Skip to content
Post Views: 5,845
தூறல் – 41
இலங்கையின் முல்லைத் தீவிற்கு தன் மனைவி மகளோடு வந்து இறங்கி இருந்தான் குரு.
Advertisement
இதோ ஆயிற்று… தன் குடும்பத்தோடு இலங்கையில் குடியேறி மூன்று மாதங்கள் ஓடியே போயிருந்தன. அவன் உயிரில் கலந்தவள் அவனுக்குள் விதைத்த திடமான நம்பிக்கையில் உள்ளே தேங்கி இருந்த தாயகத்தின் மீதான நேசம் மண்ணைக் கீறி வெளிவரும் விதைச் செடியைப் போல் இதயம் எங்கும் பரவியிருக்க, முழு மூச்சுடன் இறங்கி அனைத்து பணிகளையும் கடகடவென முடித்து, மீண்டும் தனது ஆசிரியப் பணியினை திரும்பப் பெற்று கிளிநொச்சியில் உள்ள தனது சொந்த மண்ணில் சொந்த வீட்டில் தனது வாழ்வை புணரமைத்த இரண்டு தேவதைகளுடன் குடியேறிவிட்டான்.
அங்கு நெருக்கமான உறவினரின் கண்காணிப்பில் இருந்த வீட்டினையும் நிலத்தினையும் தன் வசமாக்கி கடகடவென வேலைகளை முடித்திருந்தான். தான் பிறந்த மண்ணில் கால் பதித்த ராதாவிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி. ஆனந்தத்தில் நிறைய அழுதார். மனம் முழுக்க வெறுப்பும் விரக்தியும் பரவியதால்தானே அனைத்தும் இருந்தும் வேண்டாம் என்று விட்டொழித்து இருவரும் எங்கோ தொலைய முயற்சித்தனர்.
Advertisement
Advertisement
அங்கு அவர்கள் தொலையவில்லை… அவர்களுக்காகவே வாழ்வின் மற்றொரு பரிமாணம் காத்திருந்ததல்லவா.
தங்கு தடையின்றி வஞ்சமின்றி இயற்கை வாரி வாரி வழங்கிய அழகு குவியல்தான் இலங்கை என்பதை நேரில் பார்த்து பிரமித்துதான் போனாள் அஞ்சலி. உற்றவன் கைப்பிடித்து நிறைவாக அங்கு வந்து நின்றவள்தானே… சுற்றத்துடன் அத்தனை எளிதாக ஒன்றிப் போனாள்.
Advertisement
சென்ற மாதம்தான் அவளது அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என்று அவளது மொத்தக் குடும்பமும் அங்கு வந்து பதினைந்து நாட்கள் தங்கிச் சென்றிருந்தனர். அவள் திருமணத்திற்கு கூட வராத அண்ணியார் அஞ்சலி தன் கணவனின் கைகோர்த்து புகுந்தவீடு கிளம்பிய நாளில் அவர்களை வழி அனுப்ப விமான நிலையம்வரை வந்திருந்தது அனைவரும் ஆச்சர்யித்த ஒரு விஷயம்தான். குமரகுருவை பற்றி கபிலன்தான் கதை கதையாக மனைவியிடம் கூறி இருந்தானே.
அவன் சொன்னது எதுவும் பொய்யில்லை என்பதை இங்கிருந்த 15 நாட்களும் அவனோடு அருகில் இருந்தே உணர்ந்து சென்றிருந்தாள் கபிலனின் மனைவி வைஷ்ணவி. இனி எத்தனை செலவானாலும் ஒவ்வொரு விடுமுறைக்கும் தங்கை வீட்டுக்குத்தான் செல்வது என்று சத்தியப் பிரமாணமே எடுத்துச் சென்றிருக்கிறான் கபிலன். இலங்கையின் எழில், இன்னும் காண வேண்டிய இடங்கள் என்று அவர்களை அந்த நாடு வாரி சுருட்டிக் கொண்டது.
பள்ளிப் பருவத்தில் தாய், தந்தையோடு வந்து சென்றது… விடுமுறை சமயங்களில் சொந்த பந்தங்களை காண அவ்வப்போது வந்து சென்றது என்று கிளிநொச்சிக்கும் குருவிற்கும் இடையேயான தொடர்பு என்னவோ விருந்தினர் வீடு போன்றுதான். இனி அங்குதான் தனது எதிர்கால வாழ்வு என்பதில் திடமாகி தெளிவாகி ஒவ்வொரு விஷயங்களையும் தெளிவாக முடித்து வைத்திருக்கிறான் குரு.
