Skip to content
Post Views: 5,142
தூறல் – 11
அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு வீதியின் முனையையே ஆவலோடு பார்த்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி. தான் செய்வது அதிகப்படி என்று அவளுக்கே தெரிந்தது.
Advertisement
‘நேரமே வந்திருப்பார்… ராதாம்மா வீட்லதான் இருப்பார்… உடனே ஓடி வந்துடுவாரா… இல்ல ஓடித்தான் வரணுமா..? நான் ஏன் இப்படி இருக்கேன்..?’
தன் பிடரியில் வலிக்காமல் அடித்துக் கொண்டவள் தன்னையும் மீறி முகிழ்த்த புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைய கண்ணை கசக்கியபடி எழுந்து அமர்ந்திருந்தாள் சவி.
Advertisement
Advertisement
“அல்லுமுஞ்சு எந்திருச்சாச்சா…”
ஆசையாக மகளை அணைத்து முத்தமிட அவளும் சிரித்தபடியே தன் அன்னையை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
Advertisement
“குரு மாமா வந்திருப்பாங்க… ராதா பாட்டி வீட்டுக்கு போகலாமா..?”
ஏதோ இவள்தான் சிறு குழந்தைபோல் விழிகளை விரித்து மகிழ்ச்சி பொங்க கேட்டிருந்தாள்.
சின்னவளும் கண்களை உருட்டி ஆசையாக தலையாட்ட அவளை அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள் அஞ்சலி. தாய் மகள் இருவரும் அடுத்தடுத்து கிளம்பினர். மகளுக்கு பால் ஆற்றி கொடுத்து தனக்கு காபி வைத்து அதையும் பருகி முடித்து மகளை தூக்கியபடியே வீட்டை பூட்டிக் கொண்டு ராதாவின் வீட்டை நோக்கி நடந்தாள் அஞ்சலி.
வாசலில் நின்று அண்டைவீட்டு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த ராதா முகம் மலர அஞ்சலியை பார்த்து சிரித்து “அடி செல்லக்குஞ்சு… நேரமே மேக்கப் பண்ணி வந்தாச்சா..!” என்றபடியே ஆசையாக அவளை கையில் அள்ளிக் கொண்டார்.
அனைவரும் வீட்டுக்குள் நுழைய அஞ்சலியின் விழிகள் வேகமாக சுழன்று அவனை தேடின. வீட்டிற்குள் அவன் இல்லை.
வரலையோ ஒற்றை எண்ணத்தில் சப் என்று இதயம் சுருங்கியதைப் போல் தோன்றியது.
“பாட்டி… மாமா வரலையா..?”
மழலை குரலில் கேட்டிருந்தாள் சவி.
“அதெல்லாம் வந்தாச்சு… குளிக்கப் போயிருக்கிறான் செல்லம்…”
தலையை ஆட்டி அவள் நெற்றியோடு நெற்றி முட்டியபடி ராதா கூற சின்னவளின் இதழ்களில் கொள்ளை சிரிப்பு. அதைவிட பெற்றவளுக்கு சுருங்கிய இதயம் மீண்டும் பூரித்து விரிந்திருந்தது.
தொகுப்பு வீடுகள்போல் அளவாக தனித்தனியாக வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தன அந்த முகாமில். அனைவருக்கும் குளியலறை கழிவறை என்று தனித்தனியாக பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
லுங்கி அணிந்து டி-ஷர்டை தோளில் தொங்க போட்டபடி துவாலையால் அடர்ந்த சிகையை துடைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான் குரு.
கருமை நிறத்தவன் இல்லை… அதே நேரம் மினுமினுக்கும் வெள்ளை நிறமும் இல்லை. ஆண்களின் அழகை கூட்டிக் கொடுக்கும் அளவான நிறம். திடகாத்திரமான வலுவான தோள்களும் ஒட்டிய வயிறும் உடற்பயிற்சி செய்பவனோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் உண்மையில் சிற்சில ஆசனங்களும் தியானமும் நாள் தவறாமல் செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன்தான் அவன்.
