Skip to content
Post Views: 1,082
விக்ரம் பார்த்தசாரதி 06
லண்டனில் ஷ்யாமுடன் பேசிவிட்டு நான் நேராக இந்தியா வந்திருந்தேன். இன்று பாண்டிச்சேரியின் அருகில் உள்ள ஒரு தனியார் கடற்கரை ரிசார்ட்டுக்கு வந்திருந்தேன். அம்மாவும் அப்பாவும் கூட உடன் வந்திருந்தனர்.
அம்மாவுக்கு எனது அருகாமை கிடைக்காத ஏக்கத்தை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருந்த காரணத்தால் அவர்களுடன் ஒரு சின்னப் பயணத்தை திட்டமிட்டு இருந்தேன் நான்.
அதிகாலை நேரம். அப்போதுதான் சூரியன் தனது கண்களை மெல்ல மெல்ல திறந்து கொண்டிருந்தான். நானும் அம்மாவும் கடற்கரையின் ஓரமாக நடந்து கொண்டிருந்தோம்.
Advertisement
எங்கள் பேச்சுக்கள் கடல், அலைகள் என சுழன்று கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் ஏன் அலைகள் சீறிப் பாய்கின்றன எனும் பேச்சு எழுந்தது.
“அது அலைகளுக்கு நிலா கொடுக்குற தன்னம்பிக்கை விக்ரம். நல்லா நிமிர்ந்து விளையாடுன்னு அதுதான் தைரியம் கொடுக்குது” அம்மா கவிதை போல சொன்னார் “தன்னோட ஈர்ப்பு சக்தியால அலைகளை இயக்குது நிலா. அதுவும் அமாவாசையின் போது நிலாவை நாம பார்க்கக் கூட முடியாது. ஆனா அலைகளை இயக்கும். சூரியன் நிலா எல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தா கூட எப்பவுமே எந்த விதத்திலாவது தன்னோட இருப்பை நமக்கு உணர்த்திக்கிட்டேதான் இருக்கும்”
அம்மாவின் பேச்சை ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன் நான்.
Advertisement
அதன் பிறகு காலை உணவை முடித்து விட்டு என்னுடைய மடிக் கணினியை திறந்தேன். அன்று ஷ்யாமுடனான தொழில் ஒப்பந்தம் குறித்த சந்திப்பு ஒன்று ஏற்பாடாகி இருந்தது. சொல்லப் போனால் நான் சற்று அவசரமாகவே அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன் நான். அவனுக்கு நேரமே கொடுக்க விரும்பவில்லை நான்.
Advertisement
எனது மனதில் அந்த ஷ்யாமை விட அவனின் தந்தை விஷ்ணு பிரசாத் அதிகமாக ஆக்கிரமித்து இருந்தார். இந்த தொழில் முறை ஒப்பந்தத்தின் மூலம் நான் குறி வைத்து இருப்பது அவரது தொழில் சாம்ராஜ்ஜியத்துக்குள் எனது காலடித் தடத்தை பதிப்பதுதான்.
இதுவரை அவர்களது தொழில் சாம்ராஜ்ஜியத்தின் கிளைகள் அவர்களது குடும்பத்தின் உள்ளேயே பரவிக் கிடக்கின்றன என்பதை அறிந்துதான் இருந்தேன் நான். அந்த கிளைகளின் இடையே மெல்லப் புகுந்து உள்ளே இறங்கி நிமிர்ந்து நிற்பதே எனது முதல் லட்சியம்.
அதற்குத்தான் அந்த ஒப்பந்தத்தில் ஒரு சின்ன பொறியை வைத்து இருக்கிறேன்.
Advertisement
பொதுவாகவே மற்றவர்களுக்கு இது போன்ற புது நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது கத்தி மேல் நடக்கும் செயல்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஷ்யாமின் இந்த நிறுவனத்திற்கான எனது திட்ட வரைவு எனக்கு சாதகமான பலன்களை நிச்சயம் தரும்.
முதலில் நான் பெறப்போவது அந்த சேனலின் 49% பங்குகளை. அதுவே நான் அங்கே என்னை மிக ஆழமாக நிலைப் படுத்திக் கொள்ள உதவும். அதன் பிறகு சில மாதங்களில் மெல்ல மெல்ல அந்த சேனலின் பெரிய பங்குதாராக உயரும் வழிதான் அது.
