Skip to content
Post Views: 1,920
அத்தியாயம் 8
சின்ன சோர்வைத் தாண்டி அமிர்தாவிடம் பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை என்ற நிம்மதியில் அருகே வந்த கேசி, “இப்ப எப்படி இருக்கு அமிர்தா?” அக்கறையாய் கேட்டான்.
“வயிறு கபகபன்னு எரியுது.” குழந்தைகளோடு கீரவாணி நிற்பதைப் பார்த்துக்கொண்டே சொன்னவள், அருகே சென்று குழந்தைகளைப் பறித்தும் கொண்டாள். கைப்பொக்கிஷம் களவு போனது போல் சுருங்கியது கீரவாணியின் முகம்.
கால்களில் சங்கிலி கட்டப்பட்டு, உயிரோடு இருந்தும் உணர்விழந்து வாழும் தன் அக்காவைக் காணும் ஒவ்வொரு நொடியும் தனக்குள் உண்டாகும் வலி, தற்போது கீரவாணியின் வலியை உணர்ந்ததில் சற்றே குறைவது போல் இருக்க ஒருவித குரூரத் திருப்தி உண்டானது அமிர்தாவுக்குள்.
Advertisement
இதைப் புரிந்துகொண்ட கேசிக்கு மனம் வலித்தது. எத்தனை அன்பான பெண் அவனுடைய அமிர்தா. அவளா இப்படி மாறிப்போனாள். சாலையில் நொருங்கிக்கிடக்கும் கண்ணாடிகளையும், காய்ந்த இரத்தத்தையும் பார்த்தாலே ஒருநாள் முழுக்க அதில் இருந்து வெளிவர மாட்டாள். அந்த இடத்தில் விபத்துக்கு ஆளான நபர் பிழைத்திருப்பாரா என பதறிக்கொண்டிருப்பாள். கண்களால் பார்த்திடாத நபர்களுக்காக துடித்த அவள் மனது, கண் முன் இருக்கும் நன்றாகத் தெரிந்த ஒரு பெண் வருந்துவதைப் பார்த்து மகிழும் அளவுக்கு காலம் அவளை மாற்றிவிட்டதா என்று யோசிக்க, “நீ மாற்றி விட்டாய் என்று சொல்.” என்று கண்டித்தது மனசாட்சி.
குழந்தைகளையே ஏக்கப்பார்வை பார்த்துக்கொண்டிருந்த வாணியின் முகம் வதைக்க, “அவ தான் எழுந்துட்டாளே. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க அண்ணி.” என்றான் கேசி. அவனின் அண்ணி என்கிற வார்த்தை வழக்கம் போல் சுருக்கென்று குத்தியது அமிர்தாவுக்கு. என் அண்ணியைப் போல் யாரும் இல்லை என்று இதே அவன் ஒருகாலகட்டத்தில் தன் அக்கா நீலாம்பரியின் பின்னால் சுற்றியதை நினைத்துப் பார்த்தாள்.
காலம் தான் எத்தனை வேகமாக சுற்றுகிறது என்று யோசித்தவள் அடுத்த கணமே, இல்லை பச்சோந்தி வேகமாக நிறம் மாறிவிட்டது என்று தன்னைத் தானே திருத்திக்கொண்டாள்.
Advertisement
“அமிர்தாவோட யாரும் இல்லையே.” வாணி தயங்க, “எனக்கு அவளோட இருக்கிறதை விட வேற என்ன வேலை இருக்கு. நான் இருக்கேன் அவளோட.” என்றான்.
Advertisement
“யாரோட அக்கறையும் எனக்கு வேண்டாம். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.” வீராப்பாக சொன்னாலும் அமிர்தாவின் கண்கள் கேர்டேக்கரைத் தேடியது.
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து, “அவங்க ஏதோ எமெர்ஜென்சின்னு போய் இருக்காங்க. உனக்கு எல்லாம் ஓகே தானே. நீ குழந்தைங்களோட ரூமில் போய் இரு. நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்.” என்றவண்ணம் கேசி நகர, “அப்படியே போயிடுங்க. திரும்பி வரும் உங்களை இங்க யாரும் வெத்தலை பாக்கு வைச்சு வரவேற்க மாட்டாங்க.” வெடுக்கென்று சொன்னாள் அமிர்தா.