அதனால்தான் அவன் மனமும் அத்தனை பக்குவப்பட்டு இருக்கிறது.
ஆறடியே ஆண்களுக்கு அதிகமான உயரம்தான். அதிலும் இவன் அதைவிட இரண்டு அங்குலம் இன்னும் கூடுதல் உயரம். எந்நேரமும் மூக்குக் கண்ணாடியோடு பார்த்துப் பழகியவன் இன்று கண்ணாடி இல்லாமல் நிற்பதை முதன்முறையாக பார்த்த அஞ்சலிக்கு சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆனால் கண்ணாடி இல்லாதவன் இன்னும் கூடுதல் பொலிவாக தெரிந்தான்.
“ஏய் சவிக்குட்டி…”
ஆசையாக ஓடிச் சென்று அவளை அள்ளித் தூக்கியவன் இரு கன்னங்களிலும் முத்தமிட அவளும் ஆசையாக அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனது ஈரக் கன்னத்தில் முத்தம் பதித்திருந்தாள்.
அஞ்சலியிடம் திரும்பி ஒற்றைப் பார்வையை மட்டும் கொடுத்து “எப்படி இருக்க..?” என்றான் கனிவான குரலில்.
“ம்ம்…”
தலையை ஆட்டிக் கொண்டவளுக்கு அவனது அருகாமை பெரும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பது போன்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
முந்தைய நாள் முதல் அவன் வரவை அளவுக்கு அதிகமாக அவள் எதிர்பார்த்ததை அவளும் அறிவாள்.
ஏன் இத்தனை எதிர்பார்ப்பு..? பதட்டம்..? படபடப்பு..? அவனைப் பார்த்தபின் குருவி றெக்கை போல் மனம் லேசாகி நின்றதன் காரணம் என்ன..? மூளை யோசிக்காமல் இருக்குமா..?
கடுமையான சூழலில் இருந்து அவளை மொத்தமாக வெளியே எடுத்து வந்து நான் இருக்கிறேன் என்ற பெரும் பாதுகாப்பு உணர்வை கொடுத்ததாலா..?
விரத்தியில் வெந்து கிடந்தவளுக்கு வாழ்வின் மற்றும் ஒரு பரிமாணத்தை புரிய வைத்ததாலா..?
நான் பார்க்காத வலியையும் இழப்பையும்தான் நீ பார்த்து விட்டாயா.. நானே வாழ்கிறேனே… உனக்கு என்ன வாழ்வதற்கு என்ற உந்து சக்தியை உள்ளே புகுத்தியதாலா..?
அனைத்தையும் கடந்து அவளுக்காகவும் அவள் குழந்தைக்காகவும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து இந்த ஒரே வாரத்தில் அவள் மனதில் ஒரு உயர்ந்த இடத்தில் நின்று போனதாலா..?
தனித்து பிரித்து ஆராய முடியவில்லை. ஆனால் அவனை நிறைய எதிர்பார்த்தாள். அது மட்டுமே நிதர்சனமான நிஜம்.
சவியை மேஜையில் அமர்த்தி தோளில் கிடந்த டி-ஷர்ட்டை தலைவழியே போட்டுக் கொண்டு அருகே இருந்த பையில் இருந்து அவளுக்கென தான் வாங்கி வந்திருந்த உணவுப் பண்டங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் ஒவ்வொன்றாக அவன் எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருக்க அமர்ந்திருந்த குழந்தை வாய்கொள்ளாச் சிரிப்புடன் மின்னும் கண்களுடன் அமர்ந்த நிலையில் குதித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரின் ஆரவாரத்தையும் ஓரக் கண்ணால் பார்த்து மெல்ல சிரித்தபடி ராதவோடு இணைந்து சமையலறைக்குள் நுழைந்திருந்தாள் அஞ்சலி.
“என்ன செய்றீங்கம்மா.? நான் ஏதாவது ஹெல்ப் பண்றேன்…”
தேங்காயை எடுத்து உடைத்துக் கொண்டு இருந்தவரின் அருகில் வந்து நின்றாள்.
