் தான் சொல்லி கொடுத்தான்.. டீச்சரை விட ஈசியா புரியுற மாதிரி சூப்பரா சொல்லித்தருவான் தெரியுமா மா??” என பிரபாவைப் பற்றி பேசும் போது அளவிற்கு அதிகமாக மின்னிய கவியின் கண்கள், பொற்கொடிக்கு உறுத்த,
இருந்தும் மகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால், பெரிதாய் அதை ஆராயாமல் அவள் சொல்லும் கதைகளை புன்னகையுடன் கேட்டிருந்தார்.
பொற்கொடி மூலம் பிரபஞ்சனைப் பற்றி அறிந்து கொண்ட சேதுராமன்,
“அஞ்சலி!! யாரோ ஒரு பையன் தான் உனக்கு படிக்க உதவி பண்ணானாமே!! அம்மா சொன்னா!! நீ என்ன பண்ணு!! இந்த ஞாயிற்றுக்கிழமை அவனை வீட்டுக்கு சாப்பிட வர சொல்லு!! உன்னை இவ்வளவு மார்க் வாங்க வச்ச பையனை நானும் பார்க்கணும்!!” என இயல்பாய் அழைப்பதைப் போல் தெரிந்தாலும், அவரின் கூற்றில் மறைந்திருந்த உட்பொருளை சரியாக கண்டுகொண்டார் பொற்கொடி!!
ஆனால் அவரின் உள்நோக்கம் புரியாத கவியோ,
“சூப்பர் ப்பா!!! கண்டிப்பா நான் வர சொல்றேன்!!!” என உற்சாகத்துடன் துள்ளிக்கொண்டு உள்ளே ஓடியவள்,
“அம்மா!! சண்டே விருந்து தடபுடலா இருக்கணும்!!! உன்னால முடியலனா ஹோட்டல்ல வாங்கிக்கலாம்” என இப்போதே அவனுக்காக பார்த்து பார்த்து என்னென்ன சமைக்க வேண்டும் என பட்டியல் போடும் மகளைத் தான் யோசனையுடன் பார்த்திருந்தார் சேதுராமன்.
நாட்களும் விரைவாய் நகர, அனைவரும் எதிர்பார்த்த ஞாயிற்றுக்கிழமையும் அழகாக விடிந்தது!!!
பிரபா எவ்வளவு மறுத்துப் பார்த்தும், கவியின் பிடிவாதத்தால் தயங்கிக் கொண்டே அவர்களின் வீட்டிற்கு வந்தவன், கவியின் உயரத்தை அப்போது தான் உணர்ந்து கொண்டான்.
சகல வசதிகளுடன் அமைந்திருந்த அந்த இரண்டு மாடி குடியிருப்பை ஆச்சரியமாகப் பார்த்தபடி வாசலிலே நின்றுவிட்ட பிரபாவின் கால்கள், அதற்குமேல் முன்னேற மறுத்தது!!!
மீண்டும் வந்த வழியே சென்று விடலாமா என நினைத்து அவன் திரும்பிய நேரம்,
“ஹேய் பிரபா!!!! வா வா வா!!! உனக்காக நாங்க எவ்வளவு நேரமா காத்துட்டு இருக்கோம் தெரியுமா!!! அப்பா, அம்மா எல்லாரும் உன்னைப்பார்க்க தான் வெயிட்டிங்!!” என சந்தோஷக் கூச்சலுடன் ஓடி வந்த கவி, தயங்கிய பிரபாவின் கரம் பிடித்து வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்து வர,
சேதுராமனின் பார்வை மகள் பற்றியிருந்த அவனின் கைகளைக் கண்டு இடுங்கியது!!!
அவனைப் பார்த்ததுமே, அவனின் செல்வ நிலையை கணித்துவிட்ட சேதுராமனின் பார்வையில் ஒரு இகழ்ச்சி வந்து தன்னாலே ஒட்டிக்கொள்ள,
பேருக்காக,
“வா தம்பி!!” என முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு தலையசைத்தார்.
