Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-8

அத்தியாயம் – 8

“பறக்கத் தான் வானம்…அடைய எப்போதும் கூடு… எனில் மனம் அடையும் வீடென அமையும் காதல்”

அந்த கடற்கரையோரக் கிராமம், நள்ளிரவின் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதிரைக்கும் கண்மணிக்கும் அது வழக்கமான இரவாகத் தொடங்கவில்லை. “அம்மா… இன்னும் என்னம்மா லேப்-ஒர்க் (Lap-work) தீரலையா?”



Advertisement

“இல்ல செல்லம்… இதோ முடிச்சிட்டேன்,”

“ரொம்ப நேரம் பார்க்காதம்மா… அப்புறம் கம்ப்யூட்டருக்கு காய்ச்சல் வந்துரும் தெரியுமா?”

ஆதிரை ஒன்றும் புரியாமல் பின் அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு, “ஏய்… இது போங்காட்டம்… அப்பாவோட ஜோக் தானே?”, கண்மணி சட்டென்று கலகலவெனச் சிரித்தாள். “ஆமாம்மா… அப்பா ஜோக் தான்! அப்பா சொல்லுவாரே… ‘ஏன் கம்ப்யூட்டருக்கு காய்ச்சல் வருது தெரியுமா? ஏன்னா அதுல நிறைய விண்டோஸ் (Windows) திறந்து வச்சிருக்காங்களாம், அதான் காத்து அடிச்சு ஜலதோஷம் பிடிச்சிருச்சு!’ ஹா ஹா!” அந்த ‘மொக்கை ஜோக்கை’ சொல்லிவிட்டு, தன் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். கண்மணி சிரித்த விதம் அப்படியே மித்ரனை உரித்து வைத்திருந்தது.அந்த மழலைச் சிரிப்பில் மித்ரனின் குரல் எதிரொலித்தது. மித்ரனின் மொக்கை ஜோக்குகள் …எவ்வளவு எரிச்சலாக இருந்தாலும், அந்தச் சிரிப்புதான் அவளது உலகமாக ஒரு காலத்தில் இருந்தது. அந்தச் சின்னஞ்சிறு ஜோக்குகளின் பின்னால் இருந்த அவனது குறும்புத்தனமான முகமும், அன்பும் ஆதிரையின் நினைவலைகளில் மோதின.

Advertisement

ஆதிரை மின்விளக்கை அணைத்தாள். இப்போது அறையில் ஜன்னல் வழியாக வந்த நிலவொளியும், மேஜை மீது இருந்த மடிக்கணினியின் மெல்லிய நீல நிற ஒளியும் மட்டுமே எஞ்சியிருந்தன. அந்தச் சின்னஞ்சிறு ஒளியில், சுவரில் ஆதிரையின் நிழல் ஒரு உருவமாக விழுந்தது.

Advertisement

“அம்மா… நம்ம விளையாடுவோமே அந்த நிழல் விளையாட்டு… அதை விளையாட இப்போ அப்பா வேணும்மா.”

அந்த ஐந்து வயதில் கண்மணியும் மித்ரனும் மட்டுமே விளையாடும் அந்த ஒரு விசித்திரமான விளையாட்டு ஆதிரையின் நினைவுக்கு வந்தது

இரவு நேரங்களில், மித்ரன் தன் அலைபேசியின் டார்ச் வெளிச்சத்தை அடித்து, சுவரில் தன் கைகளால் விதவிதமான உருவங்களைச் செய்வான். ஒரு முயல் துள்ளுவது போல, ஒரு பறவை சிறகடிப்பது போல அவன் காட்ட, கண்மணி அந்த நிழலைப் பிடிக்க ஓடுவாள். “அப்பா… இதோ பிடிச்சிட்டேன்!” என்று அவள் குதிக்க, மித்ரன் “இல்லை பாப்பா… இதோ இங்க பாரு” என்று நிழலை வேறொரு இடத்திற்கு மாற்றுவான். அந்தச் சின்னஞ்சிறு அறையே அவர்களின் சிரிப்பொலியால் நிறைந்து வழியும். கடைசியில் களைத்துப் போய் மித்ரனின் நெஞ்சிலேயே கண்மணி உறங்கிப் போவாள்.

Advertisement

அந்த விளையாட்டில் மித்ரன் வெறும் அப்பா மட்டுமல்ல, அவளது கற்பனை உலகத்தின் மந்திரவாதி.

“அப்பா கூட அந்த முயல் குட்டி விளையாட்டு விளையாடனும்மா… கூட்டிட்டுப் போறியா?” என்று கண்மணி மீண்டும் கேட்க, ஆதிரைக்குத் தொண்டை அடைத்தது.

