Skip to content
Post Views: 4,389
தூறல் – 29
மனத்தாங்கலோடு பேச ஆரம்பித்த கர்ணனை பேசவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் குரு.
Advertisement
“அஞ்சலி வேலை பார்த்த பள்ளிக்கூடத்துலதானே நீங்களும் வேலை செய்றீங்க. அவளைப்பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா தம்பி..? அன்னைக்கே உங்ககிட்ட இதப்பத்தி பேசணும்னு நினைச்சேன். ஆனா அப்படி தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நீங்க சொல்லி இருப்பீங்கன்னு தெரியும். எங்க போனா என்ன ஆனான்னு எதுவுமே தெரியல. எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தும் கண்டுபிடிக்கவும் முடியல. உயிரோட இருக்காளா… இல்ல பிள்ளையோட எங்கேயாவது போய் ஆத்துல கிணத்துல குதிச்சிட்டாளான்னு…” அவர் கமறலோடு தொடர பட்டென இடைமறித்து,
“என்ன பேசுறீங்க..? அப்படி எல்லாம் எதுவும் இல்ல… இ..இருக்காது… அப்படியெல்லாம் யோசிக்காதீங்க…” என்றான் குரு வேகமாய்.
Advertisement
Advertisement
ஒரு பேச்சிற்குகூட அந்த வார்த்தையை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
“வேற என்ன தம்பி யோசிக்கிறது..? இத்தனை மாசம் ஓடிப்போச்சு… கோபத்தோட போனவ நல்லா இருந்திருந்தா கோபம் தணிஞ்சாவது திரும்பி வந்திருக்கலாமே… கடைசிக்கு போன்லயாவது ஒரு தகவல் சொல்லி இருக்கலாமே… அதுவுமில்ல… ஆனா அந்த தேனிக்கார பயலுக வெறி புடிச்சு அவளை தேடிக்கிட்டு இருக்காய்ங்க. அவங்க கைல அவ மாட்டிரக்கூடாதுன்னுதேன் இப்பவெல்லாம் என் மனசு துடிக்குது. எங்கேயோ கண்காணாம தொலையாத தூரத்தில போய் பிள்ளையோட சந்தோசமா இருந்தா போதும்னுகூட மனசு நினைக்குது தம்பி…”
Advertisement
“அப்படி என்ன செஞ்சிடுவாங்க..?”
பொங்கி வந்த கோபத்தை ஆனவரை கட்டுப்படுத்தியபடி கூறினான் குரு.
“அவய்ங்களுக்கு அந்த காசு வேணும்… அஞ்சலி பேர்ல இருக்குற அம்புட்டு காசும் அவய்ங்களுக்கு வேணும்…” கசந்த புன்னகையோடு கூறினார் கர்ணன்.
“அவங்களைப்பத்தி நல்லா தெரிஞ்சும் அஞ்சலியை அந்த குடும்பத்து ஆளுக்கே திரும்ப கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நீங்க எப்படி யோசிச்சீங்க..?”
அடக்க முடியாமல் மனதில் உள்ளதை கேட்டிருந்தான் குரு.
அமைதியாக அவனை நிமிர்ந்து பார்த்தார் கர்ணன்.
“மன்னிக்கணும்… உங்க குடும்ப விஷயத்துல ஆழமாக கேள்வி கேட்கிறதா நினைக்க வேண்டாம். கல்யாணத்துக்கு வற்புறுத்தினதுனாலதானே அஞ்சலி வீட்டை விட்டே போனா…” என்றவன் ஞாபகமாக இறுதியில் “ங்க….” என்ற வார்த்தையை சற்று இடைவெளி விட்டு சேர்த்திருந்தான்.
