Skip to content
Post Views: 4,688
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 12
கோபப்பட்டு ஒதுங்கி போய் எல்லாம் கணவனை சரி செய்ய முடியாது என்று உணர்ந்த மீனா.. அதே வீட்டிலிருந்து கொண்டு அவன் மேல் பாரா முகமாகத் தான் இருந்தாள். தான் உண்டு தன் பிள்ளைகள் உண்டு என்று வட்டத்தை சுருக்கிக் கொண்டாள்.
மனைவி முகம் தூக்கி சுற்றுவதை பார்த்த கணவன் அவளை சமாதானம் செய்யவில்லை. தன்னை கோபப்படுத்தியதற்கு அவள் தான் தன்னை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்தவன். இவளுக்கு மேல் முகத்தை தூக்கிக்கொண்டு சுற்றினான். மீனா கணவனுக்கும் சேர்த்து சமைத்து வைக்க, அவன் அதை தொட்டுக் கூட பார்க்கவில்லை.
Advertisement
அதை அவள் கண்டு கொள்ளவும் இல்லை. என் கடமை.. உன் விருப்பம் என்று தள்ளி நின்று கொண்டாள். இரவு உறக்கத்திலும் மனைவி பிள்ளைகள் என்று இல்லாமல் வீம்புக்கு ஹாலிலே தன் படுக்கையை போட்டான் ஜெகன். மீனா, அதையும் சாதாரணமாக எடுத்து கொண்டாள். தனியாக உறங்குகிறாயா? குளிரில் விரிப்பில்லாமல் படுக்கிறாயா என்று எந்த கரிசனத்தையும் கணவன் மீது காட்டவில்லை. முன்பெல்லாம் சண்டை வந்தால் முகத்தை தூக்கி வைத்துக் கூட அவனின் தேவையை கவனித்து விடுவாள்.
அவனுக்கு பிடித்த உணவை செய்வது, எழுந்ததும் பிடித்தது போல காபி, பிள்ளைகளை கொண்டு சாடை பேச்சு, தனியாக புலம்புவது போல சமாதான தூது என்று மனைவி தொடங்கினாள்.
கணவன் சாமிக்கு பூ வாங்குவது போல, மனைவிக்கு பிடித்த பூ வாங்கி வருவது.. பிள்ளைகளுக்கென்று உணவு பண்டம் வாங்குவது போல மனைவிக்கு பிடித்த உணவுகளை கொடுப்பது.. நண்பர் வீட்டு விசேஷம் என்று முறுக்கி கொண்ட மனைவியை பைக்கில் ஏற்றி செல்வது என்று தொன்று தொட்டு ஏதோ ஒன்றில் ராசியை கொள்வார்கள்.
Advertisement
இன்றைய நிலையில் இருவருமே அதை முன்னெடுக்கவில்லை. தன் திருமண வாழ்க்கை தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை ஜெகன் உணரவே இல்லை. நான் எப்படி இருந்தாலும் என் மனைவி என்னை விட்டுக் கொடுக்க மாட்டாள். என்னை விட்டு செல்லவும் மாட்டாள் என்ற மீனாவின் காதல் ஜெகனுக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. உண்மை தெரிந்தே அவளை ஏமாற்றவும் செய்தது.
Advertisement
பொதுவாக மீனா வெளியில் எங்கும் செல்ல மாட்டாள். அதுவும் இந்த சின்ன குட்டி பிறந்ததிலிருந்து இரண்டு பிள்ளைகளோடு வீட்டிலே முடங்கிக் கொள்வாள். இது தேவை என்று சொல்லும் அளவுக்கு ஜெகனும் விட மாட்டான். எப்படி இருந்தாலும் வீட்டில் நிறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்வான். அதனால் வெளி விவகாரங்கள் அவளுக்கு தெரியவே இல்லை.
