Skip to content
Post Views: 3,356

அத்தியாயம் 2
சுட்டு விரலில் இருசக்கர வண்டி சாவியினை வைத்து சுற்றிக் கொண்டிருந்த ம்ருதவ்வின் அருகில் வந்தமர்ந்தான் கமலேஷ்.
Advertisement
“வொர்க் இல்லையா?” கமலேஷ் கேட்க,
“இப்போ தான் ஒரு மீட்டிங் முடிச்சிட்டு வந்தேன்” என்ற ம்ருதவ், “ஒரு மாதிரி இருக்குடா. ஆஃப் போட்டுட்டு வீட்டுக்குப் போகலாம் தோணுது” என்றான்.
இருவரும் மென்பொருள் துறையில் வெவ்வேறு செயல்பாட்டுத்திட்டத்தின் மேலாளராக இருக்கின்றனர்.
Advertisement
“என்னடா? என்ன பண்ணுது?” என்ற கமலேஷ், “தலை வலிக்குதா?” எனக் கேட்டான்.
Advertisement
“ஏன்டா பதறுர?” என்றவனாக, “மைண்ட் டிஸ்டர்ப்டாவே இருக்குடா” என்றான்.
“என்ன காரணம்?” என்ற கமலேஷ், “அவள் நினைப்பா இருக்குன்னு சொல்லிடாத. மறந்தாதான நினைக்கிறதுக்கு” என கடுப்போடு மொழிந்தான் கமலேஷ்.
ம்ருதவ் கண்களுக்குள் உயிர்த்திடாத சிரிப்பினை இதழில் நெளிய விட்டான்.
Advertisement
கமலேஷின் பார்வை ம்ருதவ்வின் விரலில் சுழன்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் சாவியோடு சேர்ந்து ஊசலாடிக் கொண்டிருந்த ஒற்றை ஜிமிக்கியில் நிலைத்தது.
“அவள் அப்படி பேசிட்டு போனப்புறமும் அவளை மறக்கணும்னு நீ நினைக்கவே இல்லல்ல” என்றான் கமலேஷ்.
“முயற்சி பண்ணலன்னு சொல்லமாட்டேன். ஆனால் அவள் அப்படி பேச ஏதோ காரணமிருக்குன்னு என் மனசு ஸ்ட்ராங்கா நம்புச்சு. நான் அவளை விடமாட்டானோங்கிற பயம், அவளை அப்படி பேச வச்சிடுச்சு. இப்போ அதுதான உண்மையாவும் இருக்கு” என்ற ம்ருதவ், “இதுக்கு அப்புறமாவது அவள் என்னோட சந்தோஷமா வாழனும்டா” என்றான்.
“எப்படிடா… காரணம் என்னவா வேணாலும் இருக்கட்டும். அதுக்கு விட்டுட்டுப்போறதுதான் தீர்வா?” என்று கடுகடுத்த கமலேஷ், “அவள் உன்னை விட்டுட்டுப்போயும் அவள் மேல உனக்கு எப்படி இவ்வளவு காதல்?” என்றான்.
ம்ருதவ்வின் இந்த பைத்தியக்காரத்தனமான காதல் மீது பல நேரம் கோபம் வந்தாலும், சில நேரம் பிரமிக்கவும் செய்திருக்கிறான் கமலேஷ்.
ஒரு காதல் ஒருவனை வலியில் வீழ்த்தவும் செய்திடும், மகிழ்வில் உச்சம் அடையவும் வைத்திடும். ம்ருதவ்வின் காதலில் உடனிருந்து கண்கூடாகப் பார்த்தவனுக்கு,
‘எப்படியும் இவனின் காதல் சேர்ந்திடுமென்று எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்டுவிட்டதென்றால், இப்படி ஏன் சேர வேண்டும்? இருவருக்கும் வலி கொடுக்காது, நெஞ்சம் உடைக்காது சேர்த்து வைத்திருக்கலாமே’ என ஆதங்கமாக நினைக்கமட்டுமே கமலேஷால் நினைக்க முடிந்தது.
