Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 14

அத்தியாயம் 14

 

பல்லவியின் முகத்தில் புதிதாய் ஒரு ஒளிவட்டம் உருவாகி இருந்தது. அதைப் பார்த்தபின் அவளை எதுவும் சொல்லவும் முடியவில்லை அவளன்னை சித்ராவிற்கு.


Advertisement

 

இரண்டு மாதங்களாய் அத்தனை மகிழ்ச்சியாய் இருக்கிறாள். அதற்கு முன்பும் பெரிதாய் எதற்கும் கவலை கொள்ள மாட்டாள் தான் என்றாலும் இப்பொழுது கிடைத்திருக்கும் இந்த கல்வி வாய்ப்பில் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.

Advertisement

Advertisement

 

படித்தே தீர வேண்டும் என அத்தனை வைராக்கியம் அவளிடம் இருந்தது தான். சில வருடங்கள் காத்திருந்து வேலை செய்து சேமித்து அதன்பின் தான் படிக்கவே முடியும் என பல்லவி நினைத்திருக்க, கீர்த்திஸ்வரன், லதாவின் மூலம் கிடைத்திருக்கும் இந்த உதவியில் ஏக சந்தோஷம் தான்.

Advertisement

 

கேட்டு நச்சரித்தாள் தான் என்றாலும் அது உறவின் உரிமையாய் கேட்டுக் கொண்டது இல்லவே இல்லை. கடந்த மூன்று மாத கால இடைவெளியில் இவர்களுக்குள் உருவாகிய பிணைப்பின் அடிப்படையில் தான் எடுத்துக் கொண்டாள் அதை.

 

இவர்களால் செய்ய முடியும் என்பதோடு செய்வார்கள் என்ற எண்ணமும் எல்லாம் பார்க்கும் எவரிடமும் எதிர்பார்த்திட முடியாதது தான். அது மனமும் சம்பந்தமாகிய ஒன்று. அப்படி தான் பல்லவிக்கும் நடந்து கொண்டிருந்தது.

 

“அவங்ககிட்ட எதுக்கு கேட்ட நீ? போனா போன வேலையை மட்டும் பார்த்துட்டு வர மாட்டியா?” என்று முதலில் திட்ட தான் செய்தார் சித்ரா.

 

அடுத்து தான் பல்லவி லதாவை அலைபேசியில் பேச வைத்து சித்ராவை வாய் திறக்கவே விடவில்லை.

 

இப்பொழுதும் கூட, “சின்ன சின்ன செலவை எல்லாம் நான் பார்த்துக்கணும் ம்மா. அதுக்கு எதாவது பண்ணனும். படிச்சு நல்ல வேலைக்கு போய் இந்த படிப்பு செலவுக்கான மொத்த பணத்தையும் குடுத்துட்டு லதாம்ம்மா பெருமைப்படுற மாதிரி நான் நிக்கணும்!” என அதையும் அத்தனை மகிழ்ச்சியாய் கூறி இருந்தாள் பல்லவி அன்னையிடம்.

 

படிப்பு அவளது கனவு என சித்ராவும் அறிவார் தான். இருந்தாலும் கீர்த்திஸ்வரன் உதவி என்னவோ மிகப் பெரிதாய் தான் தெரிந்தது அவருக்கு.

 

அதுவும் பல்லவி திருப்பிக் கொடுத்துவிடுவேன் என உறுதியாய் சொல்லியதில் கொஞ்சம் மனமும் சமன்பட்டது. மகள் ஆசைப்படி அனைத்தும் நடக்கட்டும் என வேண்டிக் கொண்டார்.

 

“லதாம்மா!” என்ற சத்தத்தோடு அவர்கள் வீட்டினுள் பல்லவி நுழைய, டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மகேஸ்வரன் திரும்பிப் பார்க்க,

 

சட்டென்று அமைதியானவள் தலை தாழ்த்திக் கொண்டு லதாவின் அறைக்குள் ஓடிவிட்டாள்.

 

“இன்னுமா இந்த பொண்ணு வந்துட்டு இருக்கா?” மகேஸ்வரன் சொல்லியது அங்கிருந்த தேவி காதுகளில் விழ, அவர் சத்தமே கொடுக்கவில்லை.