“நீ ஒன்னும் பயப்படாத!! அவர் மூஞ்சியே அப்படித்தான்!!!” என மெல்லிய குரலில் கவி வேறு முணுமுணுக்க,
கண்டனமாக கவியை பார்த்த பிரபா, சேதுராமனின் பார்வையில் மறைந்திருந்த இகழ்ச்சியைக் கண்டு, மிகவும் கீழாக உணர்ந்தான்.
ஆனால் அதற்கு மாறாய்,
“அடடே!! வாப்பா பிரபா!! எப்படி இருக்க??” என இன்முகமாய் அவனை வரவேற்ற பொற்கொடி,
“இந்த ஒருவாரமா உன் புராணம் தான்!! கேட்டு கேட்டு காதே ஓட்டை ஆகிடுச்சு எனக்கு!!” என சலித்துக்கொண்டவர், பொதுவாய் அவன் படிப்பைப் பற்றி பேசி, காபி கொடுத்து உபசரிக்க, பிரபாவிற்கு அவரின் பேச்சு சற்று ஆறுதலாய் இருந்தது!!
ஆனால் அதற்கும் ஆயுள் குறைவு என்பதைப் போல் ஆராய்ச்சிப் பார்வையுடன் அவர்களை நெருங்கிய சேதுராமன்,
“அப்பறம் தம்பி!! பார்க்க தான் ரொம்ப சாதுவா இருக்கீங்க!! ஆனா பண்ற வேலையெல்லாம் வேற மாதிரி இருக்கே!!!” என இருபொருள்பட அவர் கேட்க,
“என்னப்பா சொல்றீங்க!!??” என புரியாமல் கேட்டாள் கவி!!
“இல்லைம்மா!! தம்பி எடுத்த மார்க்கை சொன்னேன்.. பார்க்க அப்பாவியா இருக்கு.. ஆனா ஸ்டேட் லெவல்ல மார்க் எடுத்திருக்கே!!” என அவர் சமாளிக்க,
கவியும் அதை நம்பியவளாக சிரிப்புடன் அதை ஆமோதித்தாள்.
ஆனால், சேதுராமனைப் போல் இன்னும் பலப்பல மனிதர்களை கடந்துவிட்ட பிரபஞ்சனிற்கு, அவர் எதை குறிப்பிட்டார் என நன்றாகவே புரிய, ஏனோ அங்கு அமர்ந்திருப்பதே பெரும் அவஸ்தையைக் கொடுத்தது அவனிற்கு!!
“அப்பறம்!! தம்பி!! நீங்க என்ன ஆளுங்க!!!” என இயல்பாய் அவர் கேட்க,
கவிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“அப்பாஆஆ!! என்ன பேசுறீங்க??” என அவள் பல்லைக்கடிக்க,
அதை சட்டை செய்யாதவர்,
“சொல்லுங்க தம்பி!! என்ன ஆளுங்க நீங்க??” என சற்று அழுத்தமாகவே மீண்டும் கேட்க,
தயக்கத்துடன் அவரை ஏறிட்ட பிரபா, மென் குரலில் அவரின் கேள்விக்கான பதிலைச்சொல்ல,
சேதுராமனின் பார்வையில் அப்படி ஒரு அதிருப்தி!!
இதுவரை கவியின் நண்பர்கள் என ஆணும் பெண்ணும் பல பேர், அவளின் வீட்டிற்கு வந்திருந்தாலும், அவர்கள் அனைவருமே அந்தஸ்தில் சேதுராமனுக்கு நிகரானவர்கள் என்பதால், சேதுராமனிடம் இப்படி ஒரு கேவலமான குணம் உள்ளதே கவிக்கு இதுவரை தெரியாமல் போனது!!
மற்றவர்களால் என் பிரபா துன்பம் அடையக்கூடாது என கடவுளிடம் கவி வேண்டிக்கொண்டிருக்க, இன்று அவளின் தந்தையாலே அவனுக்கு ஏற்படும் அவமானத்தை கவியால் ஜீரணிக்க முடியவில்லை!!