அவளின் வார்த்தைகள் வதைத்தாலும் அமைதியாகச் சென்றான் கேசி. அவன் சென்ற பின்னாலும் கீரவாணி அங்கேயே நிற்பது அவள் தன்னிடம் ஏதோ பேச நினைக்கிறாள் என்பதைப் புரிய வைக்க, அது பிடிக்காமல் தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தாள் அமிர்தா.
Advertisement
ஆனால் அவள் சற்றும் எதிர்பாரா வகையில், அவளைப் பின்தொடர்ந்து தானும் அந்த அறைக்குள் வந்த வாணி, “நாம கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா?” என்றாள்.
“உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல. உங்க கொழுந்தனாருக்கும் எனக்குமாச்சும் கடந்தகாலத்தில் ஒரு பந்தம் இருந்தது. அந்த பந்தத்துக்கு மதிப்பும் இருந்துச்சு. ஆனா உங்களுக்கும் எனக்கும் நடுவில் என்ன இருக்கு.” ஒளியின் வேகத்தில் வந்தது அமிர்தாவின் வார்த்தைகள்.
“உனக்கும், எனக்கும் நடுவில் இருப்பவர் மோகனன். இத்தனை நடந்த பின்னாலும் உன்னைத் தன்னோட பெறாத மகளா பார்க்கிறவர். இப்ப சொல்லு நமக்குள்ள தொடர்பு இல்லையா?” என்க, பதில் சொல்ல முடியவில்லை அமிர்தாவால். அமைதியாக இருந்தாள்.
“என் மேல உனக்கு என்ன கோபம் அமிர்தா. ஆரம்பத்தில் இருந்து நடந்த எல்லாமே உனக்குத் தெரியும். நீலாவோட தங்கையா யோசிக்காம, மோகனோட பொண்ணா இருந்து யோசிச்சு நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா தப்பான்னு சொல்லு பார்க்கலாம்.” என்க,
“அவருக்கு பொண்ணா யோசிச்சதால் தான் என் அக்கா உயிரோடு இருக்கும் போது நடந்த உங்களோட கல்யாணம் செல்லாதுன்னு கோர்ட்டில் கேஸ் போடாம இருக்கேன்.” என்று வார்த்தையால் குத்தினாள் அமிர்தா. அவள் ஏவிய அம்பு சரியாக வாணியின் இதயத்தை குத்தி குழித்தது.
“செல்லுபடியாகாத கல்யாணம், என்னைப் பிடிக்காத புருஷன், புருஷனை கைக்குள்ள வைச்சுக்கத் தெரியாத பொண்ணுன்னு எப்பவும் திட்டுற மாமியார், சாதாரண பேச்சு வார்த்தைக்கு கூட ஆள் இல்லாத தனிமைன்னு இருக்கும் என்னை விட,
ஒன்னா இருந்தவரை உயிருக்கு உயிரா பார்த்துக்கிட்ட புருஷன், குழந்தை மாதிரி சுத்தி வந்த கொழுந்தனார், அம்மா மாதிரி பார்த்துக்கிட்ட அத்தை, எல்லாத்துக்கும் மேல இப்ப அவங்களுக்காக காதலனையே தூக்கிப்போட்டுட்டு நிக்கிற தங்கச்சின்னு எல்லாம் கிடைச்ச உங்களோட அக்கா நீலாம்பரி ரொம்பவே லக்கி தான் இல்ல.” கரகரத்த குரலில் சொன்னவளைப் பார்க்க முடியாமல் மற்ற பக்கம் திரும்பி நின்றுகொண்டாள் அமிர்தா. வாணியின் மீது தவறு இல்லை என்பதை அமிர்தாவும் அறிவாள். ஆனால் ஏனோ அவளைப் பிடிக்கவில்லை அவளுக்கு.
“எதுக்காக இந்த அழுகை, எதுக்காக என்கிட்ட இந்தப் பேச்சு. இதனால் உங்களுக்கு என்ன நடந்திடும்?” திரும்பி நின்றபடியே வாணியிடம் கேட்டாள் அமிர்தா.
