Skip to content
Post Views: 2,043
அன்று காலையில் இருந்தே ராமநாதனுக்கு ஏதோ தவறாகவே பட்டுக் கொண்டிருந்தது.
இரண்டு நாட்கள் முன்பு தான் அவர் மனைவி பார்வதி,
“நீங்க ரேஷ்மாவைப் பொண்ணு கேக்கலன்னா நான் தற்கொலை பண்ணிட்டு செத்துடுவேன்!” என்று அவரை மிரட்டி இருந்தார்.
“பண்றதா இருந்தா பண்ணிக்கோ. அதுக்காக நான் அந்த பிள்ளைங்களுக்கு அந்த பாவத்தை மட்டும் செய்யவே மாட்டேன்!
Advertisement
நானே அவ்வளவு தூரம் காப்பாத்திக் கொண்டு வந்துட்டு, இப்போ நானே கிளியை வளர்த்து பூனை கையில கொடுக்கிற தப்ப ஒரு நாளும் பண்ணவே மாட்டேன்!” என்றார் அவரும் விடாப்பிடியாக.
“அப்படி என்னங்க.. நம்ம பிள்ளையை விட அதுங்க ஒசத்தி உங்களுக்கு!
சரி எப்படியோ போங்க. ஆனா ஜெயந்துக்கு என்ன குறைச்சல்! அவனுக்கு ரேஷ்மாவை கட்டினா தான் என்ன?”
Advertisement
“என்ன குறைச்சலா? யோக்கியாம்சம்! அது தான் குறைச்சல்! எந்த பொண்ணையாவது அவன் தப்பா பார்க்காம இருந்திருக்கானா?
Advertisement
குறைஞ்ச பட்சம் பார்வையில் கூட கண்ணியம் இல்லாத ஒருத்தனுக்கு நான் எப்படி ரேஷ்மாவைக் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?” என்று அவரும் பதிலுக்கு கத்த,
“அம்மா விடுங்கம்மா.. ரேஷ்மாவை எப்படி இந்த வீட்டுக்கு மருமகளாக்கணும்னு எனக்கு தெரியும்.
நீங்க சும்மா உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க!” என்றான் ஜெயந்த் குறுக்கிட்டு!
Advertisement
“நீ என்னடா பண்ண முடியும் ? அது தான் அந்த குட்டி யாரோ ஒருத்தன் கூட ஜோடி போட்டுக்கிட்டு சிங்கப்பூர்ல சுத்திட்டு இருக்கா, பிசினெஸ் ட்ரிப்ன்ற பேர்ல!
நீ தானே காட்டினே உன் போன்ல, அவளோட இன்ஸ்டா பேஜில் இருக்கும் அவங்க ரெண்டு பேரோட போட்டோகளையும்!” கோபமாக கத்தினார் பார்வதி!
“ஏய்.. தப்பா பேசாதே! அந்த பையன் அவளோட பிசினெஸ் கன்சல்டன்ட்!
அவங்க ரெண்டு பேரும் பிசினெஸ் விஷயமாக தான் போய் இருக்காங்க. ரேவந்த் தான் அனுப்பி வச்சுருக்கான் அவனை!” ராமநாதன் பதிலுக்கு கத்த,
“ஆமா பெரிய பிசினெஸ் ட்ரிப்! யோவ் அப்பா.. நல்லா கண்ணாடிய போட்டுக்கிட்டு பாருய்யா அவளை!
அவ்வளவு காதல் சொட்ட பார்த்துகிட்டு இருக்கா அவ அவனை!” உள்ளுக்குள் திட்டிக் கொண்டிருந்தான் ஜெயந்த்!
இந்த ரேவந்த் ஏதோ திட்டம் போட்டு தான் அவங்களை சேர்த்து அனுப்பி வச்சுருக்கான்!
நாம ஏதாச்சும் பண்ணி, ரேஷ்மாவை இங்க கொண்டு வரணும்! என்ற நினைப்போடு பார்வதியை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
அதன் பின், இந்த இரண்டு நாட்களாகவே அதற்கு மேல் கல்யாணம் பற்றி எதுவுமே பேச வில்லை இருவரும்!
அவர்களின் அமைதி ராமநாதனுக்கு ஏதோ எச்சரிக்கை செய்தது!
கொஞ்சம் யோசனையாக தான் நடமாடிக்கொண்டு இருந்தார்.
