Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 37

அத்தியாயம் – 37

 

​”இந்த மிருதுளா கிட்ட பேசி நம்ம பிளான்க்கு கட்டுப்பட வைக்கலாம்னு நினைச்சா, இந்த ரன்வீர் வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டானே!” என்று சுந்தரம் ஆத்திரத்தில் புலம்பிட,
​அதற்கு விஷ்வா, “அதானே… அவனால எல்லாம் பாலா போச்சு, சரி விடுங்கப்பா, இன்னொரு நாள் பார்த்துக்கலாம்,” என்று கூற, மகனை முறைத்தவரோ.. “ஆமா, நீ அப்படியே கிழிச்சிடுவ! அவன் முறைச்சதும் அப்படியே அடங்கிப் போய் நிக்கிரே அவனை எதிர்க்க உனக்குத் தைரியம் இல்லையாடா?” என்று அவர் எகிற, ​”அவன் முறைச்சாலே பயமா வருதுப்பா! அன்னைக்குக் கல்யாண மேடையில அவன் போட்ட மிதில இன்னும் உடம்புல வலி இருந்துகிட்டே இருக்கு, என்னை இவ்வளவு பேசுற நீங்க மட்டும் என்ன… அவனை எதிர்த்து நிற்க வேண்டியதுதானே?” என்று விஷ்வா திருப்பிக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவர், தன் கையாலாகாததனத்தை மறைக்க, “சரி விடு, இன்னொரு நாள் பார்த்துக்கலாம்,” என்று பேச்சை மாற்றினார்…

​இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சுவருக்குப் பின்னால் ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த சரஸ்வதிக்கு உடல் நடுங்கியது. ‘நல்ல நேரத்துல மிருதுளாவின் கணவர் வந்து அவளைக் கூட்டிட்டுப் போனார்’ என்று தான் அவருக்கு நினைக்க தோன்றியது,..



Advertisement

​ஆரம்பத்தில் ரன்வீரை கெட்டவனாக நினைத்த சரஸ்வதிக்கு, சமீப நாட்களில் தான் நிஜமான உண்மை புரிந்தது. உண்மையான கொலைகாரன் ரன்வீர் அல்ல, தன் வீட்டிற்குள்ளேயே இருக்கும் தன் மகன்தான், அந்த கொலையை மறைக்க தனது கணவரும் நாடகமாடி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டவருக்கு, மீண்டும் மிருதுளா இவர்களிடம் வந்து சிக்கிக் கொள்ள கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது…

அதே நேரம், காரில் சென்று கொண்டிருந்த மிருதுளா அமைதியாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவளது மனம் போராட்டக் களமாக இருந்தது. அவனது சட்டையை ஆவேசமாகப் பற்றி, ‘என்னைத் தூக்கிட்டு வர நீ யாரு?’ என்று சண்டை பிடிக்க வேண்டும் என்று தோன்றினாலும், தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடியே வந்தாள்…

​ரன்வீரும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் வீடும் வந்துவிட, கார் நின்றதும் அவள் விறுவிறுவென இறங்கி எதைக் குறித்தும் கவலைப்படாமல் வீட்டினுள் சென்றுவிட்டாள், அவளை அழுத்தமாகப் பார்த்த ரன்வீருக்கு ஒரு பெருமூச்சு மட்டுமே மிஞ்சியது…

Advertisement

​தனது வீட்டு டிரைவரை அழைத்த ரன்வீர், விஷ்வா வீட்டின் விலாசத்தைக் கொடுத்து, அங்கே மிருதுளா விட்டுவிட்டு வந்த காரை எடுத்து வரும்படி பணித்துவிட்டு, பிறகு தானும் நிதானமாக வீட்டினுள் சென்றான்…

