Skip to content
Post Views: 929
அறைக்குள் வந்தவன் எண்ணம் முழுவதிலும் பூவினியே நிறைந்திருந்தாள். பூவாசமாக இல்லாமல் புதிதாய் ஒரு குறுகுறுப்பு அவன் உள்ளத்தில் குடியேற காலையில் கண்ணீரோடு கண்ட அவள் முகம் அவன் மனத்தில் மின்னல் கீற்றாய்.
காலையில் கர்ணாவின் நினைவில் வள்ளியம்மாள் அழ அந்நேரம் இருளில் பூவினியும் வந்தாள்.
Advertisement
”அழுகாத அப்பத்தா.“ என்றவன் அவரை இறுகி அணைத்துக் கொள்ள, பூவினியைப் பார்த்தவர் இன்னும் அதிகம் கதறினார். அவர் அழுவதைக் கண்ட பூவினிக்கும் கண்கள் உடைப்பெடுக்க அவர் அருகினில் சென்று அமர்ந்து கொண்டாள்.
”நாம் பெத்த ராசாத்தி. எம் பேரனை நெனக்காம என்னால இருக்க முடியலையேத்தா. வாத்தா வா.“ என்றவர் புடவை முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
Advertisement
Advertisement
”என்னத்தா இந்நேரத்துல வந்துருக்க? மகிழே எங்கத்தா?“ கேள்விகளை வரிசையாய் அடுக்கினார்.
மறந்தும் பிடித்திருந்த அவளின் கைகளை விடவே இல்லை. அவள் கைகளில் ஆறுதல் தேடினாரா? இல்லை அவளுக்கு ஆறுதல் சொன்னாரா? அது அவர்களுக்கே தெரியாது.
Advertisement
பூவினியின் கண்கள் சிந்திய நீர்த்துளி கேட்பாராற்றுக் கிடக்க அப்பத்தாவின் கைகள் தந்த கதகதப்பில் பெருமூச்சொன்றை விட்டவள் “ஆயா, இந்த வீட்டு வாசல அத்த கூட்டிவிட சொன்னாக.” என்றாள்.
சில வருடங்களாகவே வள்ளியம்மாள் வாயோதிகம் காரணமாக தடுமாறி இருக்க, வாசல் கூட்டி கோலமிடுவதெல்லாம் வசந்தி அல்லது சுதா இருவரும்தான்.
பூவினி எப்போதாவது வருவதுண்டு. திருமணமான சில மாதங்களிலேயே அவள் கருவுற்றிருக்க இந்தப் பக்கம் அவளின் வரவு என்பது மிகவும் குறைவு.
கருணாகரன் இறந்த இந்த ஒரு மாதத்தில் அவள் அந்த புது வீட்டை விட்டு வெளியே வருவது இன்றே முதல் முறை.
அவள் சொன்னதைக் கேட்டதும், வள்ளியம்மாள் சற்றே கோபமாக “ஏத்தா, உம் மாமியா என்ன செய்யிறா? என்னத்துக்கு பாலு குடுக்குற புள்ளக்காரிய இந்தக் கூதல்ல வரச் சொன்னா?” என்றார்.
“இல்ல ஆயா, புள்ளையளோட சேந்து சுதா அக்காவுக்கும் ஒரே சளி, காய்ச்சல். அதான் இன்னைக்கு நீ போயி வாச தெளிச்சு கூட்டிவிடுன்னு சொன்னாக. அவுக மாமாக்கு காப்பி வச்சாக. இன்னைக்கி நா கூட்டி விடுறேன் ஆயா.”
“நல்லா செய்யித்தா. இனி நீதே இதெல்லாம் பாக்கணும். நா வேணாங்கள. ஆனா அதுக்காக இந்த கூதல்ல என்னதுக்குன்னுதே கேட்டே. ஒரு நாளைக்கி நாங் கூட்டி பெருக்க மாட்டேனா?” அங்கலாய்த்தார் வள்ளியம்மாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆயா. நீங்க இருங்க” என்றவள் எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடத் தயாரானாள்.
வாலியில் தண்ணீர் நிரப்பியபடி குமரனை பார்வையால் தேட அவன் எப்போதோ உள்ளே சென்றிருந்தான்.
‘வள்ளி‘ என உள்ளறையிலிருந்து முருகய்யாவின் குரல் கேட்க அவரும் உள்ளே எழுந்து சென்றது பூவினிக்கு ’அப்பாடா‘ என்றிருந்தது.