அன்று பக்கத்து வீட்டுக்காரங்களோடு சேர்ந்து பிள்ளைகளுக்கான விளையாட்டு கூடம் போட்டு இருப்பதால், அங்கு சென்றாள். தமிழுக்காக தான். எவ்வளவு நாட்கள் சிறு பிள்ளையை வீட்டிலே அடைத்து வைக்க முடியும். மகனை கையில் வைத்துக் கொண்டு, மகளை.. அவள் வயதுக்கு தக்க சிறு சிறு விளையாட்டுகளில் விளையாட விட்டு ரசித்தாள்.
அன்று பார்த்ததுதான் ஜெகனின் நண்பனை, தெரிந்தவர் என்ற முறையில் நலம் விசாரிக்க..
Advertisement
“நான் நல்லா இருக்கேன்மா. ஜெகன் எப்படி இருக்கான். அவனை நினைச்சு தான் எனக்கு கவலையே.. இந்த தொழில்ல பெருசா வருமானம் வராதுன்னு இறங்குன ரெண்டு மாசத்துலயே புரிஞ்சு போச்சு. அப்பவே நான் சொன்னேன் வேணாம்டானு.. எங்க கேட்டான்?.. அப்புறம் நான் ஒதுங்கிட்டேன். அவன் எனக்கு பணம் கொடுத்து முழுசா எடுத்து நடத்துனான். இப்போ அவனுக்கும் பெரிய நஷ்டமா போச்சாம். இப்போ அவனும் கடைய மூடிட்டான். நான் சொன்ன அன்னைக்கே மூடி இருந்தா, ரெண்டு பேருக்கும் சின்ன நஷ்டத்தோடு போயிருக்கும். எனக்கும் பங்கு பணத்தை கொடுத்து, அவன் தனியா நிறைய செலவு பண்ணி மொத்தமா விட்டுட்டான் போல” என்று வருத்தமாக பேசி கொண்டிருக்க..
முதலில் புரியாமல் கவனித்து வந்த மீனா. அடுத்து அவன் பேச பேச, மயக்கம் வரும் போல இருந்தது. தன்னிடம் வந்து பேசியதற்காக இரண்டு நிமிடம் சிரித்து பேசி அனுப்பியவள், வேகமாக தன்னோடு வந்த சரசு அக்காவிடம் வீட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு.. அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளையையும் தூக்கிக்கொண்டு கணவன் கடையை நோக்கி வேகமாக சென்றாள். மனம் முழுக்க படபடப்பு, அப்படி இருந்து விட கூடாதென்ற தவிப்பு இருந்தது.
இந்த தொழிலுக்காக அவள் கையிருப்பை தூக்கி கொடுத்தாள். வீட்டில் அம்மா, அண்ணன்கள் என்று யார் சொல்லியதையும் கேட்க வில்லை. கணவனுக்காக.. தங்கள் எதிர்காலத்திற்காக இருப்பதை தூக்கி கொடுத்தாச்சு. வருடம் கூட முடியவில்லை. அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டவில்லை. அதற்கு முன் நஷ்டம் என்றால், அடுத்து வாழ்க்கை என்ன? வீட்டின் தேவைகளை எவ்வாறு பார்த்தான்? வரவு, செலவு எதையும் ஒரு வார்த்தை சொல்ல வில்லை. என்ன வாழ்க்கை நான் வாழ்கிறேன்.. கையில் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறதே.. நினைக்கவே அவ்வளவு பயம்…
அவள் பயந்ததற்கு ஏற்ப தான் முன்பு இவர்களின் போட்டோ ஸ்டுடியோ இருந்த இடத்தில் வேற கடை இருந்தது. கடை மாற்றி விட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆனதாம். பேச்சே இல்லை. திகைத்து போய் நின்று விட்டாள் மீனா.
நெஞ்சே காந்தியது. அப்படி ஒரு அழுகை, ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரம். எப்படி வந்தோம் என்று தெரியாமல் இரு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு வீடு வந்தாள். வீட்டில் இருப்பதை பிள்ளைகளுக்கு கொடுத்து உறங்க வைத்தாள்.
