Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் – 1.2

“என்னமோ நாங்க உன்னை பாக்காத மாதிரி உன் வீட்டுக்கு ஓடுன, இப்போ எதுக்கு வந்த? தனியா முடிவெடுத்து பெரிய ஆப்ரேஷன்லாம் பண்ணி இருக்க. என்ன நினைச்சிட்டு இருக்க?” வீட்டிற்கு வந்ததும் நிற்க வைத்து கேள்வி கேட்ட மாமியாரை மதிக்கவே இல்லை பிரபா. தன் வேலையுண்டு என்று இருந்துகொள்ள,

“அடியே இங்க ஒருத்தி இருக்குறது கண்ணுக்கு தெரியலையா. சிலுப்பிகிட்டு போற. பொட்ட புள்ளையை பெத்துட்டு இந்த ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.”

“மாமியார்னு ஒரு மட்டுமரியாதை வேணாம். நீ பாட்டுக்கு கத்து நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன்னு இருக்க. இதெல்லாம் நல்லா இல்லை பாத்துக்கோ.” என்று அவ்வப்போது கத்துவது வாடிக்கையாகிவிட, மகனிடம் புகார்கள் சென்றது.

“உன் பொண்டாட்டிக்கு கொழுப்பு கூடிடுச்சுடா. இந்த மூணு பொடுசுகளும் அவளோட சேர்ந்துக்கிட்டு என்னை முறைச்சு பாக்குறதென்ன, கழுத்தை வெட்டுறது என்ன. நீ கேட்க மாட்டியா? உன் சம்பாதனையில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு என்ன திமிரா இருக்குதுங்க பாரு. எல்லாம் அந்த பள்ளிக்கூடத்துக்கு போய் நாலு எழுத்து படிக்கிற திமிரு. அதை நிறுத்திப்புட்டு வீட்ல உக்காத்தி சோறு வடிக்க விட்டா சரியாகிடும்.” என்று ஒப்பாரி வைத்துவிட்டால் அன்றைய தினம் கச்சேரி தான்.



Advertisement

“ஆளும் வளர்ப்பும் ஒன்னும் சரியில்லை. பொம்பளை புள்ளைக்கு எதுக்கு ஸ்கூல், டியூஷன் எல்லாம்? அடக்கமா வளர்த்துற வழியைப் பாரு. பேருக்கு எழுத படிக்க தெரிஞ்சா போதும். வயசுக்கு வந்தோன்னே எல்லாத்தையும் நிப்பாட்டிடுவேன் அப்புறம் எவன் கையிலையாவது புடிச்சி கொடுத்துட்டா அதோட என் கடமை முடிஞ்சிது.” என்று சிறுமியராய் அவர்கள் பள்ளிக்கு செல்லும் போதே குதறி வைப்பார் ராமைய்யன்.

‘என்னமோ இந்த மனுஷனே பீஸ் கட்டி படிக்க வைக்குற மாதிரிதான்.’ என்று அவ்வப்போது தனிமையில் கண்களை கசக்கிக்கொள்வார் பிரபா. கடைசி பெண் பிறந்த சிறிது நாட்கள் கணவரை எதிர்த்து பேசியவர் தான். நாட்கள் செல்ல செல்ல சண்டைகள் முற்றி வார்த்தைகள் தடித்தது கணவனிடம். பிள்ளைகள் வளரவும் அது அவர்கள் மனதினில் பதிந்து மனதை சிதைத்திடுமோ என்று எண்ணி பேச்சினை குறைத்துவிட்டார் பிரபா. ராமைய்யனுக்கு அந்த கவலைகள் எல்லாம் இல்லை. தான் முன்னேறாது பின்தங்கி நிற்பதற்கு மூன்று பெண்களே காரணம் என்று மனதினில் கங்கணம் கட்டிக்கொண்டுவிட்டார். 

“ஏன்மா அப்பா இப்படி பேசுறாங்க? அதெல்லாம் தப்புனு நீ சொல்லலாம்ல.” அரசு பிள்ளையில் படிக்கும் மகள்கள் தந்தையின் பேச்சுக்களை கிரகித்து இப்படி எப்போதாவது கேட்பதுண்டு.

Advertisement

“சொல்றதை காது கொடுத்து கேக்குறவங்ககிட்ட சொல்லலாம். உங்கப்பாகிட்ட எங்க அதெல்லாம் செல்லுபடியாகப்போகுது? அவருக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான்டா.” என்றுவிடுவார் பிரபா. 