“எங்களை என்ன தம்பி பண்ணச் சொல்றீங்க..? எங்க பையன் அவன் குடும்பம்னு தனிச்சுப் போய் ரொம்ப நாளாச்சு. விருந்தாடி மாதிரிதேன் இங்கேயே வந்து போவாய்ன். அஞ்சலியை அவன் பாத்துக்குவாய்னு எதிர்பார்க்கவே முடியாது. எங்க காலத்துக்கு அப்புறம் கையில பொம்பளப் புள்ளைய வச்சிருக்கிற அவளுக்கு வேற என்ன பாதுகாப்பு இருக்கு சொல்லுங்க..? புள்ள இல்லாம இருந்தா ஏதோ ஒரு வகையில வேற யாருக்காச்சும் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கலாம். இந்த காலத்துல கையில பொம்பளப் புள்ளையோட இருக்கிற ஒரு விதவைப் பொண்ண எவன் கல்யாணம் பண்ணுவாய்ன்..? எம்புட்டுதான் காசு பணத்தை கொடுத்து கட்டி வச்சாலும் நாளைக்கு இன்னொரு குழந்தை வந்துட்டா இந்த குழந்தையை அவன் எப்படி பார்த்துக்குவாய்னு நமக்கு தெரியாதா..? இதை எல்லாம் யோசிச்சுதேன் அதே குடும்பத்தில அவளை கட்டிக் கொடுத்தா அவளுக்கும் குழந்தைக்கும் எந்த காலத்துக்கும் பாதுகாப்பு இருக்கும்னு யோசிச்சோம்…”
“ஆனா அவன் அவ்வளவு நல்லவன் இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா..?”
“தெரியும்… ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அவனும் குடும்பம் குழந்தைன்னு வரும்போது மாறிடுவாய்ன்… இவளும் அனுசரிச்சு வாழட்டும்னுதான் அவ மனசை மாத்த முயற்சி பண்ணினோம். எங்களுக்கு அதைத் தாண்டிய வேற வழி தெரியல தம்பி…”
ஒரு தகப்பனாக மகளின் வாழ்க்கையில் சூழ்ந்துள்ள பல பிரச்சனைகளையும் யோசித்து இதைத் தாண்டிய மார்க்கம் இல்லை என்றுதான் அவளை அதே குடும்பத்திற்குள் மீண்டும் நுழைக்க முயற்சித்தனர் என்பது புரிந்தது. கையாலாகாத எண்ணம் என்பதை தாண்டி மகள் பேத்தியின் வாழ்க்கைக்கு இதைத் தாண்டிய வேறு வழி அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இது தவறு என்றும் கூற முடியாது. உலகில் நடக்கும் நிதர்சனத்தைதானே அவரும் உணர்ந்து இருக்கிறார்.
ஆனால் அவருக்கு தெரியுமா..? எதிரில் மலைபோல் அமர்ந்திருப்பவன்தான் அவள் மகளையும் பேத்தியையும் தன் மனதில் முழுமையாக ஏற்று அவர்கள் எதிர்காலத்திற்காகவே தனது வாழ்வை புனரமைத்து அவர்களுக்காகவே ஒரு வாழ்க்கை வாழ காத்திருக்கிறான் என்று
“அஞ்சலி பேர்ல இருக்கிற பணத்தை அவங்களுக்கு எழுதி குடுத்துட்டா அதுக்கப்புறம் அவங்களுக்கு எந்த தொந்தரவும் வராதுதானே…”
“அவதான் எப்பவோ எனக்கு பணம் வேணாம் எழுதி கொடுத்துடுறேன்னு சொன்னாளே… அதுக்கும் அந்த அருண் ஒத்துக்கல…”
“ஏன்..?”
“அவனுக்கும் இவளை கட்டிக்கிடணும்னு ஆசை. தப்பும் தவறுமா சில பல வேலைகள் பண்ணி வச்சவனுக்கு சொந்த பந்தத்துல பொண்ணு கிடைக்கல. இவளையே கட்டிக்கிட்டா எந்த பிரச்சனையும் வராது இவளும் எதிர்க்கேள்வி கேட்க மாட்டான்னுதான் விடாம துரத்திக்கிட்டே இருக்கியான்…”
ஜிவ்வென உச்சிவரை கோபம் கிளர்ந்தது குருவுக்கு.
“எல்லாம் தெரிஞ்சும் அப்படிப்பட்ட ஒருத்தனோட உங்க பொண்ணுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு நினைச்சிருக்கீங்க இல்லையா..? ஏற்கனவே வாழ்க்கையை தொலைச்ச பொண்ணு திரும்பவும் நிம்மதி இல்லாம ஒரு வாழ்க்கை வாழுவான்னு தெரிஞ்சும் அந்த வாழ்க்கைக்கு அவளை உடன்பட வைக்கணும்னு நினைச்சது ஒரு நல்ல அப்பா அம்மாவா சரின்னு நினைக்கிறீங்களா..?”
