Skip to content
Post Views: 2,907
*8*
“எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டு தான போனோம். அங்க வந்து உடனே சொல்லனுமான்னு கேக்குற? கவிதா முகத்தை பாக்க முடியல, சங்கடமா போச்சு. நம்பிக்கையா பேசிட்டு இவ்ளோ தூரம் மெனெக்கெட்டு போய் பார்த்ததுக்கு அவங்க முகத்தை பாக்க முடியாதபடி பண்ணிட்ட.” அத்தனை நேர பிரயாணம் முடித்து வீட்டிற்கும் வந்ததும் மகனை பிடித்துக்கொண்டார் கந்தசாமி.
“என்ன பேசி முடிவு பண்ணிட்டு போனோமா? பொண்ணு பாக்க போகணும்னு நீங்களே பேசுனீங்க, முடிவு பண்ணீங்க, என் தங்கச்சிகிட்ட வாக்கு கொடுத்துட்டேன்னு முகிலு மண்டையை கழுவுனீங்க. நான் வேண்டாம்னு சொன்னதை காதுல வாங்காம சும்மா பாத்துட்டு வந்துடலாம்னு விவரத்தை முழுசா சொல்லாம கூட்டிட்டு போனீங்க. அங்க போனால்ல தெரியுது அந்த பொண்ணு அங்கேயே வேலை பாக்குமாம், அம்மாக்கு ஒத்தாசையா இருக்கமாம். இன்னும் என்னலாம் வரப்போகுதோ. முத பொண்ணு இருக்கையிலே எதுக்கு மத்த ரெண்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணாங்கன்னு தெரியல, அதுல என்ன உள்குத்து இருக்கோ.” என்று சண்டை பிடித்தார் மாரியம்மாளும்.
“அதுதான் கவிதா எல்லாம் விவரமா சொல்லுச்சுல. அப்பா இல்லாத பொண்ணுங்க தானா முன்னுக்கு வந்திருக்கு. எடுத்து செய்ய ஆள் இல்லாம சந்தர்ப்ப சூழ்நிலையில இந்த பொண்ணு இப்படியே நின்னுடுச்சு.
Advertisement
இவ்ளோ வாய் பேசுறியே உன்னால உருப்படியா ஒரு பொண்ணை முகிலுக்கு பேசி முடிக்க முடிஞ்சுதா? அவனுக்கு முப்பது முடியுற வரைக்கும் ஆடாத ஆட்டம் ஆடி பொண்ணு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு தட்டிக் கழிச்ச. சரி புள்ளை மனசு வள்ளி பக்கம் போகுதேன்னு அங்க போனா அவங்க வேண்டாங்குறாங்க. அப்படியே ஏதாச்சு நமக்கு சரின்னு வருதுனாலும் அந்தப்பக்கம் ஜாதகம் ஒத்துப்போகலைனு சொல்றாங்க இல்லையா இவனுக்கு வயசு அதிகம்னு சொல்றாங்க இன்னும் சிலர் அதிக சம்பளம் உள்ள வரனை எதிர்பாக்குறாங்க. நமக்கு நம்ம புள்ளை உசத்தி தான், அதுக்காக எல்லாருக்கும் உசத்தியா இருக்கணும்னு நினைச்சா முடியுமா? இன்னும் விட்டா வயசு தான் ஏறும்…” என்று தன் வாதத்தில் நின்றார் கந்தசாமியும்.
“அதுக்குன்னு…”
“இந்தா நிறுத்து மாரி. ஒரு வருஷம் முன்னாடியே இந்த பொண்ணு போட்டோ காமிச்சப்போ நீயே பாக்க நல்லாயிருக்குனு தான் சொன்ன. வயசுதான் ஒண்ணா போச்சு என்ன இப்போ… அவங்க நல்லா இருந்தா போதாதா?”
Advertisement
பெற்றவர்கள் வாதத்தை வேடிக்கையாக பார்த்து அமர்ந்திருந்தான் முகிலன்.
Advertisement
“ஒரே வயசுன்னு அம்புட்டு சுலபமா சொல்றீங்க. இப்போவே முப்பத்தி ரெண்டு ஆகும், இதுக்கு மேல குழந்தை தங்குமா? சிறு வயசா இருக்குற அந்த பொண்ணோட தங்கச்சிக்கே இன்னும் குழந்தை இல்லையாமே. அப்போ இவளுக்கு மட்டும் எப்படி நிக்குங்குறேன். நானே ஒத்த மவனை வச்சிருக்கேன். அவன் புள்ளையை தூக்கி கொஞ்ச வேண்டாமா?”