“நடந்த கொடூர சம்பவங்கள் எல்லாம் விதியா இருந்தாலும், அதுக்கடுத்து அடுக்கடுக்கான அநீதிகளை நீயும், உன்னோட அக்காவும், இந்த பச்சைக் குழந்தைகளும் சந்திச்சுட்டீங்க.
என் குடும்பத்து பக்கம் இருந்தும் உனக்கு சில அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கு. அதுக்குப் பிராயச்சித்தமா நான் ஒரு யோசனை சொல்லவா?” தயங்கித் தயங்கி கேட்டாள் வாணி.
திரும்பி நின்று அவளை உற்று நோக்கினாள் அமிர்தா. “நீ சந்தேகப்படுறது புரியுது. நான் என் கொழுந்தனார் சொல்லி உன்கிட்ட பேசல. நானா தான் பேசுறேன். என்னோட சுயநலத்துக்காக உன்கிட்ட பேசுறேன்.” என்று நிறுத்தியவளை முழுதாகச் சொல்லி முடி என்பது போல், மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாகப் பார்த்தாள் அமிர்தா.
“உன் அக்காவை பெரிய ஹாஸ்பிடல், தேவைப்பட்டா வெளிநாட்டில் வைச்சு கூட ட்ரீட்மெண்ட் பார்ப்போம். அவங்களை எப்படியாச்சும் குணப்படுத்துவோம். தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன். உன் அக்கா வாழ்க்கையைப் பறிச்சுக்கிட்ட பாவத்தை தீர்க்க பண்ற பிராயச்சித்தம் மாதிரி இதை நினைச்சுக்கோ.
கடவுள் புண்ணியத்தில் நீலா குணமாகிட்டா எல்லோருக்குமே நல்லது தானே. குழந்தைகளை அவங்க பார்த்துப்பாங்க. உனக்கு கொஞ்சம் சுமை குறையும். உன்னோட எதிர்காலத்தைப் பத்தி யோசிப்ப. அந்த எதிர்காலம் என் கொழுந்தனாரா இருந்தாலும் சரிதான், வேற யாரா இருந்தாலும் சரிதான். ஆனா நீயும் உன் அக்காவும் இப்படியே இல்லாம நல்லபடியா வாழனும். நீங்க வாழ்ந்தா தான் மோகன் வாழ்வார். அவருக்காக கேட்கிறேன்.” என்று கைகூப்பி கெஞ்சியவள் மீது முன்பு போல் கண்மூடித்தனமாகக் கோபப்பட முடியவில்லை அமிர்தாவால்.
செய்த பாவத்துக்கு பிரயாச்சித்தம் செய்ய நினைப்பவர்கள் மீது கோபப்படுவது அநாகரிகம் என்பது நீலா சொல்லிக்கொடுத்த பாடம். அப்படி இருக்க, யாரோ செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய நினைப்பவளை வார்த்தையால் வதைப்பதில் பிரயோஜனமில்லை என்று நினைத்த அமிர்தா அமைதியாகவே தன் மறுப்பைத் தெரிவித்தாள்.
“கஷ்டமோ நஷ்டமோ எதுவா இருந்தாலும் அதை நானே பார்த்துக்கிறேன். என் அக்காவுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லன்னு ஆன பிறகு, பைத்தியமா இருக்கும் போது கூட தரவே மாட்டேன்னு அவ பிடிவாதம் பிடிச்ச தாலியையே பிடுங்கிட்டு போன பிறகு அந்தக் குடும்பத்தோட பணம் மட்டும் எதுக்காக அவளுக்கு தேவைப்படப் போகுது.” என்பதாய் அமிர்தா என்னவோ சாதாரணமாகத் தான் சொன்னாள். ஆனால் குற்றம் உள்ள நெஞ்சாக குறுகுறுத்தது வாணிக்கு.
“அப்பாவுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” கையெடுத்துக் கும்பிட்டு வருத்தம் தெரிவித்தாள் வாணி.
