யுகத்தின் தலைவன் அத்தியாயம் 19
யுகத்தின் தலைவன் அத்தியாயம் 19
“கடவுளின் தேசம்” என்ற அடைமொழிக்கு ஏற்ப எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற அழகான சீதோஷ்ண நிலை. புல்களின் மீது முத்து வைத்தது போன்ற பனித்துளி.
அங்குள்ள வீடுகளில், வீட்டிற்கு ஒரு பலாமரம், மாமரம், நிறைய பூச்செடிகளை காண முடிந்தது. உண்மையில் அங்கிருப்பவர்களுக்கு அது சொர்க்கம்தான்.
தோழிகள் அந்த இடத்தை பார்த்ததும், “வாவ்! பியூட்டிபுல்!” என்றனர்.
Advertisement
“உலகத்தில் எவ்வளவோ அழகான ஊர்கள் இருக்கட்டும்…
ஆனால், ஒருவரின் பிறந்த இடமே அவருக்கு சொர்க்கம்.”
அந்த வகையில் கங்காவிற்கு அவிநாசியே சொர்க்கம்.
இதைவிட அழகான ஊர் உள்ளதா?என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.
தெரிந்து கொள்ளவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் இதைவிட ஒரு அழகிய இடத்தை ஒருவன் கங்காவிற்கு காட்டப்போகிறான் என அப்போது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அவளுக்கு அவிநாசி ஒரு ஊரல்ல, அவளின் மூச்சோடு கலந்த ஒன்று.
Advertisement
அதற்கேற்ப அவளுடைய ஊர், காவல் தெய்வமான ஆகாசராயப்பரின் அருளால் செழித்து நிற்கும் புனித நிலம்.”காசியில் வாசி, அவிநாசி” என்பர் அந்த ஊரில் வசிப்பவர்கள்.
Advertisement
ஆம், திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியிலும் மதுரையிலும் வாழ்ந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி… ஆனால் அவிநாசியின் பெயரை கேட்டாலே முக்தி என்பதே அந்த மண்ணின் பெருமை!
‘அவிநாசி’ என்றால் ‘அழிவில்லாதது’ என்று அர்த்தம். அதன் பொருள் போலவே, அந்த மண் அழிவில்லா புண்ணியத்தை தன்னுள் தாங்கி நிற்கிறது.
அங்குள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் பெருமை தமிழில் உள்ள சிறப்பான எத்தனை சொற்களை சேர்த்தாலும் சொல்ல முடியாதது.
சிவனை அடைவதற்காக அம்பாள் இரண்டாயிரம் வருடங்கள் மாமரத்தின் அடியில் கடுமையான தவம் இருந்தார்.
காலப்போக்கில் அந்த மாமரம் பாதிரி மரமாக மாறியது. அம்பாளின் தவத்தில் உருகிய சிவபெருமான், தனது வலப்பக்கத்தை அவருக்கு அருளினார்.
Advertisement
உலகின் அனைத்து சிவாலயங்களிலும் அம்பாள் சிவபெருமானுக்கு இடப் பக்கத்தில் இருப்பார்;
ஆனால் அவிநாசியில் மட்டும் அம்பாள் வலப்பக்கத்தில் இருப்பது ஒரு அற்புதம்.
மற்ற சிவாலயங்களில் எல்லாம் முதலில் சிவனுக்கு ஆராதனை நடந்த பிறகே அம்பாளுக்கு நடக்கும்.
ஆனால் அவிநாசியில் முதலில் அம்பாளுக்கு, அதன் பிறகு தான் சிவபெருமானுக்கே.
அதனால்தான் என்னவோ “அரிய பொருளே அவிநாசியப்பா” என சுந்தரர் விழித்தார்.
அந்த கோவிலின் சித்திரை மாத தேர்த்திருவிழா மிகப் பிரபலமானது.
“அழகுனா அழகு, அவிநாசி தேரழகு” எனும் சொல்லுக்கு ஏற்ப அது அசைந்து ஆடி வருவதை பார்க்க ஆயிரம் கண் இருந்தாலும் பத்தாது.