அஞ்சலியும் சவியும் அவன் வாழ்வில் நுழைந்த பின்பு இதயம் நிறைந்த சிரிப்பும், தெளிவு பொங்கிய முகமுமாக முற்றிலுமாக மாறிப் போய்தான் இருந்தான் குரு. ஆனால் இன்று சொந்த மண்ணிற்கு திரும்பிய பின்பு அந்த சிரிப்பிலும் முகத்திலும் இன்னும் கூடுதலான பொலிவும் நிம்மதியும் பரிபூரணமும் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது.
முல்லைத்தீவு சென்று அவன் வாழ்ந்த வீட்டினையும் சுற்றித் திரிந்து மகிழ்ச்சியில் புரண்ட இடங்களையும் காண வேண்டும் என்ற அஞ்சலியின் ஆசைக்கு அத்தனை எளிதில் சம்மதம் தெரிவிக்கவில்லை குரு.
மகிழ்ச்சிகளை மட்டுமல்ல… அவற்றை தாண்டிய கொடூரமான இழப்புகளையும், வலிகளையும், சுமக்கவே முடியாத அளவு கொடுத்து உயிரை மட்டுமே இறுக்கிப் பிடித்து உணர்வுகளை தொலைத்து வெளியேறிய இடம் அல்லவா. இதயச் சுவற்றில் அழியாத அழிக்க முடியாத கொடுமையான பல நினைவுகளை கீறிப் பார்க்கும் இடம் அல்லவா… அங்கே செல்வதில் நிறைய தயக்கம் காட்டினான்.
“இல்ல குரு… நான் அங்கே போகணும்… நிறைய கடந்து வந்தாச்சு… இன்னும் அந்த ஒரு விஷயத்துக்கு பயந்து நீங்க ஒதுங்கி இருக்கக் கூடாது… அதுவும் நம்ம ஊருதானே… எனக்கு நீங்க வாழ்ந்த வீடு படிச்ச ஸ்கூல் இன்னும் நிறைய நிறைய இடங்கள் இதை எல்லாத்தையும் உங்ககூட சேர்ந்து பார்க்கணும்… நாம அங்க போய்தான் ஆகணும்…”
அவளது விடாத பிடிவாதத்தில் ராதாவிடம் சொல்லிக் கொண்டு மகளோடு கிளம்பி இதோ வந்து இறங்கிவிட்டான்.
ஊர் நெருங்க நெருங்க அவனது உடல் விறைத்து முகம் இறுகி அவனுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. அனைத்தையும் கவனித்தபடிதான் வந்தாள் அஞ்சலி. அவனது விரல்களை இறுக்கமாய் கோர்த்துக் கொண்டாள். கடலோரப் பகுதியில் சிதிலமடைந்து கிடந்த பல வீடுகளுக்கு மத்தியில் அவன் வாழ்ந்த அவன் நினைவுகளை சுமந்த அவனது வீடும் கவனிப்பாரற்று களையிழந்து கிடந்தது.
வீட்டிற்குள் நுழையாமல் தொலைவிலேயே நின்று வலிகொண்ட விழிகளால் அந்த இடத்தை அலைப்புறப் பார்வையிட்டான். மீண்டும் அந்த இடத்தில் திடமாக இப்படி வந்து அவனால் நிற்கக்கூடும் என்று கனவில்கூட நினைத்ததில்லை. இதோ நிற்கிறான்… நிற்க வைத்திருக்கிறாள் அவன் தேவதை. இனியும் ஒருமுறை அங்கு வரும்போது இந்த வலியும் வடுவும்கூட அவன் இதயத்தில் தேங்கி நிற்கக்கூடாது என்றுதான் அவனை வற்புறுத்தி அங்கு அழைத்து வந்திருக்கிறாள்.
ஒரு கையால் தன்னவளை தோளோடு இறுக்கி அணைத்து மறு கையால் தன் மகளை இன்னும் அழுத்தமாக அணைத்துப் பிடித்து உணர்வுக் குவியலாய் நின்றிருந்தவனை முதுகு வருடி சமநிலைப்படுத்தினாள் அவன் மனைவி.
அவளுக்கு தெரியும்… அவளது கடந்த காலத்தை அவளால் எளிதில் கடந்து வர முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் முந்தைய திருமணத்தில் வெகு சில நாட்கள் அவளோடு வாழ்ந்ததாக சொல்லி அடையாளமாக அவள் வயிற்றை மட்டும் நிரப்பி விட்டுப்போன அந்த மனிதனின் முகம்கூட அவளது நினைவடுக்கில் நிற்கவில்லை.
