Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 12

அத்தியாயம் : 12

திடீரென்று ஆனந்தி அமெரிக்கா செல்வதைப் பற்றிப் பேசியதும், பூபாலன் அதிர்ச்சியில் மூழ்கி அவளைப் புரியாமல் பார்த்தார். “என்னம்மா இது? திடீர்னு இப்படி ஒரு முடிவு? யாராவது உன் மனம் புண்படும்படி ஏதாவது பேசிட்டாங்களா?”

அவளது பெருகும் கண்ணீரை மீறி, ஒரு கசப்பான புன்னகை மட்டும் இதழ்களில் அரும்பியது. அந்தப் புன்னகை பூபாலனைப் பார்த்துக் குற்றம் சுமத்தியது. தனது அப்பாவைப் பற்றிய அத்தனை விபரங்களையும் விரல் நுனியில் தெரிந்து வைத்துக்கொண்டு, இப்போது வரை எதுவுமே தெரியாதது போல் அவர் ஆடும் நாடகம் அவளுக்கு அளவற்ற வேதனையளித்தது. அப்பா உயிரோடு இருந்தபோதே அவர் உண்மையைச் சொல்லியிருக்கலாம்; அல்லது இத்தனை நாட்கள் சென்னையில் தங்கியிருந்தபோதோ, குறைந்தபட்சம் இந்த ஊருக்கு வந்த பிறகேனும் சொல்லியிருக்கலாம். எதையுமே செய்யாமல் மௌனமாக இருந்துவிட்டு, இப்போதும் ஒன்றுமே தெரியாத அப்பாவியைப் போல் கேட்கிறாரே!

​‘அப்படி எனக்குத் தெரியாமல் மறைக்கும் அளவுக்கு, அந்தப் பழைய வீட்டுக்கும் அப்பாவுக்கும் பின்னால் என்ன ரகசியம் ஒளிந்து இருக்கிறது?’ என்ற கேள்விகள் அவள் மனதில் அலைமோத, மென்மையான அவளது முகம் ஒரு நொடியில் கல்லாய் மாறியது.



Advertisement

அவள் தனக்குள்ளேயே ஒரு பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதை பூபாலன் நன்கு புரிந்து கொண்டார். அன்புச்செல்வனைப் பற்றிய விஷயங்கள் அவளுக்குத் தெரிந்துவிட்டது! இதற்கு மேலும் அவளிடம் எதையும் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தார். அவளது அழுத்தமான பார்வை, கோபத்தில் சிவந்த முகம் மற்றும் அந்தக் கசப்பான புன்னகைக்கான அர்த்தம் அவருக்கு முழுமையாகப் புரிந்தது. அவள் ஆத்திரத்தில் ஏதேனும் தவறான முடிவிற்கு வருவதற்கு முன்பு, அதைத் தடுக்க வேண்டிய கடமை அவருக்கு இருந்தது.

​எனவே, அன்புவிற்கும் அவருக்கும் இடையில் இருந்த பழைய பழக்கத்தைப் பற்றியும், மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றியும் விரிவாகச் சொல்லத் தொடங்கினார் பூபாலன். அவர் சொல்லச் சொல்ல, அனைத்தையும் கேட்டவளின் கண்கள், பாரம் தாங்காமல் மடைதிறந்தாற்போல கண்ணீரை வடித்தன!

“ஆனந்தி, நீ இந்த அளவுக்குப் பலவீனமானவள் இல்லை. உங்க அப்பா உன்னை அந்த மாதிரி வளர்க்கவும் இல்லை. அமெரிக்காவில் தனி ஒருத்தியா இருந்து ராஜாங்கம் நடத்தியவள் நீ. இதுக்கு மேலும் உன்னைப் போட்டு வருத்திக்க வேண்டாம் அம்மா!” என்றார் பூபாலன் ஆறுதலாக.