Advertisement

​மிருதுளா நேராகத் தனது அறைக்குச் சென்றுவிட்டது அவனுக்குப் புரிந்தது. இப்போது அறைக்குச் சென்றால் தேவையில்லாத வாக்குவாதங்கள் வந்து மனக்கசப்பு அதிகமாகும் என்று நினைத்தவன், கீழேயே ஹாலில் அமர்ந்து கொண்டான். அவனது தங்கை சம்யுக்தாவும், தம்பி வினோத்தும் அண்ணனைக் கண்டதும் அவனோடு ஒட்டிக்கொள்ள, தம்பி தங்கையின் கேலிப் பேச்சிலும் கலாட்டாவிலும் அவனது அந்த இறுக்கமான நேரம் கலகலப்பாகவே சென்றது…

இரவு உணவிற்கு பிறகும் ரன்வீருக்கு அறைக்கு செல்ல தயக்கம், இருப்பினும் போகாமல் இருக்க முடியாதே, யாராவது பார்த்தால் கேள்வி கேட்பார்கள் என்பதை புரிந்து மெல்ல தனது அறைக்குள் நுழைய, மிருதுளா படுக்கையில் யோசனையுடன் அமர்ந்திருந்தாள்,…

அவளை கண்டும் காணாமல் அவன் இரவு உடையை எடுக்க அலமாரியில் பக்கம் செல்ல, அவனது முதுகை வெறித்தவளுக்கு இன்று அவனின் மீது அளவுகடந்த கோபம். இத்தனை நேரம் அறையினுள்ளேயே அடைந்து கிடந்ததால் அவளது மனஅழுத்தமும் கூடி இருக்க, வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாமல்,.. “இன்னைக்கு வேற ஏதாவது ரூம்ல போய் தூங்குங்க” என்றாள்,..

Advertisement

திரும்பியவனோ,.. “ஏன்” என்று வினவ,.. “ம்ம்.. நான் இருக்க கோபத்துக்கு உன்னை கொன்னுடுவேனோன்னு பயமா இருக்கு” என்று சொல்ல, அவன் உதடுகளில் விரக்தி புன்னகை.

“கொன்னுடு,.. மேலே போயாச்சும் நிம்மதியா இருக்கேன்” என்று சொல்ல,.. “நான் ஒன்னும் உன்னை மாதிரி ஈவு இரக்கம்  இல்லாதவ இல்லையே கொலை பண்ணுற அளவுக்கு துணிய, ஆத்திரம் பண்படங்கு இருந்தாலும் கொலை செய்யுற அளவுக்கு என் மனசு அரக்க தனம் கொண்டது இல்ல” என்று சொல்ல, அவள் மீண்டும் தன்னை கொலைகாரன் என்று கூறியதில் அவன் ரத்தம் சூடாகியது,..

இருப்பினும் விழிகள் மூடி தன்னை சமன்செய்து கொண்டவன்,.. இங்கிருந்து போய் விடலாம் எனும் எண்ணத்தில் வாசலை நோக்கி நடக்க, அவளோ அதற்கும் விடாமல்,.. “பயந்து ஓடுறீங்க போல” என்றாள்,..

“அப்படியே வச்சிக்கோ” என்று அவன் கதவை திறக்க,.. அவளோ.. “நான் பேசணும்” என்றாள்,..

“உன் கிட்ட பேசிற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல” அவன் சொல்ல.. “பேசி தான் ஆகணும்” என்று கறாராக சொன்னவள்,.. “ஏதோ ஒரு ஃபைலுக்காக தான் என் வீட்டுக்குள்ள வந்தேன்னு சொன்னீங்களே, அது எதை பத்தின ஃபைல்” என்று கேட்க,.. “ஓ.. அதை பத்தி இப்போ தான் உனக்கு கேட்கணும்னு தோணுச்சா?” என்றான் அவன்,…..

“பேச்சை மாத்தாம சொல்லுங்க, அந்த ஃபைல்ல என்ன இருக்கு,  இப்போ அது எங்க இருக்கு” என்று வினவ.. “என்கிட்ட தான்” அவன் சொன்னதும் அதிர்ந்தவள்,.. “எப்படி உங்க கிட்ட வந்தது” என்றாள்,..

