Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் – 2.1

*2*

“பாத்திரம் தேய்க்குறதுக்கு எல்லாமா மிஷன் வந்திருக்கு? கூத்தால்ல இருக்கு. சமைச்ச கையோட பாத்திரத்தை கழுவி போட்டா ஆச்சு. இந்த மெஷின்ல தேய்க்கிறதுக்கு பாத்திரத்தை சேர்த்து வச்சி அடுக்கி போட்டு எப்போ கழுவி முடிக்கிறது. வீட்டு பொம்பளைங்க குனிஞ்சி நிமிந்து வேலை பாத்தா தான் உடம்பு சுளுவா இருக்கும். அதை விட்டுட்டு இதை வாங்கிப்போட்டு அவங்களை சோம்பேறியாக்கி சீரியல் பாக்க வுட்டா வீடு விளங்குமா?” என்றவரின் வார்த்தை பிரயோகங்கள் முகம் சுழிப்பதாய் இருந்தாலும் அதனை வெளியில் காட்டாது சிரித்த முகமாக நின்றவனோ,

“அப்படி சொல்ல முடியாதுங்களே. இப்போ எல்லாரும் வேலைக்கு போறாங்க. வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தவுடனேயே ஒரு சிங்க் நிறைய பாத்திரம் இருந்தா அவங்களுக்கும் சிரமமா இருக்கும்ல. ஏன் நாமளே வேலை முடிச்சி வீட்டுக்கு போனா நாமளேவா எல்லாம் பண்ணிக்குறோம்? சோர்வா இருக்குனு அம்மாவையே மனைவியையோ பசங்களையோ தண்ணி எடுத்துட்டு வர சொல்றது, கைக்கே காபி வேணும்னு கேக்குறதில்லையா? அப்படித்தானே அவங்களுக்கும் இருக்கும். அதுவும் இப்போ உள்ள சோப் எல்லாம் நிறைய கெமிக்கல் கலக்குறாங்க. யூஸ் பண்ற நிறைய பேருக்கு தோல் வியாதி வருது. எரிச்சல், அரிப்பு சர்வ சாதாரணமாகிட்டு. நாம போய் நின்னு உதவி பண்ணலைனாலும் இது மாதிரி மெஷின் வாங்கிக்கொடுத்து அவங்க சிரமத்தை குறைக்கலாமே.” என்றவனை இளக்காரமாய் பார்த்தவரோ,

“இன்னும் பொம்பளைங்களை புரியாம இருக்கீங்களே… இப்படி இருந்தா எப்படி பொழைக்குறது? தலையில மொளகா அரைச்சிடுவாங்க… கலிகாலம்.” என்று சொல்லிக்கொண்டே அவர் நகர்ந்துவிட, பல்லைக் கடித்துக்கொண்டு அவரின் பின் சென்றவன்,



Advertisement

“வேற எதுவும் பாக்குறீங்களா சார்?” என்று தணிவாய் வேண்டிட, 

“பைப்பை திறந்தா சுடுதண்ணி வருமாமே அது இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே பார்வையை சுழற்ற, மற்றொரு புறம் அழைத்துச் சென்றவன் அவர்களின் வசமிருக்கும் நீர் சூடேற்றிகளை காட்டி விளக்கினான்.

“விரவு இல்லை கேஸ் அடுப்புல ஒரு குண்டு தண்ணி வச்சா என் ரெண்டு வாண்டுகளும் ஆறுறதுக்கு முன்னாடி குளிச்சிடணும்னு சட்டுபுட்டுனு தண்ணியை ஊத்திட்டு வந்துடுவானுங்க. ஆனா இதை வாங்கிப்போட்டா குளிச்சிட்டே இருக்குங்களே தவிர வெளிய வராதுங்களே.” என்று அதற்கும் ஒரு நொட்டம் சொல்லி அவனைப் பார்த்தே சிரித்தார்.

