ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 21
அத்தியாயம் – 21
சில நிமிடங்கள் கடந்திருக்கும். அவள் என்ன செய்கிறாள்? ஜூஸைக் குடித்தாளா? என்று பார்ப்பதற்காக மனது கேட்காமல், மீண்டும் அதே அறைக்குள் நுழைந்தான் ரன்வீர்…
தரையிலேயே சோர்வாகப் படுத்துக் கிடந்தாள் மிருதுளா, அவன் உள்ளே வந்ததை உணர்ந்தும், அவள் எழுந்து கொள்ளவில்லை, அவன் வைத்துவிட்டுப் போன ஜூஸும் அப்படியே இருந்தது, அதைப் பார்த்ததும் ரன்வீருக்குக் கோபம் தான் வந்தது. ஆனால், இப்போது கோபத்தைக் காட்டினால் அவள் தன்னை மேலும் கொடூர வில்லனாகத்தான் பார்ப்பாள் என்பதை உணர்ந்து, நிதானமாக அவளருகே சென்றவன்,..”உன்னோட பிராப்ளம் தான் என்ன மிருதுளா?” என்றான், அவன் குரலில் ஒருவித சலிப்பு கலந்த ஆதங்கம் இருந்தது…
Advertisement
அவன் கேட்ட அந்தத் தொனியில் சட்டென்று எழுந்து அமர்ந்தவள், அனல் பறக்கும் பார்வையால் அவனைத் துளைத்தெடுத்தபடி… “என்னோட பிராப்ளம் என்னன்னு உனக்கு இன்னும் புரியலையா ரன்வீர்?” என்று ஆவேசமாகக் கேட்டாள்…
”புரியலையே… சொல்லேன்!” என்று அவன் தோளைக் குலுக்க, அவளோ வெடித்தாள்.
”உன்னை என் உயிரை விட அதிகமா நேசிச்சேன் ரன்வீர், ஆனா நீ என்ன பண்ணின? பணத்துக்காகவோ, இல்ல வேற ஏதோ ஒரு காரணத்துக்காகவோ என் தாத்தாவையே கொன்னுட்ட! அது போதாதுன்னு இப்போ என் வாழ்க்கையையும் பலவந்தமா சிதைச்சிருக்க, என் கழுத்துல தாலி கட்டிட்டா நான் உன்னை ஏத்துப்பேன்னு நினைச்சியா? ஒரு கொலைகாரன் கூட வாழறதுக்கு பதிலா நான் செத்தே போயிடலாம், இதுதான் என்னோட பிராப்ளம்… இப்போ புரியுதா?” என்று அவள் மூச்சிரைக்கக் கூறிவிட்டு விம்மினாள்…
Advertisement
அவளது வார்த்தைகளைக் கேட்டு ஒரு கணம் மௌனமாகி, பிறகு அவளருகே மண்டியிட்டு அமர்ந்து, அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்தவன்.. ”உன் கண்ணுல நான் ஒரு கொலைகாரனாத் தெரியுறதுதான் இப்போ உனக்கும் எனக்குமான பெரிய பிராப்ளமே, நான் மட்டும் உன் தாத்தாவைக் கொன்னிருந்தா, இந்தத் தாலியை உன் கழுத்துல கட்டி உன்னை என் வீட்டுக்கு அழைச்சிட்டு வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, உன்னை விட அழகான, வசதியான பொண்ணுங்க எனக்குக் கிடைப்பாங்க, ஆனா எனக்கு நீ வேணும்னு நான் ஏன் இவ்வளவு தூரம் அலைறேன்னு உனக்கு ஏன் புரிய மாட்டேங்கிது, ஓகே ஃபைன் நீ சொல்ற அந்த விஷ்வா யோக்கியன் இல்லைன்னு உனக்கு என்னைக்குத் தெரிய வருதோ, அன்னைக்கு நீயே இந்த ரன்வீர் யாருன்னு புரிஞ்சுப்ப!” என்று அவன் அழுத்தமாகக் கூறினான்.
