Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

43. தனுஜா செந்தில்குமார் - மண் கொடுத்த மாணிக்கம்

மண் கொடுத்த மாணிக்கம்

அத்தியாயம் – 13
தன் முன் வைக்கப் பட்ட சவத்தை வெறித்துக் கொண்டிருந்தனர் மீனாளும், லட்சுமணனும்.நெற்றியில் வீபூதியிட்டு வெள்ளை வேட்டி சட்டையில் சாந்தமாக உறங்கி கொண்டிருந்தார் சோமு.அண்ணாமலையால் இருவருக்கும் செய்தி சொல்லப்பட ஒரு நொடி பெரும் அதிர்வு தாக்கி தான் நின்றது.
மீனாள் தன் முன் கிடந்த சோமுவை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தாள்.இந்த கதாபாத்திரம் தன் வாழ்வில் எதற்கு வந்தது? ஏன் வந்தது?இதனால் தான் பட்ட பயன் என்ன? என்று சத்தியமாகப் பேரிளம் பெண்ணுக்கு புரியவில்லை.


Advertisement

பெரியவர்கள் பார்த்து செய்த திருமணம்.பெரியவர்கள் சொல் பேச்சு கேட்டு செய்த திருமணம்.சோமுவுடன் மீனாள் வாழ்ந்த வாழ்க்கை அவளுக்கு மறந்தே போயிருந்தது.அவனைக் கொண்டு லட்சுமணன் கிட்டிய தருணம் கூடக் கனவு போல் ஓர் எண்ணம் மீனாளுக்கு. கிட்ட தட்ட மறந்து மரத்து போன உறவு.

Advertisement

வந்தான்,வென்றான்,சென்றான் என்பது போல் கட்டினான்,பிள்ளை கொடுத்தான்,சென்று விட்டான் இது தான் சோமு மீனாளுக்குச் செய்தது.என்ன முயன்றும் பெண்ணுக்கு ஒரு அனுதாபமோ, கண்ணீரோ வரவில்லை.இந்த இறப்பு செய்தி மீனாளுக்கு ஒரு செய்தி மட்டுமே. செய்தி கிட்டியவுடன் ஓர் , இரு நிமிடங்கள் அதிர்ச்சி மட்டுமே, அதுவும் சக மனிதன் என்ற நிலையில். இந்த நிகழ்வை வெறும் செய்தியாகவே தாய், மகனும் கடக்க எண்ணிருந்தனர்,

Advertisement

ஆனால் அண்ணாமலை வழமை போல் சுயநலமாகச் சிந்தித்து இருவரையும் வற்புறுத்தி அழைத்து வந்து விட்டார்.மகனை பறி கொடுத்தவரிடம் வாயாட வழியில்லாமல் இருவரும் கிளம்பி வந்து விட்டனர்.

