Skip to content
Post Views: 4,059
தூறல் – 27
அன்று அஞ்சலியின் பிறந்தநாள்.
Advertisement
அதிகாலையிலேயே குடும்பமாக எழுந்து மடமடவென கிளம்பி தயாராகிக் கொண்டிருந்தனர் மூவரும். அந்த ஊரின் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்வதற்காக குடும்பமாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அவள் அங்கு வந்த பின்பு எந்த கோவிலுக்கும் சென்றதில்லை. ராதா வற்புறுத்தி அழைத்தும் உடன்பட்டதில்லை. குருவின் நேசமுகம் அவளை நோக்கி திரும்பியபின் அவன்தான் ராமேஸ்வரம் முழுக்க ஆங்காங்கே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்.
அங்கு இருந்த இத்தனை ஆண்டுகளில் அத்தைக்காக அவ்வப்போது அதிலும் விடாத வற்புறுத்தலில் வேறு வழியின்றி சில நேரங்களில் கோவிலுக்கு உடன் சென்றிருக்கிறான் குரு. ஆனால் அவனாக விரும்பி எந்த கோவிலுக்கும் சென்றதில்லை. தெய்வ நம்பிக்கை என்பது அவனை விட்டு மறைந்து போயிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று அவனே விரும்பி தன் குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்ல ஆசையோடு கிளம்பிக் கொண்டிருக்கிறான்.
Advertisement
Advertisement
அவன் அவளுக்காக ஆசையாக தேர்வு செய்து கொடுத்த பட்டுப் புடவையை பாங்காக உடுத்தி, முதல்நாள் இரவே மொட்டாக வாங்கி நெருக்கமாக ராதா தொடுத்துக் கொடுத்த மல்லிகைச் சரத்தை தலையில் சூடி அழகுக் குவியலாக கிளம்பி வந்தவளை பார்த்த குருவின் விழிகள் இங்கும் அங்கும் சுழலவே இல்லை. அவளை மட்டுமே விழுங்கிக் கொண்டிருந்தன. அவன் பார்வையின் அழுத்தத்தில் அவளுக்கு வெட்கம் ஏறி முகம் சிவந்து போனது.
அவள் கிளம்பி வருவதற்கு முன் மகளுக்கு என்று எடுத்திருந்த குட்டி பட்டுப் பாவாடை சட்டையை உடுத்தி அவளையும் தயார் செய்து வைத்திருந்தான் குரு. மகளின் அழகில் சொக்கி ஆசையாக அள்ளி முத்தமிட்டவன் எதிரில் நிற்கும் தன் உரிமையாளவளை அள்ளிக் கொஞ்ச ஆசை பிறந்தும் மகளின் முன்னிலையில் எதனையும் நிகழ்த்த முடியாமல் அனைத்தையும் தனக்குள் கட்டுப்படுத்தினான்.
Advertisement
சவியை அவளிடம் ஒப்படைத்து உடைமாற்ற அவன் அறைக்குள் நுழைந்திருந்தான். தாய் தகப்பனோடு வெளியே கிளம்புகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள் சவி.
வேஷ்டி சட்டை உடுத்தி வெளியில் வந்து நின்ற அந்த அறேகால் அடி ஆண்மகனை பார்த்தவள் வாயை பிளந்திருந்தாள். இந்த கோலத்தில் இன்றுதானே முதன்முறை பார்க்கிறாள். வேட்டி உடுத்தினால் ஆண்களின் அழகும் கம்பீரமும் கூடி விடுமா..? இல்லை என்னவன்தான் இத்தனை அழகாக தெரிகிறானா..? அநியாயத்திற்கு அழகாக இருக்கிறானே.
தன்னையும் மீறி அவன் கன்னம் வழித்து அவள் நெட்டி முறிக்க பற்கள் தெரிய சிரித்து இன்னும் அவளை அழகில் கொன்றான் குரு.
“அம்மு… அப்பாவோட பர்ஸ் அறையில இருக்கு… போய் எடுத்துட்டு வாடா…”
மகளிடம் செல்லமாக பணிக்க குடுகுடுவென அறைக்குள் ஓடி இருந்தாள் சவி. அவள் உள்ளே நுழைந்ததுதான் தாமதம். பட்டென தன்னவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்திருந்தான் குரு.
