Skip to content
Post Views: 2,791
“எனக்கு இஷ்டம் இல்லைனு தெரிஞ்சும் சரி சொல்லியிருக்கேன்னா உனக்கும் நான் யாரோ தானா? நீயும் என்னை மதிக்கலைல?” மகனிடம் அழுதுப் பார்த்தார்.
“நான் ஒருவிஷயம் இஷ்டப்பட்டேன் உனக்கு புடிக்கலைங்கவும் அதை நான் ஏத்துக்கிட்டேன்ல. இந்த டைம் அப்பா சொல்றாரு கேட்டுப்பாக்கலாம் ம்மா.”
“முகிலு…”
“என்னை வேணாம்னு சொல்ல மத்தவங்க மாதிரி அவங்களுக்கு ஆயிரம் காரணம் இருந்தும் சொல்லல அப்படி நமக்கு ஒன்னு கூட இல்லாம ஏன் சொல்லணும்?”
Advertisement
“ஒன்னு கூட இல்லையா? வயசு, வேலை, கூடப்பொறந்தவங்க எதுவுமே ஒத்துவரல.” என்று அவருக்கு தோதான காரணங்களை அடுக்க, அவனும் யோசித்துப் பார்த்தான். வயதைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு சுணக்கமாக தெரியவில்லை. அதுவும் கூட தந்தையின் பேச்சில் இவள் தான் தனக்கு பொருத்தமானவள் என்று ஏற்றுக்கொண்டது மனது. காரணம் இத்தனை வருடத்தில் பெற்றவர்கள் கொண்டு வந்த வரன் என்று இதுதான் முதல்முறை பெண்பார்க்கும் வரை சென்றிருக்கிறது. வள்ளி உடன் வளர்ந்தவள் என்பதை தாண்டி அவன் ஒரு பெண்ணை வேறு கோணத்தில் பார்ப்பதும் இவளாகிப்போக பின்வாங்கவில்லை அவன். மாரியம்மாள் பேச்சை இந்த காதில் வாங்கி அந்தக்காதில் விட்டான்.
கவிதாவிடம் பேசிவிட்டு வந்த கந்தசாமி, “ரொம்ப தள்ளி போட வேண்டாம். தைல கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்லுது கவிதா. நீ என்னடா சொல்ற?” என்று மகனிடம் கேட்டார்.
“இன்னும் ஒரு மாசம் தான இருக்கு?” திடுக்கிட்டான் முகிலன்.
Advertisement
“தையே ரொம்ப நல்ல மாசம். என்ன தொடங்குனாலும் நல்லாயிருக்கும். அறுவடை முடிஞ்சி வச்சிக்கலாம்டா.” என்று கந்தசாமி முடிவாக சொல்ல தயக்கம் முகிலனிடம். திருமணத்திற்கு சம்மதம் என்றானே ஒழிய வேலையை சென்னைக்கு மாற்றிக்கொள்வது பற்றியெல்லாம் பெரிதாக சிந்திக்கவில்லை. ஊரிலேயே இருக்க முடியுமா என்று ஒருமுறை அவளிடம் பேசிப்பார்ப்போமா என்று கூட யோசனை ஓடியது. அதற்குள் இப்படி சொல்ல,
Advertisement
“வேலை பத்தி நான் இன்னும் யோசிக்கல அப்பா.”
“அதெல்லாம் பாத்துக்கலாம் முகிலு. நல்ல நாள் போனா திரும்ப வராது. இதுதான்னு முடிவானதுக்கு அப்புறம் ஏன் தள்ளி போடணும்? ரெண்டு பேருக்கும் வயசு ஏறிட்டே போகுது.”
அரைமனதாக சரியென்ற முகிலன் கந்தசாமி அலைபேசியிலிருந்த குழலியின் புகைப்படம் மற்றும் தகவல்களை தனக்கு அனுப்பிக்கொண்டான்.
Advertisement
“தைல பண்ணிடலாம்ல மாரி? அமைதியாவே இருக்க?” மனைவியின் மனம் புரிந்தாலும் அவரிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை கந்தசாமியால். என்னதான் பிடித்தமில்லை என்றாலும் மகனுக்கு நல்லது நடக்கும் போது கசடின்றி முழுமனதோடு செய்துவைக்க வேண்டும் என்று முந்தைய தினம் பாடம் எடுக்காத குறையாக பேசி கொஞ்சம் கரைத்திருந்தார். இப்படி முகம் தூக்கி குறையாய் அடுக்கினால் நம் மகன் வாழ்வு தான் செழிக்காது என்று ஏதேதோ பேசி அமைதியாக்கி வைத்திருக்கிறார்.
