Skip to content
Post Views: 1,590
அத்தியாயம் 21
Advertisement
“போனா போகட்டும் விடுங்க ப்பா!” என லாவண்யா செல்வதைப் பார்த்து நின்ற தந்தையிடம் கீர்த்திஸ்வரன் சொல்ல,
Advertisement
Advertisement
“வாயை மூடு டா!” என அவனை கூறினார் மகேஸ்வரன்.
Advertisement
லதா மகனுக்காக பேச வர, “நீ பேசாத! வாயை திறந்த….” என்ற கணவனின் மிரட்டலான பார்வையில் லதா அமைதியாகிவிட்டார்.
“நான் பண்ணினது தப்பு தான்… ஆனா நீங்க பண்ணினதும் தப்பு தான் ப்பா! என்கிட்ட கலந்துக்காம நீங்களே பேசினதும்….” என நேருக்கு நேர் தந்தையிடம் ஈஸ்வர் சொல்ல,
“அதான் சேர்த்து வச்சு என் மானத்தை வாங்குறியோ நீ? எத்தனை வருஷ பழக்கம் தெரியுமா இவங்க அப்பன்? சம்மந்தம் பேசி முடிக்குற வரை ஒரு மரியாதை குடுத்து வச்சு இருந்தான். இப்போ அவன் என்னை எப்படி பார்த்தான் தெரியுமா? இதோ! அவன் பொண்ணு! கால் தூசுக்கு என்னை மதிச்சாளா? எல்லாம் யாரால?” என்றவர் பேச்சில் கீர்த்திஸ்வரன் அமைதியாய் நிற்க,
“நிம்மதியா? இப்போ சந்தோசமா இருக்கா அம்மாக்கும் பையனுக்கும்?” என்றவர்,
“எத்தனை நாளா திட்டம் போட்டிங்க என்னை இப்படி நிக்க வைக்கணும்னு?” என கேட்க,
“ப்பா ப்ளீஸ்! எனக்கு லாவண்யா கேரக்டர் ஒத்து வராது. இன்ஃபாக்ட் உங்களுக்கு சொன்ன அப்புறம் தான் அதை நான் அம்மாகிட்டயே சொன்னேன். கல்யாணம் பண்ணி வச்சிட்டா அவங்கவங்க வாழ்க்கையை பார்த்து போயிடுவீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்ட நான்?” என்றவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் பார்த்தார் மகேஸ்வரன்.
“எந்த ஒரு தனிப்பட்ட விருப்பமும் அப்போ இல்லை. சரி நீங்க சொல்றதை ஏத்துக்கலாம் நினைச்சா எல்லாமே…. அவங்க அப்பாகிட்ட ஆரம்பிச்சு லாவண்யா வரைக்கும் எல்லாமே தலைகீழா இருக்கு. எனக்கு கொஞ்சமும் சூட் ஆகல. தெரிஞ்சும் என் லைஃபை நான் என்னனு ரிஸ்க்ல விட?” என எதிர்கேள்வி கேட்டவனுக்கு பதில் சொல்லவும் முடியவில்லை தந்தையால்.
“இப்பவும் சொல்றேன். மேரேஜ்னா எனக்கு டைம் வேணும்” என்றான் ஈஸ்வர்.
“டைம் வேணும்னா? எப்படி? பாக்குற ஒவ்வொரு பொண்ணையும் பழகிப் பார்த்து செலக்ட் பண்ணுவியோ?” என்ற தந்தை சொல்லில்,
“ப்பா!” என கண்டிப்புடன் அவன் அழைக்க,
“பின்ன என்ன டா பேசுற நீ? நானெல்லாம் அப்படி நினச்சிருந்தா உன் அம்மா இந்த வீட்டுல இருந்திருப்பாளா இந்நேரம்?” என்று அவர் கேட்கவும்,
‘ஆமா வந்தாங்கல்ல இவருக்கு வரிசையில…’ என நினைத்ததை வாய் வார்த்தையாய் சொல்லிடவில்லை.
