Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண் நிழல் நான்…- 2

அத்தியாயம் -2

“சுளீர் பளீர் பகலோ, காரிருள் ஊறும் இரவோ, எவ்வரையறைக்குள்ளும் சிக்காது, இஷ்டம் போல் ன் அத்தனை விருப்பத்தேர்வுகளிலும் ஜாலம் காட்டும்,அன்பெனும் அது ….வானம்!”



Advertisement

“ஒரு முறை ஒரே ஒரு முறை திரும்பி பார்” என நெஞ்சம் கேட்பது கேட்டபடி அவள் நின்றிருக்க மிகச் சரியாய் அந்த தேவகணத்தில் மித்ரன் அவளை திரும்பி பார்த்தான்.

பின் நடந்தனைத்தும் கனவோ எனும்படியாய் அருகில் வந்தான் என் செங்காந்தளுக்கு` என்ன ஆச்சு?” என்றான் .. அவள் விதிர்த்தபடி பார்த்திருக்க , மென்மையாகச் சிரித்து,முடிச்சுட்டு வா காத்திருக்கேன்” என போய் விட்டான்.

அவன் போய்விட்ட பின்பான அந்த ஐந்து வருடம் மிகக்கடுமையாக இவள் உழைத்தாள் . ஈ மெயிலோ போன் காலோ ஒரு தொடர்பும் இல்லை.. கண்விழிக்கும் போதும் இரவில் கண் மூடும் போதும் அவன் சிகை கோதி முகம் முழுவதுமாய் பூத்தபடி கூறிய முடிச்சிட்டு வா காத்திருக்கேன் எனும் வாக்கியம் தான் அவளின் சுப்ரபாதமும் ராப்பாடலும் .

Advertisement

அப்பொழுது அவள் எழுதியது தான் பொழிவின் ஓசையை அசைபோடுகிறதாக….கவிதை.

Advertisement

மிகச்சரியாக ஆய்வை ஆரம்பித்து, ஐந்து ஆண்டுகள் விடாமுயற்சியும், எண்ணற்ற சவால்களும் கடந்த பின். 2011 அக்டோபரில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து வீடு திரும்பிய அந்த நாள்…குஷி பட கிளைமாக்ஸ் போல இவள் வீடு வந்து சேர அங்கு மித்ரன் நின்றிருந்தான்.

மாலை ஏறியதும் தான் தாமதம் அந்த முழு நிலா நாளின் முதல் இரவு அறையில் அவள் முகமும், மனமும் வேறொரு உலகில் திளைத்தது போல இருந்தது. அமைதியில், அறை முழுவதும் வெள்ளி ஒளி பரவி நிற்க. அந்த ஒளியில் அவள் முகம் மலர்ந்த பூ போல மின்னியது. அவள் அவனை ஒரு நொடி பார்த்தாள்… சிரிப்பை மறைக்க முயன்றாள்… இதயம் சற்றே வேகமாக துடித்தது. அந்த நிசப்தமான தருணத்தில் நடுங்கும் குரலில், கண்களில் நிறைந்த உணர்வுகளோடு மனதெங்கும் ஆட்கொண்டிருந்த அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டாள் … “எப்படி அப்படி சொல்லிட்டு போனீங்க ? எப்படி ..எப்படி வந்தேன் நான் உங்களுக்குள்ள ?”

பொதுவாக ஆண்கள் திருமணம் பிள்ளை குடும்பம் என்றானபின் ஒருவிதமாய் இறுகி திரிவர். என்றேனும் மனம் இளகும் அப்பொழுது அவர்கள் வாய் விட்டு நகைப்பது ஒரு சோடா பாட்டில் நுரையை போல ததும்பி வெளி வரும் .
பார்க்க அத்தனை அழகாய் இருக்கும். அப்படி ஒரு நகையொலியை தந்தபின் தன் கைவளைவில் தன்னவளை வாகாய் கொணர்ந்தான் . அந்த அணைப்பில் உரிமையும், நெருக்கமும், சொல்லாத பல உணர்வுகளும் கலந்து இருந்தது. மெல்ல அவள் கண்ணோடு கண் நோக்கியவாறே மேஜை மேலிருந்த அந்த டைரியை எடுத்து தந்தான். இது என்ன தெரியுதா ? செமினார் டேஸ்ல நீ மிஸ் பண்ண டைரி!”