இதுவரை குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கொண்ட விஷ்ணு பிரசாத்தின் ஆலமரத்தின் வேர்களில் நான் இடம் பிடிப்பதே அவரது அலட்சியத்திற்கு நான் கொடுக்கும் முதல் பதிலடி.
அங்கே மும்பையில் இருக்கும் ஷ்யாமுடனான சந்திப்புக்கு நான் நேரடியாக செல்லவில்லை. அப்படி செல்வது அவசியம் என்றும் தோன்றவில்லை எனக்கு.
எனது விரலசைவிலும், விழியசைவிலும் வேலைகளை முடித்துக் கொண்டு வரும் திறமைசாலிகள்தான் எனது உதவியாளர்கள்.
நேரம் கடந்து கொண்டு இருக்க மதிய உணவு நேரத்தில் என்னை அடைந்த அந்த செய்தி எனக்கு அத்தனை மகிழ்ச்சியை தரவில்லை.
“வாட்ஸ் ஹேபனிங் தேர் சரவணன்? என்ன நடக்குது அங்கே? ஆர் யூ பீபிள் ஆன் தி ரைட் டிராக்?” எனது குரலில் கோபத்தின் சாயல் ஒட்டிக் கொண்டது. “ஷ்யாம் அப்படி பேசறதுக்கு வாய்ப்பே இல்லை”
“அப்படிதான் சர் பேசறார். 40% மேலே அக்சப்ட் பண்ண முடியாதுன்னு ஸ்ட்ராங்கா இருக்கார். கேட்டா அவரோட லீகல் அட்வைசர் கிட்டே டிஸ்கஸ் பண்ணணும் சொல்றார் சர். லஞ்ச் முடிஞ்சு இன்னொரு ரவுண்ட் மீட்டிங் ஷெடியூல் பண்ணி இருக்கோம் சர். ஈவினிங்குள்ளே நாங்க மறுபடியும் பேசிப் பார்க்கிறோம்”
எனது உதவியாளன் சரவணன் சொன்ன பிறகும் எனக்குள்ளே உள்ளுணர்வு ஏதேதோ சொல்லியது. நான் நினைத்தது போலவே மாலை வந்த தகவலும் ஷ்யாமின் திடீர் தன்னம்பிக்கையை விளக்கி விட்டுச் சென்றது. ஷ்யாம் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.
முதலில் சுறுசுறுவென பொங்கியது எனக்குள்ளே. ‘நான் வளைந்து கொடுப்பதாக இல்லை. என்னுடன் கை கோர்க்கவில்லை என்றால் நஷ்டம் அவனுக்குத்தான்’
“கம் பேக் கைஸ்” என்றே ஆணையிட்டேன் நான் “இதோட இதை முடிச்சிடுவோம். லெட்ஸ் மார்க் அ ஃபுல் ஸ்டாப் ஹியர்”
என்னுடைய சீறலுக்கு பதில் மொழி சொல்லக் கூட தைரியம் இல்லை நான் அனுப்பிய எனது குழுவினருக்கு. சில நாட்களுக்கு முன்னால் எனது தலை அசைப்பிற்காக தவித்து நின்ற அதே ஷ்யாமின் இந்த பிடிவாதம் எனக்குள்ளே அப்படி ஒரு கோபத்தை விதைத்து இருந்தது.
‘அப்படி எல்லாம் இறங்கிப் போய் விடுபவன் இல்லை இந்த விக்ரம்’
அதன் பிறகு அவன் இரண்டொரு முறை அழைத்தும் கூட நான் அழைப்பை ஏற்கவே இல்லை. இதற்கு மேலாக இதை தொடர வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்திருந்தேன்.
ஆனால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து வந்தது அந்த விமானப் பயணம். அந்த முன்னிரவு நேரத்தில் சென்னையில் இருந்து மும்பை நோக்கி பறக்கவிருந்த அந்த விமானத்தின் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து ஒரு எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையை நான் புரட்டிக் கொண்டிருந்த நேரத்தில் விமானத்தினுள்ளே நுழைந்தனர் ஷ்யாமும் அவனது தந்தை விஷ்ணு பிரசாத்தும்.