“இடியாப்பம்தான் செய்யப் போறேன் அஞ்சலி. என்னதான் இங்கே வந்தாலும் எங்க ஊர் உணவுப் பழக்கத்தை மாத்திக்க முடியல. குமரன் இந்தப் பக்க உணவுக்கு பழகிட்டான். எனக்கு இன்னும் எங்க ஊர் உணவுதான் செஞ்சு சாப்பிட பிடிக்குது. அவனுக்கும் இடியாப்பம் என்டா ரொம்ப பிடிக்கும்… அதையே செய்யறன்…”
“உங்க ஊர் சமையலை எனக்கும் சொல்லிக் கொடுங்க… நானும்தான் கத்துக்கிட்டா போகுது…”
தேங்காயை வாங்கி திருவியபடியே சொன்னாள் அஞ்சலி.
“அதிகமா கொத்து ரொட்டி, அப்பம், இடியாப்பம், புட்டு இதெல்லாம்தான் செய்வோம். தேங்காய் பால் நிறைய சேர்த்துவோம். அதிலும் சம்பல்னா கொள்ளை இஷ்டம் எங்க எல்லாருக்கும்…”
“அது என்னம்மா சம்பல்..?”
தேங்காய் சம்பல், வெங்காய சம்பல்னு ரெண்டு வகை இருக்கு செல்லம். வெங்காய சம்பல் நல்ல காரசாரமா இருக்கும். ரொட்டிக்கு தொட்டுக்கறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். அப்புறம் மீன் அதிகமா சேர்த்துவோம். கடல் உணவுகள் எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடித்தம்…”
தங்கள் ஊர் சமையல் பற்றி சிலாகித்து கூறிக் கொண்டிருந்தார் ராதா.
“சரி.. நீங்க சொல்ற சம்பல் ஒரு நாளைக்கு செஞ்சு கொடுங்க.. இப்போ என்ன பண்ணனும்னு சொல்லுங்க நானும் கூட ஹெல்ப் பண்றேன்… அப்புறம் இன்னொன்னும் சொல்லிடுறேன்… இன்னைக்கு மதியம் லஞ்ச் எங்க வீட்லதான். பிரியாணி பண்ணப் போறேன். அதுக்கு எல்லாமே ரெடி பண்ணி வச்சுட்டுதான் வந்தேன்…”
அவள் அழுத்தமாக கூற ராதா ஏதோ பதில் கூற வர வேகமாக அவரை இடைமறித்தவள் “எதுவும் பேசக்கூடாது… இங்க டிபன் வேலையை முடிச்சிட்டு நேரா நம்ம வீட்டுக்கு போறோம்… குரு இன்னும் அங்கே வரலை இல்லையா…” சிரிப்புடன் கூறியவளை தானும் புன்னகையுடன் பார்த்து வேலையில் இறங்கி இருந்தார் ராதா.
நடுக்கூடத்தில் படுத்தபடி சவியை நெஞ்சில் போட்டு ஏதேதோ மழலை பாஷைகளை அவளோடு சேர்ந்து பேசியபடி கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான் குரு. அனைத்தையும் காதில் வாங்கியபடியும் அவ்வப்போது கடைக்கண்ணால் பார்த்தபடியும்தான் சமையலறைக்குள் வேலையில் இருந்தாள் அஞ்சலி. அவன் கண்களிலும் முகத்திலும் தெரிந்த அந்த உயிர்ப்பும் புன்னகையும் அவளுக்கும் புன்னகையை வரவழைத்தன.
இப்படித்தானே அவன் மகளையும் நெஞ்சில் போட்டு தாலாட்டி சீராட்டி வளர்த்திருப்பான்… எத்தனை கனவுகள் இருந்திருக்கும்… அவனும் அவன் மனைவியும் குழந்தையும் என்று எப்படி ஒரு உலகத்தில் வாழ்ந்திருப்பார்கள்… ஒரு நொடியில் அத்தனையும் தவிடு பொடியாகி அவன் வாழ்வே தரைமட்டமாகிப் போன அந்த பொழுதுகளில் அவன் எப்படி எல்லாம் துடித்திருப்பான்… அதை கடந்து வருவது அத்தனை எளிதா என்ன..? இன்னும்கூட அந்த நெஞ்சுக்குள் பொறுக்குதட்டிப் போன புண் காயம் மாறாமல் இருந்து கொண்டுதானே இருக்கும். கடந்து வரக்கூடிய இழப்புகளா அவை..?
