Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 18

அத்தியாயம் – 18

 

ரன்வீரை விஷ்வா இதற்கு முன் நேரடியாகச் சந்தித்ததில்லை என்றாலும், வீரமாணிக்கம் அவனைப் பற்றிச் சொன்ன பிறகு ரகசியமாக விசாரித்துப் பார்த்திருந்தான், ரன்வீரின் பணபலமும், செல்வாக்கும் தன்னைவிடப் பல மடங்கு அதிகம் என்பது விஷ்வாவிற்குத் தெரிந்த கணம் அவனிடம் நேரடியாக மோதினால் தான் வீழ்ந்துவிடுவோம் என்பது புரிந்ததால் தான், தாத்தாவே சரிகட்டிக் கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான்,..

ஆனால், இப்போது ரன்வீரே வந்து பலிகடா போல சிக்கிக்கொள்ளவும், விஷ்வா அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். மிருதுளா ஆவேசமாக, ஏதோ ஒரு ஃபைலுக்காகத் தாத்தாவைக் கொன்றுவிட்டீர்களா? என்று கேட்டபோதுதான், ரன்வீர் ஒரு ஃபைலைத் தேடி வந்தது விஷ்வாவிற்கே தெரியவந்தது. கிடைத்த கேப்பில் கிடா வெட்டுவது போல, அவளை இன்னும் ஏற்றிவிடத் தொடங்கினான்…



Advertisement

​”நான் உள்ளே வரும்போது கூட ‘அந்த பைல் எங்கே இருக்குனு கேட்டுத்தான் இவன் தாத்தா கழுத்தை நெறிச்சிட்டு இருந்தான் மிருதுளா!” என்று அப்பட்டமாகப் பொய் கூற, ​தன் சொந்தத் தாத்தாவையே பணத்திற்காகக் கொலை செய்துவிட்டு, இப்போது தன் மீதே பழி போடும் விஷ்வாவின் குரூரத்தைக் கண்டு ரன்வீருக்கு ஆத்திரம் எல்லை மீறியது.

ஆவேசமாகப் பாய்ந்து விஷ்வாவின் சட்டை காலரைப் பற்றியவன்.. “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன.. உன்னைக் கொன்னுடுவேன்டா ராஸ்கல்!” என்று சிங்கமாய் உருமினான்.

​விஷ்வா இதற்காகவே காத்திருந்தவன் போல… “பார்த்தியா மிருதுளா… உன் முன்னாடியே எப்படிப் பேசுறான்னு! தாத்தாவைக் கொன்னது போதாதுன்னு, இப்போ சாட்சிக்கு இருக்கிற என்னையும் கொல்லப் பார்க்கிறான்!” என்று பயப்படுவது போல நடித்து கூற, கோபத்தில் ரன்வீரை வெறித்துப் பார்த்தவள்.. “விஷ்வா மேல இருந்து கைய எடுக்கல இங்கே நடக்கிறதே வேற!” என்று எச்சரிக்கையாகக் கத்த, ரன்வீர் திகைத்துப் போனான்.

Advertisement

​”ஏய்… இவன் பொய் சொல்றான்! நான் பண்ணாத கொலையை என் மேல போடுறான், என்னை நம்பாம இந்த துரோகியை நம்புறீயா நீ?” என்று ரன்வீர் வேதனையுடன் கேட்க, “போதும் நிறுத்துங்க!” என்று காதுகள் கிழிந்துவிடும் அளவிற்குச் சத்தமிட்ட மிருதுளா..
“இப்போவே… இந்த நிமிஷமே என் வீட்டை விட்டு வெளியே போயிடு!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியவள், அடுத்த நொடியே அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் மயங்கிச் சரிந்தாள், ரன்வீர் தான் துரிதமாகச் செயல்பட்டு, அவள் தரையில் விழுவதற்குள் தாங்கிப் பிடித்தான்…

