Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…16

தூறல் – 16
ராமேஸ்வரத்தின் அரியமான் கடற்கரை. 


Advertisement

அமைதியான, அலையில்லாத நீர் கொண்ட சுத்தமான கடற்கரை. அவர்களது வசிப்பிடத்திலிருந்து அருகாமையில் உள்ள கடற்கரை என்பதால் குருவும் ராதாவும் குழந்தையோடு அங்கே வந்திருந்தனர். இதமான மாலை நேரம். சூரியப் பந்து தன்னை கடலில் கரைத்து தங்கமாய் உருக்க இன்னும் நேரம் இருந்தது.
நீல நிறக் கடலையும் இன்னும் சிறிது நேரத்தில் அதன் நிறத்தை மாற்ற காத்திருக்கும் செங்கதிரோனையும் கண்டு துள்ளி குதித்தாள் சவி. இந்த ஊருக்கு வந்தபின் இன்றுதான் முதன்முறை கடற்கரைக்கு வருகிறாள். ஏன் கடற்கரை என்ற ஒன்றையே இன்றுதான் முதலில் பார்க்கிறாள். கண்கள் இரண்டும் நெற்றிவரை விரிந்து கொள்ள வாயை அகலமாய் பிளந்து ஆசையோடு அவள் வதனம் காட்டிய அந்த பிரமிப்பில் லயித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு புன்னகையோடு அந்த பூ முகம் பார்த்திருந்தான் குரு. 

Advertisement

Advertisement

“அய்… அப்பா… சூப்பர் சூப்பர்… அங்க போலாம்… அங்க போலாம்…” 
அவன் கையில் இருந்து தாவி குதித்து ஓடத் தயாராகினாள் சவி.

Advertisement

அந்த கடற்கரையில் பெரிதான அலையாட்டமும் பயமும் இல்லை என்பதால் தனது பேண்டை முழங்கால்வரை மடித்துக் கொண்டு அவள் கைப்பிடித்து நீருள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றான் குரு. 
காலினை கீறி வந்த நீரோட்டமும் பாதத்தை கூசி விட்டுச் சென்ற ஈர மணலும் அவளுக்கு பெரும் குதூகலத்தை ஏற்படுத்த தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தாவித்தாவி குதித்தாள் சவி. 
அவள் இட்டத்தை தள்ளி நின்று மணல்மேட்டில் ஓரமாக அமர்ந்து கொண்டு சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் ராதா. 
சிறிது நேரம் மகளின் கைப்பிடித்து ஓடி நடந்து, குதித்து என்று குழந்தையோடு குழந்தையாக விளையாடியவனை ராதாவின் விழிகள் ஈரக் கசிவோடு நேசம் சுமந்து பார்த்திருந்தன. 
‘கடவுளே… இந்த சந்தோஷத்தை அவனுக்கு எப்பவும் நிலைக்க வச்சுடு… அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும்… இனி அவன் வாழ்க்கையில எல்லாமே நல்லதே நடக்கணும்…’
உயரே பார்த்து கைகூப்பி ராமநாத சுவாமியை மனப்பூர்வமாய் வேண்டிக் கொண்டார் ராதா.
ஆடிக் களைத்து ஓடி வந்த பெரிய குழந்தையும் சிறிய குழந்தையும் ராதாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். 
“அப்பா… என்னை இங்க அடிக்கடி கூட்டிட்டு வாங்கப்பா…” 
தலை சாய்த்து கண்கள் சுருக்கி அவள் கேட்ட தோரணையில் அவளை அள்ளி மடியில் அமர்த்தி ஆசை தீர முத்தமிட்டான் குரு. 
“வரலாம்டா செல்லம்… நினைச்சப்போ எல்லாம் வரலாம் சரியா…” 
அவள் நெற்றி முட்டி கூறியவன் ராதாவிடம் அவளை ஒப்படைத்து சற்று நகர்ந்து சென்று அவள் உண்பதற்கு ஸ்னாக்ஸ் வகையறாக்களை வாங்கிக் கொண்டு வந்தான். 
