Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-12

அத்தியாயம்-12

மறுநாள் காலையில் விடிந்தும் விடியாத நேரத்தில் அறையின் கதவு உடைந்துவிடும் போல “டம்..டம்” என்று தட்டப்பட.. அதிதி திடுக்கிட்டு விழித்து யாரென்று பார்க்க கதவைத் திறந்தாள்..

திறந்ததுதான் தெரியும் மறுகணம் அவள் இடக்கன்னத்தில் தீச்சுட்டார்போல காந்தியது, அப்போதுதான் தான் அறை வாங்கியிருப்பதையே உணர்ந்தாள்..

கை தானாக கன்னத்தை  தொட கண்கள் கலங்கி போய் நின்றவளின் முன்னால் பத்ரகாளி போல நின்றிருந்தாள் வைஷாலி..

என்ன நடக்கிறது என்று அதிதி கிரகித்துக்கொள்ளும் முன்னமே அவளை உள்புறமாக தள்ளிவிட்டுவிட்டு உள்ளே வந்தாள் வைஷாலி.



Advertisement

“ஏன்டீ என்கிட்ட இந்தப்பக்கம் நல்லவ வேஷம் போட்டுட்டு அந்த பக்கம் என் முதுக்குல குத்திட்டல்ல?” என்றாள் ஆத்திரம் பொங்க..

இவள் ஒன்றும் புரியாமல் விழிக்க..

“ஆகா என்னா நடிப்பு .. இப்படி ஒன்னுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சிகிட்டுதானே  ஊர ஏமாத்திக்கிட்டு இருக்க..” என்று அவளை அடிக்க மீண்டும் கை ஓங்க.. ஓங்கிய கரத்தைப் பற்றி தடுத்தாள் வர்ஷினி..

Advertisement

“என்ன நீங்கபாட்டுக்கு ரூமுக்குள்ள வந்து ரவுடியிசம் பண்ணிட்டு இருக்கீங்க? இந்த கை நீட்டுற வேலையெல்லாம் வேணாம்..” என்றாள் காட்டமாக..

Advertisement

“உன் ஃப்ராடு ஃப்ரண்டு பண்ண வேலைக்கு அவளை தூக்கிவச்சி கொஞ்சுவாங்களா?” என்றாள் ஏளனமாக

“சும்மா வந்ததுல இருந்து இதையே சொல்லிட்டு இருக்காதீங்க.. என்ன விஷயம்ன்னு முதல்ல சொல்லுங்க..”

“ஓ உங்களுக்கு விலாவரியா விளக்குனா தான் புரியும் இல்ல.. இதோ இப்பவே காட்டுறேன்..” என்று தன் கைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினாள்.

Advertisement

அதில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படம் இருந்தது.

அந்த ஆணின் முகம் தெரியாமல் முதுகு புறமாக அந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டிருந்தது, ஆனாலும் அவன் அணிந்திருந்த ஜெர்ஸிலில் “VASI 10” என்ற பெயர் பெரிதாக தெளிவாகத் தெரிந்தது.

அந்தப்பெண்ணின் முகம் சரியாகத் தெரியாவிட்டாலும் அவள் அணிந்திருந்த உடை மற்றும் அங்க அடையாளங்களை வைத்து அவளை அறிந்தவர்களால் அது அதிதிதான் என்பதை ஊகிக்கமுடியும்.

வர்ஷினி அதிர்ந்து போய் நிற்க, அவளிடமிருந்து போனை வாங்கி பார்த்த அதிதியின் முகம் வெளுத்தது.

அந்த புகைப்படம் அவர்களின் கல்லூரி இன்ஸ்டாகிராம் குரூப்பில் பதிவிடப்பட்டிருந்தது… நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே பார்த்திருந்தனர்.

மொபைலை பிடித்திருந்த அதிதியின் கைகள் நடுங்கியது..

‘யார் இந்த வேலையை செய்திருப்பார்கள்? இந்தப் போட்டோவில் இருப்பது  நான்தான் என்று தெரிந்துவிட்டால் என்னால் வெளியே தலைக்காட்ட முடியுமா? இல்லை இந்த காலேஜில் தான் என்னைப் படிக்க அனுமதிப்பார்களா?’ அவளுக்கு கண்ணைக்கட்டிக்கொண்டு வந்தது..