இப்போதெல்லாம் சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி அழுவதெல்லாம் சகஜமாகி விட்டது. ஒன்றும் தோன்றாமல் விட்டத்தை வெறித்து அமர்ந்திருந்தாள். எவ்வளவுதான் மனதில் போட்டு அழுத்துவது.. தாய்க்கு உடனே போன் செய்து விட்டாள்.
“மீனா…”
“அம்மா…” வெடித்து அழுதாள்.
“மீனா என்னாச்சு.. ஏண்டி அழுகிற? மருமகன் எங்க?” அவருக்கு என்னென்னவோ நினைவு.
“அம்மா.. நான்லாம் வாழவே தகுதி இல்லாத பொண்ணும்மா… நான் சாகுறேன். என் பிள்ளைகளை பார்த்துக்க” என்று தொடர்ந்து அழுக, பெற்றவருக்கு ஒன்றும் புரிய வில்லை.
“மீனா அழுகாம என்ன நடந்ததுன்னு சொல்லு?”
என்னத்த சொல்ல? நான் ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டி இருக்கேனே, அவன் தான்? இல்லம்மா நான் தான் தப்பு. படிக்கிற வயசுல படிக்காம, பெத்தவங்க சொல்லியும் கேட்காம.. எல்லாம் என் தப்பு. எனக்கு வேணும்? அப்பா எவ்வளவு சொன்னார். கொஞ்சமாவது கேட்டேனா? எனக்கு நல்லா வேணும்” விசயம் என்னவென்று சொல்லாமல் மகள் பெரியதாக அழுகவும், தாய்க்கு மனம் பதறியது.
பரமு எவ்வளவுதான் சமாளித்து கேட்டாலும் மீனாவுக்கு அழுகையைத் தவிர ஒன்றும் வரவில்லை. இது ஆகாது என்று புரிந்தவர், சின்ன மகனை அழைத்து கொண்டு மகள் வீடு புறப்பட்டார்.
மகள் வீட்டில் என்னவோ என்று ஓடி வந்தவருக்கும் விஷயம் தெரிய.. ஒன்றும் பேசாமல் அமர்ந்து விட்டார். ஜெகன் சரியில்லை என்று யாரிடம் போய் முறையிட முடியும். அவனுக்கு இருக்கும் அம்மாத்தாவும் வயது சென்றவர். காது கேட்கும் திறன் மங்கிப்போய் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
இந்திரன் தான் கத்திக் கொண்டிருந்தான். ஜெகனை ஒருவழி செய்யும் முடிவில் இருக்க.. அவன் மனைவி தான் யோசனை சொன்னாள்.
“அம்மா உன் மகளை ரெடியா இருக்க சொல்லு போலீஸ் ஸ்டேஷன் போவோம்” என்றதும் தாய், மகள் இருவரும் பயந்து போய் பார்த்தார்கள்.
“அங்க இருக்கிற போலீஸ் நம்ம வசந்திக்கு சொந்தக்காரங்க தான். நியாத்துக்கு அவனை கம்ப்ளைன்ட் கொடுத்து தான் உள்ள வைக்கணும்.. என்ன செய்ய தங்கச்சி புருசனா போயிட்டான். நம்ம வசந்தி சொல்லுது, தெரிஞ்ச போலீஸ வச்சு கொஞ்சம் மிரட்டி பாப்போம். வீட்டுக்கு அடங்காதவன, இனி ஊர் தான் அடக்கணும்” என்று முடிவாக மகன் சொல்ல,
பரமுக்கும் அது தான் சரியென்று பட்டது. அவரும் மகளை சரிகட்டி அழைத்து வந்து விட்டார்.
இங்க பாரு மீனா, உங்க அண்ணிக்கு தெரிஞ்சவங்க தான். நீ என்ன சொன்னாலும் உன் புருஷன் கட்டுப்படல.. அவங்க கொஞ்சம் மிரட்டுனா பயம் வரும். வேற வழி இல்லை. ரெண்டு பிள்ளைக்கு அப்புறம் அத்து விட்டா வரப்போற?” சமாதானம் செய்து அழைத்து வந்தார்.
