Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் – 2.2

“புள்ளை வருவான்னு தெரியும்ல அப்புறம் என்ன ஆளுக்கு முன்ன போய் அறைக்குள்ள முடங்குறது?” மாரியம்மாள் சத்தம் கூட்ட,

“தூக்கம் வந்தா தூங்காம அவன் வர வரைக்கும் முழிச்சிட்டு இருந்து அவன்கிட்ட பாட்டு வாங்கணுமா நானு?” 

“அவன் திட்டுறான்னு நீங்க பயப்படுறீங்க, இதை நம்பணுமா நானு?”

“என்னமோ நான் சும்மா ஊர் சுத்திட்டு வந்து முடங்குற மாதிரி பேசற. நாள் முழுக்க வயல்ல நின்னுட்டு வந்து அசதில கண்ணசந்தா குறை படிக்க வேண்டியது. அவனே கம்முனு தூங்குறான் நீதான் கத்தி கத்தி எழுப்பி விட்டுட்டு இருக்க.” நானும் உனக்கு சளைத்தவன் இல்லை என்று நின்றார் கந்தசாமி.



Advertisement

“ஓ நான் பேசுறது கூட கத்துற மாதிரி இருக்கா? இருக்கும் இருக்கும். இருந்தது எல்லாத்தையும் வாரி வழங்கிட்டு இப்படி ஒரு வீட்ல கொண்டு வந்து குடித்தனம் வச்சா மூச்சுவிடுறது கூட இடி இடிக்கிற கணக்கா தான் கேக்கும்.”

“என்னாத்த குடுத்துட்டாங்க குடுத்துட்டாங்கனு சும்மா சொல்லிக்காட்டிகிட்டே கிடக்க? என் பாட்டன் சம்பாரிச்சதுல என்கூட பொறந்தவங்களுக்கும் பங்குண்டு. அதை எப்படி இல்லைனு சொல்லி எல்லாத்தையும் நாமளே எடுத்துக்க முடியும். மனசாட்சியோட பேசு.” பழைய கதை புதிதாக உருவம் பெற, சிலிர்த்துக்கொண்டு வந்தார் கந்தசாமி.

“அப்போ அவங்களை வளத்துவிட்டு கரையேத்தி நல்லது கெட்டது பாத்ததையெல்லாம் எந்த கணக்குல சேக்குறது?” அவிழ்ந்த முடியை கொண்டையிட்டபடி முன்னே வந்தார் மாரி. 

Advertisement

“மூத்த புள்ளையா எல்லாத்தையும் பாக்க வேண்டியது நம்ம கடமை.”

Advertisement

“நல்லாயிருக்கே நீங்க சொல்றது… ரெண்டு தங்கச்சியை கட்டிக்கொடுத்து ரெண்டு தம்பிகளுக்கு பொழப்பு பாத்து கொடுத்து குடும்பமா உக்கார வச்சதுக்குதான் சொத்து வேணும்னு ஆளாளுக்கு பிச்சிக்கிட்டு போயிட்டாங்க. இவங்களுக்கு ஆக்கி போட்டதுக்கு பலனா இந்தா இந்த நக்கினியோண்டு அடுப்பங்கரை ஆவில வெந்து வதங்குறேன். என் புள்ளை நிம்மதியா தூங்க ஒரு ரூமு கூட இல்லை இந்த வீட்டுல. ஆனா நீங்க வளர்த்து விட்டவங்க எல்லாம் மாடி வீடு கட்டி வசதியாதான் இருக்காங்க.” மாரியின் பேச்சுக்கள் வேறு மாறி மாற, பல்லைக்கடித்தார் கந்தசாமி.

“வளர்த்த நாமளே அவங்களை பார்த்து பொறாமைபட்டா நம்ம குடும்பம் விளங்குமா?”

“ஏதே பொறாமையா? இத்தனை வருஷம் எல்லாத்தையும் சின்ன சுணக்கம் கூட இல்லாம பாத்ததுக்கு இதுதான் நீங்க கொடுக்குற பேரா. முகிலுக்கு ஒரு ரூமு கூட இல்லை அதை என்னனு பாக்க முடியலை எனக்கு பேர் வைக்கிறீங்க இப்போதான்.”

Advertisement

“என்ன பாக்கல நானு? ஹான்? சொல்லு? நிலம் பிரிச்சது போக வீட்டை  வித்து பங்கு பிரிச்சதுல நமக்கு வந்த காசை அப்படியே தூக்கி கொண்டு போய் இவன் படிக்க காலேஜுல கட்டுனேன். நாலு வருஷம் எஞ்சினீரிங் முடிச்சி வேலையோட வருவான்னு பாத்தா எதுவும் கிடைக்கலைனு மெட்ராசை சுத்திப்புட்டு இங்கேயே வந்து இருந்துட்டான். மிச்ச இருக்குற கொஞ்சூண்டு பணத்தை வச்சி எங்கிருந்து இடம் வாங்கி வீடு கட்டுறது? விலைவாசி எப்படி ஏறி இருக்குனு ஏதாச்சு தெரியுமா உனக்கு?” கந்தசாமி எகிற, தன் பெயர் அடிபடவும் இதற்கு மேல் தாங்காதுடா என்று எழுந்துவிட்டான் முகில்.

