Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் -16

*16*

சித்தப்பா அத்தைகள் வீட்டினில் அந்த வாரம் விருந்திற்கு அழைத்திருந்தனர். இன்னும் ஒரு வாரம் தான் விடுமுறை இருக்கிறது அதற்குள் சென்று வந்துவிடலாம் என்று அவள் சொல்ல, அவன் வாயே திறக்கவில்லை. கந்தசாமி கூட கேட்டுவிட்டார் எப்போது செல்கிறீர்கள் என்று.

“வெளில போற பிளான் இருக்கு. போய்ட்டு வந்து பாக்குறேன்.” என்று சமாளித்தவனுக்கு விருந்துக்கு போகும் எண்ணம் துளியும் இல்லை.

சித்தப்பா வீடுகளுக்கு சென்றால் அத்தை வீடுகளுக்கும் செல்ல வேண்டும். இன்னும் தன்னை மறக்கவில்லை என்று வள்ளி சொன்னபின் மகிழ்வாய் சிறிய அத்தை வீட்டிற்கு சென்று எப்படி விருந்து கொண்டாட என்று மனம் முரண்ட, அதனை மறுக்கவென காரணம் தேடி அலைந்தான். நண்பர்கள் எங்கே செல்கிறாய் என்று விசாரிக்கவும் வெளியூர் செல்லும் எண்ணம் வந்துவிட்டது. 



Advertisement

“ஊட்டி, கொடைக்கானல் எங்கேயும் போவோமா?” மனைவியைக் கேட்க, கணவனுடன் நேரம் செலவழிக்க ஆசைப்படுபவள் மறுக்கவா செய்வாள். உடனே திட்டம் தீட்டி ஊட்டிக்கு கிளம்பி விட்டனர்.

கார் ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினால் வசதியாக இருக்கும் என்று அவள் நினைக்க, செலவை எண்ணி யோசனை அவனுக்கு. அதை சொல்லாமல் பொதுவாக அவளை சமாதானம் செய்ய, பெரிதுப்படுத்தவில்லை குழலி. அவனுடன் செல்வதே போதுமென்று இருந்துகொண்டாள். இரயிலில் கோவை வரை சென்று அங்கிருந்து பஸ் பிடித்து சென்றனர். மனம் கவர்ந்தவன் அருகில் இருக்க, இயற்கை காற்று முகத்தினில் மோத, அதன் எழில் அவள் அகத்திலும் முகத்திலும் பரவியது. 

“பர்ஸ்ட் டைம் லாங் ட்ரிப் போறேன்.” மகிழ்வுடன் அவன் தோள் சாய, ஆசையாய் அவள் கைப்பற்றிக்கொண்டான் முகிலன்.

Advertisement

அங்கு சென்றபின் இருசக்கர வாகனமொன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஊர் சுற்றினர். பார்க்கும் இடத்தில் எல்லாம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டாள் குழலி. அவனையும் இழுத்து பல சுயமிகள் பதிந்துகொண்டவள் சிறுமியென துள்ளிக்குதித்து வலம் வந்தாள்.

Advertisement

ஆர்வமாய் கடைகளில் அவள் வாங்கிய பொருட்களைப் பார்த்து இவன் நெஞ்சை பிடிக்காததுதான் குறை. பெண்கள் அனைவருக்கும் பார்த்து பார்த்து வாங்கினாள். 

“படிப்பு முடிச்சு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம், கையில காசு சேரவும் தங்கச்சிங்க படிப்பு கல்யாணம்னு போய்டுச்சு. இப்போ மனசுல எந்த அழுத்தமும் இல்லை. ஹாப்பியா ஷாப்பிங் பண்ணிட்டு போட் ரைட் போகணும், உச்சியில இருக்குற மேகங்களை தொட்டு பாக்கணும், கை கோர்த்துட்டு கால் வலிக்குற வரை நடக்கணும், கண்ணை மூடி இந்த இயற்கை காத்தை ரசிச்சு சுவாசிக்கணும்…” மனம் இலகுவாக, யோசியாமல் வந்தது வார்த்தைகள். தோன்றியது எல்லாம் பேசினாள், வாங்கினாள்.

“இங்க எல்லாமே விலை அதிகமா இருக்கு கண்டிப்பா இவ்வளவு வாங்கணுமா?” அவன் பர்ஸின் கனம் குறைய ஒருமுறை கேட்டேவிட்டான் முகிலன். 