விமானத்தில் நுழைந்த சில நொடிகளிலேயே என்னைப் பார்த்து இருந்தார் விஷ்ணுப் பிரசாத். என்னை அடையாளம் கூட தெரியத்தான் செய்தது அவருக்கு. இருந்தாலும் கண்களில் ஏறிய அலட்சியத்துடன் எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார் அவர்.
ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து இருந்த நான் ஜன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்தி எனது கோபத்தை கட்டுப் படுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன் நான்.
‘அவரை தோற்கடித்து நிற்க வைக்கும் நாள் வராமலா போய் விடும்?’
அதே நேரத்தில் ஷ்யாமுக்கான இருக்கை எனக்கு அருகில் ஒதுக்கப் பட்டு இருக்க, எனது அருகில் வந்து அமர்ந்தான் அவன்.
ஆயிரம் இருந்தாலும் என்னைப் பார்த்ததும் அவனிடம் முகம் கொள்ளா புன்னகை வந்து நின்றது.
“ஹலோ விக்ரம் சர். ஹவ் ஆர் யூ?” எனும் நலம் விசாரிப்புடனே வந்து அமர்ந்தான் அவன். மெலிதான புன்னகை கூடிய தலை அசைப்புடன் முடித்துக் கொண்டேன் நான்.
எப்படியும் வர வேண்டிய இடத்திற்கு அவன் வந்து நிற்பான் என்று எனக்குத் தோன்றிக் கொண்டேதான் இருந்தது. நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்து இருந்தது.
நானாக துவங்குவேன் என காத்துக் கொண்டே இருந்தான் ஷ்யாம். நான் துவங்குவதாக இல்லை. கையில் இருந்த பத்திரிக்கைக்குள் புகுந்து கொண்டேன் நான். அதற்குள்ளாக அவ்வப்போது மகனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டார் விஷ்ணுப் பிரசாத்.
‘என்ன பயமாம் அவருக்கு?’ எனது புருவங்கள் கூடி விலகின. ‘மகன் என்னுடன் கை கோர்த்து விடுவான் என்ற பயமோ?;
ஜன்னலுக்கு வெளியே பார்வையை வைத்துக் கொண்டேன் இப்போது. இன்னமும் ஷ்யாம் பேச்சை துவங்கவில்லை. அப்படி என்றால் அவன் இறங்கி வருவதாக இல்லை என்பதுதானே பொருள். எங்கிருந்து வந்தது அவனுக்கு இப்படி ஒரு தன்னம்பிக்கை. நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில்
“அது அலைகளுக்கு நிலா கொடுக்குற தன்னம்பிக்கை விக்ரம். நல்லா நிமிர்ந்து விளையாடுன்னு அதுதான் தைரியம் கொடுக்குது” அன்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனது காதில் ஒலித்து விலக வானத்தில் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது வட்ட நிலா.
சுருக்கென்றது எனக்கு. ‘யாரந்த நிலா? கண்ணுக்கு தெரியாத தூரத்தில் நின்று ஷ்யாமுக்கு தைரியம் கொடுக்கும் அந்த நிலா யார்?’
இப்போது பத்திரிக்கையை மடித்து மடியில் போட்டுக் கொண்டு பின்னால் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.
‘யாரந்த நிலா? அவனைப் பற்றிய எல்லா தகவல்களையும் திரட்டியதாக நினைத்தேனே. மிக முக்கியமான ஏதோ ஒன்றை கவனிக்காமல் விட்டு விட்டேனா என்ன?’
“விக்ரம் சர்” இப்போது மெல்லத் துவங்கினான் ஷ்யாம். நானாக அந்த விஷயத்தை தொட வேண்டும் என்பதற்காக ஏதேதோ தேவை இல்லாத விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
எல்லாவற்றையும் ஓரிரு வார்த்தைகளில் மிக அழகாக கத்தரித்துக் கொண்டே இருந்தேன் நான்.
ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப் படுத்திக் கொள்ளவே இயலாமல் கேட்டும் விட்டான் அவன்.
