Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 11

அத்தியாயம் 11 

அப்பா, அம்மா, அக்கா, தங்கை குடும்பங்களுடன் வந்து பெண் வீட்டின் முன் இறங்கினார் விஜயன்.



Advertisement

பெண் பார்க்கும் வைபவத்திற்கு அனைவருக்கும் புத்தாடை வேண்டும் என்று சகோதரிகள் கேட்டதால், அதற்காக முன்பே காசு அனுப்பி வைத்திருந்தார் விஜயன். காலையில் கிளம்பும் போது அம்மாவிடம் வந்து,

“என் புது சட்டை எங்கே அம்மா?” என்று ஆசையாக கேட்கவும், அவர் அம்மா ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் நின்று விட்டார்.

Advertisement

Advertisement

மகள்கள் தான் அனைவருக்கும் துணி எடுத்து வருவதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு சென்றிருந்தார்கள். இவருக்கு ஒரு புடவையையும் கணவருக்கு வேஷ்டி சட்டையும் கொண்டு வந்து கொடுத்து இருந்தனர். ஆனால் மகனுக்கு வாங்கியதாக ஒன்றும் கூறவில்லை. இவரும் யோசிக்காமல் விட்டு விட்டார். பேரக்குழந்தைகளின் துணிமணிகளை எல்லாம் ஆசையாக பார்த்தவர், விஜயனை பற்றி யோசிக்க தவறி இருந்தார்.

“என்ன அண்ணா நீ அம்மா கிட்ட கேட்குற.. துபாய்ல இருந்து வர மாப்பிள்ளை அங்கே இருந்து டிரெஸ் கொண்டு வரலையா?” என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் ஸ்வாதி.

Advertisement

விஜயனின் அம்மா பத்மாவிற்கு மனதிற்கு மிகவும் வருத்தமாக போய் விட்டது. விஜயன் அங்கே எப்பொழுதுமே துணிகள் எடுக்க மாட்டான் என்பது அவருக்கு தெரியும். இங்கேயும் அவருக்கு என்று அதிக செலவில் எடுத்து கொள்ளமாட்டார். தேவைக்கு வருடத்திற்கு நான்கு ஐந்து சட்டைகளை எடுத்து கொள்வார் அவ்வளவே.

அம்மாவின் முகத்தை பார்த்து, “பரவாயில்லை ம்மா. தீபாவளிக்குன்னு ஒரு சட்டை போடாம தான் வச்சிருக்கேன் அதை போட்டுக்கலாம்” என்று கூறி உள்ளே சென்று விட்டார்.

ஸ்வாதியோ அக்கா லக்ஷ்மியோ இதை ஒரு விஷயமாக எண்ணவே இல்லை. 

பத்மா அம்மாவிற்கு மகனின் எதிர்காலத்தை நினைத்து முதல் முறையாக பயம் வந்தது. இந்த பொண்ணுங்களுக்காக எவ்வளவு செஞ்சிருக்கான், நாளைக்கு ரெண்டு பேரும் அவனுக்கு துணையா இருப்பாங்கன்னு நினைச்சது தப்பு போல என்று சிந்திக்க தொடங்கினார்.

———–

பெண் வீட்டில் அனைவரும் வாசலுக்கு வந்தே இவர்களை வரவேற்றனர்.

விஜயன் மனதிற்குள் அவன் கனவில் வந்தது போல பொம்மி வருவாளா? என்று எண்ணம் தோன்ற, அந்த எண்ணம் தந்த வெட்கத்தோடு வந்து அமர்ந்தார்.

பெண்ணின் அப்பா, “நான் தாங்க தண்ணீர்மலை. இது என் சம்சாரம் கலையரசி. இங்க தான் ‘அரசி உணவகம்’ வச்சு முப்பது வருஷமா நடத்திட்டு இருக்கோம், எனக்கு மூன்று பசங்க, ஒரு பொண்ணு” என்று சுருக்கமாக தங்கள் குடும்பத்தை பற்றி கூறினார்.