Advertisement

“எல்லாம் மெமரீஸ்.” என்றவள் பணத்தை பற்றி யோசியாது செலவு செய்தாள். அவனுக்கு சங்கடமோ என்று எண்ணி ஒருமுறை தன் பையிலிருந்து பணத்தை எடுக்க, அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவளை தடுத்து அவனே எல்லா செலவும் செய்தான். 

படகு சவாரியின் போது பயன்படும் பெரிய குல்லாவை வாங்க அவள் முனைய, அன்றாடங்களில் உபயோகப்படாத பொருளை வாங்க வேண்டுமா என்று அவன் தடுத்தான். 

“தேவைன்னு வந்தா செலவாகுறது பத்தி யோசிக்காம வாங்கிடுவேன். ஆசைக்கோ, ஆடம்பரத்துக்கோ வாங்கனும்னா பத்து தடவை யோசிப்பேன், ஒம்போது முறை வேணாம்னு வந்துருவேன். ரொம்ப ரேரா வாங்குவேன். இன்னைக்கு அப்படி யோசிக்க தோணல, ஒன் டைம் யூஸ் தான் ஆனாலும் எனக்கு புடிச்சிருக்கே.” என்று சொல்பவளை எப்படி மறுப்பது என்று அமைதியாக வாங்கிக் கொடுத்தான். 

படகு சவாரி முடித்துக்கொண்டு அவனுக்கும் பரிசுகள் வாங்கினாள் குழலி.

“இவ்ளோ காஸ்லியா எதுக்கு? நான் போட மாட்டேன்.” அவன் மறுக்க, இவள் முறைக்க, இறுதியில் அவளே வென்றாள். 

“என் கிஃப்ட் இது.” என்று அவள் செலவில் வாங்கிக்கொடுத்தாள். 

இதற்கு மேல் வெளியே சுற்றினால் தன் பர்ஸ் காலியாகிவிடும் என்று நினைத்தானோ என்னவோ நேரமே அறைக்கு கூட்டி வந்துவிட்டான்.

“இன்னும் கொஞ்ச நேரம் சுத்தி பாத்திருக்கலாம், இப்போ தான் கிளைமேட் சில்லுனு இருக்கு.” அவள் முகம் தூக்க,

“இப்போவும் சுத்தி பாக்கலாமே. யார் வேணாம்னா?” என்றான் முகிலன்.

சந்தேகமாய் அவனைப் பார்த்தவள், “பேச்சுல ஒரு இது தெரியுதே…”

“மேகத்தை தொட்டு பாக்கணும்னு சொன்னீல்ல தொடு வா.” இடக்கை தன் சட்டை பட்டனை அவிழ்க்க, மறு கை அவளை தன்னில் இழுத்தது, “சில்லுப்பு வேணும்னு சொன்னியே… வாடி…”

அவனின் விஷமம் புரிந்து அவள் விலக, அவனது பெயர்க்காரணம் சொல்லி அவள் பெயர்க்காரணம் தெரிந்துகொண்டு அவள் கூந்தலின் அடர்த்தியில் முழுதாய் மறைந்து, மயங்கிப்போனான். பெயருக்கு ஏற்றாற் போல் அவள் கரிய கூந்தலை அலங்கரிக்க பூக்கள் வாங்க மறந்தவனாய் அதனுள் ஈர்க்கப்பட்ட வண்டென சிறு சிறு முத்தங்களை வழங்கி வட்டியோடு திரும்பப் பெற்று திருப்தியாக தேனிலவு கொண்டாடி ஊர் திரும்பினர்.

“விருந்துக்கு போகலையாடா?” அவர்கள் திரும்பி வந்ததும் கேட்டார் கந்தசாமி. மருமகன் எப்போது விருந்துக்கு வருகிறான் என்று அவர் பெரிய தங்கை குடைய, மகனை நெருக்கினார்.

“இன்னும் ரெண்டு நாள்ல வேலைக்கு போகணும். எல்லாரும் மதிய சாப்பாட்டுக்கு கூப்பிடுவாங்க, அதுக்குள்ள நாலு வீட்டுக்கு போயிட்டு வர முடியாது. ஒருத்தர் வீட்டுக்கு போய்ட்டு இன்னொரு வீட்டுக்கு போகலைனா மனக்கசப்பாகிடும்.” என்று சொல்லி சமாளித்தவனின் மனதினை ஓரளவு யூகித்த கந்தசாமி அதன்பின் வற்புறுத்தவில்லை. 