Advertisement

‘இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனோ?’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டவன் மனதினில் ஒரு உருவம் வந்து செல்ல, வேகமாய் தலையை உலுக்கிக்கொண்டான் அவன். 

Advertisement

“பாருங்க நான் சொல்றது சரின்னு உங்களுக்கே புரிஞ்சிடுச்சு. இந்த மெஷின் எல்லாம் தேவையில்லாத ஆணியா தான் இருக்கு. சொகுசு பண்றேன்னு சோம்பேறி ஆக்கிட்டு இருக்கு. நீங்களும் அது தெரியாம வித்துட்டு இருக்கீங்க. பதவிசா இருக்கீங்க ஆனா விவரம் போதலையே இனியாவது விவரமா பொழச்சிக்க பாருங்க.” என்று இலவச ஆலோசனை கொடுத்துவிட்டு நகர்ந்தார் அவர்.

அவர் நகர்ந்ததும் தலையில் கை வைத்தவன் அப்படியே விரல்கள் கொண்டு நெற்றியை தேய்த்துக்கொள்ள, 

“உனக்குன்னே அளவெடுத்து செஞ்ச மாதிரி வந்திருக்காருல்ல?” உடன் பணிபுரியும் மகேஷ் பொங்கும் சிரிப்பை கட்டுப்படுத்தியபடி கேட்க, உச்சி முடியை பிடித்திழுத்து பின் சீராக கோதியவன், 

Advertisement

“எதுக்கு வந்தாரு என்ன சொல்லிட்டு போறாருனு ஒன்னும் விளங்கல.”

“பொண்டாட்டியை ஜவுளி கடையில விட்டுட்டு பொழுது போக்க வந்திருப்பாரா இருக்கும்.” கேலியாய் மகேஷ் இழுக்க, அவன் தோளில் கையிட்டு இழுத்துக்கொண்டே நகர்ந்து நாற்காலியில் அமர்ந்தான் அவன். 

“அடபோடா… டிஷ் வாஷர் பத்தி விசாரிக்கவும் நான்கூட இன்னைக்குக் ஒரு பெரிய பில் தட்டிடலாம்னு பாத்தேன். எங்க?” என்று பெருமூச்சு எழுந்தது. பெரிய தொகையுடனான விற்பனை முடித்துக்கொடுத்தால் அந்த மாத விற்பனை இலக்கை எட்டி ஊக்கத்தொகை பெற்றுவிடலாம் என்று அவன் கணக்கு போட, பொழுது போக்க வந்த வாடிக்கையாளர் அவனை வைத்து செய்துவிட்டார். 

“இதுக்குத்தான் இந்த டிஷ் வாஷர் எல்லாம் நம்ம ஊருக்கு செட் ஆகாது இறக்காதீங்கனு மேனேஜர் கிட்ட சொன்னேன். கேட்டிருந்தா இன்னைக்கு நீ தப்பிச்சிருக்கலாம். சேல்ஸ் டார்கெட் முடிக்க நாம குரலி வித்தை காட்டணும்னு பாத்தா அவர் காட்டிட்டு போயிட்டாரு உனக்கு.” 

“பொம்பளைங்களுக்கு முதுகு வலையணுமாம். முதல்ல அவர்கிட்ட இருக்குற பைக்கை பிடுங்கிட்டு சைக்கிள்ள போவ சொல்லணும்.” கடுப்பாக மொழிந்தவனின் தோள் தட்டிய மகேஷ், “விடுறா விடுறா. நம்ம பாஸ் அண்ணா கடை சம்சா எண்ணையில பொறியுற வாசனை என்னை வா வான்னு கூப்பிடுது. வா ஆளுக்கு ஒன்னு உள்ள தள்ளிட்டு வருவோம்.” என்று நண்பனை கிளப்பிக்கொண்டு சென்றான்.

கடையில் இருக்கும் மற்றொருவரிடம் தகவல் கொடுத்துவிட்டு அந்த பத்து நிமிட இடைவெளியை மிச்சமுள்ள வேலை நேரத்தை கடத்த உதவும் விதமாய் உற்சாகப்படுத்திக்கொண்டு கிளம்பினார்கள்.