இவனின்றி அவளும் பல இன்னல்களை அனுபவித்திருக்கிறாள் என்பதை செவி வழி அறிந்திருந்தாலும், அவளின்றி இவன் பட்ட ரணங்களை உடனிருந்து பார்த்திருக்கின்றானே!
ஆதலால்,
“நான் அவளை இவ்வளவு காதலிக்க, அவள் எனக்கு எவ்வளவு அன்பை கொடுத்திருக்கணும். இவ்ளோ பெரிய பூமியில் உனக்குன்னு யாருமில்லைங்கிறது ரொம்ப கொடுமையானது கமல். அந்த கொடுமையிலிருந்து என்னை மீட்டெடுத்தவள். அவள் மேல இந்தளவுக்கு காதலில்லாம எப்படி” என்று ம்ருதவ் கூறினாலும் கமலேஷுக்கு அவளின் காதலெல்லாம் தன்னுடைய நண்பனின் காதலுக்கு முன்னால் தூசாகவேப் பார்க்கப்பட்டது.
“இப்போ வீட்டுக்குப் போனாலும், இந்த ஜிமிக்கியை கையில் வச்சிட்டு தேவதாஸ் மாதிரி ஃபீல் பண்ணிட்டுதான் இருக்கப்போற. அதுக்கு ஒழுங்கா இங்கவே உட்கார்ந்து வேலையைப்பாருடா” என்ற கமலேஷ், “தேவதாசுக்கு நாய்ன்னா, உனக்கு இந்த ஜிமிக்கிடா… அவனவன் காதலை எது எதுலயோ ஃபீல் பண்றான். ஆனா நீ, அப்படி அதுல என்ன ஃபீல் இருக்கோ” என்றான்.
“இது சொன்னா புரியாதுடா” என்ற ம்ருதவ், “நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என எழுந்தான்.
“கால் பண்ணாங்களா?”
இல்லையென தோள்களை உயர்த்தி இறக்கிய ம்ருதவ், “வரும் நம்புறேன்” என்றான்.
“முடியவே முடியாது சொல்லிட்டா?”
உயிர்த்திடாத சிரிப்பில் தன்னுடைய ஒட்டு மொத்த காதலின் ஏக்கத்தை பிரதிபலித்திருந்தான்.
“பதில் மட்டும் சொல்லிடாத” என்ற கமலேஷ், “ரதிகிட்ட பேசுடா. என் தலையை உருட்டுறா” என தனது வேலையைப் பார்க்கச் சென்றான்.
ம்ருதவ் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.
ம்ருதவிற்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. சித்தப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தவன். அவனுக்கு அவரும், அவருக்கு அவனும் மட்டுமே வாழ்ந்த நாட்களும் முடிவுக்கு வந்திருந்தது.
ம்ருதவ் இளநிலை படிப்பில் இறுதி ஆண்டில் இருந்த சமயம், உறக்கத்திலேயே மரணத்தை தழுவியிருந்தார், அவனுக்கு அனைத்துமாக இருந்த அவனின் சித்தப்பா ஈஸ்வர்.
யாருமில்லாது ஜீவிக்க விருப்பமின்றி நடமாடிக் கொண்டிருந்தவனுக்கு மொத்த உறவாக வந்தவளும் அவனது ஜீவனையே மரிக்கச்செய்து சென்றிருந்தாள்.
திருச்சியில் இருப்பிடம். ஈஸ்வருக்கு நான்கு மாடி காம்பிளக்ஸ் சொந்தகமாக இருந்திட, அங்கிருக்கும் கடைகளின் வாடகை முழுவதும் ம்ருதவ்வின் வருமானமாக இன்றளவிலும் வந்து கொண்டிருக்கிறது.
யாருமற்ற நிலையிலும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும் காரணியில் அவனுக்கு பஞ்சமில்லாதிருக்க, அவன் ஏங்கும் ஒன்றாக இந்த நொடி வரை தவிக்க வைப்பது அன்பு மட்டுமே.