“உன் தாததா இருக்கும் வரைக்கும் அதை சேஃபா பார்த்துகிட்டாரு, அவர் போனதும் அதை பாதுகாக்க யாரும் இல்லை, ஸோ ஈஸியா என் கைல சிக்கிடுச்சி” என்று சொல்ல,.. “ச்சே திருடுனீங்களா” என்று கேட்டவள்,.. “அது என்ன ஃபைல்” என்றாள்,..

அவன் பதில் ஏதும் சொல்லாமல் அலமாரியைத் திறந்து, அதிலிருந்த ரகசிய லாக்கரை இயக்கி,​அங்கிருந்த ஒரு ஃபைலை எடுத்து வந்து மேஜை மீது வைத்துவிட்டு… “நீயே படிச்சுத் தெரிஞ்சுக்கோ!” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு பேச விருப்பமில்லாமல் பால்கனிக்குள் சென்று நின்று கொண்டான்…

​மிருதுளா படபடக்கும் இதயத்துடன் அந்த மேஜை அருகே சென்றாள், இத்தனை குழப்பங்களுக்கும், போராட்டங்களுக்கும் காரணமான அந்த மர்மமான கோப்பு இப்போது அவள் கையில்.

மூச்சடக்கி அதன் முதல் பக்கத்தைப் புரட்டினாள், ஒவ்வொரு பக்கத்திலும் இருந்த கணக்கு வழக்குகளும், ரகசிய வரைபடங்களும் அவளை வியப்பில் ஆழ்த்தின, அது வெறும் சாதாரணத் தொழில் பற்றியது அல்ல…

ரன்வீரின் தந்தை மற்றும் மிருதுளாவின் தந்தை இருவரும் இணைந்து சட்டத்திற்குப் புறம்பாகப் பறிமுதல் செய்யப்படும் பொருட்களைப் பாதுகாக்கும் ஒரு ரகசிய திட்டம் சார்ந்த பிஸ்னஸை ரகசியமாகச் செய்து வந்திருக்கிறார்கள், அனைத்தும் அதில் இருந்தது, பல  தொழிலதிபர்களின் முகத்திரையை கிழித்து, அவர்கள் செய்த இல்லீகல் பிஸினஸ் பற்றிய அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நேரடியாக கோர்ட்டிலேயே சப்மிட் செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்,..

​அனைத்து பக்கங்களையும் படித்து முடித்துவிட்டு, பால்கனி கதவருகே வந்தவளின் முகத்தில் இப்போது ஒருவித அதிர்ச்சி கலந்த குழப்பம் தெரிந்தது…

​”இது… இது நிஜமா?” என்று அவள் ஃபைலைக் காட்ட, ரன்வீர் கனத்த குரலில்.. “நிஜம் தான்… நம்ம ரெண்டு பேரோட அப்பாக்களும் சேர்ந்து செஞ்ச ரகசிய ஆபரேஷன் மாதிரி இது, யாருக்கும் தெரியாம அவங்க ரெண்டு பேரும் ஒரு பெரிய ப்ராஜெக்ட் பண்ணியிருக்காங்க, ஆனா அந்த ப்ராஜக்ட் தான் அவங்க ரெண்டு பேரோட உயிருக்கும் வினையா முடிஞ்சது.” என்று சொல்ல ​மிருதுளா திகைத்து நின்றாள்.

“என்ன சொல்றீங்க? அப்படினா என் அம்மா அப்பாக்கு ஆனது ஆக்சிடென்ட்ல இல்லையா?” அவள் வினவ,… “ஆக்சிடன்ட் தான், ஆனா அந்த ஆக்சிடென்ட் தற்செயலா நடந்தது இல்ல, அது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொலை” என்று சொல்ல, அதிர்ந்தவளோ,.. “என்ன சொல்றீங்க? யா.. யார் இதை பண்ணது” என்றாள்,..

“அவனும் இப்போ உயிரோட இல்ல” ரன்வீர் சொல்ல,.. “எனக்கு எதுவும் புரியல” என்றாள் அவள்,…

“நம்ம அப்பாக்களோட மெயின் பிஸினஸ் வேறயாக இருந்தாலும்,
அவங்க ரெண்டு பேர் மனசுலயும் இந்த ஊரை எப்படியாவது காப்பாத்தணும்ங்கிற தீராத வெறி இருந்தது.

