Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…39

தூறல் – 39
புறநகர் சாலையில் கார் பறந்து கொண்டிருந்தது. உள்ளே இருந்த அனைவரிடமும் பதட்டம். காமாட்சி அழுகையை அடக்கிக் கொண்டிருக்க லதாவும் கர்ணனும் வாய்விட்டு அழுதபடி வந்தனர். ஆள் மாற்றி ஆள் ராதாவிற்கும் அஞ்சலிக்கும் ஃபோனில் அழைத்துக் கொண்டே இருந்தனர். யாராவது ஒருவர் எடுத்து நல்ல வார்த்தை பேசிவிட மாட்டார்களா என்ற நம்பிக்கை தொடர்ந்து பொய்த்துக் கொண்டே இருந்தது. 


Advertisement

கடத்தும் ஒவ்வொரு நொடியும் நெருப்பில் வெந்து எரிவது போன்ற வலியை அனுபவித்தான் குரு. மனதோடு தன் உயிரானவர்களிடம் பேசிக் கொண்டே வந்தான். தனக்குத்தானே நிறைய தைரியமும் கூறிக் கொண்டான்.
“மாப்ள… உங்க பிரண்டு பரசு ராமேஸ்வரம்தானே… அவரை நேரிலேயே போய் பார்க்கச் சொல்லுங்களேன்…” கலக்கமாக கூறியிருந்தான் கபிலன். 

Advertisement

Advertisement

“அவன் இப்போ அங்கே இல்ல மச்சான்… ஆந்திராவுக்கு ஒரு வேலையா போயிட்டான்…” 
அவனது கரகரப்பான கம்பீரக்குரல் பிசிறு பிசிறாக உடைந்து உடைந்து வெளியேறியது. தொண்டைக்குள் பல உணர்வுகளை அடக்கி கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.

