காதலும் கடத்தப்படும் – 6

காதலும் கடத்தப்படும் – 6
இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அர்ஜுன், எழுந்து சென்று ஜன்னலின் வழியே வெண்ணிலவைக் கண்டான்.
Advertisement
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமை போல
Advertisement
தானம் கேட்க கூசி நின்றேனே…
Advertisement
என்று தனக்குள்ளே பாடிக்கொண்டான். சிரித்துக்கொண்டான். ஜன்னல் கம்பியின் மீது சாய்ந்து ஏதோ தவித்திருந்தான். பெருமூச்செடுத்தான். நீர் பருகினான். அவள் உறங்கிவிட்டாளா என்று காண அறைக் கதவின் அருகே சென்று நின்றான். உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
“அஞ்சலி…”
“வா அர்னால்டு”
Advertisement
அவள் பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டவன், கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
“தூங்கலயா?” என்றான்.
ஜன்னலருகே இருந்த சுவற்றின் மீது சாய்ந்து சம்மணமிட்டு அமர்ந்தவள், தலையணையை மடியின் மீது வைத்துக்கொண்டு,
“இல்லை, உட்காரு” என்றாள்.
அவள் எதிரே கட்டிலின் மறுபுறம் அமர்ந்தவன், என்ன கூறுவது என்று யோசித்துக்கொண்டிருக்க,
“அர்னால்டு…” என்று அமைதியை கலைத்தாள்.
“அஞ்சலி ப்ளீஸ் அப்படி கூப்பிடாத… என்னமோ மாதிரி இருக்கு. அம்மா, அப்பா, மதனுன்னு எனக்கு நெருக்கமானவங்க என்னை ‘அஜூ’னுதான் கூப்பிடுவாங்க”
“சரி அஜூ, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
அவள் உடனே அவனை ‘அஜூ’ என்று அழைத்தது அவனுக்கு மிகவும் பிடித்து போனது.
“சொல்லு…”
“நாளைக்கு ராத்திரி 12 மணிக்கு யாரு கண்ணுலயும் படாம என்னை ஏர்போர்ட்ல விட்டுட முடியுமா?”
அவனது இதயம் நின்று துடித்தது.
“ஏன்? எதுக்கு?”
“கோவா போகப்போறேன்”
“கோவா’வா? அங்க…”
“லூயிஸ் இருக்கான். மியா கூட இருப்பான்னு நினைக்கறேன்”
“அவங்க உனக்கு தெரிஞ்சவங்களா?”
“ம்ம் ஃப்ரெண்ட்ஸ்…”
“கூட படிச்சவங்களா?”
“இல்லை ஃபேஸ்புக்’ல தான்…”
“கோவா’காரங்கள எப்படி ஃப்ரெண்டு பிடிச்ச?”
“அவங்க கோவா கிடையாது. ஃப்ரான்ஸ். அடிக்கடி கோவா வருவாங்க…”
“அவங்களோட… என்ன ப்ளான்?”
அவள் அவனை கேள்வியாய் நோக்க, தான் எல்லை மீறுகிறோம் என்று புரிந்தவனாய் அமைதியாகிப்போனான்.
“இல்லை… கோவா… ஃப்ரான்ஸ்… இதெல்லாம் கேட்கும்போது கவலையா இருக்கு…”
“கவலைப்பட ஒண்ணுமில்ல அஜூ. நான் டூரிஸ்ட் விசால அவங்களோட ஃப்ரான்ஸ் போக போறேன். அப்புறம் அங்க போயிட்டு யோசிக்கணும்”
“யோசிக்கணுமா?”
“ம்ம்… உன்னால ஏர்போர்ட்ல விட முடியுமா?”
யோசனையாய் அமர்ந்திருந்தவன்,
“நீ அவசியம் போகத்தான் வேணுமா?” என்றான் கவலையாக.
“பின்ன?”
“நான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். என் தப்பை ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்கறேன்”
“சரி, நானே ஏர்போர்ட்டுக்கு போயிக்கறேன்”
“இல்லை அஞ்சலி, உன் அப்பா எவ்வளவு வருத்தத்துல இந்நேரம் இருப்பாரு?! உன்னை தனி ஆளா எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பாரு… எனக்கும் சின்ன வயசுலயே அம்மா இறந்துபோயிட்டாங்க. என் அப்பாதான் என்னையும் மதனையும் தனி ஆளா வளர்த்தார். அந்த கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும். அதனால சொன்னேன்…”
“உனக்கு உன் அப்பாவை ரொம்பப் பிடிக்குமா?”
