Skip to content
Post Views: 4,519
தூறல் – 40
தாய் தயாரித்து எடுத்து வந்த இரவு உணவினை தானே தன் கணவனுக்கும் மகளுக்கும் ஊட்டிவிட்டாள் அஞ்சலி. அவன் மனதிற்குள் நடந்து கொண்டிருக்கும் கலவரங்களையும் பதட்டத்தையும் எண்ணச் சிதறல்களையும் அவன் சரிபாதி தெளிவாகவே உணர்ந்து கொண்டாள்.
Advertisement
உணவும் கொடுத்து மருந்தும் கொடுத்து சவியை மடியில் போட்டு உறங்க வைத்திருந்தான் குரு. வழக்கம்போல் தரையில் படுக்கை விரித்து அவளை படுக்க வைத்து அவள் கழுத்தோடு முகத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டு கண்மூடி படுத்திருந்தான்.
கதவினை தாழிட்டு அறைக்குள் நுழைந்த அஞ்சலி அவனைப் பார்த்தபடியே அவன் அருகில் வந்து அமர்ந்தாள். மென்மையாய் அவன் உச்சி முடியை கோதிவிட அவள் விரல்களை பற்றி தன் நெஞ்சோடு அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.
Advertisement
Advertisement
அவன் விரல் கோர்த்தபடியே எழுந்து கொண்டவள் அவனையும் எழச் செய்திருந்தாள்.
இன்னுமே கனியாமல் கன்றிப் போயிருந்த அவன் முகத்தையே ஆராய்ந்தவள் அவனை இழுத்துச் சென்று மெத்தையில் அமர்த்தி அருகில் அமர்ந்து கொண்டாள்.
Advertisement
அவன் இதயப் பகுதியில் மென்மையாய் கை பதித்தாள். இதயத்தின் லப்டப் ஓசையின் வீரியம் மாறி இருந்தது. இன்னும் அவன் தெளிவிற்கு வந்திருக்கவில்லை. அவனை சமநிலைக்கு கொண்டு வரும் மார்க்கம் அவளிடம்தானே உள்ளது.
இன்னும் அவனை நெருங்கி அவன் முகத்தை கையில் ஏந்தி இருந்தாள்.
“ரொம்ப பயந்து போயிட்டீங்களாப்பா…”
கனிவு பொங்க கேட்டவளை இழுத்து அணைத்து அவள் கழுத்து வளைவில் புதைந்து கொண்டான்.
அவனை தன்னிலிருந்து நிமிர்த்த முயல “கொஞ்ச நேரம் என்னை இப்படியே விடுடி… ப்ளீஸ்…” என்றவனின் அணைப்பு இன்னும் இறுகியது.
சில நொடிகள் அமைதியாக தானும் அவனை முதுகோடு அணைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
அவன் தன்மேல் கொண்ட அளப்பரிய காதலில், தன் மகள்மேல் கொண்ட அளவு கடந்த அன்பினில் அவள் உள்ளம் கனிந்து அவன் காலடியில் கரைந்து விழுந்திருந்தது. ஒரு பக்கமாய் தலைசாய்த்து தன் தோளில் படுத்திருந்தவனின் கழுத்துப் பகுதியில் குனிந்து முத்தமிட்டாள். சிலீரென உள்ளுக்குள் ஏற்பட்ட தாக்கத்தில் வேகமாய் நிமிர்ந்து அமர்ந்தான் குரு.
கட்டுக்கடங்காத காதலின் பாய்ச்சலில் அவன் முகம் முழுக்க இடைவிடாத முத்தமிட்டு இதழ்களையும் இறுக்கமாய் பற்றி இருந்தாள். தன்னவளின் இடைவிடாத முத்தங்களில் உருகி அமர்ந்திருந்தவன் அவள் இதழ் கோர்த்த வேளையில் தன்னிலை முற்றிலுமாய் மறந்திருந்தான்.
கலக்கம் மறைந்து கிறக்கம் பிறந்திருக்க அவன் விரல்களின் இறுக்கமும் அதிகரித்திருந்தது. மருந்தின் வீரியத்தால் மெலிதாய் வாய் பிளந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளையும் பக்கவாட்டாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.