வரும்போது ஒரு பையில் தயாராக தண்ணீர் போத்தலை எடுத்துத்தான் வந்திருந்தார் ராதா. ஆர்வமாக வேடிக்கை பார்த்தபடியே உண்டவள் இடையிடையே தன் தந்தைக்கும் பாட்டிக்கும் ஊட்டி விட்டும் கொண்டாள்.
உண்டு முடித்தவளின் அருகில் அவள் வயதை ஒத்த மற்றுமொரு சிறுமி நெருங்கி வந்து சினேகமாய் சிரிக்க இருவரும் இணைந்து சற்றுத் தள்ளி‌ விளையாடிய மற்ற சிறுவர்களைப் போல் மணல் வீடு கட்டத் தொடங்கி இருந்தனர்.
குருவின் முதுகோடு முதுகு சாய்ந்தபடி அமர்ந்துதான் அந்த சிறுமியுடன் மழலையாய் பேசியபடியே ஆசையோடு மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தாள் சவி.
மற்றொரு குழந்தையுடன் அவள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டவன் இழுத்து பெரும் மூச்சுவிட்டு தூரத்து கடலை அமைதியாக வெறிக்கத் தொடங்கினான். 
அவன் புருவங்கள் யோசனையில் சுருங்கி இருக்க விழிகள் ஆழ்ந்து ஏதோ தீவிர சிந்தனையில் திளைத்திருந்தன. பக்கவாட்டாக திரும்பி அவன் முகம் பார்த்தார் ராதா. 
“என்ன அப்பு… அப்படி என்ன யோசனை..? என்கிட்ட ஏதோ பேசணும் என்டு சொன்னியே…”
மூக்கு கண்ணாடியை ஒற்றை விரலால் சரிசெய்து கொண்டு ஆம் என்று தலையாட்டிக் கொண்டான் குரு.
“சவி மனசுல அப்பாவா நான் முழுசா பதிஞ்சு போயிட்டேன் அத்தை…” 
சொன்னவனின் குரலில் ஒருவித தழுதழுப்பு. 
“உன்ர மனசுலயும் அவளை உன்ர மகளாவே பாவிச்சிட்டியே கண்ணா… நான் அன்டைக்கு சொன்ன விஷயத்தை பத்தி நீ என்ன யோசிச்சு வச்சிருக்க..?”
அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்பது புரிந்தது. அவனும் அது விஷயமாக பேசத்தானே அவரை அழைத்து வந்துள்ளான். 
“சவிக்கு அப்பாவா உணர்வு ரீதியா என்னால உடனடியா மாற முடிஞ்சிடுச்சு. எப்பவும் அவளுக்கு அப்பாவா இருப்பேன். அதுல மாற்றம் இல்ல அத்தை… ஆனா…” என்று நிறுத்தியவன் குனிந்து மணலில் வட்டமாக சுட்டு விரலை சுழற்றி வரைந்தபடியே அமர்ந்திருந்தான்.
“அஞ்சலிக்கு மனுஷனா மாற முடியாதுன்னு சொல்ல வர்றியா..?” 
அவன் தயக்கத்தை உடைத்து அவரே கேட்டிருந்தார். அமைதியாக அவரை நிமிர்ந்து பார்த்தான் குரு. 
“மறுமணம் பண்ணிக்கிறது உலகத்துல எங்கேயுமே நடக்காத விஷயம் இல்லையே… ரெண்டு பேருமே வாழ்க்கையை இழந்தவங்க… ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா காலம் முழுக்க அனுசரணையா அழகான ஒரு வாழ்க்கையை வாழ முடியாத கண்ணா..?” ஆற்றாமையோடு கேட்டார் ராதா.