Advertisement

​இதற்கிடையில், விஷ்வா ரகசியமாகத் தன் தந்தை சுந்தரத்திற்கு அழைத்து நடந்தவற்றைக் கூறிவிட, அவரும் அவரது மனைவி சரஸ்வதியும் பதறியடித்துக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தனர். ரன்வீர் மூலம் விஷயம் கேள்விப்பட்ட அவனது நண்பன் நிதினும் அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தான்…

​மிருதுளா இன்னும் மயக்கத்திலேயே இருக்க, தன் தந்தை வீரமாணிக்கத்தின் உயிரற்ற உடலைக் கண்டு  கதறி அழுதார் சுந்தரம், தன் மகனின் வஞ்சகத்தை அறியாத அவர் ஆத்திரத்தில் ரன்வீரைப் பார்த்து, “விஷ்வா! உடனே போலீஸுக்குப் போன் பண்ணு… என் அப்பாவைக் கொன்ன இவனை சும்மா விடக் கூடாது!” என்று கத்திட, ​’போலீஸ்’ என்ற வார்த்தையைக் கேட்டதுமே விஷ்வாவிற்குப் பயத்தில் வியர்க்கத் தொடங்கியது. போலீஸ் வந்தால் ரன்வீர் தன் செல்வாக்கை வைத்து வெளியே வந்துவிடுவான் என்பதும், விசாரணை ஆரம்பித்தால் தான் வசமாக மாட்டிக்கொள்வோம் என்பதும் அவனுக்குப் புரிந்தது.

அதனால் பதற்றத்தை மறைத்துக்கொண்டு, “போலீஸ் எல்லாம் இப்போ வேண்டாம்பா… நாமளே இதை சமாளிச்சுக்கலாம்,” என்று மழுப்பிட, விஷ்வாவின் இந்தத் தடுமாற்றத்தையும், அவன் போலீஸைத் தவிர்க்கப் பார்ப்பதையும் கவனித்த சுந்தரத்திற்கு, தன் மகன் ஏதோ தில்லுமுல்லு வேலை பார்த்திருக்கிறான் என்பது ஓரளவிற்குப் புரிந்தது, இதனால் அவரும் மேற்கொண்டு போலீஸிற்குத் தகவல் கொடுக்கவில்லை..

Advertisement

​ரன்வீர் யாரையும் சட்டை செய்யவில்லை, மயங்கிக் கிடந்த மிருதுளாவை எழுப்பவே போராடிக் கொண்டிருந்தான், அந்த நேரம் அவள் அருகில் வந்த சரஸ்வதி, ரன்வீரைத் தள்ளிவிட்டு மிருதுளாவைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். ரன்வீர் அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே சிலையாக நிற்க,.. ​சரஸ்வதி ஆவேசமாக, “இன்னும் ஏன் இங்கேயே நிக்கிற? போயிடு இங்கிருந்து!” என்று கத்த, நிலைமையைப் புரிந்துகொண்ட நிதின் ரன்வீரின் தோளைத் தொட்டு, “நாம இப்போ கிளம்புறது தான் நல்லது ரன்வீர், வா போயிடலாம்,” என்று அவனை அங்கிருந்து இழுத்து சென்று விட்டான்…

**********

மூன்று வாரங்கள் கடந்திருந்தன. வீரமாணிக்கத்தின் இறுதிச் சடங்குகள் முடிந்து, அந்த வீடே களைஇழந்து போயிருந்தது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு, இந்த உலகில் தனக்கென்று யாரும் இல்லாத அநாதையாகத் தன்னை உணர்ந்தாள் மிருதுளா, தனிமையில் வாடிய அவளை அப்படியே விட்டுவிட மனமில்லாமல், சுந்தரமும் சரஸ்வதியும் தான் வற்புறுத்தித் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்திருந்தனர்…

​பெற்றோரை இழந்த பிறகு அவளுக்கு இருந்த ஒரே பிடிமானம் தாத்தா மட்டும்தான், இப்போது அவரும் இல்லை என்ற உண்மை அவளைத் தீராத வேதனைக்குள் தள்ளி இருந்தது, யாரிடமும் பேசாமல், ஒரு இயந்திரம் போலத் தனது நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த அவளுக்கு, சரஸ்வதி மட்டுமே மிகப்பெரிய ஆறுதலாக இருந்தார்…