அன்று மதிய உணவுக்கு பின், கொஞ்ச நாட்களாக பழக்கமாகி விட்ட மதிய தூக்கத்திற்கு பிறகு, எழுந்த அவருக்கு அன்று மாலை தான் ரேஷ்மா ஊர் திரும்புவது பற்றி நினைவு வந்தது!
அய்யோ.. இதுங்க ரெண்டும் இப்படி திடீர்ன்னு சைலண்டா இருக்கிறது நல்லதுக்கு இல்ல!
நாம ரேஷமாவையோ அல்லது ரேவந்த்தையோ கூப்பிட்டு அலர்ட் பண்ணி வைக்கணும்!
என்று நினைத்து தலையணை அடியில் வைத்திருந்த அவரின் போனை எடுக்க முயன்றார்.
அது அங்கு இல்லை!
“ஏய்.. எங்கடி என்னோட போன்?” என்று பார்வதியைக் கேட்க,
“ஏன்.. என்கிட்ட தான் இருக்கு! எங்கயும் போய்டல!”
“முதல்ல கொடு அத!”
“முடியாது! தர மாட்டேன்!”
“ம்ம்.. தராட்டி நீயே வச்சுக்கோ!” என்று சொல்லி விட்டு கார் சாவியை தேடினார்.
அதுவும் இல்லை!
“ஏய்.. கார் கீயை தாடி.. “
“முடியாது!”
“நீங்க எங்கயும் போகக் கூடாது! யார் கிட்டயும் பேசவும் கூடாது!
ரேஷ்மாவை பொண்ணு தானே கேக்க கூடாதுன்னு சொன்னீங்க! இதுக்கு எல்லாம் சொல்லல இல்ல!
நான் தர மாட்டேன்!”
“ஏய்.. என்ன இது சின்ன பிள்ளையாட்டம்! சீப்பை ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நின்னு போய்டுமா?
அது மாதிரி தான் இருக்கு! நீ பண்ணிக்கிட்டு இருக்கிறது எல்லாம்!
அறிவு கெட்டத் தனமா எதாச்சும் பண்ணிட்டு இருக்காதே! என்னை போக விடு! எனக்கு வேலை இருக்கு!”
“வேலை.. வேலை.. உங்க குடும்பத்தை விட உங்களுக்கு வேலை தான் முக்கியம் இல்ல! நான் எதையும் தர மாட்டேன்!” என்றார் பார்வதி!
ஆரம்பத்தில் இதை சின்ன விசயமாக கருதிய ராமநாதன், பார்வதியின் உறுதியில் கொஞ்சம் உஷார் ஆனார்!
ஏதோ பண்ணப் போறாங்க! என்று அவர் உள் மனம் சொல்ல, என்ன பண்ணுவது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கையில் தான் அவரின் ஆடிட்டிங் ஆபிஸ் டிரைவர் வேலு வந்தான்!
அவன் மதுராவின் சிபாரிசில் அவரிடம் வேலைக்கு சேர்ந்தவன்!
அவன் வந்து வேலை தொடர்பான சில ஃபைல்களில் அவர் கையெழுத்துகள் வாங்கினான்.
பார்வதி உள்ளே சென்று இருந்த நேரம், அவனிடம் அவன் போனை கேட்டார் ராமநாதன்!
“உன் போனை கொஞ்சம் கொடுப்பா, ஒரு போன் பண்ணிட்டு தர்றேன்” என்று கேட்க, சார் எதுக்கு நம் போனை கேட்கிறார் என்ற அதிர்ச்சியில் இருந்தவனைக் கண்டு கொள்ளாது,
போனை அவனிடமிருந்து கிட்ட தட்ட பறித்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றவர், அங்கிருந்து கொண்டு ரேவந்த்தையோ ரேஷ்மாவையோ தொடர்பு கொள்ள நினைத்து,
அவர்களின் நம்பர்களை நினைவுக்கு கொண்டு வர பார்த்தார்!
நினைவுக்கு வர வில்லை!
அந்த போனின் காண்டாக்ட் லிஸ்டில் நல்ல வேளையாக மதுராவின் நம்பர் இருந்தது!
அவர் உடனே போன் பண்ணி பேசவெல்லாம் அவகாசம் இல்லாத காரணத்தால் சட்டென்று ஒரு வாய்ஸ் மெசேஜ்,
“என்ன நடந்தாலும் யார் என்ன சொல்லி அழைத்தாலும் என்னைக் காண வர வேண்டாம்” என்று செய்தியை அனுப்பி விட்டு அவனிடம் போனை கொடுத்து விட்டார்.
