ஜீவ தாளம் : 10
அத்தியாயம் : 10
பூபாலன் கோவிலுக்குச் சென்று எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை உறுதி செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். ஆனந்தியைப் பார்த்ததும் அருகில் சென்று, “என்னம்மா… போன இடம் எப்படி இருந்தது? உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று மிகவும் அக்கறையுடன் விசாரித்தார்.
“வாவ் அங்கிள்! எவ்வளவு பெரிய இடம்! டாக்டரைப் பார்க்கத்தான் வயசுல சின்னவர் போலத் தெரியுறார்; ஆனா, அனுபவத்துல கைத்தேர்ந்தவரா இருக்கார். சின்ன வயசுல இருந்து பெரியவங்க வரை அத்தனை பேர்கிட்டயும் அவ்வளவு மரியாதையோடு பழகுறார்! ஆஸ்பிட்டல்ல அவருக்கு இருந்த மதிப்பும், ஒவ்வொருத்தரும் காட்டிய மரியாதையும், உரிமையான பேச்சும்… எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்தது!”
”ம்ம்…” என்று அவர் மேற்கொண்டு சொல்லுமாறு அவளை ஊக்குவித்தார்.
Advertisement
”அங்கிருந்து ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குக் கூப்பிட்டுப் போயிருந்தார். அடடா அங்கிள்! நான் இதுவரைக்கும் இப்படி ஒரு கொண்டாட்டத்தைப் பார்த்ததே இல்லை!” என்று சொல்லி மெய்சிலிர்த்தாள் ஆனந்தி.
”கிராமப்புறம்னாலே அப்படித்தான்மா இருக்கும்!”
”எங்க ஊர்ல எல்லாம் ஆணும் பெண்ணும் ஆடுறது, டிரிங்ஸ் பார்ட்டின்னு வேற மாதிரி இருக்கும். ஆனா இதுவோ கண்ணைக் கவரும் வண்ணமயம்! அதிலும் நம்ம டாக்டர் பொண்ணு வேஷம் போட்டு வந்து ஆடுனதைப் பார்க்கணுமே…” என்று சொல்லி அவள் சத்தமாகச் சிரிக்க, அந்தச் சிரிப்பில் பூபாலனின் மனம் அத்தனை நிறைவாக உணர்ந்தது.
Advertisement
”நிஜமாவே என்னால சிரிப்பை அடக்கவே முடியல அங்கிள்! அவர் அதே பொண்ணு வேஷத்துல நின்னுகிட்டு ஜாடை காட்டினதைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்!” என்று சொல்லி மீண்டும் மீண்டும் குலுங்கிச் சிரித்தாள் ஆனந்தி.
Advertisement
அவள் சிரிப்பைக் கண்டு பூபாலனின் கண்கள் கசிந்துவிட்டன. தன் நண்பனின் மகளின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காணப்பட்ட அந்தப் பேருவகை, அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.
“டாக்டரோட அம்மாவையும் தங்கையையும் பார்த்தேன் அங்கிள். என்கிட்ட ரொம்பப் பாசமாகவும் அன்யோன்யமாகவும் பழகினாங்க. அவங்க வீட்டுக்கும் கூப்பிட்டாங்க; நாளை மறுநாள் வர்றதா சொல்லியிருக்கேன். அவங்க ரொம்பவும் நல்லவங்களா தெரியுறாங்க.”
“ஆமாம்மா! செல்வாவும் அவன் குடும்பத்தாரும் ரொம்பவும் நல்லவர்கள். உனக்கு எப்பத் தோணுதோ அப்போ நீ அங்க போகலாம். அவன் தங்கையோட சேர்ந்து பேசலாம், விளையாடலாம். அவள் இங்குள்ள கிராமத்துப் பழக்கவழக்கங்களை உனக்குக் கத்துக் கொடுப்பாள். ஆதர்ஷை இங்க அழைச்சுட்டு வந்த பிறகு, அது உனக்கு ரொம்ப உதவியா இருக்கும்.”