நவீன வசதிகள் வந்துவிட்டாலும், கிராமத்தின் மண்வாசனை இன்னும் மாறவில்லை. நவீன வசதிகளை கொண்ட ஒரு வளர்ந்து வரும் அழகான கிராமம்தான் அவிநாசி.
இனி கங்காவின் கேரள பயணத்தில் இணைந்து கொள்வோம்…..
முதல் நாள் சில விசிட்டிங் ப்ளேஸ், கோவில், சர்ச், பார்க், மியூசியம் என சுற்றினர். கங்காவிற்கு அங்குள்ள கொட்டை அரிசியும், மூலிகை தண்ணீரையும் ஜீரணிக்க முடியவில்லை.எப்படியோ சமாளித்தாள்.
அடுத்த நாள் அவர்கள் “வீகா லேண்ட்” சென்றனர்.வீகா லேண்ட் நுழைவு வாசல் கடந்த உடனே அவர்களின் கண்கள் விரிந்தன. எங்கு பார்த்தாலும் நீர் விளையாட்டுகள், ரோலர் கோஸ்டர்கள், நிறம் நிறைந்த கோபுரங்கள், சிறார்களின் சிரிப்பு என அது ஒரு புதிய உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றது.
தூரத்தில் இரண்டு பெரிய கண்ணாடி பெட்டியினுள் சிலர் மேலே கீழே சென்று வருவதை காண முடிந்தது. தோழிகள் அங்கே செல்ல முடிவெடுத்தனர்.
அது “ஸ்பேஸ் கண்”! அது ஒரு பெரிய விண்கலம் போல இருந்தது. எல்லோரும் ஏறி சீட் பெல்ட் போட்டுக் கொண்டனர். கங்காவும் சுமதியும் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்தனர்.
கங்காவிற்கு சீட் பெல்ட் லூசாக இருந்தது. சுமதி அங்கிருந்த ஆப்ரேட்டரிடம், “அண்ணா, இங்கே கொஞ்சம் டைட் பண்ணுங்க!” என்றாள்.
அவர் மலையாளத்தில் பேச, இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஸ்பேஸ் கண் கிளம்ப தயாராக இருந்தது. சுமதி “டேன்ஜர்!” என கத்தி நிறுத்திவிட்டாள். பின் எப்படியோ அந்த ஆப்ரேட்டருக்கு சொல்லி புரிய வைத்து, கங்காவின் சீட் பெல்டை ரெடி செய்த பிறகு அவர்களின் ஸ்பேஸ் கண் பயணம் தொடங்கியது.
வானத்தை நோக்கி உயர்ந்து, ஒரு நிமிடம் நின்று, திடீரென்று கீழே விழுந்த போது, அங்கிருந்த தென்னை மரங்கள் எல்லாம் தலைகீழாக தெரிந்தது.
அந்த சில விநாடிகள், கங்காவுக்கு மூச்சே நின்றது.அவள் சத்தமாக கத்தினாள்.
சுமதியும் அவளும் ஒருவர் கையை இன்னொருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அவர்களது அந்த ஸ்பேஸ் கண் பயணம் காலத்தால், அழியாத நினைவுகளாக சேமிக்கப்பட்டது.
நீர்வழி சறுக்குகளில் வழிந்தாடும் சிறுமிகளைப் பார்த்ததும்,அவர்களும் சிறுமிகளாய் மாறி விளையாடினர்.
நேரம் ஆகிவிட்டது என ஆசிரியை அழைத்தார். அந்த வீகா லேண்டை பிரிய மனமில்லாமல் அனைவரும் வந்தனர்.
நேத்ரா என்ற பெண் மட்டும் காமிரா கொண்டு வந்து எல்லோரையும் படம் பிடித்தாள்.சுமதியும் கங்காவும் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து படம் பிடித்துக் கொண்டனர்.
ஊர் திரும்பியதும் இரண்டு நாட்களில் அதை பிரிண்ட் போட்டு இருவரும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டனர்.
அங்கிருந்த சீதோஷ்ண நிலை கங்காவிற்கு சேராமல் உடல் நிலை சரியில்லாமல் போனது.