ஏனோ அவனை நினைக்கையில் நெஞ்சு இரங்கித் தவித்தது. அவளும்கூட வாழ்க்கையில் நிறைய இழந்தவள்தான். மகிழ்ச்சியை தொலைத்தவள்தான். இருபதே நாட்கள் கனவுபோல் நடத்தி முடித்த ஓர் இல்லற வாழ்க்கை. வாழ்வின் இல்லற சுகத்தை முழுதாக அனுபவிக்கும் முன் அது என்னவென்று முழுமையாக மனது உணரும் முன் கணவன் என்பவன் எங்கோ எட்டா தொலைவில் போய் அமர்ந்திருந்தான். அதன் பின்னான நாட்களில் எங்கோ தொலைதூரத்தில் இருந்து பேசுவான், சிரிப்பான், நலம் விசாரிப்பான். ஆனால் இதயம் ஒன்றி ஒருவரை ஒருவர் உயிருக்குள் பூட்டி வாழ்ந்தார்களா என்றால் பூஜ்ஜியம்தானே பதிலாக கண்முன் வருகிறது.
அவனை நினைத்தால் விரக்தியும் வேதனையும் மட்டும்தானே மனதில் அப்பிக் கொள்கிறது. நினைத்து நெஞ்சில் ஆழமாக பதித்துக் கொள்ள அழகான தருணங்கள் ஒன்றும் நினைவடக்குகளில் இல்லையே. அவற்றை அவளிடம் அவன் பதிக்கவும் இல்லையே.
ஒரு பக்கமாய் இதழ் வளைந்து கசந்த புன்னகை ஒன்று அவள் இதழ்களில் ஓடி நின்றது.
காலை உணவினை அனைவரும் உண்டு முடித்து கிட்டத்தட்ட இருவரையும் இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றிருந்தாள் அஞ்சலி.
அவளுக்கும் அவள் மகளுக்கும் போதுமான சிறிய அளவான அழகான வீட்டைத்தான் பார்த்திருந்தான் குரு. அந்த வீட்டினை கச்சிதமாக நேர்த்தியாக வைத்திருந்தாள் அஞ்சலி.
ராதாவின் உதவியுடன் மளமளவென சமையல் வேலையில் அஞ்சலி இறங்கியிருக்க, குருவும் சவியும் பொம்மைகளுக்கு மத்தியில் அமர்ந்து விளையாடத் தொடங்கி இருந்தனர். உணவு முடித்து அனைவரையும் அமர வைத்து ஆசையாக பரிமாறினாள் அஞ்சலி. குருவிற்கு பார்த்து பார்த்து பரிமாறினாள். அவன் விரும்பி உண்பதை விழிகள் சிரிக்கப் பார்த்தாள்.
ராதாவிற்கு ஞாயிறு மட்டும்தான் விடுமுறை. குரு வந்ததால் அன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். குருவை விட்டு சவி அகலவே இல்லை… அவனைத் தொற்றிக் கொண்டே கிடந்தாள்.
மாலை நேரத்தில் கையில் கூடையுடன் கடைக்குச் செல்வதற்காக கிளம்பி நின்றிருந்தாள் அஞ்சலி. குருவின் மடியில் படுத்தே உறங்கி இருந்தாள் சவி.
“அடுத்த வாரத்துக்கு கொஞ்சம் சாமானம் வேணும்… நான் கடைக்கு போயிட்டு வந்துடறேன்… சவி தூங்கிட்டா… அப்படியே பாத்துக்கோங்கம்மா…”
முன் திண்ணையில் அமர்ந்திருந்த ராதாவிடம் கூறிக்கொண்டு அவள் கிளம்ப சவியை தூக்கி பாயில் படுக்க வைத்து அவள் பின்னே தானும் நடந்தான் குரு.
