Skip to content
Post Views: 4,667
‘புருஷன் செத்தா இப்படியா ஒரு குடும்பம் இருக்கும்? பொண்டாட்டி எனக்கென்னனு கண்ணுல தண்ணி வைக்காம வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கா. புள்ளைங்க அப்பனை பாக்க கூட இல்லை. மூஞ்சுல சொட்டு சோகம் இல்லையே.’ அப்போதே எடைபோடும் பேச்சுக்கள் அரசல்புரசலாக நடந்தது.
சந்தியாவைத் தவிர மற்ற இரு பெண்களும் அம்மாவை ஒத்து அமைதியாக அமர்ந்திருந்தனர். சந்தியா மட்டும் தங்களைக் கண்டாலே கரித்துக்கொட்டும் அப்பா இனி இல்லை என்பதை கிரகிக்க முயன்று அவளையும் அறியாது கண்ணீர் விடுவதும் அதை துடைப்பதும் என்று இருந்தாள். அது அமிழ்ந்திருந்த பாசத்தால் ஊறியதோ என்னவோ அவளே அறியவில்லை. ஓரளவு விவரம் புரிந்த மற்ற சகோதரிகள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் ஆசுவாசம் கொண்டனர். ஆம் பெற்ற தகப்பன் இறந்தது ஆசுவாசம் கொடுக்கிறது எனில் எந்தளவுக்கு அப்பெற்றவனின் நடத்தை இருந்திருக்கும் என்று இதற்கு மேல் சொல்லவும் வேண்டுமா.
மனதின் அடிஆழத்தை பதம் பார்த்து பிஞ்சிலேயே விதைக்கப்பட்ட கசப்பை இனி அரும்பாடுபட்டு விழுங்கத் தேவையில்லை என்பதே பெரும் ஆறுதலாய் உருவகம் பெற்றது. அன்னையின் மெளன அழுகைக்கும் அவர் தேகத்தை அலங்கரித்திருக்கும் சிவந்த தடங்களுக்கும் முற்று கிடைத்தது மட்டுமில்லாமல் இனி தங்கள் வீட்டில் அமைதி குடிகொண்டுவிடும் என்று கணக்கு போட்டுவிட்டனர் அப்பேதைகள். எண்ணுவதெல்லாம் நிகழ்ந்துவிடுமா இல்லை நிகழக்கூடியதை தான் முன்கூட்டியே எண்ணி கச்சிதமாய் கணக்கிட முடிந்துவிடுமா?
ராமைய்யன் இருந்தபோது சில இக்கட்டுகள் என்றால் அவர் சென்ற பின்னோ வேறு இன்னல்கள். விபத்து ஏற்படுத்திய செல்வந்தர் இதனை பெரிதாக்காமல் இருக்க சில பல இலட்சங்களை வாரி இறைக்க தயாராய் இருந்தார். உடன் இருந்த சொந்தங்கள் அதனை தடுக்க முனைய,
Advertisement
“இந்த காசு இருந்தா என் பொண்ணுங்களை படிக்க வச்சிடுவேன்.” என்று நின்றார் பிரபா.
‘புருஷன் செத்ததுக்கு நியாயம் வாங்கலைன்னா பரவாயில்லை அதுக்காக அவன் போன பத்தாவது நாளேவா அவன் சாவை இப்படி விலை பேசுவா? இவ இப்படி இருக்குறதால தான் அவன் அப்படி இருந்திருக்கான்.’ குடும்பத்திற்குள் நடந்த அநியாயங்களை முழுதாக அறிந்துகொள்ளாத உறவுகள் பல இப்படித்தான் அநியாயமாய் தூற்றின.
‘பொண்ணுங்க பிறந்ததுலேந்து கரிச்சி கொட்டிட்டே இருந்த மனுஷன் அவங்களுக்கு சோறு போட்டதோட வேற எதுவும் செஞ்சது இல்லை. இப்படியாவது அவரு உபயோகப்படட்டுமே.’ என்பது பிரபாவின் வாதம். இதில் அவரது பிறந்தவீட்டினருக்கு கூட விருப்பமில்லை.
Advertisement
“இது சரி கிடையாது பிரபா.” என்றனர்.
Advertisement
“அவர் சரியா இல்லாதப்போ எல்லாம் விட்டுட்டு இப்போ நான் செய்யுறது சரி இல்லைனு நிக்குறீங்க?” எதிர்கேள்வி எழுப்பி நின்றார் பிரபா.