“அவ்வளவு சீக்கிரம் சட்டுனு ஃபுல் ஸ்டாப் வைப்பீங்கன்னு நான் நினைக்கலை விக்ரம் சர்” என்றான் மிக மிக மெதுவான குரலில். தந்தைக்கு கேட்க வேண்டாம் என்று நினைத்திருக்கக் கூடும் அவன்,
“மிஸ்டர் ஷ்யாம்” என்றேன் நான். அவன் பேசிய தொனிக்கு இணையாகவே இருந்தது எனது தொனியும் “என்னோட டெர்ம்ஸ் ரொம்ப கிளியர். நீங்கதான் கன்ஃபியூஸ்டா இருக்கீங்க. மே பி ஸ்போர்ட்ஸ் சேனல் உங்க ட்ரீம் அப்படின்னு நீங்க சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைக்காக இருக்கலாம். பெரிய இடத்து பசங்களே அப்படிதானே. மே பி யூ ஆர் நாட் தட் சீரியஸ்”
“நோ நோ விக்ரம் சர். ஐ ஆம் வெரி சீரியஸ் அபவுட் இட். பட் ஆரா..” என்று ஏதோ சொல்ல வந்தவன் சட்டென நிறுத்திக் கொண்டான்.
“ஆரா?” நான் கேட்பதற்குள், அந்த இரண்டு நிமிடத்தில் மூன்றாவது முறையாக திரும்பிப் பார்த்து இருந்தார் விஷ்ணுப் பிரசாத்.
அவரின் தவிப்பே எனக்கு நிறைய செய்திகளை சொல்லி வைத்தது. நான் நிச்சியமாக ஷ்யாமுடன் கை கோர்க்க வேண்டும் என்ற வேகத்தை கொடுத்துக் கொண்டிருந்தது, விஷ்ணுப் பிரசாத்தின் அந்த படபடப்பு.
“ஷ்யாம்? யார் அந்த ஆரா?” என்றேன் மறுபடியுமாக அந்த பத்திரிக்கையை எடுத்து புரட்டிக் கொண்டே.
“ஆரா.. ஆரா .. அதெல்லாம் யாரும் இல்லை சர். விக்ரம் சர் நாம மறுபடியும் ஒரு மீட்டிங் ஷெடியூல் பண்ணா என்ன?”
“வொய் நாட் ஷ்யாம். வொய் நாட்” என்றேன் உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டே. “நான் சீக்கிரமே ஒரு நல்ல நாள் சொல்றேன்”
மகிழ்ந்துதான் போனான் ஷ்யாம். அதே நேரத்தில் அந்த ‘ஆரா’ தான் நான் நினைத்த அந்த ‘நிலா’ வோ என்ற சந்தேகம் எனக்குள்ளே வேரூன்றி இருந்தது.
அந்த நிலா கொடுக்கும் தைரியத்தில்தான் ஷ்யாமின் தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கிறது எனும் எண்ணம் என்னை உருட்டிக் கொண்டே இருந்தது.
ஷ்யாமைப் பற்றி நான் சேகரித்த தகவல்கள் என்னைப் குழப்பிக் கொண்டே இருந்தன. இதில் இறங்குவோமா வேண்டாமா என்று இன்னொரு முறை என்னை யோசிக்க வைத்தது ஷ்யாமின் உடல் மொழி.
‘இந்த ‘ஆரா’ க்களுடன் மோதுவது எல்லாம் நேர விரயம்’ எனும் எண்ணம் ஒரு முறை வந்து போனது. இருந்தாலும் எதுவோ ஒன்று என்னை ‘வொய் நாட் ஷ்யாம். வொய் நாட்’ என சொல்லவும் வைத்தது.
எனது பரபர வேலைகளுக்கு நடுவிலும் யார் அந்த ஆரா எனும் கேள்விக்கு விடை தேடிக் கொண்டே இருந்தேன் நான்.
ஷ்யாமை பற்றி நான் சேகரித்து வைத்த தகவல்களில் என்னை மிகவும் உறுத்திக் கொண்டிருந்தது, சோனா என்ற பெயர்தான். அவள் ஷ்யாமின் மனம் கவர்ந்தவள் என்பது எனக்குத் தெரியும். ஒரு வேளை அவளோ அவள் குடும்பமோ இதில் சம்மந்தப் பட்டு இருப்பர்களோ என்ற கேள்விதான் எனக்கு.
