Skip to content
Post Views: 6,774
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 13
கடந்த கால வாழ்க்கையின் நினைவுகள் நெஞ்சில் நெருப்பு வைத்தது போல தகதகவென்று எரிந்தது மீனாவுக்கு…
இவள் வேண்டாம் என்று வந்ததும்.. அப்படி ஒன்றும் மனைவி, மக்களை விட்டு விடும் ஆள் ஜெகன் கிடையாது என்று அவளுக்கு தெரியும். அதனால் தான் உயிரை காட்டி மிரட்டி விட்டு வந்தாள். முழுதாக ஒதுங்கா விட்டாலும், ஓரளவு தற்போது போல தள்ளி நிற்பான். அதன் தொட்டு பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்து விட்டால் போதும், அவர்களே தந்தை என்ற ஒருவன் வேண்டாம் என்று விடுவார்கள். வாழ்க்கை ஓடி விடும் என்று நினைத்தாள். ஆனால், பெற்ற மகளுக்கு தந்தையை தெரிந்து இருக்கிறது. தனக்கு பயந்து தான் தள்ளி நின்று இருக்கிறாள்.
Advertisement
இது போதுமே ஜெகனுக்கு… மனைவி என்ற ஒருத்தியை என்று மதித்தான். மனதில் மெல்ல ஒரு ஏக்கம் எட்டி பார்க்க, அதை உதறி விட்டு எழுந்து போய் முகம் கழுவினாள். மற்ற பிள்ளைகள் இருவரும் நல்ல உறக்கத்தில் இருக்க, தலையை தளர பின்னினாள். அவளுக்கு முன்பிருந்தே இரவு நேரத்தில் முடியை தளர பின்னி விடுவாள்.
அப்போது தான் உறங்கிய மகளை தூக்கி கொண்டு ஜெகன் இறங்கினான். ஒரே நாளில் எல்லாம் மாறாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். மகளின் ஏக்கம் அறிந்த பின் முன் போல தள்ளி நிற்க கூடாது. மீனா, குழந்தைகளுக்காக என்று கணவனை ஒதுக்கினாள். இவன் குழந்தைகளை வைத்து மனைவியை நெருங்க நினைத்தான்.
மருமகனை பார்த்ததும் வேகமாக எழுந்த பரமு, உள்ளே போக வழி விட்டு தள்ளி சென்றார்.
Advertisement
இது என்னடா!… நான் எப்படி நேராக மீனாவை அணுக முடியும். கன்னி வெடியில் கால் வைப்பதற்கு சமம் அல்லவா!… யோசனையாக, கொஞ்சம் ஆசையாக தான் ஜெகன் உள்ளே சென்றான். அவள் சமைக்கும் இடம் தாண்டி உள்ளே சென்றான். இதுவரை அதை தாண்டி சென்றதில்லை.
Advertisement
முதல் அறை நுழைந்ததும் ஒரு மேசையில் பிள்ளைகள் துணி மடித்து வைக்க பட்டு இருந்தது. ஜெகன் முகத்தில் நினைவு.. அப்போதும் மீனா அப்படித்தான். பிள்ளைகள் துணியை கண் படும் இடத்தில் வைத்து இருப்பாள்.
“தினமும் போடுற உடுப்பை கைக்கெட்டுற தூரத்துல வச்சா தான் மாமா எடுக்க வசதியா இருக்கு. உன் பிள்ளைக ஒரு நாளைக்கு நாலு மாத்துதுக” என்று சந்தோஷமாகவே அழுத்து கொள்வாள்.
ஒரு பெருமூச்சு விட்டு உள்ளே பார்க்க, மெத்தையில் பிள்ளைகள் உறங்கி இருந்தார்கள். முகம் கனிய தமிழை அவர்களோடு படுக்க வைத்து நிமிர்ந்தவன் கண்டதும் தலையை பின்னும் மனைவியை தான்.
Advertisement
முன்பும் மீனா அப்படி தானே.. அப்போதெல்லாம் அவள் கையை தூக்கி முடியை பின்ன, கீழே தெரிந்த இடுப்பு இடைவெளியில் கை விட்டு நெருட, தள்ளி குதிப்பாள்.