​சரஸ்வதி, தன் கணவர் சுந்தரத்தையோ அல்லது மகன் விஷ்வாவையோ போன்றவர் அல்ல, அவர்கள் இருவருக்கும் பணமும் சொத்தும் மட்டுமே குறிக்கோள், ஆனால் சரஸ்வதி குணத்தால் சிறந்தவர், தனது நாத்தனார் மகள் மிருதுளாவின் மீது அவருக்கு ஆரம்பத்திலிருந்தே தீராத பாசம் உண்டு, இருப்பினும், சுந்தரம் தனது அதிகாரத்தால் சரஸ்வதியை இதுவரை அந்த பாசத்தை வெளிக்காட்ட விட்டதே இல்லை…

​ஆனால் இப்போது, எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் மிருதுளாவைக் கண்டதும் சரஸ்வதியால் சும்மா இருக்க முடியவில்லை, சுந்தரமும் இப்போது தடுக்காத காரணத்தினால், அவளுக்கு உணவு ஊட்டுவதிலிருந்து, அவளது அழுகையைத் துடைப்பது வரை ஒரு தாயாக அவளருகிலேயே இருந்தார்….

அன்று தன் தந்தையின் முன்பு தலைகுனிந்து நின்றான் விஷ்வா. அவனது கன்னத்தில் சுந்தரத்தின் கை மீண்டும் ஒருமுறை ஓங்கிப் பதிய, அறை விழுந்த சத்தம் அந்த அறையெங்கும் எதிரொலித்தது…

​”ச்சே! கொலை பண்ற அளவுக்குப் போயிருக்கியாடா நீ? அதுவும் உன் சொந்தத் தாத்தாவையே!” என்று ஆவேசமாகக் கேட்டார் சுந்தரம், தந்தை அடித்தது விஷ்வாவிற்குள் கடும் கோபத்தை ஏற்படுத்தினாலும், இப்போது தான் அமைதியாக இருக்க வேண்டிய சூழலில் இருப்பதை அவன் உணர்ந்து அமைதியாகவே நின்றான்..

​”உன்னை அப்பவே போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திருக்கணும், என் கௌரவம் போயிருமேன்னு பார்க்கிறேன்!” என்று அவர் ஆத்திரப்பட, விஷ்வாவோ கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல்… ​”நடந்ததை பத்தியே பேசிட்டு இருக்காதீங்கப்பா, அடி வாங்கி வாங்கி என் கன்னம் வலிக்குது, அந்த ஆளுக்கு என்ன… வயசானவருதானே? எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல சாகத்தான் போறாரு, இப்போ செத்தா என்ன? அந்த சேப்டரை இதோட விடுங்க,” என்று அவன் மிக சாதாரணமாகச் சொல்ல, சுந்தரத்திற்கு அந்தப் பேச்சைக் கேட்டு ரத்த அழுத்தமே ஏறியது, தன் தந்தை கொல்லப்பட்ட வேதனையை விட, மகனின் இந்த கல்நெஞ்சத்தனம் அவருக்குப் பயத்தைத் தந்தது. இருப்பினும், கௌரவத்திற்குப் பயந்து அந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்கவும் முடிவு செய்தார்…

​சிறிது நேர மௌனத்திற்குப் பின், விஷ்வா மெல்ல.. “சரி, இப்போ நான் சொன்ன விஷயத்தைப் பத்திப் பேசலாமா?” என்று ஆரம்பிக்க,..
​சுந்தரம் யோசனையுடன், “மிருதுளா இதுக்கு சம்மதிப்பான்னு உனக்குத் தோணுதா?” என்று வினவினார்.

​”சம்மதிக்க வைக்கலாம்ப்பா, இப்போ அவளுக்குன்னு இருக்கிறது நாம மட்டும்தான், இந்த சூழலை வச்சு ஈஸியா அவளை சம்மதிக்க வச்சிடலாம், அவ பேர்ல பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கு, அவளை மட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அந்த மொத்த சொத்தும் நம்ம கைக்கு வந்திடும்” என்றான் விஷ்வா.