அவனது மன இறுக்கம் தளர்த்தி பரவச நிலைக்கு மாற்றும் வேலையை தன்னவள் கையில் எடுத்துக் கொண்டாள் என்பதை உணர்ந்தவன் அவள் இதழ்களை தன் வசப்படுத்தி இருந்தான்.
அவள் வேண்டும்… வேண்டும்… முழுமையாய் வேண்டும்.
அவள் முகம் பற்றி முத்தமிட்டபடியே படுக்கையில் சாய்த்தவன் அவள்மேல் படர்ந்திருந்தான். நான்கு கண்களும் கலக்கத்தை தொலைத்து மயக்கமாய் கலந்து கொள்ள “உனக்கு இப்போ நான் வேணும்… முழுசா வேணும்… எடுத்துக்கோடா… நான் உன்னோட உரிமை…” மையலோடு கூறியவள் அழுத்தமாக அவன் இதழில் முத்தம் பதிக்க அதன்பின் தொடர்ந்ததெல்லாம் காமன் நடத்தும் கலவிப் பாடம்தான். குரூப் ஸ்டடி நடத்தி ஆசிரியனும் ஆசிரியையும் பாடத்தில் தெளிவு பெற்றனர்.
நிறைய காதல்… கொஞ்சம் காமம்…
நிறைய காமம்… கூடுதலாய் காதல்…
நிறைவாய் நெகிழ்ச்சியாய் தாம்பத்திய வாழ்க்கையின் உச்சத்தை தொட்டு ஓய்ந்தபோது இருவர் கண்களிலும் கீற்றாய் கண்ணீர்.
அவர்கள் காதல் உச்சம் பெற்ற தருணம்.
இனிவரும் நாட்களின் ஆனந்தப் பிரளயத்தை விதையாக வேரூன்றிய தருணம்.
விலகவே விருப்பம் இன்றி இறுகிய அணைப்புக்குள் விடிய விடிய இருவரும்.
இயல்பாய் இனிமையாய் இதயத்தில் இருந்து ரசனையாய் நடந்து முடிந்த அழகிய தாம்பத்தியம்.
தன் நெஞ்சில் சாய்ந்து அயர்ந்து உறங்கும் தன் மணவாளனின் முகத்தை குனிந்து பார்த்தாள் அஞ்சலி. நிறைவிலும் நிம்மதியிலும் பிரகாசித்தான் பகலவன்போல்.
ஆசையோடு அவன் கன்னத்தில் முத்தம் பதித்து அவனோடு இன்னும் கூடுதலாய் ஒன்றிக் கொண்டாள் அவன் செல்லக் கிறுக்கி.
பள்ளிக்கு வழக்கம்போல் சென்றுவரத் தொடங்கினான் குரு. தங்கையின் வாழ்வை நிறைவாய் பார்த்து பூரிப்புடன் ஊருக்கு கிளம்பிச் சென்றிருந்தான் கபிலன்.
பள்ளி பணியைத் தாண்டி பரசுராமனுக்கு அழைத்து வேறு சில வேலைகளையும் தெளிவாக முடுக்கி விட்டிருந்தான் குரு. அவனது திருமணமும் நெருங்கி இருந்தது. தன் குடும்பத்தோடு சொன்னது போன்று முதல்நாளே ராமேஸ்வரம் சென்று இறங்கி இருந்தான்.
ஒரு நண்பனாக முன்னே நின்று அனைத்து காரியங்களிலும் கை கொடுத்தான். நிறைவாய் திருமணம் நடந்து முடிந்தபின் அஞ்சலியோடு அவள் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று தங்களது திருமணம் பற்றி தெளிவாகக் கூறி விரைவில் குடும்பத்தோடு இலங்கையில் குடியேறப் போகும் சூழலை எடுத்துரைத்து அவளை பள்ளியில் இருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக் கொண்டான்.
முழு ஆண்டு தேர்வு முடியும் வரையிலும் அங்கேயே அவள் பணி செய்யட்டும் என்ற எண்ணம்தான் முதலில் இருந்தது. ஆனால் இனி தன்னவர்களை விட்டு பிரிந்து வாழ முடியாது என்று தெளிவாக முடிவு செய்தவன் பள்ளி நிர்வாகத்திடம் பேசி தனது செயலில் வெற்றியும் கண்டிருந்தான்.