“மாமா” என்ற அவள் செல்ல சினுங்களும்.. அதை தொடர்ந்த ஜெகனின் அழுத்தமும் இருவரையும் எங்கெங்கோ அழைத்து செல்லும்… மனம் பெரிதாக தடுமாற சுணங்கிய முகத்தோடு மனைவியை பார்க்க,
கண்ணில் நெருப்பு கக்க அவனை பார்த்தாள். பழைய ரணங்களை மனம் நினைத்து பார்த்திருக்க, நெஞ்சம் இருந்தது. தன் மனதை போல, இவனையும் நடு வீட்டில் போட்டு எரித்தால் என்ன?…
மனைவியின் முகத்தை பார்த்தே எண்ணத்தை ஊகித்தவன், தெரித்து ஓடி வந்தான். அன்று இரவு அவனுக்கு உறக்கமே வர வில்லை. நீண்ட நாள் சென்ற மனைவியின் நெருங்கிய வாசம், அவனை இம்சை செய்தது.
“சோப்பை கூட மாற்ற வில்லை போல, அதே சந்தன வாசம்…” குப்பற படுத்து கொண்டு புலம்பினான்.
என்னவோ இத்தனை நாட்கள் இல்லாத ஏக்கம். இன்று நிறைய மனைவியின் நியாபகம். அந்த அறையை விட்டு வெளியே வரவே மனதில்லை. என்ன தான் கண்ணெதிரே தன் குடும்பத்தை வைத்து கொண்டாலும், அவர்களோடு கலக்க முடியவில்லையே…
எவ்வளவு நேரம் புரண்டாலும் உறக்கம் கிஞ்சித்தும் வரவில்லை. எழுந்து வெட்ட வெளியில் நடக்க ஆரம்பித்து விட்டான். கீழே பார்க்க மீனா வீட்டின் நடமாட்டம் அடங்கியது.
நமக்கு மட்டும் தான் இவள் நினைப்போ.. என்னை போல தானே தள்ளி நிற்கிறாள். அவளுக்கு, கணவன் என்ற ஒருவனின் நினைப்பு அண்டாதா? தனக்கு மட்டும் ஏன்? மனதின் தேவையா? உடலின் தேவையா? ஏதோ ஒன்று அமைதி இழந்து நின்றான்.
கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய வேண்டும் என்று நினைத்தவன். விலகி இருக்க முடியாமல் தவிக்கிறான். கையெட்டும் தூரத்தில் மனைவி, பிள்ளைகள் இருக்க, உறவாட முடியவில்லையே என்ற ஆதங்கம் நெஞ்சு நிறைய இருந்தது.
என்னை விட அதிகமாக காதலித்தாளே… அன்னியோன்ய வாழ்க்கை, மூன்று பிள்ளைகள் எப்படி அவளால் என்னை கடக்க முடிந்தது. எவ்வளவு சண்டையிலும் அவனுக்கான சாப்பாடு இருக்கும், அவனின் துணிகள் துவைத்து இருக்கும். அலுப்பில் அசந்து உறங்கினாலும் அவனுக்கான போர்வையும், தலையணையும் இருக்கும்.
இன்று நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாள். வண்டி சத்ததுக்கே வாசல் வந்து நிற்பவள், அவள் பார்வைக்கு தவம் கிடந்தாலும் கண்டு கொள்ளவில்லை. அப்படி என்ன பெண்ணுக்கு வைராக்கியம். என்னைப் போல தேடல், ஏக்கம் எல்லாம் எதுவும் இல்லையா? அவள் மனம் என்ன இரும்பா?…
இரும்பா?.. யார் சொன்னது?.. அன்பு, காதல், அரவணைப்பு, தாம்பத்திய சுகம் வரை இருவருக்கும் பொது தானே.. ஒரு பெண்ணுக்கு ஏக்கம் இருக்காதா? ஏதோ ஒரு இடத்தில் உடைந்து நிற்கும் போது மனம் சிறு அரவணைப்பை, அன்பை எதிர் பார்க்காத என்ன?.. எத்தனையோ இரவுகளை தனிமையில் கடக்கையில் ஏதோ ஒரு இரவிலாவது தன் துனைக்கான ஏக்கம், என்றோ அனுபவித்த தாம்பத்திய உறவை பற்றிய ஏக்கம் இல்லாமலா இருக்கும்..