ரேஷ்மாவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி தொந்திரவு தான் செய்வார்கள் என்று அவர் நம்பியிருக்க, அவர் நம்பிக்கைக்கு வேட்டு வைத்தான் அவரின் அருமை புதல்வன்!
வெளியில் சென்று விட்டு வந்த ஜெயந்திடம்,
“என்னமோ நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி சும்மாவே இருக்கியேடா?’ என்று பார்வதி திட்ட தொடங்க,
“சும்மா இருக்கேனா யார் சொன்னது?’ என்று பேசிக் கொண்டே பார்வதியும் எதிர்பாராவண்ணம் அந்த ஹாலில் இருந்த அலங்கார பூ ஜாடியை எடுத்து ராமநாதன் பின் மண்டையில் ஓங்கி அடித்தே விட்டான்!
“டேய்..டேய்.. என்னடா பண்ற? அவர் உன்னோட அப்பாடா?”
“ஆமா. அப்பா தான். நீயும் நானும் தான் அப்படி சொல்லிட்டு திரியுறோம்! ஆனா இவருக்கு நான் பிள்ளைன்ற நினைப்பு கொஞ்சமாச்சும் இருக்கா?
நீ ஒண்ணும் பயப்படாதே.. ரொம்ப பலமா எல்லாம் அடிக்கல! லேசா தான் அடிச்சு இருக்கேன்! இவர எனக்கு தெரிஞ்ச ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டு சொல்றேன்.
ரேஷ்மாவுக்கு போன் பண்ணி வர சொல்லு.
அதுக்கும் ரேஷ்மா ஏர்போர்ட்டில் வந்து இறங்குற நேரத்துக்கும் சரியா இருக்கும்!
தூக்கு அவரை!” என்று சொல்லி அடியின் காரணமாக மூர்ச்சையாகிவிட்ட ராமநாதனை தூக்கிப் போட்டுக் கொண்டு, அவனுக்கு தெரிந்த அந்த தனியார் ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்த்து விட்டு ரேஷ்மாவுக்கும் ரேவந்திற்கும் போன் செய்து வரவழைத்து விட்டார்கள்!
அவர்களின் நல்ல நேரம், ரேஷ்மா ரேவந்த்தின் கெட்ட நேரமோ தெரியவில்லை!
ராமநாதன் அனுப்பி இருந்த அந்த எச்சரிக்கை செய்தியை மதுரா முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை!
காரணம் அந்த டிரைவர் தான் அவளது எண்ணை சேமித்து வைத்திருந்தான்! மதுரா செய்திருக்க வில்லை!
அதனால் தான் தெரியாத எண்ணின் செய்தியை அவள் முதலில் படிக்கவில்லை!
ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அந்த எண்ணின் டிபியில் இருந்த டிரைவரின் போட்டோவைக் கண்டு விட்ட பிறகு தான் அதை திறந்து அந்த செய்தியை அறிந்து கொள்வதற்குள் ரேவந்தும் ரேஷ்மாவும் கிளம்பி இருந்தனர்.
ரேஷ்மா அங்கு சென்று சேர்ந்த போது, “ரேஷ்மா..” என்று அழுதுக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டு விட்டார் பார்வதி! கூடவே வந்த யுவியை முறைக்கவும் தவறவில்லை அவர்!
“என்ன ஆச்சு ஆண்ட்டி? எப்படி இப்படி ஆச்சு? எதனால திடீர்னு அன்கான்சியஸ் ஆனாரு அங்கிள்?”
“அது வந்தும்மா..” என்று பார்வதி ஏதோ ஆரம்பிக்க,
“ஏம்மா மழுப்புறீங்க? உண்மையைய சொல்ல வேண்டியது தானே?” என்றான் ஜெயந்த்!
“சரிப்பா சொல்லிடறேன். அங்கிள் மதியம் காரை எடுத்துட்டு எங்கியோ வெளியே போய் விட்டு வந்தார்.
வரும்போதே தள்ளாடிக் கொண்டு தான் வந்தார்.
யாரோ உங்க அப்பாவோட சொந்தக் காரங்க தான் ரேஷ்மா, கொஞ்ச நாளா அடங்கி இருந்தவங்க, இப்ப திரும்பவும் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க போல!