அன்பு என்பது பெரிய வெளி. இருப்பினும் அவனது அன்பு, காதல் என்பதில் மட்டுமே சுருங்கிவிட்டது. சுருக்கிக்கொண்டான்.
இப்போதும் கிடைக்கவே கிடைக்காது, அவனது கை விட்டுச் சென்றிருந்த காதலை அகம் சேர்த்திட ஆறு வருடங்களுக்குப் பின்னர் களமிறங்கி முயற்சி செய்யத் துவங்கிவிட்டான்.
வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தி இறங்கியவன், வண்டியிலிருந்து சாவியை எடுத்து பையில் வைக்கும் முன்பு, எப்போதும் போல் இந்த நொடியும் பார்வையால் ஆரத் தழுவியிருந்தான்.
“மத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும்டி. உனக்காக, எனக்காக… நமக்காக வாழ்ந்துப் பார்ப்போமே! அப்படி வாழ எனக்கொரு சான்ஸ் கொடு” என்றான். சாவியில் ஆடிக்கொண்டிருந்த ஜிமிக்கியின் ஆட்டம், அவள் கூறிய சம்மதமாகத் தோன்றிட,
“ரொம்ப வெயிட் பண்ணிட்டேன். இனிமேல் காத்திருக்கவே முடியாதுங்கிற நிலைக்கு வந்துட்டேன்” என்றவனாக வீட்டிற்குள் சென்றான்.
ஆடைமாற்றி முகம் கழுவி, தேநீர் வார்த்து, குவளையுடன் சிட்டவுட் பக்கம் சென்றவன், அந்நேரம் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய தொட்டியில் நீர் அருந்திக் கொண்டிருந்த பறவைகளை ரசித்தவனாக தேநீரை சுவைத்தான்.
கண்களின் காட்சிகள் யாவும் அவனவளை நினைவுக் கூர்ந்திட… விரும்பியே நினைவில் மூழ்கினான்.
“நம்ம வீட்ல எப்பவும் பேர்ட்ஸ் சத்தம் கேட்டுட்டே இருக்கணும். நமக்குங்கிற வீட்டில், அதுங்களுக்கான கூடு. இங்க பல பேருக்கு இயற்கை மட்டும் தான் நிரந்தரமான சொந்தம் ம்ருதவ்.” என்றோ அவள் சொல்லியது.
பலதரப்பட்ட பறவைகளின் சத்தம் அவ்விடம் நிறைக்க, தான் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்திலிருந்த டப்பாவிலிருந்து தானியங்களை கை நிறைய அள்ளி தோட்டப் பகுதியில் விசிறினான்.
அடுத்த கணம் அங்கிருந்த மரங்கள், செடிகளுக்குள் அமர்ந்திருந்த சிறுசிறு பறவைகள் பெரும் சத்தத்தோடு ஒன்றாக பறந்து வந்து குவிந்தன.
அவற்றின் ஒலியில் மனதை இதமாக்க முயன்றவன் இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடிட…
அவன் வெறுக்கும் நாள், துறக்கும் காட்சி கருவிழிகளுக்குள் சதிராடியது.
மகிழ்வை விரும்பும் மனம் துன்பத்தை மட்டும் ஏற்க மறுக்கிறது.
ஆனால் அவனோ எல்லாவற்றையும் தன் வாழ்வில் முடிவுக்கு கொண்டுவந்த அந்த நாளையும் சுகமாய் அனுபவித்திடுவான். இத்தருணம் போன்று…
அவளுக்காக பூங்காவில் கல் மேடையின் மீது அமர்ந்திருந்த ம்ருதவ் நொடிக்கு ஒருமுறை நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குமேல் முடியாதென அவளுக்கு அழைத்திருந்தான்.
“எங்க இருக்கடி? இன்னும் எவ்வளவு நேரம்?” என்ற ம்ருதவ்விடத்தில் அவளை பார்த்துவிட வேண்டுமென்ற பெரும் ஆவல்.