மாமியாருக்கு வாங்கி வந்த மணிபர்ஸை அவரிடம் கொடுக்க, “எனக்கெதுக்கு இதெல்லாம்?” உள்ளுக்குள் மெச்சிக்கொண்டாலும் வெளியே இறுக்கமாக காட்டிக்கொண்டு கேட்டார் மாரியம்மாள்.

“தினம் வயலுக்கு போறப்போ போனை சுருக்கு பையில வச்சி கஷ்டப்பட்டு எடுத்துட்டு போறீங்க. இதுல வச்சுக்கிட்டா வசதியா இருக்கும்.”

“என்னவோ சொல்ற.” என்று முனகிக்கொண்டே அதனை ஆர்வமாய் வாங்கிப் பார்த்தார். அதனுள் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்கள் இருக்க, புருவம் உயர்த்தி மருமகளை ஏறிட,

“வெறும் பர்ஸா கொடுக்கக்கூடாதுனு சொல்லுவாங்க அதுதான்.”

“இதுல இருக்குற சாமர்த்தியம் எல்லாத்துலயும் இருக்கணும். சீக்கிரம் நல்ல சேதி சொல்லணும்.” என்று கண்டிப்புடன் சொல்ல, அவள் முகம் சுருங்கி தெளிந்தது. 

கவனித்துவிட்ட முகிலன் என்னவென்று பார்வையால் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள். இலகுவாக அதனை கடந்துவிட்டவன் இரவு படுக்கையில் மனைவியை நெருங்க, அவள் தடுத்தாள்.

“என்ன மலர்?”

“ஷோரூம்ல ட்ரான்ஸ்பருக்கு கேட்டிங்களா? என்ன சொல்றாங்க?” கணவன் பிடியிலிருந்து நழுவி வந்து அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

பிடிகொடுக்காமல் அவளை தன்னுள் இழுத்துக்கொண்டவன், “இப்போ இதையா பேசுவாங்க?” என்று அவள் கழுத்தினுள் புதைய பிடிவாதமாக அவனை பிரித்துத் தள்ளியவள்,

“எப்போ பேசலாம்னு சொல்லுங்க அப்போ.”

அவளின் மறுப்பு எரிச்சலை கொடுக்க, முகத்தை அழுந்த தேய்த்தவன் பெருமூச்சுடன், “காலையில பேசலாம்.” என சமாதானமாய் அவளை அணைத்தான்.

“நாளைக்கு காலையில டவுன்ல இருக்குற கோவிலுக்கு போகணும்னு சொன்னீங்க.”

“போய்ட்டு வந்து பேசலாம்.” முயன்று அமைதியாக அவன் பதிலளிக்க, ஒப்பவில்லை அவளுக்கு. தள்ளிபோட்டு தவிர்த்துக்கொண்டிருக்கிறானே என்ற தவிப்பு அவளிடம். 

“நாளான்னையோட லீவ் முடியுது.” 

“அதுக்கு என்ன மலர்?” அவன் முகம் தூக்க ஆயாசமாய் வந்தது குழலிக்கு. 

ஆசையுடன் நெருங்கும் கணவனை தள்ளி வைத்து நேர்க்காணல் நடத்தவேண்டும் என்று அவளுக்கு மட்டும் ஆசையா என்ன? நாட்கள் சுருங்க பிரிவின் துயர் மனதை ஆக்கிரமிக்கிறது. அதனை பேசி தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்றால் இவன் பிடிகொடுப்பதில்லை. வற்புறுத்தி கேட்டால் முகம் சுருங்குகிறது. அவன் முகம் சுருங்கினால் இவள் மனம் வாடுகிறது. அவன் மனம் நோகும்படி பேசிவிடக் கூடாது என்று வார்த்தைகள் கூட வலிக்காதது போல் வருகிறது. இதற்கு மேல் என்ன வேண்டுமாம் இவனுக்கு. ஆசையும் மோகமும் முப்பது நாளுக்காம் அதை தாண்டியும் தக்க வைத்துக்கொள்ள தேவையான வெளிப்படைத்தன்மை தேவையானவற்றை பேசாமல் ஒதுக்கிவைத்தால் வந்துவிடுமா? பேசப் பேச, மனங்களின் புரிதல் கூடுமென்று யார் சொல்வது. யோசனைக்குள் சிக்குண்டு அவள் மெளனமாகிவிட, கைகளை தலைக்கு முட்டுக்கொடுத்து விட்டதை வெறித்தபடி திரும்பிப்படுத்தான் முகிலன். 