அவள் நிலையை பார்த்து சட்டென்று சுதாரித்த வர்ஷினி அவளைக் கையைப் பிடித்து கட்டிலில் அமரவைத்தாள்.

“இங்க பாருங்க மிஸ்.. வாட்எவர்.. நீங்க எதுக்கு இங்க வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்கன்னு எனக்கு இன்னும் புரியல.. இந்த போட்டோக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .. மொதல்ல வெளிய போங்க..” என்றாள் கோபமாக..

“சம்மந்தம் இல்லையா? எங்கே அவள சொல்ல சொல்லு பார்க்கலாம்.. அந்த போட்டோல இருக்கறது அவ இல்லைன்னு..” என்று சவால் விட்டாள்.

“அவ யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நான் வார்டன் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்றதுக்குள்ள ஒழுங்கா கெளம்பிடுங்க..”

“அடுத்தவ ஆளுக்கு அலையிறா.. உன் ஃப்ரண்ட்ட கேக்க துப்பில்லை என்ன கம்ப்ளெயிண்ட் பண்ணுவியா? இரு நானே பிரின்சிபல்கிட்ட கம்ளெயிண்ட் பண்ணி அவள காலேஜவிட்டே தூக்குறேன்..” என்றாள் வன்மத்துடன்..

வர்ஷினி பேசாமல் ஃபோனை எடுத்து காட்டி..

“வார்டன்ன கூப்பிட்டு சீனியர் ஜூனியர ராகிங் பண்றாங்கன்னு சொல்லப்போறேன்.. அப்போ தெரியும் யாரு சீட் கிழியும்ன்னு..”

அவர்களின் கல்லூரியில் ராகிங்கிற்கு கடுமையான தண்டனைக் கிடைக்கும் என்று வைஷாலிக்கும் தெரியும்.. என்ன இருந்தாலும் அவள் அதிதியை அறைந்தது அவளுக்கு எதிராகத்  திரும்பக்கூடும் என்றும் அவளுக்குத் தோன்றியது.

ஆனாலும் இவளிடம் தோற்பதா என்று ஈகோவும் இடித்தது.. அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் சிலையாக அமர்ந்திருந்த அதிதியின் புறம் திரும்பி..

“பாத்துக்கறேன்டீ உன்னை.. என் வசியை வசியம் பண்ணி என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல்ல.. இனி இந்த காலேஜுல நீ எப்படி குப்பை கொட்டுறேன்னு நானும் பாக்கறேன்… போட்டோல மூஞ்சி தெரியாததால தப்பிச்சிடலாம்ன்னு நெனைச்சிடாத.. நானே சொல்லுவேன் ஒவ்வொருத்தர் கிட்டயா போய் சொல்லுவேன் அது நீதான்னு.. இனிமே ஒரு நாள் உனக்கு இங்க நிம்மதியா கழியாது..” என்று சாபம் விட்டுவிட்டுப் போனாள்.

அவள் சென்றதும் கதவை சாத்தி தாளிட்டுவிட்டு அதிதியிடம் வந்து ..

“என்னடி இதெல்லாம்..?” என்றாள் வர்ஷினி சற்று கடுமையாகவே.

அதிதி அழாக்குறையாக பார்க்க

“அன்னிக்கு நீ என்ன முடிவு பண்ண? இனிமே வசீகரன் வேணான்னு தானே.. அப்புறம் ஏன்டீ அவன போய் கிஸ் பண்ண?”

“நான் இல்லடி அவந்தான் கிஸ் பண்ணான்..”

“பெரிய பொறுக்கியா இருப்பான் போல..கேர்ள்ஃப்ரண்ட் இருக்கும் போதே இன்னொருத்திய கிஸ் பண்றான்..” என்றாள் கடுப்புடன்.

“ஏய் அப்படிலாம் சொல்லாதடி..”