​என் அப்பாவுக்கு உன் அப்பா காலேஜ் ஜூனியர், ஒரே காலேஜ்ல படிச்சதால அவங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு ஏற்பட்டு, அது காலேஜ் முடிஞ்ச பிறகும் தொடர்ந்தது. பிஸ்னஸ்ல காலடி எடுத்து வச்ச பிறகு, ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் போயிட்டாலும், சில சந்தர்ப்பங்கள்ல அவங்க அடிக்கடி சந்திச்சுக்கிட்டாங்க.

​அப்படி ஒரு சந்திப்புலதான், இந்த ஊர்ல சத்தமே இல்லாம நடக்கிற பல அராஜகங்களைப் பத்தி என் அப்பா வருத்தப்பட்டுப் பேசிருக்காரு, அதைக் கேட்ட உன் அப்பா, ‘இதைப் பார்த்துக்கிட்டு நாம ஏன் சும்மா இருக்கணும்? நாமளே களத்துல இறங்கி இதைத் தடுக்கலாம்’னு ஒரு ஐடியா கொடுத்திருக்காரு.

​என் அப்பாவும் சரின்னு சொல்ல, அந்த நிமிஷத்துல இருந்துதான் அவங்க அந்த ரகசியப் பயணத்தை ஆரம்பிச்சாங்க, இந்த ஊருக்கும் நாட்டுக்கும் நல்லது பண்ணணும்னு அவங்க எடுத்த அந்த முடிவுதான், கடைசியில அவங்க உயிரையே பறிக்கிற அளவுக்குப் போய் முடிஞ்சது” என்று விரக்தியாக சொன்னவன் மேலும்,.. ​”ராக்கின்னு ஒரு பெரிய மில்லியனர்… ஊர் உலகத்துல தன்னை ஒரு பெரிய நல்லவனா காட்டிக்கிட்டு, உள்ளுக்குள்ள பல சட்ட விரோத செயல்களை செஞ்சிருக்கான், போதை மருந்துல இருந்து இன்னும் பல தடை செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவுக்குள்ள, குறிப்பா தமிழ்நாட்டுக்குள்ள கொண்டு வர்றதுதான் அவனோட வேலை, இதை உன் அப்பாவும் என் அப்பாவும் கண்டுபிடிச்சாங்க.

​ஆனா, அதிகார வர்க்கம் முழுக்க அவன் கைக்குள்ள இருந்ததால, போலீஸ் கிட்ட போறதுல எந்தப் பயனும் இல்லைன்னு அவங்களுக்குத் தெரிஞ்சது, அதனால அவங்களே ரகசியமா ஒரு டீம் அமைச்சுக் களத்துல இறங்குனாங்க, ராக்கி மாதிரி எத்தனையோ பேரை அவங்க ரகசியமா வேட்டையாடி இருக்காங்க. ஆனா, துரதிர்ஷ்டவசமா ராக்கி கிட்ட மட்டும் அவங்க தோத்து போயிட்டாங்க.

​ராக்கியோட ஒட்டுமொத்த இல்லீகல் பிஸ்னஸ் விவரங்கள், அவனோட நெட்வொர்க் எல்லாத்தையும் ஆதாரமா திரட்டி இந்த ஃபைல்ல வச்சிருந்தாங்க, இதை கோர்ட்ல சப்மிட் பண்ணி அவனை சிறைக்கு அனுப்பத் தயார் பண்ணிட்டு இருந்த நேரத்துலதான், அவன் முந்திக்கிட்டான். ஆக்சிடென்ட்ங்கிற பேர்ல நம்ம ரெண்டு பேரோட அப்பாக்களையும் கொன்னுட்டான், அன்னைக்கு உன் அம்மாவும் உன் அப்பா கூடவே கார்ல இருந்ததால, அவங்களும் அந்தச் சதியில பலியாகிட்டாங்க.”
என்றவன் ​பேச்சை நிறுத்த, மிருதுளாவின் கண்கள் கலங்கின.