“ஹாப்பி பர்த்டே அஞ்சுக்குட்டி…”
ஆசையாக கூறி காதலோடு அவள் கன்னத்திலும் முத்தமிட்டான்.
“இந்த வாழ்த்து சொல்ல இவ்வளவு நேரமா..?” செல்லமாய் சிணுங்கினாள் அஞ்சலி.
“அம்மு முன்னால முத்தம் கொடுக்க சங்கடமா இருக்குடி… முத்தம் கொடுக்காம வாழ்த்து சொல்லவும் மனசு வரல…”
கண்கள் சுருக்கி கொஞ்சலோடு சொன்னவனை எக்கி நெற்றியில் முத்தமிட்டு “என் வாழ்க்கையில எனக்கு தெரிஞ்சு நான் சந்தோஷமா கொண்டாடுற பிறந்தநாள் இதுவாதான் இருக்கும்…” என்றவளின் குரல் நெகிழ்ந்திருந்தது.
“இனி உன்னுடைய எல்லா பிறந்தநாளும் இதைவிட சந்தோஷமா கொண்டாடலாம்… சரியா…”
அவள் கன்னம் பற்றி மென்மையாய் கூறி மூக்கில் முத்தமிட்டு வேகமாய் விலகி நின்றான்… மகள் ஓடி வந்திருந்தாளே.
உண்மையில் அஞ்சலி மனப்பூர்வமாய் மகிழ்ந்து நிற்கும் பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிறந்தநாள் என்ற ஒன்றையே மொத்தமாக மறந்து போயிருந்தாள். அவள் வெறுத்த நாட்களில் அதுவும் ஒன்று. இன்று அந்த நாளை மீண்டும் ரசிக்கும் ஒரு நாளாக விரும்பும் ஒரு நாளாக மாற்றி அமைத்திருந்தான் அவளவன்.
மகளை அவன் தூக்கிக் கொள்ள கையில் சிறு பையை எடுத்துக்கொண்டு அவளும் கிளம்ப வீட்டை பூட்டிக் கொண்டு இருவரும் வெளியேறி வந்தனர். அக்கம்பக்கம் இருந்தவர்கள் பழக்கவழக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை பார்த்து சினேகமாக கண்களில் ஒருவித பிரமிப்போடு சிரித்து விலகிச் சென்றனர். இருவரும் அத்தனை அழகாக இருந்தனரே.
அண்டை வீட்டு சசி சிரித்தபடியே எதிரில் வந்தார்.
“புருஷனும் பொண்டாட்டியும் குழந்தையோட வெளியே கிளம்பிட்டீங்க போல… இன்னைக்கு கல்யாண நாளா..?”” அஞ்சலியிடம் அவர் கேட்க “இல்லக்கா… என் பிறந்தநாள்…” என்று சிரித்தாள் அஞ்சலி.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சலி… ஒரு சாக்லேட் கூட கிடையாதா..?”
செல்லமாக முகத்தை சுருக்கிக் கொண்டு கேட்டவரிடம் “கண்டிப்பா ட்ரீட் உண்டு அக்கா… கோயிலுக்கு போயிட்டு வந்து கொடுக்கலாம்னு இருந்தோம்…” என்று பதில் அளித்திருந்தான் குரு.
“இருக்கட்டும்… கோயிலுக்கு போயிட்டு வந்துட்டு மறக்காம ராதாக்காட்ட சொல்லி ரெண்டு பேருக்கும் சுத்திப்போட சொல்லுங்க… உங்க ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அழகா இருக்கு…”
மனம் நிறைந்து சொன்னவரிடம் இவர்களும் இதழ் நிறைந்து புன்னகைத்து விடைபெற்று ராதாவின் வீட்டை நோக்கிச் சென்றனர்.
இவர்களுக்காகவே வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார் ராதா. முகாமில் அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்க அவர்களுக்கென ஏற்கனவே வாங்கி வைத்திருந்த உயர்தர சாக்லேட்டை அவள் மூலமாகவே கொடுக்கச் செய்திருந்தான் குரு.
“சசி அக்காவுக்கும் இதையே கொடுத்திருக்கலாம்… நானும் நினைக்கல…” என்றாள் அஞ்சலி.