அப்பாவும் மகனும் தங்களுக்குள்ளாவே பேசி முடிவு செய்துவிட்டு தன்னிடம் ஒப்புக்கு கேட்கிறார்கள் என்று மனதிற்குள் பொறுமியவர், “எல்லாம் முடிவு பண்ணிட்டு என்னை ஏன் கேக்குறீங்க?” என்று கழுத்தை வெட்டினார்.
“பெத்தவ நீதான. உன்னை கேட்காம? நீதான் சம்பிரதாயம் எல்லாம் பாத்து நின்னு செய்யணும். மாமியார்டி நீ. அதோட வள்ளிக்கு அப்புறம் இந்த பொண்ணை புடிச்சிருக்குனு சொல்றான் திரும்ப அவன் மனசை காயப்படுத்த போறியா?” என்று கந்தசாமி அவரை உசுப்ப, முகம் திருப்பினார் மாரியம்மாள்.
“புடவை எடுக்கணும் நகை போடணும். எல்லாம் உனக்கு தான தெரியும்.” என்று மேலும் பேசி இறுக்கத்தை குறைத்தார். முகம் தூக்கினாலும் என்னென்ன செய்ய வேண்டும் என்று மாரியம்மாள் சொல்ல சொல்ல கந்தசாமி பெண் வீட்டில் பேச ஏதுவாய் குறித்துக்கொண்டார்.
அலைபேசியில் இருந்த குழலியின் புகைப்படத்தை பெரிதுபடுத்தியும் அங்குமிங்கும் நகர்த்தியும் என அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன். அரக்கு நிறப் புடவையொன்றில் அதிக ஒப்பனையின்றி மையிட்ட விழிகள் எதிர் இருப்பவர்களை தாக்கும் கூர்மையோடு ஒரு பார்வை பார்த்து நின்றாள்.
அவன் மனம் முதன்முதலில் அவளை சந்தித்த நாளுக்கு சென்றது. சரியாக நினைவில்லை என்றாலும் மங்கலாக நினைவுக்கு வந்தது. தங்களின் வண்டி இடித்து கீழே விழுந்தவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை. குறைந்தபட்சம் தங்களை திட்டுவாள் என்று எதிர்பார்க்க அவளோ இலகுவாக கையாண்டது நினைவு வந்தது.
‘அப்பா சொல்ற மாதிரி எல்லாத்தையும் சமாளிச்சிடுவியோ? வேண்டாம்னு சொல்லப்போறீங்களானு கேட்டியே உனக்கும் பெருசா இன்ட்ரஸ்ட் இல்லையோ? ஃபர்ஸ்ட் எங்க பாத்தோம்னு கூட கேக்கலையே.’ என்று அலைபேசியில் இருந்தவளிடம் உரையாடல் நடத்தினான். இதெல்லாம் நேரில் கேட்க வேண்டிய கேள்விகள் என்று யார் அவனுக்குச் சொல்வது?
“ம்மா விட்டா சந்தியா மாமியார் கல்யாணம் நடத்திட்டுதான் ஓய்வங்க போலிருக்கு. அவசரப்பட வேண்டாம்னு சொல்லுமா.” பிரபாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் குழலி.
“அப்படியாச்சும் உனக்கு நல்லது நடக்கட்டும்டி.”
“ம்மா நான் இன்னும் பேசணும். முக்கியமானது எதுவும் பேசுறதுக்கு முன்னாடியே கூப்பிட்டிங்க.” என்று குறைபட்ட, உள்ளே நடந்தவற்றை சொன்னார் பிரபா.
மாப்பிள்ளையின் தாய்க்கு குழலி பற்றிய விஷயங்கள் முழுமையாக தெரிந்திருக்கவில்லை. அவர் பொதுவாக விசாரித்துக் கொண்டிருக்கும் போதே முகம் வாட்டமானது பார்த்து மாப்பிள்ளையின் அப்பா உங்களை கூப்பிட சொல்லிவிட்டார் என்றார்.
“அப்போ அவங்களுக்கு விருப்பம் இல்லையோ?”
“இல்லாமையா மெனெக்கட்டு தஞ்சாவூர்லேந்து டிரையினுல கிளம்பி வந்திருப்பாங்க?” என்று எதிர்கேள்வி எழுப்பி அவளை அடக்கிய பிரபா,
“மாப்பிள்ளையை உனக்கு புடிச்சிருக்கா? உசரம், நிறம்னு உனக்கு பொருத்தமா இருக்காரு.”