Advertisement
அவள் புரிந்து கொண்டது போல் தலையசைக்க, அவர் தொடர்ந்தார். “கிராமத்துக்குப் புதுசா வந்திருக்கும் உனக்கு இங்க இருக்கிற சூழல் எதுவும் தெரியாது இல்லையா? அதனால சுபாவிடம் கேட்டுப் பழகிக்கோ. அவளைத் துணையா வச்சுக்கிட்டு ஊர்ல இருக்கிற இடங்களைச் சுத்திப் பார்க்கலாம். என்னதான் செல்வா உன்னைக் கூட்டிட்டுப் போனாலும், அவனை விட ஒரு பெண்ணா அவதானே உன் மனசுக்கு நெருக்கமா இருப்பா!” என்று காரணங்களை அடுக்கினார்.
“எனக்காக நீங்க எவ்வளவு செய்றீங்கன்னு எனக்குத் தெரியாதா அங்கிள்? உங்களை நான் தப்பா நினைப்பேனா?”
அவர் வாஞ்சையுடன் அவள் கைகளைப் பற்றிக் கொள்ள, ஆனந்தியின் குரல் தழுதழுத்தது. “அப்பாவும் அம்மாவும் எங்களை விட்டுப் போனதும் இந்த உலகமே இருண்டு போன மாதிரி இருந்தது. அப்புறம் எவ்வளவோ கஷ்டப்பட்டு, சிரிப்பைத் தொலைச்சுட்டு வெறும் ஜடமாத்தான் நடமாடிட்டு இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு ஓரளவுக்கு இயல்பா மாறின நான், இப்பதான் முழுமையான சந்தோஷத்தை உணர்றேன்.”
”நீ இங்கேயே இருந்தா முழுவதுமா மாறி, முன்னாடி இருந்த ஆனந்தியா ஆகிடுவ… உன் தம்பியும் உன்னைப் போலச் சீக்கிரம் குணமாகிடுவான். அவன் இங்க வந்த பிறகு இயற்கை வைத்திய முறையில சிகிச்சை கொடுப்பாங்க. நீயும் அவன் பக்கத்துல உட்கார்ந்து, இங்க இருக்கிற அழகைப் பத்தியும் முன்னாடி நடந்த பழைய நினைவுகளைப் பத்தியும் பேசிப் பேசி அவன் நினைவாற்றலை மீட்டுக் கொண்டு வரணும். நாங்க இங்கிருந்து சென்னைக்குக் கிளம்பிப் போனாலும், சுபாவும் செல்வாவும் அவங்க அம்மாவும் உனக்கு உறுதுணையா கூடவே இருப்பாங்க” என்று ஆறுதல் கூறினார் பூபாலன்.
அவள் “சரி” என்றதும், நாளைக் கோவிலுக்குச் செல்ல வேண்டியது குறித்து அவர் பேசத் தொடங்கினார். இவ்வளவு விஷயங்களைப் பேசிய ஆனந்திக்கு, ஏனோ செல்வா குறிப்பிட்ட அந்த மர்ம மனிதர்களின் தாக்குதல் மற்றும் அங்குள்ள பிரச்சனைகள் குறித்துக் கேட்க மனம் வரவில்லை. அவனிடம் அதைப் பற்றிக் கேட்ட பிறகுதான் தன் மனம் இறுக்கமாக மாறுவதை அவள் உணர்ந்திருந்தாள். மீண்டும் அத்தகைய கேள்விகளைக் கேட்டு, இப்போது நிலவும் இனிய சூழலைச் சிதைக்க அவள் விரும்பவில்லை.
அதனால், தான் சென்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்ததை அவரிடம் காட்டினாள். அங்குச் சிறுமிகள் ஆடிய அழகையும், செல்வா செய்த கலாட்டாக்களையும் கண்டு பூபாலனுடன் இணைந்து மறுபடியும் உற்சாகமாகச் சிரிக்கத் தொடங்கினாள் ஆனந்தி.