அவர்களது திருமணம் முறையாக பதிவு செய்யப்பட்டது. அஞ்சலி இலங்கையில் முறையாக குடியேறுவதற்கான வசிப்பிட விசா வாங்குவதற்கான வேலைகளையும் பரசுவின் உதவியோடு சிறப்பாகவே மேற்கொண்டான் குரு. செய்ய வேண்டிய வேலைகளை தெளிவாக செய்து முடித்துக் கொண்டு ராமேஸ்வரத்தை காலி செய்து தன் குடும்பத்தோடு மதுரைக்கே வந்து சேர்ந்திருந்தான்.
இலங்கையில் இன்றளவும் இருக்கும் தனது உறவுகள் நட்புக்களுடன் எப்பொழுதாவது தொடர்பில் இருந்தவன் இப்பொழுது அடிக்கடி அவர்களுக்கு அழைக்கத் தொடங்கினான். அஞ்சலி ஆசைப்பட்டது போல் இலங்கையின் கிளிநொச்சியிலேயே எதிர்கால வாழ்வை அமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அது குறித்த வேலைகளை இங்கிருந்தே செய்யத் தொடங்கினான்.
பள்ளியிலும் தேர்வு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. முழுமையான ஆசிரியனாக நிறைவாக தனது மாணவர்களுக்கு அனைத்தையும் முடித்து கொடுத்த பின்தான் அந்த பள்ளியில் இருந்து விலக வேண்டும் என்று முழுமூச்சுடன் நிறைவாக பணியிலும் தன்னை ஆழ்த்தி இருந்தான்.
தனது மனைவி, மகள், அத்தை, அருகில் மாமனார் மாமியார், நெருக்கமான உறவுகளாக மாறிப் போன ராமலிங்கம் காமாட்சி என்று அவனது உறவின் கூட்டம் பெரிதாகிப் போய் மகிழ்ச்சியோடு ஒவ்வொரு நாட்களையும் நகர்த்திக் கொண்டிருந்தான் குரு.
பகல் பொழுதுகளில் அவன் நேரங்களை தன் வசமாக்கி கொண்டாள் அவன் செல்லமகள்…
இரவு நேரங்களை முழுமையாக தனக்காக களவாடிக் கொண்டாள் அவன் கண்மணி.
திகட்ட திகட்ட காதல் செய்து தெவிட்டாமல் கலவி புரிந்து அஞ்சலி இழந்த, ஏக்கம் கொண்ட அனைத்து மகிழ்ச்சிகளையும் அவளுக்கு மீட்டுக் கொடுத்திருந்தான் அவள் மன்னவன்.
மீட்டுக் கொடுத்தது அவன் மட்டுமல்ல அவளும்தான். அவன் வாழ்வை செம்மையாக மாற்றி ஒரு அழகுச் சிலையாக உருவாக்கி ஒரு முழு குடும்பஸ்தனாக நிலைபெறச் செய்து அவன் வாழ்விற்கான அர்த்தங்களை அன்றாடம் உணர்த்திக் கொண்டே இருந்தாள் அவன் பத்தினி.
மீண்டும் தங்கள் தாயகத்துக்கு திரும்பப் போகும் மகிழ்ச்சியில் ராதாவின் இதயத்தில் ஒரு தனி பரவசம். அதேநேரம் தங்களை அரவணைத்து உறவுகளைக் கொடுத்து புதுவிதமான வாழ்க்கையை கையில் கொடுத்த தமிழ்நாட்டின் மீதும் தீராத அன்பு. இந்த மண்ணையும் இவர்களையும் விட்டு பிரியப் போவதில் வருத்தம்தான். ஆனால் ஒரு பெரிய ஆறுதலாக இந்த பந்தம் தொடரப் போகிறது நின்று போகப் போவதில்லை என்பதில் ஒரு தனி நிம்மதி.
கர்ணன் லதாவிற்குத்தான் நாட்கள் நெருங்க நெருங்க இதயத்திற்குள் ஒரு தனி பாரம் ஏறி இருந்தது. கண்களுக்கு அருகாமையில் மகள், மருமகன், பேத்தி என்று கண்குளிர அவர்கள் வாழும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது தற்காலிகம்தான், இனி இவர்களது நிரந்தர முகவரி கடலைத் தாண்டி பயணிக்கப் போகிறது என்று எண்ணும்போது கலங்காமல் இருக்க முடியவில்லை.