“ப்ச். அவங்க வீட்ல இன்னும் தகவல் சொல்லல.” என்று கழன்று கொள்ள பார்த்தாள் குழலி.
“அவங்களுக்கு ஓகேன்னா உனக்கு ஓகேவா?” மகளை ஆர்வமாக பார்த்தார் பிரபா.
“அவங்க ஓகே சொன்னதுக்கு அப்புறம் என் சம்மதமெல்லாம் காதுல வாங்குவீங்களா என்ன? சந்தியா வீட்ல இதை முடிச்சிட்டு தான் ஓய்வாங்க போல…” சலிப்பாய் சொன்னாலும் முகிலனை மனதிற்குள் கொண்டுவந்து தனக்கு சரியானவனா என்று யோசித்தாள்.
“இவ்ளோ நாள் வெய்ட் பண்ணது புடிக்காத வாழ்க்கைகுள்ள உன்னை தள்ளுறதுக்கு இல்லை. நீ வேண்டாம்னு சொன்னா நான் உன் பக்கம் தான் நிப்பேன். ஆனா வேணாம்னு சொல்ல காரணம் இருக்குற மாதிரி தெரியல. அந்த கணேஷை கொண்டு வந்து நிறுத்தினியே அவரை விட இவர் எவ்வளவோ உசத்தி.” என தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட பிரபாவினை ஒத்தது தான் அவள் எண்ணமும்.
“முதல்ல அவங்க சொல்லட்டும் அப்புறம் நான் சொல்றேன்.” என்று அன்றைக்கு தப்பித்துக்கொண்டவள் இரண்டொரு நாளில் அவர்களின் சம்மதம் கிடைத்துவிட்டதாய் தகவல் வரவும் சந்தியாவுக்கு அழைத்தாள்.
“அவங்க வீட்டு நம்பர் வாங்கி அம்மாவுக்கு குடு. எல்லாத்தையும் உன் மாமியார் முன்ன நின்னு பேசி பாத்துக்கிட்டாலும் நம்ம வீட்லேந்தும் பேசணும்.”
“உனக்கு ஓகே தான அக்கா?” உறுதிப்படுத்திக்கொள்ளவென சந்தியா கேட்க,
“அவர் வேலை ஒன்னுதான் இடிக்குது. இங்கேயே வந்துட்டா தேவலை.” என்று இழுத்தாள் குழலி.
“அதெல்லாம் இங்க வந்துடுவாருனு நம்பிக்கையா அத்தைகிட்ட சொல்லி இருக்காங்க. அப்படியே இல்லைனாலும் கல்யாணம் ஆனதும் உன்னை இங்க விட்டுட்டு அங்க இருப்பாரா. அதெல்லாம் நீ சொன்னா கேட்டுப்பாரு.” என்றவள், “அப்போ உனக்கு ஓகே தான?” உற்சாகம் பொங்கும் குரலில் கேட்க,
“ஓகே சொல்லாம இருக்க காரணம் இல்லை.” என்று முடித்துக்கொண்டாள் குழலி.
இதுவே போதும் இதற்கு மேல் தோண்டித் துருவினால் அக்கா மலையேறிவிடக்கூடுமோ என்று பயந்து அமைதியாகிவிட்டனர் தங்கைகள். கவிதா மூலமே பேச்சுவார்த்தை நடந்தாலும் பிரபாவை விட்டும் பேச வைத்தாள் குழலி. திருமணத்திற்கு தங்களால் முடிந்தது இவ்வளவு என்று சிலதை சொன்ன பிரபா மேற்கொண்டு வீட்டில் கலந்துவிட்டு சொல்லுமாறு பேசி வைத்துவிட்டார்.
அவள் கேட்காமலேயே அவனது புகைப்படமும் சுயவிவரமும் அவளுக்கு அனுப்பி வைத்தாள் சந்தியா. அந்நேரம் அலுவலகத்தில் இருக்க, புகைப்படம் வந்ததும் ராஷ்மியிடம் காட்டினாள்.
“ஹே சூப்பர்டி. அப்போவே சொன்னேன்ல உனக்கு பெஸ்ட்டா அமையும் வெய்ட் பண்ணுனு.” என்று ஆரவாரமாய் குதூகலித்தாள்.