Advertisement

​அவளோ, அவர் சொன்ன உண்மைகளை நினைச்சு வேதனை தாளாமத் துடிச்சாள்.

Advertisement

‘வீட்டுக்கு மூத்த வாரிசான என் அப்பா, ஒரு காலத்தில் தன் அம்மாவின் செல்லப்பிள்ளையாய் இருந்தவர். அந்தக் குடும்பத்தையே தூக்கி நிறுத்தும் மிக முக்கியமான பொறுப்பில் இருந்த நபர். யாரையும் ஒரு வார்த்தை கூடக் கடிந்து பேசத் தெரியாத மென்மையான மனிதர். அப்படிப்பட்டவரை, அவர் ஆசைப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்த காரணத்தால் இத்தனை வருஷங்களா ஊரை விட்டே ஒதுக்கி வச்சிருக்காங்களே!

​நான் அங்கே அநாதைன்னு எண்ணி ஏங்கி இருக்க, தம்பி, தங்கை, அம்மான்னு சொந்தங்கள் இருந்தும் கூட, அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார்னு ஒருத்தர் கூட விசாரிக்கத் துணியவில்லையே! உயிரோடு இருந்த மகனுக்குச் சந்தன மாலை போடும் அளவுக்கு, இவர்களால் எப்படி இவ்வளவு கல்நெஞ்சத்தோடு நடக்க முடிந்தது?’ என்ற கேள்விகள் அவள் நெஞ்சை அறுக்க, தாங்க முடியாத துக்கத்தில் தேம்பித் தேம்பி அழுதாள் ஆனந்தி.

“எல்லா உண்மையும் தெரிஞ்சுக்கிட்ட இல்லையா… பிறகும் ஏன் இப்படி அழுது உன்னை நீயே வருத்திக்கிறே?” என்று பூபாலன் மென்மையாகக் கேட்டார்.

Advertisement

அவளது அழுகை இன்னும் அதிகரித்தது. “காதலித்துக் கல்யாணம் செய்வது அவ்வளவு பெரிய குற்றமா அங்கிள்? அதுக்காகப் பெத்த பிள்ளையை இறந்து போனதா சொல்லி ஒரு குடும்பமே ஒதுக்கி வைக்குமா? எங்க அப்பா இத்தனை வருஷமும் தன் அம்மாவை நினைத்துத் தனியாகக் கலங்கினாரே, அந்தத் தாய்க்குத் தன் பிள்ளை மீது ஒரு துளி பாசம் கூடவா இருக்காது? இத்தனை சொந்தங்கள் இருந்தும், கடைசி வரை என் அப்பாவை அநாதையாகவே விட்டுட்டாங்களே!” என்று தன் நெஞ்சில் தேங்கிக் கிடந்த பாரத்தை வார்த்தைகளாகக் கொட்டி அழுது கதறினாள்.

​“எங்க அப்பா, தான் காதலித்த பெண்ணையே மணந்து அவருக்கு உண்மையா இருந்தார்! தன் பிள்ளைகள் மேல உயிரையே வச்சிருந்தார். ஆனா, அவரோட உள்ளம் இத்தனை வருஷமாத் தன் சொந்தங்களுக்காக ஏக்கத்தோடதானே தவிச்சது? பாசத்துக்காக ஏங்கிய என் அப்பா…” என்று விம்மி அழுத ஆனந்தியைப் பார்க்க முடியாமல் பூபாலன் தவித்துப் போனார்.

​“அம்மா ஆனந்தி! உன்கிட்ட இதையெல்லாம் எப்படிச் சொல்றதுன்னு தெரியாமதான் நானும் இத்தனை நாளா அமைதியா இருந்தேன். இப்போ எல்லாத்தையும் நீயே நேர்ல பார்த்தும் கேட்டும் தெரிஞ்சுக்கிட்டியே! இனிமேலாவது உண்மையைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோமா!” என்று அறிவுரை சொன்னார்.