Advertisement

இருவருக்கும் துணையாக வள்ளியப்பனும்,கண்ணாத்தாளும் வந்து நின்றனர்.வள்ளி அழுக கூடத் திராணியற்று சரிந்து கிடந்தாள்.சோமு,வள்ளி,மீனாள் இந்த மூவரும் எதோ ஒரு புள்ளியை தொட்டே வேறு திசையில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இன்னும் சோமுவின் வாழ்வில் என்ன நடந்தது? வள்ளிக்கும் அவருக்கும் காதலா ? எதனைக் கொண்டு மீனாளை சோமு பிரிந்தார்? இது போலப் பல கேள்விகள் படையெடுத்து நிற்க அதற்குத் தக்க பதில் கொடுக்கத்தான் இங்கு ஆள் இல்லை.
இதுவும் ஒரு வகையில் நன்மை தான் ரகசியம் சோமுவுடன் புதைக்கப் பட்டோ அல்லது எரிக்கப் பட்டோ போகட்டும்.உண்மை என்ற பெயரில் எதோ ஒரு தியாக வகையைக் கோர்த்து கதை புனைந்தால்.அதைக் கேட்டு உருகி, மருகி நிற்க மீனாவால் சத்தியமாக முடியாது.சோமுவின் எந்த வித மான காரணம் காரியங்களும், அவளுக்குத் தேவையற்றவை.
இந்த உறுதி இன்று, நேற்று அல்ல அவர்கள் பிரிந்த கணத்தில் எடுத்த முடிவு.இத்தனை ஆண்டுகளில் அதன் வேர் சற்று ஆழ பிடித்திருந்தது.அவள் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவள் அழைத்தார் உறவில் ஒரு பெண் மணி.
“அம்மாடி!” என்றவர் கையில் வளையல், பூ பிற சாங்கியதுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருந்தது அதனைக் கண்டு புருவம் சுருக்கி எதிரில் உள்ள பெண்ணைப் பார்க்க.
“சீக்கரம் கட்டிக்கிட்டு வாக”அடுத்து என்ன பேசி வைத்திருப்பாரோ அதற்குள் அவர்களை நெருங்கிய லட்சுமணன்.
“ஆத்தா! வாக ரொம்ப நின்னு வச்சாச்சு கால் கடுக்கும் வண்டியில ஏறுக”
“ஐய்யாடி ஆத்தாள எங்கன கூட்டிகிட்டு போறீக இங்கன சடங்கியிருக்கு”
“சடங்கா? நாங்க ஏன் அதையெல்லாம் செய்யனும்?” என்றவனைப் பார்த்து அந்தப் பெண் திருத் திருவென முழித்து.
“எனக்கு எதுவும் தெரியாது அண்ணாமலை அண்ணன் சொன்னாக அவுக கிட்டவே கேளுக” என்றதும் அந்தப் பெண்மணியை ஒரு பார்வை பார்த்தவன். தாய்யை அழைத்து வந்து கண்ணாத்தாள் கையில் உப்படைத்து விட்டு.விறு விறுவெனத் தாத்தான் இருக்கும் இடத்தை நோக்கி செல்ல,லட்சுமணன் வேகம் கண்டு வள்ளியப்பனும் அவனுடன் இணைந்து கொண்டார்.
லட்சுமணன் வரும் தோரணையை பார்த்து அண்ணாமலை எழுந்து நிற்க.அவருக்கு எதிரில் வந்து நின்றவன் அவரை நேர் கொண்டு பார்த்து,” நீக பெரியவுக தானே? உங்களால எப்படி முடியுது? வாழ்க்கையில சுயநலம் இருக்கலாம், ஆனா வாழ்க்கையே சுயநலமா இருக்கக் கூடாது”வந்த ஜோரில் தாத்தனை வெளுத்து வாங்க பேரனின் பேச்சில் பதறி.
“ஏன் என்னாச்சு? யாரை சொல்றீக?”
“வேற யாரை சொல்வேன் நீகளும், உங்க மகனுந்தேன். அது எப்படிக் கல்யாணம் பண்ணி குழந்தை கொடுத்து எந்தக் காரணமும் சொல்லாம விட்டுட்டு போறவருக்கு மனசாட்சியே இல்லாம மரியாதைய செய்யச் சொல்றீக.பொம்பளத்தானே என்ன பண்ணிடுவா கேட்க யாரு இருக்கான்னு எண்ணம் தானே? இந்த சென்மம் அனுசரிச்சே பழகி போனது அதனால் என்ன சொன்னாலும் கேட்கும்ன்னு இருந்தீகளா.
புருஷன் இருந்தும் தனுச்சு வாழ்ற பொண்ணுகளுக்கு எத்தினி சவால் இருக்கும் தெரியுமா? விடியல் தொடங்கி ராவு வரைக்கும் போராட்டந்தேன்.நித்தமும் எங்க ஆத்தா படுற பாட்டைப் பார்த்து வளர்ந்தவன் நான்.அவுக வலியும் வேதனையும் எனக்குத்தேன் தெரியும்.