தன் சொந்த அத்தை மகளின் மனதை மாற்ற அவன் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறான் என்பதை உணர்ந்த பூபாலன், செல்வாவின் நல்ல உள்ளத்தை மனதிற்குள் பாராட்டி மகிழ்ந்தார்.
நெடுநேரம் அவர்களுடன் பேசிவிட்டு, உறக்கம் வரும் வேளையில் மாடிக்குச் சென்றாள் ஆனந்தி. பூபாலனும் தனது அறைக்கு வந்து, படுக்கையில் அமர்ந்தவாறு தன் மனைவி பாரதியை ஒருவிதக் கண்டனத்துடன் பார்த்தார்.
“பாரதி, நீ நடந்துக்கும் முறை கொஞ்சம் கூடச் சரியில்லை! ஆரம்பத்திலேயே சொன்னேன்… தேவையில்லாத விஷயத்துல தலையிட்டு, அன்புக்கும் நமக்கும் இடையில பிரச்சனையை உருவாக்காதேன்னு… கேட்காம நீயாகப் போய் அவன் மனைவிகிட்ட கபிலனுக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசின! அன்பு இத்தனை வருஷமா இந்த ஊருக்கே வராதவன்; அவன் தன் மகளை இங்கே கல்யாணம் செய்து கொடுக்கச் சம்மதிப்பானா? ‘நண்பர்களா எந்தவிதக் களங்கமும் இல்லாமப் பழகுறவங்க மனசுல, நாம சொல்ற வார்த்தைகள் வருத்தத்தை ஏற்படுத்திடக் கூடாது’ன்னு, அவன் அப்பவே தன் நிலைப்பாட்டைத் தெளிவா சொல்லிட்டான். அப்படி இருந்தும் நீ இத்தனை நாளா பிடிவாதமா இருக்குறது சரியில்லை!”
பாரதி கண்கலங்கி அமர்ந்திருக்க, அவர் தொடர்ந்தார். “அன்புகிட்ட சொன்னது போதாதுன்னு, சென்னைக்கு ஆனந்தி வந்த பிறகு கபிலனிடமும் இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து, அவன் மனசையும் கெடுக்கப் பார்த்திருக்க! நான் என்னென்ன திட்டமெல்லாம் போட்டு எதைச் செய்றேன்னு உனக்குத் தெரியுமா? தெரியலைன்னா வாயை மூடிட்டுச் சும்மா இரு. மறுபடி மறுபடி அதையே பேசி வம்பை இழுக்காதே!” என்று எச்சரித்தார்.
பாரதி மனம் தாளாமல் அழத் தொடங்க, “என் நண்பனும் நானும் இணைஞ்சுதான் ரெண்டு இடத்துல இருக்குற சொத்துக்களையும் கவனிச்சுட்டு வரோம். ‘அவன் இறந்துட்டதால் மொத்தத்தையும் நானே பார்த்துக்கணும். ஆனந்தி எனக்குக் கட்டுப்பட்டுதான் இருக்கணும்’னு இன்னைக்கு வரைக்கும் நினைச்சதில்லை. அவள் நான் பெறாமல் பெற்ற வாரிசு! உனக்கும் அவள் மேல உண்மையான பாசம் இருந்தா, நீயும் அதே மாதிரி நடந்துக்கோ. அதை விட்டுட்டு அவள் மனசைக் கெடுக்கப் பார்க்காதே!” என்று கறாராகக் கூறினார் பூபாலன்.
பாரதி கண்ணீரைத் துடைத்ததும், “இந்த ஊர் மக்களுக்கு ஒரு விடிவு இல்லாம அவங்க படுற கஷ்டம் உனக்குத் தெரியாதா? அன்பு யார்? எதனால இத்தனை வருஷமா சொந்த ஊருக்குக் கூட வராம வெளியூரிலேயே வசித்து வந்தான்? அவன் மனைவிக்கும் அவனுக்கும் இடையில் இருந்த அந்தப் பிணைப்பைப் பத்தி ஆனந்திக்கு ஏதாவது தெரியுமா? இப்போ தன் சொந்த ஊருக்கே அவ வந்திருந்தும் கூட, இங்க நடந்த எதுவுமே தெரியாம இருக்காளே! இதையெல்லாம் அவகிட்ட சொல்லி எப்படி அவளைப் பக்குவப்படுத்துறதுன்னு நான் யோசிச்சுட்டு இருந்தா, நீ என்னடான்னா அவளைப் ‘பிரைன் வாஷ்’ பண்ணப் பாக்குறியா?” என்றார் ஆவேசமாக.