“வழியில பார்த்து கொடுத்தா மரியாதையா இருக்காது அஞ்சு… அவங்க வீட்டுக்கு போய் கொடுக்கணும்… அதனாலதான் சாயந்தரம் கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன். முதல்ல அவங்களுக்குதான் கொடுத்து இருக்கணும் .நம்ம விஷயத்துல என்னை பொறுத்தவரைக்கும் அவங்கதான் பிள்ளையார் சுழி போட்டு வச்சது…” என்றவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் அஞ்சலி.
ராதாவின் காலில் விழுந்து எழுந்தவளை அள்ளித் தூக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தார் ராதா. இருவரையும் ஜோடியாக கண் நிறைத்துப் பார்த்தவருக்கு அவர்களை திருமணக் கோலத்தில் பார்த்தது போன்றே மனம் பூரித்துப் போனது. தன்னையும் மீறி கண்கள் பனித்து நின்றன.
“இப்பவே மஞ்சள் கயித்தை உன் கைல கொடுத்து இவ கழுத்துல கட்டச் சொல்லோணும் போல இருக்கு குமரா… ரெண்டு பேரும் நிறைஞ்சு இருக்கீங்க… மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு… கோயிலுக்கு போயிட்டு வாங்க…” மனப்பூர்வமாய் வாழ்த்தி அவர்களை கிளம்பச் செய்தார்.
“அப்போ நீங்க வரலையாம்மா..?”
“இல்லடா… கோயில் பிரகாரம் முழுக்க என்னால சுத்த முடியாது… உனக்கே தெரியுமே… இப்போதான் கால்வலி கொஞ்சம் மட்டுப்பட்டு இருக்கு. உங்களுக்கு அருமையா சமையல் பண்ணி வைக்கிறேன்… நீங்க போயிட்டு வாங்க…”
அதற்குமேல் அவர்களும் அவரை வற்புறுத்தவில்லை.
“குமரா கோயில்ல கூட்டம் எப்படியும் அதிகமாதான் இருக்கும். முழுக்க எல்லா சன்னிதானமும் சுத்த முடியலேன்னாலும் மறக்காம அர்த்தநாரீஸ்வரர் சன்னிதானத்துக்கு போகாம வந்துடாதீங்க. அந்த அர்த்தநாரீஸ்வரர் மாதிரி ஒருத்தருக்குள்ள ஒருத்தரா நீங்க ரெண்டு பேரும் காலாகாலத்துக்கும் சந்தோஷமா இருக்கணும்…”
“சரிங்க அத்தை…” என்றவன் ஆட்டோவை அமர்த்தி கொண்டு அவர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பி இருந்தான்.
கோவில் வழக்கம் போன்றே கூட்டம்தான். வெவ்வேறு ஊர்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் மக்கள் எந்நேரமும் அங்கு வந்து குவிந்து கொண்டுதானே இருக்கின்றனர். காத்திருந்து பர்வதவர்த்தினி உடன் அமர் ராமநாதசுவாமியை மனம் உருக பிரார்த்தனை செய்து அந்த அகன்ற கோவில் முழுக்க வலம் வந்து ராதா கூறிய அர்த்தநாரீஸ்வரர் சன்னிதானத்திலும் வணங்கி கிறங்கிப் போய்தான் வீடு வந்து சேர்ந்தனர்.
ராதா தயாராய் வைத்திருந்த பிரியாணியை குடும்பமாக அமர்ந்து அனைவரும் மகிழ்வோடு உண்டனர். மீண்டும் வீடு திரும்பியவர்கள் மறக்காமல் சசியின் வீட்டிற்கு சென்று குரு பிரத்தியேகமாக வாங்கியிருந்த இனிப்புப் பெட்டியை கொடுத்து தங்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
உறங்கி இருந்த சவிக்கு மெலிதான உடையை மாற்றிவிட்டு அவளை படுக்கையில் கிடத்தி தானும் உடையை மாற்றிக் கொண்டு வந்தாள் அஞ்சலி.
டி ஷர்ட், லுங்கி அணிந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கால் நீட்டியபடி அருகில் படுத்திருந்த மகளின் தலையை மெல்ல வருடியபடி அமர்ந்திருந்த குருவின் அருகில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.