“நீங்க மன்னிப்புக் கேட்கிறதால் எதுவும் மாறாதுங்கும் போது எதுக்காக அதை வீணாக்கிக்கிட்டு. உங்க மேல எனக்கு கோபம் எல்லாம் கிடையாது. தானும் ஒரு பொண்ணா இருந்து பாதிக்கப்பட்ட பொண்ணைப் பத்தி யோசிக்காம, வாய்ப்பு கிடைச்சதும் உங்க காரியத்தை சாதிச்சுக்கிட்டீங்களேன்னு வருத்தம் தான். ஆனா இப்ப இருக்கிற காலத்தில் சுயநலமா இருந்தா தான் நல்லா வாழ முடியும் னு கொஞ்சம் தாமதமா தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். அதனால் உங்க மேல இருந்த வருத்தம் கூட போயிடுச்சு.” என்றாள். அது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் என்று சொன்னவளுக்கும் புரிந்தது, கேட்டவளுக்கும் புரிந்தது.
“உங்களுக்கு இந்த விஷயத்தில் நான் நன்றி சொல்லியே ஆகனும். ஆரம்ப கட்டத்தில் அக்காவை பரிசோதனை பண்ண டாக்டர் ஷாக்கில் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கு. நாளானா சரியாக வாய்ப்பிருக்குன்னு சொன்னார். அதை நம்பி அவளை அப்படியே விட்டுட்டேன். அக்காவை நல்லபடியா பார்த்துக்கணும் னு நினைச்சேனே தவிர, அவளைக் குணப்படுத்த வேற வாய்ப்பு கிடைக்குமான்னு யோசிக்கத் தெரியல.
அதான் இப்ப தெரிஞ்சிடுச்சே. என்ன செஞ்சாச்சும் என் அக்காவை நான் குணப்படுத்துறேன். நீங்க கேட்ட மாதிரி அது மோகனனுக்காகவோ, எனக்காகவோ, குழந்தைங்களுக்காகவோ இல்ல. முழுக்க முழுக்க அவளுக்காக, அவளோட வாழ்க்கையை அவ வாழுறதுக்காக.” நிமிர்வோடு சொன்னாள் அமிர்தா. வாணிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
பலநாட்கள் இரவில், நீலா என்று மோகன் அலறுவதும் அவளை எதில் இருந்தோ காப்பாற்ற போராடுவது போல் அவன் கையும், காலும் எப்படி எப்படியோ போராடுவதையும் அவள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். நீலாவைக் காப்பாற்ற முடியாமல் அவனும், அவனைக் காப்பாற்ற முடியாமல் வாணியும் கழிக்கும் கொடூரமான கணங்கள் அவையெல்லாம். அவன் மனநிம்மதியை மீட்டெடுக்க நினைத்து பிள்ளையார் சுழி போட்ட செயல், கொஞ்சமேனும் முன்னேறி இருப்பதில் ஆனந்தம் தான் வாணிக்கு. அந்த ஆனந்தத்தோடு கிளம்பிச் சென்றாள்.
“நீங்க அமிர்தவர்ஷினிக்கு என்ன வேணும்?” கேசியின் காக்கிசட்டையைப் பார்த்து யோசனையுடன் கேட்டார் மருத்துவர்.
அவளோட எல்லாமே நான் தான் என்று சொல்ல வந்தவன், அப்படிச் சொல்லும் உரிமை தன் கையை விட்டுப்போய்விட்டது என்கிற கசப்பான உண்மையைப் புரிந்துகொண்டு, “அவங்க என்னோட ரிலேட்டிவ் டாக்டர்.” என்று சுருக்கமாக முடித்தான்.
“ரொம்ப அனீமிக்கா இருக்காங்க. ப்ளட் ப்ரஷரும் அதிகமா இருக்கு. நேரத்துக்கு சாப்பிடுறது இல்ல போல. அல்சர் வந்தது தெரிஞ்சும் கண்டுக்காம விட்டதால் வந்த வினை. இனியாச்சும் நேரத்துக்கு சாப்பிடச் சொல்லுங்க. ராத்திரி நேரத்தோட தூங்க சொல்லுங்க. மறக்காம இந்த மாத்திரைகளை எடுத்துக்கச் சொல்லுங்க.” என்றுவிட்டு தேவையானவற்றை எழுதிக்கொடுத்து அவனை அனுப்பி வைத்தார்.
