Skip to content
Post Views: 1,500
விடிந்ததும் சில முடிவுகளோடு சக்தியிடம் சென்றவர் நடந்த அனைத்தையும் சொல்ல கேட்டவர்களுக்கு, “அய்யோ.. இதென்ன புது பூதம்..!” எனும் நிலை தான்.
“இப்ப என்ன செய்யலாங் க்கா..?” என சக்தி சகுந்தலாவிடம் கேட்க,
Advertisement
“அவீகள அவன் வேல பாக்கற இடத்துலையை குடி வச்சுடலாம்.
Advertisement
எனக்கு ஜெகாவுக்கு ஒண்ணுன்னா நீங்க பாத்துப்பீங்க தானே..?” என கண்கலங்கி தவிப்போடு கேட்டவரின் கையை பற்றிக்கொண்ட சக்தி,
Advertisement
“அக்கா.. காலத்துக்கும் உன்னைய பாத்துக்க வேண்டிய பொறுப்பு என்னது. நீ கவலைய உடு. அவன பேக் பண்ணி திருப்பூருக்கு அனுப்பிடலாம்..” என சொன்னபடி தீனாவிடம் பேச,
Advertisement
“மாமா, அதெப்படி முடியும்..? ஜெகதீஷ் சின்ன பையன்.. சித்தி வயசானவங்க. அவுங்கள பாத்துக்கற பொறுப்பு என்னோடது இல்லையா..?” என தெளிவாக சொன்ன விதத்திலேயே இது பற்றி பலமுறை யமுனாவும் தீனாவும் பேசியிருப்பது புரிந்தது.
“ஏன் மாப்ளே.. அவுங்க உனக்கு சித்தின்னா எனக்கு அக்கா.. அது உனக்கு நியாபகத்துல இருக்கா இல்லியா..? என்னோட அக்காளையும் அவ புள்ளையையும் பாத்துக்கற பொறுப்பு எனக்குமிருக்கு..
ரூம் எடுக்கறப்போ என்ன சொன்னே எங்கிட்ட..?
எப்படியும் நீங்க அங்க தா இருக்க போறோமுன்னு சொன்ன தானே.. இப்ப ஏன் தயங்கறே..?” என சக்தி கேட்க,
“உங்களுக்கு உங்க அக்கா மேல பொறுப்பு இல்லன்னு சொல்லல மாமா.. ஆனா.. அதுக்காக எப்படி அவங்கள விட்டுட்டு..” என அவன் தயங்க,
“நீ வேல பாக்கற இடத்துக்கே அண்ணிய கூட்டிட்டு போ ண்ணே..” என்ற படி வந்து நின்றான் ஜெகதீஷ்.
“சின்ன பையன் நீ.. உனக்கு இதெல்லாம் வேண்டாம்.. நீ உள்ள போ..” என தீனா சொல்ல,
“ஏன் நா சொல்லக்கூடாது.. அண்ணி முன்னே எப்படி கலகலப்பா இருப்பாங்க தெரியுமா..? ஆனா இப்போ உங்ககிட்ட கூட அவங்க சரியா பேசறது இல்ல..
காரணம் நம்ம அப்பா ன்னு எனக்கு நல்லா புரியுதே.. அவரு இருந்த இடத்துல இருக்க எனக்கே பிடிக்கலங்கும் போது பாவம் அண்ணி அவங்க எப்படி இருப்பாங்க..?
அன்னைக்கு அவரு பேசின விசயம் சரியா புரியலன்னாலும் அவர் பேசினது தப்புன்னு புரியுது.
இல்லன்னா அம்மாவும், அக்காவும் ஏன் அவர அடிக்க போறாங்க..?
அண்ணிக்கு வேற அன்னைக்கு உடம்பு சரியில்லாத இருந்துச்சு. அப்போ அவரு பேசினது ரொம்ப தப்பு..
அவங்களுக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் அண்ணே.. நாங்க எங்கையோ வா இருக்கோம்.. நினைச்சா நீ வந்திட மாட்டே..?