“அவர் சரியா இல்லாதப்பா என்ன பண்ணியிருக்கணும் நீ? எங்களை கூப்பிட்டு சொல்லி இருக்கனும். அதை செஞ்சியா நீ?” என்று அவர் அண்ணன் கேட்க,
“சொன்னேனா இல்லையானு அம்மாவை கேளேன்.” என்றதோடு நிறுத்திக்கொண்டார் பிரபா. ஆம் மதுபோதைக்கு ராமைய்யன் அடிமையாகி இருந்த சமயம் தன் அன்னையிடம் முறையிட்டிருக்கிறார். அவரோ இதெல்லாம் சகஜம் என்பது போல் மகளை அடங்கி போகச் சொல்ல அதன் பின் வாய் திறக்கவில்லை. இன்று அண்ணன் வந்து கேட்கவும் விரக்தியாய் பார்த்தவர் எவரின் அவப்பேச்சையும் காதில் வாங்கிகொள்ளவில்லை.
Advertisement
பெண்ணை பெற்றவரைக்கொண்டு வரும் பணத்தில் என் மகள்களுக்கு இல்லாத உரிமையா என்று யாரையும் கலந்தாலோசிக்காமல் அதை வாங்கிக்கொண்டார். அந்தோ பரிதாபம் அதன் பின்தான் ஒன்றன் பின் ஒருவராய் கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசலை மொய்க்க, அந்த பணத்தை தூக்கி கொடுத்துவிட்டார். மீதம் இருந்த தொகையை பெண்களின் பெயரில் போட்டு வைக்கலாம் என்று நினைக்க,
“இந்த பணம் நமக்கு வேணாம் ம்மா.” என்று வந்து நின்றாள் குழலி.
“புரியாம பேசாத. நீங்க எல்லாம் நல்லா படிக்கணும் அதை மட்டும் பாருங்க.”
“படிக்காம கூட இருப்போம் ஆனா ஒத்த காசு இதுலேந்து எங்களுக்கு எடுத்து செலவு பண்ணக்கூடாது.” என்று அவள் அழுத்தமாய் நின்றுவிட்டாள்.
“ம்மா எங்களை வேண்டாம்னு சொன்னவரால வந்த பணம் எங்களுக்கும் வேண்டாம். அவரோட எண்ணங்கள் பாவமா இதையும் தொடரும். கழுத்தை நெறிக்கும். தொண்டையை இறுக்கும். பேச விடாது. புண்ணியம் சேரலைனாலும் இந்த பாவம் வேண்டாம் ம்மா.” என்றவளை அதிர்ந்துதான் பார்த்தார் பிரபா.
பாவ புண்ணியங்கள் பேசுமளவிற்கா என் மகள் வளர்ந்துவிட்டாள் என்ற எண்ணத்தோடு மூத்தவள் குழலியை நிமிர்ந்து பார்க்க, தீர்க்கமான புருவங்களுக்கு அடியில் அம்பென பாயும் விழிகளின் கூர்மையில் பிடிப்பின்மையை அப்பட்டமாய் பிரதிபலித்து விலக்கி வைக்கும் பாவம் இருந்தது. சட்டென மகள் வளர்ந்துவிட்ட தோற்றம். நீண்டு நெளிந்திருந்த முடிக்கற்றைகள் சன்னமான செவியின் பின் தஞ்சமடைந்திருக்க, கூர் நாசியும் உப்பிய கன்னங்களுக்கு இடையே இறுக்கமாக மூடிக்கொண்ட இதழ்களுமாய் நின்றவள் பதினெட்டு வயதை தொடவிருந்தாள். ஆம் வயது வந்து வருடங்கள் ஓடியிருக்க, அவளை கட்டிக்கொடுக்க முனைந்த தந்தையிடமிருந்து சாதுர்யமாக வெளிவந்திருந்தாள். ஏன் அவள் அன்னைக்கே தெரியாத விஷயங்கள் கூட அவளிடத்தில் ஒளிந்து கிடந்தது.
தந்தை ஒரு வரனை கொண்டுவந்து பெண் பார்க்கும் சடங்கு நிகழ்த்த அதே நேரம் தன் தோழிகள் மூலம் காவலர்களை வரவழைத்து அவளது திருமணத்தை மட்டுமல்ல தன் தங்கைகளின் எதிர்காலத்தையும் தக்க வைத்துக்கொண்டாள். அக்கம்பக்கத்தினர் மூலம் விஷயம் கேள்விப்பட்டு வந்தது போல் வீட்டிற்கு வந்த காவலர்கள் ராமைய்யனை மிரட்டி பெண்களை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிய பின்தான் மணம் முடிக்க வேண்டும் என்று எழுதி வாங்கிவிட்டனர். இன்றுவரை யாரும் அறியாத இரகசியமாகவே இருக்கிறது.
“நம்மால நம்மளை பாத்துக்க முடியும்.” என்ற மகளை நம்பமுடியாது பார்த்தார்.