“இங்க பாருப்பா!! நாங்களாம் யாருன்னு உனக்கு எங்க உயரத்தை பார்த்ததுமே புரிஞ்சிருக்கும்!! கவி சின்னபொண்ணு!! அவளுக்கு ஒன்னும் தெரியாது!! ஆனா உனக்கு உன் இடம் எதுன்னு நல்லாத் தெரியும் தானே!!! “
“எங்க இருக்கணுமோ, அங்கேயே இரு!!! இல்லை…!!!!” என மறைமுகமாக எச்சரிக்கை விட்டவரின் குரலில் இருந்த கடுமை, அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என பிரபஞ்சனிற்கு உணர்த்த, அதற்குமேல் அங்கு அமர்ந்திருக்க பிரபாவின் தன்மானம் இடம் கொடுக்காததால்,
“நான் வரேன் சார்!!” என பட்டென எழுந்து கொண்டவன்,
அங்கே கண்கள் கலங்கி நின்ற கவியிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்று வெளியேறினான்.
சாப்பிட அழைத்துவிட்டு, இப்படி ஒரு அவமரியாதையை பிரபாவிற்கு பரிசளித்த சேதுராமனை வெளிப்படையாகவே முறைத்த கவி, பின் கண்ணீருடன் பிரபாவைத் தொடர்ந்து வெளியே சென்றவள்,
“சாரி!! சாரி டா பிரபா!! சத்தியமா அவர் இப்படியெல்லாம் பேசுவாருன்னு நான் நினைக்கலை!! என்னை மன்னிச்சிடு டா!!! நான் அவர் மாதிரியெல்லாம் ஒரு நாளும் நினைக்கலை டா.. புரியுதா உனக்கு??” என எங்கே தன்னையும் தவறாய் நினைத்துவிடுவானோ என பரிதவிப்புடன் கேட்ட கவியை,
வலி நிறைந்த புன்னகையுடன் ஏறிட்ட பிரபா,
“உன்னை எனக்குத் தெரியும் கவி!!!” எனும் ஒற்றை வரியில், அவள் மீது அவன் கொண்டுள்ள நம்பிக்கையின் அளவை கவிக்கு உணர்த்திவிட்டு, விடுவிடுவென அங்கிருந்து நடந்து சென்றே விட்டான் பிரபஞ்சன்!!
போகும் அவனையே கண்ணீருடன் பார்த்திருந்த கவிக்கு, கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீது தான் கொண்டுள்ள நேசம் புரியத் துவங்க, அதே சமயம் அவளைப் பெற்றவரின் உண்மையான முகமும் அறிந்து கொண்டதால், கலவையான உணர்வுகள் வந்து தாக்கியதில் மிகவும் சோர்ந்து போனாள் பெண்ணவள்!!
வாடிய முகத்துடன் வீட்டினுள் நுழைந்தவளை வாசலிலே நிறுத்தி வைத்த சேதுராமன்,
“இதோ பார் அஞ்சலி!! இத்தனை நாளும், நம்ம தகுதிக்கு சமமான ஆளுங்க கூட பழகிட்டு வந்ததுனால தான் உன்னோட தனிப்பட்ட விஷயத்துல இதுவரைக்கும் நான் தலையிட்டதில்லை !! ஆனா இப்போ வந்துட்டு போனேனே!!!” என்றவரின் பார்வை அசூசையாக மாற, தந்தையின் முகத்தைக் கூட பார்க்கப் பிடிக்காதவளாக தலையைக் குனிந்து கொண்டாள் கவி!!
“அவனை எல்லாம் நண்பனாக் கூட நம்ம கிட்ட நெருங்க விடக்கூடாது!!! என்னதான் என் பூர்வீகத்தை விட்டுட்டு விலகி வந்துட்டாலும், என்னால சில விஷயங்கள்ல இருந்து மாற முடியாது!! அதுல இதுவும் ஒன்னு!!! இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் நம்ம காலுக்கு கீழ இருக்க செருப்பு மாதிரி தான் உபயோகப்படுத்தனும்!!! புரிஞ்சுதா!!!!” என சற்று கண்டிப்புடன் அவர் கேட்க,
அப்போதும் கவியிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை!!