முன்பு போல சகஜமாக இங்கு வரவோ வள்ளியம்மாளிடம் பேசவோ அவளால் முடியவில்லை. உண்மையை சொல்வதென்றால் கர்ணாவின் மரணத்திற்குப் பிறகு இந்த வீட்டில் யாரோடும் அவளால் ஒன்றவே முடியவில்லை.
அதிலும் வசந்தியைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு பயம் கலந்த கவலை அவளை வதைத்தது. அன்பு என்று அவள் நினைத்ததெல்லாம் அவனின் மரணத்தோடு மறைந்திருந்தது. இப்போதெல்லாம் அவர்களின் ஒதுக்கல் அப்பட்டமாகவே இவளுக்குத் தெரிந்தது.
அம்மா சொன்னது போல முப்பது வருடம் வளர்த்த ஆண் மகனை மரணத்தின் கைகளில் அள்ளிக் கொடுப்பதென்பது அத்தனை எளிதில் மறக்கும் துக்கமல்ல. அதற்காகவே மாமியாருடன் சண்டையிடவோ வருத்தத்தைக் காட்டிக் கொள்ளவோ இல்லாமல் இருந்தாள் பூவினி.
அவள் மனத்தின் குழப்பங்களையும் கவலைகளையும், புள்ளியும் கோடுகளுமாக மாற்றி அழகான சிக்குக் கோலமாக உரு மாற்றினாள்.
கோலமிட்டு முடித்தவள் உள்ளே எட்டிப் பார்க்க ஒருவரையும் காணவில்லை. ஆயாவிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என மீண்டும் உள்ளே எட்டிப் பார்க்க குளித்து ஈரத் தலையை துவட்டியபடி குமரன் வெளியில் வந்தான்.
“அத்தான், ஆயா எங்க?” என்றவளுக்கு உள்ளறையை கண்களால் காட்டியவன் “ஐயா எந்திரிக்கவும் காலுக்கு மருந்து தேய்ப்பாக. அதுக்கு எண்ணைய காயச்சி குடுக்க போயிருக்காக.” என்றவனின் கண்கள் அவளைக் கூர்ந்து நோக்கியது.
வழக்கம்போல “ம்” என்றபடி அவள் திரும்ப “ஒரு நிமிஷம் பூவினி” என அழைத்து அவள் வீட்டிற்குச் செல்ல நினைத்தவளை தடுத்து நிறுத்தினான். “வீட்ல எல்லாம் ஓகேவா?” எனக் கேட்டவனின் கேள்வி சத்தியமாய் அவளுக்கு விளங்கவில்லை. “யாரு அத்தான்?” என மறுகேள்வி கேட்க, “இல்ல ரஞ்சித், இப்ப வீட்டுக்கு வந்துட்டானே. அதான் கேட்டேன்.” என்றான் குமரன்.
“என்னயா கேட்டீங்க? நீங்கதே நேத்து போயி அவன பாத்துட்டு வந்திங்கல்ல?”
“இல்ல அது,… அத்த மாமாகிட்ட பேசுனியான்னு கேக்கலாம்ன்னு.”
“பேசி?”
“பேசி… இல்ல. நான் மாமாகிட்ட பேசிட்டேன். என்னால பெருசா கல்யாணத்த மறுத்து எதுவும் பேச முடியல. அதான். சாரி.”
“நீங்க ஏன் என்கிட்ட சாரி சொல்றீங்க. நாந்தே உங்ககிட்ட சாரி கேக்கணும். எங்கம்மா சொல்றாக, எம்புருஷன் சாகும்போது அவுக மயனையும் படுக்கையில போட்டுட்டு போயிட்டாராம். அதுக்கு என்னால முடிஞ்ச நல்லது, நா அவுககளுக்கு பாரமா இல்லாம இருக்கது தானாம். அதனால “
தலைகுனிந்து அவள் பேசிக்கொண்டே போக ”பூவினி.“ என்று அதிர்ச்சியில் கத்தியிருந்தான். தலை நிமிர்ந்து அவன் கண்களைக் கண்டவளின் கண்கள் என்ன முயன்றும் வெந்நீரை அவளின் கண்ணங்களில் கோடாக இறக்கி புதுக் கோலமிட்டது.
