காதலும் கடத்தப்படும் – 5

காதலும் கடத்தப்படும் – 5
சிறிது நேரம் கழித்து அவளது அறைக்குள் வந்த மதன்,
“சார்ஜ் போட்டுக்கவா? அஜூ ஹால்ல போட்டிருக்கான்” என்றான்.
Advertisement
அவள் ‘சரி’ என்று தலையசைத்தாள்.
“ஃபோனயே நோண்டிட்டு இருக்கியே, உனக்கு எப்படி சார்ஜ் நிக்குது?” என்றபடி அவள் எதிரே தரையில் அமர்ந்தான்.
“இருக்கு…”
Advertisement
“என்னோடது பழைய ஃபோன். அஜுவோடது இன்னும் பழசு… ஆமா ஃபேஸ்புக்ல இருக்கியா? ஃப்ரெண்ட் ரெக்குஸ்ட் கொடுக்கவா?”
Advertisement
“கடத்திட்டு வந்த எனக்கே ஃப்ரெண்ட் ரிக்குஸ்ட் கொடுப்பியா?”
“சும்மா தான் கேட்டேன். எனக்கு 35 பிரெண்ட்ஸ் தான் இருக்காங்க. உனக்கு?”
“ஆயிரத்துக்கும் மேல”
Advertisement
“யம்மாடி…”
அவன் ஏதோ பாடியபடி தனது கைபேசியை நோண்ட, அவள் தனது முகப்புத்தகத்தில் ஏதோவொரு காணொளியைக் கண்டு குழப்பமாய் மதனைக் காண, அதில் தனது குரல் வருவதைக் கேட்டு ஆர்வமானான், மதன்.
“என் குரல் மாதிரி இருக்கு?”
வாய்விட்டு சிரித்தவள்,
“குரல் மட்டுமில்ல, ஆளும் நீயே தான்” என்றாள்.
அவன் எழுந்து சென்று பார்க்க,
“உட்காரு” என்று தனது அருகே அவள் சுட்டிக்காட்ட, அவள் அருகே அவன் உட்கார்ந்து, அவளது கைபேசியை வாங்கிப் பார்த்தான்.
“வணக்கம் மக்களே! நான் உங்கள் காவலன் கஜேந்திரன் பேசுகிறேன். சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கும் முழு அதிகாரமும் காவல் துறையிடம் உள்ளது. இருப்பினும், எங்களது நேர்மையை, உண்மையை, டெடிகேஷனை, சின்சியாரிட்டியை மக்கள் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும், காவல்துறை உண்மையிலேயே உங்கள் நண்பன் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக தான் இந்த கஜா யூடியூப் சானல். இன்னைக்கு பாருங்க என் கண்ணு முன்னாடியே செயின் ஸ்னாட்சிங் அட்டெம்ப்ட், அதாவது சங்கிலி பறிப்பு முயற்சி நடத்தப்பட்டுள்ளது. அந்த கள்வனை நொடியிலே பாய்ஞ்சு கையும் களவுமா பிடிச்சு, ஒரு தவறு நடக்காம தடுத்திருக்கேன். இவன் தான் அந்த ஆன்டி-சோஷியல் எலிமெண்ட்” என்றபடி மதனை இன்ஸ்பெக்டர் கஜா ஒரு கையால் அவனது சட்டைக் காலரை இழுத்து பிடித்தபடி வீடியோவில் காட்ட, அவன் வாய்விட்டு அழுதபடி நின்றிருந்தான். “இனிமேல் இந்தமாதிரி ஆளுங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க” என்று அவன் கூற, அடுத்து பொதுமக்கள் யார்யாரோ அந்த காவலரை வாழ்த்தி பேசும் காட்சிகள் தொடர,
“அஜூ” என்றபடி ‘ஓ’வென்று அழத் தொடங்கினான்.
அர்ஜுன் இவனது குரலை கேட்டு அறைக்குள் வர, அஞ்சலி தனது வயிற்றினை பற்றிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள். அவளது வெள்ளந்தி சிரிப்பில் தன்னை தொலைத்தவனாய் சில நொடிகள் உரைந்து நின்றவன், அந்த சலங்கை சிரிப்பொலியில் உருகித்தான் போயிருந்தான்.
“அஜூ” என்றபடி எழுந்து வந்த மதன், அர்ஜுன் மீது சாய்ந்துகொண்டு அழத் தொடங்கினான்.