Advertisement

தனது கைப்பேசியில் நடந்த அந்த சம்பவம் பற்றிய நிகழ்வுகளை தேடி தேடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டே வந்தான் கபிலன். கடுமையான விபத்துதான்… நிறைய உயிர் சேதங்கள் நிகழுமோ என்ற பயமுறுத்தல்கள் எழுந்து கொண்டிருந்தன. உடன் பிறந்தவனுக்கும் உள்ளம் கசிந்து வலித்தது… தன்னையும் மீறி கண்கள் கலங்கி அழுதன. 
இதயத்தின் துடிப்பு அதிகமாகி நெஞ்சு வலிப்பதுபோல் தோன்றியது குருவிற்கு. தன்னையும் மீறி இடது மார்பினை மெல்ல நீவி அழுத்திக் கொண்டான். 
அஞ்சுவின் காதல் பேசும் கண்மை பூசிய அழகிய விழிகளும், சவியின் நேசம் சுமந்த குட்டி திராட்சை விழிகளும், ராதாவின் கனிவு பொங்கும் ஆதுர விழிகளும் அவன் மனக்கண்களுக்குள் மாறி மாறி வட்டமிட்டன.
தனக்குள் உணர்வுகளை மொத்தமாக அடக்கி வைத்துக் கொண்டிருந்தான். பளபளத்த இரு விழிகளும் இறுக்கிக் கட்டிய கல்லணையாய் நீர் சீற்றத்தை ஆனவரை தடுத்துக் கொண்டிருந்தன.
அணை உடையும்போது அவன் இதயமும் சேர்ந்து உடையும் அபாயம். 
ராமநாதபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது கார். நன்றாக விடிந்தும் இருந்தது… திடீரென ஒரு புது எண்ணில் இருந்து குருவின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. இதயம் தாறுமாறாக துடிக்க அதனை எடுக்கவே பயந்து விரல்கள் நடுங்கினான் குரு. ஏதேனும் செய்தியை தாங்கி தகவல் தெரிவிக்க யாரேனும் அழைக்கிறார்களோ என்ற பதட்டத்தில் உடலும் சேர்ந்து நடுங்கியது. 
அவன் நடுக்கத்தை கண்டுகொண்ட கபிலன் அவன் கையில் இருந்த கைப்பேசியை தானே வாங்கி அழைப்பை ஏற்றான். 
“ஹலோ… குரு…” எதிர்முனையில் அஞ்சலியின் குரல். 
அவள் குரலைக் கேட்ட கபிலனின் முகத்தில் பளிச்சென பரவசம் பரவியிருக்க “அ..அஞ்சலி… அஞ்சலிம்மா… எ..எங்கடா இருக்க..? உனக்கு ஒன்னும் இல்லையே… நீங்க எல்லாரும் நல்லா…” 
அடுத்த நொடி கைப்பேசி பறிக்கப்பட்டு குருவின் காதுக்கு இடம்பெயர்ந்து இருந்தது. 
“அ..அஞ்சு… அஞ்சு… எ..என்னடா… எங்க… எங்க…”
மேற்கொண்டு வார்த்தை வெளிவராமல் மொத்தமாக அடைத்துக் கொண்டது. 
“குரு… குரு… நாங்க ராமநாதபுரத்தில இருக்கோம்… ஹாஸ்பிடல்ல…” 
அவளது குரலில் தெளிவு இருந்தாலும் ஒருவித பதட்டம் தெரிந்தது. 
“ஹாஸ்பிடல்லயா…? எ..என்னாச்சும்மா..? சவி… அத்தை… ரெண்டு பேரும்… ரெண்டு பேரும்…” 
ஒரு கையால் இதயத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டு தடுமாறிக் கொண்டிருந்தான் குரு. 
“சவியை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்…” 
அவள் முடிக்கு முன் “அய்யோ என் புள்ள…” என்று அந்த காரே அதிர கத்தி இருந்தான் குரு. 
அவனிடமிருந்து போனை தான் வாங்கிக் கொண்டான் கபிலன். அஞ்சலியிடம் பொறுமையாக விபரங்கள் கேட்டு முடித்தபோது கார் ராமநாதபுரத்திற்குள் நுழைந்திருந்தது.
குறிப்பிட்ட மருத்துவமனையின் முகவரி கேட்டு ஓட்டுனரிடம் தெரிவித்து இருந்தான் கபிலன். 
இரு கைகளாலும் தலையை அழுந்த பிடித்துக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்த குருவின் தோளில் கை வைத்தான். 
“மாப்ள… பயப்படுற மாதிரி ஒன்னுமே இல்ல… அஞ்சலி தெளிவா பேசினா… ஆக்ஸிடென்ட் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த பஸ்ல இருந்து இவங்க இறங்கி இருக்காங்க…” 
இதனை கேட்டு படக்கென தலை நிமிர்த்தி கபிலனின் முகம் பார்த்தான் குரு. மற்றவர்களும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 
“எந்த சாமி புண்ணியமோ..? யார் செஞ்ச புண்ணியமோ..? பஸ் ராமநாதபுரம் நெருங்கும்போதே சவிக்கு வயிறு வலி வந்து அழ ஆரம்பிச்சிருக்கா. பஸ்ஸும் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட்ல பத்து நிமிஷம் நின்னிருக்கு.‌ வலி பொறுக்க முடியாம புள்ள ரொம்ப அழ ஆரம்பிச்ச உடனே அங்கேயே ஏதாவது ஒரு ஹாஸ்பிடல் போய் அவளை காட்டிட்டு அதுக்கப்புறம் ஊருக்கு போய்க்கலாம்னு மூனு பேரும் பஸ்ஸை விட்டு இறங்கி இருக்காங்க. பதட்டத்துல ராதாம்மா அவங்களோட செல்போன் வச்சிருந்த குட்டி பையை பஸ்லயே மிஸ் பண்ணி இருக்காங்க. அஞ்சலியோட செல்போனும் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு. இதையெல்லாம் கவனிக்கிற நிலைமையில அவங்களும் இல்ல. சவி வலியில ரொம்ப துடிச்சதால பக்கத்துல இருக்குற ஒரு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. அங்கேயே வாந்தியும் பண்ணி இருக்கா…” 