Advertisement
அவளோ அவன் நாடகமாடுகிறான் என்று அவனை அனல் பறக்கும் பார்வைதான் பார்த்தாள்… “நீ சொல்ற கதையை நம்ப வேற யாராவது இளிச்சவாய் இருப்பாங்க, அவங்ககிட்ட போய் உன் வேலையைக் காட்டு,” என்றாள் ஏளனமாக…
”ப்ச்!” என்று சலிப்புடன் தன் நெற்றியை நீவியவன், “உன்னை ரொம்ப புத்திசாலிப் பொண்ணுனு நினைச்சேன் மிருதுளா,” என்று கூறிட, அவளோ.. ”கரெக்ட்! நானும் அப்படிதான் நினைச்சேன், புத்திசாலியா இருந்திருந்தா உன்னைப்போல ஒருத்தனை காதலிச்சிருப்பேனா? முட்டாளா இருந்ததாலதானே உன்னோட காதல் நாடகத்தை நம்பி இப்போ இப்படி நிக்கிறேன்! என்னை ஏமாத்துனது கூட பரவாயில்லை, என் தாத்தாவை ஏன்டா கொன்ன? அவரு உனக்கு என்னடா பாவம் பண்ணாரு?” என்று கண்ணீருடன் ஆவேசமாகக் கத்தினாள்…
அவள் திரும்பத் திரும்பத் தன்னை ஒரு கொலைகாரன் என்றே சொல்வது ரன்வீருக்குள் ஆத்திரத்தை மூட்டிட, அவளது தோள்களைப் பிடித்துத் தன்னருகே இழுத்தவன், “ஏய்! நான் கொலை பண்ணலன்னு எத்தனை தடவைடி சொல்றது? இன்னொரு தடவை என்னை கொலைகாரன்னு சொன்னா, நிஜமாவே உன்னை கொன்னுட்டு கொலைகாரனாகிடுவேன்!” என்று கர்ஜித்தான்…
Advertisement
”கொன்னுடு! என்னை மட்டும் ஏன் உயிரோட விட்டு வச்சிருக்க? என்னையும் கொன்னுட்டா உனக்குத் தொல்லை மிச்சம்ல!” என்று அவள் ஆதங்கத்துடன் கதறிட, அவளது அந்தக் கதறலும், அவள் சிந்தும் கண்ணீரும் ரன்வீரின் கோபத்தை மெல்லக் கரைக்கத் தொடங்கின, அவளது பிடியில் இருந்த இறுக்கத்தைத் தளர்த்தியவன், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுச் சற்று விலகி நின்று.. “உன்னை சாகடிக்கிறதுக்காக நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை இங்க அழைச்சிட்டு வரல மிருதுளா, நீயே உன் கண்ணால உண்மையை ஒருநாள் பார்ப்ப, அப்போ உனக்கு எல்லாம் புரியும்,” என்று சொன்னவன், ஜூஸ் டம்ளரை எடுத்து வந்து, “இதை பிடிவாதம் பண்ணாம குடி,” என்று அவள் முன் நீட்டினான்…
அவளோ அவனை வெறுப்பாகப் பார்த்துவிட்டு, சட்டென்று அந்த டம்ளரைத் தட்டிவிட, அதுவோ கீழே விழுந்து நொறுங்கி, ஜூஸ் முழுவதும் தரையில் சிந்தியது….
”பசியில செத்தாலும் சாவேனே ஒழிய, உன் கையால தர எதையும் குடிக்க மாட்டேன்!” என்று ஆவேசமாகக் கூறிவிட்டு அவள் எழுந்து கொள்ள முயல, அவளது பிடிவாதமான செயல் ரன்வீருக்குள் உறங்கிக் கிடந்த ஆத்திரத்தை மீண்டும் தட்டியெழுப்பியது…
நொடியில் அவளது தோள்களை அழுத்தமாகப் பற்றியவன், அவளை இழுத்துச் சென்று அருகிலிருந்த சுவரில் பலமாகச் சாய்த்தான், அவளது கண்கள் பயத்திலும் கோபத்திலும் விரிந்திருக்க, ரன்வீர் அவளது முகத்திற்கு மிக அருகில் குனிந்து..
”என் பொறுமையைச் சோதிக்காத மிருதுளா! நான் உன்கிட்ட அன்பா பேசறது உன்னை ஏமாத்த இல்ல, உன்னை நேசிக்கிறதுனால மட்டும் தான், ” என்று பல்லைக் கடித்தபடி கேட்டவனின் விரல்கள் அவளது தோள்களில் அழுந்தின.