மீனாவுக்கும் தாய் சொல்வது சரியாகப்பட்டது. சரி இல்லை என்றால் வெட்டிவிடும் உறவு கிடையாது. இவளும் அழுது, சமாதானம் செய்து, அனுசரித்து என்று எவ்வளவு தான் பார்ப்பது.. தன் அண்ணிக்கு தெரிந்தவர் என்ற முறையில் அவரிடம் போய் முறையிட, கையை கட்டி நின்றான் ஜெகன்.
ரெண்டு பிள்ளைகளோடு மீனா நின்ற தோற்றமே போதும் அந்த பெண் அதிகாரியை கொதிப்படைய செய்ய,
“பெரிய சண்டியரா சார் நீங்க.. கட்டுன பொண்டாட்டி மேல கை வைக்கிறியாம். பொண்டாட்டின்னா உனக்கு என்ன அடிமையா? கட்டுன மனைவியா இருந்தாலும் கை நீட்டுனா ஜெயில் தான். சட்டம் இருக்கு.. உனக்கு தெரியாதோ? ம்ம், தெரியவச்சுருவோம்” என்று அவனை நிக்க வைத்து கேள்வி கேட்க.
ஜெகனால் ஒன்றும் பதில் பேச முடிய வில்லை. அவனுக்கு நன்றாகத் தெரியும் தன் மனைவிக்கு எல்லாம் அவ்வளவு விவரம் கிடையாது. அவள் அண்ணன்காரன் தான் காரணம். எதுவும் பேச முடியாமல் தன்னை கைகட்டி நிற்க வைத்த இந்திரன் மேல் அவ்வளவு கோபம் வந்தது.
“இனி அப்படி நடக்காது மேடம்” தயவாகவே வாக்கு கொடுத்தான்.
“இதை எப்படி நம்புறது. அந்த பொண்ணை கொடுமை படுத்துற, கேள்வி கேட்ட பெத்தவங்களை வர கூடாதுன்னு சொன்னையாம்? பொண்ணுங்க மேல கையை வச்சா, விசாரணையே இல்லாம தூக்கி உள்ள வைக்கலாம். உன் பொண்டாட்டின்னு நீ காட்டுற உரிமை எல்லாம் சட்டத்து கிட்ட செல்லாது.. போலீஸ் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியனுமா?” ஏக வசனத்தில் மிரட்ட,
குறுகி போனான் ஜெகன். தனக்கென்று யாரும் இல்லாவிட்டாலும் அவன் தனிக்காட்டு ராஜா. இப்படி எல்லாம் மற்றவர்கள் முன் கைகட்டி நின்றதில்லை. மிக பெரிய அவமானம் தான்.
“ஏதோ பிள்ளை நம்ம பிள்ளை. பிரித்து விட்டா பொம்பளை புள்ள வாழ்க்கை கெட்டுப் போகணும்னு சொல்லி உன்னை கூப்பிட்டு வச்சு பேசிட்டு இருக்கோம். அதுவுமில்லாம பழையபடி தான் குடிப்பேன், ஊர் சுத்துவேன், வீட்டுக்கு சம்பாரிச்சு கொடுக்க மாட்டேன், பொண்டாட்டிய அடிப்பேன்னு சொன்னா? சட்டப்படி கேஸ் போட்டு என்ன பண்ணுவோமோ அதை பண்ணுவோம். நீ என்ன சொல்ற?” என்று அதிகார குரலில் கேட்க. என்ன பேச முடியும் அவனால்…
இனி நான் ஒழுங்கா குடும்பம் பண்ணுவேன்னு சொன்னா.. உன் பொண்டாட்டி பிள்ளை கூட்டிட்டு போ.. இல்லை, அந்தப் பிள்ளை கிட்ட வாங்கின நகையை கொடுத்துட்டு உன் பிள்ளைகளுக்கு செட்டில் பண்ணிட்டு நீ கிளம்பு.. சரியில்லாத ஆம்பளைகளை அனுசரிச்சு பொண்ணுங்க எவ்வளவு காலத்துக்கு தான் வாழ்றது”
“உங்கள மாதிரி ஆட்களை கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளையும் பெத்து, முன்னேற நகையும் கொடுத்து, சீரும் செஞ்சு, நீங்க என்ன தப்பு செஞ்சாலும் அனுசரிக்கும் பொண்ணை கை நீட்டி அடிக்கிறீங்க. எந்த பொண்ணும் தைரியமா புருஷன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டாங்கன்னாற திமிரு. என்ன சொல்ற ஜெகன். இனி ஒழுங்கா இருப்பியா?”