“இல்லை” என்பது போல் பாரதி தலையசைக்க, “செல்வா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவளோடவே சேர்ந்து கடைசி வரை வாழணும்னு ஆசைப்படுறான். நானும் ஆனந்தியை இங்க வரவழைக்கும்போது ஒரு திட்டத்தோடதான் இருந்தேன். ஆனா, இப்போ எனக்கே தெரியாம ஆண்டவனால் ஒரு மாற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கு. அதை எப்படி, யாரால், எந்த நேரத்துல செயல்படுத்துறதுன்னு நான் திணறிட்டு இருக்கேன். உன்னால எனக்கு உதவ முடியாட்டியும் பரவாயில்லை, தயவுசெஞ்சு உபத்திரம் செய்யாம இரு!” என்று முடித்தார்.
தன் மகனுக்கு இணையென எண்ணிய பெண் செல்வாவோடு இணைவதை பாரதியால் ஏற்க முடியவில்லை. ஆனந்தி தன் வீட்டு மருமகளாக வேண்டும் என்ற கனவு கலைந்த ஆதங்கத்தையே அவர் கொட்டித் தீர்த்தார். இதை ரகசியமாக வைக்க அவர் முயன்றாலும், செல்வா அதற்கு முன்பே பூபாலனிடம் அனைத்தையும் போட்டு உடைத்துவிட்டான் போலும்!
கணவர் பூபாலன் சொல்வது போலவே இனி வாயைத் திறக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். தன்னால் எந்தப் பிரச்சனையும் உருவாகக் கூடாது என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டார். ஆனால், அவர்களே எதிர்பாராத விஷயங்கள் பல விரைவில் நடக்க போகிறது என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை.
மறுநாள் காலையில், சுபா கையில் ஒரு பையுடன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். இரவெல்லாம் நிம்மதியாக உறங்கிய ஆனந்தி, அதிகாலையிலேயே எழுந்து குருவிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் அருகில் சென்ற சுபா, இனிய காலை வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு, வீட்டிலிருந்து அவளுக்காக உணவு கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள்.
பாரதி தனக்காகச் சமைத்து வைத்திருப்பார் என்று ஆனந்தி சொல்லியும் கேட்காமல், “ஏன்… நான் கொண்டு வந்தா நீங்க சாப்பிட மாட்டீங்களா? உங்களுக்காகவே அம்மா பார்த்துப் பார்த்துச் செஞ்சு கொடுத்து அனுப்பியிருக்காங்க!” என்றாள் சுபா செல்லமாக.
ஆனந்தி புன்னகையுடன் அந்தப் பையை வாங்கிக்கொண்டு, உணவு நேரத்தில் அனைவருடனும் பகிர்ந்து உண்டாள். அவளது அந்த எளிமையான குணம் சுபாஷினியை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் நால்வருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
பூபாலன், குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறி வெளியேறினார். மற்ற பெண்கள் மூவரும் வீட்டு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள, மாலை நேரம் வந்ததும் காரில் புறப்பட்டுக் கருப்பசாமி கோவிலைச் சென்றடைந்தனர்.