அவனது மற்றொரு கை வளைவிற்குள் நுழைந்து கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள். குனிந்து மகளின் முகத்தையே பார்த்திருந்தவன் அவளது செயலில் புன்னகைத்தபடி மென்மையாய் அவளது முதுகை அணைத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ்…”
தொண்டையை அடைத்துக் கொண்டுதான் இந்த வார்த்தை வெளியே வந்தது.
குனிந்து அவளைப் பார்த்தவன் அவள் நாடியை பிடித்து நிமிர்த்த முயல நிமிராமல் இன்னும் அழுத்தமாக அவன் நெஞ்சோடு முகத்தை அழுத்திக் கொண்டாள் அஞ்சலி.
அவள் அழுகிறாள் என்பது தெரிந்தது.
“ஏய்… அஞ்சு… இங்க பாரு…”
அவள் கன்னம் பற்றி முகத்தை நிமிர்த்த முயல “என்னை இப்படியே விட்ருங்க… நான் அப்படியே படுத்து தூங்கிடுறேன்… அழ மாட்டேன்… ஆனா கொஞ்சம் அழுதுக்கிறேன் ப்ளீஸ்…”
அவளது இந்த வார்த்தையில் அவன் இதயம் உருகியது.
“என்னடி இது..? காலைல இருந்து எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்.. பிறந்தநாள் அதுவுமா அழுவாங்களா..? அழற அளவுக்கு இப்ப என்ன ஆயிடுச்சு..?”
அன்பான குரலில் கேட்டவன் தன் விரல் கொண்டு அவள் கண்ணீரை துடைத்தான்.
“இன்னைக்கே என் கழுத்துல நீங்க தாலி கட்டி இருக்கலாம். அஞ்சலி குமரகுருன்னு எனக்கான அடையாளத்தை நீங்க கொடுத்திருக்கலாம். நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவீங்க… நானும் பாப்பாவும் உங்களை விட்டுட்டு எப்படி இருக்கப் போறோம்…”
“விசரி… இதுக்குத்தான் அழுகையா..? நீங்க ரெண்டு பேரும் இல்லாம நான் மட்டும் அங்கே எப்படி இருப்பேன்னு நினைக்கிற..? இந்த பத்து நாள் என் வாழ்க்கையில இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு நானே நினைக்கலையே. என் அஞ்சுக்குட்டியையும் சவிக்குட்டியையும் விட்டுட்டு மதுரைக்கு போறதை நினைச்சாலே மனசு பாரமாதான்டி இருக்கு. வேலைக்கு போறது வேற விஷயம்… அங்கே தீர்க்க வேண்டிய பெரிய விஷயம் நிறைய இருக்கு… அதெல்லாம் சரி பண்ண வேணாமா..?”
“அதுதான் எனக்கு பயமா இருக்கு… நீங்க தனி ஆளா நின்னு எப்படி ஹேண்டில் பண்ணப் போறீங்க..? எப்படி பேசப் போறீங்க..? அந்த பண வெறி புடிச்ச பிசாசுக் கூட்டம் வந்து உங்களுக்கு தேவையில்லாம பிரச்சனையை கொடுத்துடுவாங்களோன்னு அந்த பயமும் எனக்கு இருக்கு. என்னால இங்க நிம்மதியாக இருக்க முடியாது தெரியுமா..?”
தலையை உயர்த்தி அவன் முகம் பார்த்தபடியே வேதனையோடு கூறியவளின் நெற்றி மீது தன் கன்னத்தை பதித்துக் கொண்டான் குரு.
“அதைப்பத்தி எல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா..? எல்லாத்தையும் தெளிவா ஹேண்டில் பண்ணிடுவேன்டி… நீ ஏன் தேவையில்லாம பயப்படுற..? என்னோட ரெண்டு கண்ணையும் காப்பாத்தி என் பார்வையை தக்க வச்சுக்க வேண்டிய பெரிய பொறுப்பு எனக்கு இருக்கு. உங்களை அப்படி விட்டுக் கொடுத்துடுவேனா..? வரட்டுமே… எத்தனை பேர் வேணாலும் வரட்டும்… நான் பார்த்துக்கிறேன். நீ கண்டதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம நிம்மதியா இரு. அடுத்து இங்கே நான் வரும்போது ஒரு தெளிவான முடிவோடதான் வருவேன். என் அஞ்சுக்குட்டியை என் செல்லக்கிறுக்கியை முழுக்க முழுக்க எனக்கு உரிமையாக்குற முடிவோடதான் இங்கே வருவேன். நம்ம கல்யாணம் சீக்கிரமா நடந்துடும் கண்ணம்மா…”
அதிராத குரலில் சொன்னவனின் கழுத்தோடு கட்டிக்கொண்டு அவன் தோளில் புதைந்து கொண்டாள் அஞ்சலி.