இவர் கிட்ட உன்னை பெண் கேட்டு இருக்காங்க போல! இவர் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி இருக்காரு.
நீ உயிரோட இருந்தா தானே எல்லாத்துக்கும் தடையா இருப்ப? ஆரம்பத்தில் இருந்தே உன்னோட தொல்லையா போச்சு!
சித்தார்த் இறந்தவுடனே நீ உள்ளே வந்து எங்க எல்லாத்தையும் வெளியே அனுப்பிட்ட!
இப்போ பொண்ணைக் கட்டிக்கிட்டு போயாச்சும் திரும்பவும் உள்ளே வரலாம்னா இப்பவும் நந்தி மாதிரி குறுக்கே வந்துட்டே இருக்க அப்படின்னு சொல்லி இவரைக் கட்டையால் அடிச்சுருக்காங்க!
ஆனா இவர் எப்படியோ அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு காரையும் ஓட்டிகிட்டு வீடு வந்து சேர்ந்துட்டார்!
ஆனா வந்தவுடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்!
அடி தடின்னு சொன்னா போலிஸ் கேஸாகிடும்னு தான் நாங்க சும்மா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாருன்னு சொல்லி அட்மிட் பண்ணி வச்சுருக்கோம்!
இன்னுமும் மயக்கம் தெளியல அவருக்கு!
உங்க ரெண்டு பேத்துக்காக இன்னும் எத்தனை ரத்தம் சிந்தனுமோ இந்த மனுஷன்!”
பார்வதி கதை விட்டுக் கொண்டிருக்கும் போதே பதட்டத்தோடு வந்து சேர்ந்து விட்டிருந்தான் ரேவந்தும்!
பார்வதி இப்போது சொல்வது பொய்யாக இருந்தாலும், ஆரம்பத்தில் ராமநாதன் சில முறை சித்தார்த்தின் உறவுகளால் தாக்கப்பட்டும் இருந்திருக்கிறார் தான்!
அதையே இப்போது தனக்கு சாதகமாக பேசி, ரேவந்த் ரேஷ்மா இருவருக்கும் ஒரு வித குற்றஉணர்வை, தூண்டி விட்டார் பார்வதி!
“கொஞ்ச நாளாவே அடிக்கடி சொல்லிட்டு இருந்தார்!
சீக்கிரம் இந்த ரேஷ்மா பொண்ணை ஜெயந்துக்கு கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்து பாதுகாப்பா வச்சுடணும்!
நானும் வெளியே மாப்பிள்ளை பார்க்கலாம்னு தான் ஆரம்பத்தில் நினைச்சேன்.
ஆனா இந்த பொல்லாத சொந்தக்காரங்க சும்மா விட மாட்டாங்க!
அதுவும் இப்படி மீடியாவில் விளம்பர படத்தில் நடிக்கும் பொண்ணை கட்டிக் கொண்டு போனாலும் அதை ஒரு குறையாக சொல்லி அவளை குறைவாக நடத்தவும் சான்ஸ் இருக்கு!
அவ லைஃபில் நான் ரிஸ்க் எடுக்க விரும்பல.
ரேஷ்மா சிங்கபூர்ல இருந்து வரட்டும்! வந்தவுடனே கல்யாண ஏற்பாடு பண்ணிட வேண்டியது தான்னு சொல்லி நாள் குறிக்க ஜோசியரை தான் பார்க்க போனார்!
போனவருக்கு இப்படி ஆகிடுச்சு!
இவ்வளவு நேரம் ஆகியும் மயக்கம் தெளியல!
டாக்டர் அவர் கிட்ட பேச்சுக் கொடுங்க. பேசிக்கிட்டே இருங்க கான்சியஸ் வந்துடும்னு சொல்லிட்டு போய் இருக்காரு!” என்று பார்வதி மீண்டும், ரேஷ்மாவை நெருங்கி,
“ரேஷ்மா தங்கம்.. நீ உன் அங்கிள் கிட்ட பேசுடா.. நான் ஜெயந்தை கல்யாணம் பண்ணிக்கிறேன் அங்கிள்ன்னு திரும்ப திரும்ப அவர் காதில் சொல்லிட்டே இரு!