“வீட்டிலிருந்து திடீர்னு வரச்சொல்லியிருக்காங்க. போயிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிச் சென்றவள், முழுதாக ஒரு வாரம் கடந்த பின்னரே, தான் திருச்சி வந்துக் கொண்டிருப்பதாக தகவல் அளித்தாள்.
அவள் உடனில்லாத, அவளைப் பார்க்க முடியாததால் ம்ருதவ் தான் மிகவும் ஓய்ந்துப் போயிருந்தான்.
எப்போதும் வழமையாக வீட்டிற்குச் சென்றால், அவளாக அழைத்தாலோ, தகவல் அனுப்பினாலோதான் உண்டு. இருப்பினும் இரவில் சில குறுந்தகவல்களின் மூலம் கொஞ்ச நேரமேனும் அவனுடன் பேசிவிட்டே அன்றைய நாளை முடித்து வைப்பவள், இம்முறை ஒரு குறுஞ்செய்தியுமின்றி அவனை தவிக்க வைத்திருந்தாள்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அவளுக்காகக் காத்திருந்தவன் அவளின் தகவல் கண்டதும், அத்தனை பரபரப்போடு அவளுக்கு அழைத்திட,
“டுவென்டி மினிட்ஸ்ல வந்திடுவேன். காலேஜ் பக்கத்துல இருக்க பார்க்கில் வெயிட் பண்ணுங்க” என்று அவனை பேசவேவிடாது அழைப்பை வைத்திருந்தாள்.
எப்போதும் அவள் ஊருக்கு சென்று வருவதாக இருந்தால், ம்ருதவ் தான் பேருந்து நிலையம் சென்று அழைத்து வருவான். இன்று அவள் பேருந்து நிலையம் வரசொல்லாததை ஏனென்று யோசித்தாலும் புறம் ஒதுக்கியவனாக அவளின் வருகைக்காகக் காத்திருந்தான்.
அவனது பார்வை பூங்காவின் நுழைவு வாயிலிலே பதிந்திருந்தது.
சிறிய பூங்கா தான். உள்ளேயிருந்துப் பார்த்தால் வெளியில் நன்றாகத் தெரிந்தது.
ஆட்டோ ஒன்று வந்து நிற்க அதிலிருந்து அவள் இறங்குவதை கண்டதும், விழிகளில் பூக்கள் பூத்திட பெரும் பூரிப்போடு வாயிலை நோக்கிச் சென்றவன், அவளின் கையிலிருந்த பையினை வாங்க முயற்சித்தான்.
அவள் மறுத்துவிட்டாள்.
“என்னாச்சு டா? ஏன் ஒரு மாதிரி இருக்க. உடம்பு சரியில்லையா?” என சோர்ந்து தெரிந்த அவளின் தோற்றம் கண்டு வினவியவன் அவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க முயல…
“ப்ளீஸ் ம்ருதவ்” என்றவளாக முதலில் தென்பட்ட மேடையில் அமர்ந்திட்டாள்.
அவளின் அருகில் சிறு இடைவெளியில் அமர்ந்தவன்,
“மேடம் ஒரு கால் கூட பண்ணல. பேசி, பார்த்து ஒரு வாரமாச்சு. இப்பவும் என்னைப் பார்த்த சந்தோஷம் உன் முகத்துல மிஸ்ஸிங். வழக்கமா என்னைப் பார்த்ததும் உன் கண்ணுல ஒரு மின்னல் வருமே… அதில்லை. சின்ன ஹக் கூட இல்லை. எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமாங்க மேடம்” என்றவன், “நான் எதுவும் தப்பு பண்ணிட்டனாடா?” எனக் கேட்டான்.
பக்கவாட்டில் அவனை திரும்பிப் பார்த்தவள், இதழ் பிரிக்காது, வார்த்தைகள் கோர்க்காது, இமைகள் மூடாது, கருவிழிகள் அசையாது, அவனையே பார்த்திருந்தாள்.