 

குளியலறையில் இருந்து லதா வெளிவரவும் அறைக்குள் பல்லவி செல்லவும் சரியாய் இருந்தது.

 

“லதாம்மா!” என்ற பல்லவிக்கு அத்தனை மகிழ்ச்சி லதா எழுந்து நடந்து வருவதைக் கண்டு.

 

“என்ன சத்தமே இல்லாம வந்து நிக்குற நீ? அதிசயமா இருக்கே!” என லதா கேட்க,

 

“வெளில மாமா சாப்பிட்டுட்டு இருக்காங்க!” என ஹுஸ்கியாய் பல்லவி சொல்ல,

 

“ஓஹ்! அதானா? மாமா தானே? போய் பக்கத்துல உக்காந்து சாப்பிடு” லதா கிண்டலாய் சொல்ல,

 

“என்ன? என்கிட்டயே லந்தா? நாளைல இருந்து பல்லவி பிஸி. படிக்க போறா. அதான் பிளெஸ்ஸிங் வாங்கிட்டு போகலாம்னு வந்தா…” என்றவள் சொல்லில்,

 

“ஆமால்ல! மறந்தே போய்ட்டேன் பாரு. நல்லா படி. அதுக்காக வீட்டுக்கு வராம இருந்துடாத!” என்றார் அருகில் வந்து.

 

“ஹ்ம்!” என புன்னகைத்தவள் அவர் காலில் விழுந்து எழ, முகம் வழித்து புன்னகைத்து கன்னம் தட்ட, வெளியில் கார் செல்லும் சத்தம்.

 

“உன் மாமா கிளம்பியாச்சு போல. வா நாம சாப்பிடலாம்!” என அவளோடு வெளிவந்தார் லதா.

 

மூன்று மாதங்களுக்கு மேலாய் வந்து போய் இருந்தாலும் இன்னமும் நேராய் மகேஸ்வரனிடம் மட்டும் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை பல்லவி.

 

அதே போல சாப்பிடும் இடம் சென்றாலும் கூட காபியோடு நிறுத்திக் கொள்வாள். எவ்வளவு வற்புறுத்தினாலும் உணவு எடுத்துக் கொள்ள மாட்டாள்.

 

“அஞ்சலி, ஈஸ்வர் சார் எல்லாம் வெளில போயாச்சா?” பல்லவி கேட்டபடி லதாவிற்கு பரிமாற,

 

“நீயும் சாப்பிடேன்!” என்றார்.

 

“நான் சாப்பிட்டு தான் வந்தேன். எனக்கு தேவிக்கா காபி மட்டும் போதும்!” என்று பல்லவி சொல்ல, ஈஸ்வர் வந்துவிட்டான்.

 

“ஹாய் சார்!” என்ற பல்லவியின் உற்சாகக் குரலில்,

 

“ஹ்ம் வா!” என்ற ஈஸ்வர்,

 

“என்ன ரெண்டு நாளா ஆளைக் காணும்!” என்று கேட்க,

 

“அவங்க பிஸி ஈஸ்வர். நாளைல இருந்து படிக்க போறாங்களாம். இனி நாம நினைச்ச நேரத்துக்கு எல்லாம் பார்க்க முடியாது!” என்றார் லதா.

 

“ஓஹ்!” என்றவனும் புன்னகைக்க,

 

“லதாம்மா! வந்ததுல இருந்து ஓவரா கிண்டல் பண்றீங்க!” என்று முறைத்தவள் லதாவிடம் பேசியபடி இருக்க, கீர்த்திஸ்வரன் அலைபேசியைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை கூட பல்லவி தான் லதாவிடம் பேசிக் கொண்டே இருந்தாள். அதற்கு சுவாரசியமாய் கதைகளும் இருந்தது அவளுக்கு.

 

இந்த இடைப்பட்ட மாதங்களில் இவர்களின் பேச்சுக்கள் தெரிந்தவனும் பெரிதாய் அதை கேட்டுக் கொள்ளவில்லை.

 

“செக்கப் அடுத்து எப்போ லதாம்மா?” என அவள் கேட்க,

 

“இனி போகணுமானு பார்த்துக்குவோம் டா. இன்னும் இருபது நாளுக்கு டேப்லெட் இருக்கு. அப்புறம் எப்படினு பார்த்துப்போம்!” என்றார் அவரும்.