எதுவும் பேச முடியவில்லை அவனால்.. இன்னமும் மாமா அவனுக்கு மீனா கம்ப்ளைன்ட் கொடுத்ததவே நம்ப முடியவில்லை.
“நீ ஒழுங்கா இருப்பேன் மேடம். குடியை விட்டுறேன். சரியா வேலைக்கு போறேன். என் குடும்பத்தை நல்லா பாத்துக்கிறேன்” என்று வாக்கு கொடுத்தான்.
அந்த அதிகாரி திரும்பி இந்திரணையும், அவனின் அம்மாவையும் பார்க்க…
இவன் சொல்றதெல்லாம் தண்ணில தான் எழுதி வைக்கணும் மேடம். பேச்செல்லாம் ரொம்ப நல்லாத்தான் இருக்கும். ஆனா, ஒன்னும் மாறாது. ஒரு வாரம் தான் திரும்ப பழையபடி ஆரம்பிச்சிடுவான். என் பொண்ணை இப்படியா நான் அவன் வீட்டுக்கு அனுப்பினேன். இன்னைக்கு பாருங்க கழுத்துல, கையில ஒரு பொட்டு தங்கம் இல்லை. ரெண்டு பிள்ளை வேற இருக்கு. இவனை நம்பி எப்படி அனுப்புறது” கண் கலங்கியது பரமக்கு..
“இப்படி சொன்னா எப்படிமா? அப்ப வேணாமா.. விவாகரத்து பண்ணி விட்டுடுவோமா? பிள்ளைங்க பிரிஞ்சு போய் தனி தனியா வாழ்வதற்காக கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம். குடும்பம்னா நிறை, குறை இருக்கத்தான் செய்யும். அதான் இவ்வளவு தூரம் வந்தாச்சே.. இதுக்கு அப்புறம் ஜெகன் ஒழுங்கா இருப்பான்” என்று ஜெகனைப் பார்க்க,
“இனி யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு என் பொண்டாட்டி பிள்ளைகளை நல்லா பார்த்துப்பேன் மேடம்” மீண்டும் உறுதி கொடுத்தான்.
“இவன் சொன்னதும் அனுப்ப முடியாது மேடம் கொஞ்ச நாளைக்கு என் பிள்ளை என் வீட்ல இருக்கட்டும். இப்ப வேலை இல்லாம வெட்டியா தான் சுத்திட்டு திரியுறான். ஒரு நிரந்தரமான வேலைய பாத்துட்டு வந்து கூட்டிட்டு போகட்டும்” இறுதியாக சொன்னார் பரமு…
ஜெகன் மனைவி முகம் பார்க்க, மீனா அமைதியாக தான் இருந்தாள். முன்பும் அப்படித்தான். முழு அமைதி.. பரமு மகளை கூட்டி கொண்டு வெளியில் வந்தார். அவர்கள் இழுத்த இழுப்புக்கு சென்றாள். வெளியில் வந்ததும் ஜெகன் கண்கள் மனைவியை தேடியது. அவனை எதிர்பார்த்து தான் நின்று இருப்பாள் போல… இந்திரன் கையில் மகள் இருந்தாள். அவனின் மகள்.. குற்றவாளியாக நிற்கும் போது சொந்த மகளை கூட உரிமையாக தூக்க முடியவில்லை.