“ப்ச்! எனக்கு பிடிக்கல. பிடிக்கலைனு சொல்லிட்டேன். இப்ப என்ன? அதான் லாவண்யாகிட்டயும் நேர்ல சொல்லிட்டேனே?” என்று ஈஸ்வர் சொல்ல,
“நீ சொல்லிட்டா போதுமா? அவ விட்ருவாளா? அவ விடலைனா அவ அப்பனும் விட மாட்டான்!” மகேஸ்வரன் கூறினார்.
“என்ன பண்ணிடுவாங்க? இனி என்ன பண்ணினாலும் அது என் பிரச்சனை தானே நான் பாத்துக்குறேன்?” என்ற வார்த்தைக்கு பின் எதுவும் பேச முடியவில்லை அவருக்கு.
“என் வீட்டுல என் பேச்சை கேட்டா தானே வெளிலயும் என்னை மதிப்பானுங்க.” என்ற மகேஸ்வரன்,
“பிள்ளை வளந்துட்டானே… அவனுக்கு எல்லாம் தெரியும் நினைச்சேன் பாரு… என்னை சொல்லணும். இனி நானா இந்த வீட்டுக்கு எதுவும் செய்ய போறதில்ல” என கீர்த்திஸ்வரனைப் பார்த்து சொல்லியவர் அத்தனை நேரமும் அமைதியாய் நின்ற லதாவிடம் திரும்பினார்.
“அன்னைக்கு நான் வீட்டை விட்டு போயிருவேன் சொல்லியும் பயமில்லை இல்ல?” என்று முறைத்துவிட்டு செல்ல, அயர்ச்சியாய் சென்று சோஃபாவில் அமர்ந்தான் கீர்த்திஸ்வரன்.
“விடு டா. கலகம் வந்தா தான் முடிவும் வரும். பார்த்துக்குவோம்!” என்றார் லதா மகனிடம்.
இப்பொழுது நடந்ததெல்லாம் கலகம் என்றே தோன்றவில்லை கீர்த்திஸ்வரனுக்கு. லாவண்யாவின் மிரட்டலுக்கும் அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் தனக்குள் உருவாகி இருக்கும் இந்த ஒரு எண்ணம்? இது சாத்தியமா என நினைக்கையில் தான் பெரிதாய் கலகம் வரும் என்றே தோன்றியது கீர்த்திஸ்வரனுக்கு.
அதன்பின் மகேஸ்வரன் மகனிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டிருந்தார்.
அவர் குணத்திற்கு இப்பொழுது அவரின் மனநிலை என்னவாய் இருக்கும் என தெரிந்தவனும் அவராய் கொஞ்சம் சமாதானமாகி வர காத்திருந்து அவருக்கும் நேரம் கொடுத்திருந்தான்.
அடுத்த இரண்டு நாட்களும் அப்படி தான் ஓடி இருந்தது. அன்று மதியம் உணவு எடுத்துக் கொள்ள வீட்டிற்கு வருகை தந்திருந்தான் கீர்த்திஸ்வரன்.
“ரொம்ப சீன் போடுற நீ! வீட்டுல இருந்து தானே படிக்குற? அதை இங்க வந்து படியேன்னா அவ்வளவு மிதப்பா உனக்கு?” என அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் லதா.
மகன் வருவதைக் கண்டவர், “சாப்பிட வைக்கவா ஈஸ்வர்?” என கேட்க,
“எடுத்து வைங்க ம்மா. வர்றேன்!” என்று சொல்லி அறைக்கு சென்றவன் ஐந்து நிமிடங்களில் வர,
“ஒரு போன் வாங்கிக் குடு ஈஸ்வர். இதுல கேட்கவே மாட்டேன்னுது!” என்று சொல்லிய லதா வைத்திருந்தது அஞ்சலி முன்பு உபயோகித்தது. மகேஸ்வரன் போனை உடைத்ததும் அஞ்சலி தான் அவளுடைய பழைய மொபைலில் அன்னை சிம் கார்டை மாற்றி இருந்தாள்.
“முன்னவே சொல்லிருக்கலாமே ம்மா” என்றவன் மாலை வாங்கி வருவதாய் கூறினான்.