“என்னடா?” என்ற ம்ருதவ், அவளின் முன்நெற்றியில் விழுந்திருந்த முடியை ஒற்றை விரலால் ஒதுக்கியவனாக, “என்ன பிரச்சினை?” எனக் கேட்டான்.
“நாம பிரேக்கப் பண்ணிக்கலாமா?”
சட்டென்று கன்னம் உருண்ட நீரை புறங்கையால் துடைத்திருந்தாள்.
உணர்வற்று, அவள் கூறியதை நம்ப இயலாது, இதயத்தின் நடுவில் கூர்முனை அம்பொன்று பாய்ந்ததுவோ எனும் நிலையில் அசைவற்று அவனிருக்க…
“பண்ணிக்கலாம்!” என்றாள்.
முதலில் கேள்வியாகக் கேட்டவள், தற்போது முடிவாகக் கூறினாள்.
அவளின்றி ஓர் வாழ்வா?
நினைக்கவே நெஞ்சம் உடைந்தான்.
“நான் தான் லவ் பண்ணேன். நான் தான் உங்களை லவ் பண்ண வச்சேன். இப்போ நான் தான் இது வேண்டான்னும் சொல்றேன்” என்றவளால், என்ன முயன்றும் குரலில் தவிப்பையும் தழுதழுப்பையும் மறைக்க முடியவில்லை.
“அழாதடி” என்றவன், அவளின் கசங்கிய வதனம் காண பிடிக்காதவனாக எழுந்து அவளுக்கு முதுகு காண்பித்தவனாக நின்று, பின்னந்தலையில் இரு கைகளையும் கோர்த்து வைத்து வான் நோக்கி முகம் உயர்த்தியவனாக இதழ் குவித்து காற்றினை இழுத்து ஊதினான்.
“நமக்குள்ள…” என்று அவள் ஏதோ சொல்லவர, அவள் புறம் திரும்பி வேண்டாமென்று இருபக்கமும் தலையசைத்தான்.
“ம்ருதவ்…”
“என்ன காரணம்? உன் வீட்டு ஆளுங்கன்னு சொல்லாத. நான் நம்பமாட்டேன்” என்றான். அக்கணம் என்றோ ஓர் நாள் காதலாய் அவள் சொல்லியது அவனது இதயத்தில் எதிரொலித்தது.
“வீட்ல ஒத்துக்கலன்னா நீங்க வந்து கூட்டிட்டு வந்திடுங்க. யாருக்காகவும் நீங்கயில்லாத வாழ்க்கையை வாழவே முடியாது!” காதலின் அதீதத்தில் அவனை திகைக்க வைத்த அவளின் வார்த்தைகள்.
அவ்வரிகளில் அந்த நொடி கசந்த முறுவல் ஒன்றை வெளிப்படுத்தினான்.
வீட்டில் தான் என்னவோ நடந்திருக்கிறதென அவனுக்கு புரிந்தபோதும், என்னவாக இருக்குமென்ற சிறு கணிப்பும் அவனிடத்தில் இல்லை.
காதலை இப்போது சொல்ல வேண்டாமென்று இருவரும் பேசி வைத்திருக்கின்றனர். ஆதலால் அவள் காதலை சொல்லி அவர்கள் மறுப்பு தெரிவித்திருப்பார்களென அவனால் எண்ண முடியவில்லை.
இருப்பினும் அப்படியும் இருக்குமோயென,
“வீட்ல சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.
என்ன சொன்னாலும் நம்பமாட்டான் என்பதற்காக, வார்த்தையால் அவனைத் துவளச் செய்ய நினைத்தாளோ. வலிக்க வலி கொடுத்து அவனின் மனதை ரணப்படுத்தியிருந்தாள்.
“என்னால என் வீட்டை மீறி எதுவும் செய்ய முடியாது.”
“ஹோ…”
“நக்கல் பண்றீங்களா?” என்று இல்லாத கோபத்தை இழுத்துப்பிடித்து, “குடும்பமா வாழ்ந்திருந்தாதான, குடும்பத்து ஆட்கள் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியும்” என்றாள்.