“காலையிலேயே தூங்க விடாம என்ன சண்டை? கம்முனு இருக்க மாட்டிங்களா?” கலைந்த சிகையும் உப்பிய கன்னமுமாய் உறக்கத்திற்கு கெஞ்சும் விழிகளுடன் எழுந்த மகனைக் கண்டதும் பெற்றவர்களின் வாய் பசை போட்டது போல் ஒட்டிக்கொண்டது. ஆனால் விழிகளோ உன்னால்தான் மகன் உறக்கம் கெட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டோடு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.

“ம்மா…”

“நேத்திக்கே சொன்னேன்ல இந்த மனுஷன் எழுந்தா உன்னை தூங்க விடமாட்டாருனு. போய் ரூமுல தூங்கு.” அத்தனை நேரம் கணவரிடம் வாதிட்ட குரல் மகன் என்றதும் எதிர்பதத்தை தத்துத்தெடுத்து வந்தது. 

“நான் அங்க தூங்குனா என்னடா? நீயும் வந்து அங்க தூங்க வேண்டியதுதான? நான் என்னமோ வேணும்னு உன்னை ரூம்ல படுக்க விடாத மாதிரி ஏந்துகிட்டு வரா உன் அம்மா.” கந்தசாமியும் மகனிடம் புகார் படித்தார்.

“விடுப்பா. வரப்பு வெட்டனும்ல கிளம்பு நீ.” அவரை அப்புறப்படுத்த பார்த்தான் மகன்.

“அதான அவளை ஒன்னும் கேட்டுடாத. என்னை மட்டும் சமாதானப்படுத்து.” என்று முனகிக்கொண்டே கிளம்பிவிட்டார் மனிதர்.

“நம்ம வீடுதான ம்மா. நான் எங்க தூங்குனா என்ன இப்போ? இதுக்கெல்லாமா சண்டை பிடிப்ப?” மாரியம்மாள் புறம் திருப்பினான் இப்போது. 

“நல்லா இருக்கே நீ சொல்றது. இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கிறதாம்? உனக்கு கல்யாணமானா ரூம்ல இருக்குற எங்க பொட்டி படுக்கையை கட்டி இங்க ஓரமா வைக்க வேண்டியதுதான். அது புரியாம மனுஷன் இன்னமும் ஆடிட்டு இருக்காரு.” 

“அது நடக்கும் போது பாத்துக்கலாம் ம்மா. இப்போவே எதுக்கு மல்லுக்கு நிக்குற. நிம்மதியா தூங்கிட்டு போகட்டுமே.” என்றவனை என்ன செய்தால் தகும் என்ற ரீதியில் பார்த்தவர்,

“உன் செட்டு பசங்களுக்கே பசங்க இருக்காங்க. நீ இப்படியே பேசிட்டு இரு.”

“என்ன பண்ணனும் இப்போ? இங்க வசதிப்படாது இடம் வாங்கி வீடு கட்டுன அப்புறம் பொண்ணு பாக்கலாம்னு சொன்னேன். கேக்காம நீங்களே பாக்க ஆரம்பிச்சிட்டு இப்போ இப்படி பேசுனா.” அதற்கு மேல் பேச விருப்பமின்றி அறைக்குச் சென்று, விட்ட உறக்கத்தை தொடர,

“வயசு குறைஞ்சிட்டே போறதா நினைப்பு அப்பாவுக்கும் புள்ளைக்கும். முப்பது முடிஞ்சுது இன்னும் பொறுமையா பாக்கணுமாம். எனக்குன்னு வாச்சிருக்காங்க.” என்ற மாரியம்மாவின் குரல் தேய்ந்து ஒலித்தது.

புரண்டு படுத்தவன் ஒரு கையை தலையணையாக்கி மற்றொன்றை காதுக்கு மறைப்பாக்கி இரண்டொரு நொடிகளில் உறங்கிவிட்டான். இடையில் மகனை வந்து பார்த்துச்சென்ற மாரியம்மாள் அவனுக்கு வேண்டியதை எடுத்து வைத்துவிட்டு வயலுக்கு கிளம்பிவிட்டார். ஒன்பது மணி போல எழுந்த முகிலன் காலை வேலைகளை முடித்து கடைக்கு செல்ல ஏதுவாக இஸ்திரி செய்த சட்டையை பேண்டினுள் இன் செய்தபடி கிளம்பி வந்தவன் தயாராய் இருந்த காலை உணவை முடித்துக்கொண்டு மதியத்திற்கு கட்டிவைத்திருந்ததை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

காலை சூரியன் பளிச்சென்று முகத்தை உரச, கண்களை லேசாக சுருக்கியபடி சாலையின் ஓரமாய் வண்டியை நிறுத்தியவன் அங்கிருந்தபடியே தந்தையை அழைக்க, வேகமாக வரப்பிலிருந்து சாலைக்கு வந்தார் கந்தசாமி. 