“தீபாவோட நான் மனசார சந்தோஷமா வாழ்க்கை நடத்தி இருக்கேன் அத்தை..?” சொல்லும்போதே அவன் குரலில் வலி. 
“அதை நீ சொல்லோணுமா..? என் கண்ணால அத்தனையும் நான் பார்த்தேன் தானே. ஆனா அது எல்லாம் கனவுபோல காணாம போயிடுச்சே தம்பி… அந்த கனவுக்குள்ளேயே இன்னும் எத்தனை காலம் உட்கார்ந்திருப்ப..? நிஜ வாழ்க்கைக்கு வந்து நிதர்சனத்துல வாழணும்தானே தம்பி…” 
பதில் பேசாமல் மேல் இதழை கடித்தபடி மீண்டும் கடலை வெறிக்கத் தொடங்கினான் குரு.
“மூன்டு வருஷம் அவகூட நீ எப்படி வாழ்ந்தே என்டு எனக்கு தெரியும். அவா இல்லாத உலகத்துல நீ எப்படி எல்லாம் தவிச்சே என்டும் தெரியும். உன் துயரத்தை சகிச்சுக்க முடியாமதான் கடலே கொந்தளிச்சு இடம் மாற்றி உன்னை இங்கே கூட்டிட்டு வந்துருச்சு. இங்கே வந்த பிறகு நாம வேற மாதிரி ஒரு வாழ்க்கையிலதானே வாழ ஆரம்பிச்சோம். இந்த ஊர், இங்க உள்ள சம்பிரதாயம், இந்த வாழ்க்கை இது எல்லாத்துக்குமே நாம பழகிட்டோம் தம்பி. இப்பகூட ஊர்மேல மனசு ஏறுது. கடலை தாண்டி நம்ம இடத்தில போய் அக்கடான்னு உட்கார்ந்துடலாமான்னு தவிக்குது… ஆனா அங்கே நமக்கு மிஞ்சி இருக்கிறது சிதிலமான இடமும் இழந்த இழப்புகளும் தானே தம்பி. திரும்பவும் வலியும் வேதனையும்தான் மனசுல ஏறும். எனக்கு என்ன…? உன் நிழல்ல இன்னும் கொஞ்ச காலம் இப்படியே நிம்மதியா இருந்துட்டு போயிடுவேன். ஆனா உனக்கு வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கவே இல்ல தம்பி. ஆரம்பிச்ச வேகத்தில முடிந்து போயிடுச்சு. ஆனா அந்த தெய்வம் மனசு வச்சு திரும்பவும் உன் வாழ்க்கையில புது அத்தியாயத்தை உருவாக்கி இருக்கு. அதை மேற்கொண்டு முன்னேற்றி வெற்றிகரமாக மாத்துறது உன் கையிலதானே இருக்கு. உனக்கான சரியான துணையையும் குழந்தையையும் தெய்வம் உன் கையிலேயே கொண்டு வந்து கொடுத்திருக்கு. அதை ஏத்துக்கிறதுல உனக்கு என்ன அப்பு தயக்கம்..?” 
நிதானமான நீண்ட அவரது விளக்கத்தை அமைதியாக கேட்டபடி அமர்ந்திருந்தான் குரு. இழுத்து பெருமூச்சுவிட்டு அவர்புறம் திரும்பினான்.
“நிறைய சிக்கல் இருக்கு அத்தை…” 
“எதை சொல்ற..? மனச்சிக்கலா..? அது வாழ ஆரம்பிச்சா தன்னால சரியாயிடும். தயங்கி நிக்காம நாமதானே முதல் அடியை எடுத்து வைக்கோணும்…” 
அந்த அடியை எடுத்து வைக்கிறதுலயே பிரச்சனை இருக்கு அத்தை… முதல்ல நாம இந்த நாட்டு பிரஜையே கிடையாது. அது உங்களுக்கு தெரியும்தானே. என்னதான் இங்கே மக்களோடு மக்களா சொந்தபந்தம் போல ஒன்னுக்குள்ள ஒன்னா பேசிப் பழகி வாழ்ந்தாலும் நமக்கான அடையாளம் இங்கே இல்ல அத்தை. அகதி அப்படிங்கிற ஒரு அடையாளம்தான் நமக்கானது…” 
இறுதி வார்த்தையை சொன்னபோது அவனது தொண்டைக் குழி ஏறி இறங்கியது. 