ஆனந்தி, சென்னையில் எடுத்து வந்திருந்த சிறிய ஜரிகையுடைய பட்டுப்புடவையில், இயல்பான அலங்காரத்திலேயே பேரழகியாகத் திகழ்ந்தாள். அவளது தோற்றம் சுபாஷினியை வியப்பில் ஆழ்த்தியது. செல்வா தன் அம்மாவுடன் பைக்கில் அங்கு வந்து சேர்ந்தான். தேவதையின் வருகையால் இருண்ட இடமே உயிர் பெற்றது போன்ற உணர்வு அங்கிருந்தவர்களுக்கு ஏற்பட்டது. தன் அத்தை மகளின் பொலிவான தோற்றத்தைக் கண்டு செல்வாவும் ஒரு கணம் மெய்சிலிர்த்துப் போனான்.
ஜெயலட்சுமி நேராக அவளருகில் வந்து, “நேத்து ராத்திரி நல்லா தூக்கம் வந்ததா? கெட்ட சொப்பனம் எதுவும் வரலையே? தம்பி எப்படி இருக்கானாம்?” என்று மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார்.
புதிய இடங்களுக்கு வரும்போது சிலருக்குப் பயத்தினால் தூக்கம் வராமல் போவதும், கெட்ட கனவுகள் அலைக்கழிப்பதும் இயல்பு. அதைத்தான் அவர் கேட்டார்.
“அப்படியெல்லாம் எதுவுமில்லையம்மா, நல்லாவே தூங்கினேன். தம்பியும் நல்லா இருக்கான்!” என்றாள் ஆனந்தி.
அவள் ‘அம்மா’ என்றதும் அவர் உள்ளம் ‘நான் உன் அம்மாவோட நாத்தனார். உன்னோட சொந்த அத்தை’ என்று சொல்ல முடியாமல் அலறியது.
அதன் பிறகு ஜெயலட்சுமி, பாரதியின் அருகில் சென்று அவரிடம் பேச்சு கொடுக்க முயன்றார். ஆனால் பாரதியோ, தன் மனதில் இருப்பதை மறைத்துக்கொண்டு பூஜை வழிபாடுகளில் முழு கவனத்தையும் செலுத்தினார்.
பெண்கள் இருவரும் சமையல் வேலைகளில் கவனம் செலுத்த, பூசாரி சொல்வதற்கு ஏற்ப பூபாலனும் செல்வாவும் செயல்பட்டார்கள். ஊரின் எல்லைப் பகுதியில் உள்ள அந்தக் கோவிலில் அவர்கள் வேலையில் மூழ்கியிருக்க, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இரண்டு கண்கள் கூர்மையாக கவனித்தன.
அந்தப் பெண்ணின் அழகும், பெயரும், அவர்களிடம் நெருங்கிய உறவினர் போல பழகிய விதமும், அவர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையும் அவனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. தனது கையில் இருந்த கைப்பேசியில் ஆனந்தியின் அழகிய திருவுருவை புகைப்படமாக எடுத்து பத்திரப்படுத்தினான்.
அங்கு நடப்பது தெரியாமல், ஆனந்தி பூஜைகள் ஆரம்பித்ததும் பயபக்தியுடன் நின்று சாமி கும்பிட்டாள். தம்பி மட்டுமே அந்த நேரம் அவள் கண்களுக்குள் நிறைந்திருக்க, தன்னைப் பற்றி அவள் எள்ளளவும் கருத்தில் கொள்ளவில்லை.
பின்னர், விபூதியை வாங்கி நெற்றியில் பூசியவள், அவர்களுடன் இணைந்து பிரசாதத்தையும் உண்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள். அதுவரை அவர்களின் நடவடிக்கைகளை பிறர் அறியாமல் கண்காணித்து வந்த நபர், அனைவரும் அங்கிருந்து அகன்றதும் தானும் சாலையில் இறங்கி வேறு பக்கமாக நடந்தார்.
ஆனந்தி தன்னைச் சுற்றி நடக்கும் மர்மங்களைப் பற்றி அறியாமல் காரிலேறி அமர, மறுநாள் காலையில் வருவதாகச் சொல்லி செல்வாவின் குடும்பத்தினர் புறப்பட்டனர். “அண்ணி கூடவே முழு நேரமும் இருக்கணும் போல இருக்கு. நான் அவங்களோட போகட்டுமா?” என்று சுபாஷினி தன் ஆசையைச் சொன்னாள்.