“எவடி இவ… வள்ளி பொறக்கும் போது என் தங்கச்சிக்கு என்ன வயசு? முப்பத்தஞ்சி இருக்கும். பொறக்கணும்னு இருந்தா எந்த வயசுல வேணும்னாலும் புள்ளை தங்கிடும்.”
“முகிலை விட மூணு மடங்கு அதிகம் சம்பளம் வாங்குது, நம்ம புள்ளையை மதிக்குமா?”
Advertisement
“தன் குடும்பத்தையே தாங்கியிருக்குற பொண்ணு நம்ம முகிலையும் கடைசி வரைக்கும் தாங்கிப் பிடிக்கும்னு புரியலையா உனக்கு.”
“எல்லாம் பொம்பளை புள்ளைங்களா இருக்கு, அதுவும் இந்த பொண்ணு மூத்ததுன்னு எல்லாம் செஞ்சிருக்கு. நாளைக்கு எல்லாம் முகில் தலையில தான் எல்லாம் விழும். அவன்தான் பாக்குற மாதிரி இருக்கும். அப்படி என் புள்ளையை தூக்கி கொடுக்கவா இப்படி வளத்து விட்டிருக்கேன். என்னால ஒத்துக்க முடியாது, இந்த பொண்ணு வேண்டாம்.”
“நீ இப்படியே பேசிட்டு இரு. கடைசி வரைக்கும் அவன் ஒண்டிக்கட்டையா தான் கிடப்பான்.”
குழலி வேண்டாம் என்று மாரியாம்மாள் காரணங்கள் அடுக்கி மறுக்க, அனைத்திற்கும் பதில் வைத்திருந்த கந்தசாமி ஒருகட்டத்தில் விட்டால் பேசிக்கொண்டே தான் இருப்பார் என்று தலையசைத்து நகர்ந்தார். செல்லும் முன் மகனிடம் வெளியே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.
“பதில் சொல்ல முடியாம போறத பாரு. இங்க பாரு முகிலு, இந்த பொண்ணு உனக்கு வேண்டாம். நாளைக்கு எதுனாலும் உனக்கு தோள் கொடுக்க மாமனார் மச்சான்னு ஒருத்தரும் அங்க இல்லை. நீதான் எல்லாத்தையும் பாக்கணும். நீயும் உன் அப்பா மாதிரி ஆகிடாத. மனுஷன் உன் மனசை கலைக்கத்தான் கூப்பிடுறாரு மசிஞ்சிடாத. ஊரு உலகத்துல இந்த பொண்ணு மட்டும்தான் இருக்கா வேற யாரும் இல்லை பாரு. நீ கவலைப்படாத என்னை மீறி உன் அப்பா இந்த சம்மந்தத்தை முடிச்சிட முடியாது.” என்று மகனுக்கு தூபம் போட்டார்.
“இவ்ளோ யோசிக்காத நீ. ரிலாக்ஸா இரு. செத்த நேரம் தூங்கி எழு.” என்ற முகிலன்,
“டீ போடப்போறேன் உனக்கு வேணுமா?” என்று கேட்டுக்கொண்டே சமையலறை செல்ல, அவன் நடவடிக்கை வைத்து மாரியம்மாவால் அவன் முடிவை கணிக்க முடியவில்லை.
“ம்மா?”
“நான் போடுறேன். நீ கால நீட்டி உக்காரு.” என்று பின்னோடு சென்றார்.
“அதெல்லாம் வேணாம். நீ டீ குடிச்சிட்டு செத்த கண்ணசரு. அப்பாவையும் வர சொல்றேன். இவ்ளோ நேரம் அலைஞ்சிட்டு வந்த உடனேயே கிளம்பிட்டாரு.” என்றவன் பேச்சு தாயிடம் இருந்தாலும் கை மணக்க மணக்க டீ போட்டது.
“நான் சொன்னதை மனசுல வச்சிக்க முகிலு.” என்று மாரியம்மாள் மீண்டும் மகனை கரைக்கப் பார்க்க அவன் கண்டுகொண்டது போல் காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாய் டீயை குடித்துவிட்டு தந்தையை அழைத்து வருகிறேன் என்று சென்றுவிட்டான்.