சிவராமன் “இதுக்குதான் கங்கா உன்னை நான் எங்கையும் அனுப்பறது இல்ல!” என குறைபட்டு கொண்டார்.மூன்று வேலையும் கசப்பான மாத்திரையை விழுங்க மகளை வற்புறுத்தினார்.
அப்பாவிற்கு, டீச்சர்களே தேவலே! என மெல்ல மெல்ல தேறி, ஸ்கூலிற்கு கிளம்பி விட்டாள். அவர்கள் பள்ளியில் ப்ரேயர் எப்போதும் மொட்டை வெயிலில்தான் நடக்கும். தலைமை ஆசிரியை உரையாற்றிக் கொண்டிருந்தார்.
கங்காவிற்கு ஒரே கடுப்பு,வெயிலில் நிற்க. அருகில் இருந்த ஷீலாவை அழைத்து, “ஷீலா, நீ மயக்கம் போட்டு விழுகிற மாதிரி நடி. நான் உன்னை தாங்கி பிடிச்சு கூட்டிட்டு போறேன். ரெண்டு பேரும் கிளாஸ்க்கு போயிரலாம் டி,” என அவள் சொன்னது,
தலைமை ஆசிரியருக்கு கேட்டதோ என்னவோ,அவர் எல்லாரையும் அமரச் சொல்லிவிட்டார்.
தன் எதிரே இருந்த மாணவிகளை நோக்கி, “மை டியர் சில்ட்ரன்ஸ், நமது பள்ளி நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக பெண் கல்வியில் சிறந்து விளங்குகிறது. அதற்கு காரணம், இதோ உங்கள் பின்னால் நிற்கும் ஆசிரியைகளும், அவர்களுக்கு கீழ்படிந்து நடக்கும் நீங்களும்தான்.
படிப்பை விட ஒழுக்கம்தான் முக்கியம்.
நீங்கள் நல்ல பெயர் எடுப்பது ரொம்ப சுலபம்; ஆனால் ஒரு முறை கெட்ட பெயர் வாங்கி விட்டால், திரும்ப நல்ல பெயர் வாங்குவது கடினம்,” என தனது உரையை மேலும் தொடர்ந்தார்.
அப்போது கங்காவிற்காகத்தான் அவர் சொல்கிறார் என அவளுக்கு புரியவில்லை.இது எப்பவும் கேட்கறது தானே என,மண்ணில், “சரவணன் மீனாட்சி பாத்தியா?” என தன் தோழி சுவாதியிடம் எழுதி கேட்க, அவளும் “ஆமா! சூப்பர் எபிசோட்!” என பதிலுக்கு எழுதி காட்டினாள்.
அதை கவனித்த மூபினா, பிஇடி யிடம் போட்டு கொடுத்து விட்டாள். அப்புறம் என்ன? ப்ரேயர் முடிந்ததும் ஐந்து ரவுண்டு ஓடவிட்டு விட்டார்!
ஏற்கனவே நஸ்ரின் மீது கோபத்தில் இருந்த கங்கா, இவளும் இப்படி போட்டு கொடுக்க, ப்ரேக்கில் இருவரின் சைக்கிளையும் காம்பஸ் வைத்து பஞ்சர் ஆக்கிவிட்டாள்.
மாலையில் அவர்கள் இருவரும் சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வதை பார்க்க, ஆனந்தமாக இருந்தது கங்காவிற்கு.
நல்ல வேலை, கங்கா படிக்கும் போது சிசிடிவி வசதியெல்லாம் அவள் பள்ளியில் வளர்ச்சி அடைய வில்லை.
இல்லையென்றால், அவள் செய்யும் திருட்டுத்தனங்களுக்கு நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியும் கிரவுண்டில் பனிஷ்மென்ட் வாங்கி ஓடிக் கொண்டிருப்பாள்!
ஒரு கண்ணாடியை உடைத்து அதை ஒட்ட வைத்தால், எப்படி ஆயிரம் விரிசல்கள் தெரியுமோ, அப்படிதான் உறவும். ஒருமுறை மனது வெறுத்துவிட்டால், மீண்டும் பழைய நிலையை அடைய முடியாது.