அது என்ன? புருஷன் தப்புப் பண்ணா பொண்டாட்டி மறந்தே ஆகணும்.ஒரு பொண்ணு வாழ்க்கைய மொத்தமா செதச்சுவிட்டு போனவருக்கு வேண்டி பூ எடு, பொட்டு அழினு நாங்க இன்னும் வலி கண்டு போகணுமா.
என்னைக்கு அவர் ஆத்தாள விட்டுட்டு போனாரோ அன்னைக்கே எங்க ஆத்தா ஜாடை போடுறதை நிறுத்தி புட்டாக.சீலைக்கு ஊக்கு குத்தி கட்டுறது இல்லை.தலைக்குப் பூ வைக்குறது கிடையாது.ஒரே ஒரு செவப்பு ரப்பர் வளைவித்தேன்.அதையும் இப்போ புடுங்கிட்டு விடப் போறீகளா?
நாங்க இங்கன வந்தது ஒரு மனிதாபி மானத்துல தேன்.கொள்ளி போடுறதை கொண்டு உரிமை, அதைக் கொண்டு சொத்துன்னு செய்தி சொல்லிவிடுறீக.பெரிய மனுசனா இருந்துகிட்டுச் சின்னப் புத்தி பண்ணி புடாதீக.
என்ன சொன்னாலும் மனசு அவருக்குக் காரியம் செய்ய ஒப்ப மாட்டேங்குது.இதுவே வாரிசு இல்லாம இருந்தாருன்னா யாரு என்னனு கூடப் பாக்காம காரியம் பண்ணிருப்பேன், ஆனா இவுகளுக்கு செய்யவே முடியாது” என்றவன் கண்கள் சிவக்க மூச்சு வாங்கி நிற்க.
அண்ணாமலை நொடிந்து போனார் அவருக்கு சக்தி என்பதே இல்லை.இந்த இறப்பை கொண்டாவது பேரனை தங்களுடன் இறுத்தி கொள்ள எண்ணி வைத்திருப்பார் போலும்.அதுசரி லட்சுமணன் சொன்னது போல இவர் வேறு மாதிரி சுயநலம் கொண்டவர் போலும்.அத்தனை ஜனம் முன்னும் அண்ணாமலை பேச்சற்று நிற்க.கணவனது கோலம் கண்டு மெதுவாக நடந்து வந்த உண்ணாமலை.
கண்ணில் வழிந்த நீருடன் பேரன் கை தொட்டுத் தன்னைக் காண செய்தவர் கையெடுத்து கும்பிட்டு போகும்படி செய்கை செய்ய.ஒரு நொடி கண்ணை மூடி தன்னைச் சமாளித்துக் கொண்டவன்.அடுத்த நொடி அங்குள்ள அத்தனை சனம் முன்னும் கை கூப்பி விருட்டென நடந்து விட்டான்.
மனதுக்குள் அத்தனை கனல் அன்று தொடங்கி இன்று வரை சுயநலம் பேசி நிற்பவர்களை என்னதான் செய்வது.சில மனிதர்கள் இப்படி தான் போலும் கடைசி வரை திருந்த வாய்ப்புகள் இல்லை.பெரும் கோபத்தில் அரியக்குடி வந்தவன் அங்கையே தாய்யை விட்டுவிட்டு, அவன் மட்டும் காரைக்குடிக்கு சென்று விட்டான்.அவனை யாரும் தடுக்கவில்லை அவன் போக்கில் விட்டு விட்டனர்.
மீனாள் நல்ல உறக்கத்தில் இருக்க.அவளை தொல்லை செய்யாமல் அறையை மெல்லமாக மூடி விட்டுச் சத்தம் காட்டாமல் கண்ணாத்தாள் கூடத்தில் வந்து அமர.அவளது கையில் தேனீரை திணித்தாள் சாலா.அவர்களுக்குப் பக்கவாட்டில் கண் மூடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் வள்ளியப்பன்.
“ஆத்தா! அயித்த ரொம்ப அழுது வச்சாங்களா?”
“ப்ச்! அழுக இதுல என்ன சாலா இருக்கு? எனக்கு நான், உனக்கு நீன்னு உசுராவா வாழ்ந்து வச்சாக? மாருல அடிச்சிக்கிட்டு அழுக.கொஞ்சமா வருத்தம் இருக்கும் நிறையக் கோபமிருக்கும் அதைத் தாண்டி அவுகள பத்தி யோசிக்க எதுவுமே இல்லை”
“அவுக என்ன செஞ்சாக?”
“லட்சுவா?”
“ஹ்ம்ம்!”
“அதை ஏன் கேட்குற!” என்ற கண்ணாத்தாள் அங்கு நடந்ததை சுருக்கமாகச் சொல்லி முடிக்கப் பெரும் பாரமாக உணர்ந்தாள் சாலா.
“அது என்ன அவுகளுக்கு இத்தினி வம்பு வருது?”