“மதனா, என்னடா?” என்றவன், “ஏன் அழறான்?” என்றான் அஞ்சலியிடம். அவள் பதில் கூறமுடியாமல் தன்னுடைய கைபேசியை நீட்ட, அதில் கஜா மதனை வைத்து செய்து அலப்பறை காணொளியைக் கண்டான். சிரிக்க முடியாமல் கட்டிலின் மேல் அஞ்சலி சாய்ந்துகொள்ள,
“பாரு அஜூ அந்தாளு என்ன பண்ணி வச்சிருக்கான்னு” என்றான், மதன் அழுதபடி.
“அதுல வந்திருக்கற கமெண்ட்ஸ் எல்லாம் படியேன்” என்றுவிட்டு அஞ்சலி மீண்டும் சிரிக்க, சிரிப்பை அடக்கிக்கொண்டு வாசித்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் சிரித்து வைத்தான்.
சில நிமிடங்களில் அர்ஜுனும் அஞ்சலியும் அமைதியாக, மதனும் அழுவதை நிறுத்தியிருந்தான்.
“இந்தாளுகிட்ட எப்படா சிக்கின?”
“நான் என்ன ஆசைப்பட்டா போயி மாட்டுனேன். என் நேரம். அந்த ராபர்ட்டு அண்ணேன் தான் கைவசம் ஒரு தொழில கத்துக்கன்னு நம்ம மார்க்கெட்டாண்ட செயின் போட சொல்லிக்கொடுத்தாரு. அப்பத்தான் இந்தாளு கிட்ட மாட்டுனேன்”
“நீ மட்டும் தான் வீடியோவுல இருக்க?”
“அந்தாளு எஸ் ஆயிட்டான். நான் காண்டாயிட்டேன்னு தான் சுலபமான வேலை தரேன்னு சொல்லி இந்த புள்ளைய தூக்கற வேலைய கொடுத்தான்”
“ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?”
“நீயே ஏற்கனவே காசு ஏற்பாடு பண்ண முடியாம டென்ஷன்ல இருந்த. இதுல இதை வேற சொல்லி… இப்படி வீடியோ போட்டு அசிங்கப்படுத்தி என்னை முடிச்சுவிட்டுட்டான்”
“என்ன மைக்கேலு இப்படி போய், அதுவும் அந்தாளுகிட்ட மாட்டிக்கிட்டியே?”
என்றாள் அஞ்சலி, சிரிப்பை அடக்கமுடியாமல்.
“உனக்கு அந்த கஜாவ தெரியுமா?”
“தெரியும். ஆனா எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது. விளம்பர பைத்தியம், காசு பைத்தியம், ஏமாத்து பேர்விழி…”
‘இன்ஸ்பெக்டரை தெரிஞ்சு வச்சிருக்கா?!’ என்று அர்ஜுன் யோசனையாகிப் போனாலும், அவனுக்கு வேறொரு கேள்வி மனதினுள் எழுந்தது.
“எதுக்கு அவனை மைக்கேலு’னு கூப்பிட்ட?”
“அதுவா… மதன் அவனோட செல்ல பேராமே, நிஜப்பெயர் மைக்கேல் ஜாக்சன்’னு சொன்னான் அதான் அவனை மைக்கேலுனு கூப்பிட்டேன், அர்னால்டு”
“அர்னால்டா?”
“ம்ம்… உன் செல்ல பேரு ‘அஜூ’வாம். நிஜப்பெயர் அர்னால்டுன்னு அவன் தான் சொன்னான்”
அவன் எரிச்சலோடு மதனை நோக்க,
“ஏதோ அந்த புள்ள மேல நம்பிக்கை இல்லாம பொய் சொல்லிட்டேன். அதுவும் நம்பிடுச்சு..” என்றான் அழாதகுறையாக.
“என்னது நம்பிட்டேனா? இப்போ புரியுதா உன்னை ஏன் எல்லாரும் காமெடி பீஸ்’னு சொல்றாங்கன்னு?” என்றாள் அஞ்சலி, சிரிப்பினூடே.
“பாரு அஜூ இவள…”
“சரி சரி விடு, இங்கப்பாரு மதனா, இனி அந்த ராபர்ட் அண்ணன் கூட சேராத. ஒரு வேலை முடிச்சு கொடுத்தோம், காசு கிடைச்சுது, சொன்ன கமிஷனை கொடுத்தாச்சு. இதோட எல்லாம் முடிஞ்சுது. அந்த ஆளு நம்மள அக்கியூஸ்ட்டா (accused) மாத்தாம விடமாட்டான். இனியும் அவன்கிட்ட போய் சிக்காத…” என்றவன், அஞ்சலியை நோக்கி,
“உனக்கு மட்டன் பிரியாணி பிடிக்குமா, சிக்கனா?” என்றான்.