மொதல்ல தான் நீ வரவே மாட்டையே ன்னு எனக்கு பயம் இருந்துச்சு.. இப்ப நீ இங்கே வருவேன்னு நம்பிக்கை இருக்கு. அவரும் இப்ப இல்ல.. அதனால நா தைரியமா இருப்பேன்..” என்றுவிட,
சக்தி, ‘இதான் சாக்கு..’ என சூட்டோடு சூடாய் அவர்களை தங்கமணியின் உதவியோடு வீடு பார்த்து கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றிருக்கிறார்கள்.
***
அவர்கள் கிளம்பி சென்ற பின் உள்ளே வந்த இருவருக்கும் இடையே போதுமான அளவு தனிமை இருந்தாலும், அதை கொண்டாடும் மனநிலையில் தான் அவர்கள் இல்லை.
யமுனா கிச்சனுக்குள் செல்ல தீனா போனோடு ஹாலில் அமர்ந்தான்.
‘இருவருக்கு தானே.. பெரிதாக வேண்டாம்..’ என தங்கமணியிடம் சொன்ன போதும், இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீட்டை தான் வாடகைக்கு பிடித்திருந்தார்.
அதும் அவன் வேலை பார்க்கும் இடத்திற்கு பத்து நிமிடத்திற்குள் செல்லும் தொலைவில்.
“வாடக ஜாஸ்தியா இருக்குமே ண்ணே..?” என தீனா வீட்டை பார்த்த அன்றே சொல்ல,
“என்னோட சின்ன மாப்புள்ள வகையாரால தெரிஞ்சவங்க வீடு தான். நாம கொடுக்கறது தான் வாடகை. உனக்கு பிடிச்சிருக்கா.. இல்லையா..? அத மட்டும் சொல்லு..” என்றுவிட, மறுக்க முடியுமா அவனால்..?
யமுனாவிற்கும் வீடியோ காலில் காட்ட, அவளிருந்த மனநிலையில் அதை எங்கே கவனத்தில் கொள்ள..?!
சம்மதமாக அரை மனதுடன் தலையாட்ட இதோ குடியும் வந்தாகிற்று.
நேரம் வேகமாய் ஓடி இரவும் வந்துவிட்டிருக்க, ‘இனி அடுத்து என்ன..? என்ற குழப்பத்திற்கு தீர்வு தானாக வராது.. வர வைப்பது தான் சிறந்தது..’ என்ற முடிவுக்கு வந்த தீனா,
போனை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு எழுந்தவன்,
“பாப்பா, என்ன செய்யறே..?” என சமையலறை வாசலில் நின்று கேட்டிருந்தான் அவள் செய்கையை அவதானித்து.
பொருட்களை வேண்டுமென்றே இங்கும் அங்கும் என மாற்றி வைத்து நேரத்தை போக்கிக்கொண்டிருந்த யமுனா.. தீனாவின் திடீர் குரலில் கையிலிருந்த டப்பாவை கீழே போட போய் கடைசி நொடியில் பற்றியவள்,
“என்ன.. என்ன செய்யறேன்..? வேல.. வேல பாக்கறேன்..” என தடுமாறி சொல்ல,
“பாத்தா நல்லா தெரியுது வேல தான் பார்க்கறேன்னு..” என கிண்டலாக சொன்னவன்,
“சாப்பிட சாப்பாடு இருக்கா.. இல்ல வேற சமைக்கனுமா..?” என்றிட,
“இன்னும் சாதம் மிச்சமிருக்கு.. உங்களுக்கு வேணுமின்னா வேற எதாவது செஞ்சு தரவா..?” எனக்கேட்க,
“இல்ல இருக்கறத எடுத்து வை.. சாப்பிடலாம்..” என்றுவிட்டு ஹாலுக்கு வர,
மதியம் வைத்த குழம்பை சூடு செய்தவள் அனைத்தையும் எடுத்து வைக்க, எந்த விதமான பேச்சுவார்த்தையும் இன்றி கழிந்தது நிமிடங்கள்.