“போய்த்தான் ஆகணுமாடா…”
அஞ்சலியிடம் அன்றாடம் கேட்கும் கேள்வியை அன்றும் கேட்டிருந்தார் கர்ணன்.
“நான் ரொம்ப தூரம் எல்லாம் போகலப்பா. எட்டிக் கொடுக்குற தூரத்தில் இருக்கிற பக்கத்து நாடு. ஃபிளைட் ஏறினா ஒருமணி நேரம்தான். இங்கே இருந்து வான்வழி பயணமா வெறும் 350 கிலோமீட்டர்தான். மதுரையில இருந்து இலங்கைக்கு வாரம் முழுக்க ஃபிளைட் இருக்கு. நெனச்சா வரலாம் போகலாம்… என்ன நீங்க உங்க இடுப்பு வேட்டியில முடிஞ்சு வச்சிருக்கிற காசை எல்லாம் பயணத்துக்கு கொஞ்சம் செலவு பண்ணனும்…” என்று சிரித்த மகளை சிரிக்க முடியாமல் பார்த்தார் கர்ணன்.
“கண்ணுக்கு குளிர்ச்சியா இங்ஙனயே உங்கள பாத்துக்கிட்டு இருந்துட்டு இனி உங்களையெல்லாம் விட்டுட்டு எப்படி இருக்கப் போறோம்னு தெரியல…”
“அப்ப பேசாம எங்க கூடவே வந்துடுங்கப்பா… உங்க பையன்தான் உங்கள கூட்டிட்டு போகமாட்டான்… ஆனா உங்க மருமகன் அப்படி இல்ல… என்னை சேர்ந்த எத்தனை பேர் வந்தாலும் ஆசையா அள்ளிட்டு போவார்…”
பெருமையாக சொன்ன மகளை பார்த்து புன்னகைத்தார் கர்ணன்.
“அவர் செய்வார்மா… எனக்கு தெரியும்… ஆனா பிறந்து வாழ்ந்து வளர்ந்த இடத்தை விட்டுட்டு வர்றது எங்களால முடியுமா..?”
“அப்போ அவங்களுக்கும் அதே நிலைமைதானப்பா… சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவரை இங்கே இழுத்துட்டு வந்திருக்கலாம்… ஆனா அவருக்குள்ளேயும் சொந்த மண்ணுமேல எவ்வளவு ஏக்கம் இருக்கும்..? அந்த மனுஷன் அவரோட ஆசை ஏக்கம் இதையெல்லாம் பெருசா வெளிப்படுத்த மாட்டார். நாமளா கண்டுபிடிச்சாதான் உண்டு…”
“உன்னால அங்கே போய் அந்த மக்களோட ஒன்றி வாழ்ந்துட முடியுமாம்மா..?” கவலையோடு கேட்டார் லதா.
“அவங்க எல்லாம் என்ன ஏலியன்ஸா..? நம்ம மக்கள்தானே… எல்லாருமே தமிழ் மக்கள்தான்… எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல…” திடமாகக் கூறினாள் அஞ்சலி.
“இங்கேயே கை நிறைய சம்பளம்… நல்ல வருமானம் கிடைக்குது… திரும்பவும் திடீர்னு அங்கே போய் எப்படி சமாளிப்பீங்க..?”
“அதுக்கெல்லாம் பிளான் பண்ணாம இங்கிருந்து போயிட மாட்டோமே… எல்லா வேலையும் இங்கே இருந்து பண்ணிட்டுதான் இருக்கார். இடையில ஒருமுறை அவர் மட்டும் சில வேலைகளை முடிச்சுட்டு வர அங்கே போயிட்டு வர்ற மாதிரி இருக்கும். அங்கே அவர் ஏற்கனவே அரசாங்க உத்தியோகத்திலதான் இருந்தார். அங்கே அவரோட வேலை பார்த்த வேற ஒருத்தருக்கு கூப்பிட்டு நிறைய விஷயங்கள் பேசி இருக்கார். ஆபத்தான சூழ்நிலையில நாட்டைவிட்டு வெளியேறினவங்க திரும்ப அவங்க நாட்டுக்கே போகும்போது அவங்களுக்கான எல்லா உதவிகளையும் அந்த அரசாங்கம் பண்ணிக் கொடுக்குமாம். அதனால இவரோட வேலையும் இவருக்கு திரும்ப கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. இதுக்கு முன்ன முல்லைத்தீவுல வேலை பார்த்துட்டு இருந்தார். இனி கிளிநொச்சிக்கு மாத்திக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணனும். அதுக்காகத்தான் அவர் மட்டும் ஒருமுறை அங்கே போயிட்டு வருவார்…”
மகளின் தெளிவான பேச்சிலும் நம்பிக்கையான புரிதலிலும் பெற்றவர்களுக்கு நிம்மதி எழுந்தது.