அவளின் மௌனத்தை, தவறாக புரிந்து கொண்டவருக்குத் தெரியவில்லை, எங்கே தந்தை என்றும் பாராமல் ஏதேனும் கோபத்தில் வார்த்தைகளை சிதறவிட்டு விடுவோமோ என அவள் தன்னைத்தானே கட்டுப்படுத்த மிகவும் போராடிக்கொண்டிருப்பதை!!
“ப்ச்!! விடுங்க!! அவ நல்ல நண்பனா தான் அவனைப் பார்க்குறா !! நீங்களா கண்டதையும் பேசி, பிள்ளை மனசைக் குழப்பாதீங்க.. அந்தப்பையனைப் பார்த்தாலும் அப்படி ஒன்னும் தப்பாத் தெரியலை!!” என பொற்கொடி இடையிட்டு மகளைக் காக்க,
இருவரையும் அழுத்தமாகப் பார்த்த சேதுராமன்,
“நட்பாக் கூட அந்த சல்லிப்பைய கூட என் பொண்ணு பழகுறது என் கௌரவத்துக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறேன்.. அதுனால எப்படி சொல்ல முடியுமோ அப்படி உன் பொண்ணுக்கு புரியுற மாதிரி சொல்லி வை!!! என் குடும்பத்தைப் பத்தி உனக்குத் தெரியும்ல!!! அவங்களோட பேசலைனாலும், அதே ரத்தம் தான் எனக்குள்ளயும் ஓடுது!! ஏதாச்சும் தப்பா நடந்தது, கொன்னு போடக்கூட தயங்க மாட்டேன்” என அப்பட்டமாக மிரட்டிவிட்டு விட்டு செல்லும் தந்தையை அதிசயமாகப் பார்த்த கவிக்கு, இந்த சேதுராமன் முற்றிலும் புதிது!!!
மகளின் முகத்தை வைத்தே அவளின் எண்ணவோட்டத்தைக் கண்டுகொண்ட பொற்கொடி,
“என்ன பார்க்குற!??? இதான் உங்க அப்பாவோட உண்மையான முகம்!!!”
“நம்ம பூர்வீகம் ஜல்பல்லின்னு (ஆந்திரா) மட்டும் தான உனக்குத் தெரியும்!!! அங்க உங்க அப்பா குடும்பத்தைப் பத்தி தெரியாதே!! அங்க அவங்க தான் பெரிய ஆளுங்க!!! பணத்துல மட்டும் இல்லை. ஆள் பலத்துலயும்!! அவங்களை எதிர்த்து நிக்குறவங்களை வெட்டிப்போடக் கூட யோசிக்க மாட்டாங்க!! உங்க அப்பாவும் அப்படித்தான்.. அவங்க அக்கா வீட்டுக்கார் கூட ஏற்பட்ட வாய்த்தகராறு பெரிசாகி தான் சொத்தைப் பிரிச்சு வாங்கிட்டு இந்தப்பக்கம் வந்துட்டாரு!! இங்க வந்து சூழ்நிலைக்கு தக்கன பதவிசா நடந்துகிட்டாலும், உங்க அப்பாக்குள்ள இன்னும் அந்த காட்டன் குணம் அப்படியே தான் இருக்கு!! கிறுக்குத்தனமா என்னத்தையும் பண்ணி, உன் வாழ்க்கையோட சேர்த்து அந்தப்பையன் வாழ்க்கையும் கெடுத்துப்புடாத!! அவ்வளவு தான் சொல்லுவேன்!!!” என கண்டிப்புடன் கூறிய பொற்கொடி, அறிவுள்ள பெண் , புரிந்து கொள்வாள் என அதற்கு மேல் அழுத்தம் கொடுக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஒரே நாளில் பலவித உணர்வுகளை கையாண்டதில் கவியின் மனம் மிகவும் சோர்வுற்றிருக்க, பிரபாவின் மீது அவள் கொண்டுள்ள நேசம் கூட சற்று பின்னே சென்றிருந்தது!!!