கொஞ்சம் தயங்கி தயங்கி தான் மனைவி முன் நின்றான்.
“மீனா…” என்று மெல்ல அழைக்க,
அவள் முகம் பார்க்கவே பாவமாக இருந்தது. காய்ந்து போன உதட்டில் விரக்தி சிரிப்பு.
“என்னை மன்னிச்சிடு மீனா” என்று ஜெகன் தொடங்க,
“நான் யாரு?”
“மீனா”
“நிஜமா, உங்களுக்கு நான் யாருன்னு எனக்கே தெரியல. என்ன மாதிரியான வாழ்க்கை நான் வாழ்ந்தேன். உங்களோட வாழ்ந்த இந்த வாழ்க்கையில இந்த ரெண்டு பிள்ளைங்க தான் மிச்சம் இல்ல” குரலில் அவ்வளவு வெறுமை.
“மீனா”
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப ஆசையா காதலிச்சு தான் கல்யாணம் பண்ணுனோம். பெருசா எந்த கஷ்டமும் இல்லை. வாழ்க்கை நல்லாத்தானே போச்சு. எந்த இடத்துல நீங்க மாறி போனீங்க. இல்ல உண்மையிலேயே இதுதான் உங்க குணமா? நான் தான் எதுவும் தெரியாம உங்களுக்கு கழுத்தை நீட்டீடனா?”
மீனா, சாரி.. இனி” அவன் பேச்சை அவள் காதிலே வாங்கி கொள்ள வில்லை.
உடல் ரீதியா நமக்குள்ள எந்த ஒளிவு மறைவு இல்லை. ஆனா, உங்க மனசு. கட்டுன பொண்டாட்டி கிட்ட ஆயிரம் விஷயத்தை மறைக்கிறீங்க. நீங்க, நான், நம்ம பிள்ளைகள் இதுதான் நம்ம குடும்பம் இதைத்தாண்டி என்ன?.. உங்க கூட வாழ்ந்து ரெண்டு பிள்ளை பெத்த எனக்கே என் புருசன் யாருன்னு தெரியல? எது நிஜம்.. என் ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த மனுஷன் எங்க போனாரு” அழுகை வந்த போதும் அடக்கி கொண்டு பேசினாள். குரல் கரகரத்தது.
“ஆறு மாசமா வேலை இல்லை. வருமானம் கிடையாது. அப்புறம் எப்படி குடும்பத்தை ஓட்டுனீங்க. எனக்கு பிள்ளைகளுக்கெல்லாம் எப்படி வாங்கி கொடுத்தீங்க. உங்க வருமானம் தான் என்ன? இன்னும் கையில எவ்வளவு வச்சிருக்கீங்க? யார் கிட்ட கடன் வாங்கினீங்க? இதுல ஏதாவது ஒன்னுக்கு உங்க மனைவின்னு என்கிட்ட விடை இருக்கா? ஒளிவு மறைவு இல்லாம என்கிட்ட சொல்றதுக்கு எந்த கௌரவம் உங்களை தடுக்குது. யார்கிட்ட கௌரவம் பாக்குறீங்க. நீங்க கட்டின பொண்டாட்டி கிட்டயா?”
“மீனா” இயலாமையில் ஜெகனுக்கு வேற வார்த்தைகள் வரவில்லை.
“தோத்துப் போயிட்டீங்க. கஷ்டத்திலும் நஷ்டத்திலும் உங்க கூடவே நிக்கணும்னு நினைச்ச என்கிட்ட, நீங்க கௌரவம் பார்த்து தோத்துப் போயிட்டீங்க. உங்களவே நம்பி வந்த நானும் நம்ம பிள்ளைகளும் கூட தோத்து தான் போயிட்டோம். ஒரு குடும்பத் தலைவன் சரியா இருந்தா மட்டும் தான் அந்த குடும்பமும் சரியா இருக்கும். கண்ணை மூடிக்கிட்டு புருசனை நம்புனேன். இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல ரெண்டு பிள்ளைகளோட நிக்கிறேன்” தாங்கவில்லை மனது.