திருமணமான சில நாட்களாக அவளாகவே அவன் தோளில் தலை சாய்த்து உறங்குவதை வாடிக்கையாக்கியிருந்தாள். இன்று அதனை உடைத்து இடைவெளி கொண்டு வந்தனர் இருவரும். சிறிது நேரம் சென்று இலகுவானவனாய் மனைவியை அணைக்க, அசையாது இருந்தாள் குழலி. அவ்வப்போது எழுந்த ஏமாற்றங்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அவளை இறுக்கமாக்கியது. எப்போதும் தன் கைவளைவில் நெகிழும் மனைவி இப்போது அழுத்தமாக இருப்பதை உணர்ந்தவனுக்கு வேறு வழியிருக்கவில்லை.

“ரீ-ஜாயின் பண்ணதும் டிரான்ஸ்பருக்கு பேசி பாக்குறேன்.” என்று இறங்கி வந்தான். மெல்ல அவள் உடல் தளர்ந்தது. ஆனாலும் அவன்புறம் திரும்பவில்லை. 

“மலர்?” 

“எனக்கு தூக்கம் வருது.” விலகல் தன்மையுடன் அவள் கண்மூட, எக்கி அவள் முகம் பார்த்தான். மூடிய விழிகளுக்குள் அங்குமிங்கும் நகர்ந்த கருமணிகள் அவள் மூளை விழித்திருப்பதை பறைசாற்றியது.

“கோவமா மலர்?” மனம் கேளாது வாய் திறந்தான். ஆனால் பேச்சை தள்ளிப்போடுவது இப்போது இவள் முறையானது. இருமுறை அவளை அழைத்துப் பார்த்தவன் பதில் வரவில்லை எனவும் அமைதியாக படுத்துவிட்டான். 

முதல் கசப்பு இருவரின் புத்துணர்ச்சியையும் குறைத்திருந்தது. கேட்டுக்கொள்ளவில்லையே தவிர சோர்ந்த முகத்தோடு சுற்றி வந்த மகன் மருமகளை யோசனையாக பார்த்தார் மாரியம்மாள். அவ்வப்போது மருமகளை வேலை ஏவ தவறாதவர் மறுபேச்சு பேசாது தான் சொல்வதை செய்பவளை ஒருகட்டத்திற்கு மேல் சீண்டவில்லை. வீட்டு வேலையை அவளிடம் கொடுத்துவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

“கூட்டிட்டு போய் நம்ம வயலை சுத்திக்காட்டு முகிலு.” என்று கந்தசாமி அனுப்பிவைக்க, மனைவியை சரி செய்யும் பொருட்டு அழைத்துச் சென்றான்.

அங்கிருப்பதை பற்றி அவன் தகவல் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டவள் எதிர்வினை ஆற்றவில்லை.

“நாளைக்கு ஊருக்கு கிளம்புடுவ மலர். இப்படியே இருக்க போறியா நீ?” ஆள் அரவமற்ற இடத்திற்கு நகர்ந்து வந்ததும் அவள் ஒதுக்கம் தாளமாட்டாது கேட்டுவிட்டவன் அவள் நகர்ந்துவிடாமல் இருக்க தன்னிடம் பிடித்துக்கொண்டான். 

“அதேதான் எனக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் சென்னைக்கு வந்துடுவீங்கன்னு சொன்னீங்க ஆனா அதுக்கு எந்த ஸ்டெப்பும் எடுக்கல. நான் கேட்டாலும் ஏதாவது சொல்லி மழுப்புறீங்க. என்ன முடிவுல இருக்கீங்க நீங்க?” பேசக்கூடாது என்று கட்டுப்படுத்தினாலும் மனதின் ஏமாற்றங்கள் வார்த்தைகளாய் வெளிவந்துவிட்டது. 

“அதான் கேக்குறேனு சொல்லிட்டேனே திரும்பவும் அதையே புடிச்சி தொங்குற?”

“நான் தள்ளி படுத்ததுக்கு அப்புறம் சொல்றீங்க. அப்போ உங்ககிட்ட பதில் வாங்கணும்னா நான் தள்ளிப்படுக்கணும், அப்படித்தானே?” என்று அழுத்தமாக கேட்டவள் புரிதல் வேறு மாதிரி இருக்க, தடுமாறிப் பார்த்தான் முகிலன்.