“சாப்பிட்டியா முகிலு?” 

“ம்ம் ஆச்சு. கிளம்பிட்டேனு அம்மாகிட்ட சொல்லிடு. நைட் ரொம்ப நேரம் முழிச்சிருக்க வேண்டாம்.”

“அதெல்லாம் தூக்கம் வந்தா தூங்கிடுவேன். உன் அம்மா தான் கொட்டாவி விட்டுட்டு கொட்ட கொட்ட உக்காந்திருப்பா.”

“ரெண்டு பேரையும்தான் சொல்றேன். நான் சொன்னா அம்மா கேக்காது. நீயே அதட்டி தூங்க சொல்லிடு. தினம் இப்படியே உக்காந்திருக்கு.”

“ராத்திரி தாமதமா வர நீயி. சீக்கிரம் உறங்கிட்டா உன்னை பாக்க முடியாதேன்னு தான் முழிச்சி கிடக்குகிறா. காலைலையும் நேரமே வயலுக்கு வந்துடுறோம். உன் முகம் பாத்து ரெண்டு வார்த்தை பேசவே நேரமில்லாம போயிடுமேனு அவளுக்கு பயம். அதெல்லாம் அதட்டி மாத்த முடியாது. நீ நேரமே வீட்டுக்கு வரமுடியுமானு பாரு.” என்றவர் மகன் நீட்டிய வீட்டு சாவியை பையில் பத்திரப்படுத்தியபடியே,

“சின்ன பாப்பா உன்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொல்லுச்சு. என்னனு பேசிடு முகிலு.”

“என்னவாம்?” என்று கேட்டவனின் முகத்தில் யோசனை.

“ஏதோ படிப்பு பத்தி கேக்கணுமாம். பேசிக்கோ. இப்போ மெல்ல போ. வேகமா பறக்காத. மதியம் நல்லா சாப்பிடு.” என்று வழமையை அள்ளித்தெளித்துவிட்டு வயலில் இறங்கினார் கந்தசாமி.

குழப்பத்தோடு வண்டியை கிளப்பியவன் மிதமான வேகத்தில் செல்ல, கிராம எல்லை முடிந்து நகரத்திற்கு செல்லும் சாலையில் வளைக்கரம் ஒன்று அவன் வண்டியை மறித்தது. எலுமிச்சை வர்ண சுடிதாரில் தளர்ந்து பின்னப்பட்ட கூந்தலுடன் நின்றவள் கருத்தில் பதிய, தன்னால் வண்டியின் வேகம் குறைய சிந்தை நிறைந்தது கேள்விகள்.

“என்ன இந்த நேரம் இங்க நிக்குற?” என்ற கேள்வியோடு வண்டியை நிறுத்தியவனை ஆசை பொங்க பார்த்தவள் ஒரு பென்ட்ரைவை நீட்டினாள்.

முகிலன் புருவம் சுருக்கிப் பார்க்க, “இதுல இருக்கறதை பிரிண்ட் எடுத்து ஸ்பைரல் போட்டுத்தா அத்தான். நாளைக்கு காலேஜ்ல சப்மிட் பண்ணனும்.” என்றவளுக்கு மறுப்பாக தலையசைத்தவன், 

“நாளைக்கு சப்மிட் பண்ணனும்னா இன்னைக்குத்தான் கொடுப்பியா. எனக்கு வேலை இருக்கு என்னால முடியாது.” என்று மறுக்க, பெண்ணின் முகம் சுருங்கிவிட்டது.

“ம்ச் வள்ளி…” அவள் சுணக்கம் அவனை ஏதோ செய்ய, அவனது மாற்றத்தை கண்டுகொண்டவள், “இதை வச்சுதான் இன்டெர்னல் மார்க்ஸ் போடுவாங்க. இந்த ஒருதடவை மட்டும்…” என்று கண்களை சுருக்கி பாவமாக பார்க்க, வெடுக்கென்று அவள் கையில் இருந்ததை பிடுங்கினான்.

“பாத்து அத்தான். என் எதிர்காலமே இதுல தான் இருக்கு.” என்றவளை முறைத்தவன்,

“மிஞ்சிப்போனா இது ஏதாவது மினி ப்ராஜெக்ட்டா இருக்கும். கடையில வாங்கிருப்பீங்க. அவனே எல்லாம் டைப் அடிச்சி கொடுத்திருப்பான் அதுக்கு இவ்ளோ சீன் எல்லாம் ஆகாது. இதுக்கு ஒரு சிபாரிசு வேற.”