“ஒன்னும் கவலைப்படாதீங்க… நீங்க மெச்சற மாதிரி சந்தோஷப்படுற மாதிரி ஒரு அழகான நிறைவான வாழ்க்கையை என் குருவோடு சேர்ந்து நான் வாழ்வேன்… வாழ்ந்து காட்டுவேன்… சரியா..?”
கண்கள் பளபளக்க நிறைவாக கூறியவளை நெட்டி முறித்து நெற்றியில் முத்தமிட்டார் லதா.
நாட்கள் நகர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன. பரசு தன் மனைவியோடு குருவின் வீட்டிற்கு விருந்துக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் சென்றிருந்தான். குரு வேலை பார்த்த பள்ளியிலும் முழு ஆண்டு தேர்வு நிறைவாக முடிவடைந்து மனமே இல்லாமல் அவனுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி இருந்தனர்.
குடும்பத்தோடு அவன் மீண்டும் இலங்கை செல்லப் போகிறான் என்ற செய்தியில் அந்த நிர்வாகத்திற்கு அத்தனை ஒரு இழப்பு. அவன் ஒரு மிகச்சிறந்த ஆசிரியன்… அதை தாண்டி நல்ல மனிதன்… அதே நேரம் அவனது சொந்த மண்ணிற்கு செல்ல வேண்டாம் என்று யாராலும் கூற முடியாது. ஒரு சிறு வலியை இதயத்தில் தேக்கி இருந்தாலும் மனநிறைவோடு மகிழ்வோடு அவனுக்கு விடைகூறி அனுப்பி இருந்தனர்.
தமிழ்நாடு வந்தபின் இத்தனை ஆண்டுகளில் கை நிறைய வருமானம் இருந்தும் பெரிதான செலவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் போனதால் குருவிற்கும் சரி ராதாவிற்கும் சரி கையிருப்பில் ஓரளவு நிறைவான தொகை இருந்தது. இங்கு வாழ்ந்த நாட்களில் அவன்தான் விரும்பி வாழவில்லையே… வேண்டா வெறுப்பாகத்தானே வாழ்ந்தான்.
மூன்று வேளை உணவு, உடுத்திக் கொள்ள உடை என்று அவனது தேவைக்கு அதிகமாகவே அவனிடம் பணம் சேர்ந்து இருந்தது. பிற்காலத்தில் இல்லாதவர்களுக்கு உதவிக் கொள்வோம் என்றுதான் அந்த பணத்தை எல்லாம் சேமித்து வைத்திருந்தான். ஆனால் இன்று அவனுக்கென்று ஒரு தனி உலகமாக அவன் மனைவி மகள் என்று ஆனபின் அந்த பணத்தின் முக்கியத்துவம் என்னவென்று புரிந்து போனது.
மறுநாள் மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்கிறான் குரு. நீண்ட நாட்களுக்குப் பின் தன் தாயகத்தை நோக்கிய பயணம். இங்கிருந்து தெளிவாக தனது பழைய நண்பர்களை அழைத்து பல விஷயங்களை சரிசெய்து வைத்திருந்தான். அவன் மீண்டும் ஊர் திரும்பி வருவதில் அவனோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தவர்களுக்கோ அத்தனை மகிழ்வும் நிறைவும். கூடுதலாக அவன் வாழ்வு மீண்டெழுந்த விபரங்களை கேட்டதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவனுக்காக கூடுதலாக உழைத்து நிறைய வேலைகளை அங்கு செய்து வைத்திருந்தனர்.
ஒரு வாரப் பிரிவின் காரணமாக அன்றைய இரவை தன் மனைவியோடு விடிய விடிய கொண்டாடி, ஒரு நிறைவான வாழ்வை தன் தாயகத்தில் தொடங்க முதல் புள்ளியை வைப்பதற்காக இலங்கைக்கு பயணமாகி இருந்தான் குரு.
(தொடரும்)
error: Content is protected !!