ஒரு மனிதனுக்குள் தான் எத்தனை முகங்கள் என பெற்றவரின் உண்மை முகத்தைக் கண்டுகொண்ட பெண்ணிடம் கசப்பான முறுவல்!!
பொற்கொடி சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ள அவளின் வயது அனுமதிக்கவில்லை!!
“அப்படி என்ன செய்துவிடுவார்கள்??” எனும் கவியின் அசட்டுத் துணிச்சல் தான் அடுத்து அவள் வாழ்வில் அனுபவிக்கப் போகும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது!!
பெற்றோருக்கு பயந்து என்றில்லாமல், தன்னைக்குறித்தே கவிக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்ததால் இந்த ஒருவாரமும் யாரிடமும் பேசாமல், முக்கியமாக பிரபாவிடம் பேசாமல் கவி தனியே அடைந்துகொள்ள,
கவியின் மாற்றத்தில், பெண் யோசிக்கத் துவங்கிவிட்டாள், இனி தெளிவாகிவிடுவாள் என நம்பிய சேதுராமனும், முன்பு போல் இயல்பாகவே அவளிடம் உரையாட, அவளும் எவ்வித அலட்டலும் இல்லாமல் தந்தையுடன் பழகினாள்.
பிரபா எனும் ஒருவனை தன் மகளின் வாழ்க்கையில் இருந்து நீக்கிவிட்டதாக சேதுராமன் இருமாந்திருக்க, மகளோ தந்தையின் பேச்சில் தான், நட்பையும் தாண்டிய ஒரு உணர்வை பிரபாவிடம் உணர்ந்து, தங்களின் உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவெடுத்துவிட்டாள் என பாவம் அப்போது அவர் அறியவில்லை!!
இரண்டு வாரங்களுக்குள், கவியை, மதுரையில் அமைந்திருந்த மிகப்பிரபலமான பொறியியல் கல்லூரி ஒன்றில், மிகப்பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கி, சேர்த்து விட்டிருந்தார் சேதுராமன்.
அது தெரிந்ததும், நண்பர்களைச் சந்தித்து இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டு வருகிறேன் எனக் கிளம்பிய மகளை யோசனையாகப் பார்த்தாலும், தன்னை மீறி எதுவும் நடக்காது என அவர் மேல் கொண்ட அதீத நம்பிக்கையில் மகளை வெளியே அனுப்பி வைத்தார் சேதுராமன்.
அப்போதே மகளுக்கென தனியாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கிப் பரிசளித்திருந்தார் சேதுராமன்.
புன் சிரிப்புடன் ஸ்கூட்டரைக் கிளப்பிய கவியின் கைகள், தன்னாலே பிரபாவின் இல்லம் நோக்கி வண்டியை செலுத்த, அவள் முகம் என்றும் இல்லாத அளவிற்கு பிரகாசமாய் மின்னியது!!
இத்தனை நாளும், பிரபாவின் மீது தான் கொண்டுள்ள உணர்வின் பொருள் அறிந்தும், அதில் சரியாக முடிவெடுக்கத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தவள், இன்று தெளிவாக, அவன் தான் இனி எல்லாம் என முடிவெடுத்த பின், மலர்ந்த முகத்துடன் அவனைக் காணச் சென்று கொண்டிருந்தாள்.
முன்பே அவனின் ஊர் பெயர் தெரியும் என்பதால், விரைவாகவே அந்த இடத்தை அடைந்து விட்டவளுக்கு, மொத்தமே நாற்பது வீடுகளைக் கொண்ட அந்த ஊரில் பிரபாவின் வீடைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை!!
மிகச் சிறிய வீடு தான், ஆனால் அதில் குடியிருக்கும் மனிதர்களின் மனது மிகவும் விலாசமானது என்பதால், அவர்கள் வீட்டின் வறுமை பெண்ணவளின் முகத்தில் இருந்த ஒளியை சிறிதும் மங்கச் செய்யவில்லை!!