ஆனவரை கோபத்தை அடக்கி பொறுமையாகவே கேட்டான் குரு. அவன் கேட்க நினைத்த அனைத்தையும் இன்றே கேட்டுவிடுவது என்பதுபோல் ஆத்திரத்தோடுதான் பேசினான் குரு.
கொட்டித் தீர்க்க ஆளில்லாமல் வேதனை கொண்டிருந்த அந்த மனிதரும் குருவை பார்த்தவுடன் மனதின் ஆழத்தில் இருந்த வேதனைகளை எல்லாம் இவனிடம் ஒப்பிக்க இவனும் குறி வைத்துதான் கேள்விக்கணைகளை தொடுத்தான்.
இவனது கேள்விக்கு கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் வேதனையோடு பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தனர்.
“கையில குழந்தையோட ஒரு பொண்ணு கணவன் இல்லாம நின்னா அவ வாழ்க்கை அவ விருப்பத்துக்கு அமையவே கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா..? இல்ல காலம் முழுக்க அட்ஜஸ்ட் பண்ணிதான் வாழணும்னு விதி இருக்கா..? அவளுக்கும் மனசு, உணர்வுகள் எல்லாம் இருக்கும்தானே… அப்படி பார்த்தா அஞ்சலி என்ன வாழ்ந்த்துட்டா..? அவளுக்கு புடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க அவளுக்கும் உரிமை இருக்குதானே…”
பொறுக்க முடியாமல் பொரிந்து தள்ளினான் குரு. அவன் வாதத்தில் நியாயம் இருப்பது தெரிந்து தலை தாழ்த்தி அமர்ந்திருந்தனர் இருவரும்.
“அவ எவனையோ கூட்டிட்டு ஓடிப் போயிட்டான்னுதானே இப்பவும் ஊரு பூரா அசிங்கப்படுத்திட்டு அலையிறாய்ங்க அந்த நாதாரி நாயிங்க…”
வேதனையோடு கூறி முகத்தை அழுத்தமாய் தேய்த்துக் கொண்ட கர்ணன், “அப்படியே போயிருந்தாலும் நல்லா இருக்கட்டும்னுதான் எங்க மனசு இப்ப நினைக்குது தம்பி. அப்படி நல்லவனா ஒருத்தன் அவ வாழ்க்கையில வந்திருந்தா அவங்க ரெண்டு பேரையும் காலத்துக்கும் சந்தோசமா வச்சுக்கிட்டா போதும்…” என்றவர் வேதனையோடு கலங்கியிருந்த கண்களை இரு விரல்களால் துடைத்துக் கொள்ள ஆச்சரியமாகத்தான் அவர்களை பார்த்தான் குரு.
இப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு இருக்கும் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. இனி அஞ்சலியை பற்றி அவர்களிடம் பேசுவதில் குழப்பம் இருக்காது என்று தோன்றியது. ஆனால் இந்த நொடியே அவளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது இரண்டு நாள் போகட்டும் லதாவும் உடல்நிலை தேறட்டும் என்று எண்ணிக் கொண்டவனாய் அவர்களுக்கு சில சமாதானங்கள் கூறி லதாவையும் கவனமாக உடலை பார்த்துக் கொள்ளச் சொல்லி அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
அவன் சரியாக வீட்டை விட்டு வெளியே வர திருமணத்திற்காக சென்றிருந்த ராமலிங்கம் காமாட்சியும் அதே நேரத்தில்தான் வீட்டைத் தாண்டி நடந்து சென்றனர். அஞ்சலியின் வீட்டில் இருந்து குரு வருவதை விழிகள் சுருக்கி பார்த்தவர்கள் அவனை நோக்கி வந்தனர்.
அவர்களிடம் லதாவின் உடல்நல குறைபாடு பற்றியும் அவர்கள் பேசியவை பற்றியும் கூறினான் குரு.
“இந்த நம்பிக்கையோட இந்த வார்த்தையும் அவ இருக்கும்போது சொல்லி இருந்தா வீட்டை விட்டு போயிருக்க மாட்டா. இப்ப போனதுக்கு அப்புறம் எங்கிட்டாவது எவன் கூடயாவது நல்லா இருக்கட்டும்னு பேசினா என்ன அர்த்தம்..?”