“நேசிக்கிறியா? ஒரு கொலைகாரன் வாயில இந்த வார்த்தை வரத கேட்க கேவலமா இருக்கு, விடு என்னை!” என்று அவள் அவனது பிடியிலிருந்து திமிறிட, அவனோ அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி, “என்ன வேணும்னாலும் பேசு, அடிச்சா கூட வாங்கிக்கிறேன். என்ன பண்ணுறது? உன்னைக் காதலிச்சுத் தொலைச்சிட்டேனே!” என்று ஒருவித ஆதங்கத்துடன் சொல்ல, அது அவளுக்கு இன்னும் எரிச்சலூட்டியது…
”இன்னும் எவ்வளவு தான் நடிக்கப் போற நீ? உன் காதல் வெறும் நடிப்பு தான்னு எனக்குப் புரிஞ்சு ரொம்ப நாட்களாச்சு, என்னை விட்டுடு, அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது!” என்று அவள் முகத்தில் அடித்தாற்போலக் கூறிட, அவனுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது…
”ஏய்! இத்தனை தூரம் சொல்றேனே, இன்னும் ஏன்டி அதையே திரும்பத் திரும்பச் சொல்ற? மூளை இல்லையா உனக்கு?” என்று அவன் ஆவேசத்துடன் வினவ, அவனது ஆவேசத்தில் அவளுக்குள் இருந்த ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வெடித்தது…
அதே கணம், தன் தாத்தாவின் சிரித்த முகம் அவளது நினைவில் வந்து போக, ரன்வீரின் பிடியை பலமாகப் பிடித்துத் தள்ளியவள், “உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பா இருக்குடா, அநியாயமா என் தாத்தாவை கொன்னுட்டியேடா பாவி” என்று கத்தியவள், அடுத்த நொடி, ஆத்திரத்தில் தன் கையில் கிடைத்த அருகிலிருந்த மேஜை மீது இருந்த கனமான ஒரு கண்ணாடி அலங்காரப் பொருளை ஆவேசமாகத் தூக்கி அவன் மீது எறிய, அது சரியாக அவனது நெற்றியை போய் தாக்கிய அடுத்த நொடியே அவனது நெற்றியிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது…
அவன் மீது இருந்த கோபத்தில் எறிந்தவளுக்கு, அவனது ரத்தத்தைப் பார்த்த பிறகுதான் தான் செய்த காரியத்தின் விபரீதம் உரைத்தது, கோபம் மறைந்து அங்கே பயமும் பதற்றமும் தொற்றிக் கொண்டது….
”ஐயோ ரத்தம்!…” என்று அலறியபடி, பதற்றத்தில் அவனை நெருங்கியவள், தன் சேலை முந்தானையை மடித்து அவன் காயத்தில் வைத்து அழுத்தி ரத்தத்தைக் கட்டுப்படுத்த முயன்றாள்…
”ஐம் ஸாரி… நான் ஏதோ தெரியாம… கோபத்துல…” என்று தழுதழுத்தவளுக்கு, ரன்வீரின் காயத்தைப் பார்க்கப் பார்க்கக் கண்ணீர் அருவியாய் ஓடியது, தான் எவ்வளவு தான் வெறுத்து பேசினாலும் அடிமனதில் அவனுக்காக இருந்த அந்த ஈரம் இந்தக் கணம் அவளை அறியாமலேயே வெளிப்பட்டது…
ரன்வீரோ தன் நெற்றியில் வழிந்த ரத்தத்தையோ, வலியையோ பொருட்படுத்தவில்லை, மாறாக, தனக்காகத் துடித்துப் போய் அழுதபடி ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் மிருதுளாவை தான் இமைக்காமல் பார்த்தான்…
”இப்போ எதுக்கு அழற மிருதுளா? ஒரு கொலைகாரன் செத்தா உனக்கு நிம்மதிதானே? இன்னும் நல்லா அடிச்சிருக்கலாமே…” என்று அவன் வலியுடன் புன்னகைக்க, இன்னும் விம்மி அழுதவள்.. ”தயவு செய்து பேசாம இருங்க… ரத்தம் நிக்கவே மாட்டேங்குது,” என்று அவள் தன் முந்தானையால் காயத்தை அழுத்தியபடி அவனைப் படுக்கையில் உட்கார வைத்தாள்…
அவளது இந்தத் திடீர் அக்கறை ரன்வீருக்குள் ஒரு மெல்லிய நம்பிக்கையைத் தந்தது. ‘உன் கோபத்துக்குப் பின்னாலயும் இன்னும் என் மேல அன்பு இருக்கு மிருதுளா, அதை நீ மறைக்கப் பார்த்தாலும் உன் கண்ணீர் உண்மையைச் சொல்லிடுச்சு,’ என்று அவன் மனதில் நினைத்துக் கொள்ள, அவளோ அவனது காயத்தைப் பராமரிப்பதிலேயே குறியாக இருந்தவள், “ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க இருக்கு?” என்று வினவ, ரன்வீர் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான், அவளும் அதை எடுத்து வந்து பதற்றத்துடன் அவனுக்காக முதலுதவியைச் செய்ய ஆரம்பித்தாள், அந்த கணம் தாத்தாவின் இறப்பெல்லாம் அவளுக்கு நினைவில் இல்லை, அவனது ரத்தத்தைக் கண்ட பதற்றம் மட்டுமே அவளை ஆட்கொண்டிருந்தது…
காயத்திற்கு மருந்திட்டு, பேண்டேஜ் போட்டு முடித்தவள், “வலி இருக்கா?” என்று மென்மையாகக் கேட்க, ரன்வீரோ அவளது முகத்தையே பார்த்தபடி, “நிறைய இருக்கு…” என்று சொல்ல, அவளும் தாழ்ந்த குரலில் “ஸாரி” என்றாள்.