ஆனால், அதுவா பெண்மைக்கு இலக்கணம் என்று கேட்கும் சமூகத்தில் அல்லவா நாம் இருக்கிறோம். கணவனோடு வாழ்ந்து இரண்டு பிள்ளை பெத்தாச்சு. இனி என்ன குடும்ப வாழ்க்கை?.. உன் தலையெழுத்து என்ன செய்ய? பிள்ளைகளை வளர்த்து சுகப்படு என்று சமூக கட்டமைப்பு நம்மோடது…
ஒரு ஆண் எவ்வாறு தனியாக வாழ்வான் என்று கேட்கும் சமூகம், பெண்ணை குறித்து என்ன கேட்கும்?… உன்னை இரும்பாக மாற்றி கொள், அது தான் உனக்கான புகழ் என்கிறார்கள்.
மீனாவும் தன்னை இரும்பாக்கி கொண்டாள். எளிதில் உடைந்து விடாமல், வளைந்து விடாமலும் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாகி போனாள். அவள் பெற்ற பிள்ளைகளுக்காக தன் உணர்வுகளை கோபத்தின் பின் மறைத்து, வைராக்கியத்தோடு வாழ கற்று கொண்டாள். எளிதில் உருக்க முடியாது என்பதை ஜெகன் உணர வில்லை.
எப்போதும் போல மீனா எழுந்து தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள். நேற்றைய கோபம், வலி, ஆற்றாமை எதுவும் அவள் முகத்தில் இல்லை. பரமு கூட மகளை ஆச்சர்யமாக பார்த்தார். உணர்வுகளை மறைக்க கற்று கொண்டால் போதும் வாழ்க்கையை ஓட்டி விடலாம். அடுத்தவர்கள் கணிப்பில் நாம் அடங்கி விட கூடாது.
காலை இட்லி ஆவி பறக்க இறக்கி வைக்க, வடைக்கு மாவு ஓடி கொண்டிருந்தது. எப்பவும் போல சாப்பாடு கடை ஆரம்பமாகவும், ஜன கூட்டம் வர தொடங்கியது. எல்லாம் சரியாக நடந்தாலும், அனைவரின் பார்வையும் என்னவோ பேசி கொண்டது. மற்றவர்களின் குறுகுறு பார்வையையும் அசராமல் எதிர் கொண்டாள் மீனா. ஜெகன் இன்னும் வர வில்லை.
விமலா கொஞ்சம் தாமதமாக தான் வந்தாள். அவளுக்கு எதுவும் வருத்தம் இருக்குமோ என்று மீனா பார்க்க, விமலா பார்வை ஆராய்ச்சியாக, குற்றம் சாட்டும் விதத்தில் இருந்தது.
அதற்கு தான் என்ன செய்ய முடியும். இங்கு என் வாழ்க்கையே போராட்டமாக இருக்கையில்.. மெளனமாக வேலைகள் நடந்தது. மீனா ஒரு பக்கம் வடையை தட்டி போட்டு சூடாக எடுத்து கொண்டிருக்க, ஜெகன் வேக நடையில் இறங்கி வந்தான். பிஸ்தா நிற சட்டை அணிந்திருக்க, அவன் கலருக்கு மிக பொருத்தமாக இருந்தது.