Advertisement

ஆ” என அதை வாங்கி திறந்தாள் . எங்கெங்கும் தேடி கிட்டாது போன அவள் தொலைத்த டைரி. அதில் இவள் கை எழுத்தில் மிளிர்ந்த கவிதைகள் .

“நீ தவற விட்ட டைரி என் கைக்கு வந்ததும் இந்த கவிதைகளின் வழி என் மனம் புகுந்ததும் இப்படி தானடி, என் செங்காந்தள் மலரே!” ஒருவித நாடக வசனம் போல் சற்றே குறும்பும், ஆழமும் கலந்த குரலில் கூறினான் மித்ரன். வெண்ணிறத்தில் செந்தீயாய் பூக்கள் போட்ட டைரியை மார்போடு அணைத்து அங்கு அவள் செங்கொழுந்தாயிருந்தாள். நன்னிலவாய் அவளும்… தண் நிழல் அவனென, வாழ்வைத் துவங்கியிருந்தனர்.

அறிவாய்வின் இறுதி கட்டம் “முனைவர் பட்ட வாய்மொழி தேர்வு வரை, அந்த ஒரு ஆண்டு
வாழ்க்கை அவர்களுக்கு ஒரு இனிய பயிற்சி போல இருந்தது.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, சொல்லாமலே உணர, சிரிப்பில் மறைந்த காதலை ரசிக்க…பின்…
ஒரு நாள், அந்த காதலுக்கு இன்னொரு உயிர் வடிவம் கிடைத்தது

ஆதிரையும் அவளின் ஆருயிர் மித்ரனுமாய் கடந்த வாழ்வின் கதம்ப நாட்களில் மணம் முடிந்த இரு வருடங்களுக்கு பின்னர் கண்மணியும் வந்தாள் அவர்களின் காதலின் சாட்சியாய். மித்ரன் பெங்களூரு அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும் ஆதிரை ஒரு கல்லூரி பேராசிரியையாகவும் வாழ்வை செம்மையாய் துவங்கியிருந்தனர்.

இந்த கண் நிறைந்த ஜோடி என்பார்களே அதுபோல உள்ளம் நிறைந்த ஜோடி அவர்கள்.

அவள் அடுக்களையில் நின்று காளான் பிரை செய்வாள் இவன் என்னமா செய்யிற” என்றபடியே வந்து நிற்பான், இங்க பாருங்க துளி நீர் விட வேணாம் வதக்கி எடுக்கறதுக்குள்ள அதுவே தண்ணி விடறது பார்க்க எவ்ளோ நல்லார்க்கில்ல” என்பாள். எனக்கு காளான் தெரியல நெற்றில நீர் விழ நீ வியர்த்து விறுவிறுக்க சமைக்கிறது தான் தெரியுது” என்பான் .

பின்னங்கழுத்தில் அவன் சுவாசம் உணர்ந்த நெகிழ் மனதோடே ஒடுங்க! குட்டி எழுந்து அழறா பாருங்க” என்று துரத்துவாள் . கண்மணிக்குட்டிக்கு அப்பொழுது ஐந்து வயது.

ஆதிரை க்கு எதிலும் எப்பொழுதும் ஒரு ரசனைப்பார்வை உண்டு தானே . அதிலும் எல்லாவற்றிலுமிருந்து ஒரு சேதியும் , இருக்கிறதோ இல்லையோ , இவளாகவேனும் எதையேனும் குறிப்பாக குறியீடாக கண்டுணர்வதில் ஒரு அலாதி நிறைவை உணர்கிற தனிப்பிறவி.

புள்ளி வைத்து கோலம் போடும்போது ஒரு புள்ளி உபரியாய் நின்றது ஒரு நாள். “நெழிகளுக்குள் கட்டுண்டால் தான் கோலமென நிற்கலாம் , இல்லையேல் மண்ணோடு மண்ணாக மிதிபட த்தான் நேரும் இல்ல?” வாசல் திண்டில் அமர்ந்து காபி கோப்பையை காலி செய்திருந்த மித்ரன் சரி அதற்கென்ன” என்பான் இல்லங்க கோடு போட்ட ரோடு போட்ட பாதை தான் வாழ்க்கைக்கு உதவும், மற்றதெல்லாம் காலுக்கேற்றதல்ல, வாழ்க்கைக்கும்!” “ஓஹோ” என்பான் இல்லம்பிங்களா” என்பாள் .