எரிச்சலோடு கூறிய காமாட்சி “சரி வாங்க… நம்மளும் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்…” என்று தன் கணவனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
சில நிமிடங்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு வர தன் வீட்டின் கேட்டின் அருகிலேயே நின்றிருந்தான் குரு.
“உங்க ரெண்டு பேர்கிட்டயும் கொஞ்சம் பேசணும்… ரொம்ப டயர்டா இருக்கீங்களா..? பேசலாமா..?”
புதிர் போட்டு கேட்டவனை குழப்பமாக பார்த்தவர்கள் அவனோடு வீட்டிற்குள் நடந்தனர்.
தொண்டையை செருமிக் கொண்டு அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்று நினைத்தானோ அனைத்தையும் பேசி முடித்தான் குரு. ராமேஸ்வரத்தில் தற்கொலை செய்து கொள்ள அஞ்சலி போனதில் தொடங்கி அவர்களுக்கு இடையே மலர்ந்து நிற்கும் காதல்வரை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியிருந்தான்.
சில நொடிகள் பேச்சற்று அமைதியாக அமர்ந்திருந்தனர் இருவரும். அவர்களது முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.
இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் குரு.
“என்னை ரொம்ப கேவலமான ஒருத்தனா நினைக்கிறீங்களா..?”
சங்கடத்தோடு அவன் கேட்ட அடுத்த நொடி இருவருமே அவனது இரு கரங்களையும் பாய்ந்து பற்றி இருந்தனர்.
காமாட்சியின் கண்கள் மகிழ்ச்சியில் பனித்தே போயிருந்தன.
“என்ன கேள்வி இது குரு..? எப்படி ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்க… உன்னை போய் கேவலமா நினைப்போமா..? ரெண்டு உயிரை காப்பாத்தினது மட்டும் இல்ல. அவங்க வாழ்க்கையவே மாத்தி அமைச்சிருக்க. உன்ன மாதிரி ஒருத்தன் கிடைக்கணும்னு தான் அவ இத்தனை கஷ்டங்களை கடந்து வந்துட்டா போல. ஏன் எங்ககிட்ட முதல்லயே சொல்லல..?” மெலிதான வருத்தம் காமாட்சியிடம்.
“அவள கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு நிறைய சிக்கல் தெரிஞ்சதுக்கா. அதனாலதான் அவளை காப்பாத்தினதை பத்திகூட உங்க யார்கிட்டயும் சொல்லல…”
வேகமாக குறுக்கிட்ட ராமலிங்கம் “என்ன பெரிய சிக்கல் தம்பி..? நீ அகதியா இங்கே வந்தவன்னு சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறியா..? அதை சொல்ற தகுதி இங்கே எவனுக்கும் கிடையாது. உன்ன மாதிரி ஒருத்தன் கிடைக்க அஞ்சலி கொடுத்து வச்சிருக்கணும். எங்களுக்கு மனசு நிறைஞ்சிருக்கு…” மகிழ்வோடு கூறினார்.
“அஞ்சலியோட அப்பா அம்மாகிட்ட நீங்கதான் இது விஷயமா போய் பேசணும். அவங்ககிட்ட பேசினவரைக்கும் பெரிய பிரச்சனை வர்ற மாதிரி தெரியல. அவ பேர்ல இருக்கிற பணத்தை எல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்கு அவ எழுதி கொடுத்திடுவா. அதுக்கு அப்புறமா அவங்க யாரும் அவகிட்ட எந்த பிரச்சனையும் பண்ணக்கூடாது. அவளை தேவையில்லாம வம்புக்கு இழுத்தா என்னோட இன்னொரு ரூபத்தை காட்ட வேண்டியது இருக்கும்…”
இதுவரை அமைதியாகப் பேசியவன் அஞ்சலிக்கு பிரச்சனை எனும் பட்சத்தில் தான் உக்கிரமாக மாறுவேன் என்ற உறுதியை காட்டினான்.