சாப்பிட்ட உடனே தீனா அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட படுக்கை அறைக்குள் சென்று விட,
யமுனா பாத்திரங்களை ஒதுக்கி.. சமையலறையை ஒன்றுக்கு இரண்டு முறையாக சுத்தம் செய்கிறேன் பேர்வழி.. என நேரத்தை கடத்திக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவளுக்கே உடல் களைத்துப் போக, மெதுவாக படுக்கை அறையை எட்டிப்பார்த்தாள், ‘தீனா என்ன செய்கிறான்..?’ என அறிந்து கொள்ள.
அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, “அப்பாடா..” என்ற நிம்மதி பெருமூச்சை சத்தமின்றி விட்டவள், விளக்குகளை அணைத்துவிட்டு.. அவன் எழுந்துவிடாத படி மெதுவாக கட்டிலில் ஏறி படுத்துவிட்டாள் மறுபுறம்.
ஏனோ இத்தன நாட்களுக்கு பின் அவனோடான தனிமை அவளை கூச்சத்தில் ஆழ்த்துவதற்கு பதிலாக, அச்சத்தையே தந்து இருந்தது.
அந்த அச்சமும் தீனாவை எண்ணி இல்லை தன்னை எண்ணித்தான்.
“எங்கே தயா தன்னை நெருங்க முயலும் போது.. இங்கும் அந்த வீட்டில் செய்தது போல எதாவது செய்து அவனை காயப்படுத்தி விடுவோமோ..?” என்ற தவிப்பு தான் அச்சமாக மாறி இருந்தது.
‘அவள் கேட்ட இடமாற்றத்தை தந்தும் தன்னை ஏற்க மறுக்கிறாளே..” என்ற எண்ணம் தீனாவிற்குள் வந்துவிட்டால் விரிசல் வந்துவிடுமே தங்களுக்குள்.. என தோன்றத்தானே செய்யும் பெண்ணுக்கு.
அவளின் அந்த பயமே தேவையில்லை என்பது போல அவன் உறங்கியிருக்க, அவளும் அதையே தனக்கு சாதகமாக எண்ணி சயனித்திருந்தாள்.
படுத்த சில நிமிடங்களிலேயே உடல் அசதியில் உறக்கம் கண்ணை சுழற்ற நன்றாக உறங்கியும் போனாள்.
———————————
தீனா வேலைக்கு சென்றாலும்.. அருகிலேயே வேலை இடம் என்பதால் காலை டிப்பன் மட்டும் செய்தால் போதும். மதிய உணவு நேரத்திற்கு வீட்டிற்கே வந்து விடலாம்.
அரக்க பறக்க முன் போல எழுந்து செய்யும் தேவை இல்லை என்பதால் நிதானமாகவே எல்லாம் செய்தாள் மறுநாள் முதல்.
ஒரு வாரம் தீனாவிற்கு வேகமாக சென்றிருக்க, யமுனாவிற்கு ஒவ்வொரு மணித்துளியும் கடக்க பெரும் பாடாய் இருந்தது.
பொறுமையாக எழுந்து.. இருவருக்குமானதை செய்து.. தீனா அனுப்புபவளுக்கு ஏதோ ஒரு வெறுமை.
இருவருக்கும் ஒரு சிறு தனிமை கிடைத்தாலும் அதில், அவளை சீண்டி.. வெக்கப்பட வைத்து.. வேண்டியதை பெற்று.. என எதையாவது செய்யாமல் இருந்ததில்லை இத்தனை மாதங்களில்.
இப்போது முழுமையாக கிடைத்திருக்கும் தனிமை.. ஆனால் அவளிடம் பேசி, சிரித்து என இருந்த போதும் அவனிடம் அவள் அந்த சிறு விலகலை உணர்கிறாளே.
முதல் சில நாள், ‘ஜெகதீஷ் என்ன செய்வானோ.. என்ற தவிப்பாக இருக்கும்..’ என நினைத்தவளுக்கு, ஒரு வாரம் கடந்த நிலையிலும் அதுவே தொடர ஒரு வித அலுப்பு உண்டானது.
முதல் நாள் அவன் உறங்கியதை கண்டு எழுந்த நிம்மதி.. அடுத்து வந்த நாட்களில் ஒருவித சஞ்சலத்தை உண்டாக்கியிருந்தது.