நல்ல அழகன் தான். முன்பு கொஞ்சம் கஷ்ட படும் காலத்தில் கலர் மங்கி என்னவோ போல இருப்பான். இப்போது முதலாளி வர்க்கம். அந்த செழிப்பு அவனில் நன்றாக தெரிந்தது. கீழே இறங்கி வந்த ஜெகன், மனைவியை ஒரு பார்வை பார்த்தான். மேற்கொண்டு பேசவெல்லாம் முயற்சிக்கவில்லை. அவனுக்கு தெரியும் எல்லோர் பார்வையும் தங்களை சுற்றித்தான் என்று…
தன் மக்களைப் பார்க்கும் ஆர்வம் வர, மிக சகஜமாக வீட்டிற்குள் சென்றான். அங்கு அமர்ந்து தான் மீனா வடையை தட்டி போட்டாள். அவளை கடந்து தான் சென்றான்.
என்ன தைரியம்!.. முழுசா நனைந்த பின் முக்காடு எதற்கு என்று நினைக்கிறான் போல.. மானங்கெட்டவன். கையில் கரண்டி சூடாக இருந்தது. பேசாமல் நாலு இழு இழுத்து விடுவோமா என்று யோசித்தாள் மீனா.
ஜெகன் பிள்ளைகளை பார்க்க, நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். மகன் எசகு பிசக்காக படுத்திருக்க, நன்றாக படுக்க வைத்தான். “தமிழுக்கு, பள்ளிக்கு நேரமாச்சே. இன்னும் ஏன் மீனா பிள்ளையை எழுப்ப வில்லை” யோசனையாக வெளியே வந்தவன், தன் ஆஸ்தான சேரில் அமர்ந்து கொண்டான்.
முன்பு ஜெகன் வந்தாலே பரபரப்பாக இயங்கும் விமலா கண்டு கொள்ளாதது போல இருக்க.. ஒரு பெருமூச்சு விட்டு மீனா தான் அவனுக்கு உணவை வைத்தாள்.
பரமு என்னவோ மருமகனிடம் பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் ரொம்ப மரியாதை கொடுத்து கொள்ள மாட்டார்கள். இன்றும் கூட அப்படித்தான். எளிதாக மாப்பிள்ளை என்ற வார்த்தை வர வில்லை. ஆனால், சகஜமான சில வார்த்தைகள் பேசினார்கள்.
ஜெகன், தற்போது பிறந்திருக்கும் பேத்தி பற்றி விசாரித்து கொண்டான். ஆம், அதுவேற அடுத்தொரு குடைச்சல் மீனாவுக்கு… அண்ணன் பிள்ளை தான். இன்னும் போய் பார்க்க வில்லை மீனா. ஒரே ஊரில் இருந்து கொண்டு பார்க்காமல் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.
ஆனால், தயக்கம் மீனாவுக்கு.. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு அப்புறம் ஆசைப்பட்டு பெண் பிள்ளை பெற்றுக் கொள்கிறார்கள். சொந்த தங்கையாக இருந்தாலும் மீனா ஒரு வாழாவெட்டி. ஆம், அப்படி தான் சொல்கிறார்கள். நாம் போய் அண்ணன் பிள்ளை என்ற ஆசையில் தூக்க, யாரும் எதுவும் சொல்ல விட்டாள். சொல்ல மாட்டார்கள் என்றெல்லாம் கிடையாது. அதெல்லாம் நேரடியாக கூட சொல்வார்கள். முன்பு கணவனோடு சேர்ந்து இருந்த பொழுதும் வம்சியாக பிழைக்கவில்லையே.
இதை பரமு கொள்ளவில்லை. அவருக்கு அண்ணன் பிள்ளையை கூட பார்க்க வராமல் இவளுக்கு என்ன அப்படி வீம்பு என்று கோவம். நேற்று இருந்தே வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு மனதாக இருந்தாள் மீனா. ஆண்களுக்கு இந்த மாதிரி எந்த சங்கடங்களும் இல்லை. ஏன் ஜெகன் கூட குழந்தையை பார்க்கத்தான் பரமுவிடம் விசாரிக்கிறான்.