”உன்னோட ஸாரியெல்லாம் வேண்டாம், ஒரு ஹக் கொடு போதும்,” என்று ரன்வீர் கண்சிமிட்டிச் சொல்ல, அதுவரை இருந்த இளகிய மனம் மாறி அவளுக்குள் மீண்டும் கோபம் தலைக்கேறியது…
”உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா? ச்சீ!” என்று அவள் அருவருப்புடன் கூற, அந்த ‘ச்சீ’ என்ற வார்த்தை ரன்வீரைச் சுருக்கென வதைத்தது, அவளுக்காக இவ்வளவு தூரம் போராடும் தன்னை, அவள் இன்னும் ஒரு தரம் தாழ்ந்தவனாகவே பார்க்கிறாளே என்பது அவனது ஆண்மையைத் தீண்டியது…
படுக்கையை விட்டு சட்டென்று எழுந்தவன், “ஆமா! எனக்கு வெட்கமே இல்லை, இருந்திருந்தா என் காதலைக் கொச்சைப்படுத்தின உன்னைத் காப்பாத்த நினைக்க மாட்டேன். உன்னைப் பொறுத்தவரை நான் ஒரு கொலைகாரன், அப்புறம் எதுக்கு என் காயத்துக்கு மருந்தைப் போட்ட? செத்துத் தொலையட்டும்னு விட வேண்டியதுதானே?” என்று ஆவேசமாகக் கர்ஜித்தவன்,.. “இப்போ சொல்றேன் கேட்டுக்கோ… இந்தத் தாலி உன் கழுத்துல இருக்கிற வரைக்கும் நீ என் பொண்டாட்டிதான், அதுக்குண்டான எல்லா உரிமையும் எனக்கு இருக்கு தான், ஆனா, உன் மனசுல நான் யோக்கியன் தான்னு தெரியுற வரைக்கும் உன்னை நான் நெருங்க மட்டும் இல்ல, உன்னை பார்க்க கூட வர மாட்டேன், இது என்னோட வீடு தான், கீழ என்னோட பேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் இருக்காங்க, உனக்கு விருப்பம் இருந்தா அவங்க கூட நீ பேசலாம், இல்லைனா இங்கேயே கூட இருக்கலாம். உன்னை இங்க யாரும் தொந்தரவு பண்ண வர மாட்டாங்க, நானும் இனி வர மாட்டேன், நீ இங்கிருந்து போக முயற்சி பண்ணாலும் உன்னை மறுபடியும் இங்க அழைச்சிட்டு வரது எனக்கு பெரிய விஷயமா இருக்காதுன்னு உனக்கும் தெரியும். ஸோ, அதை மட்டும் பார்த்து நடந்துக்கோ” என்று சொன்னவன், அடுத்த கணம் வேக நடையுடன் அவ்வறையை விட்டு வெளியேறி இருந்தான்…
அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவிற்கு அவனது ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடி போல உள்ளத்தில் விழுந்தது, முரட்டுத்தனத்திற்கும், நியாயத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோட்டில் அவன் நிற்பது போல அவளுக்குத் தோன்றியது…
அவன் சொன்னது போல கதவு இப்போது பூட்டப்படவில்லை, அவன் அவளுக்குச் சுதந்திரம் கொடுத்திருந்தான், ஆனால் அந்த சுதந்திரத்திற்குள்ளும் ஒரு மிரட்டலான பாதுகாப்பை வைத்திருக்கிறான் என்பதை அவளால் உணர முடிந்தது.