“ஆமா இல்லைனா என் அப்பாகிட்ட கொடுத்தா அவர் போட்டுட்டு வரப்போறாருனு காரணம் சொல்லுவ.” என்று வள்ளியானவள் நொடிக்க, 

“இப்போவும் சொல்லுவேன் உன் அப்பாகிட்ட கொடுத்தா உடனே போய் போட்டுட்டு வந்திருவாரு. அதைவிட்டு என்கிட்ட எடுத்துட்டு வந்து நீட்டுற.” என்றவன் முறைக்க முயன்றான்… ஆம் முயன்றான். முடியவில்லை. 

“நீன்னா புரட்டி பார்த்து எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணி வாங்கிட்டு வருவ. அப்பாக்கு அதெல்லாம் தெரியாது. போன தடவை அப்பா போட்டுட்டு வந்ததுல கடைசி அஞ்சு பக்கம் ஒழுங்கா பிரிண்ட் ஆகவே இல்லை.” என்று உதடு பிதுக்கி நயனம் பிடித்தாள் வள்ளி.

“அவ்வளவு அக்கறை இருக்குறவ நீயே போய் போட்டுக்க வேண்டியதுதான? உங்க காலேஜ் பக்கம்தான் கடையெல்லாம் இருக்கே.” விடுவேனா என்று இவனும் மல்லுக்கு நின்றான். 

“இருக்கு தான். ஆனா எப்போவும் கூட்டமாவே இருக்கு. வெயிட் பண்ணி போட்டுட்டு வர்றதுக்குள்ள காலேஜ் பஸ் கிளம்பிடும்.” என்று சளைக்காமல் காரணம் சொன்னாள் வள்ளி.

இதற்கு மேல் என்ன பேசினாலும் அது நீளுமே தவிர குறையப்போவதில்லை என்பதை புரிந்துகொண்டவன், “காலையில அப்பாகிட்ட கொடுத்துவிடுறேன் வாங்கிக்க.” என்று நகரப்பார்க்க, 

“யார் அப்பாகிட்ட? உன் அப்பாவா என் அப்பாவா?”

‘அடியே.’ மனதிற்குள் அலறியவன், “உன் தாய்மாமாகிட்ட போதுமா?” என்றதுடன் விட்டால் போதுமென்று கிளம்பிவிட்டான்.

தப்பித்து செல்லும் அவனையே வாய் கொள்ளா சிரிப்புடன் பார்த்து நின்ற வள்ளியின் முன் அவள் கல்லூரி பேருந்து வந்து நிற்க, அதில் ஏறி எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்தாள்.

“என்ன வள்ளியோட முகமெல்லாம் இன்னைக்கு பல்லா இருக்கு.” என்று குறும்பன் ஒருவன் துவங்க,

“மச்சானை பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ள…” பாடலாய் தொடர்ந்தாள் இன்னொருவள்.

“வாழை தோப்பு இல்லைமா… அது பூந்தோட்டம்ம்…”

“அது பூந்தோட்டம் இல்லை நெல்லு வயலு.” 

“பாத்து பாத்து… எள்ளு வயப் பூக்களையே ஏறெடுத்தும் பாக்கலையேனு ஆகிடப்போகுது.” அத்தனை நேரம் தொடர்ந்த கேலிப்பேச்சுகளை ரசித்தவள் நொடியும் தாமதிக்காது தன் பையை இறுதியாய் பாடியவன் மேல் தூக்கி வீசினாள். 

“ஹே நான் சும்மா கிண்டலுக்கு…” என்று வருத்தம் தெரிவிக்க முயன்றவனை பார்த்தவளின் கண்கள் சிவந்து கலங்கத் தயாராயிருந்தது. நொடியில் பேருந்தின் சூழல் மாறியது.

நண்பர்கள் அவளை சமாதானம் செய்ய முயல, புரிதலுடன் தேறிக்கொண்டவள் தன் அலைபேசியின் அகரவரிசையில் முதலில் இருந்த அவனது பெயரை வருடினாள். 

நெற்கதிர்களுக்கு பெயர் போன மாவட்டத்தை சேர்ந்தவர்களின் நிறம் கொண்டு பிறந்திருந்தவன் குணம் என்னவோ அந்த நிலவின் குளிருக்கு ஒத்ததாய். சில நேரங்கள் அந்த நிலவையே மறைக்கும் முகில்களாய். அவன் அறியாமலேயே அதன் குளுமையை அவள் அகம் பரப்பியவனாய். 

அவன் முகிலன். அகமுகிலன்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!