“போதும் பூவினி விடு.”
“இல்ல. நிஜத்த சொன்னேன். அவங்களுக்கு நா பாரம்ன்னு உங்க தலைல… என்னை கட்டுவாங்களா?” என்றவளின் வேகமான கேள்வியில் அவனுக்கு மென் புன்னகை இதழ்களின் ஓரம் நெகிழ அதை ஜாக்கிரதையாய் அவனின் அடர் மீசையின் அடியில் மறைத்துக்கொண்டான்.
“சரித்தா. நீ கெடந்து பொங்காத. மகிழன் இன்னுமா தூங்குறான்? முழுச்சுக்கப் போறான். போயி அவனைப் பாரு.” என்று அவளின் கவனத்தை சின்னவனின் பக்கம் திருப்பினான்.
பூவினியின் மன அழுத்தம் இப்போது குமரனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அதை நிச்சயம் இந்தத் திருமணம் மாற்றும் என எண்ணினான்.
முருகய்யா அவனிடம் சொன்னதன் அர்த்தம் இன்னும் ஆழமாக விளங்க, அவளுக்கு இந்தத் திருமணம் அவசியம் என உறுதி செய்து கொண்டான்.
“ம்” என்றவளின் கண்கள் இன்னுமே நீரை சிந்தியபடியே இருக்க அவளின் வீடு செல்லத் திரும்பிய நேரம் “ஆத்தா, பூவினி.” என அப்பத்தாவின் குரல் கேட்டது. அப்பத்தாவின் குரல் கேட்கவும் கண்களைத் தன் இரு உள்ளங்கைகளாலும் அழுந்தத் துடைத்தவள், “என்னங்க ஆயா” என குமரனின் வீட்டிற்கு மீண்டும் திரும்பினாள்.
“இந்தாத்தா, பிள்ளையளுக்கு இம்புட்டு கசாயம் வச்சேன். கொண்டேய் குடுத்தா. சுதாவையும் ரெண்டு மடக்கு ஊதிக்க சொல்லு. மருந்துன்னா குடிக்க வலிக்கும் அவளுக்கு. இன்னைக்கு கொஞ்சம் வெயிலு ஏறவும் பேரனை இங்குட்டு தூக்கிக்கிட்டு வாத்தா. உடம்ப நல்லா நீவி புள்ளைக்கி தண்ணி ஊத்தி நாளாச்சு.“ பேசியபடியே வள்ளியமாள் ஒரு தூக்குசட்டியில் மருந்தை நீட்டினார்.
”தூக்கிட்டு வாறேன் ஆயா.“ என்றவள் வேறெதுவும் சொல்லாமல் அவனைத்தாண்டி அவளின் வீடு சென்றாள். அவள் அந்த புது வீட்டை நெருங்கும் வரையிலும் அப்பத்தாவின் பார்வையும் பேரனின் பார்வையும் அவளுலிருந்து அகலவே இல்லை.
இப்போதும் அவளைச் சுற்றிய அவனின் எண்ணங்கள் அகலாமல் இருக்க வெளிய முருகய்யா வரும் சத்தம் அவன் நினைவலைகளை அறுத்தது.
வெளியே வந்தவன் கேட்டது, “பாம்புக்கு பாலூட்டி வளத்துட்டேம் போலயே. இப்புடி மனசாட்சிய வித்தவே இனி என்னமும் செய்யிவான்.” எனும் வள்ளியம்மாளின் குரலைத்தான்.
“என்ன அப்பத்தா, என்ன ஆச்சுய்யா?”
“என்னத்த ஆகும்? காரியமில்லாம அவே உனக்கு அந்தப் புள்ளய பேசி முடிக்கல. மொத இந்தக் கலியாணத்த நிறுத்துறேன்.”
“என்னய்யா நடந்துச்சு. என்னன்னு சொல்லுங்க.”
முருகய்யாவின் பதிலைக் கேட்டவன் மனம் எரிமலை எனக் கொதித்தது.
“இனி நீங்க தலையிடாதிய அய்யா. நா பாத்துக்கிறேன்.” சொன்னவனின் தீவிரத்தில் பெரியவர்கள் ஆமோதித்தனர்.
அடுத்து என்ன எனும் கேள்வி அவன் மனத்தில் எழுந்தாலும் கோபத்தின் சூடு மட்டும் குறையவே இல்லை.
error: Content is protected !!