“என்ன பேசுற நீ?” ஒரு விதத்தில் அதுவும் உண்மை தானே. அவள் விலகவும் வேறு வழியின்றி இவன் மனம் இறங்குகிறது. 

“சரியா தான் பேசுறேன். கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு பேருக்கும் புரிதல் இல்லை அதுஇதுனு காரணம் சொன்னீங்க. இப்போ என்னன்னா அந்த பேச்சை எடுத்தாலே தள்ளி போடத்தான் பாக்குறீங்க. பிரச்சனையை பேஸ் பண்ணாம தள்ளி போட்டா அதுக்கான தீர்வு கிடைச்சிடுமா? இல்லை தீர்வு கிடைக்க பொண்டாட்டியா என் தேவையை அடக்கி புருஷனா உங்களை நெருங்க விடாம பண்ணனுமா, அப்படி பண்ணா அங்க மனசுக்கு என்ன மரியாதை?” என்று குழலி பொரிந்து தள்ள, அதிர்ந்து நின்றான் முகிலன். 

அவளிடமிருந்து இப்படியான அழுத்தமான அணுகுமுறையை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை என்று அவன் முகமே சொல்லியது. புதுமணமானவனுக்கே உரித்தான தேடலுடன் மனைவியை நெருங்கியது சரியென்றாலும் அந்த தேடலை ஏற்றோ விலக்கியோ காரியம் சாதித்துக்கொள்வது எப்படி ஆரோக்கியமான உறவாக இருக்க முடியும் என்று மனைவி வாதிட்டதை புரிந்துகொள்ளவே நேரமெடுத்தது அவனுக்கு.

“தேடி கொண்டு வந்தீங்களே மருமகன்னு அவ தான் முகிலை ஏதோ சொல்லியிருக்கா. அவன் முகமே சரியில்லை.” என்று கணவரிடம் முறையிட்டார் மாரியம்மாள்.

“அந்த பொண்ணு முகமும் தான் சரியில்லை அப்போ முகிலும் ஏதாவது சொல்லி இருக்கலாம்ல.” என்று வீம்புக்கென்று எதிர் கேள்வி கேட்டவரா, “மனஸ்தாபம், சங்கடம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லாத்துலயும் மூக்கை நுழைக்காத. முட்டி மோதி அவங்களே சரியாகிக்குவாங்க.”

“ம்ம்க்கும்… முகிலை இங்க தனியா விட்டுட்டு அவ வேலையை பாக்க நாளைக்கு கிளம்புறா, அதான் அவன் அப்படி இருக்கான்.” என்று அதிலேயே நின்றவர் மீண்டும் மருமகளை முறைக்க ஆரம்பித்துவிட்டார். 

கட்டியவன் மீதே அதிருப்தியில் இருக்க, மாமியாரின் அதிருப்தி எல்லாம் அவளை அசைக்கவில்லை. அமைதியாக இரவுணவு முடித்து உறங்கச் செல்ல, அந்நாள் முழுதும் யோசித்தவன் அவளை நெருங்கவே தயங்கினான். மறுநாள் இரவு சென்னை கிளம்புகிறாள், இப்படி மனக்கசப்புடன் அவளை அனுப்பி வைப்பதா என்று மனம் பிசைய அவளருகில் அமர்ந்து கை பிடித்தான்.

“எல்லாத்துலயும் உடனே முடிவு எடுக்கணும்னு நீ நினைக்குற. ப்ளோல பாத்துக்கலாம்னு விட்டுறேன் நான். நாம யோசிக்குற விதம் வேறையே ஒழிய நீ தள்ளி போறேங்குறதுக்காக எல்லாம் சம்மதிக்கல. இங்க எல்லாத்தையும் விட்டுட்டு வர யோசனையா இருக்கு.”

“அப்போ என்னை விட்டுறலாம்னு நினைச்சீங்களா?” சமாதானம் ஆவாள் என்று அவன் மனம் திறக்க, அவளுக்கு என்ன ஆனதோ எல்லாம் தவறாய் புரிந்துகொள்ளப்பட்டது. 

“மலர்?” அதிர்ந்து விழி விரித்தான். பேச்சு தொண்டையில் சிக்கிக்கொண்டது. 

“ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திகலாம்னு கேட்டதுக்கு பேச்சை மாத்துனீங்க, சரின்னு விட்டுட்டேன். இப்பவும் இப்படியே இருந்தா அதுக்கு என்ன அர்த்தம்? ஒன்னு என்னை விடனும் இல்லை நான் என் வேலையை விடனும். நீங்க எதுவும் செய்ய மாட்டீங்க அப்படித்தான?”

“நீ கேக்குற மாதிரி உறுதியா சொல்ல முடியாமதான் நான் தள்ளிப்போட்டேன், மத்தபடி உன்னை விடுற யோசனையெல்லாம் இல்லை.”

“அப்படியா ரொம்ப சந்தோஷம்.” என்றவள் இறுக்கமான முகத்துடன் திரும்பிப் படுத்தாள். 

“ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற நீ? நல்லா தான இருந்த.” மனைவியின் விலகலை ஏற்கவே முடியாதவனாய் தடுமாறினான். அவள் சொல்வது போல் ஏதாவது மாயம் நிகழ்ந்து அவள் இங்கு வந்துவிடமாட்டாளா என்று அவன் தள்ளிப்போட்டது அவனுக்கு எதிராய் திரும்பியது.

“மூத்தது முச்சந்தில நிக்க வச்சிருச்சு, அதிர்ஷ்டகெட்டவ, ராசியில்லாதவ, விளங்காதவனு பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக எத்தனையோ பேர் வாங்கி இருக்கேன். அதுவும் பெத்த தகப்பங்கிட்ட இருந்து. அவர் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் அவருக்கு பாரமா வந்து சேர்ந்துட்டோம்னு கரிச்சி கொட்டிட்டே இருப்பாரு. வயசுக்கு வந்தா எவன் கையில புடிச்சி கொடுக்கலாம்னு காத்துகிட்டு கிடந்தாரு. ஊருக்கு பயந்து சோறு போட்டாரு இல்லைனா எங்கேயாவது எங்களை வித்திருந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை. சந்தோஷம்னா என்னனு பெருசா என் சின்ன வயசுல பாத்தது இல்லை. பயம், அழுகை, கழிவிரக்கம்தான் எங்களோட நினைவுல இருக்கு.” ஒரு வேகத்தில் தன் மனதை கொட்டியவள் உணர்ச்சி மிகுதியில் தொண்டையடைக்க வார்த்தைகளுக்கு முற்று கொடுத்து முகத்தை மூடி திரும்பிப்படுத்தாள். கண்கள் கலங்கி பேச விருப்பமில்லாதவளாய் எச்சில் கூட்டி விழுங்கி தன்னை சமன் செய்ய முயல, அதிர்வில் இருந்த முகிலன் அவள் தோள் தொட்டு எழுப்ப முயன்றான்.

முரண்டு பிடித்து அவன் கைகளை அவள் தட்டிவிட, “என்னை பாரு மலர்.” பிடிவாதமாக அவளை தன்னை நோக்கி திருப்பி கன்னத்தில் இறங்கிய கண்ணீரை துடைத்துவிட்டான். 

“பொம்பளை புள்ளைங்க தனிச்சி இருக்க முடியாது, அவங்களால சல்லிப்பைசா தேறாது, செலவுதான் மிஞ்சும்ன்னு எங்களை பாரமா நினைச்சாரு. காலையில் அவர் வேலைக்கு கிளம்புறப்போ அவர் எதுக்க போயிட்டோம்னா போதும் அன்னைக்கு முழுக்க எங்களை ஒருவழி பண்ணிடுவாரு. ஆம்பளைன்னா வரம், பொம்பளைன்னா சாபம்னு அந்த மனுஷன் சொல்லி கேட்டு கேட்டு ஒருகட்டத்துல அவர் இல்லாம போனப்போ ஆசுவாசமா இருந்துச்சு. இனிமே நிம்மதியா ஒருவாய் சோறு சாப்பிடலாம்னு நினைக்கும் போதுதான் காசோட அருமை புரிஞ்சுது. பொண்ணுங்க தனிச்சி தங்களோட சொந்தக்காலுல நிக்குறது எவ்ளோ முக்கியம்னு கண்கூட அனுபவிச்சி தெரிஞ்சிகிட்டேன். சுதந்திர காத்தை சுவாசிக்குறதுக்கு முன்னாடி அத்தியாவசிய தேவை கண்முன்னாடி வரிசை கட்டி நின்னுச்சு. கையில இருந்ததை வச்சி எப்படியோ படிச்சு மேல வந்து ஓட ஆரம்பிச்சி இப்போ இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். 