​ஆனந்தி சட்டென்று தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். அவளது கண்களில் இப்போது அழுகைக்குப் பதில் வைராக்கியம் மின்னியது!

​“இனிமேல் நான் யாரிடமும் கேட்கவோ, எதையும் எதிர்பார்க்கவோ எதுவுமே இல்லை! எங்க அப்பாவை வேண்டாம்னு சொல்லி ஒதுக்கி வச்சிருந்த எந்த உறவுகளும் எனக்கும் தேவையில்லை! என் அப்பாவோட மனசைக் காயப்படுத்தி, அவரை அநாதையாத் தள்ளிவிட்ட இந்த உறவுகளை நானும் இதோ இன்றோடு விலக்கி வைக்கிறேன்!
​எனக்கும் என் தம்பிக்கும் எந்தப் பாதிப்பும் வந்திடக் கூடாதுன்னு, தன் உயிருக்கும் மேலா அமெரிக்காவிலேயே எங்களைப் பார்த்துக்கிட்ட என் அப்பாவின் அந்த நல்ல உள்ளத்துக்கு, நான் கடைசி வரை உண்மையா இருக்க ஆசைப்படுறேன்! அவர் கஷ்டப்பட்டு உருவாக்கின இந்தக் கோட்டையை நான் கட்டிக்காப்பேன்! இப்போதைக்கு என் ஒரே லட்சியம், என் தம்பி ஆதர்ஷின் உடல்நலம் சரியாவறது மட்டும்தான். அவன் குணமடைஞ்சா, அவனுக்காகவே என் வாழ்நாளை அர்ப்பணிப்பேன்!” என்று உறுதியாகச் சொன்னாள்.

செல்வா அவளைச் சமாதானப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தான். அவனை நிமிர்ந்து பார்த்த ஆனந்தியின் பார்வையில் மாற்றம் தெரிந்தது. அவன் ஒரு மருத்துவர் என்பதாலும், தன் குடும்பச் சூழலை அறிந்தவன் என்பதாலும் தன் மீது இரக்கப்பட்டு உதவுவதாக இதுவரை நினைத்திருந்தாள். ஆனால் இப்போது உண்மை வேறு! அவன் தனது சொந்த அத்தையின் மகன். அதனால்தான் சுபாஷினி கூட அன்று ஒருநாள் தெரியாமல் ‘அண்ணி’ என்று அழைத்துவிட்டுத் தடுமாறினாளா? அப்படியென்றால், இங்கே இருந்த எல்லாருக்கும் தன்னைப்பற்றித் தெரிந்தே இருந்திருக்கிறது; தான் மட்டும்தான் எதையும் அறியாத முட்டாளாக இவர்களிடம் பழகிக் கொண்டிருந்தோம் என்று நினைத்தபோது அவளுக்குத் தன் மீதே சொல்லொணா கோபம் வந்தது.

தன் தந்தை இருக்கும் வரை அவரது சொல்லை மீறாமல் வளர்ந்தவள், இப்போதும் அந்தப் பண்பை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இந்த உறவுகளுக்கு மத்தியில் இருப்பதை விட, மறுபடியும் அமெரிக்காவிற்கே சென்றுவிட வேண்டும் என்று திடமாகக் கருதினாள்.

சற்றும் தாமதிக்காமல் தனது உடைகளை எடுத்துப் பெட்டியில் அடுக்கத் தொடங்கியவள், தன்னை உடனடியாகச் சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு பூபாலனிடம் பிடிவாதமாக வேண்டினாள். அவர் எவ்வளவோ தடுத்தும், சமாதானம் சொல்லியும் அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

‘நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை, நானாகவே இங்கிருந்து செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, தன் பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவள் படியேறத் துணிந்தபோது, “ஒரு நிமிடம் நில் ஆனந்தி!” என்ற பூபாலனின் குரல் அவளைத் தடுத்தது.