மீனாவுக்கு தயக்கமாக இருந்தது. போகாமல் இருந்தாலும் அண்ணனை சங்கடப்படுத்துவது போல் ஆகும். பிறந்த குழந்தையை கூட பார்க்க வராமல் அவ்வளவு திண்ணக்கமாக இருந்து கொண்டாள் என்று பேசுவார்கள். சரி, தன் அண்ணன் மகள் தானே என்று போனால், அப்படி என்ன வம்சையாக பிழைத்து விட்டாள் என்று பிள்ளையை தூக்க இவள் வந்து விட்டாள் என்றும் பேசுவார்கள்.
மனம் என்னென்னமோ யோசிக்க, கை வேலையை கச்சிதமாக முடித்தது. பெரிய மகளையும், மகனையும் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பியவள். மருத்துவமனைக்கு செல்ல உணவை தயார் செய்தாள்.
ஐந்தாம் மாதம் நாத்தனார் வளையல் போட கூட இவளுக்கு சொல்லவில்லை. நூறு சாஸ்திரம் பார்ப்பார்கள். சரி போய் தன் கடமையை செய்து விட்டு வருவோம். இதைவிட எல்லாம் பெரிய அவமானங்களை தாண்டியாச்சு…
சாப்பாட்டு கூடையை மீனா எடுத்துக் கொள்ள பேத்தியை பரமு தூக்கிக் கொண்டார். இரண்டரை வயது கனி, அடுத்த வருடம் பள்ளி செல்ல வேண்டும். ரொம்ப தூரம் பரமுவால் பேத்தியை தூக்கி கொண்டு நடக்க முடிய வில்லை. மூச்சு வாங்கியது.
“அம்மா, அவளை இறக்கி விடு.. கொஞ்ச தூரம் தானே, நடந்து வருவா.. நீ, ஏன் மூச்சு வாங்க தூக்கி நடக்குற” என்று அதட்டி, மலர் கனியை நடக்க விட்டாள்.
மூவரும் மெல்ல நடந்து போக, பெரியவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தத்தக்கா பித்தாக்கா என்று கனி நடப்பது சிரிப்பை கொடுத்தது. பேசாமல் ஒரு ஆட்டோ பிடிப்போம் என்று மீனா ரோட்டை எட்டி பார்க்க..
தன் வண்டியில் வந்து கொண்டிருந்தான் ஜெகன். மீனா கண்டுகொள்ளாதது போல் இருக்க,
“ஹாஸ்பிடலுக்கு தானே, ரொம்ப வெயிலா இருக்கு பாப்பாவ நான் தூக்கிட்டு போறேன் அத்தை” என்றான் ஜெகன்.
“சரிங்க தம்பி”
“அம்மா” என்று மீனா அதட்ட,
“ஏய்! போடி..” என்றவர்,
“கனியம்மா, அப்பா கூட குட்டி பாப்பாவை பார்க்க போங்க” மகளின் முறைப்பை கணக்கில் கொள்ளாமல் மருமகனோடு பேத்தியை அனுப்பி வைத்தார்.
எதுவும் பேச முடியாமல் நின்றாள் மீனா. ஏதாவது எடுத்தால் தாய் அவர் பாட்டுக்கு கத்த தொடங்கி விடுவார். ஜெகன் முன்பு அவமானமாகி போகும். வாய் மூடி கொண்டாள்.
ஜெகன் வண்டியில் இருந்த துண்டை எடுத்து மகள் தலையில் போர்த்தி விட்டான். வெயில் அடிக்கிறதாம். வண்டியில் செல்வது பிள்ளைக்கு ஒரே குஷி… மகளை அழைத்து கொண்டு செல்லும் அவனை பார்த்ததும், தன் தந்தையின் நினைவு நெஞ்சில் முட்டியது.
மீனா இதைவிட செல்லமாக வளர்ந்தவள். பள்ளி, கல்லூரி என்று எங்கும் நடந்து சென்று பழக்கப்படாதவள். வீட்டில் அப்பா மூன்று அண்ணன்கள் என்று இருக்க யாராவது ஒருவர் தங்கள் வேலையை குறைத்து கூட மீனாவை அழைத்துச் சென்று கூட்டி வரும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். பக்கத்து தெருவுக்கு சென்றால் கூட தூரல் விழுந்தால் மீனாவின் தந்தை கொடையை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். ஒற்றை மகள் நனைந்து விட கூடாதாம். அந்த தந்தை மட்டும் உயிரோடு இருந்தால் இவ்வளவு பாடு இவளுக்கு கிடையாது. தந்தை நினைவில் கண் கலங்கியது.