சத்தியம் பண்ணுடா ரேஷ்மா.. எனக்கு தாலி பிச்சைக் கொடும்மா” என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய,
ரேவந்த் திகைத்துப் போய் நின்றிருந்தான்!
எந்த சூழ்நிலை உருவாக கூடாது என்று அவன் அத்தனை மெனக்கிட்டானோ அது அத்தனையும் வீணாகிக் கொண்டிருப்பதைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான்!
“ம்ம்.. என்ன நீங்க..இப்படியெல்லாம் இமோசனல் ப்ளாக் மெயில் பண்ணக் கூடாது! தப்பு!
ரேஷ்மாவுக்கு என்ன விருப்பம்னு தெரியாம நீங்க இப்படி பேசக் கூடாது” என்று யுவி பேச,
“நீ யாருப்பா.. எங்க குடும்ப விசயத்தில் தலையிட?” என்று பார்வதி அவனிடன் பாய,
“ப்ளீஸ் யுவி.. பேசாம இருங்க” என்று தழு தழுத்த குரலில் சொன்ன ரேஷ்மா,
“இப்ப என்ன ஆண்ட்டி, நான் ஜெயந்த்தைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு அங்கிள் கிட்ட சத்தியம் பண்ணனுமா?” என்றாள்.
“அப்படி சொல்லலம்மா.. அங்கிள் உன் வாக்குறுதி கேட்டு எழுந்துக்க சான்ஸ் இருக்குல்ல அதான்” என்றார் பார்வதி!
“இது என்ன சினிமாவா? ரேஷ்மா மேம் சொன்னவுடனே அவர் எழுந்து உக்கார? அவர முதல்ல நல்ல ஹாஸ்பிட்டலில் சேர்க்க பாருங்க!
அதை விட்டுட்டு கல்யாணம் பேசி முடிவு பண்ற நேரமா இது?”
மதுராவின் குரல் கேட்டு அனைவரும் திரும்பினார்கள்!
ஜெயந்துக்கு ஜெர்க் ஆனது!
இவள் எப்படி இங்க வந்தாள்?
எல்லோரிடமும் வழியும் அவன், பயப்படுவது மதுராவிடம் மட்டுமே!
“ஏய்.. இது எங்க குடும்ப விசயம்! நீ வந்து கருத்து சொல்ல இது ஒண்ணும் ஆபிஸ் இல்ல” என்று மதுராவிடம் பாய்ந்தார் பார்வதி.
“அவங்க என்னோட வருங்கால அண்ணி! ரேவந்தும் அவங்களும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க!” ரேஷ்மா சொல்ல,
பார்வதியும் ஜெயந்தும் திகைத்தார்கள்!
ஏற்கனவே இவ ரேஷ்மாவிடம் நெருங்க விட மாட்டாள். இப்போது அண்ணின்னு உரிமை வேற வந்துட்டா.. அவ்வளவு தான்!
சீக்கிரம் ரேஷ்மாவை சத்தியம் பண்ண வைக்கணும் என்று மனதுள் நினைத்தவர்,
“ஓ.. அப்படியா. எப்படி இருந்தாலும் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தானே ரேவந்த் பண்ணிப்பான். நீ சொல்லும்மா உன் அங்கிள் எழுந்துக்கட்டும்!”
“அட நீங்க என்னங்க ரேஷ்மா என்ன மேஜிக் பண்ணி சாரை எழுப்ப முடியும்!
இங்க ஹாஸ்பிட்டல் சீஃப் டாக்டர் ஊரில் இல்லை!
டுயூட்டி டாக்டர்ஸ் தான் இருக்காங்க. நாம வேற ஹாஸ்பிட்டல் கொண்டு போய்டலாம்!” என்றாள் மதுரா.
“வேற ஹாஸ்பிட்டல் போனா, போலிஸ் கேஸ் ஆகிடும்!”
“ஆகட்டும். பின்னே சாரை அடிச்சு போட்டவங்களை சும்மாவா விட முடியும்?
சார். அப்படி இன்னிக்கு எங்க போனார்? யாரை பார்க்க போனார்? யார் மேல உங்களுக்கு சந்தேகம் இருக்கு?”
அடுக்கடுக்காய் மதுரா கேள்வி கேட்க, பார்வதிக்கு திக் என்றது!