அசையாமல் சிலையென நின்றவளை நோக்கி, “உங்க அப்பாவின் ஆசையை நிறைவேற்றி வைப்பது உன் கடமைன்னு சொன்னியே, அது நிஜம் தானா?” என்று அழுத்தமாகக் கேட்டார்.

“நிச்சயமா! இந்த உலகத்துல அவரைத் தவிர என் மேல உண்மையான பாசம் காட்ட வேற யாருமே இல்லை! மத்தவங்க எல்லாரும் வெறும் சந்தர்ப்பவாதிங்க!” என்று வார்த்தைகளால் அவரைத் தாக்கிப் பேசினாள் ஆனந்தி.

​“என்னைப் பார்த்தா உனக்கு அப்படித்தான் தோணுதா? அன்பு உயிரோட இருந்தப்பவும் சரி, அவன் மறைஞ்ச இந்த இடைப்பட்ட நாட்களிலும் சரி… எப்போவாச்சும் உன்னை எனக்கு அடிமையாக்க நான் நினைச்சதுண்டா? சில இக்கட்டான சூழ்நிலையால் உண்மையை உடனே உடைச்சுச் சொல்ல முடியலை. அதுக்காக என்னையும் ஒரு மோசமான மனுஷனா நீ முடிவு பண்ணிடுவியா?” என்று ஆற்றாமையுடன் வினவினார்.

அவள் ஒரு கணம் மௌனித்தாள்.

“நான் நினைச்சிருந்தா இதையெல்லாம் உன்கிட்ட சொல்லாமலே, நேரடியா உன் அப்பா வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் உன்னை ஒப்படைச்சிருக்க முடியாதா? எதுக்காக செல்வா கிட்ட உன்னை விட்டுட்டு, உன்னையும் ஆதர்ஷையும் பத்திரமாப் பார்த்துக்கணும்னு நினைச்சேன்னு கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்க மாட்டியா?” என்று தன்னிரக்கத்துடன் கேட்டார்.

​“அங்கிள்! அப்பா உயிரோட இருக்கிற வரை நீங்க செஞ்சது சரியா இருக்கலாம். ஆனா, அவர் மறைவுக்குப் பிறகு நீங்க செஞ்சது தப்பு! அமெரிக்காவுல என் தம்பியைக் கண்ணும் கருத்துமாப் பார்த்துட்டு வர்ற எனக்கு, சென்னைக்கு வந்த பிறகாவது நடந்ததைச் சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு, செல்வா கிட்ட பொறுப்பை ஒப்படைச்சு என்னை ஒரு சூழ்நிலைக் கைதியா மாத்தப் பார்த்திருக்கீங்க!

​அவர் ஒரு ஆண், நான் ஒரு பெண்… எத்தனை காலம் அவரோட பாதுகாப்புல என்னால இருக்க முடியும்னு யோசிச்சீங்களா? என் வாழ்க்கையை முடிவு செய்யுற உரிமையை உங்க யாருக்கும் நான் தரலையே!” என்று அவள் சரமாரியாகக் கேள்வி கேட்க, அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

​“எங்க அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும்! யார் எப்படிச் சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. நான் பிறந்ததுல இருந்து சாகுற வரைக்கும் அவர் மகளா இருக்குறதுல பெருமைப்படுறேன்! இனி என் வாழ்க்கையில தம்பியைத் தவிர வேற எதுவும் இல்லை!” என்று தீர்க்கமாகப் பேசினாள்.

“அப்படின்னா, இந்த ஊரும் ஊர்மக்களும் கடைசி வரைக்கும் இப்படியே கஷ்டப்படட்டும்னு சொல்றியா ஆனந்தி?” என்று குறுக்கிட்டான் செல்வா.