“அது பொணம் தின்னி கூட்டம் தம்பி… பணத்தை தூக்கிப் போட்டா வாயில கவ்விட்டு ஓடிப் போயிரும். நீ பயப்படாம அஞ்சலியை இங்கே கூட்டிட்டு வா… எப்படியும் கையெழுத்து போட்டு கொடுக்க அவ வந்துதானே ஆகணும். கர்ணன்கிட்ட நாங்க பேசுறோம்… எல்லாம் நல்லபடியா நடக்கும்…”
அவர் கூறிய நம்பிக்கை வார்த்தையில் நிம்மதி அடைந்திருந்தான் குரு.
“முதல்ல அவங்ககிட்ட பேசுங்க… தேவைப்படும்போது அஞ்சலி இங்கே வருவா…”
சரி என்று தலையாட்டிக் கொண்டவர்கள் மறுநாள் காலை அஞ்சலி வீட்டில் சென்று பேசுவதாக கூறி தங்களின் வீட்டிற்குச் சென்றிருக்க தன்னவளுக்கு ஃபோனில் அழைத்தபடியே மகிழ்வோடு அறைக்குள் நுழைந்திருந்தான் குரு.
அவளுக்கு அழைத்தவன் அங்கு நடந்த விபரங்கள் அனைத்தையுமே கூறியிருந்தான்.
அமைதியாக கேட்டபடி இருந்தவள் பதில் ஏதும் கூறி இருக்கவில்லை.
“என்னடி..? எதுவுமே பேச மாட்டேங்கிற…”
“என்ன பேசட்டும்..? இதுவே நான் அங்கே இருந்திருந்தா அவங்க புத்தி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்காது… என்னை அந்த நாதாரிப் பய தலையில கட்டுறதுக்கு இன்னும் என்னை டார்ச்சர் பண்ணிட்டுதான் இருந்திருப்பாங்க…”
“உன் அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல அஞ்சு… பாக்கவே பாவமா இருக்கு… உனக்கு அவங்களை பாக்கணும்போல இல்லையா..?”
“கேட்க கஷ்டமாதான் இருக்கு… ஆனா அதுக்காக உடனே வந்து நிக்க முடியாது இல்லையா… காமாட்சி அக்கா முதல்ல அவங்ககிட்ட பேசட்டும். அந்த தேனிக்கார நாய்களுக்கு எழுதிக் கொடுக்க நான் வந்துதானே ஆகணும்… அப்போ வரேன். உங்களை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது… எனக்கு அதுதான் வேணும்…”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை வராது… நீ நிம்மதியா இரு… அம்மு என்ன பண்றா..?”
“தூங்கிட்டா…”
“ம்ம்…”
“குரு…”
“என்னடி..?”
“எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு…”
ஏக்கமாக வெளிவந்தது அவள் குரல். அவனது இதழ்களிலோ மந்தகாசப் புன்னகை.
“எனக்கும்கூட உன்னையும் அம்முவையும் விட்டுட்டு இப்ப எல்லாம் சுத்தமா இருக்கவே முடியல அஞ்சு. வீடியோகால் பேசினா உடனே வண்டி ஏறி வந்திடுவேன்னுதான் நார்மல் கால் பேசிக்கிட்டு இருக்கேன். எல்லாமே சீக்கிரம் ஒரு தீர்வுக்கு வந்துடும். இதையெல்லாம் சரி பண்ணிட்டுதான் நான் உன்னை பார்க்க வர்ற மாதிரி இருக்கும். அல்லது நீ இங்கே வர்ற மாதிரி இருக்கும்… பாத்துக்கலாம் சரியா…”
“ம்ம்…” என்றவள் மனமே இல்லாமல்தான் இணைப்பை துண்டித்து இருந்தாள்.
தனது வேலையில் பாதிக் கிணறு தாண்டிவிட்ட நிறைவோடு நிம்மதியாக உறங்கியும் இருந்தான் குரு.
மறுநாள் புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை நேரத்தில் பக்கத்து வீட்டில் கூச்சலும் சத்தமுமாக நிறைய சலசலப்பு கேட்டது. உறக்கம் கலைந்து எழுந்தவன் கூடத்திற்கு வர அவனது வீட்டுக் கதவினை ஓங்கி ஓங்கி யாரோ தட்டுவது கேட்டது.
வேகமாகச் சென்று கதவை திறந்ததுதான் தாமதம். வெறியோடு வீட்டிற்குள் நுழைந்திருந்தான் அருண்.
(தொடரும்)
error: Content is protected !!