மெதுவாக நடந்து பிறந்த குழந்தைக்கு உடை, பழங்கள் என்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள்.
“வா, மீனா” என்றான் அண்ணன். ஒரு தலையசை போடு மெல்லிய சிரிப்பு அவளிடம்..
“வா.. வா.. மீனா. வந்து உன் மருமகளை பாரு.. எங்க புகழ, அவனை கட்டிக்க பொண்ணு வந்தாச்சு” என்று சந்தோசமாக சொன்னாள் அண்ணி வானதி.
பரமு, பேத்தியை தூக்கி மகள் கையில் கொடுக்க, ஆசையாக வாங்கி பார்த்தாள் அண்ணன் மகளை…
“மூக்கு, காது எல்லாம் அப்படியே மீனா மாதிரி” என்றாள் வானதி.
மீனாவுக்கு சிரித்துக் கொள்வதை தவிர வேற வழியில்லை. ஏதோ நினைவு, அப்போதுதான் ஜெகனை குறை சொல்லி போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போய் தன் தாயோடு இரண்டு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டாள். ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஜெகன் தன் மனைவி மக்களை பார்க்க வரவில்லை.
மீனாவுக்கு அவன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முடித்துக் கொண்டு வரட்டும் என்று எண்ணம் தான். ஒரு நாளும் கணவன் வழி மாறி போவான் என்றெல்லாம் அவள் நினைக்கவே கிடையாது. நன்றாக தெரியும் மீனாவை தவிர வேறு யாரும் நினைவில் கூட ஜெகனுக்கு இருக்க மாட்டார்கள் என்று…
ஆனால், சுற்றம் அவ்வாறு நினைக்கவில்லை. மீனா இரண்டு பிள்ளைகளோடு தாய் வீடு வந்தது. ஜெகன் வந்து எட்டியும் பார்க்காமல் இருப்பது எல்லாம், “ஊருபட்ட கடன். எதையும் சமாளிக்க முடியாம பொண்டாட்டி பிள்ளையை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜெகன் ஊரை விட்டு ஓடி போயிட்டானாம்”
இப்படி ஒரு பேச்சு அந்த ஊரில் உலாவ, மீனாவுக்கு எதுவும் தெரியவில்லை. அப்போதெல்லாம் தமிழ் மட்டும்தான் துருதுருவென்று ஓடும் பெண். புகழ் கைக்குள் தான் இருப்பான். தன் அண்ணன் வீட்டில் தான் தமிழை விட்டிருப்பாள்.
ஏதோ அவர்கள் சாப்பிடும் நேரம் மகளை அழைக்க மீனா செல்ல,
“வா, மீனா” என்ற அர்ச்சுனன்,
“வானதி.. மீனா வந்திருக்கு பாரு. அதுக்கும் மூணு தோசையை போடு” என்றதும்..
மீனா பிகுவெல்லாம் பண்ணவில்லை. தன் அண்ணன் வீடு தானே. மகனை மடியில் வைத்து மகளை பக்கத்தில் அமர்த்தி சாப்பிட அமர்ந்தாள்.
தட்டை வைத்து முதல் தோசையை வைத்தவள், உள்ளே சென்றாள். மீனா பிள்ளைகளுக்கு ஊட்டி கொண்டிருக்க, அடுத்தடுத்து இரண்டு தோசை வந்தது. பிள்ளைகளுக்கு ஊட்டி முடித்து காலி தட்டை வைத்து கொண்டு மீனா அமர்ந்திருக்க, வானதி மூன்று தோசைகளோடு அடுப்பை அணைத்து வெளியே சென்றவள்..
“நான் வெளிய நிக்கிறேன் மீனா. தட்ட ஜிங்க்ல போட்டு நீ கழுவி வைக்க வேணாம்” என்று கடந்து போய் விட்டாள்.