‘அப்பாவும் புள்ளையும் சரியில்லையே.’ என்று புலம்பத்தான் முடிந்தது மாரியால்.
வீட்டிலிருந்து கிளம்பியவன் நேரே தங்களின் வயலுக்கு செல்ல, அங்குதான் இருந்தார் கந்தசாமி. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையிலேயே இவனை நோக்கி வந்தவர், “உனக்கென்னடா உன் அம்மா கிறுக்கு புடிச்சு ஆட்டுதா? நடைவுடையா இன்னும் ஒரு பத்து வருஷம் இருந்து உன்னை பாப்போமா? அதுக்கப்புறம் என்ன பண்றதா உத்தேசம்? அவ வாழ்ந்து முடிச்சிட்டா அதனால சுலபமா கூடப்பிறந்தவங்க வேண்டாம் சொந்தபந்த வேண்டாம்னு எல்லாரையும் ஒதுக்குறா. கல்யாணத்தை தள்ளிப் போட்டு எல்லாத்தையும் ஒதுக்கி நீ என்ன பண்ணலாம்னு இருக்க?”
“யாரை ஒதுக்குனேன் இப்போ? எல்லார்கிட்டயும் பேசிட்டுதான் இருக்கேன்.” என்றான் முகிலனும்.
“ஹான் நல்லா பேசுற. உன் அம்மாவுக்கு புடிக்கலைனு புடிச்ச புள்ளையையே வேண்டாம்னவன் தான நீ?” என்று குற்றம்சாட்டுவது போல் பேச, சிலிர்த்துக்கொண்டு நின்றான் முகிலன்.
“நான் வேண்டாம்னேனா? எங்க என்னை பாத்து சொல்லுங்க. உங்க கூட பொறந்தவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துக்கிட்டு என்னை ஒரேடியா வேண்டாம்னா நான் என்ன பண்ண முடியும்?”
“உன்னால என்ன முடியும்னு நீ காட்டியிருக்கணும். உன்னால சமாளிக்க முடியல அதை ஒத்துக்க.” என்று மகனை குத்திக்காட்ட முகம் திருப்பினான் முகிலன்.
“போனதை விடு. வர்றதை கெட்டியா புடிச்சிக்க. இதுக்கு மேல நல்ல பொண்ணா யாரு கிடைப்பா?”
“ப்ச்…”
“இன்னமும் வள்ளியை மனசுல வச்சிட்டு இருந்தா தப்பு முகிலு.” என்று தன்மையாக சொல்ல, முகிலனின் முகம் கசங்கியது.
“ப்ச் ப்பா…”
“கல்யாணம் பண்ணிப் பாரு வீட்டை கட்டிப்பாருனு சும்மா சொல்லல. உனக்கு ரெண்டுமே தடை ஆகிட்டு இருக்கு. இப்படியே போச்சுன்னா ஒருகட்டத்துல வாழ்க்கை சலிச்சிடும்.”
“…” பதில் சொல்லாமல் பார்வையை அலையவிட்டவன் மனதும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவர் சொல்வது போல் எதற்காக இப்படி ஓடுகிறோம் என்று ஆர்வம் குறைந்து சலிப்பு இருக்கத்தானே செய்கிறது. அதன் பொருட்டு தானே பெண் பார்க்க போகலாம் என்று தந்தை அழைத்ததும் கிளம்பியது. எப்படியும் யாரையாவது திருமணம் செய்யத்தான் போகிறோம் அது பெற்றவர்கள் காண்பித்தவளாக இருக்கட்டும் என்று புதிதாக மனதில் வேறு எண்ணங்கள் வளர்த்துக்கொள்ளவில்லை.
“உன் அம்மாவோட ஆளுமை அந்த பொண்ணுகிட்ட இருக்கு.” என்றவரை இடைமறித்தவன்,
“இப்போ இவ்ளோ பேசுற நீ அன்னைக்கு அத்தைகிட்ட எனக்காக பேசுனியா?”