விஜயனின் அப்பா அதிகம் பேச மாட்டார். சென்ற முறை வந்திருந்த போது தான் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை ஏற்பாடு செய்திருந்தார் விஜயன். இப்பொழுது குடிப்பழக்கம் இல்லை என்ற பொழுதிலும் அதிக உற்சாகம் அவரிடம் இருப்பதில்லை.

பத்மா அம்மா தான், அவர்கள் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“பெண்ணை கூட்டிட்டு வர சொல்லுங்க ம்மா” என்றாள் லட்சுமி கொஞ்சம் சத்தமாக.

கலையரசி எழுந்து உள்ளே சென்றார் பெண்ணை அழைத்து வர.

நீங்களும் போய் பலகாரம் எல்லாம் எடுத்துட்டு வாங்கப்பா என்று மகன்களிடம் கூறினார் தண்ணீர்மலை.

விஜயன், ‘தனக்கு முன்பு நீட்டப்படும் காஃபி கோப்பைகள், அந்த வலைக்கரம், நிமிர்ந்து நோக்கினால் அழகிய மலர்விழிகள்’ என்று படபடப்பாக கனவில் வரும் காட்சிகள் மனதிற்குள் தோன்ற, எண்ணங்களுடன் போராடி கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிரவில்லை.

முதலில், குலாப் ஜாமூன்கள் நிறைந்த கிண்ணங்கள் நீட்டப்பட்டது.

யார் என்று நிமிர்ந்து பார்த்தார்,

“என் பெரிய பையன் சண்முகம்” என்றார் பெண்ணின் அப்பா.

அடுத்து ஒரு தட்டில் வடை நீட்டப்பட்டது..

இப்ப யாரு என்று நிமிர்ந்து பார்த்தார், “என் இரண்டாவது பையன் சிங்காரம்” என்று குரல் ஒலித்தது 

‘போச்சு ஸ்வீட் காரம், முதல் இரண்டு பசங்க.. அப்ப காஃபி மூனாவது பையன் தான்.. என் கனவு புஸ் தான் போல’ என்று கலக்கமாக போய்விட்டது விஜயனுக்கு.

“எடுத்து சாப்பிடுங்க தம்பி” என்றார் தண்ணீர்மலை தன் கணீர் குரலில்.

பலகாரங்கள் மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் அதில் தங்கள் கவனத்தை தற்காலிகமாக மாற்றிவிட்டார்கள்.

பிள்ளைகள் ஆசையாக உண்ணவே, அவர்களுக்கு திரும்ப திரும்ப கொண்டு வந்து பரிமாறினார்கள் அண்ணண்கள்.

விஜயனின் வீட்டு மாப்பிள்ளைகள் ஒரு மாதிரியாக பார்க்கவும்,

“பொண்ணு பார்த்து உறுதி செஞ்சதுக்கு அப்புறம் சொந்த பந்தங்களை  கூப்பிட்டுகலாம்னு வேற யாருக்கும் இன்னிக்கு சொல்லலை. அதான் பசங்க செய்றாங்க.. இல்லைனாலும் அவங்க அம்மாவுக்கு உதவுவாங்க..” என்றார் தண்ணீர்மலை இவர்களின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டு.

“மனிதர் விடாக்கண்ணனா இருப்பார் போலவே..” என்று தங்கையின் காதில் கிசுகிசுத்தாள் லக்ஷ்மி.

“எல்லாருக்கும் காஃபி கொடும்மா” என்றார் தணிகாச்சலம்.

உடனே விஜயன் தலையை குனிந்து கொண்டார்.

நடக்கபோகுது.. நிஜமா நடக்க போகுது.. அய்யோ நடக்கவே போகுது என்று மனது கிடந்து துள்ளியது.