“நான் என் குடும்பமா, என்னோட எல்லா உறவுமாவும் உன்னைத்தான் பார்த்தேன்.”
ம்ருதவ்வின் இந்த வார்த்தைகளில் உள்ளம் அதிவேகத்தில் துடித்தபோதும்,
“நீங்க ஒரு அனாதை. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நானும் அனாதை ஆகிடுவேன்” என்றவளை நோக்கி அடிப்பட்ட பார்வையை வீசியவன்…
“போ…” என்றிருந்தான்.
“ம்ருதவ்!”
“போடி…” என்றவன், “என்னை விலக்கி வைக்கிறன்னு உன்னை நீயே காயப்படுத்திக்காத” என்றான்.
பொங்கி வந்த கேவலை தொண்டைக் குழிக்குள் அமிழ்த்தினாள்.
“காதலை கொட்டிக்கொடுத்தவ… இப்போ அந்த காதலை திருப்பிக் கேட்கிற… கொடுத்திடுறேன். நீ போ” என்றான்.
அவள் அசையாதிருக்க…
“நான் அனாதைன்னு உனக்கு இப்போதான் தெரிஞ்சுதா?” எனக் கேட்டான்.
வலிக்கு மேலான ஓர் உணர்வின் வெளிப்பாடாய் அவனது முகம்.
“நீ என்ன வேணா காரணமா சொல்லியிருக்கலாம். இதை…” என்றவன், “இத்தனை நாளும் நீதான் என் குடும்பமுன்னு நான் உணர்த்தினதெல்லாம் நீ உணரவே இல்லையா?” என பெரும் ஏக்கமாகக் கேட்டிருந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரம் என் முன்னாடி நீ நின்னாலும், உன்னை நான் போக விடமாட்டேன். இழுத்து எனக்குள்ள புதைச்சிப்பேன்… போ… போயிடு” என்ற ம்ருதவ், அவள் தரையில் மண்டியிட்டு கைகளுக்குள் முகம் புதைத்து அழுதிட, வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான்.
வேண்டாமென்றவள், கேட்டதை பெற்றபின்னர் நிறைவு கொள்ளாது நெஞ்சம் விம்மினாள்.
இருக்கும் இடம் மறந்து கத்தி கதறினாள்.
“என்னயிருந்தாலும் அந்த வார்த்தையை நீ சொல்லியிருக்கக்கூடாது மித்யு” தனது கன்னங்களில் தானே அறைந்துக்கொண்டாள்.
வீட்டிற்கு வந்தவன் கண்ணில் பட்ட அனைத்துப் பொருட்களின் மீது தன்னுடைய வலியின் ஆதங்கத்தைக் காண்பித்தான்.
“அவளுக்கு நான் வேணாமா… நான் வேணாமா” என வெறிப்பிடித்தவன் போல் கத்தியவன், தரையில் சுருண்டு படுத்து…
“யுகா… மித்யுகா…” என அவளின் மடி தேடினான்.
யாருமற்று தனித்திருந்தவனுக்கு உறவாய், உலகமாய் வந்தவள், அவன் எதிர்ப்பார்த்ததற்கும் மேலான அன்பையும், அரவணைப்பையும் தந்தவள், அவர்களுக்குள் இல்லாத ஒன்றை காரணமாக்கி விட்டுச் செல்கிறாள்.
காதலை கொடுத்தவளுக்காக அவனால் திருப்பி என்ன செய்திட முடியும்? அவள் வேண்டுவது அவனது காதலாகவே இருப்பினும் கொடுத்துவிடுவது தானே சரியாக இருக்கும்.
அவளுக்காக அவளையே விட்டுக் கொடுப்பது ஆகச் சிறந்த காதலாகும். ம்ருதவ்வின் காதலும் ஆகச் சிறந்தது.
கேட்டதைக் கொடுத்துவிட்டான். எப்படி மீண்டு வரப்போகிறானென தெரியவில்லை.