மறுநாள் மாத கடைசி. மூன்று மாதங்களுக்கு என வரையறுக்கப்பட்ட விற்பனை இலக்கை நிவர்த்தி செய்தால் குறிப்பிட்ட தொகை ஊக்கமாக அளிக்கப்படும். அந்த இலக்கை அடைந்துவிட்டோமா என்று அவன் கணக்கு பார்த்துக்கொண்டிருக்க,

“எத்தனை தடவை பார்த்தாலும் அதேதாண்டா. இப்படி ராக்காவலுக்கு உக்காந்திருந்தா எல்லாம் எக்ஸ்டரா பேட்டா கொடுக்கமாட்டாங்க.” தன்னுடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிய மகேஷ் நண்பன் தோள் தட்ட, கணினியிலிருந்து நிமிர்ந்தவன் சுற்றிப் பார்த்தான். பெரிய விளக்குகள் அணைக்கப்பட்டு சிறிய விளக்குகள் மட்டும் ஒளிர்ந்துகொண்டிருந்தன. கடையின் முக்கிய கதவு பாதி இறக்கப்பட்டு இவர்கள் வெளியேற காத்திருந்தது. நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டவன் பெருமூச்சுடன் கணினியை அணைத்துவிட்டு எழுந்தான். 

“சிட்டிக்கு கொடுக்குற டார்கெட்டையே இதுமாதிரி சின்ன ஊருக்கும் கொடுத்தா எப்படி அதை அச்சீவ் பண்ண முடியும்? சோனல் மீட்டிங்ல இதை பத்தி பேச சொல்லலாம் நீ இதையே நினைச்சி கவலைப்படாத.” என்ற மகேஷுக்கு சிறு புன்னகை சிந்தியவன், “எனக்கு மட்டுமா கவலை? உனக்கு இல்லையா? இந்த இன்சென்டிவ் வந்தா தங்கச்சி பொண்ணுக்கு நகை வாங்கலாம்னு இருந்தீல்ல நீ?”

“நினைச்சிட்டு இருந்தேந்தான். ஆனா அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேணுமே. தங்க விலையை பாத்து இப்போவே காது குத்துக்கு தோடு வாங்கிடலாம்னு இருந்தேன். ம்கூம் எங்க…” என்று உதட்டை பிதுக்கிய மகேஷின் தங்கைக்கு பெண் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஒரு வயதில் நடக்கப்போகும் காதுகுத்து வைபவத்திற்கு இப்போதே பொன் சேர்த்துவிடலாம் என்ற நினைப்பில் அவனது விற்பனை மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது. வருத்தம் இருந்தாலும் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று ஏற்றுக்கொண்டு விட்டதால் பெரிதாக எதையும் தலையில் ஏற்றிக்கொள்வது இல்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வர அவன் தாய் மற்றும் மனைவியின் சேமிப்பும் ஒரு காரணம். 

“சரிடா நாளைக்கு பாக்கலாம்.” மகேஷ் விடைபெற்று கிளம்பிவிட, ஊரடங்கிவிட்டதை கவனித்துக்கொண்டே இவனும் தன் வீடு நோக்கி வண்டியை விரட்டினான். வண்டியின் வேகத்திற்கு ஏற்ப இரவின் குளுமை கூட, அதனை இரசித்தபடி மற்றைய எண்ணங்களுக்கு விடை கொடுத்தான்.