அவன் ‘ஆம்’ என்று தலையாட்ட,
“எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றாள். இதைக் கூறும்போது அவளது கண்கள் ஒளியிழந்திருந்தன.
“அப்பா மேல கோவம் இருக்கலாம்…”
“கோவமில்ல அஜூ. உனக்கு புரியல. நீ நினைக்கற மாதிரி இந்த சினிமால காட்டுவாங்களே, ரொம்ப பாசமா இன்னொரு ஃப்ரெண்ட் மாதிரியெல்லாம் என் அப்பா கிடையாது. தன்னோட காரியத்தை சாதிக்க என்னை பகடைக்காயா பயன்படுத்த யோசிக்கமாட்டாரு…”
இறுக்கமான அவளது முகத்தினை கண்டவன், அமைதியாகிப் போனான்.
“இந்த… இந்த டேபிள்ள உன் புடவையை…” என்று தனது பெற்றோரின் புகைப்படத்தின் கீழே இருந்த மேசையை சுட்டிக்காட்டினான்.
“பரவால்ல இருக்கட்டும்…”
“ரொம்ப அழகா மாத்திட்ட… இந்த இடத்தை மட்டுமில்ல, வீட்டையே…”
சிரித்துக்கொண்டவள், “நான் எதுவும் மாத்தல, ஒரு மாமாங்கம் கழிச்சு வீட்டை பெருக்கியிருக்கீங்க…” என்றாள்.
“உண்மை தான்… இருந்தாலும் நீ விளக்கேத்தினது… பூ போட்டது… ஒரு நல்ல வைபா இருக்கு”
“உன் அம்மா ஃபோட்டோவை பார்த்ததும் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துடுச்சு…”
“எப்படி உன் அம்மா…” சற்று இறுமியவன், மேற்கொண்டு பேச தயங்கினான்.
“ஒரு நாள் காலைல தலைக்கு ரிப்பன் வச்சு பின்னிவிட்டு, ஸ்கூல் பேக்கு, லஞ்சு பேக்கு கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பிவச்சாங்க. சாயங்காலம் வந்து பார்த்தா, அம்மா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்கன்னு சொல்லி, படுக்க வச்சு மாலை போட்டு… காலைல நான் நினைச்சு பார்க்கல, சாயங்காலம் அம்மா இருக்க மாட்டாங்கன்னு… தலை பின்னிவிட ஆள் இல்லை, சாப்பாடு எடுத்து கொடுக்க ஆள் இல்லை, தூங்கிட்டேனான்னு வந்து பார்க்க ஆள் இல்லை, என் ஸ்கூல் கதையெல்லாம் சொல்ல ஆள் இல்லை… அப்படியே என் வாழ்க்கையே காலியான மாதிரி ஆயிடுச்சு… ஒரே நாள்ல…”
அவள் அவளது நினைவுகளில் மூழ்க, அவனும் ஏதோ சிந்தனையில் தொலைந்திருந்தான்.
“அஜூ, அந்த பெட்டியில ஏதோ ஸ்க்ரிப்ட் இருந்தது. பிரிச்சு படிக்கல. ஆனா அதெல்லாம் சினிமா ஸ்க்ரிப்டா?” என்றாள், சற்றே கனத்திருந்த இரவினை லேசாக்க.
“அது அப்பாவோட ஸ்க்ரிப்ட். அப்பா சின்ன வயசுலேர்ந்து ஒரு நாடக கம்பெனில இருந்தாங்க. கொஞ்சம் வளர்ந்து பெரியாலானதும் சொந்தமா நிறைய ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிச்சாங்க. அவங்க எழுதின ஸ்க்ரிப்ட் எல்லாம் அந்த காலத்துல செம ஹிட்டு. ஒரு கட்டத்துக்கு மேல மக்கள் நாடகம் பார்க்கறத விட்டுட்டாங்க. அப்பாவுக்கும் பிடிச்ச தொழில் செய்ய முடியாம போயிடுச்சு…”
“சினிமாவுல முயற்சி பண்ணலையா?”