“புரியாம பேசாத குழலி. இதெல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது. உங்களை படிக்க வைக்கணும் கட்டிக்கொடுக்கணும் எவ்வளவு இருக்கு. வேண்டாம்னு ஈஸியா சொல்ற.” நிதர்சனத்தை எடுத்துக்கூறி பிரபா மறுக்க,
“ஏன் முடியாதுனு நினைக்கிறியா?”
“வயசு கோளாறுல பேசுற நீ. வருமானம் இல்லாம பொண்ணுங்களா இந்த சமுதாயத்துல வாழ்றது அவ்வளவு ஈஸி இல்லை.”
“ராமைய்யனுக்கு பொண்ணாவே இத்தனை வருஷம் வாழ்ந்துட்டோம் இதை விட என்ன கஷ்டம் இருந்துடப்போகுது?” என்றவள் அத்தாய்க்கு புதிதாய் தெரிந்தாள்.
“இன்னைக்கு என்னாச்சு உனக்கு?” மகளை ஆயாசமாய் பார்த்தார் பிரபா. இறந்த பின்னேனும் ஏதோவொரு வகையில் கணவர் மூலமா கிடைக்கும் பணம் பிள்ளைகளுக்கு உபயோகப்படும் என்று அவர் கணக்கு போட்டிருக்க, என்றும் இல்லாத நாளாய் மகள் பிடிவாதம் பிடித்தாள்.
“என்னால முடியும். சொல்லி புரிய வைக்க முடியாதவரோட போராடி பிரயோஜனம் இல்லைனு நீதானே சொன்ன. அதான் இத்தனை வருஷம் சகிச்சிக்கிட்டு இருந்துட்டோம். இனி யாருக்காக பாக்கணும் அடங்கணும்?”
“நீ இவ்வளவு யோசிப்பியாடி? பேசுவியாடி?” என்று வாய் பிளக்காத குறையாய் நின்றார் பிரபா.
“ம்மா..”
“சரி சரி உனக்கு வேண்டாம்…” என்ற அன்னையை அவள் முறைக்க, “நமக்கு வேண்டாம்.” என்று மாற்றிக்கொண்டவர், “இத்தனை வருஷம் அவர் காசுலதான் சாப்பிட்டிருக்கோம்டி மறந்துட வேண்டாம். இதை படிப்புக்கு கல்யாணத்துக்கு செலவு பண்ண வேண்டாம் நம்மளோட அன்றாட தேவைக்கு யூஸ் பண்ணிக்கலாம். உடம்பு முடியாம பாட்டி இருக்காங்க அவங்களை பாக்கணும், அஞ்சு வயிறு இருக்கு அதுக்கென்ன பண்ண? யார்கிட்ட போய் நிக்க?” என்ற கேள்விக்கு மகளிடம் பதிலில்லை.
அந்த பணத்தை தங்களின் தேவைக்கு உபயோகப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம். மற்றைய அன்றாட செலவுகள் அவள் கருத்திற்கு வரவில்லை. உடனே முகம் சுருங்கிப்போனது. மகளை புரிந்துகொள்ள முடிந்த பிரபாவிற்கும் வருத்தமாகியது. ஐந்து பெண்களாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் இத்தனை வருடங்கள் சகித்துக்கொண்டு சென்றது போல் பலதை இனியும் சகிக்க வேண்டியதிருக்கும் என்று அனுபவம் கூறியது. அதனை தெளிவாக எடுத்துக்கூறி மகளை கலவரப்படுத்த முயலவில்லை மாறாக அவளை சாமாளித்து அப்பணத்தை அன்றாட தேவைகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டார்.
படிப்பு அரசு பள்ளி என்பதால் அதனையொட்டிய செலவுகள் முதலிலிருந்தே இல்லை. மதிய உணவும் சத்துணவு திட்டத்தில் நிவர்த்தியாகிவிடும். மற்றதையும் முடிந்தளவு கட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபா. பிள்ளைகள் வாழ்க்கை உடனே வண்ணமயமாகவில்லை என்றாலும் முன்பிருந்த ஐய உணர்வு நீங்கி அமைதி குடிகொண்டது. அவ்வப்போது சிரிப்பு சத்தங்கள் அவ்வீட்டை விட்டு வெளியே கேட்க, புரளிப் பேச்சுக்களுக்கு தீனியாகியது. எதையும் கருத்தில் ஏற்றிக்கொள்ளாமல் பிரபா தனக்கென்று ஒரு வேலையை தேடிக்கொண்டார்.