“அம்மா… அப்பா எப்போம்மா வருவாரு? எவ்ளோ நாளாச்சு அவரைப் பார்த்து… முன்னாடி எல்லாம் ஜெர்மனியில இருக்கும்போது தினமும் வீடியோ கால்ல பேசுவோம்ல? இப்போ அதுகூட இல்லையேம்மா… அப்பா அத்தனை பெரிய சீக்ரெட் ப்ராஜெக்ட்லயா (Secret Project) இருக்காரு?”

கண்மணியின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஆதிரையின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தன. “ப்ராஜெக்ட்” என்று அவள் சொல்லி வைத்த பொய், அந்தக் குழந்தையின் இதயத்தை எவ்வளவு காயப்படுத்துகிறது என்பது அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.

ஆதிரையின் நெஞ்சு விம்மியது. ஒரு பக்கம் தன் குழந்தையின் தார்மீகக் கேள்வி, மறுபக்கம் தீராத சந்தேகம் என அவள் ஊசலாடினாள் “அந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும், அப்பா உனக்காக வருவாரு.” “நிஜமாவாமா?” என்று கண்மணி ஏக்கத்துடன் கேட்க, “நிஜமாத்தான்… இப்போ சமத்தா தூங்கு. அப்பா கனவுல வந்து உனக்கு அந்த முயல் குட்டி நிழலைக் காட்டுவாரே!” என்று அவளைத் தேற்றினாள். ஆதிரையின் மென்மையான வருடல் அந்த மழலையை மெல்ல அமைதிப்படுத்தியது. சிறிது நேரத்திலேயே கண்மணி ஆதிரையின் சேலைத் தலைப்பைப் பற்றிக்கொண்டே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். ஆதிரை கண்மணியைத் தேற்றி உறங்க வைத்த பிறகு, களைப்பில் அவளையும் அறியாமல் ஒரு கணநேர உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

அது ஒரு அடர்ந்த, பசுமையான பெருங்காடு. எங்கு பார்த்தாலும் நிழல் தரும் மரங்களும், சலசலக்கும் ஓடைகளும் நிறைந்த ஓர் அமைதியான பூமி. சூரியக் கதிர்கள் கூட நிலத்தைத் தொட அஞ்சி, மரங்களின் இலைகளுக்கிடையே ஒளிந்து விளையாடும் ஒரு பச்சை உலகம் அது.

அந்தக் காட்டின் ஒரு மூலையில், கிளைகள் தாழ்ந்து பழுத்த பழங்களுடன் ஒரு சீத்தா மரம் நின்றிருந்தது. அதன் இலைகளின் இடுக்கில் காய்ந்த புற்களாலும் மென்மையான இறக்கைகளாலும் இழைக்கப்பட்ட ஒரு அழகான நேர்த்தியான கூடு இருந்தது. அதில் ஒரு தந்தை பறவை, தாய் பறவை மற்றும் அவற்றின் செல்லக் குஞ்சு பறவை என ஒரு அழகான உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. குளிர்காலம் தொடங்கும் முன், தன் குடும்பத்திற்குத் தேவையான சிறந்த உணவைத் தேடி தந்தை பறவை பல நூறு மைல்கள் கடந்து, கடல் தாண்டிப் பறந்து சென்றது. பல மாத உழைப்பிற்குப் பின், தன் குஞ்சுக்காக அது ஒரு அபூர்வமான, நிலவொளியில் ஜொலிக்கும் ஒரு ‘நீல நிற மணியை’ தன் அலகில் கவ்விக்கொண்டு திரும்பியது.

தந்தை பறவை வரும் வழியெங்கும் அந்த மணியைப் பார்த்துப் பார்த்துப் பூரித்தது. “இதைக் கண்டால் என் குஞ்சு எவ்வளவு சந்தோஷப்படும்! என் துணைவி எவ்வளவு பெருமைப்படுவாள்!” என்று நினைத்தபடி, இறக்கைகள் வலிக்க வலிக்கப் பறந்து தன் கூட்டை நெருங்கியது.

தந்தை பறவையின் அலகில் இருந்த அந்த நீல நிற மணி, அந்த அந்திப் பொழுது வெளிச்சத்தில் ஒரு மாய ஒளியைச் சிதறியது. அந்த ஒளியின் பிரதிபலிப்பில், தந்தை பறவையின் முகம் சிதைந்து வேறொரு பறவையைப் போலத் தெரிந்தது.

அந்த மாய ஒளியின் நிழலில் தந்தை பறவையை காணத் தவறிய தாய் பறவை, கடும் பதற்றத்தில் பயந்து தன் குஞ்சைத் தூக்கிக்கொண்டு அந்தக் கூட்டை விட்டு, அந்தச் சீத்தா மரத்தை விட்டு வெகுதூரம் ஓடிப் போனது.

தந்தை பறவை வந்தது, திகைத்து நின்றது. அந்தச் சீத்தா மரத்தின் கிளைகளில் கூடு மட்டும் இருக்க, அதன் ஜீவனான குஞ்சும் தாயும் அங்கே இல்லை.