சோர்ந்து போன முகத்தோடு அவன் மருத்துவர் அறையை விட்டு வெளியே வர, அமிர்தா சிகிச்சைக்கான பணத்தை செலுத்திவிட்டு கிளம்பத் தயாராக நிற்பது தெரிய வந்தது. குழந்தைகளை வைத்துக்கொண்டு அவளுடைய பொருட்களையும் தூக்கிக்கொண்டு அவள் சிரமப்படுவது தெரிய, வேகமாக அவள் அருகே சென்றான்.
அவளோ இவன் அருகே நிற்பதைக் கண்டும் காணாமல் ஆட்டோ ஏதாவது வருகிறதா எனப் பார்க்க ஆரம்பித்தாள். தன் மொபையில் இருந்து ஆட்டோ புக் செய்த கேசி, அது வரும் வரை நிழலில் நிற்கலாம் என்கிற நினைப்பில் அவள் என்ன சொல்வாள் என்கிற பயம் துளியும் இல்லாமல், அவள் கையில் இருந்த இரண்டு குழந்தைகளில் ஆண் குழந்தையைப் பறித்துக்கொண்டான்.
கிராமங்களில் அடாவடி செய்யும் பசுமாட்டை விற்கும் சமயங்களில், அதனுடைய கன்றுக்குட்டியை கையில் தூக்கிக்கொண்டு முன்னே நடப்பார்கள் வியாபாரிகள். குழந்தை போல் சொல் பேச்சு கேட்டு அவர்கள் பின்னால் நடக்கும் தாய்ப்பசு. அதை அமிர்தாவிடம் செயல்படுத்தினான் கேசி.
என்னோடு நிழலான இடத்திற்கு வா என்று மரியாதையாக அழைத்தால் தான் எப்படியும் கேட்க மாட்டோம் என்பதால், தன் பலவீனத்தில் அடித்துவிட்டு முன்னே நடந்தவனை மனதிற்குள் அர்ச்சித்துக்கொண்டு பின்னால் நடந்தாள் அமிர்தா. அவனைப் பற்றி அனைத்தும் அறிந்தவளுக்கு, கேசியின் பிடிவாத குணம் மேலெழும்பி வந்தால், யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது என்பதும் தெரிந்திருந்தது.
“நிழலான இடத்திற்கு வந்து அமர்ந்த கேசி தன் கையில் இருந்த குழந்தையின் முகவடிவை வருடி முத்தமிட்டான். இருவரும் பிறந்த நாள் தொட்டு பலமுறை அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது கேசிக்கு. எங்கே அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துவிட்டால் மோகனன், வாணி திருமணத்தை செய்து வைக்கும் துணிவு தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்கிற பயத்தால் திட்டவட்டமாக அவர்களைப் பார்க்க மறுத்தான்.
ஒருகட்டத்தில் அவன் பக்கம் அனைத்தும் அவனுக்கு சாதகமாக நடந்து முடிந்த பின்னால் இவர்கள் முகத்தைப் பார்க்க துடிக்கத் துவங்க, அமிர்தா அனுமதிக்கவில்லை. அப்படி இப்படியென்று போய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு தன் அண்ணனுக்குப் பிறந்த குழந்தையை தொட்டு ரசித்தான்.
“என் குழந்தைக்கு கண்ணு வைக்காத.” கோபமாகச் சொன்னபடி அருகே வந்தாள் அமிர்தா.
“இவன் எனக்கும் பையன் தானே.” குழந்தையின் முகத்தைப் பார்த்தபடியே சொன்னான் கேசி. அவன் பார்வையில் கருணையும், நேசமும் வார்த்தையில் மென்மையும் கொட்டிக்கிடந்தது.
அது பிடிக்காமல், “எந்த தகப்பனும் தன் குழந்தைங்களுக்கு செய்யத் துணியாத பாவம் னு சிலது இருக்கு. அது எல்லாத்தையும் நீங்க இவங்களுக்கு செஞ்சிருக்கீங்க. அப்படி இருக்க இவங்களுக்கு நீங்க அப்பான்னு சொல்லி அந்த வார்த்தைக்குண்டான மதிப்பை கொச்சைப்படுத்தாதீங்க.” முகத்தில் அடித்தபடி சொன்னாள்.