மீனாவுக்கு அதிர்ச்சி.. என்ன இது நான் இன்னும் சாப்பிடலையே? இவர் பேசுவதன் அர்த்தம் என்ன?.. நாத்தனாரை கவனித்தாச்சு. சாப்பிட்ட தட்டை கூட கழுவி வைக்க விடாத அளவுக்கு நல்ல கவனிப்பு.
மீனா ஒன்றும் சொல்லாமல் வெளியே வர, வானதி கணவனிடம்,
“மீனாவுக்கும் பிள்ளைகளுக்கும் நானே சாப்பாடு கொடுத்துட்டேன்” என்றவள்,
“பிளேட்டை சிங்கில் போட்டு தானே வந்த.. அப்புறமா பாத்திரத்தை எல்லாம் நானே கழுவிக்கிறேன்” என்றாள்.
மீனா ஒன்றும் சொல்லவில்லை. என்ன சொல்ல முடியும். நீ கொடுத்த உணவு போதவில்லை என்றா.. அப்போதுதான் குடும்பத்தின் சூட்சமங்களை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்தாள்.
சொந்த பந்தங்கள் உடன் பிறந்தவர்களின் வித்தியாசமான நடத்தையே திரும்பவும் கணவனோடு அவளை சேர தூண்டிவிட்டது.
சாப்பாட்டுக்கே கணக்குப் பார்த்த வானதி, இன்று சகஜமாக பிறந்த மகளை வைத்து சம்பந்தம் பேசுகிறாள். என்ன சொல்ல? நாமளும் சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஜெகன் தம்பி வந்தாரு மீனா. மலர் பாப்பா அவர் கையில தான் இருந்துச்சு. குட்டி பாப்பாவுக்கு தங்க செயின் எடுத்துட்டு வந்தாங்க.. டிரஸ் எல்லாம் நீங்க பின்னாடி கொண்டு வர்றீங்கன்னு சொன்னாரு.. இதோ, பாப்பா கழுத்துல இருக்குற ஜெயின் தான். நல்ல இருக்குல்ல, நீயும் போய் எடுத்தையா?” எதுவுமே நடக்காத மாதிரி மிக சகஜமான பேச்சு வானத்திடம்..
மீனாவுக்கு தான் பேச தெரிய வில்லை. அண்ணன் மகளின் கழுத்தை பார்த்தாள்.
“உனக்கு ஒன்னுக்கு மூணு பிள்ளை பெத்தேனே எனக்கெல்லாம் என்ன கழட்டுனானாம். பணம்.. அது தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்த வசதி வாய்ப்பு இழந்து விடாதே என்று தானே தாய் கூட நடந்த அனைத்தும் தெரிந்தும் ஜெகனோடு திரும்ப குடும்பம் நடத்த சொல்கிறார். உடன் பிறந்த உறவாக இருந்தாலும் என்ன மரியாதை. வசதி வாய்ப்பு எங்கு இருக்கோ அதுதான் சொந்தம். இவர்களோடு எல்லாம் மீனா தன்மானத்தோடு வாழ முடியுமே தவிர ஜெயிக்க முடியாது. தன் நாத்தனாரை எப்படி உதாசீனப்படுத்தினோம் என்பதையே மறந்து விட்டு, எதுவும் நடக்காதது போல சிரித்து எவ்வாறு பேச முடிகிறது”
இவர்களுக்கு மூத்த மகன் வருணன் இருக்கிறான். தமிழ் குட்டிக்கு அவன் என்றால் மிகப் பிரியம். குட்டி பாப்பா என்று தூக்கி கொண்டே சுற்றுவான். தமிழும் வருமாமா என்று அவன் பின்னரே ஓடி திரிவாள்.