“வண்டியில வரும் போது தம்புடு புலம்பி தவிச்சு வச்சுட்டாக. உங்க ஐயாதேன் தேத்தி அனுப்பி வச்சாரு. எதையும் வாய்விட்டு கலார்ன்னு பேசுற ஆள் இல்லை, மனசுல வச்சே பழகிட்டு இப்போ வாய்விட்டுப் புலம்புறது அவுகளுக்கு ஆகல போல.சிறுசுல இருந்து பாக்குறோம் எத்தினி கஷ்டம் அந்தப் புள்ளைக்கு.நல்ல புள்ளைங்கத்தேன் வாழ வழி இல்லாம தவிக்குதுங்க” அதுவரை தாய்,மகளின் பேச்சை கேட்டு கொண்டிருந்தவர் எழுந்து அமர்ந்து.
“கண்ணு!”
“சொல்லுக சாலாப்பா?”
“அம்பிகா மதனிய பிடிச்சு அவுக காரியம் எப்போ பண்ணறாகனு கேளுக, அதுக்குப் பிற்பாடுத்தேன் கல்யாண வேலையைத் தொடங்கனும்”
“இப்போ என்ன அவசரம் வருஷம் போனதேன் கல்யாணம் வைப்பாக” என்ற மனைவியைப் புருவம் சுழித்துப் பார்த்தவர்.
“என்ன பேசுறீக இதுக்கு லட்சு சரி சொல்வாருன்னு எண்ணி வைக்கிறீகளா?”
“அவர் பேச்சை விடுக பெரியவுக என்ன சொல்லுவாக முக்கியமா அண்ணாமலை அண்ணன் வூட்டுல என்ன  சொல்லுவாக ? அதை யோசிக நீகளே இப்படிப் பேசுனா என்னத்துக்கு ஆகுறது. உங்களுக்குத் தெரியாதா துக்கம் நடந்த வூட்டுல கல்யாணம் எப்படிப் பேசுறது.
“எல்லாம் தெரியும் கண்ணு அதுக்கு மேல லட்சுவை பத்தி தெரியும்.அவுக மன போக்கை நீக கேட்டிங்கனா பக்குனு ஆகி போவீக.என்னென்னமோ பேசுறாக.அவுக நிதானமாவே இல்லை அதேன் சொல்லுறேன்”
“எனக்கு இது சரியா படலை”
“இத்தினி பேசியும் என்ன கண்ணு பேச்சு இது?”
“சாலாப்பா உங்களுக்கு லட்சு தவிர யாரையும் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது. நடப்பை கொஞ்சம் பாருக. போதும் மருமகன் மயக்கம் இந்த கல்யாண பேச்சை நீக எடுக, திரும்பப் பேச்சு கிளம்புதா இல்லையான்னு பாருக.
தம்புடு இளந்தாரி அவுகளுக்கு இந்தப் பேச்சு புரியாது.நமக்கு அப்படியில்லை முறைக்கு நீக உங்க அண்ணன் புள்ள,தங்கச்சி புள்ளன்னு எடுத்து கட்டி முன் நின்னு கல்யாணம் பண்ணி பேரன், பேத்தி எடுத்துடீக.அப்படி இருந்தும் நீக பிடிவாதம் செய்றது சரியில்லை”
அதன் பின் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறிய பொறியாக கிளம்பி பெரும் வாக்கு வாதமாகி நின்றது.ஒரு கட்டத்தில் இருவரும் சண்டை கட்டுவதைப் போல நிற்க சாலா பயந்து போனாள்.
“இதுக்கு மேல உங்க கிட்ட என்னத்த பேசுறது சொல்லுக? என்னமோ பண்ணுக.நம்பல கொண்டு எங்கனையாவது ஆகாத பேச்சு வரட்டும் அப்போ பேசுகிறேன் உங்கள. வர, வர நீக சரியே இல்லை சாலாப்பா” என்ற கண்ணாத்தாள் வெடுக்கென எழுந்து செல்ல பெரும் கவலையாகி போனது அரிவைக்கு.போகும் தாய்யை கலக்கமாக பார்த்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்து,”சாலா!”
“ஆஹான்! சொல்லுக ஐயா?”
“நீக எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீக உங்களைப் பேச்சு வாக விட்டுருவேன்னா இல்ல லட்சுத்தேன் விட்டுருவாரா?” என்றதும் அமைதியாகி போனவளை பார்த்து.
“உண்மைக்கும் ஐயா மேல நம்பிக்கை வைக கரையேத்தி வைப்பேன். நீங்களும் வேற இல்லை, லட்சுவும் வேற இல்லை இங்கன அதுதேன் பெரிய இடியா இருக்கு. உங்க ஆத்தாளுக்கும் அது விளங்க மாட்டேங்குது.நான் பேசி நிக்குறது உங்களைக் கொண்டுதேன் அதுக்குப் பிற்பாடு தேன் லட்சு சரியா?”என்றதும் சிறு புன்னகை கொண்டு சரியென்பது போல் சாலா தலையை ஆட்டினாலும்.பெரும் குழம்பும், பயமுமாகத் தவித்து நின்றாள் பெண்.
.
.
                                                    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!