“சாப்பிட்ட உணவு ஏதோ சேராம ஃபுட் பாய்சன் ஆயிடுச்சுன்னு அங்கேயே அட்மிட் பண்ணச் சொல்லி ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க. அப்பவே உங்களுக்கு கூப்பிட்டு பயமுறுத்தக் கூடாதுன்னு விடிஞ்சதுக்கப்புறம் சொல்லிக்கலாம்னு அவங்களும் புள்ள பக்கத்திலேயே உட்கார்ந்துட்டாங்க. இவங்க பஸ்ல இருந்து இறங்கி கொஞ்சநேரம் கழிச்சு 10 கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் போனதுக்கு அப்புறம்தான் பஸ் ஆக்சிடென்ட் ஆயிருக்கு. அதைப்பத்தி அஞ்சலிக்கும் இப்போவரைக்கும் எதுவும் தெரியாது. இப்போ சவி நல்லா இருக்காளாம்… அவ ரெடியானதுக்கு அப்புறம் உங்களுக்கு சொல்லலாம்னு உங்களுக்கு போன் பண்ணி இருக்கா…” 
கபிலன் பேசப் பேச காரில் அமர்ந்திருந்த அனைவரின் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி, நிம்மதி. அனைவரும் தன்னிச்சையாக கரம் கூப்பி தெய்வத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தனர். ஆடாமல் அசையாமல் சிலைபோல் அமர்ந்திருந்தான் குரு.
அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்குள் கார் நுழைந்திருந்தது. முன் காலைநேரம் என்பதால் அதிகமான கூட்டம் இல்லை. முன்பகுதியில் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அஞ்சலியும் சவியும் அமர்ந்திருந்தனர். ராதா சற்றுத் தள்ளி இருந்த மருந்தகத்தில் ஏதோ மருந்து வாங்கிக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்த அனைவரின் முகத்திலும் கண்ணீர் நிறைந்த புன்னகை. 
குருவின் விழிகள் முழு உருவமாய் செப்பமாய் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த தன் உயிர் பிம்பங்களின் மீது ஆழமாய் பதிந்திருக்க, கார் நின்ற நொடி கதவை திறந்து கொண்டு புயலென அவர்களை நோக்கி ஓடியவன் அவர்களின் முன் மண்டியிட்டு இருவரையும் தன்னோடு இழுத்து இரு தோள்களிலும் அணைத்தவன் அந்த இடமே குலுங்கும்படி சத்தமிட்டு கதறி இருந்தான். 
அணை உடைந்து ஆர்ப்பரிப்பாய் வெளியேறி இருந்தன அவனது உணர்ச்சிகள் அனைத்தும். கம்பீர ஆளுமையான ஒரு ஆண்மகன் இரு பெண்களை தன்னோடு அணைத்து உரக்க கத்தி அழுது கொண்டிருப்பதை ஆங்காங்கே இருந்த சிலர் அதிர்வோடு விழிகள் தெறிக்கப் பார்க்க, உடன் வந்தவர்களோ அவன் அழுகை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நேசத்திலும் அதன் உயிர்ப்பிலும் அசந்துபோய் தாங்களும் அடக்க முடியாமல் அழுதபடி நின்றனர். 
தந்தை அழுவதை பார்த்து மகளும் என்னவென்றே தெரியாமல் அழத் தொடங்கி இருந்தாள். தன்னவனின் கதறலில் விழிகள் தாண்டி வெளிவந்த கண்ணீரை துடைத்தபடியே அவன் முதுகு வருடினாள் அஞ்சலி. 
“குரு… என்ன இது..? எங்களுக்கு ஒன்னும் இல்ல… ஒன்னுமே இல்ல…” 
பேச முடியாமல் அவள் தொண்டை அடைத்தது. 
இருவரையும் மாறி மாறி முத்தமிட்டவன் அழுகையை நிறுத்த முடியாமல் தொடர்ந்தான். 
“செத்துட்டேன்டி… செத்துட்டேன்… இன்னும் கொஞ்சநேரம் இப்படியே என்னை அடக்கி இருந்தா இதயம் வெடிச்சு சிதறி இருக்கும். உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தா அந்த நிமிஷமே என் உயிர் மூச்சு நின்னு போயிருக்கும் அஞ்சு. தானா நிக்கலேன்னாலும் ஏதாவது ஒரு மார்க்கத்தில நானே என் மூச்சை நிறுத்தி இருப்பேன். தாங்க முடியாத இழப்பை சந்திச்ச அந்த நேரத்திலயும் சாகணும்னு மட்டும் என் மனசு யோசிக்கவே இல்ல. எதுக்கு உயிரோட இருக்கோம்னு தெரியலேன்னாலும் உயிரோடதான் இருந்தேன்… ஆனா… ஆனா… இனி… இனி என்னால முடியாது… உனக்கோ அம்முவுக்கோ ஏதாவது ஒன்னு என்டா என்னால வாழவே முடியாது அஞ்சு… அந்த தைரியம் எனக்கு இனி இல்லவே இல்ல… கிடையவே கிடையாது…” 