“என்ன நொப்புடி சொல்லாதடி..? இப்பயும் அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு வறியா நீ..? உனக்கு இதோட சீரியஸ்னஸ் புரியுதா இல்லையா? ஆனா இப்படி போட்டோ எடுக்கறது கூட தெரியாமயா இருப்ப..?”

“அந்த இடத்துல யாருமே இல்லடி.. எந்த கடன்காரன் எங்க இருந்து போட்டோ எடுத்தான்னே தெரியல.. போட்டோ எடுத்ததும் இல்லாம இப்படி குரூப்லயும் போட்டுவிட்டுட்டான்.. எத்தனை பேர் பார்த்திருப்பாங்களோ.. நான் தான்னு தெரிஞ்சிருக்குமா…?ஆனா போட்டோ எடுத்தவனுக்கு நான் யாருன்னு தெரியும்தானே.. எல்லார் கிட்டையும் சொல்லிடுவானா? அவன் சொல்லலைன்னாலும் இந்த விஷ பாட்டில் வைஷாலி சொல்லிடுவாளே.. என்னை காலேஜ விட்டு அனுப்பிடுவாங்களா??அய்யோ அப்பா அம்மாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்..?போச்சி எல்லாம் போச்சி என்னோட லைஃபே போச்சி..” என்று புலம்பினாள்.

“ஏய் சும்மா இருடி.. ரொம்ப ஓவர் திங்க் பண்ணாத.. தைரியமா இரு..என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்..” என்று தானும் அந்த பிரச்சனையில் இருப்பது போல தன்னையும் சேர்த்துக்கொண்டாள்.

அதிதி அவளைக்கட்டிக்கொண்டு கதறிஅழுதாள்.பின்பு சற்று ஆசுவாசம் அடைந்ததும்

“ஆனா வசீகரனும் பாவம்தான், அவன் முகம் தெரியலைன்னாலும் பேர் தெரிஞ்சிடுச்சே..” என்று அவனுக்காக பரியவும்..

“போதும் அவனுக்கெல்லாம் நீ பாவம் பாக்காத, அவனாலதான் உனக்கு இந்த நிலைமை.. அவன் ஆம்பள அவன யாரும் கேக்க மாட்டாங்க.. அப்படியே பிரச்சனை வந்தாலும் அவங்க அப்ப பெரிய ஆளு பார்த்துப்பாரு.. நீ உன்ன நினைச்சி மட்டும் கவலப்படு அது போதும்..” என்றாள் வர்ஷினி கறாராக..

அன்று வசீகரனின் பிறந்தநாளில் அவன் அப்பா அவனிடம் கடுமையாக பேசிய விதத்தைப் பார்த்தால் அவர் எந்த அளவுக்கு அவனுக்கு ஆதரவாக இருப்பார் என்று தெரியவில்லை என்று   மனதில் நினைத்ததை வர்ஷினியிடம் சொல்லாமல் தவிர்த்தாள் அதிதி.

வசீகரன் பிரின்சிபல் அறையில் தலைகுனிந்து நின்றிருந்தான்.

அருகில் அவனது தந்தை பிரின்சிபலின் எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்த நான்கு வருடத்தில் பரிசு வாங்கவும் பாராட்டு பெறவும் மட்டுமே அந்த அறைக்குள் பெரும்பாலும் வந்திருக்கிறான். ஆனால் இப்போது குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் கைதி போல் தலைகுனிந்து நிற்கிறான்.

அதுவும் போதாக்குறைக்கு அவன் அப்பாவையும் வரவழைத்து உட்கார வைத்திருக்கின்றனர்.

அம்மாவை அவரிடமிருந்து பிரித்த பாவத்திற்கு தன்னால் முடிந்த வரையில் அவருக்கு நிம்மதியையும் நற்பெயரையும் சம்பாதித்து தரலாம் என்று நினைத்தவனுக்கு அந்த பெரிய மனிதருக்கு மேலும் கஷ்டத்தையும் தலையிறக்கத்தையும் ஏற்படுத்திவிட்டோமே என்று மறுகினான்..