இன்முகத்துடனே திறந்திருந்த வீட்டில், மனதில் தோன்றிய குறுகுறுப்புடன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்த கவியைக் கண்டு மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்து விழித்தான் பிரபஞ்சன்!!
அவனின் அதிர்ச்சியைக் கண்டு, கவி வெளிப்படையாகவே சிரிக்க, அவளின் சிரிப்பு சப்தம் கேட்டு, அந்த வீட்டில் இருந்த அந்த ஒரே சிறிய அறையில் இருந்த வெளியில் வந்தார் பிரபஞ்சனின் தாயார் செந்தமிழினி!!!
கவியின் கவனம் சட்டென அவரிடம் திரும்ப, அங்கே நாற்பத்தைந்து வயதுமிக்க ஒரு பெண்மணி, கண்களில் குடியேறியிருந்த நிரந்தர சோகத்துடன், அவளை யாரென பார்க்க, கவிக்கு அவரைக்கண்டு அதிர்ச்சியாக இருந்தது!!
பிரபா சொன்னதை வைத்துப் பார்த்தால், இந்நேரம் அவரின் வயது முப்பத்தி ஐந்து முதல் முப்பத்தி ஆறுக்குள் தான் இருக்கும்!! ஆனால் அவர் பட்ட துன்பங்கள், அவரை மிகவும் பொலிவிழக்கச் செய்ய, இப்போதே அவ்வளவு சோர்ந்து காணப்பட்டார்!!
அவரைக் கண்டு கவி வருந்த, அதற்குள் தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவிட்ட பிரபஞ்சன்,
“அம்மா!! இது என் பிரண்டு!! பேர் கவி!! ஸ்கூல்ல ஒன்னா படிச்சோம்!!” என முறையாக அவளை அறிமுகம் செய்து வைத்தவன்,
“உள்ள வா கவி!! ஏன் அங்கேயே நிக்கிற??” என அவளையும் வரவேற்றிருந்தான்.
“ஓஹ்!! நீ தான் கவியாம்மா ?? உன்னைப்பத்தி பிரபு நிறைய சொல்லிருக்கான்.. வா!! வந்து உட்காரு!!” என சின்ன புன்னகையுடன் அவளை வரவேற்ற தமிழினி, அவளுக்காக பருக மோர் எடுத்துக்கொண்டு வர அங்கே ஓரமாய் அமைந்திருந்த அடுப்பு மேடைக்கு மெதுவாய் நடந்து சென்றார்.
செல்லும் அவரையே பார்த்துக்கொண்டிருந்த கவியை,
“என்ன கவி!! சொல்லாம கொள்ளாம வந்திருக்க?? ஏதும் பிரச்சனையா??” என அக்கறையாக பிரபா விசாரிக்க,
சட்டென நெஞ்சில் அழுத்திய குற்ற உணர்வுடன்,
“ரியலி சாரி பிரபா!! நான் அன்னைக்கு அப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை!! ” என மெய்யான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டாள் கவி!!
“ப்ச் விடு!! இதெல்லாம் எனக்கு பழகிப்போன ஒண்ணு தான். . இதை விட மோசமான பேச்சையெல்லாம் கேட்டு வளர்ந்தவன் நான்.. இதெல்லாம் எனக்கு ஒன்னுமே இல்லை..” என சாதாரணமாகச் சொன்னாலும், அவன் மனதில் ஏற்பட்டிருக்கும் காயத்தின் ஆழம் காரிகையின் மனம் அறிந்தே இருந்தது!!
இருந்தும் நடந்ததைப் பேசி மேலும் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல், பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக புன்னகையுடன் பிரபாவிடம் முதலில், தான் வந்த விஷயத்தைப் பகிர்ந்தாள்.
“சூப்பர் கவி!! ரொம்ப நல்ல காலேஜ்!! அங்க படிச்சா நல்ல ப்யூச்சர் இருக்கும்!!! ரொம்பவே சந்தோஷமா இருக்கு கவி!! ஆல் தி பெஸ்ட்!!” என மனதார வாழ்த்தினான் பிரபஞ்சன்.