ஆம்பளைங்கள அண்டிதான் இருக்கணும்னு அவர் அடக்க நினைக்குறதுக்கு முன்னாடியே என் அம்மா எங்களுக்காக அடங்கிப் போனாங்க. அன்னைக்கு அவங்க கையில ஒரு வேலை இருந்திருந்தா அவரை எதிர்க்க வலுவும் தன்னம்பிக்கையும் தன்னால வந்திருக்கும். மூணு பொண்ணுங்களை தன்னால கரை சேர்க்க முடியாதோன்னு அவங்க நினைச்சதால அந்த மனுஷனை சகிச்சி, அடி, உதை வாங்கி எங்களை அரவணைச்சாங்க. எந்த காலத்துலையும் இன்னொருத்தரை நம்பி இருக்கக்கூடாதுனு அந்த மனுஷன் வலிக்க வலிக்க பாடம் எடுத்துட்டு போயிட்டாரு. இன்னொரு முறை அந்த மாதிரியான நிலையில்லாத வாழ்க்கைக்கு என்னால போக முடியாது.” என்று திட்டவட்டமாய் கூறிவிட்டு அவள் குப்புற படுத்துவிட, முகிலன் அதிர்விலிருந்து வெளிவரவில்லை.

அப்பா இல்லை இவள்தான் குடும்பத்தை மேலே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாள் என்ற செய்தியை மேம்போக்காக கடந்திருந்தவன் அவளுள் இருக்கும் திடத்தை எளிதாக எடைபோட்டுவிட்டான். இப்போது அவள் சொல்லியது அவள் வேதனையில் பாதிகூட இருக்காதோ, இன்னும் எதையெல்லாம் உள்ளுக்குள் வைத்து மருகுகிறோளோ என்று மனைவியின் பால் சரிந்த மனதின் விளைவாய் அவள் தலையை ஆதரவாய் வருட,

“காயமெல்லாம் வடுவா மாறிட்டாலும் சில சமயம் இதுமாதிரி ஓபன் ஆகிடுது.” அவள் அரை கண்ணை திறந்து மூட, அருகில் படுத்தவன் அவள் சிகை கோதி, தோள் பிடித்துவிட்டான். அவனின் மென்சூட்டில் நகர்ந்து சென்று அவனை உரசியது போல் படுத்தவள் அவன் அருகாமையில் ஆதரவு பெற்றவளாய் அயர்ந்து உறக்கத்திற்கு சென்றாள்.

எந்த காலத்திலும் அவள் வேலையை விட்டு தன்னுடன் கிராமத்திற்கு வருவதெல்லாம் சாத்தியமே இல்லை என்று புரிந்து போனது அவனுக்கு. ஏதோவொரு சூழலில் அப்படியே அவள் வந்தாலும் தன் அன்னையுடன் அவளுக்கு ஒத்துப்போக வேண்டுமே என்ற யோசனை வேறு. ஒன்றாக குடும்பம் பண்ண வேண்டுமென்றால் தான் இறங்கி செல்வதை தவிர வேறு தீர்வு இல்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் பெருமூச்சு விட்டான். நேற்று அவளை சமாதானம் செய்யவென இறங்கி வந்தவன் இன்று முழுமனதாக சென்னைக்கு மாறிவிடுவது என்று முடிவெடுத்து உறங்க நேரம் எடுத்தது.

மறுநாளும் அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க, மனைவியை கூட்டிக்கொண்டு வெளியே சென்றுவந்தான். இரவு ஊருக்கு கிளம்பிவிடுவோம் அடுத்து எப்போது சந்திக்க முடியும் என்று தெரியாத காரணத்தால் குழலியும் கொஞ்சம் இறங்கி வந்து அவன் முயற்சிக்கு இணங்கி இலகுவானாள்.

“நீ டல்லானா இங்க என்னமோ பண்ணுது மலர். அதுவும் அழுதா தாங்கவே முடியலடி.” என்று நெஞ்சை நீவியபடி அவன் சொல்ல, கணவன் தோள் சாய்ந்தாள் குழலி.