மெல்லிய கொலுசு சத்தம் கேட்டது. மற்றவர்களுக்கு காஃபி கொடுப்பது புரிந்தது.

“எடுத்துக்கோங்க தம்பி..”  என்ற குரலுடன் சேர்த்து இவருக்கு முன்பாக ஒரு ட்ரே

நீட்டப்பட்டது.

இவர் கனவில் வந்தது போல கப்புகளில் இல்லை.. அழகான பித்தளை டபரா  டம்ளர்களில் இருந்தது காஃபி.. அந்த பிஞ்சு விரல்களை பார்த்தார்.. பின் மெல்ல நிமிர்ந்து பார்த்தார்.

பொம்மி அவரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து அழகாக சிரித்தாள்.

அந்த நொடி… தன்னை மறந்தார்.. தன் சுற்றுப்புறத்தை மறந்தார்… தன் முன் இருந்த காஃபியை மறந்தார்.. தன் கனவையும் மறந்தார். 

‘பொம்மி’ என்று மிகவும் மெல்ல முணுமுணுத்தது அவரது உதடுகள். அதை கண்டுகொண்டாள் அவரின் பொம்மி.

“எவ்வளவு நேரம் பிடிச்சிருக்கு.. எடுத்துக்கோங்க” என்றார் சரவணன் தங்கையின் அருகில் வந்து.

“நீயும் மச்சான் பக்கத்துல உட்காரு அனு..” என்று காஃபி  ட்ரேயை  வாங்கிக்கொண்டு தங்கையை அமர வைத்தார்.

பின் அவரே விஜயனுக்கு ஒன்றையும் தங்கைக்கு ஒன்றையும் எடுத்து கொடுத்தார்.

“இவன் தான் மூணாவது பையன் சரவணன்”. மீண்டும் ஒலித்த குரல் இப்பொழுது விஜயனை எட்டவில்லை.

“இந்த அண்ணா என்ன அக்கா நம்ம மானத்தை வாங்குது.. இப்படியா பொண்ணை ஆன்னு பார்க்கிறது”

“அதை விடு.. இங்க பொண்ணு ரொம்ப செல்லம் போலவே.. காஃபி  தட்டை  கூட பிடிச்சு நின்னா கஷ்டம்னு சொல்றாங்க..”

“நானும் அதான் அக்கா யோசிக்கிறேன்..”

மகள்கள் இருவரும் கிசுகிசுப்பது பத்மா அம்மாவின் காதில் நன்றாகவே விழுந்தது.

மகனின் முகத்தை பார்த்தார்.

சிறு வயதில் பார்த்த விஜயன் நினவில் வந்தார். எந்த கவலையும் சுமையும் இல்லாமல், இலகுவாக இருந்த தோற்றம். மலர்ச்சியான முகம், அதில் சின்ன புன்னகை.. பெற்ற தாயின் மனதிற்கு மகனின் மனது புரிந்து விட்டது.

“நாம வீட்டுக்கு போய் பதில் சொல்றோம்னு சொல்லு ம்மா” என்று அன்னையின் காதில் மகள்கள் இருவரும் ஓதினார்கள்.

யாரும் அறியாமல்,”இங்க கட்டி வச்சா அப்புறம் உன் புள்ளை உனக்கு இல்லை” என்று பயமுறுத்தினார்கள்.

“நீங்க காஃபி குடிக்காம இருக்கவும் அனுவும் குடிக்காம வச்சிருக்கு பாருங்க.. அதுக்கு சூடா இருந்தா தான் பிடிக்கும்” என்றார் சரவணன்.

விஜயன் அதுக்கு பிறகு தான் நிஜ உலகத்திற்கு வந்தார்.

பின் காஃபியை பருகினார். அதன் பிறகே அனுவும் குடித்தார். அதுவே சொல்லியது அவர்கள் இருவரது விருப்பத்தையும்.

இரண்டு பேரும் அருகருகே அமர்ந்திருப்பது அத்தனை அம்சமாக இருந்தது. இருவரது ஜோடியும் மிகவும் பொருத்தமாக இருந்தது.