“அதெல்லாம் இருக்கட்டும்!! நான் அதை சொல்ல வரலை!! நீயும் கவுன்சிலிங்கில இந்த காலேஜ்ல தான் சேருற!! உன் கட் ஆஃப்க்கு இன்னும் நல்ல காலேஜ் எல்லாம் கிடைக்கும்.. பட் அங்க எல்லாம் போகக் கூடாது!! நான் படிக்குற காலேஜ் தான் நீ செலக்ட் பண்ணனும்!! என்னால உன்னை விட்டுட்டு எல்லாம் இருக்க முடியாது!!” என மிரட்டல் போல் சொல்லிக்கொண்டு வந்தவள், இறுதி வரியில் குரலைத் தழைத்துக்கொள்ள,
அதுவெல்லாம் பிரபாவின் கருத்தில் பதியவில்லை.
“இல்லை கவி!! இன்ஜினியரிங் படிக்கிறதெல்லாம் ரொம்ப செலவாகும்!! எங்க நிலைமை உனக்கே தெரியும்.. அதான் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேரலாம்னு இருக்கேன்” என தயக்கத்துடன் பிரபா இழுக்க,
“நீ இப்படித்தான் ஏதாவது சொல்லுவன்னு தெரியும்!!” என்ற கவி,
தன் கைப்பையினுள் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து பிரபாவின் கையில் கொடுத்தவள்.
“இது பிரபலமான டிரஸ்ட்!! இவங்க நல்லா படிக்குற உன்னை மாதிரி நிறைய பேருக்கு நிறைய ஹெல்ப் பண்றாங்க.. நான் தேடிப்பார்த்து ஆன்லைன்ல அப்ளை பண்ணிருக்கேன் உனக்கு.. உன் மார்க் பார்த்ததுமே, அவங்க ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க.. கண்டிப்பா உனக்கு காலேஜ் படிக்க ஸ்பான்சர்ஷிப் பண்றதா சொல்லியிருக்காங்க… சோ நீ கண்டதையும் யோசிக்காம ஒழுங்கா கவுன்சிலிங் அப்ளை பண்ணி என் காலேஜ் வந்து சேரு!!”
“நான் கேட்டதை செஞ்சு தரேன்னு நீ வாக்கு கொடுத்திருக்க!! எனக்கு இதான் வேணும்!! நீ என் கூடவே இருக்கணும்!! ” என முடிவாகக் கூறியவளின் குரலில் இருந்த பிடிவாதத்தின் பின் மறைந்திருந்த பிரியத்தை கண்டு கண்கள் கலங்கிய பிரபா,
“எனக்காக நீ ஏன் கவி இவ்வளவு மெனக்கெடுற?? இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலை!!” என குரல் தழுதழுக்க கூறிய பிரபா, மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருந்தான்.
“அட!! ஓவரா பெர்ஃபார்ம் பண்ணாத!! போ.. வீட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் ஆச்சு, உட்கார கூட சொல்லலை நீ!! இதுல அழுகை வேற?!” என கேலியாக பேசி அவனை இயல்புக்கு கொண்டு வர முயன்றாள் அவள்.
அதற்குள் தமிழினி அவளுக்காக நீர்மோர் கொண்டு வர, இன்முகத்துடன் அதை வாங்கிப் பருகியவள், பேசவே மறந்து போயிருந்த தமிழினியைக் கூடத் தன் பேச்சால், அவர் கூட்டிலிருந்து வெளிவரச் செய்திருந்தாள்.
சிரிப்புடன் தன் அன்னையிடம் உரையாடிக் கொண்டிருந்த கவியைத் தான் கண்கள் சிமிட்டாமல் பார்த்திருந்த பிரபாவிற்கு, இன்று அவன் கவி, கவிதையாகத் தெரிந்ததன் மாயம் தான் புரியவில்லை!!
“பிடித்தத்திற்கும் பிரியத்திற்கும் இடையில் இருக்கும் மெல்லிசான கோட்டைக் கடந்துவிட்டால்,
காதல் காற்று உங்கள் இதயத்தை இதமாய் வந்து மோதும்!!!!”
error: Content is protected !!