“இங்க இந்த தமிழ்நாட்டுல ஏன் இந்தியா முழுக்க உரிமையோட எங்கே வேணாலும் போகலாம், வரலாம், வாழலாம், வசிக்கலாம், சாப்பிடலாம், தூங்கலாம், என்ன வேணாலும் பண்ணலாம். ஆனா இந்த நாட்டு பிரஜையா நமக்கான அடையாளம் நமக்கு கிடைக்காது. அதற்கான சட்ட வரைமுறை இங்கே இல்ல. இங்க கை நிறைய சம்பாதிக்கிறேன்… சுதந்திரமா என்னால வாழ முடியுது… வசதியான இடத்தில போய் தங்க முடியுது. ஆனால் சொந்தமா ஒரு வீடுகூட என்னால இங்க கட்ட முடியாது. ஒரு அகதிக்கு அரசாங்கம் கொடுக்கிற சலுகையை தாண்டி வேற எந்த வேலையும் சட்டபூர்வமா செய்யவே முடியாது. எனக்கான அடையாளமே இங்கே இல்லாதப்போ அஞ்சலிக்கு என்ன அடையாளத்தை என்னால கொடுத்துட முடியும்..? காலம் முழுக்க அவளுக்கு பாதுகாப்பா இருக்க முடியும்… சவிக்கு அப்பாவா வாழ முடியும்… அதை தாண்டி எப்பவும் நான் இங்கே ஒரு அகதிதான்…”
அவன் எடுத்து வைத்த காரணங்களும் அதனைச் சார்ந்த விஷயங்களும் நிச்சலனமான உண்மை என்பது ராதாவிற்கும் புரிந்தது. எதார்த்தத்தை சொல்கிறான்..? எதிர்காலத்தை சொல்கிறான்… உண்மைதானே… அகதிகளுக்கு இங்கு இடம் உண்டு… எத்தனை வருடம் வேண்டுமானாலும் முழு சுதந்திரத்தோடு வாழலாம் அனுபவிக்கலாம். ஆனால் உரிமை பாத்யதை இங்கு கிடையாதே. அந்த நாட்டின் குடிமக்களாக ஒவ்வொரு விஷயத்திற்கும் நகர்ந்து செல்லவே முடியாதே. 
ஆனால் அதற்காக தகைந்து காத்திருக்கும் ஒரு வாழ்க்கையை புறந்தள்ளுவதா.? இதற்கு வேறு மாற்று வழி இல்லாமல் போய்விடுமா..? இலங்கை அகதிகளாக வந்தவர்கள் தமிழ்நாட்டில் திருமணம் செய்து வாழவே இல்லையா..? இல்லை பிழைக்கத்தான் முடியாதா..? 
தன் எண்ணத்தை அவனிடமும் கூறினார் ராதா.
“அதெல்லாம் ரொம்ப சிரமம் அத்தை. எதிர்காலத்தில நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ளணும்…”
“என்ன தம்பி பெரிய சிரமம்..? மூன்டு வருஷத்துக்கு மேல இந்த ஊர்ல நம்மளால வாழ முடியலையா..? என்ன சிக்கல் வந்துருச்சு..? என்ன கஷ்டத்தை அனுபவிச்சிட்டோம்..? நம்ம வாழ்க்கை எல்லாம் நல்லபடியா நடந்திட்டுதானே இருக்கு… இப்படியே மீதி வாழ்க்கையும் கொண்டு போயிட முடியாதா..?”