“இந்த பல்லவிகிட்ட தான் பேசிட்டு இருந்தேன்!” என்று சொல்லவும்,
“ஹ்ம் என்ன சொன்னா?” என்று கேட்டவன்,
“வந்து பத்து நாள் மேல ஆச்சுல்ல?” என்றும் கேட்க,
“அதை தான் கேட்டேன். ரெண்டு வாரம் ஆச்சே வந்து முகத்தை காட்டிட்டு போடின்னா ஊருபட்ட வாய். போன் வேற பாதில கட் ஆகிருச்சு!” என்று சொல்லும் போதே மீண்டும் அழைத்துவிட்டாள் பல்லவி.
“அவ தான்!” என்றவர்,
“இரு அப்பளம் மட்டும் போடணும். எண்ணெய் காய வைக்க மறந்துட்டேன்!” என்று ஈஸ்வரிடம் சொல்லி அலைபேசியை காதில் வைத்து உள்ளே சென்றவர் பல்லவியிடம் பேச்சை தொடர்ந்தார்.
பேச்சுக்கள் தொடர்ந்து பேச்சுவாக்கில் லாவண்யா வந்ததையும் மகன் பேசியதையும் என அனைத்தையும் அவர் சொல்ல, கீர்த்திஸ்வரனுக்கும் அவர் பேசுவது கேட்க தான் செய்தது.
“ம்மா! போனை காதுல வச்சுட்டு என்ன பண்றீங்க?” என அவன் முறைக்க, ஸ்பீக்கர் ஆன் செய்து அருகில் வைத்துவிட்டு அப்பளத்தை பொறிக்க ஆரம்பித்தார் லதா.
“ஈஸ்வர் அப்பா அவனையும் ரொம்ப பேசிட்டார் பல்லவி. அது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!” என்று லதா சொல்ல,
“இருக்கும் இருக்கும். ஏன் இருக்காது உங்களுக்கு?” என்ற பல்லவி,
“அப்போ குடும்பமா ஒரு பொண்ணை ஏமாத்தி கைவிட்டுட்டிங்கல்ல?” என்றவள் குரலில் இங்கே கீர்த்திஸ்வரன் இடுப்பில் கைவைத்து அன்னையை முறைக்க, லதாவும் அவன் பக்கம் தான் திரும்பிப் பார்த்தார்.
“சும்மா இரு பல்லவி. நீ ஒரு ஆளுன்னு உன்கிட்ட சொன்னேன் பாரு!” என்றும் அவர் சொல்ல,
“நானா கேட்டேன்?” என்ற பல்லவி,
“ஆனாலும் உங்க பையன் பெரிய ஆள் தான் லதாம்மா. ராங்கி ரங்கம்மா லாவண்யாவையே வந்து பாருன்னு சொல்றாரே!” என்றும் சொல்ல,
“ம்மா!” என பல்லைக் கடித்தான் கீர்த்திஸ்வரன்.
“இரு டா!” என்றவர்,
“உனக்கு இருக்கு. வருவல்ல. வாயை தச்சு அனுபுறேனா இல்லையா பாரு!” என்றும் அவளிடம் சொல்ல,
“உண்மையை சொன்னா தான் உலகத்துக்கு பொறுக்காதே! ஆனா லதாம்மா.. ஒரு முக்கியமான விஷயம்!” என்ற போதே கீர்த்திஸ்வரன் புருவங்கள் சுருங்கியது அவளின் குரல் மாற்றத்தில்.
“அடுத்து பொண்ணு பார்க்கும் போது முதல்ல உங்க பையனை மட்டும் அனுப்பி விடுங்க. அவருக்கு வாழ ஏதுவா இருக்குமானு அளவெடுத்து பார்த்துட்டு வரட்டும். அதுக்கப்புறம் பேச்சு வார்த்தைக்கு போங்க!” என்றவள் சொல்லில் லதா சிரிப்பை அடக்க, கீர்த்திஸ்வரன் அப்படியே அமர்ந்து அடங்கி இருந்தான் அவள் சொல்லில்.
“இவளோட….” நினைத்துக் கொண்டவன் இதழ்கடையில் மிக சின்னதாய் ஒரு புன்னகை கூட.
