Skip to content
Post Views: 1,013
விக்ரம் பார்த்தசாரதி 07
அன்று அந்த ஷேர்னியுடனான சந்திப்புக்கு தயாராகிக் கொண்டு இருந்தேன் நான்.
அது ஏன் அன்றைய தினத்தில் மட்டும் ஒரு முறைக்கு இரண்டு முறை என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன் என்பதற்கான பதில் எனக்கே தெரியவில்லை.
அந்த லால் அண்ட் ஷர்மா லீகல் கன்சல்டன்சியின் அலுவலகத்துக்கு நான் சென்றதும் எனக்கான வரவேற்பு பலமாகத்தான் இருந்தது.
Advertisement
அந்த அலுவலகத்தின் உரிமையாளர்களான லால் மற்றும் ஷர்மா இருவருமே என்னை முன்னின்று வரவேற்றனர். அவர்களுக்கு எனது தந்தையின் வயது இருக்கலாம். இருந்தாலும் அவர்களது பார்வையில் என் மீதான மரியாதையும் ஒரு வித பிரமிப்பும் மின்னத்தான் செய்தன.
அதுதான் விக்ரம். எப்போதும் விக்ரமை பார்த்து வியப்பவர்கள் பிரமிப்பவர்கள்தான் அதிகம். விக்ரம் யாரையும் பார்த்து பிரமிப்பது இல்லை.
சம்பிராதய பேச்சுக்கள், வரவேற்பு முடிய சந்திப்பு நடைபெறும் போர்ட் ரூமுக்கு செல்லலாம் என்றார்கள்.
Advertisement
போர்ட் ரூம் பில்டிங்கின் மேல் தளத்தில் இருக்கிறது என்றார்கள். லிஃப்ட் ஒவ்வொரு தளமாக நின்று நின்று சென்று கொண்டிருந்தது. அதனுள் ஏறி ஏறி இறங்குபவர்களில் அந்த ஷேர்னி இருப்பாளா எனும் சின்ன ஆர்வம் என்னை உரசிப் பார்த்தாலும் அதை அப்புறப் படுத்தவே முயன்றேன் நான்.
Advertisement
இங்கே போர்ட் ரூமிற்கு எனக்கு முன்னாலேயே எனது குழுவை சேர்ந்த இருவரை நான் அனுப்பித்தான் வைத்திருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் போர்ட் ரூம் இருக்கும் தளத்தை அடைந்து இருந்தோம் நாங்கள். கதவின் முன்னால் சென்று நின்றதும் சின்னதாய் ஒரு குறுகுறுப்பு எனக்கு.
“சுனா தா கி அந்தர் ஏக் ஷேர்னி பைட்டி ஹைன் ஷர்மா சர். தோடா டர் லக் ரஹா ஹைன்” (உள்ளே ஒரு சிங்கம் இருக்கிறதாமே. கேள்விப் பட்டேன். சற்றே பயமாக இருக்கிறது ஷர்மா சர்) என அவரைப் பார்த்து கண் சிமிட்டினேன் நான். வாய் விட்டு சிரித்தார் அவர்.
Advertisement
எனக்கு முன்னே திறந்தது அறைக் கதவு. எனது வழக்கமான கம்பீர நடையில் அறையின் உள்ளே கால் எடுத்து வைத்தேன் நான்.
‘எங்கே இருக்கிறாள் அந்த ஷேர்னி?’
அந்த ஷேர்னி எனும் ஆரா இருக்கும் இடத்தையே, அதாவது அவளது அலுவலகத்தையே எனது சாம்ராஜ்ஜியமாக மாற்றுவதே எனது திட்டம்.
இதோ அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரும் எனக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது அவள் அந்த ஷ்யாமை விடுத்து எனது பக்கமே நிற்க வேண்டும்.
ஆங்கில யூ வடிவத்தில் பெரிய மேஜை சுற்றிலும் நாற்காலிகள் என அமைந்திருக்க லால், ஷர்மா இருவருக்கும் நடுவில் நான் அமர இடம் இருப்பதை புரிந்து கொண்டேன்.
அவளைப் பார்த்து விடவெல்லாம் பரபரத்து விடவில்லை நான். அப்படி எல்லாம் செய்து விட்டால் நான் விக்ரமும் இல்லை. எப்படியும் அந்த ஷேர்னி என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
வெகு இயல்பாக லாலுடன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தேன் .