“அது.. தெரு முனையில் இருக்கும் பார்க் கிட்ட தான் அவரை நிறுத்தி பேசி இருக்காங்க” எனவும்,
“யுவி சார்.. நீங்க வாங்க.. அங்க பக்கத்தில் ஏதாச்சும் சி சி டி வி கேமிராவில் ரெக்கார்ட் ஆகி இருக்கான்னு பார்க்கலாம்.
அதுக்கு முன்னாடி ரேஷ்மா உங்களுக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு மறந்திட்டீங்களா?
இன்னும் அரை மணி நேரத்தில் நீங்க ஆபிசில் இருக்கணும் கிளம்புங்க” என்று சொல்லி அவளைக் கையைப் பிடித்து இழுத்தாள்.
யுவி ரேஷ்மாவின் லக்கேஜ்களை எடுத்து தர, (அவள் தான் ஏர்போர்ட்டில் இருந்து நேரே இங்கு வந்து விட்டாளே!),
“நீயும் போ ஸ்வீட்டி.. ரேஷ்மா கூட!
நானும் யுவியும் அங்கிளை வேற ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு வருகிறோம்” என்று ரேவந்த் ரேஷ்மாவோடு மதுராவை அனுப்பி வைத்து விட்டான்!
போகும் அவர்களை கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மாவும் பிள்ளையும்!
ஹாஸ்பிடல் பில் செட்டில் செய்து விட்டு ராமநாதனை வெளியே கொண்டு போக ஏற்பாடுகள் செய்ய யுவியும் ரேவந்த்தும் அங்கிருந்து நகர்ந்தார்கள்!
“இவங்க சொல்ற எதுவும் உண்மை மாதிரி இல்ல ரேவந்த்” என்றான் யுவி!
“எனக்கும் அப்படி தான் தோணுது! ஆனா அங்கிள் வாயை திறந்து அப்படியெல்லாம் இல்லன்னு சொல்ற வரைக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கு!”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மதுராவின் போன் வந்தது.
“அந்த ஹாஸ்பிட்டலில் ஏதோ தப்பு இருக்கு! சீஃப் டாக்டர் ஊரில் இல்லாத நேரம் என்னமோ பண்றாங்க போல!
அங்க நர்ஸ் ஒருத்திய பார்த்தேன்!
அவ கொஞ்சம் சரியில்லாத ஆள்! திருச்சியில் நான் முதலில் வேலைப் பார்த்த ஹாஸ்பிட்டலில் நான் தான் இவ மேல் டிசிபிளினரி ஆக்சன் எடுத்து வேலையை விட்டு அனுப்பினதே!
எப்படியோ இங்க வந்து சேர்ந்து இருக்கா! நீங்க முதல்ல அங்கிருந்து கிளம்புற வேலையை பாருங்க” என்றாள்!
அவள் ஊகித்தது சரி தான்!
ராமநாதன் தலையில் அடிப்பட்ட காயத்துக்கு வெறும் சில தையல்கள் மட்டுமே போடப்பட்டு இருந்தது!
அந்த நர்சின் துணையுடன் தான் ஜெயந்த், அவருக்கு தூங்குவதற்கு ஊசிப் போட்டு அவரை கண் திறக்காமல் வைத்து இருந்தான்!
இப்போது எல்லாமே பாழ்!
யுவியிடம் ரேவந்த் சொன்னான்.
“ரேஷ்மா கொஞ்ச நாளைக்கு இவங்க கண்ணில் படாமல் இருப்பது நல்லது!
நீ அவளை அழைச்சிட்டு மறுபடியும் சிங்கப்பூர் இல்லைனா வேற எங்கேயாவது போய்டு. கொஞ்ச நாள் கழிச்சு வாங்க. அதுக்குள்ள இங்க நிலைமையை சரி பண்ணிடலாம்” என்றான்!
ஆனால் அது முடியாமல் போய் விட்டது!
காரணம் ஏர்போர்ட்டில் இருந்து அழுதுக் கொண்டு ராமநாதனைக் காண வந்த ரேஷ்மாவின் பாஸ்போர்ட் வைத்து இருந்த அந்த கைப்பையை அவளிடமிருந்து நைசாக வாங்கி வைத்துக் கொண்டிருந்தார் பார்வதி!
மதுரவோடு அவசரமாக கிளம்பியதில் அதை திரும்ப பெற மறந்து இருந்தாள் அவள்!
அடுத்து எங்கு போகப் போகிறார்கள் ரேஷ்மாவும் மதுராவும்?
error: Content is protected !!