“அஞ்சலி நில்லு…”
குரல் கேட்டு வேகமாக திரும்பினாள்.
“நானும் வரேன்…”
மறுப்பு ஏதும் சொல்லாமல் அவள் நடக்க அவனும் உடன் நடந்தான்.
சில வினாடிகள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
“நிறைய பணம் ராதாம்மா கையில குடுத்துட்டீங்க போல… வீட்டுக்கு எல்லாம் அவங்கதான் வாங்கி வச்சாங்க. எவ்வளவுன்னு கணக்கு வச்சுக்கோங்க… இந்த மாசம் சம்பளம் வாங்கினவுடனே கொடுத்துடறேன்…”
அவன் எந்த பதிலும் கூறவில்லை.
“இந்த ஊர் உனக்கு ஓகேதானே..? ஸ்கூல் அட்மாஸ்பியர் சரியா இருக்கா..? சமாளிக்க முடியும்தானே…”
வேறு மார்க்கமாக பேச்சை திருப்பி இருந்தான் குரு.
“வேலை எனக்கு பிடிச்ச வேலைதான்… இந்த ஊருக்கு என்னை பழக்கிப்பேன்… எப்படி இருந்தாலும் இனி சமாளிச்சுதானே ஆகணும். உண்மைய சொல்லணும்னா இப்பதான் நிம்மதியா மூச்சு விடுற மாதிரி ஃபீல் ஆகுது. ஆக்சிஜன் பற்றாக்குறைல வாழ்ந்த மாதிரிதான் என் சொந்த வீட்டிலேயே நான் வாழ்ந்திருக்கேன்…”
விரக்தியோடு சொன்னவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் குரு.
“இனி நான் என் பொண்ணு எங்க வாழ்க்கைன்னு நிம்மதியா வாழ்ந்திடுவேன். ராதாம்மா பெரிய ஆதரவா பக்கத்தில இருக்காங்க… கூடுதலா நீங்…” என்றவள் அதற்குமேல் பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கி இருந்தாள்.
“படிச்சும் முட்டாளாதான் நானும் இருந்திருக்கேன்…” கசப்பான புன்னகையுடன் சொன்னவளை பேசவிட்டு அமைதியாக உடன் நடந்தான் குரு.
“மாப்பிள்ளை வெளிநாட்டுல வேலையில இருக்கான்… பாக்க லட்சணமா இருக்கான்… நிறைய சம்பாதிக்கிறான்… நாமளும் வெளிநாட்டுக்கு போயிடலாம்… இப்படி லூசுத்தனமா பட்டாம்பூச்சி கனவு மட்டும்தான் அந்த வயசுல என் கண்ல இருந்திருக்கு. வேற எதையும் தெளிவா ஆராயல… ஆராயவும் தெரியல போல. அப்படியே வளர்ந்துட்டேனோ என்னவோ.
மொத்தமே 20 நாள் வாழ்க்கைதான்… கனவு மாதிரி… யோசிச்சாகூட என் மூளையில அதெல்லாம் இப்போ நிக்கல. வேலை விஷயமா தூரத்தில் இருக்கிறான்னு நினைச்சேன்… ஆனா மனசளவுலயும் அவன் என்னை விட்டு தூரமாதான் இருந்திருக்கான்…”
வேதனையோடு சொன்னவளை பட்டென திரும்பி அழுத்தமாகப் பார்த்தான் குரு.