“மீனா, உன் மகன் என்ன மாமான்னு சொல்லி பழகுது”
“ஏன் அண்ணி. உறவுமுறை அது தானே”
“அதெல்லாம் வேணாம் மீனா.அண்ணன்னு சொல்லிக் கொடு.. பின்னாடி யாருக்கு என்னவோ?.. இப்பவே எதுக்கு மாமான்னு எல்லாம் சொல்லி பழகணும். அது சரியா இருக்காது” என்றவர், அதே சின்ன பிள்ளைகளுக்கு விளையாட்டாக கூட சம்மந்தம் பேசுகிறார்.
அண்ணனாக இருந்தாலும் இவர்கள் வீட்டில் சம்பந்தம் பண்ணிட்டாலும்.. மனதில் நினைத்துக் கொண்டவள் வெளியில் வானதி பேசும் எல்லாவற்றுக்கும் சிரித்த முகமாகவே தலையாட்டினாள். பரமுக்கும் எல்லாம் தெரியும்.
என்ன பண்ண, விதி? ஒரு நேரம் எல்லாருக்கும் தான் கஷ்டம் வரும். இப்போது நன்றாக தானே இருக்கிறான். சேர்ந்து வாழ்ந்தால் என்ன? இந்த சொகுசு சொந்தம் எல்லாம் உன் பிள்ளைகளுக்கு தானே..
ஆனால், மீனாவுக்கு மனதில் அது இல்லை. பணத்தைப் பார்த்து உறவு வேண்டாம். தள்ளியே நிற்கட்டும். குடும்பத்து ஆண்களை வைத்து தான் ஒரு பெண்ணுக்கான மரியாதையா அந்த சமூகத்தில்… அன்றும் கணவன் சரியில்லை என்று தான் மீனா மற்ற உறவுகளுகுள் உதாசீனப்படுத்தப்பட்டாள். இன்று அதே கணவனால் தான் மதிப்பும், மரியாதையும். அப்போ நான்? என் வைராக்கியம்?.. நான் விட்ட கண்ணீருக்கு யாரிடம் நியாயம் கேட்பேன். தாயின் மனம் புரிந்தாலும், மனதில் ஏற்பட்ட வடு ஆற வில்லையே…
இந்த ஜெகன் நன்றாக இருக்கிறான். வசதியாக இருக்கிறான். சேர்ந்து இருக்கிறார்களோ? பிரிந்து இருக்கிறார்களோ? அது பிரச்சனை இல்லை. வசதியான ஜெகனின் வாரிசு இவர்கள்… அதனால், உரிமையாக சொந்த பந்தங்கள் பேசுகிறது.
ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்ட போது வந்து நின்றிருந்தால், அது சொந்தம். இது எதற்கு? வெறும் பகட்டு…
எதுவும் பேசாமல் முகத்தில் வேறுபாடும் காட்டாமல் அண்ணன் மகளை பார்த்துவிட்டு மீனா வெளியேற, தன் மகளோடு வந்து விட்டான் ஜெகன். மீனா பிள்ளைக்கு கை நீட்டினாள்.
கொஞ்சம் தயங்கி, “மீனா கொஞ்சம் பேசலாமே?”
அவள் மெளனமாக பார்க்க.. பார்வையில் இருந்து அழுத்தத்தில் தயங்கினான் ஜெகன்.
“மீனா, பிளீஸ்.. நம்ம பசங்களுக்காக பழசை கடந்து வருவோம்” என்று ஆரம்பிக்க,
“கஷ்டப்பட்டு போராடி ஒரு இடத்துல நிலையா கால ஊனி நிக்கும் போது, அதற்க்கு மேல இருக்கும் தொடை சிதைந்து போன எப்படி இருக்கும்” என்று மீனா அழுத்தமாக கேட்க.
கற்பனையே ஜெகனுக்கு நடுக்கத்தை கொடுக்க, இயலாமை முகத்தில்,
“மீனா…”
“என்னால அந்த வலியை என்னைக்கும் கடக்கவோ மறக்கவோ முடியாது” என்றவள், வெடுக்கென்று அவனிடமிருந்து பிள்ளையை புடிங்கிக்கொண்டு தாயைக் கூட எதிர்பார்க்காமல் நடைபோடு தொடங்கி விட்டாள்.
error: Content is protected !!