அதே நேரத்தில் ஷ்யாம் உதிர்த்த அந்த ஆரா எனும் பெயர் என்னை இடறியது. யார் அவள்? ஒரு கட்டத்தில் அதற்கான பதிலை கொண்டு வந்தனர் எனது குழுவினர்.
“உன்கா நாம் ஆராதனா ஹைன் சர். சோனா மேடம் கி சஹேலி. உன்கோ ஷேர்னி பி புலாதே ஹைன் சர்”
‘அவளது பெயர் ஆராதனாவாம். அவள் சோனாவின் தோழியாம். அவளை ஷேர்னி என்றும் அழைப்பார்களாம்’ மெலிதாக சிரித்துக் கொண்டேன் நான். மடமடவென அவளைப் பற்றிய தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தனர் எனது குழுவினர்
ஷேர்னி என்றால் பெண் சிங்கம் என்று பொருள். இந்த பாயும் புலியின் முன்னால் ஒரு பெண் சிங்கம் வந்து நிற்கிறதோ? சட்ட ஆலோகரிடம் கேட்க வேண்டும் என்று அன்று அவன் மீட்டிங்கில் சொன்னது இந்த ஆராதனாவைதானா?
பொதுவாகவே சிறு வயதில் இருந்தே எனக்கு நானே சொல்லிக் கொண்ட ஒரு விஷயம் ‘யாரையும் வியந்து பார்த்து விடாதே விக்ரம்’
பொதுவாகவே நான் பல பெரிய புள்ளிகளுக்கு, கலைஞர்களுக்கு கூட நண்பனாக இருந்திருக்கிறேனே தவிர யாருக்கும் ரசிகனாக அபிமானியாக இருந்ததே இல்லை. இருக்கப் போவதும் இல்லை.
இதெல்லாம் இருந்த போதிலும் அந்த ஷேர்னி எனது கவனத்தை ஈர்க்கத்தான் செய்தாள். இருக்கட்டும்.
‘இந்தப் புலி அந்த சிங்கத்தோடு மோதிக் கொண்டு எல்லாம் நிற்கப் போவதில்லை. எனது பாதையில் நிற்கும் அந்த சிங்கம் இந்தப் புலிக்கு சாமரம் வீசும் வழி வகைகளை வகுக்கப் போகிறது’
அப்போதுதான் எனது கவனத்திற்கு கொண்டு வரப் பட்டது லால் அண்ட் ஷர்மா லீகல் கன்சல்டன்சி. அந்த நிறுவனத்தில்தான் அந்த ஷேர்னி பணி புரிகிறாள் என்பதை அறிந்தேன் நான்.
பொதுவாக இது போன்ற லீகல் கன்ஸல்டன்சி என்பது சட்ட வல்லுனர்களின் குழு என்று வைத்துக் கொள்ளலாம்.
இரண்டு நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ளும் தருணங்களில், ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை தனது வசம் இழுத்துக் கொள்ளும் தருணங்களில் எல்லாம் இவர்கள் உதவியை நாடினால் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து இருவருக்கும் திருப்திகரமான ஒரு ஒப்பந்தத்தை முடித்துத் தருவார்கள்.
அப்படிப் பட்ட பல நுணுக்கமான ஒப்பந்தங்களை முடித்து கொடுத்த வகையில்தான் ஆராதனா பெண் சிங்கமாக இருக்கிறாள்.
இப்போது நான் எனது அடுத்த காயை நகர்த்த தயாரானேன்.
எனக்கும் ஷ்யாமுக்குமான ஒப்பந்தத்தை முடித்துத் தர அவள் பணி புரியும் லால் அண்ட் ஷர்மா நிறுவனத்தை அணுக முடிவு செய்தேன்.
இப்போது அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஒரு வழக்கறிஞராக அவள் எனக்குத்தான் துணை நிற்க முடியுமே தவிர ஷ்யாமுக்கு அல்ல.
அடுத்த சில மணி நேரங்களில் அதன் நிறுவனர் என்னை அழைத்தார். அழைக்க வைத்திருந்தேன் நான்.
எனது கையில் இருந்த பழச்சாற்றை மெது மெதுவாக ருசித்தபடியே அழைப்பை ஏற்றேன்.
“எஸ் சர். திஸ் இஸ் விக்ரம் பார்த்தசாரதி” என்றேன் நான்.
error: Content is protected !!