“உன் அம்மாவை காரணம் காட்டும் போது நான் என்ன பேசமுடியும்? அப்படியே சமாதானமா பேசுனாலும் உன் அம்மாவை விட்டுக்கொடுத்ததா ஆகிடும். வள்ளிக்கும் அவளுக்கும் ஒத்தே போகாது. என்னவும் இருக்கட்டும் மாரி தான் என் குடும்பத்தை தாங்குனா. எனக்கு தேவைபட்டப்போ தோள் கொடுத்தா. ஏதோ மனக்குறையில இப்போ இப்படி ஆகிட்டாங்குறத்துக்காக அவளை ஒதுக்க முடியாது என்னால. பெத்தவங்க, கூடப்பொறந்தவங்க, ஏன் நீயே உனக்கொரு வாழ்க்கைனு தேடிகிட்டு போற நிலைமை வரும் ஆனா கடைசி வரைக்கும் எனக்குன்னு இருக்கப் போறது அவதான். அதேதான் உனக்கும். இன்னும் ஒரு பத்து பதினைஞ்சி வருஷம் நாங்க இருப்போம் மீதி காலம் எல்லாம் உனக்கு துணையா வரப்போற பொண்ணு தான் இருக்கும். அதை யோசிச்சு முடிவு பண்ணு.”
“ப்ச்… இவ்வளவு தெளிவா பேசுறவரு எதுக்கு சென்னைல போய் பொண்ணு பாத்து வச்சிருக்கியாம்? அந்த பொண்ணு அங்கதான் என் வேலையெல்லாம் இருக்குனு எடுத்ததும் சொல்லுது. உங்களை இங்க விட்டுட்டு எப்படி?”
“நீ கேக்குற மாதிரி இங்கேயே பாத்து உன் அம்மாவையும் அந்த பொண்ணையும் மோத விட்டு வேடிக்கை பாக்க சொல்றியா? ஒரு இடத்துல ரெண்டு அதிகாரம் செல்லுபடியாகாது. நல்லா இருக்குற வரை நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துக்குறோம். முடியாத காலத்துல உன்கூட இல்லாம எங்க போயிடப் போறோம்? தூரமா இருந்தா பாசம் இல்லைனு ஆகிடுமா… கொஞ்சம் தள்ளி இருந்தாதான் உனக்கும் உன் அம்மாவுக்கும் வெளி உலகம் புரியும். சும்மா ஒட்டிக்கிட்டே திரிஞ்சி உன் வாழ்க்கையை கெடுத்துக்காத.”
“அதுக்கு? என்னை சென்னை போக சொல்றீங்களா?”
“நான் போக சொல்லல. அந்த பொண்ணு உனக்கு சரி வரும்னு தோணுச்சுனா நீயே போவ. அப்புறம் உன் இஷ்டம்.” என்று சொல்லியவர் அவனையே உற்று நோக்க,
“எதுலையுமே செட் ஆகும்னு தோணல.”
“பாத்த உடனே எல்லாம் ஒத்துப்போகாது. நமக்கு புடிச்சா நாமதான் ஒத்துப்போற மாதிரி மாறிக்கனும்.” அனுபவம் வாய்ந்தவர் என்று கந்தசாமி பேச்சில் நிரூபிக்க,
“அம்மாக்கு புடிக்கல.” என்றான் சோர்வாய்.
“அடபோடா இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருந்தேன்? நீ வாழ போறியா உன் அம்மா வாழப்போறாளா? உனக்கு புடிக்கலைனு சொல்லு நான் வேற பாக்குறேன்.”
“கல்யாணம்னா எல்லாம் என்னோட மட்டும் முடிஞ்சுதா? நீங்களாம் அதுல அடங்கலையா? அம்மாக்கு ஒத்துவராதுனு தான் வள்ளி வேண்டாம்னு சொன்னீங்க. இப்போ பொண்ணு மாறினாலும் வேற என்ன மாறிப்போச்சு?” என்றவனுக்கு குழலி மீது பிடித்தமின்மை என்று எதுவுமில்லை. நடைமுறை சிக்கல்களை மட்டும் யோசித்தான்.
“வள்ளிக்கும் உனக்கும் பத்து வயசுக்கு மேல வித்தியாசம். ஆனா இந்த பொண்ணுக்கும் உனக்கும் ஒரே வயசு, சொல்லப்போனா உன்னைவிட அனுபவமும் முதிர்ச்சியும் இந்த பொண்ணுகிட்ட அதிகம் இருக்கு. உன் அம்மாவை சுலபமா சமாளிச்சிடும். எல்லா விதத்திலேயும் உனக்கு ஏத்த பொண்ணு இது.” என்று அனைத்து வழியிலும் மகனை இறுக்கிப்பிடித்தார் கந்தசாமி.