அவனோ மேலும்… ​”ஹாஸ்பிட்டல்ல உன் அப்பாவோட கடைசி நொடிகள்ல உன் தாத்தாதான் பக்கத்துல இருந்திருக்காரு, உன் அப்பா சாகுறதுக்கு முன்னாடி இந்த ஃபைல் இருக்கிற இடத்தைப் பத்தித் தாத்தா கிட்ட சொல்லியிருக்காரு, ‘இந்த ஃபைலை உங்க உயிரை விட அதிகமா பாதுகாக்கணும்’னு மட்டும் சொல்லிட்டு, முழு காரணத்தை சொல்லாமலேயே இறந்துட்டாரு.

​உன் தாத்தாவுக்கு இந்த ஃபைல்ல இருக்கிற விஷயங்கள் முழுசாப் புரியலைனாலும், தன் மருமகனோட கடைசி வாக்குக்காக அதை அத்தனை வருஷமாப் பாதுகாப்பா வச்சுருந்திருக்காரு” என்று ரன்வீர் கூறி முடிக்க, மிருதுளா மெல்ல அந்தப் ஃபைலைத் தொட்டுப் பார்த்தாள்.

​அவள் கைகள் நடுங்கின. “அப்போ… அந்த ராக்கி எப்படி, எப்போ இறந்தான்?” என்று அவள் குரல் தழுதழுக்க வினவிட,​”எல்லாம் கர்மா தான், அவன் பண்ண தப்புக்கெல்லாம் கடவுளே தண்டனை கொடுத்துட்டாரு ” என்றவன், பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தி..  “என் அப்பா இறந்தது ஒரு விபத்துன்னுதான் இத்தனை வருஷமா நாங்க எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, சில மாசங்களுக்கு முன்னாடி தற்செயலா என் அப்பாவோட டைரியைப் படிச்சுப் பார்த்த பிறகுதான், அது ஆக்சிடென்ட் இல்லைங்கிற அதிர்ச்சியான உண்மை எனக்குத் தெரிஞ்சது.

​என் அப்பா உன் அப்பாவோட சேர்ந்து அப்படியொரு ரகசியப் ப்ராஜெக்ட் பண்ணியிருக்காருங்கிற விஷயமும் அப்போதான் புரிஞ்சது, அவரோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு அவருக்கு முன்கூட்டியே தெரிஞ்சிருக்கு போல, அதனாலதான் அவர் டைரியில எல்லாத்தையும் விவரமா எழுதி வச்சிருந்திருக்காரு, எங்களோட துரதிர்ஷ்டம், அந்த டைரி என் கையில கிடைக்கவே இத்தனை வருஷம் ஆகிடுச்சு.

​ராக்கியைப் பத்தின ஆதாரங்கள் அடங்கிய அந்தப் ஃபைல் உன்னோட வீட்ல உன் அப்பா கிட்ட பாதுகாப்பா இருக்கிறதாவும் அந்த டைரியில எழுதியிருந்தது, உடனே உன் அப்பாவைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன், அவரும் அவர் மனைவியும் ஏற்கனவே இறந்துட்ட விஷயம் எனக்குத் தெரிஞ்சது, அவரோட வீடு பல மாசங்களா பூட்டியே இருக்கிறதா தகவல் வர, அந்தப் ஃபைலைத் தேடித்தான் முதன்முதலா உன் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன், வீடு முழுக்க அலசினேன், ஆனா என் கையில அது சிக்கவே இல்லை.

​அப்புறம்தான் உன் தாத்தாவைப் பத்தித் தெரிய வந்தது, ஆக்சிடென்ட்ல குத்துயிரும் குலையுயிருமா இருந்த உன் அப்பாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்த பிறகு, உன் தாத்தா அங்க வந்திருக்காரு. உன் அப்பாவோட கடைசி நொடிகள்ல உன் தாத்தாதான் கூட இருந்தாருங்கிற தகவலைத் தெரிஞ்சுகிட்டேன், உன் அப்பா சாகுறதுக்கு முன்னாடி உன் தாத்தாகிட்ட ரகசியமா ஏதோ பேசினாருன்னு ஒரு நர்ஸ் மூலமா உறுதி செஞ்சுகிட்டேன், கண்டிப்பா உன் அப்பா ராக்கியைப் பத்திதான் சொல்லியிருப்பாருன்னு எனக்குத் தோணுச்சு, உன் வீட்ல அந்தப் ஃபைல் இல்லைன்னா, அது உன் தாத்தா கிட்டதான் இருக்கும்னு நம்புனேன்.