“பொண்ணுகூட தனியா பேசனும்னா பேசிட்டு வாங்க தம்பி” என்றார் தண்ணீர்மலை.

“அது எல்லாம் எங்க வீட்ல பழக்கம் இல்லை” என்று பட்டென்று கூறினாள்  லட்சுமி.

என்ன இது என்பது போல அனைவரும் பார்க்கவே,

“எனக்கு போட்டோல பார்த்ததுமே உங்க பொண்ணை ரொம்பவே பிடிச்சிடுச்சுங்க.. இப்ப நேர்ல பார்த்ததுமே ஏதோ எங்களுக்குள்ள ஆண்டு ஆண்டு கால பந்தம் இருப்பது மாதிரி தான் இருக்கு.. அவங்களுக்கும் விருப்பம்னா மேலே பேசுங்க..” என்றார் விஜயன் வெளிப்படையாக.

அக்காவும், தங்கையும் அவரின் பதிலில் அசந்தே போயினார். எப்பொழுதும் தங்கள் பேச்சை கேட்கும் அம்மாவின் மூலம்  காயை நகர்த்த பார்த்தால் விஜயன் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார்.

அவர்களுக்கு இன்னொன்றும் விளங்கியது. தாங்கள் நினைத்ததை போல விஜயன் எல்லாத்துக்கும் சரி என்று கூறப்போவது இல்லை என்று. 

விஜயனின் நேரடியான பதில் தண்ணீர்மலைக்கு மிகவும் பிடித்திருந்தது.

கலையரசிக்கும் மாப்பிள்ளையின் தோற்றம் பேச்சு அனைத்துமே திருப்தியாக இருந்தது.

“நீ என்ன அனு சொல்ற?” என்று  மகளிடம் கேட்டனர்.

“இத்தனை பேர் முன்னாடி கேட்டா எப்படி பதில் சொல்லும்” என்று அக்கா தங்கை இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில்,

“எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா.. நீங்க மேலே பேசுங்க” என்றாள் அனு பளிச்சென்று. 

விஜயன் திரும்பி அனுவை பார்க்க, அதே நேரம் அனுவும் விஜயனை பார்த்தார். 

கண்ணும் கண்ணும் கலந்தது.. 

உள்ளம் ஒன்றாய் இணைந்தது..

அதன் பிறகு,

சுற்றமும் நட்பும் சூழ, ஊர் போற்ற உலகம் போற்ற கோலாகலமாய் நடந்தது விஜயன் அனுராதாவின் திருமணம்.

திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு, பத்மா அம்மா அவர் மட்டும் தனியே வந்து தண்ணீர்மலை கலையரசி தம்பதியினரை சந்தித்தார்.

“என்ன இது, பெத்த தாயே இப்படி பேசுறான்னு என்னை தப்பா நினைக்காதீங்க” என்று தயங்கிக்கொண்டே ஆரம்பித்தார்.

“என்னை உங்க அண்ணன்னா நினைச்சுக்கோங்க. தைரியமா சொல்லுங்க” என்றார் தண்ணீர்மலை.

“என் பையனை உங்க பையனா இனி பார்த்துக்கோங்க..” 

“என்ன சொல்ல வர்றீங்க? எங்களுக்கு சரியா புரியலை” என்றார் கலையரசி.