என்னதான் கங்காவும் சுமதியும் பேசி சிரித்துக் கொண்டாலும்,முன்பு இருந்த ஒட்டுதல் இப்போது இல்லை.
பள்ளியின் கடைசி இரண்டு மாதங்கள்.
ஃபேர்வெல் பார்ட்டிக்கு ஜூனியர்கள் அரேஞ் செய்திருந்தார்கள்.
சுமதி, “கங்கா என்னிடம் பேச மாட்டாள். ஃபேர்வெல்க்கு போக மாட்டேன்,” என வீட்டில் ஒரே அழுகை. கங்காவின் பெரியம்மா பெண் வேணி அவளை சமாதானப்படுத்தி, தனது மாம்பழ வண்ண சேலையை கட்டி அனுப்பி வைத்தார்.
கங்கா அவள் சித்தியின் பிங்க் கலர் சேலை அணிந்து கொண்டாள்.
முதன்முதலில் பள்ளிக்கு சேலை அணிந்து செல்கிறார்கள்.
தோழிகள் அனைவரும் ஒருவரையொருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டனர்.
கங்கா எல்லாரிடமும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டாள். தனியே ஒரு போட்டோ எடுக்க அவளுக்கு விருப்பம்.
மாமரத்தின் அருகில் நின்று போட்டோ எடுக்க, ஆறாவது படிக்கும் மூன்று பிள்ளைகள் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வந்து, “அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!” என சொல்லிச் சென்றனர். கங்காவிற்கு வெட்கம் கலந்த புன்னகை.
எல்லோரும் ஃபீட்பேக்கை நோட்டில் எழுதி பரிமாறிக் கொண்டனர்.
கங்காவிற்கு எல்லோரும் எழுதி கொடுத்துவிட்டனர். கடைசியாக தான் சுமதியிடம் கொடுத்தாள். அவள் மூன்று நாட்கள் கழித்தே அந்த நோட்டை கங்காவிடம் கொடுத்தாள்.
அப்படி அவள் என்ன எழுதியிருக்கிறாள்? என ஆவலாக பிரித்து படித்தாள்.
பதினாறு பக்கங்கள்!
சுமதியின் கண்ணீர் துளிகளுடன் அவர்களின் நட்பின் ஆழத்தை தாங்கி நின்றது அந்த நோட்டு.
“கங்கா, நாம ரெண்டு பேரும் ரிலேசன் என்பதையும் தாண்டி நல்ல ப்ரெண்ஸா இருந்தோம்.நம்ம கூட படிக்கற கேர்ள்ஸ் எல்லாம் ட்வெல்த் வந்ததும் பிரிஞ்சுருவோனு அழுதாங்க.ஆனா எனக்கு அப்போ அழுகையே வரல.
நானும் நீயும் ரிலேசன் தானே பிரியவே மாட்டோம்னு நினைச்சேன்.ஆனா இப்ப எனக்கு நாம்ம பிரிஞ்சுருவோனு பயமா இருக்கு…
நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்த டேஸ் எவ்வளோ ஹாப்பியா இருந்துச்சு. நாம வீட்டுக்கு தெரியாமா பர்ஸ்ட் டைம் பஸ்சிலே தனியா போனது, பக்கத்து தோட்டத்துல திருட்டு மாங்கா அடிச்சு சாப்பிட்டது…இப்படி நிறைய சொல்லிட்டே போலாம்.
ஆனா இப்ப நம்ம ப்ரெண்ட்ஷிப்க்கு என்ன ஆச்சு கங்கா?இது அவங்க சண்டையினால வந்த பிரிவானு எனக்கு தெரிலே…ஆன இதுவும் ஒரு வகையிலே நல்லதுதான்.
நமக்கு இப்போ நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க, ஆனாலும் உன்கூட இருந்த அப்பதா நான் ஹாப்பியா இருந்தே. எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணு.எங்க அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போயிருவாங்க. என்னோட ஃபீலிங்க்ஸ் எல்லா கேட்க, அவங்களுக்கு நேரம் இருக்காது.நான் உங்கிட்ட மட்டுதா எல்லா சேர் பண்ணுவே.