மித்ரனும் சளைத்தவனில்லை ஒரு சமகால கணவன். அழகன் என்பதை தாண்டி கூடுதலாக எதிலும் ஆழ்ந்து நோக்கும் ஒரு அசாத்திய நுட்பமும் சொல்வன்மையும் அதில் இழையோடும் நகைச்சுவையும் அவன் ஒரு ஹீரோவென்றால் மிகையாகாது. உண்மையில் ஆதிரை இத்தனை நாள் தாம்பத்தியத்தில் கண்டு உணர்ந்தது என்னவெனில் மித்ரன் எந்த அளவுக்கு வன்மை ஆனவனோ அதே அளவில் ஆதிரைக்கேற்ற மென் மனதானும் தான். திடீரென்று இரு துளையிட்ட மண்குடங்களை வாங்கி வருவான் சிட்டுக்குருவிகள் குஞ்சு பொறிக்க தோதாக சீத்தாமரத்தில் மாட்டிவிட அத்தனை மெனக்கெடுவான். குஞ்சு பொரித்த கூட்டின் அருகில் ஒரு சிறு அரவமும் கூடாதென அனைவரையும் அரட்டி வைப்பான் . கிரீச்சிடும் அதன் சிறு குரலுக்கும் சாளரம் வழி நான் இருக்கிறேன் என்பதாக சேதி பகிர்வான். இவர் தான் குருவிக்கு கூடு கொடுத்த நவீன பாரி வள்ளல் என நகைப்பாள் ஆதிரை.

அவள் வீட்டிற்கும் எதிர்வீட்டிற்குமான குப்பைத்தொட்டியில் பால் பாக்கெட்டில் சிறு நுனி கத்தரித்து கிடந்ததென பார்த்து எதிர் வீட்டுக்கு சென்று உரையாற்றி தள்ளி விட்டான் ஒரு நாள். பிளாஸ்டிக்கின் சிறு நுனி குப்பையில் மறுசுழற்சிக்கு போகாது , அது மண்ணோடு மக்காது கிடந்து மண்ணிற்கு தீங்கையே தரும் என்பதை எடுத்து கூறி பால் பாக்கெட்டில் ஓரத்தில் திருகி கத்தரித்து ஒரு முழு பாக்கெட்டாக குப்பையில் விடவேண்டிய அவசியத்தை எடுத்து கூறி ஒரு நெறியாளனாய் அவ்வப்போது மிளிர்பவன்.

எல்லாம் போக இருவரும் மனமொத்து வாசிப்பினை கொண்டாடுபவர்களாய் இருந்தார்கள். இருவரும் இணைந்து நடக்கிற மொட்டைமாடி நடைகளில் இவன் அழகிரிசாமியை சுந்தர ராமசாமியை கோடு காட்டினால் இவள் வண்ணதாசன் எஸ் ராவை இழுப்பாள் .காரசார தர்க்கங்களின் முடிவில் பஞ்சுமிட்டாய் உன் இதழ் மொழி” என அவனும் பாஸ்பரஸ் உன் உடல்மொழி” என இவளும் கொஞ்சிக்கொள்வார்கள்.

இவள் கிறுக்குகிற கவிதைகளை கலாய்த்து தள்ளுவான் ஆனாலும் உள்ளுக்குள் சிரித்து கொள்வான்.

ஏனோ இவளுக்கு தன் அத்தனையும் முகிழ்த்தும் தன் அத்தனைக்கும் முழுமையும் அவனே எனத்தோன்றும்.

கவிதையாய் தான் சென்றது இவர்கள் வாழ்க்கை.

அன்றொரு நாள் எதற்கோ இவன் அவள் கைபேசியை எடுக்கவும் வாட்ஸப் ஒளிரவும் சரியாக இருந்தது, அன்று தொடங்கியது சூறாவளி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!