அவரை நிமிர்ந்து கூட பார்க்கமுடியாமல் கூனிக் குறுகி போனான். அவரது முகத்தில் தெரியும் ஏமாற்றத்தையோ வெறுப்பையோ காணும் சக்தி அவனுக்கு இல்லை. அதைக்கண்டுவிட்டால் அவன் முற்றிலும் உடைந்து போய்விடுவான்.

“என்ன விஷயம் சார்.. எதோ அர்ஜெண்ட்டுன்னு வர சொன்னீங்க.. சீக்கிரம் சொன்னா நல்லாருக்கும்.. யூ நோ ஐயம் ய பிஸி மேன்..” என்றார் கைகடிகாரத்தில் நேரம் பார்த்தபடி.

பிரின்சிபல் தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி..

“பொறுங்க சார்.. அதை சொல்லத்தானே வர சொல்லியிருக்கேன்.. மொதல்ல இதைப்பாருங்க..” என்று தன் லாப்டாப்பை அவரது பக்கம் திருப்பிக்காட்டினார்.

“உங்க பையன் செஞ்சிருக்க வேலைய பாருங்க.. இது ரெப்பியூட்டட்(REPUTED) இன்ஸ்டியூட் சார்.. இந்த மாதிரி ஒழுங்கீனமான செயலுக்கெல்லாம் இங்க இடம் இல்ல..”

அந்த போட்டோவைப் பார்த்த சிவசந்திரன் என்ன நினைத்தாரோ தெரியாது, ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை, அவர் எதுவும் பேசாமல் இருக்க..

பிரின்சிபல்தான் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

“அந்த போஸ்ட்ட உடனே நாங்க எடுத்துட்டோம்.. ஆனா அதுக்குள்ள நெறைய பேர் பார்த்திருக்காங்க.. காலேஜ் பேர வேற டேக்(TAG) பண்ணி நெறைய ஷேர் பண்ணிட்டாங்க.. காலேஜ் மானமே போகுது சார்.. பேரண்ட்ஸ் கிட்ட இருந்து ஃபோன்மேல ஃபோன் வருது.. ‘என்ன காலேஜ் நடத்துறீங்க.. இதான் நீங்க எங்க பிள்ளைகளை பார்த்துக்கற லட்சணமான்னு’ கேக்குறாங்க சார்.. நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”

“இருங்க சார்.. இது வெறும் போட்டோ அதுவும் முகம் தெரியாம அவுட் ஆஃப் ஃபோகஸ்ல இருக்கு.. அதை ஏன் இவ்ளோ பெரிய இஷ்யூ ஆக்குறீங்க..?மொதல்ல அதுல இருக்கறது என் பையன்தான்னு எதை வச்சி முடிவு பண்ணீங்க..?” என்றார் சிவசந்திரன் நிதானமாக.

முதன் முறையாக தலையை நிமிர்த்தி தன் தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தான் வசீகரன். போட்டோவைப்பார்த்ததும் கோபப்படுவார் என்று நினைத்ததற்கு மாறாக தனக்கு ஆதரவாகப் பேசுகிறாரே என்று வியந்தான்.

“என்ன சார் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுறீங்க.. அவன் போட்டிருக்க சட்டையிலதான் அவன் பேர் கொட்டை எழுத்துல தெரியுதே.. அதுவும் பத்தலைன்னா..கீழ “சிருஷ்டி பிரின்ஸ் ஃபவுண்ட் ஹிஸ் நியூ பிரின்ஸஸ்” ன்னு கேப்ஷன் வேற போட்டிருக்காங்களே.. எங்க காலேஜ்ல பிரின்ஸ்னா வசிதான்னு எல்லாருக்குமே தெரியும்..”

“இருக்கட்டும் சார் இது என் பையனாவே இருந்தாலும் என்ன பிரச்சனை..அவன் ஒன்னும் பப்ளிக்கா பண்ணலையே..சுத்தியும் யாரும் இல்ல.. இது ஒரு அந்தரங்கமான விஷயம் இதுக்கும் உங்க ரெப்யுட்டேஷனுக்கும் என்ன சம்பந்தம்..?”