மேல்தட்டு வர்க்கத்தினருக்கு உதவியாளராக சேர்ந்தபின் அது கொடுத்த தன்னம்பிக்கை அவரையே அவருக்கு புதிதாய் காட்டியது. இத்தனை வருடம் வீட்டோடு அடைபட்டு இருந்திருக்க கூடாது என்று காலம் கடந்த ஞானோதையம். போனது போகட்டும் என் பெண்கள் நிச்சயம் மற்றவர் கை எதிர்பார்த்து இருந்திடக் கூடாது, அவர்களின் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டவர் அதை நிறைவேற்றவும் செய்தார். ஆம் இன்று அவரின் மூன்று தேவதைகளும் நன்றாக படித்து தங்களுக்கென்று ஒரு வேலையை தேடிக்கொண்டு வாழ்க்கையை பார்க்கின்றனர். அதன் அளவில் வெற்றி பெற்றுவிட்டதாக நிம்மதி மூச்சு விடமுடியாமல் சில வருடங்களாக ஒரு இயலாமை. பல வருடங்கள் கழித்து மீண்டும் கயிறின்றி கைகள் கட்டப்பட்ட நிலை.
“குழலி கொஞ்சம் யோசிடி.”
“ம்ம்.” என்றாளே ஒழிய அதில் கவனமில்லை.
“வந்தனா எப்போ வரேன்னு சொன்னா?” கூந்தலை பின்னலிட்டுக்கொண்டே கேட்டவளின் விழிகள் கடிகாரத்தை தொட்டு மீண்டது.
“நாளைக்கு ஹாஸ்பிடல் போணுமாம். இன்னைக்கு சாயந்திரம் வேலை முடிச்சிட்டு வந்துருவா.”
“எதுவும் வேணுமா மா? போன தடவை வந்தனா வீட்டுக்காரர் ட்ரை புரூட்டஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து போட்டாரே. அதெல்லாம் இருக்கா இல்லை தீந்துடுச்சா?”
“தீர்ந்தா வந்தனா வாங்கிப்பா. நான் சொல்றதை கேளு நீ.”
“ப்ச் ம்மா… அவளுக்கு வாங்கிக்கொடுக்க முடியாத நிலைமையிலா இருக்கோம்?”
“நாம வாங்கிக்கொடுத்துதான் சாப்பிடணுங்குற நிலைமையில அவளும் இல்லை. இங்க வர்றப்ப சாப்பிட, அவங்க வீட்டுக்கு போனா அங்க சாப்பிடன்னு எல்லாம் வாங்கி வச்சிருக்காங்க. இதையெல்லாம் தலையில ஏத்துறதை விட்டுட்டு நான் காமிச்ச போட்டோல இருக்குற பையனை உன் தலையில ஏத்தேன்.” என்ற பிரபாவை பார்த்து சிரித்தவளோ,
“ம்மா அப்படியெல்லாம் ஒருத்தரை மக்அப் பண்ணி மண்டையில பதிய வைக்க முடியாது. நான் வேணாம்னு சொல்லல. நம்மகூட இருக்குற மாதிரி ஒருத்தர் வரட்டும் கண்ணை மூடிக்கிட்டு ஓகே சொல்லிடுறேன் ஓகே வா?” என்றவளை ஆயாசமாய் பார்த்தார் பிரபா.
“எவ்ளோ பாப்ப நீயும்? நான் இருந்துக்க மாட்டேனா?”
“எதுவரைக்கும் முடியுதோ அதுவரைக்கும் பாப்பேன். காலையிலேயே பேசி மூட் ஆப் பண்ணாத. இன்னைக்கு முடிச்சி கொடுக்க வேண்டிய ஆடர் எல்லாம் பேக் பண்ணிட்டீன்னா கொடு போற வழியில கொரியர் பண்ணிடுறேன்.” என்றவள் பிரபாவை அதற்கு மேல் பேசவிடாது பசை போட்டு ஒட்டப்பட்டிருந்த அட்டைப்பெட்டியை எடுத்துச் சென்று வண்டியின் முன் வைத்து வந்தாள். காலை உணவு தயாராய் இருக்க, அதனை முடித்துவிட்டு கிளம்பிச் சென்றாள். செல்லும் அவளை பார்த்த பிரபாவினுள் ஏக்கப் பெருமூச்சு.
நெடுநெடுவென வளர்ந்து ஆலமர விழுதாய் குடும்பத்திற்கே நிழல் கொடுக்கும் அவரின் மூத்தமகள் அவள். கடமைகளை தன்னை போல் இயல்பாய் ஏற்றுக்கொண்டு குடும்பத்தை வழிநடத்துபவள். தூற்றும் சொந்தங்களுக்கு மத்தியில் நிமிர்ந்து நின்றதோடு சார்ந்தோரையும் இயல்பாய் மேலே தூக்கிவிட்டவள்.
அவள் குழலி. மைம்மலர்க்குழலி.
error: Content is protected !!