 

“ம்மா! ஆபீஸ் போறேன். சைட்டுக்கு அப்பா போய்ட்டாங்க. மதியம் முடிஞ்சா வர்றேன்!” என்று ஈஸ்வர் எழுந்து கொள்ள,

 

“சரி டா பார்த்து போய்ட்டு வா!” என்றார் லதா.

 

தலையசைத்து அவன் நான்கு அடிகள் எடுத்து வைக்க, “ஈஸ்வர் சார்!” என பல்லவி அழைக்கவும் அவன் நின்ற நேரம் காபியை கீழே வைத்துவிட்டு அவன் முன் வந்தவளை கீர்த்திஸ்வரன் கேள்வியாய் பார்க்க,

 

“பிளெஸ் மீ சார்!” என நொடியும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் பாதத்தில் இவள் பணிந்து நிற்க,

 

“ஹே!” என இரண்டடி பின் சென்றான் ஈஸ்வர்.

 

நிமிர்ந்தவள் பளிச்சென்று புன்னகைக்கவும் ஈஸ்வர் முறைக்க, “எதாவது நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க சார். நானும் படிக்க போறேன்ல!” என்றவளைக் கண்டு இன்னும் அவன் முறைப்பை விட்டபாடில்லை.

 

“என்னவாச்சும் செஞ்சு நெஞ்சை தொட்டுட்றா பாரு!” என்ற லதா சிரிக்க,

 

“எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு போ. என்ன நீ?” என்றவன் சொல்லில்,

 

“ப்ச்! என்னோட கல்வி தெய்வம் நீங்க. உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்காம எப்படி சார்? வீட்டுல உங்களுக்கு போட்டோ மாட்ட போறேன்” என்றவள் சொல்லில்,

 

“அது சரி. ம்மா!” என்றவன் அன்னையிடம் திரும்பிப் பார்க்க,

 

“விடு டா. அவளுக்கு சொல்லணும்னு இருந்துச்சு கேட்டுட்டா. நீயும் தான் ரெண்டு வார்த்தை நல்லதா சொல்லேன்!” என லதாவும் சொல்ல,

 

“இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும். இனி இப்படி பண்ணின!” என்று ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை போல சொல்லி,

 

“நல்லபடியா படிச்சு முடி!” என்று சொல்லி சென்றுவிட்டான்.

 

அடுத்து ஒரு மணி நேரம் லதாவுடன் இருந்து பேசிவிட்டு தான் கிளம்பி இருந்தாள் பல்லவி

 

அடுத்தடுத்த நாட்கள் ஆவலாய் எதிர்பார்த்து அழகாய் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருந்தது பல்லவிக்கு.

 

முதலிலேயே எந்த பல்கலைக்கழகம் என கேட்டு அதற்கான படிவம் வாங்கி அவளிடமே கொடுத்துவிட்டான் கீர்த்திஸ்வரன்.

 

“காலேஜ் அட்மிஷன் எல்லாம் நீயே பண்ணிடலாம்ல?” என லதா மகனிடம் கேட்டிருக்க,

 

“அதெல்லாம் வேண்டாம் ம்மா. பல்லவியும் அவங்க அம்மாவும் எல்லாம் பார்த்துக்கட்டும். பீஸ் சம்மந்தமா எதுவா இருந்தாலும் உங்ககிட்ட அவளை சொல்ல சொல்லுங்க. அதை மட்டும் நீங்க பார்த்துக்கோங்க!” என பல்லவி மற்றும் அன்னை பொறுப்பில் கல்லூரி சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டான் அவன்.

 

சித்ராவுடன் சென்று தான் கல்லூரியில் சென்று சேர்ந்து வந்திருந்தாள்.

 

அதன் பின் எல்லாம் அவளுக்கு படிக்க வேண்டிய வேலை மட்டும் தான். தினமும் கற்று கொள்ள ஆரம்பித்தாள்.

 

ஏனோதானோ என்றில்லை. அவளுக்கான அறிவை வளர்த்துக் கொள்ள அவளே முன் வந்திருந்த நேரம் அது.