‘அவரிடமே இது பற்றி கேட்கலாமா.. வேண்டாமா..?’ என்ற குழப்பத்துடனே அன்றைய இரவு உணவு வேளையும் கடந்து சொல்ல, வழக்கம் போல படுக்கையறையை தஞ்சமடைந்திருந்தான் தீனா.
எப்போதும் வேலை பார்ப்பதாக பேர் செய்து நேரத்தை கடத்தும் யமுனா.. அன்று சீக்கிரமே வேலையை முடித்து உள்ளே வர,
தீனா நன்றாக உறங்கி போயிருப்பதை கண்டு அவளே அறியாமல் கண்கள் கலங்கி போனது.
அவனை சென்று எழுப்பி தன் மனதில் தோன்றுவதை கேட்க ஒரு மனம் சொன்னாலும், அவனின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்க வேண்டுமா..? என்ற எண்ணம் உதிக்க,
தனது கண்ணீரை துடைத்து விட்டு வந்து படுத்தவளுக்கு என்ன முயன்றும் உறக்கம் தான் வரவில்லை.
கொஞ்ச நேரம் பொறுத்தவள், மெல்ல அவனை நெருங்கி.. முதுகோடு ஒன்றி.. அவனை இடையில் கரம் போட்டு நெருங்கி அணைத்த வாக்கில் படுத்துக்கொண்டாள்.
அவனின் உடல் சூடு தந்த இதம் அவளின் சஞ்சலங்களை ஓரம் கட்ட, மெல்ல அவளை விழி மூடச்செய்து.. சிறிது நேரத்திலேயே அவளறியாமலேயே ஆழ்ந்து உறங்கத்திற்குள் கொண்டு சென்றது.
அவள் உறங்கிவிட்டது தெரிந்த பின் விழி திறந்த தீனாவிற்குள் அமர்த்தலான ஒரு வெற்றிப்புன்னகை.
இதை தானே அவனும் எதிர்பார்த்தான். அவளாகவே அவளின் மாய எண்ணத்திலிருந்து விலகி தன்னிடம் முழுதாய் வரவேண்டும் என..
இதோ இப்போது அதன் முதல் படி நல்லபடியாக நடந்துவிட்டதே..
வெற்றிக்களிப்போடு அவளின் புறம் திரும்பி தானும் அவளின் இடையோடு கையிட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டவனுக்குள் ஒரு நிறைவு.
அவனின் கையணைப்புக்குள் வந்ததை ஆழ்ந்த உறக்கத்திலும் உணர்ந்தாளோ என்னவோ, “த..யா..” என்ற முனங்கலோடு அவனை இன்னும் வாகாய் அணைத்து அவன் நெஞ்சில் புதைந்தாள் காரிகை.
அவளின் செய்கையில் மகிழ்ந்தவன் ஆழ்ந்த முத்தமதை அவளின் உச்சியில் பதித்து விட்டு அவளின் தலை மீது தன் கன்னம் சாய்த்து உறங்கிப்போனான்.
நீண்ட சில மாதங்களுக்கு பின்னான இப்படியான அணைப்பு இருவருக்குள்ளும் ஒரு வித நிம்மதியை ஆழ்மனதில் விதைக்க ஆழ்ந்த உறக்கம் இருவருக்கும்.
காலை யமுனா எழும் நேரம் தெரியும் என்பதால்.. அதற்கு முன் தனது நெருக்கத்தை அவள் அறிந்திடாத படி அவளை விட்டு விலகி படுத்து.. மீண்டும் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்கினான் அவளின் கள்வன்.
காலை கண்விழித்தவளுக்கோ, “நைட் அவரும் என்ன கட்டிப்பிடிச்சிருந்த மாதிரி இருந்துச்சே.. ஒரு வேள கனவா..!” என்ற குழப்பமே மிஞ்சியது.
அன்றைய தினம் முதல் இதுவே வாடிக்கையாக இரவில் உணரும் இதம் பகலில் கிட்டாது போனாலும், ஆழ்ந்த நித்திரை தந்த புத்துணர்வே கொஞ்சம் கொஞ்சமாக யமுனாவை மீட்டுக்கொண்டிருந்தது.
error: Content is protected !!