“வாயை குறை டி. நாளைக்கு வந்துட்டு போ. கண்ணுக்குள்ளே வேற நிக்குற!” என்று சொல்லிக் கொண்டு மகனுக்கு அருகில் வந்து பரிமாற,
“ஓகே! நாளைக்கு மார்னிங் பத்து மணிக்கு பல்லவி உங்களுக்கு அப்பாயின்மென்ட் தர்றா!” என பல்லவி சொல்ல,
“அப்போ நான் எங்க வரணும் மேடம்?” என லதாவும் கிண்டலாய் கேட்க,
“எதுக்கு? சரியாகிட்டு வர்ற கால் மறுபடியும் சுளுக்கு விழவா? அங்கேயே இருங்க பல்லவி வருவா” என்றவள் பேச்சின் பகுமானத்தில் லதா முறைத்தும் சிரிக்க, கீர்த்திஸ்வரன் இருவரின் பேச்சையும் கேட்க கேட்க இன்னுமே அவனுள் எண்ணம் வலு சேர்ந்தது.
“சரி வா! அம்மாவையும் முடிஞ்சா கூட்டிட்டு வா!” என்று சொல்லி வைத்த லதா,
“இந்த வாய் தான் கொஞ்சம் அதிகம் அவளுக்கு. ஆனாலும் அவளை எதுக்கு தான் இவ்வளவு தேடுறேனோ!” என்ற லதா சில நொடி இடைவெளிவிட்டு,
“சும்மா எல்லாம் இல்ல. ரெண்டு மாசமும் பக்கத்துலயே இருந்தாளே! சாயந்திரம் ஆறு மணியானா போதும் வீட்டுக்கு போகணும் இன்னும் உங்க பையனை காணுமேனு குதிச்சுட்டு நிப்பா. நீங்க யாராவது வந்துட்டாலுமே நைட்டு நான் என்ன செய்யனும் என்ன செய்ய கூடாதுன்னு சொல்லிட்டு போறவ வீடிஞ்சு நான் கண்ணு முழிச்சா முன்னாடி இருப்பா. பின்ன அப்படி இருந்துட்டு இப்ப எனக்கு தேடாம என்ன பண்ணும்?” என்று சிரித்துக் கொண்டவர்,
“ஆனா யோசிச்சு பார்த்தா அவ ஒவ்வொண்ணையும் வேற ஒரு கோணத்துல பாக்குறது மட்டும் நல்லா தெரியுது ஈஸ்வர். புத்திசாலி பொண்ணு” என்று அவளைப் பற்றிய பேச்சுக்களில் ஈஸ்வரின் முகமும் ஒருவித ஸ்வாரசியத்தை எடுத்துக் கொண்டது.
“என்னை என்னலாம் சொல்றா. அதை கேட்காம நீங்க புகழ்ந்துட்டு இருக்கிங்க?” என்றவனிடம் புதிதாய் ஒரு கள்ளத்தனம் அன்னை என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்பதாய் வந்து சேர்ந்திருக்க, தன்னை நினைத்தே சிறு கூச்சமும் கூட அவனிடம் அந்த நேரம்.
அதை பெரிதாய் கவனிக்கவில்லை லதாவும். அஞ்சலியும் இப்பொழுதெல்லாம் அன்னையிடம் பல்லவி பற்றி பேசிக் கொண்டு அவள் வருகையை கேட்டுக் கொண்டு என இருக்க, மகன் கேட்டத்தையுமே அப்படி தான் நினைத்தார் அவர்.
“அதான் சொன்னேனே ஈஸ்வர். நாம பார்க்காத கோணத்துல அவ பாக்குறா. அதுக்காக உண்மை தெரியாமலும் இல்லை. இன்னொன்னு தெரியுமா உனக்கு? அவளுக்கும் லாவண்யாக்கும் சுத்தமா ஆகாது. அதுக்காகவே வேணும்னே லாவண்யாக்காக என்கிட்ட கலாய்க்க அப்படி பேசிப்பேசி இப்போ அவளைவிட்டு உன்னை தான் பேசுறோம்ன்றதயே மறக்குற அளவுக்கு பேசுறா!” என்று சொல்லியவர்,
“வரட்டும்.. உன் சார்பா நாலு கொட்டு கொட்டி வைக்குறேன்!” என்றவர் முகத்தில் என்னவோ புன்னகை தான்.
அந்த புன்னகை இன்னுமே கீர்த்திஸ்வரனை விரட்டி சொல்லியது பல்லவியை விட்டுவிடாதே என்று.
error: Content is protected !!