எண்ணி உருகுவதற்கோ ரசிப்பதற்கோ நினைவுகளால் தடுமாறுவதற்கோ எவ்வித தாக்கத்தையும் அவள் இதயத்தில் அவன் ஏற்படுத்தி இருக்கவே இல்லை. அந்த வெகு சில நாட்களின் நினைவுகளை கடந்து வந்ததில் கஷ்டம் என்பது அவளுக்கு அறவே இல்லை. பொக்கிஷமாக ஒருவன் அவள் வாழ்வில் நுழைந்தபின் இதயம் முழுக்க அவன் மட்டும்தானே நிறைந்து நிற்கிறான்.
ஆனால் அவளவனின் நிலை அப்படி அல்லவே…
நிறைவாக மகிழ்வாக எத்தனையோ கனவுகளோடுதானே வாழ்ந்திருப்பான்… மறக்க முடியாத எத்தனையோ நினைவுச் சுவடுகளை தீபாவும் சைந்தவியும் அவனுக்குள்ளும் பதித்துதானே சென்றிருப்பர். இன்றும் இதயத்தின் ஓரமாக இறுக்கமாக பூட்டி வைத்துக் கொண்டுதானே வாழ்கிறான்.
இன்று அவனது வாழ்வு மொத்தமாக மறுமலர்ச்சி அடைந்து போனது. அவனுக்காக உயிரை கொடுக்க மனைவியும் உயிராக நேசிக்கும் மகளும் அவன் கை வளைவிற்குள். நிறைவான வாழ்க்கை… நிம்மதியான குடும்பம்…
அதே நேரம் இழப்பில் தொலைத்த தன் உயிரானவர்களை இதயம் சுமக்கும்போது அவர்களை நினைக்கும்போது இனி வரும் நாட்களில் அவனுக்கு வலி எழக்கூடாது… சுகமான நினைவுகள் மட்டுமே சுகந்தமாக இதயம் முழுக்க வலம் வரவேண்டும். இனி வரும் நாட்களில் மகிழ்ச்சி மட்டுமே அவனுக்கு உரிமைப்பட்டதாக மாறியிருக்க வேண்டும்.
இந்த எண்ணத்தையும் உறுதியையும் மனதில் கொண்டுதான் அவன் பயந்து ஒதுங்கிய இடத்திற்கு தைரியமாக கைப்பிடித்து இழுத்து வந்திருக்கிறாள் அவன் உயிரானவள்.
“என்னாச்சுப்பா..?”
சிவந்து கசிந்திருந்த அவனது கண்களை பார்த்த அவன் மகள் பதட்டமாக கேட்டிருந்தாள்.
“ஒ..ஒன்டும் இல்லடா தங்கம்… அப்பா கண்ணுல தூசி விழுந்துடுச்சு…”
தொண்டையை செருமியபடி பதில் அளித்தவன் வலிய புன்னகைத்தான்.
தானே அவனது கண்ணாடியை கழட்டி தன் பிஞ்சுக் கைகளால் அவன் கண்களை துடைத்தாள் அவன் செல்வமகள்.
“அ..அப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்குமாடா..?” அடைக்கும் குரலோடு கேட்டான்.
“என் அப்பாதான் எனக்கு உயிர்…”
நொடியும் யோசிக்காமல் கூறிய மகளை இறுக்கமாக அணைத்து அவள் முகம் முழுக்க முத்தம் பதித்தான் கண்ணீர் ஈரத்துடன்.
“அவர் பொண்டாட்டிக்கும் அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு சொல்லிருடி…”
செல்ல முறைப்போடு கூறிய மனைவியை திரும்பிப் பார்த்தவனின் விழிகள் கலக்கம் மாறி சிரித்தன.
“அப்பாவும் மகளும் ஓவராதான் சீன் போடுறீங்க… போடுங்க போடுங்க… இன்னும் எட்டே மாசம்தான்… நாங்களும் சீன் போடுவோம்… என் பையன் எனக்கு சப்போர்ட் பண்ண வந்துடுவான்…”
உதட்டை சுழித்துக் கொண்டு திரும்பிக் கொண்டவளை முதலில் சாதாரணமாக பார்த்து சிரித்தவன் பின் சட்டென கண்கள் விரிந்து அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பினான்.