ஆள் அரவமில்லை என்று சொல்லத் தடையாய் இவனுடன் சேர்ந்து ஒருசில வாகனங்கள் சாலையில் பறக்க, ஊரை விட்டு சற்று தள்ளி கிராமப்புற சாலைக்குள் வண்டி நுழையவும் வாகனங்கள் குறைந்து பூச்சுக்களின் ரீங்காரம் அவ்விரவுக்கு இன்னிசை கோர்ப்பதாய். ஆங்காங்கு தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு சாலை வெளிச்சமாய் இருக்கவும் வண்டியின் வேகத்தை இன்னுமாய் கூட்டியவன் சிறிது நேரத்தில் வீட்டை அடைந்துவிட்டான். இரவு நேரமென்பதால் வீடுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இவன் வீட்டில் மட்டும் விளக்கு எரிய, வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்துவிட்டார் மாரியம்மாள்.

“இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வரலாம்ல முகிலு. தினம் இந்த நேரத்துக்கு சாப்பிட்டா உடம்பு என்னாகுறது? இந்த டீவிலலாம் நேரமே ராத்திரி சாப்பாடு சாப்பிட சொல்றாங்களே.” என்று பேசிக்கொண்டே மகனின் கையிலிருந்த உணவுப்பையை வாங்கிக்கொண்டு மகனை பின்தொடர்ந்தார்.

“எடுத்து வைமா வந்துறேன்.” என்றவன் அங்கேயே ஓரமாய் சுவரில் மாட்டியிருந்த ஒரு கைலியை எடுத்து கட்டிக்கொண்டு வந்தமர்ந்தான்.  

மாரியம்மாள் சப்பாத்தியும் குருமாவும் எடுத்துவைக்க, “நீங்க சாப்டாச்சா? அப்பா?”

“அப்பா சாப்பிட்டு தூங்கிட்டாரு. நேரமே வரப்பு வெட்டணுமாம் நாளைக்கு.” 

ம்ம் என்று கேட்டுக்கொண்டவன் விரைந்து உண்டு முடிக்க, மாரி காலிப் பாத்திரங்களை எடுத்துச் சென்று கொல்லைப்புறத்தில் போட்டார்.  பின்னோடே வந்த மகன் அங்கிருந்த சிறிய நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்து மீதமிருந்த பாத்திரங்களை தேய்த்து ஓரமாய் வைக்க, நின்றுகொண்டே மாரி தண்ணீரில் கழுவினார். 

“நான் செய்ய மாட்டேனா? கொஞ்சம் தானே இருக்கு. போய் படுமா” முழங்கையால் மாரியை சற்று தள்ள, 

“இவ்ளோ நேரம் வெளிலையும் வேலை பாத்துட்டு இங்கேயும் இப்படி பாத்திரத்தை எடுத்துட்டு உக்காருறியே. வேண்டாம்னாலும் கேக்க மாட்ட, இதையாச்சும் செய்றேனே.” என்ற மாரி மகனின் மறுப்பை புறந்தள்ளி அவன் தேய்க்க தேய்க்க கழுவி கவிழ்த்து வைத்தார்.

“நீ மட்டும் வேலை பாக்காம காலாட்டிட்டா இருந்திருப்ப. நேரமே ரெண்டு வேலைக்கும் சேத்து சமைச்சு வயலுக்கு எடுத்துட்டு போறது மட்டுமில்லாம எனக்கும் கட்டிக்கொடுக்குற. நேரமிருக்கும் போதெல்லாம் பூ பறிக்க போயிடுவ. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் என்ன?”  

“இதோ இருக்குற வயலுக்கு போறதெல்லாம் ஒரு வேலையா. சும்மா இருக்குறதுக்கு அந்த பூவை பறிச்சி போட்டா ஒரு ஆளு கூலி குறையும்ல.” 

அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் முல்லை, சாமந்தி, சம்பங்கி என்று மாற்றி மாற்றி சுழற்சி முறையில் மலர்கள் சாகுபடி செய்கின்றனர். கணவர் மேற்பார்வை பார்த்தாலும் அதில் இறங்கி வேலை செய்யும் பெண்மணி மாரியம்மாள். 