“என் பையன் தலை எடுத்து தான் எங்க குடும்பம் இப்ப ஓரளவுக்கு நல்ல நிலைமையில இருக்கு. அக்கா தங்கை ரெண்டு பேருக்கும் கல்யாணமும் செஞ்சு அதுக்கப்புறம் குழந்தை பேரு காது குத்து வரை சீர் எல்லாம் சிறப்பா செஞ்சு முடிச்சிட்டான். எங்களுக்கும் வீடு கட்டி கொடுத்திருக்கான். செஞ்சவரைக்கும் போதும்னு சொல்ற மனசு யாருக்கும் வர்றது இல்லைங்க.. அவன் இனியாவது அவன் வாழ்க்கைய பார்த்து கிட்டு சந்தோஷமா இருக்கட்டும். உங்க வீட்ல எல்லாரும் அனு மேலே உயிரா இருக்கீங்க. என் பையனையும் உங்க வீட்டோடு சேர்த்துக்கோங்க”

“அது தப்பும்மா தங்கச்சி.. கல்யாணம் ஆனதும் மாப்பிள்ளையை சேர்த்துக்கிட்டோம்னு ஊர்ல சொல்லுவாங்க.. மாப்பிள்ளை யாருக்கு செய்ய போறாரு, அவரை பெத்தவங்களுக்கும் கூட பொறந்தவங்களுக்கும் தானே.. நல்லா செய்யட்டும் “

“உங்க பதில்ல உங்க நல்ல மனசு புரியதுங்க.. நாளைக்கு எங்களுக்கு அப்புறம் அவனுக்கு யாரும் இல்லாம போயிடுமோன்னு எனக்கு ஒரு பயம். அதான் உங்க கிட்ட சொல்லி வைக்கலாம்னு தோணுச்சு.”

“கல்யாணம் கிட்ட வரும்போது எதுக்கு மா மனச போட்டு குழப்பிக்கிறீங்க.. உங்களுக்கும் ஒன்னும் ஆகுது. நாளைக்கு நம்ம காலத்துக்கு அப்புறம் என் பொண்ணும் பசங்க மூனு பேரும் உங்க பையனை பார்த்துப்பாங்க. நீங்க மாப்பிள்ளையை நினச்சு கவலையே படவேண்டாம் சரியா” என்றார் கலையரசி ஆதுரமாக.

பத்மா அம்மா நன்றியுடன் அவர்கள் இருவரையும் பார்த்தார்.

இது வேறு யாருக்கும் தெரியாது.

திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று தடுக்க நினைத்த மகள்களை மாப்பிள்ளைகளிடம் பேசி சரி கட்டியிருந்தார்.

‘உங்களுக்கு எல்லாம் இதுவரைக்கும் எந்த குறையும் இல்லாம எல்லாமே விஜி செஞ்சுட்டான் மாப்பிள்ளை.. இந்த பொண்ணுங்க அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையக்கூடாதுன்னு நிக்குறது சரியா.. நீங்க தான் எடுத்து சொல்லணும்’ என்று.

“இந்த பொண்ணை தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு அப்படி என்ன அவசியம் அவசரம்” என்று அப்பொழுதும் எதிர்த்து நின்றனர்.

“எனக்கு கல்யாணம்னா இந்த பொண்ணுகூட மட்டும் தான்” என்று விஜயன் பேச்சை முடித்துவிட்டார்.

 

திருமணம் முடிந்து அன்றைய இரவு பெண் வீட்டில் தான் புதுமண தம்பதியினர் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காலையில் கழுத்தில் ஏறிய புது மஞ்சள் தாலியுடன், அழகான சந்தன நிற மென்பட்டு சேலையில் விஜயன் இருந்த அறைக்குள் நுழைந்தார் அனுராதா.

முதலில் யார் பேச்சை ஆரம்பிப்பது என்று சில நிமிட மௌனம்.

“பொம்மி..” என்றார் விஜயன் தொண்டையை லேசாக செருமிக்கொண்டே.

“அது என்ன பொம்மி.. பொண்ணு பார்த்த அன்னைக்கும் அப்படி தான் கூப்பிட்டீங்க?”

“அதுவா.. உன் போட்டோவை பார்த்ததும் அழகு பொம்மை மாதிரி இருந்த உனக்கு பொம்மின்னு பெயர் வச்சிருக்கலாம்னு தான் தோணுச்சு”

“ஆஹா..வேற என்ன தோணுச்சு?”