இப்படியெல்லாம் வாழ வேண்டுமென நினைத்துப் பார்த்த வாழ்வு இல்லையெனும் பெருந்துன்பத்தின் தடமாக நொடியில் அவனது வாழ்வு மாறியிருந்தது.
அந்த துன்பங்களையெல்லாம் களைய முடிவு செய்து காய் நகர்த்தத் துவங்கிவிட்டான்.
விட்டுச் சென்ற காதல் கை சேர்ந்திடுமா?
எப்போதும் இந்நினைவு கொடுக்கும் தவிப்பை, ஏக்கத்தை இப்போதும் சுகமாய் ஏற்றவன்…
“எனக்கு நோ சொல்லிடுவியா நீ?” என தனக்குள் இருப்பவளிடம் கேட்டு சிரித்தான்.
அக்கணம் அலைபேசியில் அழைப்பு வரவே, கடந்த பக்கங்களை ஒதுக்கி வைத்தவனாக அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க…”
“சரின்னு சொல்லிட்டாள் தம்பி” என்ற எதிர்முனை, “என்னைக்கு வர்றீங்க?” என்றார்.
“நிஜமாவா?” என்று நம்ப முடியாது ம்ருதவ் கேட்டிட, நடந்ததை எல்லாம் கூறினார்.
“ஹோ” என நாடியை நீவியவன், “உங்ககிட்ட பேசி பாக்கிறதைவிட, பார்க்க வர பையன்கிட்ட பேசிப்பார்த்திடலாம் நினைச்சிட்டாப்போல” என நாடியை நீவினான்.
“அப்படியா?” என அதிர்ந்தவர், “அப்படியும் இருக்குமோ?” என்றார்.
“அப்படித்தான் இருக்கணும். அவ்வளவு சீக்கிரம் இந்த விஷயத்தில் இறங்கிவர ஆளில்லையே அவள்” என்ற ம்ருதவ், “அப்படி வர ஆளா இருந்திருந்தா… எப்பவோ என்னைத்தேடி வந்திருக்கணும்” என்றான்.
“அப்போ நீங்க இங்க வந்த பிறகு வேணாம் சொல்லிடுவாளா?”
“நான்னு தெரிஞ்ச அப்புறம் சம்மதிக்க வாய்ப்பிருக்கு” என்றான் ம்ருதவ்.
“எனக்கு ஒன்னும் புரியல தம்பி…”
“நான் வர அன்னைக்கு புரிஞ்சிடும்” என்ற ம்ருதவ்… “என்னைக்கு வரட்டும்? நீங்களே சொல்லுங்க” என்றான்.
“நான் அவகிட்ட கேட்டுட்டு சொல்றேன் தம்பி. நானா இந்தநாளுன்னு சொன்னா, எனக்கு லீவ் இல்லைன்னு சொல்லி ஏமாத்துவா(ள்). தட்டிக்கழிப்பா(ள்)” என்றார்.
“ஹ்ம்ம்” என்றவன், “வரவங்க பெயர் என்னன்னு கூட கேட்கலையா?” எனக் கேட்டான்.
“அவளுக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பமே இல்லை தம்பி. பிள்ளைங்களுக்காகவே வாழ்ந்திடலாம் நினைக்கிறாள்” என்றவர், “உங்க மூலமா அவள் சந்தோஷமெல்லாம் திருப்பிக் கிடைச்சா நிம்மதியா இருக்கும்” என கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“நிச்சயம் உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பாள்… என்னோட” என்ற ம்ருதவ், அழைப்பைத் துண்டித்தவனாக…
“மேரேஜ் நடக்கட்டும் உனக்கிருக்குடி” என்று நினைத்தான்.
அவனது வார்த்தைகளின் பொருளை அவன் மட்டுமே அறிவான்.
‘கண்ணீரால் காத்த நினைவுகள்,
அடி நெஞ்சில் சுகமாய் உயிர் சுமக்கின்றன.’
error: Content is protected !!