​ரெண்டு மூணு தடவை என் ஆளுங்க உன் தாத்தா வீட்டுக்குள்ள நுழைய முயற்சி பண்ணாங்க, ஆனா உன் தாத்தாவை மீறி அவங்களால எதையும் பண்ண முடியல, அப்புறம்தான் ஒரு சிக்னல்ல உன்னைப் பார்த்தேன், அப்போ வரைக்கும் நீதான் என் அப்பாவோட நண்பனோட பொண்ணுன்னு எனக்குத் தெரியாது, ஆனா முதல் பார்வையிலேயே உன் மேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு… அப்புறம் நானே நேரடியா உன் தாத்தா வீட்டுக்குள்ள நுழைய திட்டம் போட்டேன், உன்னை மறுபடியும் பார்க்கணும்னு தோணுச்சு, அதுக்கப்புறம் அந்தப் ஃபைலுக்காக இல்லைனாலும், உனக்காகவே அங்க வந்தேன், சத்தியமா சொல்றேன் மிருதுளா, நான் உன்னைக் காதலிச்சது உண்மை!” என்று அவன் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல…

​”சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லுங்க, இந்த தேவையில்லாத விஷயமெல்லாம் வேண்டாம்,” என்று கறாராகத் தடுத்தவள்,.. “அந்த ராக்கிதான் இறந்துட்டான்னு சொல்றீங்களே, அப்புறம் எதுக்கு இந்தப் ஃபைல்? இதனால இனி என்ன யூஸ்?” என்று வினவினாள்.

​”அவன் இறந்தது இப்போ சில நாட்களுக்கு முன்னாடிதான் மிருதுளா, அவன் முன்னாடியே செத்திருந்தா இந்தப் ஃபைலைத் தேடி நான் வந்திருக்கவே மாட்டேன்,” என்றான் ரன்வீர்.

​”உங்களுக்குத்தான் இவ்வளவு பவர் இருக்கே, உங்களால அவனை எதுவும் பண்ணியிருக்க முடியாதா?” என்றாள்.

​”அவன் மேல எனக்குக் கொலை ஆத்திரம் இருந்தது உண்மைதான். அவனை நெருங்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன், ஆனா அது அவ்வளவு சுலபம் இல்ல, அதனாலதான் இந்தப் ஃபைலை வச்சு சட்டப்படி அவனுக்குத் தண்டனை வாங்கித் தரணும்னு நினைச்சேன்,” என்றான்.

​”எல்லாம் சரி… என் தாத்தாவை எதுக்குக் கொன்னீங்க?” என்று அவள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க… ​ரன்வீருக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இவ்வளவு உண்மைகளைத் தெளிவாக சொல்லியும், அவள் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு கொலைகாரனாகவே பார்க்கிறாளே என்று அவனுக்கு வலியும் கோபமும் ஒருசேர முட்டிக்கொண்டு வர,  கண்கள் சிவக்க, அவளை ஆவேசமாகப் பார்த்தவன், அருகிலிருந்த கண்ணாடி டீபாயில் கைமுஷ்டியை ஓங்கி ஒரு குத்து குத்த, அவ்வளவு தான் சில்லு சில்லாக நொறுங்கியது அந்த கண்ணாடி, அந்தச் சத்தம் அந்த அறையையே அதிர வைத்தது. அது மட்டுமின்றி, அவனது கைமுஷ்டியில் இருந்தும் ரத்தம் சொட்டுச் சொட்டாகத் தரையில் கொட்டத் தொடங்கியது..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!