“சந்தோஷம், நிம்மதி. எப்படி எப்படியோ வாழ போறான்னு உங்க கைய புடிச்சு வந்தேன். இவன் வேணாம்னு சொன்ன எங்க அண்ணன் கிட்ட, இவன் தான் வேணும்னு உங்கள கல்யாணம் பண்ணேன். இன்னைக்கு ஆமா என் புருசன் சரியில்லன்னு அவங்க வீட்டிலேயே அடைக்கலம் தேடி போறேன். எனக்கு நல்ல பெருமையை தேடிக் கொடுத்துட்டீங்க”
மனதில் நொந்து கொண்டான் ஜெகன். அவனும் போராடி தானே பார்த்தான். ஆனால், வாழ்க்கை வசபட வில்லையே.. எப்படி தொழிலை கொண்டு போய் முன்னேற வழி தெரியவே இல்லை. அறிவுரை சொல்லவும், கை கொடுத்து தூக்கி விடவும் ஆள் இல்லை. தோத்து போனான். அவனோடு, அவனின் மனைவியும்…
“இனி நம்ம வாழ்க்கை கஷ்டமாகத்தான் இருக்கும். இப்பவும் நான் உங்களை நினைக்கிறேன். மனசு மாறி எங்களை தேடி வாங்க.. எனக்கு இனி வசதியான வாழ்க்கை கூட வேணாம். கூலி வேலை பார்த்து கூட காலத்தை ஓட்டுவோம்” என்றவள், இடுப்பில் இருந்த மகனை கை காட்டி,
“நமக்குப் பொறந்தது தவிர இவங்க வாழ்க்கையில பண்ண பாவம் என்ன? இருவது வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா எனக்கு கொடுத்த வசதியான வாழ்க்கையை கூட நம்ம பிள்ளைகளுக்கு நாம கொடுக்கல. உங்கள விடுங்க, என்னையும் விடுங்க.. நம்மளை நம்பி இந்த பூமியில் பிறந்த நம்ம பிள்ளைகளுக்கு என்ன வச்சிருக்கோம்” மகனை பார்த்ததும் கலங்கும் கண்களை மனைவிக்கு தெரியாமல் மறைத்தான்.
“நாளைக்கே நமக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நம்ம பிள்ளைகள் அனாதை” மீனா என்று அவள் வாயை பொத்தினான்.
“உண்மை இது தான். அவங்களுக்காகவாது நாம இந்த வாழ்க்கையில ஓட தான் வேணும். நான் எங்க அம்மா கூட போறேன். நீங்களே வாங்க..” தற்போது ஜெகன் மனைவி முகம் பார்த்தான்.
குடும்ப வாழ்க்கையில் தோற்ற பெண்கள் அனைவரும் பற்றிக்கொள்ளும் கடைசி படி பிள்ளைகள். சகிக்கவே முடியாத, தாங்கிக்கொள்ளவே கூடாத கஷ்டத்தையும் கடந்து ஓட வைப்பது நாம் பெற்ற பிள்ளைகள் முகம். கடைசியில் மீனாவும் அதையே பற்றிக் கொண்டாள். பிள்ளைகளுக்காக அவர்களின் எதிர்காலத்தை கொண்டு ஒரு குடும்ப வாழ்க்கை.
ஜெகன் ஒரு கணவனாக தோற்றுப் போன இடம் இது.. உன்னை மட்டுமே நம்பி வந்த பெண். இனி உன்னோடு வாழும் வாழ்க்கை குழந்தைகளுக்காக என்று விட்டாள். அவள் காதல் கொண்ட மனதை கணவன் அல்லவா உடைத்து விட்டான். இனி எவ்வாறு ஒட்டும்?…
error: Content is protected !!