“உனக்கு என்னை பிடிக்குமான்னு படபடப்பா இருந்துச்சு.. உனக்கு என்னை எப்படி பிடிச்சுது?”

“எனக்கு நிறைய மாப்பிள்ளை பார்த்தாங்க. சில மாப்பிள்ளை போட்டோஸ் எல்லாம் நான் பார்த்தேன். அப்ப எல்லாம் எனக்கு ஒன்னும் தோணுனது இல்லை. வீட்ல நீங்க பார்த்து சொன்னா சரின்னு தான் சொல்லுவேன்.

ஆனா உங்க போட்டோவை பார்த்தப்ப, அந்த போட்டாலே இருந்த நீங்க.. உங்க முகம் உங்க கண்ணு.. என்னை என்னமோ செஞ்சுச்சு. எனக்கு சரியா சொல்ல தெரியல, ஆனா என் மனசுல உங்க உருவம் பதிஞ்சுடுச்சு. 

கண்ணை மூடினா உங்க முகம் தான்..”

“எனக்கும் அப்படி தான் பொம்மி..” என்று கூறிக்கொண்டே கண்ணை மூடிக்கொண்டார்.

“இப்ப தான் கண்ணு முன்னவே இருக்கேனே”

“கண்ணை மூடினாலும் திறந்தாலும் நீ தான் இருக்க பொம்மி” என்று சிரித்தார்.

அவர் விரிந்து சிரிக்கையில் அவர் கன்னத்தில் அழகான குழி விழுந்தது.

தன விரலால் அதை மெல்ல தொட்டு பார்த்தார் அனுராதா.

“பிடிச்சிருக்கு..” 

“எது?”

“இந்த கன்னத்துல இந்த குழி..” என்று விரலால் கன்னத்தில் கோடு இழுத்தார்.

“பொம்மிமி….”

“வேற என்ன பிடிச்சிருக்கு?” என்று கேட்டு மனைவியின் கன்னத்தை மெல்ல வருடினார்.

சொரசொரப்பாக இருந்தது அவர் கை.

அனுராதா அவரின் கைகளை பிடித்து மெல்ல வருடி கொடுத்தார். வேலை செய்து காய்ச்சு போன கைகள்… பல வருட அயராத உழைப்பின் பரிசு. இதுவரை யாருமே அதை கவனித்தது இல்லை. மனைவியின் அந்த வருடல், மனதின்  அடிஆழம் வரை இதமளித்து.

 “உனக்கு விசா வர இரண்டு மூணு மாசம் ஆகலாம். எனக்கு இன்னும் ஒரு மாசம் தான் லீவ்.. எப்பவுமே இங்க இருந்து கிளம்ப நான் தயங்கினதே இல்ல.. இப்ப உன்னை விட்டுட்டு எப்படி போக போறேனோ?”

“என்னை விட்டுட்டு எப்படி போவீங்க. நான் தான் உங்க கூட உங்க மனசுல எப்பவுமே இருக்கேன் இல்ல. அதே மாதிரி நீங்களும் என்கூடவே என் மனசுல தான் இருக்கீங்க. கண்ணை மூடுனா கண்ணுக்குள்ள வரப்போறோம்..”

“அதானே..” 

“இப்ப என்னை உங்க கைக்குள்ள வச்சுக்குங்க.. அப்புறம் ஊருக்கு போனதுக்கு அப்புறம் கண்ணுக்குள்ள வச்சுக்கலாம்” என்றார் அனுராதா சிரித்து கொண்டே.

விஜயன் முகமெல்லாம் மலர தன் கைகளை விரித்தார். பாந்தமாக அதற்குள் புகுந்துகொண்டார் அனுராதா.

அதன் பிறகு அவர்கள் இருவருக்குமான ஏகாந்த நேரம்…

இனிமையாக தொடங்கியது அவர்களது இல்லறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!