 

நேரத்தை படிப்பில் அதிகமாக்கி இருக்க, லதாவைப் பார்க்க செல்லும் நேரம் வாரம் ஒருமுறை என்றாகி பின் மாதம் ஒருமுறை என்று வந்து நின்றது.

 

லதாவும் அதற்கு கிண்டல் செய்வாரே தவிர்த்து அவளை புரிந்து கொண்டதோடு, “என்னை மறக்காம இருந்தா சரி தான்!” என்றிருந்தார்.

 

இப்போது மற்ற அனைத்திற்கும் அவள் தனியே செல்ல பழகிக் கொள்ள வேண்டும் என்று அவளே முடிவு செய்து இதோ இன்று புத்தகங்கள் வாங்கவென்று வந்தவள் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.

 

கீர்த்திஸ்வரன் வீடு இருக்கும் தெருவை தாண்டி தான் செல்ல வேண்டும். அங்கே தெருவின் முடிவில் அஞ்சலியைக் கண்டவள் தான் கண்ட, அவளிடம் தெரிந்த வித்தியாசத்தையும் கண்டு அங்கேயே பேருந்தில் இருந்து இறங்கிவிட்டாள் பல்லவி.

 

“அஞ்சலி!” என பல்லவி அழைத்ததில் நின்று திரும்பிய அஞ்சலி கண்களை துடைத்துக் கொண்டாலும் இன்னும் அவளிடம் இருந்து கேவல் வந்து கொண்டு தான் இருந்தது.

 

“என்ன நீ ரோட்ல அழுதுட்டு போய்ட்டு இருக்க? என்னாச்சு? ஸ்கூல் ஹால்ஃப் அ டேவா? எப்படி வந்த?” என ஒரே நேரத்தில் அதிக கேள்வி பல்லவி கேட்க, பாவமாய் விழித்தவள் உதடுகள் எல்லாம் துடித்தது அஞ்சலிக்கு.

 

“முதல்ல ரிலாக்ஸ் ஆகு. இதை குடி!” என தண்ணீரை கொடுத்த பல்லவிக்கு என்னவென்று தெரியாமல் மனதுக்குள் பதட்டம் தான் என்றாலும் அதை அவளிடம் காட்டி இன்னும் அவள் பயந்துவிட கூடாதே என அத்தனை பொறுமையாய் கையாண்டாள்.

 

 

“சரி வா வீட்டுக்கு போகலாம்!” என பல்லவி கூற,

 

“நான்.. நான் போய்க்குறேன். நீங்க கிளம்புங்க!” என்றாள் அஞ்சலி.

 

அவளின் பயம் புரிந்தாலும் இப்படியே எப்படி விட்டு செல்ல என பார்த்த பல்லவி,

 

“சரி நான் போறேன். நீ வீட்டுக்கு போ” என்று சொல்ல,

 

“நான் போய்க்குவேன்!” என்றவள் இன்னும் நின்ற இடத்தில் இருந்தே கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

 

“அஞ்சலி! இப்படி ரோட்ல நின்னு அழலாமா? ஒரு பொண்ணு இப்படி அழவே கூடாது எதுக்கும். தைரியமா ஃபேஸ் பண்ணனும். போய் எதுவா இருந்தாலும் உன் அம்மாகிட்ட பேசு!” என பல்லவி சொல்ல,

 

“ம்ம்ஹும்!” என மறுத்தவள்,

 

“நான் போவேன். நீங்க போங்க!” என்றாள் அப்போதும்.

 

எதுவோ சரி இல்லை என்று தெரிந்தாலும் அழுத்தி கேட்டு சங்கடப்படுத்த பல்லவி விரும்பாமல் நிற்க,

 

“அழுதுட்டே போனா பிரச்சனையாகிடும். அம்மாக்கு தெரிய வேண்டாம். அப்புறம் ஸ்கூல் அனுப்ப மாட்டாங்க. நான் பாத்துக்குறேன்!” என்ற அஞ்சலி முகத்தை அழுந்த துடைத்து தன்னை சரிசெய்ய, பல்லவி அப்பொழுது தான் அதிர்ந்து இன்னும் சுதாரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!