தன் மனைவியின் முகம் ஏந்தி அழுதபடியே கூறியவன் மீண்டும் அவளையும் மகளையும் இறுக்கி அணைத்துக் கொண்டான். 
இப்படியும் ஒரு நேசமா..? 
கபிலன்கூட கன்னம் தாண்டி வழிந்த கண்ணீரை துடைக்க மனமின்றி அங்கு நடந்து கொண்டிருந்த நேசத்தின் ஆர்ப்பரிப்பில் தன்னை மூழ்கடித்தபடி நின்றிருந்தான். 
பயத்தில் அழுத மகளை தன் நெஞ்சோடு இறுக்கி முகம் முழுக்க முத்தமிட்டு அவள் கண்ணீர் துடைத்து புன்னகைத்தான் குரு. 
“ஒன்டும் இல்ல என் தங்கமே…” 
அவள் உச்சியில் அழுத்தமாய் முத்தமிட்டு தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டான். 
“குமரா…” என்றபடி நெருங்கி வந்த அத்தையிடம் பாய்ந்து எழுந்தவன் மறு கையால் அவரையும் இறுக்கி அணைத்துக் கொண்டான். 
“என்னப்பா இது..? இப்படி உடைஞ்சு போயிட்டியே… எங்களுக்கே இப்போதான் நடந்த விபரீதம் தெரியும்… நினைக்கும்போதே நெஞ்செல்லாம் பதறுது… டிரைவர் சீட்ல இருந்து மூன்டாவது சீட்லதான் நாங்க உட்கார்ந்து இருந்தோம்… அங்கே இருந்திருந்தா…” என்றவர் அடுத்து கூறும் முன் அவசரமாக அவர் வாயை மூடியிருந்தான் குரு. 
சொல்லவே வேண்டாம் என்பதுபோல் வேகமாக இடவலமாய் தலையசைத்தவன் தன் கண்ணாடியை கழட்டி தோள்பட்டையை உயர்த்தி முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள ஓடி வந்த லதா, கர்ணன், காமாட்சி, ராமலிங்கம், கபிலன் என்று அனைவருமே சவியையும் அஞ்சலியையும் மாறி மாறி முகம் பற்றி தோள் வருடி ராதாவின் கரத்தையும் ஆதுரமாக பற்றி என்று ஒரு நிம்மதியான சூழல் மாறி இருந்தது.
“சவிக்கு இப்போ‌ எப்படி இருக்கு..? டாக்டர் என்ன சொன்னாங்க..?” 
இதயத்தின் இரைச்சலும் படபடப்பும் குறைந்து நிதானமடைந்து தன்னிலைக்கு திரும்பி இருந்தான் குரு. 
“இப்ப நல்லா இருக்கு… ஒன்னும் குழப்பம் இல்ல… மூனு நாளைக்கு மருந்து கொடுக்க சொல்லி இருக்காங்க. மிதமான உணவுதான் கொடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. நேத்து வெளியே சுத்த போனப்போ அம்மாவும் அப்பாவும் ஏதேதோ வாங்கி கொடுத்திருக்காங்க… அதை எல்லாம் சாப்பிட்டுதான் செமிக்காம போயிடுச்சு. ஆனா அதுவே ஒரு வகையில நல்லதா போயிடுச்சு பாத்தீங்களா..?” 
சொன்னவளிடம் புன்னகையை பதிலாக்கியவன் அனைவரோடும் மீண்டும் ஊருக்கு கிளம்பத் தயாரானான். 
“ராமேஸ்வரம் போகலாம்தானே… இன்னிக்கு நான் ஸ்கூலுக்கு போகணுமே…” 
“ஒன்டும் வேணாம்… என்கூட மதுரைக்கு வாங்க… அங்கேயே போயிடலாம்…” 
“ஆனா குரு…” 
“ஸ்கூல்ல நான் கூப்பிட்டு பேசிக்கிறேன்… இனி ஒரு நிமிஷம்கூட உன்னையும் சவியையும் விட்டுட்டு என்னால இருக்கவே முடியாது… சத்தியமா முடியாது… நாம மதுரைக்கே போகலாம். மத்ததெல்லாம் போய் பார்த்துக்கலாம்…” 
பிடிவாதமாக கூறியவன் அவர்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மதுரை நோக்கிப் பயணமானான்.
தனது பள்ளியின் துணை முதல்வருக்கு அழைத்து தனது சூழலை விளக்கி விடுப்பு கேட்டுக் கொண்டவன் ராமேஸ்வரத்தில் அஞ்சலி பணிபுரியும் பள்ளியின் முக்கிய பொறுப்பில் உள்ள அவனது ஒரு நண்பரான ராஜன் என்பவருக்கு அழைத்து அஞ்சலியின் இறந்துபோன பாட்டியை மீண்டும் இறக்க வைத்து இன்னும் ஏதேதோ கூறி அவளது விடுமுறையை அதிகப்படுத்தி இருந்தான். 
இப்பொழுது அவன் இருக்கும் மனநிலைக்கு அவன் உயிரானவர்களை பிரிந்து இருக்க முடியவே முடியாது என்னும் சூழல்தான். 
வரும் வழியிலேயே மற்றவர்கள் உணவினை எடுத்துக் கொள்ள குரு உண்பதற்கு மறுத்துவிட்டான். கூடுதலாக சவிக்கு கடை உணவு கொடுத்து மீண்டும் வயிற்றை குழப்பக்கூடாது என்று வீட்டில் சென்று சமைத்துக் கொடுத்துக் கொள்ளலாம் என்று பிடிவாதமாக கூறி தானும் உண்ண மறுத்திருந்தான்.
வீட்டிற்கு வந்த பின்னும்கூட அவன் மனம் சீரடைந்து இருக்கவில்லை. அடிக்கடி உடல் நடுங்கியது… மனம் பதறியது… அஞ்சலியையும் சவியையும் தன் கைவளைவிற்குள்ளேயே வைத்துக் கொண்டான். மகளை இறுக்கி அணைத்தபடி தனது அறைக்குள்ளேயே படுத்துக் கொண்டான். 
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!