Advertisement

பிள்ளைகளும் கேட்டுக்கொண்டு தந்தையிடமிருந்து தள்ளியே இருந்துகொள்வார்கள். ஆனால் ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய வீட்டினில் எங்கனம் விலக? காலை வேலைக்கு கிளம்பும் சமயங்களில் யாரேனும் ஒருவள் கண்ணை கசக்கிக்கொண்டு எச்சில் ஒழுக தூக்க கலக்கத்தில் எதிரே வந்துவிட்டால் போதும் அவர்களை அழ வைத்துவிட்டு தான் ஓய்வார்.

“கிளம்புற நேரம் இப்படி எதுக்க வந்து நின்னா இன்னைக்கு பொழப்பு விளங்குமா?” என்று மகளோடு சேர்த்து, “ஏண்டி இப்படி தலைவிரிகோலமா வீட்டுல பொட்டப்புள்ளைங்க ஓடியாடிட்டு இருந்தா வீடு முன்னேறுமா? புள்ளை வளக்குறாளாம் புள்ளை.” மனைவிக்கும் சேர்த்தே பாட்டு விழும். அந்த பொழுதுகளில் மிரண்டு நிற்கும் மகளை இடையோடு அணைத்துக்கொண்டு தேற்றுவார் பிரபா.

“கிளம்புற நேரத்துல குறுக்கால போகாதீங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில ஏறுறது இல்லை.” கிழவி தன் பங்கிற்கு கத்திவிடும். 

Advertisement

நாட்கள் மெல்ல நகர மூன்று வயது இடைவெளி கொண்ட சகோதரிகள் அனைவருக்கும் விவரம் புரியும் நேரம். எதுவும் மாறவில்லை. சொல்லப்போனால் மோசமாகிக்கொண்டே சென்றது. மகள்கள் வளர வளர தொழிலில் வீழ்ச்சி. தன் திறனை பரிசோதிக்காமல் வீழ்ச்சிகள் மொத்தத்தையும் எளிதாக மகள்கள் மேல் தூக்கி போட்டுவிட்டார் ராமைய்யன். துவக்கத்தில் அதற்கு ஒத்து ஊதிய அவர் அம்மாவோ இப்போது உடல்நிலை நலுங்கி பேச்சிற்கே பஞ்சம் என்றாகிவிட்டார். இப்போவோ அப்போவோ என்று மருமகளின் கைபார்த்து படுத்திருக்கிறார். ஆனால் இன்னமும் குடும்ப வரவு செலவு பிரபாவின் கைக்கு வரவில்லை. எல்லாம் ராமைய்யனே பார்த்துக்கொள்ள இறுக்கம் கூடியது வீட்டினுள். 

“அம்மா நாளைக்கு எங்களை மியூசியம் கூட்டிட்டு போறாங்க. பத்து ரூபா எடுத்துட்டு வர சொன்னாங்க.” சந்தியா வந்து கேட்கவும்,

“படிக்க அனுப்புனா ஊர் சுத்துறது மட்டுமில்லாம அதுக்கு காசு வேற கேக்குதா உனக்கு? உங்களுக்கு ஒரு வாய் சோறு போட நாயா அலைஞ்சிட்டு இருக்கேன் நானு உங்களுக்கு மியூசியம் கேக்குதா?” ருத்திரமூர்த்தியாகிவிட்டார் ராமைய்யன்.

அந்நேரத்தில் தந்தையை அங்கு எதிர்பாராத சந்தியா அவரின் அதட்டல் குரலில் தூக்கிவாரிப்போட பிரபாவின் பின்னால் மறைந்துகொண்டாள்.

“அமைதியா பேசுங்க. பயப்படுறா.” என்ற மனைவியின் பேச்சு அவர் செவியை சென்றடையவே இல்லை.

“பத்து வயசுல உனக்கு எதுக்கு பத்து ரூவா? ஒழுங்கா ஸ்கூலுக்கு போனோமா வந்தோமான்னு இருக்கனும். அதைவிட்டு இங்க போறேன் அங்க போறேன்னு நின்னா அப்புறம் மொத்தமா வீட்டோட நிக்க வேண்டியதுதான்.” அரக்கன் புகுந்தது போல் இறுக்கமாய் ஐயம் கொள்ளவைக்கும் முகத்துடன் ராமைய்யன் பேச, பயத்தில் நடுங்கிய சகோதரிக்கு ஆதரவாய் குழலியும் வந்தனாவுக்கு அவளை பிடித்துக்கொண்டார்கள்.

“அவளுக்கு சொல்றதுதான் உங்களுக்கும். எழுத படிக்க கத்துக்கிட்டோமா வந்தோமான்னு இருக்கனும். அதைவிட்டு எந்த சத்தமும் வரக்கூடாது.” மற்ற இருவரையும் சேர்த்தே மிரட்டினார்.