உடனே செல்வா, “தப்பு சுபா! அவளுக்கும் ஒரு ப்ரைவஸி வேணும். இத்தனை நாள் சுதந்திரமா வாழ்ந்த ஒரு பெண்ணை, பாசம்ங்கிற பேர்ல நம்ம கூடவே வச்சு அடிமைப்படுத்தக் கூடாது. சில நேரங்களில் நாம காட்டுற அதிகப்படியான பாசமே அவளுக்கு வெறுப்பை உண்டாக்கிடும்” என்று பக்குவமாக எடுத்துச் சொன்னான். அவள் புரிந்து கொண்டது போல் தலையசைக்க, மூவரும் அவர்களது வீட்டிற்குச் சென்றனர்.
மனமுருக இறைவனை வழிபட்டு வந்தாகிவிட்டது; இனி அந்தத் தெய்வத்தின் சக்தியால் தன் தம்பி ஆதர்ஷ் விரைவில் குணமடைய வேண்டும் என்ற எண்ணமே ஆனந்தியின் உள்ளம் எங்கும் நிறைந்திருந்தது.
நேரம் பத்து மணியாகி இருந்ததால் உறக்கம் கண்களை சுழற்ற, வேறு எந்த நினைவுகளின் பிடியிலும் அகப்படாமல் அவள் நித்திரை வயப்பட்டாள்.
சென்னையில் கபிலன், நன்றாகப் பேசிய தோழியும் இல்லாமல், பெற்றோரும் இல்லாமல் தனி ஒருவனாக மொத்த வேலைகளையும் பார்த்து வந்தான். அவனுக்கு வேலையில் உதவுவதாக நடித்து, அவனை ஒரு வழியாக்கிக்கொண்டிருந்தான் ஆனந்த்.
“ஏண்டா! உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்னு இப்படிச் சித்ரவதை செய்றே? கொஞ்ச நேரமாவது நிம்மதியா வேலையைப் பார்க்க விடுறியா?” என்று சலித்துக் கொண்டான் கபிலன்.
“என்னடா பொல்லாத வேலை? மனுஷன் சரியா தூங்கி எத்தனை நாள் ஆகுது தெரியுமா? எல்லாம் உன்னால தான்டா எருமை மாடு!” என்று ஆனந்த் வசைபாடினான்.
“நானா?”
“பிறகு வேற யாரு?”
கபிலன் திருதிருவென முழித்துக்கொண்டு, “நான் என்னடா செஞ்சேன்? எனக்கே வீட்டுல சமைச்சுப் போடக்கூட ஆள் இல்லாம தனியா கிடந்து அல்லாடுறேன். இதுல உன்னை வந்து நான் தொல்லை செஞ்சுட்டேனா?” என்று அலுத்துக்கொண்டான்.
“ஏண்டா! சித்தப்பாவும் சித்தியும் ஊருக்குத் தானே போயிருக்காங்க. ஏதோ உன்னை விட்டுட்டு அவங்க மட்டும் தனிக்குடித்தனம் போன மாதிரி புலம்புறே?”
“ஏதே… தனிக்குடித்தனமா?”
அவன் அதிர்ந்து போய் பார்க்க, “அதான்டா, உன் தொல்லை இல்லாம அவங்க ரெண்டு பேரும் நிம்மதியா, தனியா இருக்கிறது!” என்று விளக்கினான் ஆனந்த்.
‘எனக்கு இதெல்லாம் தேவையா?’ என்று தலையில் அடித்துக்கொண்ட கபிலன், “இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை? அதையாவது சொல்லு,” என்றான். இல்லாவிட்டால் இவன் தன்னை விடமாட்டான் என்று அவனுக்குத் தெரிந்தது.
“வேற என்னத்தடா பெருசா கேட்கப் போறேன்… அது வந்து…” என்று அவன் இழுக்க, “எதுடா?” என்று மறுபடியும் முழித்தான் கபிலன்.