“சார்..உங்க பையன் ஒன்னும் சாதாரணமான ஸ்டூடண்ட் கிடையாது, காலேஜ் வேலிடிக்ட்டோரியன் (VALEDICTORIAN), கல்சுரல் செகரெட்டரி, ஸ்போர்ட்ஸ் டீம் கேப்டன்.. அவன் எது பண்ணாலும் அதை எங்க காலேஜோட தொடர்புபடுத்திதான் பார்ப்பாங்க..அப்படி பட்டவன் மத்தவங்களுக்கு முன்உதாரணமா இருக்க வேண்டாமா? இப்ப இவ்ளோ நாள் இவனால காலேஜுக்கு கிடைச்ச நல்லபேர், மரியாதை எல்லாமே போச்சே.. ஐயம் ஹைலி டிஸ்ஸப்பாய்ண்ட்டட் இன் ஹிம்..” என்றார் கோபமாக..

“நீங்களே சொல்றீங்க என் பையன் தான் காலேஜ்ல பெஸ்ட் ஸ்டூடண்ட்ன்னு .. அப்புறம் எதுக்கு அவன ஒரு குற்றவாளி மாதிரி நடத்துறீங்க..

இந்த வயசுல எதிர் பாலினத்தினர் மேல ஈர்ப்பு  வர்றதெல்லாம் சகஜம் தான், இதைப்போய் பெரிய தப்பு மாதிரி பேசிட்டு இருக்கீங்க..

நீங்க இங்க அட்ரெஸ் பண்ண வேண்டிய விஷயமே வேற.. இந்த போட்டோவ எடுத்து இப்படி போஸ்ட் போட்டது யாருன்னு பார்த்து அவங்களதான் நீங்க தண்டிச்சிருக்கணும்.. அதைவிட்டுட்டு என் பையன நிக்க வச்சி அவமானப்படுத்திட்டு இருக்கீங்க.. அவன் இதுல விக்டிம் சார்..”

“என்ன சார் பேசுறீங்க.. காலேஜ்ங்கறது ஒரு புனிதமான இடம். இதுல இந்த மாதிரி மோசமான பிஹேவியர்லாம் நாங்க அனுமதிக்க மாட்டோம்.”

“அப்போ இந்த காலேஜ்ல இதுக்கு முன்னாடி யாருமே இப்படி பண்ணியிருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்களா?”

“இப்படி விதண்டாவாதம் பண்ண உங்கள இங்க வர சொல்லல… எங்க காலேஜோட பேர், இமேஜ், எல்லாமே இதுல அடங்கி இருக்கு சார்..”

“சரி இப்ப என்ன பண்ணனும்ன்னு சொல்றீங்க..?”

“மொதல்ல அந்த பொண்ணு யாருன்னு சொல்ல சொல்லுங்க சார்..அவங்க பேரண்ட்ஸையும் வர வச்சி பேசனும்…நாங்க எவ்ளோ கேட்டாலும் உங்க பையன் அந்த பொண்ணு பேரை சொல்ல மாட்டேங்குறான்..”

“அவன் சொல்லமாட்டான் சார்..எதுக்கு சார் சொல்லனும்? அப்புறம் அந்த பொண்ணையும் இப்படி கூப்பிட்டு வச்சி அவமானப்படுத்துவீங்க..” என்றவர் சட்டென்று தன் மகனின் பக்கம் திரும்பி

“டேய் தம்பி.. யாரு கேட்டாலும் நீ சொல்லாதடா..” என்றார்.

“சார் ஒரு பேரண்ட்டா பொறுப்பா பேசுங்க சார்.. மத்த பேரண்ட்ஸ்க்கு எங்க இன்ஸ்டிடியூட் மேல இருக்கற நம்பிக்கையே போயிடும் போல.. எங்க கவுரவமே இதுல அடங்கியிருக்கு சார்..”

“அப்போ எங்களுக்கெல்லாம் கவுரவம் இல்லையா சார்? என்  பையனோட பிரைவேட் மொமெண்ட்ட ஒருத்தன் இப்படி பப்ளிக்கா படம் புடிச்சிப்போட்டிருக்கான். இது சைபர் கிரைம் சார்.. அவனை கேக்காம என் பையன கொஸ்ட்டீன் பண்றீங்க..