பிள்ளைகள் அவர் முகத்தை பார்க்கவும் வெறுத்து குனிந்துகொள்ள, “வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா சொல்லிக்கொடுத்து வளத்தீன்னா இப்படி ஊர் சுத்துற எண்ணமெல்லாம் வராது. உங்களுக்கு கஞ்சி ஊத்த அங்க அஞ்சுக்கும் பத்துக்கும் திணறிக்கிட்டு கிடக்கேன் இதுங்களுக்கு ஊர் சுத்தணுமாம்… பெத்திருக்கா பாரு மூணு பொட்டை புள்ளையை.” என்று மனைவியையும் விட்டு வைக்காமல் நகர்ந்தார்.

“இந்த அப்பா வேண்டாம் ம்மா.” என்று இளையவள் வந்தனா துடுக்காக சொல்லிவிட, 

“அப்பா வேண்டாம்னா எங்க போறது நாம?” என்று மூத்தவள் கேட்க, 

“நாம ஏன் போணும்? அப்பான்னா இப்படிதான் கோபப்படுவாங்களாம் என் பிரென்ட் சொன்னா.” பயம் மிச்சமிருந்தாலும் வெகுளியாய் சொன்னாள் சந்தியா. 

“அப்படியெல்லாம் இல்லையே.” வந்தனா மறுக்க,

“ஆனா என்ன கேட்டாலும் வாங்கி தருவங்களாம். நம்ம அப்பா அப்படி இல்லையே. திட்ட மட்டும்தான் செய்றாங்க.” வகுப்பு இடைவெளிகளில் நடைபெறும் சுவாரசிய பேச்சுக்களின் சாராம்சம் அவர்களின்  உரையாடல்களில் சந்தியா மூலம் புகுந்து கொண்டது.

“என் பிரெண்ட் சீதாவை அவங்க அப்பா தான் தினம் ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்து விட்டு அழைச்சிட்டு போவாங்க.” வயதில் மூத்தவள் எனினும் சிறுபிள்ளை ஏக்கங்கள் சில இருக்கத்தான் செய்தது குழலியிடம்.  

“நம்ம அப்பா விட்டுட்டு வேணா போவாரு. கூட்டிட்டு எல்லாம் இல்லை.” இளைய பிள்ளைகளிடம் சாமர்த்தியம் சற்று அதிகமிருக்குமாம். அப்படித்தான் இருந்தது வந்தனாவின் பேச்சுக்கள்.

மெளனமாய் இதனை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பிரபாவின் மனநிலையை சொல்லவும் வேண்டுமா. கணவரை அண்டியிருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தார் பிரபா. எதுவோ ஒன்று தொண்டையை வந்து அடைக்க அப்படியே அமர்ந்துவிட்டார். தங்களுக்குள் மூழ்கியிருந்த பிள்ளைகள் சற்று நேரத்திற்கெல்லாம் இயல்புக்கு திரும்பி அவரவர் படிப்புகளில் மூழ்கிவிட, சமையலறையின் அஞ்சறை பெட்டியின் அடியில் ஒளிந்து கொண்டிருந்த சில ரூபாய் தாள்கள் பிள்ளைகளின் கைக்கு வந்து சேர்ந்தது.

“மியூசியம்ல என்ன பாத்தேன்னு அம்மாக்கு வந்து சொல்லணும்.” என்ற பிரபாவை கட்டிக்கொண்ட சந்தியா மலர்ந்து சிரிக்க, அன்றிலிருந்து அவர்கள் சிரிக்கும் பொழுதுகள் எல்லாம் ராமைய்யன் வீட்டில் இல்லா பொழுதுகள் என்றாயின.

யாருக்கும் காத்திராமல் நாட்கள் நகர, ராமைய்யனின் இயலாமையும் ஏமாற்றமும் அடக்குமுறையாய் உருவெடுத்தது.

“ஏய் சின்ன கழுதை டீ கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு… ஒரு டீ போட வலிக்குதா உனக்கு?” குழலியை அழைத்துக்கொண்டு பிரபா வெளியே சென்றிருந்த நேரம் வீடு திரும்பியிருந்த ராமைய்யனின் குரல் சந்தியாவின் பதட்டத்தை அதிகரித்து கைகளில் நடுக்கம் கொடுத்தது. 

“இதோ போட்டுட்டேன் அப்பா.” என்ற அவளின் மெலிதான குரல் அவரை எட்டக்கூட இல்லை.

“உன் அம்மாக்காரி என்னனு உங்களை வளக்குறாளோ. ஒரு டீ போடத் தெரியல கோட்டையை பிடிக்குற மாதிரி படிக்க கிளம்பிடுறாளுங்க.”