​இத்தனை நாட்களாக மிருதுளா தன் வீட்டிற்கு மருமகளாக வரத் தகுதியானவள் இல்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்த சுந்தரம், ‘சொத்து’ என்ற பெயரைக் கேட்டதும் அப்படியே மாறிப்போனார், பணத்தாசை அவரது மனசாட்சியை மறைக்க, மகனின் அந்த வஞ்சகத் திட்டத்திற்கு அவரும் சம்மதித்தார்…

தங்கை மகளாகப் போய்விட்டாளே என்ற பரிதாபத்தில் தான் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் சுந்தரம், சில நாட்கள் தங்களுடன் வைத்து விட்டு, பிறகு அவளை அனுப்பி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தவருக்கு, அவளது பெயரில் இருக்கும் பல கோடி சொத்துக்களைக் கேள்விப்பட்டதும் பேராசை தலைக்கேறியது, சீக்கிரமே அவளைத் தன் மகனின் மனைவியாக்கி, அந்த சொத்துக்களைத் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்…

​அன்று இரவு, தன் மனைவி சரஸ்வதியிடம் மெல்ல… “சரசு… மிருதுளாவையே விஷ்வாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு இருக்கேன்,” என்றார்.

​இதில் ஏதோ உள்அர்த்தம் இருப்பதை உடனடியாகப் புரிந்து கொண்ட சரஸ்வதி, அதிர்ச்சியுடன், “என்னங்க இப்படிச் சொல்றீங்க? நம்ம விஷ்வாவுக்குத்தான் ஏற்கனவே திவ்யாவை பேசி முடிச்சாச்சே? இப்போப் போய் இப்படிச் சொல்றீங்களே!” என்றார்.

​சுந்தரமோ அலட்சியமாக, ” அந்த திவ்யாவை விட மிருதுளாகிட்டதான் பல கோடி சொத்து இருக்கு, நம்ம குடும்பத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு போக அவதான் சரியானவளா இருப்பா,” என்று தன் சுயரூபத்தைக் காட்டினார்…

​”பணத்துக்காகவா மிருதுளாவைத் தேர்ந்தெடுத்தீங்க? இது தப்பில்லையாங்க? அவ இன்னும் மாமா இறந்த துக்கத்துல இருந்து கூட மீளல,” என்று சரஸ்வதி நியாயம் கேட்க, சுந்தரத்திற்கு ஆத்திரம் வந்தது…

​”என்னடி இதுல தப்பு இருக்கு? பணம் இல்லாம இந்த உலகத்துல எவனும் மதிக்க மாட்டான், நீதான் பிச்சைக்கார குடும்பத்துல இருந்து வந்து என்னை சாகடிக்கிற… என் பையனும் அப்படி கஷ்டப்படணுமா?” என்று சரஸ்வதியைத் தரக்குறைவாகவும், அவரது குடும்பத்தைக் கேவலமாகவும் குத்திப் பேசினார்…

​ஏற்கனவே பலமுறை இது போன்ற அவமானப் பேச்சுகளைக் கேட்டுச் சலித்துப் போய்விட்டதால், சரஸ்வதிக்கு பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது, மேற்கொண்டு ஏதாவது பேசினால் இன்னும் அசிங்கமாகப் பேசுவார் என்று மௌனமாகவே இருந்து விட, சுந்தரமோ… ​”நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்கிட்ட சொன்னேன் பாத்தியா… என்னை சொல்லணும்!” என்று சரஸ்வதியைத் திட்டிவிட்டு போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டார்…

​சரஸ்வதியோ… ‘என்னை மாதிரியே இந்த மிருதுளாவும் அப்பன் மகன் கிட்ட வந்து மாட்டிக்கப் போறாளா? பாவம் அந்தப் பொண்ணு!’ என்ற கவலையுடனேயே அவரும் மறுபக்கம் படுத்துக் கொண்டார்,..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!