“ஆளு கூலி எல்லாம் கணக்கு பாக்காம உன் உடம்பை பாருமா. எல்லாத்தையும் இழுத்து போட்டுக்காத.” கேட்கமாட்டார் என்று தெரிந்திருந்தாலும் தினம் பாடும் பாட்டை அவன் நிறுத்தவில்லை. 

“சும்மான்னு இருந்தாதான் எங்கேயாவது நோவும். இப்படி நாலு இடத்துக்கு போறதுனால தான் நல்லா இருக்கேன்.” என்று மாரியும் ஒரு காரணம் சொன்னார்.     

“கேக்க மாட்டியே.” அலுத்துக்கொண்டவன் சரசரவென வேலைகளை முடித்து ஈரக்கையை கைலியில் துடைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

விளக்கை அமர்த்தி கதவடைத்துவிட்டு மாரியம்மாள் உள்ளே வர, கூடத்தில் பாய் விரித்துக்கொண்டிருந்தான்.

“அப்பா கூட உள்ள படுக்கலாம்ல முகிலு. நாளைக்கு நேரமே எழுந்துட்டா இங்க எதையாவது போட்டு உருட்டிக்கிட்டு கிடப்பாரு. உன் தூக்கம் கெட்டுப்போகும்.” எனும் போதே படுத்துவிட்டிருந்தவன், 

“போன் பாத்துட்டு தூங்குவேன் ம்மா. இங்க தான் வசதியா இருக்கும். நீ உள்ள படு.” என்றவனை முடிந்தமட்டும் முறைத்துவிட்டு நகர்ந்தார் மாரியம்மாள்.

சிறிய ஒற்றை படுக்கையறை, கூடம் அதனை ஒரு ஓரத்தில் தடுத்தார் போல் சமையலறை. சிறிய வீடு என்றலில்லாமல் ஓரளவு புழங்க ஏதுவான வீடுதான் என்பார் மாரியம்மாள். மகன் உடன்படமாட்டான். பாத்திரம் தேய்ப்பது, குளிப்பது போன்ற அனைத்தும் கொல்லைப்புறத்தில் இருப்பது இப்போதெல்லாம் அதிருப்தியாய் தெரிகிறது. சீக்கிரம் வசதிகளோடு சொந்தமாய் வீடு கட்டிவிட வேண்டும் என்ற முனைப்பு முகிலிடம்.  

அதே சமயம் மகனை கூடத்தில் விட்டு தாங்கள் அறையில் உறங்குவது மாரியம்மாளுக்கு உவப்பாக இல்லையென்றாலும் நேரமாக உறங்கச் செல்லும் கணவர் இதனையெல்லாம் கணக்கில் கொள்ளமாட்டார். உறக்கம் வரும் நேரம் அறைக்குள் முடங்கிவிடுவார். தாமதமாக வரும் மகன் தொந்தரவு கொடுக்க விரும்பாமல் வெளியே உறங்கிவிடுவான். மனது கேட்காமல் மாரியம்மாள் ஒரு பாய் தலையணை எடுத்துவந்து மகனருகில் போட்டு படுத்தால் வேண்டுமென்றே அலைபேசியில் சத்தமாய் பாட்டு வைப்பது இல்லை ரீல்ஸ் பார்ப்பது என்று தொல்லை கொடுத்து அவரை உள்ளே அனுப்பிவிடுவான். வயல் வரப்பு என்று அலையும் அவருக்கும் இடைஞ்சலற்ற உறக்கம் வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவன். பெற்றவர்கள் போல் அல்லாது அவன் வயதிற்கு எங்கு படுத்தாலும் உறங்கும் வரம் பெற்றிருந்தான். 

நிமிடங்கள் நீள அலைபேசியை பார்த்துக்கொண்டே உறங்கிப் போயிருந்தவன் திடுமென கேட்ட சலசலப்பில் உறக்கம் களைந்தான். கண்ணுக்கு மறைவாய் வைத்திருந்த கையை விலக்கி கண்களை சுருக்கிப் பார்க்க, செவி அடைந்தது பெற்றவர்களின் சண்டை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!