“உங்களை விட எங்க அம்மா எங்களை நல்லாதான் வளக்குறாங்க.” அந்நேரம் வகுப்புகள் முடிந்து வீடு வந்த வந்தனா துடுக்காக பேச, ரெளத்திரம் கொண்ட ராமைய்யன் அவளை அடிக்கவே பாய்ந்துவிட்டார்.

வந்தனா அசராது நிற்க டீயுடன் வந்த சந்தியா அதிர்ந்து குறுக்கே சென்றுவிட, சூடான டீ மொத்தமும் ராமைய்யனின் மேல் கொட்டிவிட்டது. பிலுபிலுவென பிடித்துக்கொண்டவர் முன் எலிக்குஞ்சாய் சந்தியா குறுகி நிற்க, வந்தனாவிற்குமே ஒருகட்டத்தில் அழுகை வந்துவிட்டது.

“அடுத்த வீட்டுக்கு போகப்போற பொட்டை புள்ளைங்க மேல கைவைக்க கூடாதுனு பார்த்தா திமிரெடுத்து போய் பேசுறது கொதிக்குற டீயை கொட்டுறது…” உறுமி கொதித்தவர் முன்னுக்கு வர பிள்ளைகள் தானாய் பின்னடைந்தது. பிரபாவும் வந்துவிட மகள்களுக்கு விழ வேண்டிய அடி மனைவிக்கு விழுந்தது. அதிர்ந்துவிட்டார் பிரபா. அதுவரை பேச்சில் மட்டுமே குத்திக்கொண்டிருந்தவர் கை அன்று முதல் ஓங்கத்துவங்கியது. உடன் வெளிப்படையாக மதுபழக்கத்தின் வருகையும் சேர்ந்துகொள்ள, சற்று தைரியம் கொண்ட வந்தனா கூட அவரின் அண்மைக்கு ஐயம்கொள்ள துவங்கினாள். 

பிள்ளைகளுக்காக என தைரியம் திரட்டி எதிர்க்க முயன்ற பிரபாவின் தேகங்கள் காயம் பெற்றன. அதற்காக பயந்து ஒதுங்கி போகாமல் பிள்ளைகளை காக்க தானே முன்னின்று அவரை எதிர்கொள்ள பிள்ளைகள் மனதினில் ஆழ்ந்த வெறுப்பு படர்ந்தது. கல்லானாலும் கணவன் என்று மட்டுமில்லை தந்தையானாலும் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்ற பிம்பம் பிள்ளைகளுக்கிடையில். அதனால் விட்டுச்செல்வதோ சற்று அனுசரணையாக இருக்கும் பிரபாவின் பிறந்த வீட்டினருக்கு இதை தெரியப்படுத்தவோ விழையாமல் அவ்வாழ்வை ஏற்றுக்கொண்டு வாழ முனைகையில் அவரின் மூச்சு நின்றிருக்க அப்பாடா என்ற ஆசுவாசம் பெண்களிடையில்.

‘இப்படி போகத்தான் இந்த ஆட்டமா?’ நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த கணவரின் உடலைப் பார்த்து பெருமூச்சு எழுந்தது பிரபாவுக்கு. மது  போதையில் கார் ஓட்டிய ஒரு செல்வந்தரின் மகன் இவரின் தள்ளுவண்டியில் மோதி தூக்கி அடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ராமைய்யனின் உயிர் பிரிந்திருந்தது. ஆம் இறுதி வரை தள்ளுவண்டியிலேயே அவர் காலம் முடிந்துவிட்டது. 

முன்னேறி மேலே வர உழைப்பு, விவேகம், உத்வேகம் என்று எதையும் முழு வீச்சில் இறங்கி செய்யாமல் அப்படியே தேங்கிவிட்டு பழி அனைத்தையும் மகள்கள் மீது போட்டுவிட்டார். தன் பக்க தவறுகளை ஆராயாமல் அடுத்தவர் மீது பழி சுமத்தியவர் கொஞ்சமேனும் தன் தவறை உணர்ந்திருக்கலாம் அதற்குள் போய்விட்டார் என்ற ஆற்றாமை தான் பிரபாவிற்கு. கணவர் தூற்றிய மகள்களை எப்பாடுபட்டேனும் முன்னுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற வெறி அவருள் ஊற்றெடுக்க, ஆண் பாதுகாப்பின்றி ஐந்து பெண்களின் நிலையும் பாதுகாப்பும் என்னாகுமோ என்ற கவலை ஒருபுறம் என்றால் அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற ஐயம் மறுபுறம். கண்கள் தன்னால் ஒடிந்து ஓரமாய் படுத்திருக்கும் மாமியார் புறம் சென்றது. அவரின் மருத்துவ செலவுகளையும் சமாளிக்க வேண்டுமே என்று பல யோசனைகள் கணவரின் இழப்பை பின்னுக்கு தள்ளிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!