“சரிடி, இந்த உலகத்திலேயே நான் தான் கொடூரமானவன், கேவலமானவன், பைத்தியக்காரன், பிடிவாதக்காரன், பொறுக்கி, கேடுகெட்டவன், அடுத்தவங்க நிம்மதியைப் பறிச்சவன் போதுமா?” கோபமாய் கத்த, “உண்மையை சொன்னா வலிக்கத் தான் செய்யும்.” இலகுவாகச் சொல்லிவிட்டு அவனிடம் இருந்து குழந்தையை வாங்கினாள் அமிர்தா.
அவளையே ஏக்கமாகப் பார்த்த கேசி, “ஒருகாலத்தில் இது தான் நம்மளோட கனவா இருந்தது இல்ல அமிர்தா.” இனம்புரியாத குரலில் கேட்டவனை, அமிர்தா புரியாமல் பார்க்க, “நான், நீ, நமக்குன்னு இரண்டு அழகான குழந்தைங்க. நாலு பேருக்குள்ள காலத்துக்கும் குறையாத அன்பும், மரியாதையும். இது தானே நம்மளோட பெரும் ஏக்கமா இருந்தது.” என்று நிறுத்த, பழைய நினைவில் அமிர்தாவும் கொஞ்சமே கொஞ்சம் இளகினாள்.
விரைவில் சுதாரித்தவள், “கானல் நீர் என்னைக்கும் தாகம் தீர்க்காது. அதுக்கு சமம் தான் நடந்து முடிஞ்ச நிகழ்வுகளைப் பேசுவது. நாம என்னைக்கோ பிரிஞ்சுட்டோம். நான், என் குழந்தைங்க, என் அக்கான்னு என் பாதையும், நீங்க, உங்க அண்ணன், அண்ணின்னு உங்க பாதையும் என்னைக்கே வேறுபட்டுப் போயிடுச்சு. அது திரும்ப சந்திக்கிறதில் அர்த்தமே இல்ல.” பழைய நினைவுகளில் லயித்திருந்ததால் தானோ என்னவோ எப்போதும் வெறுப்பாகச் சொல்வதை இன்று மென்மையாகச் சொன்னாள்.
“இது நாலாவது முறை என்னை நீ நேரடியா நிராகரிக்கிறது.” கரகரப்பான குரலில் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள் அவனை.
“உன்னால் என்னை நிராகரிக்க முடியும் என்பதே எனக்கு ஆச்சர்யமா இருக்கு அமிர்தா. ஒவ்வொரு முறை என்னை நீ வேண்டாம் வேண்டாம் னு சொல்லும் போது என் உயிரே என்னை வேண்டாம் னு சொல்றது மாதிரி தோணுது.
எனக்கு என் அண்ணன் உயிரோட, உணர்வோட வேணும் னு நினைச்சேனே தவிர என்னைக்கும் நீ வேண்டாம் னு நினைச்சதே இல்ல. உன்னோட காயத்துக்கு மதிப்பு கொடுத்து விலகி நிக்க தான் நினைச்சேன். ஆனா முடியலையே என்ன செய்யுறது.” என்றவனின் கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்துவிட, அதுவரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் பட்டென்று திரும்பி நின்றுகொண்டாள். அவன் கண்ணீர் என்றுமே அவளைப் பாதிக்கும்.
குழந்தையின் கண்ணீரைக் காணும் அன்னை எப்பாடு பட்டாவது அதைத் தடுக்க நினைப்பது போல், என்ன செய்தாவது தன் காதலன் கேசியின் கண்ணீரைத் துடைத்துவிட வேண்டும் என்று அரும்பாடுபடுவாள். அப்படி ஒருநாளில் மோகனனைப் பற்றியும் அவன் பிரச்சனையைப் பற்றியும் சொல்லி வருத்தப்பட்ட போது, சற்றும் யோசிக்காமல் தன் அக்காவையே தூக்கி கொடுத்திருந்தாளே. எதற்காக அவன் மீது இத்தனை அன்பு வைத்தாய் பைத்தியக்காரி என வழக்கம் போல் தன்னைத் தானே திட்டிக்கொண்டாள் அமிர்தா.
error: Content is protected !!