“எனக்கு எதுவும் வேண்டாம் அர்னால்டு. சாப்பிடற மூடும் இல்ல, பசியும் இல்லை. காலைல நீ வாங்கி வந்த இட்லி வீணாகிடுமேன்னு தான் சாப்பிட்டேன். பசிச்சா நானே உன்னை கேட்கறேன்” என்றாள். ‘சரி’ என்றவன் மதனிடம் கூறிவிட்டு வெளியே எங்கோ சென்றான்.
அமைதியாக மதன் அமர்ந்திருக்க,
“மிஸ்டர் மைக்கேல் ஜாக்சன், ஏன் இவ்வளவு அமைதி?” என்றாள், அமைதியை கலைத்தபடி.
“நானே கடுப்புல இருக்கேன் அஞ்சலி, நீ வேற… அந்த கஜாவ…”
“என்ன பண்ணுவ? அவன் போலீஸ், மறந்துடாத…”
“போலீஸ்’னா என்ன வேணும்னாலும் பண்ணுவானா?”
“அவன் பண்ணுவான், ஏன்னா அவன் ஒரு கிறுக்கு…”
“ஆமா கிறுக்குதான்… நீதான் பயங்கரமான ஆளாச்சே, அவனை அழ வைக்க ஏதாவது ஸ்கெட்ச் போட்டு கொடேன்” என்றான், பரிதாபமாக.
ஆழ்ந்து யோசித்தவள், ஒரு யோசனை கூறினாள்.
“ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஏதாவது மாட்டிப்பேனா?”
“ஊருல எல்லாரும் நாலு ஃபேக் ஐ.டி. வச்சிக்கிட்டு தான் சுத்தறானுங்க. கடலைபோடற, கழட்டி விடற, காண்டேத்துற… அவ்வளவு தான்… ஆனா ரொம்ப வச்சுக்காத… லைட்டா கலாய்ச்சுட்டு விட்டுடு, ஏன்னா அவன் ஒரு கிறுக்கு”
“சரி சரி…”
மதனிற்கு முகப்புத்தகத்தில் புதிய கணக்கு தொடங்கிய அஞ்சலி, நடிகர் சந்தானம் பெண் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் வரும் காட்சியை சுயவிவர படமாக வைத்தவள், ‘கரீனா சோப்ரா’ என்று பெயரும் கொடுத்தாள்.
“என்ன கிண்டலா?”
“ப்ச்… பேரும் ஃபோட்டோவும் பார்த்தா நம்பற மாதிரி இருக்கணும். கேட்டா ராஜஸ்தானிலிருந்து வந்திருக்கேன்னு சொல்லு. உன் பேரு, அட்ரஸ், ஃபோன் நம்பர் எதுவும் கொடுக்காத. புரியுதா?”
“சரி” என்று பலமாக மண்டையாட்டினான்.
தனது புது ஃபேக் ஐ.டி.யை அவன் பார்த்துக்கொண்டிருக்க, ஏதோ ஒரு நட்பு கோரிக்கை வந்தது.
“அஞ்சலி யாரோ தாத்தா எனக்கு ரிக்குவஸ்ட் கொடுத்திருக்காரு?”
“ஏ.ஏ.கே. சந்திரன்’ஆ?”
“உனக்கு எப்படி தெரியும்?”
“அவரு பேரு அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்”
“ஹே…”
“என்னோட ஃபேக் ஐ.டி. அதுல அந்த கஜா என் ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருக்கான்”
“நீ எதுக்கு?”
“நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க…”
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய அர்ஜுன், அனைவரும் பருகிட தேநீர் வாங்கி வந்திருந்தான். மதனும் அஞ்சலியும் அறையில் அமர்ந்து கைபேசியில் ஏதோ பார்த்த வண்ணம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்க்கையில் அவனுள் எட்டிப்பார்க்கும் பொறாமையை அவனால் தடுக்க முடியவில்லை. ‘இவன் சுலபமா பேசறான், என்னால முடியல’ என்று பெருமூச்செடுத்தவன், அறைக்குள் சென்று அவ்விருவருடன் தேநீர் பருகினான். நடந்தவற்றை மதன் கூறிமுடிக்க,
“எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ மதனா” என்றவன் அமைதியாக நின்றபடி, அவ்விருவரும் கஜாவைக் குறித்து கிண்டலடித்து சிரிப்பதை வேடிக்கை பார்த்திருந்தான். பல நாட்கள் கழித்து, அவனுள் அவனுக்கே புரியாத ஒரு இதமான சுகம் படர்ந்தது! மனம் குழைந்தது!!