தலையை இடவலமாய் அசைத்து, இடுப்பில் கைவைத்து அண்ணாந்து பார்த்தான் முகிலன்.
மனதில் குழப்பம் அதிகரிக்கும் சமயம் கவனத்தை சிதறச் செய்யும் விஷயங்களை தவிர்த்து வெட்டவெளியில் நின்று பரந்து விரிந்த வானத்தை பார்வை வட்டத்திற்குள் கொண்டு வந்தால் அந்த அண்டசராசரம் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் பொக்கிஷங்களில் மனது தொலைந்து தெளிந்துவிடுமாம். சில நொடிகள் பார்த்தவனுக்கு அப்படித்தான் ஆனது.
“யோசிச்சு சீக்கிரம் முடிவை சொல்லு. இப்போ கிளம்பலாம்.” என்று கந்தசாமி அவனை தாண்டிக்கொண்டு செல்ல, பின்னூடே முகிலனும் நடந்தான்.
மனதிற்குள் அவள் தங்கை வந்து அழைத்து செல்லவும் குழலி திரும்பி திரும்பி அவனை பார்த்துச் சென்றது படமாய் விரிந்தது. அறிவிப்பின்றி வள்ளி பார்த்த பார்வையும் வந்து போக தலையை உலுக்கியவன், “சம்மதம்னு சொல்லிடு ப்பா. ஆனா சென்னைக்கு போறதெல்லாம் உடனே நடக்குமான்னு தெரியல.” என்று சொன்னதுதான் தாமதம் மனதிற்குள் அவன் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று திட்டமே போட்டுவிட்டார் கந்தசாமி.
“சம்மதம் சொல்லிட்டீல்ல. இனி எல்லாம் என் பொறுப்பு. அந்த பொண்ணு வீட்ல வச்ச ஒரே கண்டிஷன் சென்னைல இருக்கணும்னு தான். அதை மட்டும் பாத்துக்கோ மத்தது எல்லாம் என் மருமவ பாத்துக்கும்.” என்றவர் குரலில் மகனின் வாழ்க்கை செம்மையாகிவிடும் என்ற திருப்தி தெரிந்தது.
“அம்மாக்கு புடிக்காம எப்படி ப்பா? கொஞ்சம் யோசனையா இருக்கு.” வண்டியை எடுத்தவன் மிச்சம் ஒட்டிக்கொண்டிருந்த சந்தேகத்துடனே தந்தையைப் பார்த்தான்.
கனவுக்கோட்டை தகர்ந்தது போல் எரிச்சலுற்றவர், “இப்படி குழப்பத்தோட நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம். உன் அம்மா அவளுக்கு ஒத்து ஊதுற மாதிரி ஒரு பொண்ணை உருவாக்கி கொண்டுவந்து நிறுத்துவா. நீ அவளையே கல்யாணம் பண்ணிக்க. அப்போ வயசு அம்பது அறுவது ஆகிடுச்சுனு புலம்ப கூடாது சொல்லிட்டேன். உன் செட்டுக்காரங்க எல்லாம் பேரப்புள்ளைங்க எடுத்துடுவாங்க.”
இந்த பெண்ணை விட்டால் உனக்கு இப்போதைக்கு திருமணம் நடக்காது. இப்போது உள்ள பெண்கள் படித்து தங்கள் காலில் சுயமாய் நிற்கிறார்கள். உன் அம்மா எதிர்பார்ப்பது போல் அடங்கி செல்லும் பெண்ணெல்லாம் அமைவது சாத்தியமே இல்லை என்று இன்னும் சிலவற்றை மிகைப்படுத்திக் கூற, முகிலன் கொஞ்சம் பீதியானது என்னமோ உண்மை. விளைவு மறுநாளே சம்மதம் என்றான். பின்வாங்கக்கூடாது, உறுதியாக கூறு, இது பெண்ணின் வாழ்க்கை என்று கந்தசாமி எல்லா விதத்திலும் கேட்டு உறுதி செய்துகொண்டார். விஷயம் அறிந்து மாரியம்மாள் பொங்கிவிட்டார்.
error: Content is protected !!