​அவள் அவனிடம் பேசப் பிடிக்காதது போல் முகத்தைத் திருப்பிக்கொள்ள, செல்வா தொடர்ந்தான். “இங்க இருக்கிற நிலைமை ரொம்பவும் சிக்கலானது. அதைச் சொல்லி உன்னை இங்கிருந்து துரத்த எங்களுக்கு மனசில்லை. நேர்ல பார்த்த பிறகுதான் நீ இங்கிருந்து போகணும்னு நினைக்கிறே… ஒருவேளை முன்னாடியே தெரிஞ்சிருந்தா இங்க வந்திருப்பாயா? மாமா செஞ்சது தப்புன்னு நாங்க சொல்லல, ஆனா அவரால் உருவான சிக்கலைச் சரிசெய்யத்தான் இப்போ முயற்சி செய்றோம்.

​நீ அவர் வாரிசா இருந்து எங்களுக்கு உதவாம, எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு எடுக்குறது சரியா? இந்த ரெண்டு ஊர்களுக்கும் இடையில இருக்கிற இந்தப் பகை இப்படியே நீடிக்கணுமா? அன்னைக்கு ஒரு நாள் உன் தாத்தா கோபத்தைக் காட்டினார்… இப்போ அதே இடத்துல உட்கார்ந்து உன் மாமா கோபத்தைக் காட்டுறார்! உன் அப்பா இருக்க வேண்டிய இடத்துல இருந்துக்கிட்டு அதிகாரத்தைச் செலுத்தி எல்லாரையும் அடிபணிய வைக்கிறார்.

​இந்த ரெண்டு ஊர் மக்களும் பழைய பகையை மறந்து ஒற்றுமையா வாழ வேண்டாமா? எப்பவும் வெட்டு, குத்து, ரத்தம்னுதான் இருக்கணுமா?” என்று ஆத்திரத்தை அடக்க முடியாமல் கேட்டான்.

அவள் ஏற்கனவே அவன் மூலம் உண்மைகளை அறிந்திருந்தாலும், தற்போதைய மனநிலையில் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை.

“சாதி பார்த்துப் பழகணும், சாதி பார்த்துதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு, சாதி வெறியில அலைஞ்சு ஆணவக் கொலைகள் செய்றதைப் பத்தி நீ கேள்விப்பட்டது இல்லையா? மகளோட வாழ்க்கை அழிஞ்சாலும் பரவாயில்லை, தன் சாதிக்காரனைத்தான் கட்டிக்கணும்னு பிள்ளைகளோட வாழ்வைச் சிதைக்கிற பெற்றோரை நீ பார்த்தது இல்லையா?”

​“ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்தமதி, கல்வி, அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்…”

​“பாரதியோட இந்த வரிகளை யார், எதுக்காகப் பாடினாங்கன்னு தெரியுமா? வெளிநாட்டுல படிச்ச உனக்கு இங்க இருக்கிற எதார்த்தம் என்ன தெரியப் போகுது?” என்று கொதித்தான் செல்வா.

​“சாதி இல்லை, மதம் இல்லை, மனுஷ இனம் ஒண்ணுதான்னு வார்த்தையில சொன்னா மட்டும் போதாது; அதைச் செயல்லயும் காட்டணும்! உன் அப்பாவால ஆரம்பிச்ச இந்தப் பிரச்சனை இன்னைக்கு வரைக்கும் ஓய்ந்தபாடில்லை. அவரோட மகளா இருந்து அதைச் சரி செய்யாம, ‘போறேன்… போறேன்’னு சொல்றியே… உனக்கும் உன் மாமனுக்கும் என்ன வித்தியாசம்? இந்த ஊர் மக்கள் மேல உனக்கு இருக்கிற பாசம் இவ்வளவுதானா? நீயும் ஒரு சுயநலவாதினு நிரூபிக்காதே!” என்றான் செல்வா.

அவள் முகம் இறுகிப் போய் இருக்க, செல்வாவை அமைதிப்படுத்திவிட்டு ஆனந்தியின் அருகில் சென்றார் பூபாலன்.