நீ சொன்னதன் அர்த்தம் அதுவா என்ற கேள்வியோடு அவன் விழிகள் அவள் விழிகளுக்குள் நுழைய முகம் விகசித்து மலர்ந்த புன்னகையோடு அவன் வலது கையை எடுத்து தனது மணிவயிற்றில் பதித்தாள் அஞ்சலி.
“அ..ஞ்..சு…”
வெளிவராத குரலில் அழைத்தவனை பார்த்தவள் ஆம் என்று கண்மூடித் திறந்தாள். உயிரைக் கீறி பீறிட்டு வரும் உணர்வுத் தாக்கத்தில் உடல் முழுக்க சிவந்து போய் மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில் ஆழ்ந்து அமர்ந்திருந்தவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் அஞ்சலி.
“நேத்தே தெரியும்… இங்கே இந்த இடத்துல வச்சு இதை சொல்லணும்னுதான் வெயிட் பண்ணினேன். ராதா அம்மாவுக்கு கூட இன்னும் தெரியாது. என் புருஷனுக்கு சொல்லாம மத்தவங்களுக்கு எப்படி சொல்லுவேன்..? நீங்க எதையும் தொலைக்கல… எதையும் இழக்கல… உங்க மகளோட சேர்ந்து உங்க மகனும் உங்க வாழ்க்கையை இன்னும் அழகாக்க போறாங்க…”
அதிராமல் கூறிய மனைவியை காதலோடு திரும்பிப் பார்த்தான்.
அங்கு பறந்து வந்து தோகை விரித்து ஆடிய மயிலை பார்த்து சவி மகிழ்ச்சியாக ஓடி விளையாடிக் கொண்டிருக்க, தன்னவளை இறுக்கி அணைத்து இதழ் வலிக்க முத்தங்களை பதித்துக் கொண்டே இருந்தான் குரு. இந்த நொடியும் கண்கள் பனித்திருந்தன. ஆனால் இது ஆனந்தத்தின் வெளிப்பாடு.
கிளிநொச்சியில் குருவின் வீடு களைகட்டிப் போயிருந்தது… உறவுகளின் கூட்டத்தால்.
அவன் செல்லக்கிறுக்கிக்கு இன்று வளைகாப்பு. ஏழு மாத மேடிட்ட வயிற்றுடன் அழகுக் குவியலாக எந்நேரமும் அவனை அள்ளி விழுங்கிக் கொண்டே இருக்கிறாள். மதுரையில் இருந்து கர்ணன், லதா, இராமலிங்கம், காமாட்சி, கபிலன், வைஷ்ணவி, அவர்களது மகன், இவர்களோடு பரசுராமனும் அவனது மனைவியும் விழாவிற்கு வந்திருந்தனர். மகிழ்வோடு சுற்றித் திரிந்து அனைவரையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருந்தார் ராதா. எளிமையாக நிறைவாக நடந்து முடிந்தது வளைகாப்பு விழா.
தாயின் மறு உருவமாக ராதா உடன் இருப்பதால் பிரசவம் இலங்கையில்தான் என்பதை ஆரம்பத்திலேயே தன் பெற்றோருக்கு தெளிவாக கூறியிருந்தாள் அஞ்சலி. பிரசவத்திற்காக மனைவியும் மகளும் தன்னை தவிக்கவிட்டு மாதக்கணக்கில் மதுரையில் சென்று அமர்ந்து விடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டிருந்த கணவனின் இதயத்தில் தேனையும் பாலையும் வார்த்திருந்தாள் அவன் தேவதை.
அவர்களைப் பிரிந்து அவனாலும் இருக்க முடியாது… அவன் இன்றி அவர்களாலும் நாளை நகர்த்த முடியாது. தூரப்பயணம் வேண்டாம் என்று அவர்களும் அதற்கு ஒத்துக் கொண்டனர். தங்களின் மருமகன் மகளை எப்படி பார்த்துக் கொள்கிறான் என்பது அவர்களுக்கும் தெரியுமே. கூடுதலாக தாய்க்கு தாயாக ராதா அருகில்.
சவி ஐந்து வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறாள். குரு பணிபுரியும் பள்ளியிலேயே வெகு விரைவில் மாணவியாக நுழைய இருக்கிறாள். வீட்டை ஒட்டியே இருக்கும் தோட்டத்தில் விளைச்சலுக்கு குறைவில்லை. ராதாவின் மேற்பார்வையில் தோட்டப் பராமரிப்பும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. குறைவில்லாத நிறைவான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.