“அதான்டா எருமை மாடு! அன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்தோமே, அவளைத் தான்டா…” என்றதும், சட்டென இருக்கையை விட்டு எழுந்துவிட்டான் கபிலன்.
“ஏண்டா? ஸ்கூல் வாத்தியாரைப் பார்த்ததும் எழுந்து நிற்கிற ஸ்டூடண்ட் மாதிரி போஸ் கொடுக்கிறே?”
அவன் மறுபடியும் இருக்கையில் அமர, ஆனந்த் தொடர்ந்தான். “அன்னைக்கு அவள் என்னைப் பார்த்துச் சவால் விட்டுட்டுப் போனாடா. இப்போ அவள் எங்க இருக்கான்னு தெரிஞ்சாத்தானே அந்தச் சவால்ல நான் ஜெயிக்க முடியும்? அப்புறம் நம்ம இமேஜ் என்ன ஆகுறது?” என்று தன் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.
‘உன் இமேஜ் மேல வரணுங்கிறதுக்காக, என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தப் பார்க்கிறியேடா கிராதகா!’ என்று மனதிற்குள் திட்டினான் கபிலன்.
“சரி, சரி! என்னைப் பாராட்டிப் பேசினது போதும். இப்போ சொல்லு… அவள் யாரு? அவள் பேர் என்ன? அவள் இப்போ எங்கே இருக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டான் ஆனந்த். அவனிடம் பதில் சொல்ல முடியாமல் திணறினான் கபிலன்.
“ஏண்டா! ஒரு மனுஷன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து கேட்குறப்போ பதில் சொல்ல மாட்டியா? உனக்கு இந்த உலகத்துல பொண்ணாடா இல்லை?”
“இதே கேள்வியை நானும் உன்னை நோக்கித் திருப்பிக் கேட்கலாம். அதுவும் இல்லாம, உனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு ரெடியா தானே இருக்கு? அப்புறம் எதுக்குடா எனக்குப் பார்த்த பொண்ணைப் பத்தி இப்படித் துருவித் துருவிக் கேட்கிறே?” என்றான் கபிலன்.
“அது… அது வந்து… அவளை அடிக்கடிப் பார்த்துட்டு இப்போ பார்க்காம இருக்க முடியலைடா. அவகிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. அது அவளை நோக்கி என்னை இழுக்குற மாதிரித் தோணுது. ப்ளீஸ்… ப்ளீஸ்… சொல்லுடா கபிலா!” என்று கெஞ்சினான் ஆனந்த்.
இவனிடம் உண்மையைச் சொன்னால் போய்க் குட்டையை குழப்பி விடுவானோ என்ற பயம் கபிலனின் வாயை மூட வைத்தது. அதேசமயம், பின்னாளில் விஷயம் தெரிந்தால் அந்த ‘ராட்சக்ஷி’ தன்னையும் சேர்த்துச் சம்ஹாரம் செய்துவிடுவாள் என்பதால், “அன்னைக்கு அவள் பார்ட்டிக்கு வந்துட்டு, உன் பேச்சைக் கேட்ட கோபத்தில், ‘இந்த மாதிரியான ஆட்களிடம் பழகாதீங்க’ன்னு அட்வைஸ் பண்ணிட்டு, அவங்க ஊருக்குப் போயிட்டா. அதுக்கப்புறம் நான் அவளைப் பார்க்கவே இல்லை. இதுல எப்படி நான் உன்கிட்ட சொல்ல முடியும்?” என்று மழுப்பலாகப் பதிலளித்தான்.
“சூப்பர், சூப்பர்! அப்போ அவள் உனக்கு இல்லை. இனிமேல் தைரியமா பேசலாம். அவளோட ஃபோன் நம்பரைக் கொடு. இப்போ எங்க இருக்கான்னு அஞ்சு நிமிஷத்துல கண்டுபிடிச்சிடுறேன்!” என்றானே பார்க்கலாம்… கபிலனுக்கு மார்பு வலி வராத குறைதான்!