“அதே ஊர்ல அவன் கூட வேலை பார்த்த வேற ஒரு பொண்ணு கூட அவனுக்கு காண்டாக்ட் இருந்திருக்கு. லவ் பண்ணினாங்களா… லிவிங் டுகெதரா இருந்தாங்களா… அதெல்லாம் எனக்கு தெரியாது. இன்னொரு பொண்ணுகூட தொடர்பு வச்சுக்கிட்டுதான் என்னையும் கல்யாணம் பண்ணி இருக்கான். அப்ப அவன் என்ன மாதிரியான மனுஷனா இருந்திருப்பான்..? காதலையும் கல்யாணத்தையும் எப்படி நினைச்சிருப்பான்னு எனக்கு புரியல…”
“ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டான்னு ஒரு விஷயம்தான் முதல்ல தெரியும்… ரெண்டாவது என் தலையில விழுந்த இடி தண்ணி போட்டு ட்ரைவ் பண்ணினதால ஆக்சிடென்ட் ஆயிடுச்சு… மூனாவது இடி அந்த பொண்ணுகூட ஏதோ பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு ரெண்டு பேரும் முழு போதையில கார் ஓட்டிட்டு வரும்போது ஆக்சிடென்ட் நடந்திருக்கு… அப்போதான் வேற பொண்ணுகூட அவன் தொடர்புல இருந்த விஷயமும் எனக்கு தெரிய வந்தது. இதெல்லாம் ஒவ்வொன்னா என் காதுக்கு வரும்போது என் வாழ்க்கை மொத்தமா முடிஞ்சு போயிருந்தது. சவி என் வயித்துல முழு உருவமா உருவாயிட்டா. தப்பான ஒருத்தனுக்குதான் 20 நாள் பொண்டாட்டியா வாழ்ந்திருக்கேன். அதுக்கு மறக்கவே முடியாம ஒரு பரிசையும் கொடுத்துட்டு போயிட்டான். ஆனா சவி என் பொண்ணு… என் ரத்தம்… இனி நான் வாழ்றதுக்கு அவ மட்டும்தானே ஆதாரமா இருக்க முடியும்.
“இந்த வலி பத்தாதுன்னு அவன் குடும்பத்தை சேர்ந்தவங்க எப்படி எல்லாம் என்னை டார்ச்சர் பண்ணாங்க தெரியுமா..? அசோக் கேடுகெட்டவன்னா அதைவிட கேடு கெட்டவன் அருண். அவனுக்கும் எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. அவன் பண்ற தப்பை எல்லாம் சகிச்சுப் போற ஒருத்தியதான் கல்யாணம் பண்ணிக்க முடியும்னுதான் அண்ணன் பொண்டாட்டியையே கல்யாணம் பண்ணிக்க தியாகி மாதிரி வந்து நின்னான். காலம்பூரா வாயே திறக்காம புள்ளப்பூச்சியா என்னை வச்சிருக்கணும்னு எண்ணம். அதை எல்லாம் தாண்டி அவன் அண்ணன் பேர்ல இருக்கிற பணம் அச்சு குலையாம அவன் கைக்கு போகணும். சரியா விசாரிக்காம என் வாழ்க்கையை என் குடும்பத்து ஆளுங்க அழிச்சிட்டாங்க… இனிமேலாவது அதை சரி பண்ணலேன்னாலும் திரும்பவும் என்னை அந்த சாக்கடையில தள்ளாமல இருக்கணும்னு நினைச்சிருக்கணும்.
“ஆனா அவங்களும் என்னை பாரமா நினைச்சதாலதானே திரும்பவும் அந்த குடும்பத்துல என்னை தள்ளிடணும்னு நினைச்சுட்டாங்க… எல்லாருக்கும் நான் பாரமா தெரிஞ்சுட்டேன். இவனை விட்டா உனக்கு வேற கதியே இல்ல… கிடைக்கிற வாழ்க்கையை ஏத்துக்கிட்டு வாழ்ந்துடுன்னு சொல்றாங்கன்னா என் உணர்வுகள் என்னுடைய மனசு இதுக்கெல்லாம் மதிப்பே இல்லையா..? அந்த அளவுக்கு வாழ தகுதியே இல்லாதவளா போயிட்டேனா நான்…”
குரல் உடைந்து கூறியவள் தன்னையும் மீறி அழ இறுகிக் கிடந்தவனின் இதயம் அவளுக்காக களிமண்ணாய் கரைந்தது.
(தொடரும்)
error: Content is protected !!