எப்படியும் என்னைப் பார்த்ததும் அவள் அதிர்ந்து போவாள். நான் ஷ்யாமிடம் கொடுத்த திட்ட வரைவினை அவனுக்கு சாதகமாக மாற்ற உதவி செய்ய நினைத்தவளுக்கு நான் வைக்கும் மிகப் பெரிய செக் அல்லவா இது!
‘பார்க்க வேண்டுமே! அவளது முகத்தின் அதிர்ச்சி ரேகைகளை நான் பார்த்தே ஆக வேண்டுமே’
லால் பேசிக் கொண்டே வர கேட்டுக் கொண்டே மெதுவாக பார்வையை சுழற்றி, அந்த அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டே. அங்கே இருந்த இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தேன் நான்.
அறையில் இருந்த மற்றவர்களை எல்லாம் சரசரவென அலசிய எனது பார்வை நேரே சென்று அவளிடம் நிலைத்தது. அங்கே இருந்ததில் அவள் மட்டுமே பெண்.
எனக்கு அருகில் லால் அமர்ந்து இருக்க எனக்கு நேர் எதிராக அமர்ந்து இருந்தாள் அந்த ஷேர்னி.
“ஷேர்னி” எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
‘நான் எதிர்பார்த்த எந்த விதமான அதிர்ச்சி உணர்வுகளும் அவளிடத்தில் இல்லையே?’
எனக்குள்ளே மெலிதாக ஒரு குழப்பம். ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை நான்.
என்னை அவளை விட்டு மடை மாற்றிக் கொள்ள அவ்வப்போது மற்றவர் மீது பார்வையை நான் சுழற்றினாலும் ஏதோ ஒன்று என்னை அவளின் பக்கம் திருப்பிக் கொண்டே இருந்தது.
தனது மடிக்கணினியை விட்டு பார்வையை நிமிர்த்தி அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டாள் ஆராதனா. எனது மிடுக்கும், தன்னபிக்கையும் அவளை கொஞ்சம் அசைத்து விட்டிருக்க வேண்டும் என்று கூட தோன்றியது எனக்கு.
‘நான் யாரென்று அவளுக்கு தெரியாமலா இருக்கும்?’ கேட்டுக் கொண்டேன் எனக்குள்ளே.
‘அப்படி தெரிந்து இருந்த பிறகுமா இப்படி அமைதியாக இருக்கிறாள்?’
‘ஷேர்னி!’ மிக நேர்த்தியாக உடுத்தப் பட்ட காட்டன் புடவையில் அமர்ந்து இருந்தாள் அவள். சிங்கப் பெண் என்றதும் நான் எதிர்ப்பார்த்த தேவையற்ற அகம்பாவம், அலட்சியம் போன்ற எதுவுமே அவளிடம் இருந்ததாக தோன்றவில்லை எனக்கு.
மிக எளிமையாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் தன்னை செலுத்திக் கொண்டிருந்தாள் அவள். அழகான ஒரு புத்திசாலித்தனம் அவளது முகத்தில் மின்னயது.
அவளது தொழில் திறமைகள், சாமர்த்தியங்கள் என எல்லாவற்றையும் பற்றி மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டுதான் வந்திருந்தேன் நான்.
நடப்பவைகளை கிரஹித்துக் கொண்டே மௌனமாக சுவாசித்துக் கொண்டிருப்பவளை நான் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்க காரணமே இல்லாமல் மகாபாரதத்தின் வாசுதேவ கிருஷ்ணன் எனது மனதிற்குள் வந்து போனான்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் தூது சென்று சமரசம் பேசிய அவன் கூட இப்படிதான் எளிமையும் நேர்த்தியும் புத்திசாலித்தனமும் கலந்த கலவையாக இருந்திருப்பானோ?
நான் யோசித்துக் கொண்டிருந்த போதே
லால் அவர் முன் இருந்த மைக்கை சரி செய்து கொண்டு பொதுவாக வணக்கம் கூறிவிட்டு, என்னைச் சுற்றி இருக்கும் பலரும் செய்யும் வழக்கமான வேலையான, எனது புகழ் பாடலை ஆரம்பித்து இருந்தார்.
நான் அவர்களது நிறுவனத்தின் புதிய க்ளையன்ட் என்றும், நான் அவர்களது நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருப்பது அவர்களுக்கு பெருமையான தருணம் என்றும் அளந்து கொண்டிருந்தார்.