மகன் பிறந்தால் என்ன..? மகள் பிறந்தால் என்ன..? குருவின் செல்லமகள் என்றும் சவிதான். அவன் உயிரோடு பிணைக்கப்பட்டவள்… அவனுக்காகவே படைக்கப்பட்டவள்… அவளுக்கான இடம் அவன் இதயத்தில் என்றும் தனித்துவம் வாய்ந்தது… அது அனைவருக்கும் தெரியும்.
தனிமையான அந்த இரவில் மகள் உள்ளறையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, எட்டு மாதங்கள் நிறைவடைந்திருந்த மனைவியை மடியில் அமர்த்தி அவள் பருத்த வயிற்றை வருடியபடியே தன் வீட்டின் மாடியில் உள்ள தங்களது தனியறை பால்கனியில் இதழ் முழுக்க ஏகாந்த புன்னகையோடு அமர்ந்திருந்தான் குமரகுரு.
தன்னவனின் நெஞ்சில் சுகமாய் தலைசாய்த்து ஒற்றை கையால் அவன் கழுத்தை வளைத்து பிடித்தபடி ஆனந்தமாய் அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
மண்வாசனை கிளர்ந்து எழ மெல்லிய நூல் போன்று பெய்ய ஆரம்பித்து சிறிது சிறிதாக வலுப்பெற்றுக் கொண்டிருந்தது மழை. அந்த சூழலை இன்னும் இதமாக்கி அழகாக்கிக் கொண்டிருந்தது இயற்கையின் கொடை.
“மழைக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்குடி…”
தனது மீசையால் அவளது கன்னத்தில் குறுகுறுத்தபடியே கூறியவன் அங்கு ஆசை முத்தம் ஒன்று பதித்தான்.
“என்னவாம்..?” முகத்தை திருப்பி அவன் மூக்கில் முத்தமிட்டபடி கேட்டாள்.
“மழை ஆரம்பிக்கும்போது சாரலா ஆரம்பிக்கும். மென்மையா அமைதியா சத்தம் இல்லாம அப்படியே வருடிக் கொடுக்கும். அதுதான் நான்… அடுத்து சாரல் அப்படியே தூறலா மாறும்… படபடன்னு பூமியை பரவலா நனைச்சு உடம்புக்குள்ள ஒரு விதமான சிலிர்ப்பை உண்டாக்கி சமயத்தில பயத்தை உண்டாக்கி நெஞ்சுக்குள்ள ஆனந்தத்தை விதைக்கும்… அதுதான் என் செல்லக்கிறுக்கி… அதுக்கு அடுத்து அப்படியே மழையா வலுப்பெறும்… இண்டு இடுக்கு இல்லாம எல்லா பக்கமும் நிறைஞ்சு நீரை கொடுத்து பூமியை முழுசா குளிர வைக்கும்… அதுதான் நம்ம பிள்ளைங்க… நம்ம வாழ்க்கையும் சந்தோஷத்தை கொடுக்கிற இந்த மழைபோல தான்டி…”
அவன்புறமாக பக்கவாட்டாக திரும்பி அமர்ந்து கைகள் இரண்டையும் அவன் தோள்களை சுற்றி மாலையாக்கிக் கொண்டாள் அஞ்சலி.
“அப்போ நீங்க ரொம்ப மென்மையான ஆளு… நான் அதிரடியான அடிதடியான ஆளுன்னு நாசூக்கா சொல்றீங்க…”
மூக்கை சுருக்கியபடி கேட்டவளின் மூக்கில் முத்தமிட்டு முக்கோடு மூக்கு உரசி சிரித்தான் அவள் அழகன்.
“இல்லையா பின்ன..? இப்பவும் இந்த வாத்தியார் உன்கிட்டதானடி அடி வாங்குறேன்… என் செல்லக்கிறுக்கி எப்பவுமே ராங்கிதான்… எனக்கு ரொம்ப புடிச்ச ராங்கிதான்…”
அவள் இதழோடு இதழ் உரச பேசியவன் கிறக்கத்தோடு அவள் இதழ்களை தன் இதழ்களுக்குள் பதுக்கிக் கொண்டான்.
இன்பமான மழை தங்கு தடையின்றி பெய்து கொண்டே இருந்தது.
(முற்றும்)
error: Content is protected !!
அருமை உணர்வு குவியல் இந்த கதை என் மனதை தூராளாக அரும்பி பின்பு நேசம் அன்பு காதல் பாசம் என்ற அனைத்து உணர்வின் தாக்கத்தை ஏற்படுத்தியது வாசிக்க வாசிக்க மனம் நிறைந்த உணர்வு நன்றி மஹா மணி