“இவ்ளோ தானா?” என்று ஏக்கமாக அவன் பார்க்க, எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“பத்தாது.” என்று மற்றொரு கன்னத்தை காண்பிக்க, அங்கும் தன் அச்சை பதித்தாள்.

“இங்கேயும்.” என்று அடுத்து இதழ்களுக்கு அடிபோட, செல்லமாய் அவன் இதழில் அடித்தாள். அவள் கையை பிடித்தவன் அவள் இதழை சிறை செய்து எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தான்.

“நைட் கிளம்பணும்.” என்றாள் சோர்வுடன் அவன் சட்டை பொத்தானை திருகிக்கொண்டே.

அவனையும் பிரிவின் துயர் வாட்ட மனநிலையை மாற்றவெண்ணி, “ரெண்டு நாள் நீ பட்டினி போட்டிருக்க வேண்டாம்.” என்று அந்தரங்கம் பேசி செல்ல அடிகள் வாங்கிக்கொண்டான்.

“இப்படி அடிச்சா எப்போ அணைச்சி எப்போ என் அம்மாவை ஆச்சி ஆக்குறது.” 

“ஆசை தான்.” என்று இவள் முறுக்க,

“இல்லையா பின்ன… என் அம்மாக்கு மட்டுமில்லை எனக்கும்தான்.” குழைவு அவனிடம்.

“என்னாலேயே உங்களை விட்டு அங்க இருக்க முடியாதுனுதான் இவ்ளோ பாடு. இதுல குழந்தையும் வந்து தள்ளி இருக்கிறதா. அதெல்லாம் முடியாதுப்பா… முதல்ல அங்க வாங்க அப்புறம் எல்லாம் பாத்துக்கலாம்.” என்று முடிவாய் சொல்ல, பெருமூச்சு அவனிடம். 

நேரம் காத்திருக்காமல் நகர்ந்து இரவு வந்துவிட, உணவு முடித்து பையுடன் கிளம்பி நின்றாள் குழலி. செல்லும் முன் தம்பதியராக பெரியவர்களிடம் ஆசி வாங்க, முகம் தூக்கினார் மாரியாம்மாள். கணவனைப் பிரியும் குழலியும் இழுத்துப் பிடித்த இளக்கத்தோடு கிளம்பினாள்.

முன்னரே சென்றுவிட்டவர்கள் இரயில் வரும் வரை கோர்த்த கைகளை பிரிக்கவே இல்லை. பேச ஆயிரம் இருந்தும் பேசினால் உடைந்து விடுவோமோ என்று அவள் இதழ்களுக்கு பூட்டு போட்டுக்கொள்ள, என்ன பேசினாலும் பிரிவின் துயரை இக்கணம் போக்க முடியாது, இதனை கடந்துதான் ஆக வேண்டும் என்று அமைதியாக இருந்தான் முகிலன். இரயில் வரவும் உள்ளே வரை வந்து அவளை பத்திரமாக அமர வைத்து வெளியேறியவன் ஜன்னல் வழி நீண்ட அவள் விரல்களை அழுந்த பற்றிக்கொண்டான். விழிகள் நான்கும் சந்தித்து மெளனம் பேச, முதல் பிரிவு அவர்களை வாரி சுருட்டிக்கொண்டது. 

மெல்ல நகரும் இரயிலின் வேகத்தில் விரல்கள் தன்னால் பிரிந்துகொள்ள, விழிகள் நான்கும் இப்போது மெளனம் விடுத்து பளபளத்தது.

சட்டென கலங்கலாக தெரிந்த பிம்பத்தை பரபரவென தேய்த்து சரிசெய்துகொண்டு அவளை பார்க்க முயன்றான் முகிலன். இரயில் எப்போதோ சென்றிருக்க, வெறித்த தண்டவாளங்கள் அவன் வெறுமையை உணர்த்தியது. தன்னில் இருந்து ஏதோ பிரிந்து சென்ற உணர்வு துக்கமாய் அடைக்க, அண்ணாந்து பெருமூச்செடுத்தான். மனம் இலகுவாக மறுத்தது. நினைவுகள் அவளுடனான நேரங்களை தற்சமயம் கொண்டுவந்து பிரிதுயரை இன்னும் அதிகப்படுத்தியது. இந்த நொடியை கடப்பது அத்தனை கடினமா என்று கேட்டுக்கொண்டவன் இலக்கின்றி வண்டியில் சுற்றிய பிறகே வீடு சென்று சேர்ந்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!