“பெஸ்ட்டானு தெரியல ஆனா ஒர்ஸ்ட் இல்லை.” என்று லேசாக சிரித்து வைத்தாள் குழலி.
“அடியே பெஸ்ட் தாண்டி. அந்த கணேஷ் எங்க இவர் எங்க? உனக்கு பர்பெக்ட் மேட்ச். சரி சொல்லு பேசுனியா? என்ன சொல்றாரு உன் ஆளு?”
உதட்டை பிதுக்கியவள் பெண் பார்க்கும் படலத்தன்று நடந்ததை பகிர்ந்து கொண்டாள், “எனக்கு தெரியல எப்படி ஒத்துப்போகும்னு, அவரும் அன்னைக்கு அப்படிதான் சொன்னாரு. நோ சொல்லுவாருனு நினைச்சேன் ஆனா க்ரீன் சிக்னல் விழுந்துடுச்சு.” என்றவளின் குரலில் குழப்பம் இருந்ததை உணர்ந்தாள் ராஷ்மி.
“உனக்கு பேசணும் அதானே. நம்பர் வாங்க வேண்டியது தானே?”
“ப்ச் எங்க… நான் பேசி எதையும் கலைச்சி விட்டுடுவேனோன்னு சந்தியா வீட்டுக்காரர் நம்பர் கொடுக்க மாட்டேங்குறார். சந்தியா நம்பர் எடுக்க ட்ரை பண்ணுவான்னு அவர் போன்லையே நம்பர் சேவ் பண்ணலையாம்.” என்று உதட்டை பிதுக்கியவளைப் பார்த்து கண்சிமிட்டிய ராஷ்மி அலைபேசியை ஆட்டிக்காட்டினாள்.
“இது இருக்க பயமேன்? அதான் பயோடேட்டாவே உன் கையில இருக்கே… இன்னைக்கு வேலையே இதுதான். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டா, லிங்கிட்இன் இப்படி எதுல இருந்தாலும் தட்டித் தூக்குறோம்.” என்ற ராஷ்மி உடனே களத்தில் இறங்கிவிட்டாள்.
அடிப்பாவி என்று விழிவிரித்து பார்த்தாள் குழலி.
“இப்படி என்னை பார்த்தா கிடைக்காது மேடம் போனை பாக்கணும்.” என்று குழலியின் முகத்தை அலைபேசி புறம் திருப்பிவிட்டாள் ராஷ்மி.
“இதை பாத்தா ஆபீஸ் வேலை எப்போ பாக்குறது?”
“அது எப்போதும் பாக்குறது தான? இது லைப் மேட்டர்டி ரொம்ப யோசிக்காம தேடு.”
இதுவரை வந்த வரன்கள் அனைத்தும் அவர்களே அலைபேசி எண் வரை கொடுத்துவிட்டு தான் சென்றிருக்கின்றனர். இவன்தான் அப்படியே கிளம்பிவிட்டான். யாரையும் கேட்கவும் முடியாத சூழல். இப்போது நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமா? என்னடா இது என்ற புதுவித உணர்வுடன் அலைபேசியை கையிலெடுத்தாள்.
“ஸ்பீட் முக்கியம் மச்சி. சீக்கிரம் சீக்கிரம்.” தன் அலைபேசியில் கவனமாக இருந்தாலும் தோழியை உந்திக்கொண்டே இருந்தாள் ராஷ்மி.
முதலில் பேஸ்புக் திறந்தவள் அவன் முழுப்பெயரை போட்டு தேடினாள். பின் அவன் ஊர், வேலை செய்யும் இடம், படித்த கல்லூரி என்று தேடல் நீண்டுகொண்டே செல்ல, கண்டுபிடிக்க முடியவில்லை.
“இதுல இல்லை போலடி.” தேடியக் களைப்பில் குழவி சோர்வுற,
“நானும் தேடிப்பார்த்தேன் இல்லை. இன்ஸ்ட்டா பாப்போம்.” என்று சொல்லி இருவரும் அந்த செயலியை திறந்தனர்.
குழலி அவன் பெயரை அடித்தாள். நிறைய அக்கவுன்டுகளை அது காட்ட, ஒவ்வொன்றாய் திறந்து அவன் புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
“ஹேய் இன்ஸ்ட்டால இருக்காருடி. இந்த போட்டோ பாரு அவர்தான இது?” என்று ராஷ்மி துள்ளிக்குதித்து அவளிடம் தன் அலைபேசியை காண்பித்தாள். ஒருமுறை உற்றுப்பார்த்தவள் ஆம் என்றாள்.