“ஏன்டா எனக்கு இவ்வளவு அன்பை காட்டின..? உன்மேல பைத்தியமாகற அளவுக்கு என்னை ஏன் இப்படி மாத்தின..? வாழ்க்கைமேல வெறுப்போட வாழவே பிடிக்காம இருந்தவளுக்கு ரசனையோட வாழ மனசுக்குள்ள நிறைய ஆசையை உருவாக்கி கொடுத்துட்டடா. அந்த வாழ்க்கையை நான் உன்கூட வாழணும். என்னையும் என் பொண்ணையும் இப்படி பைத்தியம் ஆக்கி வெச்சிட்டியே…”
ஆசையும் நேசமும் அதிகமாகும்போது வாடா போடா என்று அவள் அழைப்பது அவனுக்கு அத்தனை பிடித்தம். அவனை கட்டியபடியே அவள் பேசியவற்றை கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் இறுதியாக பேசிய வார்த்தைகளில் அவளை விலக்கி செல்லமாய் முறைத்தான்.
“உன் பொண்ணா..? கொன்னுடுவேன்… அவ என் பொண்ணுடி…”
“சரி சரி… நம்ம பொண்ணு…”
“அதெல்லாம் கிடையாது… என் பொண்ணுதான்…”
“சரி… உங்க பொண்ணாவே இருக்கட்டும்… நான் ஒரு பையனைப் பெத்து என் பையனாவே வளர்த்துக்கிறேன். அப்போ நம்ம பையன்னு என்கிட்ட சொல்லிப் பாருங்க அப்போ இருக்கு உங்களுக்கு…”
பேச்சுவாக்கில் அவள் சொல்லிக் கொண்டிருக்க கண்களும் இதழ்களும் குறும்பில் குறுகுறுக்க அவளையே ஆழ்ந்து பார்த்தான் குரு.
“அந்த முட்டக் கண்ண வச்சு என்ன பார்வை..? உங்களுக்கு ஒரு பொண்ணுன்னா எனக்கு ஒரு பையன் வேணாமா..?”
குறும்பு கொப்பளிக்கும் முகத்தோடு அவன் இதழ் மடக்கி புன்னகைக்க படபடவென பொரிந்து கொண்டிருந்தவள் தான் பேசியவற்றை அப்போதுதான் முற்றிலுமாக உணர்ந்திருந்தாள்.
“பையன் வேணுமா உனக்கு..?”
அவள் முகத்தின் அருகே குனிந்து ஹஸ்கி குரலில் கேட்டவனின் பார்வை வேறு பரிமாணத்தில் இருந்தது.
ஜிவ்வென உடல் முழுக்க சிலிர்த்தவள் அவன் கண்களை பார்க்க முடியாமல் எங்கெங்கோ சுழற்றி பின் தன்னை சமாளித்துக் கொண்டு “ஆ..ஆமா… வேணும்தான்… வேணாமா பின்னே..?” என்றாள் வேண்டுமென்றே குரலை சற்றே உயர்த்தி.
“நீ சொன்ன மாதிரி பேசாம இன்னைக்கே உன் கழுத்துல தாலி கட்டி இருக்கலாம்…” என்றான் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி.
“கட்டி..?”
“நீ ஆசைப்பட்ட விஷயத்துக்கு அஸ்திவாரம் போட்டிருக்கலாம்…” என்றவன் அதற்குமேல் முடியாது என்பதுபோல் பக்கென சிரித்திருக்க அவளோ உடல் முழுக்க போர்த்திக் கொண்ட நாணத்தோடு அவன் தோளில் இரண்டு அடிகள் போட்டு முகத்தை மூடி திரும்பிக் கொண்டாள்.
(தொடரும்)
error: Content is protected !!