அவரது பாடலுக்கு அங்கே இருந்த பலரும் தாளம் போட்டுக் கொண்டிருந்தனர் அவளைத் தவிர. இரு கரங்களையும் கோர்த்து மேஜை மீது பதித்து அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.
இப்போது என்னால் அவளை விட்டு பார்வையை நகர்த்தவே முடியவில்லை. ‘என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் இந்த வாசுதேவ கிருஷ்ணன்?’
நான் நினைத்ததை புரிந்து கொண்டதைப் போலவே அப்போது சட்டென அவளைப் பார்த்து கேட்டார் லால்.
“ஆராதனா. நீ தான் மெயின் பர்சன். நீ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாய்?” ஷர்மாவும் சட்டென அவளது பக்கம் திரும்பினார்.
இப்போது அவளது உடைக்கும் முகத்துக்கும் பொருத்தமாகவே, தெளிவாகவும் கொஞ்சம் உறுதி கலந்தும் கூட ஒலித்தது அவள் குரல்.
“நமது நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து நமது சர்வீஸை நாடி வந்திருக்கும் க்ளயண்டை நான் வரவேற்கிறேன். பட் சர் நீங்கள் இவர் யார் என்று அறிமுகம் செய்யவே இல்லையே. ஐ வுட் லைக் டு நோ அட்லீஸ்ட் ஹிஸ் நேம். நான் அவரது பெயரையாவது தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” கேட்டும் விட்டாள் அவள்
லால் ஷர்மா இருவரும் அவளை அதிர்ச்சியோடு பார்க்க மற்றவர்கள் சலசலத்துக் கொண்டிருக்க நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இருந்த நான் என்னையும் அறியாமல் விருட்டென நிமிர்ந்து அமர்ந்தேன்.
என்னை அவளுக்குத் தெரியவில்லை என்பதை நான் எப்படி உணர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. அப்படி என்றால் எனது திட்டம் எதையும் அவள் அறிந்திருக்க நியாயம் இல்லையே.
அதுவரை இவர்கள் எனது பெயரைக் கூட சொல்லவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
லால் ஏதோ சொல்ல வர, ஒரு வேகத்தில் கை உயர்த்தி அவரை சட்டென நிறுத்தியே இருந்தேன் நான். மைக்கை எனது பக்கமாக இழுத்துக் கொண்டு
“ஆராதனா ரைட்?” என்றேன் அவளைப் பர்ர்த்து. எனது வேகம் எனக்கே புதிராக இருந்தது.
நான் கை உயர்த்தியதும் மௌனமான லாலின் உடல் மொழியே அவளுக்கு என்னைப் பற்றிய பல விஷயங்களை கடத்தி இருக்க வேண்டும்.
என்ன நினைத்தாளோ,
“ஆராதனா வாசுதேவன்” என்று சொன்ன அவளது குரலில் ஒரு வித அழுத்தம் .
“ஆராதனா வாசுதேவன்” அவளது பெயரை மறுபடியுமாக நான் உச்சரித்த போது என்னையும் அறியாமல் புன்னகைத்து இருந்தேன் நான். ஏன் புன்னகைத்தேன் புரியவில்லை எனக்கு.
“இட்ஸ் எ ப்ளஷர் டு இன்ட்ரடியூஸ் மைசெல்ஃப் டூ யூ. ஐ ஆம் விக்ரம். விக்ரம் பார்த்தசாரதி. நாம் தோ சுனா ஹி ஹோகா ( பெயர் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய் தானே)”
எனது உதடுகள் பேசிக் கொண்டிருந்தாலும் அவளது முகபாவ மாற்றங்களை படித்துக் கொண்டுதான் இருந்தேன் நான்.
எனது பெயர் அவளை ஒரு நொடி புரட்டி இருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போது நான் வந்த நோக்கம் அவளுக்கு புரிந்து இருக்கும்தானே.
“நைஸ் டு மீட் யூ விக்ரம். விக்ரம் பார்த்தசாரதி” மலர்ந்த புன்னகையோடு என் முன்னால் கரம் நீட்டினாள் அவள்.
அவளது புன்னகையை நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் மிக அழகான பதில் புன்னகையுடன் அவளது கரத்தை பற்றி குலுக்கினேன் நான்.
எனது சின்ன சிரிப்பே அவள் செலுத்திக் கொண்டிருந்த வாகனத்தின் ஸ்டியரிங்கை நான் எனதாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்க வேண்டும்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
காதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தான் என் வள்ளுவன்.
error: Content is protected !!