“உன்னைப் பொறுத்தவரை நாங்க சுயநலவாதியா இருந்தா, எங்களை மன்னிச்சிடு அம்மா! நீ சொன்னது போல, சென்னையிலேயே உண்மையைச் சொல்லி இருக்கணும். உண்மையைச் சொன்னா நீ கோவிச்சுக்கிட்டு போயிடுவியோன்னு பயம்தான் என்னை வாய் திறக்க விடாம தடுத்தது. அதுக்காக நீ எந்தத் தண்டனை தந்தாலும் ஏத்துக்கிறேன். ஆனா, இந்த ஊரை விட்டுப் போறதா மட்டும் சொல்லாதே!” என்று தழுதழுத்த குரலில் வேண்டினார்.

​தனக்காக எவ்வளவோ செய்த மாமாவைத் தவறாகப் பேசிவிட்டோமே என்று அவள் உள்ளம் துடித்தது. ஆனாலும், சூழல் தன்னைக் கொண்டு வந்து நிறுத்திய இடத்தை எண்ணிக் கண்களும் மனதும் கலங்கியது.

​“உன் அப்பா மேல நீ வச்சிருக்கிற பாசம் எனக்குத் தெரியும். அவருக்குப் பிடிக்காத எதையும் நீ செய்யமாட்டே… உண்மையைச் சொன்னா நீ ஊருக்கு வர மாட்டேன்னு தெரிஞ்சதால்தான் மறைச்சேன். இப்பதான் எல்லாம் தெரிஞ்சுடுச்சே… இனிமேலும் கோபப்பட்டு உன்னை நீயே தாழ்த்திக்க வேண்டாம்! உங்க அப்பாவோட சொல்லைக் கேட்டு நடப்பேன்னு சொன்னவ, அவரோட கடைசி ஆசையையாவது நிறைவேற்றப் பாரு!” என்றார் பூபாலன்.

அவள் என்னவென்று ஏறிட, அவர் ஒரு காகிதத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினார்.

“இது உன் அப்பா விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில இருந்தப்போ, வக்கீல் கிட்ட கொடுத்து என்கிட்ட ஒப்படைக்கச் சொன்னது. உனக்கு இது தெரிய வேண்டாம்னு இத்தனை காலமா மறைச்சேன். இனிமேலும் இதை மறைக்கிறதுல அர்த்தமில்லை.

ஒரு அப்பாவா உன்கிட்ட அவர் நடந்துக்கிட்டதுக்கும், நண்பனா என்கூட அவர் பகிர்ந்துக்கிட்டதுக்கும் உள்ள வித்தியாசம் இதைப் படிச்சா உனக்கே புரியும். இதுக்கு மேல என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணு! நானும் செல்வாவும் உன் முடிவுக்குக் கட்டுப்படுறோம்!” என்றார்.

அவள் அமைதியாக அந்தக் காகிதத்தைப் பிரித்துப் படித்தாள். அவளது தந்தை அன்புச்செல்வனே நேரில் வந்து நின்று பேசுவது போல் இருந்தது. வரிகளில் தெரிந்த அவரது ஏக்கங்கள், அவளது கண்களில் கண்ணீராகக் கசிந்தன. ‘இப்படி ஒரு அப்பாக்கு மகளாப் பிறக்க நான் என்ன புண்ணியம் செஞ்சேனோ!’ என்று நெஞ்சம் விம்மினாள் ஆனந்தி!

மறுநாள் காலை வரை யாரும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. தந்தை அன்புவின் நினைவுகள் அவள் மனதை ஆக்கிரமித்திருந்தன. அப்பாவின் மனதில் இத்தனை ஆசைகள் இருந்திருக்கும் என்று அதுவரை அறியாத ஆனந்தி, தனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரின் ஆசையை நிறைவேற்றத் துணிந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!