நீங்க ஒரு சைபர்கிரிமினல காப்பத்திட்டு இருக்கீங்க.. இப்ப கண்டுக்காம விட்டீங்கன்னா நாளைக்கு உங்க ஆபீஸ்குள்ளயே கேமரா வைப்பான் அப்போ தெரியும் உங்களுக்கு என் பையனோட வலி… நெறைய பொண்ணுங்க படிக்கற நிறுவனம் இது, நீங்க உடனடியா தப்பு பண்ணவன கண்டுபுடிச்சி எக்ஸ்போஸ் பண்ணா.. பேரண்ட்ஸ்க்கு உங்க மேல நம்பிக்கை வரும்… நம்ம பொண்ணுங்கள இப்படி யாரும் படம் புடிக்க மாட்டங்கன்னு அப்பதான் அவங்களும் பாதுகப்பா உணருவாங்க.. இந்த மாதிரி கிரிமினல் புத்தி உள்ளவங்களுக்கும் தப்பு பண்ணா மாட்டிக்குவோம்ன்னு பயம் வரும்..”

“நீங்க சொல்றது புரியுது சார்.. ஆனாலும் பேரண்ட்ஸ்க்கு நான் பதில் சொல்லி ஆகனுமே..”

“அப்போ தப்பே பண்ணாத என் பையன தண்டிப்பீங்க.. தப்பு பண்ணவன் ஜாலியா சுத்துவான் அப்படித்தானே.. ஓகே சார் இப்ப என்ன..என் பையனுக்கு டீசி தரப்பேறீங்களா? குடுங்க சார்.. உங்க டிகிரியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். என் பையன் என் பிசினஸ பார்க்க உங்க ஒன்றையணா டிகிரி அவனுக்குத் தேவையில்லை.. வசீ வாடா கெளம்பலாம்..

நம்ம கமிஷனர் அங்கிள்கிட்ட சொல்லி அந்த சைபர் கிரிமினல கண்டுபுடிக்க சொல்லலாம்.. இவங்கலாம் சரிபட்டு வரமாட்டாங்க..அந்த கிரிமினல்லயே வச்சி நல்லா சீராட்டட்டும்…

ஆனா நான் இதை சும்மாவிடமாட்டேன்.. போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி பார்த்துக்கறேன்..”

என்று கோபமாக எழுந்து வசீகரனின் கையைப்பற்றி நடக்கத் தொடங்கினார்.

அதுவரை ஜம்பமாக அமர்ந்திருந்த பிரின்சிபல் சட்டென்று எழுந்து இவர்களிடம் ஓடி வந்து.

“சார்.. நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க சார்..

உங்க பையனுக்கு யாரும் டிசி கொடுக்கப்போறதில்ல.. யுனிவர்சிட்டி கோல்ட்மெடல் வாங்கப்போறான் சார் வசி..

இப்போதைக்கு மத்த பேரண்ட்ஸ் திருப்திக்காக சஸ்பெண்ட் பண்றதா சும்மா சொல்லப்போறோம் அவ்ளோதான். நடுவுல ஒருநாள் வந்து ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணிட்டு அப்புறம் கிராஜுவேஷனுக்கு வந்தாப்போதும்.. நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க நான் எல்லாம் பாத்துக்கறேன்..” என்று சமாதானமாக பேசினார்.

சிவசந்திரன் தன் மகனைக் கேள்வியாகப் பார்க்க..

“எனக்கு ஓகே பா..” என்றான் வசீகரன். என்ன இருந்தாலும் நாலுவருடம் கஷ்டபட்டு படித்த டிகிரியை தூக்கிப்போட மனம் வரவில்லை அவனுக்கு.

“எங்களுக்கு ஓகேதான்  சார்… ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண மட்டும் வசி வருவான்.. எனிவே அவனுக்கு ஃபாரீன் யுனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ற வேலை இருக்கும் அதனால கிராஜுவேஷனுக்குலாம் வர மாட்டான்.” என்று உறுதியாக கூறிவிட்டு அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!