தந்தை பறவை அங்கும் இங்கும் கிளைகளுக்கு இடையே தாவித் தாவித் தேடியது. அந்தக் காடு இப்போது அதற்கு ஒரு அந்நிய தேசமாகத் தெரிந்தது.

கடைசியில், கூட்டின் ஓரத்தில் குஞ்சுப் பறவை உதிர்த்துச் சென்ற ஒரு சிறிய, மென்மையான சிறகு மட்டும் கிடந்தது. தந்தை பறவை அந்தச் சிறகைத் தன் அலகால் வருடியது. அந்தச் சிறகின் வாசம் அதன் நெஞ்சை அடைத்தது.

வெளியே மழை பெய்யத் தொடங்கியது. மற்ற பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளில் தஞ்சம் புகுந்தன. ஆனால், இந்தத் தந்தை பறவை நனைந்து கொண்டே அந்த வெற்றுக்கூட்டின் விளிம்பில் அமர்ந்திருந்தது. “கீச்… கீச்…” என்று அது ஒரு விசித்திரமான ராகத்தைப் பாடியது..

ஆதிரை மூச்சுத் திணறத் திணற விழித்துக் கொண்டாள். அவளது சுவாசத்தில் ஒரு நடுக்கம் இருந்தது. அவள்  கண்டது கனவு.

அவளது ஆழ்மனம் ஒரு உருவகக் காவியத்தையே அவளுக்குக் காட்டி இருந்தது.

பக்கத்தில் கண்மணி உறக்கத்தில் தன் சின்னஞ்சிறு விரல்களை மடித்து, யாருடைய கையையோ தேடுவது போலத் துழாவினாள். “அப்பா… அப்பா…” என்ற அந்த முணுமுணுத்தாள்.  அந்தச் சத்தம் ஆதிரையின் ஆத்மாவை உலுக்கியது. கண்மணியைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

ஏதோ ஒரு நீல நிற மணியைப் போல, நமக்காக கனவுகளை சுமந்து வந்தவனை, ஒரு வெற்றுக்கூட்டிற்கு முன்னால் நிறுத்திவிட்டேன் என நினைத்தபோது அவளது நெஞ்சு வெடித்தது.

எல்லாவற்றையும் விட… ஒரு தந்தையை அவன் குழந்தையிடமிருந்து பிரிக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது? – ஆதிரை இருட்டில் அமர்ந்து தேம்பினாள். ஆனால், அந்த உணர்வு  நீடித்த  அடுத்த கணமே, அந்தச் சந்தியாவின் முகம் ஒரு மின்னலைப் போல வந்து போனது. ஆதிரையின் இதயத்தைச் சுற்றிக் கசப்பான வேலிகள் மீண்டும் தலைதூக்கியது. அவளது மனம் மீண்டும் கல்லைப் போல இறுகியது. தன் அருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கண்மணியை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவள் ஒரு தாயாகத் தோற்றுவிடக் கூடாதென்ற வைராக்கியம், அவளது காதலின் மென்மையை மீண்டும் மறைத்தது.

மெல்லத் தலைநிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு 3:00. இன்னும் இரண்டு மணி நேரம்தான் பாக்கி. விடியல் வருவதற்குள் அவள் கிளம்ப வேண்டும்.

மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்தாள். ஜன்னலுக்கு வெளியே கடல் இன்னும் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருந்தது. அவளது மனதின் ஆர்ப்பரிப்பை விடக் குறைவாகவே இருந்தது.. மேஜை மீது இருந்த மடிக்கணினியை மெல்லத் திறந்தாள்.

கணினித் திரையை ஆன் செய்துவிட்டு அமர்ந்தாள், அவளது விரல்கள் தட்டச்சு செய்யத் தயங்கின.

நிழல்கள் கலைந்து விடியல் பிறக்கத் தொடங்கியது.

வாசலில் ஒரு வாடகைக் கார் தயார் நிலையில் இருந்தது. டிரைவர் அவசரமாக இறங்கி வந்து பையை வாங்கிக்கொண்டார். ஆதிரை கண்மணியுடன் காரின் பின் இருக்கையில் அமர்ந்தாள். கார் மெல்ல நகரத் தொடங்கியது. கார் வேகமெடுத்தது, அவள் தன் கடந்த காலத்தை, விட்டுவிட்டு வெகுதூரம் வந்து விட்டதாகவே அவள் நினைத்துக் கொண்டாள் ஆனால் விதி அவளைப் பார்த்து ஒரு மென்னகையைப் பூத்தது. கார் சென்ற திசையை விட, விதியின் கயிறு அவளை மீண்டும் அந்தப் பழைய கூட்டிற்கே இழுக்கத் தயாராக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!