“சூப்பர்ல. பிரைவேட் அக்கவுண்ட். நீ ரெக்வஸ்ட் குடு.” என்று குழலியின் அலைபேசி வாங்கி அவளே அப்பெயரை தேடி எடுத்துக்கொடுத்தாள். இவள் தயங்க, “என்ன யோசனை பேசணும்ல அப்போ குடுடி.” என்று குழலி தோளில் இடித்து அவளை நட்பு அழைப்பு கொடுக்க வைத்துவிட்டு தான் ஓய்ந்தாள்.
“அவ்ளோ தான். அக்சப்ட் பண்ணவும் பேசிடு.” என்று தோளை குலுக்கிய ராஷ்மி ட்ரீட் வேண்டும் என்று நிற்க, மதியமே உணவகம் சென்றனர்.
“அக்சப்ட் ஆகிடுச்சான்னு பாப்போம்.” உணவுக்கு சொல்லிவிட்டு அமர்ந்த நேரத்தில் குழலி அலைபேசி எடுத்து அவளே பார்க்க இன்னும் ஏற்கப்படாமல் இருந்தது அவன் புறம்.
“வேலை டைம்ல பாக்க மாட்டாரோ என்னவோ… ஆனா அக்சப்ட் ஆகி பேசுனதும் சொல்லணும் எனக்கு.” என்று செல்ல மிரட்டலும் வைத்தாள் ராஷ்மி.
அதன்பின் இடைவெளி கிடைக்கும் நேரமெல்லாம் அலைபேசி எடுத்து அவன் ஏற்றுவிட்டானா என்று பார்த்துக்கொண்டே இருந்தாள் குழலி.
‘இதென்ன புதுசா ஒரு விஷயத்தை எதிர்பார்த்துட்டே இருக்கேன்?’ தன்னைத்தானே கடிந்துகொண்டவள் வேலையில் கவனம் செலுத்த, மனம் அவள் பேச்சை கேட்காது அலைபேசியிலேயே தங்கியது. தலையை உலுக்கிக்கொண்டாள். ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் தான் என்று மீண்டும் சொல்லிக்கொண்டாள். நேரம் செல்ல செல்ல இரவு வரையுமே அவன் பார்த்துவிட்டானா என்ற தவிப்பு இருந்துகொண்டே இருந்தது.
‘பாத்துட்டு அக்சப்ட் பண்ணாம இருப்பாங்களோ?’ என்ற சந்தேகம் வேறு இடையில்.
‘ப்ச்… இப்போ என்ன பண்றது?’ என்றுமில்லாத நாளாய் வீட்டு வாசலில் யோசனையுடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தாள்.
“என்னடி யோசனை? பனி விழுது பாரு. உள்ள வந்து படு.” பிரபா அழைக்கவும் வேறு வழியின்றி உறங்கச் சென்றாள்.
பல மைல்களுக்கு அப்பால் இருந்தவனோ அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தான். உண்டு முடித்து வழக்கம் போல் பாத்திரம் தேய்த்துவிட்டு வந்து படுக்கையில் மணி பத்தரை தாண்டியிருந்தது. அன்றைக்கு மதியம் மீட்டிங் பின் மாலை கடையில் கூட்டம் என்று அலைபேசி பார்க்கவே நேரமில்லை.
“நேரமா தூங்கு முகிலு.” என்ற மாரியின் குரலுக்கு இவன் தலை தன்னால் அசைந்தாலும் நெட் ஆன் செய்தவுடன் அலைபேசியில் வந்து விழுந்த அறிவிப்பில் பார்வை நிலைகுத்தி நின்றது.
இன்ஸ்ட்டா செயலியின் அந்த அறிவிப்பில் அவள் பெயரை பார்த்ததும் இனம் புரியா உணர்வு அவனுள். உள்ளே சென்று அவள் முகப்படத்திற்கு முன் அவள் பெயரைத்தான் பார்த்தான். முதல்முறை தந்தை சொன்னபோது அட என்று தோன்றியது போலவே இம்முறையும் அவள் பெயர் அவனை ஈர்த்தது. இதழ்கள் தன்னால் அதனை வாசித்தது.
“மைம்மலர்க்குழலி…
ம்ம்ம்… குழலி…
ம்ம்கூம்… மைம்மலர்க்…
மை மலர்…” என்று வந்து நிறுத்தியது அவன் இதழ்கள்.
error: Content is protected !!