“என்ர மனசுல எனக்கு வேற ஒரு யோசனை இருக்குது அத்தை…” 
“என்ன..?” 
“உங்களுக்கு பரசுராமன் தெரியும்தானே…”
“அவனை எப்படி மறக்க முடியும்..? நாம இங்க வந்தப்போ தாயா பிள்ளையா நமக்கு கூட இருந்து அத்தனையும் பாத்துக்கிட்டவன் அவன்தானே. இந்த ஊர்ல உனக்கு கிடைச்ச முதல் நெருக்கமான நண்பனாச்சே…” 
“அவனும் தனிக்கட்டைதான்… இத்தனை காலம் கல்யாணமே இல்லாம இருந்துட்டான்… நானும் பல தடவை வற்புறுத்தி கேட்டப்போ ஏனோ அதுல பிடிப்பே இல்லை என்டு கதைச்சான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பொடியன். அஞ்சலிக்கு அவன் ரொம்ப பொருத்தமா இருப்பான்…” 
“தம்பீஈஈ…” 
அவன் சொல்ல வருவதை அறிந்து அதிர்ந்து சத்தமிட்டிருந்தார் ராதா.
“அவன் இங்கே அரசாங்க உத்தியோகத்தில இருக்கிறான் அத்தை… நிரந்தரமான வருமானம்… அஞ்சலிக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையா அவன் இருப்பான். நான் அவன்கிட்ட கதைச்சா புரிஞ்சுப்பான். நான் சொன்னா கேட்கவும் செய்வான்…” 
“என்ன பேசுற குமரா..? சரி நீ சொல்றபடியே அஞ்சலிக்கு அவனை கட்டி வைக்கிறதாவே இருக்கட்டும்… சவி..???” 
“இவள் என்ட மகள்… என்னிட்ட ஒப்படைச்சுடட்டும். நான் பார்த்துக்கிறேன். அவ அவளுக்கான வாழ்க்கையை சந்தோஷமா வாழட்டும்… அவ வாழவே இல்ல அத்தை… அவ பாவம்… இனியாவது அவ நிம்மதியான வாழ்க்கை வாழட்டும்…”
படக்கென நிமிர்ந்து அவனை முறைத்தார் ராதா. 
“நீ கதைக்கிறது நியாயம் என்டு உனக்கு தோணுதா குமரா..? பெத்த பிள்ளையை உன்னிட்ட ஒப்படைச்சிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் கட்டி அவ நிம்மதியா வாழுவான்னு நினைக்கிறியா..? அவமேல அவ்வளவு அக்கறை இருக்கிற நீதானே அவளுக்கு வாழ்க்கை கொடுக்கோணும். என்ன அர்த்தத்துல பேசிட்டு இருக்க..? இதையே போய் நீ அவகிட்ட கதைச்சுப் பார்… இதுக்கு அவ சம்மதிப்பா என்டு நினைக்கிறியா..? குழந்தையை பிடுங்கிட்டு உன்னை துரத்தி அடிப்பா. முதல்ல நீ கதைச்ச விஷயங்கள்லகூட ஏத்துக்க கூடிய சில நியாயங்கள் இருந்தது. ஆனா இப்போ கதைச்சதை என்னாலேயே ஜீரணிக்க முடியல. தப்பி தவறி இதை அஞ்சலிகிட்ட சொல்லிடாதே. நொந்து கிடக்கிற பெட்டை மொத்தமா உடைஞ்சு போய்டுவா… நீ அவளுக்கு வாழ்க்கையே கொடுக்காட்டியும் பரவால்ல. அவளை அவ போக்கிலேயே விட்டுடு… இதெல்லாம் சரியா வராது… போகலாம்… நேரமாச்சு…” 
கடுகடுவென பேசி எழுந்து கொண்டவர் கோபத்தோடு முன்னே நடக்க சவியை தூக்கிக் கொண்டு அமைதியாக அவரை பின்தொடர்ந்தான் குரு.
(தொடரும்)
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!