“எவ்வளவோ முயற்சி பண்ணாங்க. அம்மா இறந்ததுக்கப்புறம், அப்பாவுக்கு பெருசா ஆர்வம் இல்லாம போயிடுச்சு. அப்படியே விட்டுட்டாங்க…”
“உன் அப்பாவுக்கு உன் அம்மாவை ரொம்ப பிடிக்குமா?”
“ரொம்ப… என்னை விட… ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ஆசையாசையா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அம்மா தான் அப்பாவுக்கு எல்லாமே. அம்மா இல்லாம போனது, அப்பாவுக்கு பெரிய வலி. எங்களுக்காக கொஞ்ச நாள் இருந்தாங்க. அப்புறம் ஒரு நாள், ‘நான் அம்மாகிட்ட போறேன் அஜூ, நம்மள நம்பி வந்த பய மதன், அவனை பத்திரமா பார்த்துக்க’னு சொல்லிட்டு சாமிகிட்ட போயிட்டாரு.”
“என்ன சொல்ற அஜூ, மதன்??!!”
“அவன் என் கூட பிறந்த தம்பி இல்லை. எனக்கு ஆறு வயசு இருக்கும்போது அவனை அப்பா கூட்டிட்டு வந்தாங்க. ரோட்ல பசி மயக்கத்துல கிடந்திருக்கான். அப்பா சாப்பாடு வாங்கிக் கொடுத்து யாரு என்னனு விவரம் கேட்டதுக்கு அழுதிருக்கான். பதிலே சொல்லலையாம். வீட்டுக்கு வரியானு அப்பா கூப்பிட்டதும் உடனே கூட வந்துட்டான். அவனை பார்த்ததும் அம்மா எதுவுமே சொல்லலயாம், அஞ்சலி. அவனை அப்படியே ஆசையா வாரியணைச்சிக்கிட்டாங்ளாம். ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் அவனைப் பத்தின விவரம் கேட்டதுக்கு, ‘என் அம்மா நீங்கதான்’னு என் அம்மாகிட்ட சொல்லியிருக்கான். அப்போவே அம்மா முடிவு பண்ணிட்டாங்க, இனி அவன் இந்த குடும்பத்துல ஒருத்தன்னு.”
“அம்மாக்களே ரொம்ப ஸ்வீட்ல?”
“ஆமா…”
“அப்பா எதுவும் சொல்லலையா?”
“அம்மாகிட்ட அப்பா சரணாகதி அடைஞ்சுட்டாரு. அம்மா என்ன பண்ணாலும் கேள்வி கேட்டது கிடையாது”
சிறிது நேர அமைதிக்குப்பிறகு,
“உன் அம்மா அப்பாவோட லவ் ஸ்டோரி உனக்கு தெரியுமா?” என்றாள்.
“தெரியாம என்ன? எல்லாரும், பாட்டி நிலாவுல வடை சுடற கதையை சொல்லி சோறூட்டுவாங்க. ஆனா என் அப்பா நிலாவுல அம்மா இருக்கா பாரேன்னு ஆரம்பிச்சு, எங்க பார்த்தாங்க, எப்படி பழகுனாங்க, எப்படி கல்யாணம் பண்ணாங்கன்னு அவங்க காதல் கதையைத்தான் சொல்லுவாங்க. கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுச்சு…”
சிரித்துக்கொண்டவள், “நீ சொல்றதெல்லாம் சினிமால பார்க்குற மாதிரி இருக்கு” என்றாள்.
“நிஜத்துலயும் அதெல்லாம் நடக்கத்தான் செய்யுது, அஞ்சலி. சில சமயம் நம்ம கண்ணுல படாம போயிடுது…”
“இருந்தாத்தானே கண்ணுல பட…”
அவள் மீண்டும் அமைதியாகிப்போனாள். மேற்கொண்டு வேற என்ன பேசுவது, அவளது இறுக்கத்தை எப்படி போக்குவது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க,
“நீ தப்பா நினைக்கலன்னா நான் ஒன்னு கேட்கவா?” என்றாள்.
“சொல்லு”
“உன் அம்மா அப்பா லவ் ஸ்டோரி சொல்றியா?”
சிரித்துக்கொண்டவன், “இத கேட்கவா தயங்கின?” என்றவன், சிறு வயது முதலே அவன் கேட்டு வளர்ந்த கதையை கூறத் தொடங்கினான்.
