இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-9
மின்மினியாய் மின்னும் நட்சத்திரங்களின் உதவியோடு இரவின் இருளை நீக்கி நிலவானவள் ஒளி வீசி கொண்டிருந்தாள். தன் இல்லத்திற்குள் நுழைந்த விஜய சிவமாறன் தன் தந்தையின் படத்தினை கண்களால் ஒருநிமிடம் வருடிவிட்டு பருவதம்மாவின் அறைக்குள் சென்றிருந்தான்.
இரவு உணவை உண்டுவிட்டு ஆழினி அளித்த மாத்திரைகளை விழுங்கியவர்
“நைட் தோசை சாப்பிடலாம்னு பார்த்தா சப்பாத்தி கொடுத்துட்டியே ஆழினி…. அதுவும் சுக்கா ரொட்டி, எனக்கு அது சுத்தமா பிடிக்காதும்மா…. கஷ்ட்டப்பட்டு முழுங்கினேன் தெரியுமா?” என்று குழந்தை போல் வினவியவரை கண்டு சிரித்தவள்
“நைட் எப்பயுமே லைட் ஃபுட்டா எடுத்துக்கிறது தான் நல்லது…. கொஞ்ச நேரம் கழிச்சு பால் தரேன் குடிச்சிட்டு சமத்து பிள்ளையா தூங்குங்க….”
Advertisement
“எனக்கே ஆடர் போடுறல்ல? இரு இரு உன்னை வச்சிக்குறேன்….”
“இது ஆடர் இல்ல அக்கரை…. சரி சரி எழுந்து வாங்க ஹால்ல கொஞ்ச நேரம் உட்காரலாம்….” என்று ஆழினி கூறி அவரை அமர வைக்க முயற்சிக்க, அவ்விருவரின் உரையாடலை அறையின் வாயிலில் குறுநகையுடன் பார்த்து கொண்டிருந்தவன் ஆழினியின் கரங்களுக்கு உதவியாய் தன் கரங்களை இணைத்து தன் அன்னையை மெத்தையில் அமர்வதற்கு உதவி புரிந்திருந்தான்.
சிவமாறனின் வருகையை கண்டு புன்னகைத்தவர்
Advertisement
“வா சிவா…. எப்போ வந்த?” என்று வினவிய பருவதம்மாவிடம்
Advertisement
“இப்போத்தான் வந்தேன்…. நீங்க சாப்பிட்டீங்களாம்மா?” என்று சிவமாறன் வினவ, அவ்விருவருக்கும் தனிமை தர எண்ணியவள் அறையிலிருந்து சத்தமில்லாமல் வெளியில் சென்றுவிட்டாள்.
அழினியின் மனதிலுள்ள காரணத்தை உணர்ந்தவனும் தன் அன்னையிடம்
“வீல் சேர்ல உட்கார வைக்கிறேன் வெளிய போகலாமா ம்மா?”
Advertisement
“இல்ல சிவா…. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்…. இப்படி என் பக்கத்துல உட்காரேன்….”
“என்னம்மா சொல்லுங்க….”
“எனக்கு ஆழினியை ரொம்ப பிடிச்சிருக்கு சிவா….”
“அதான் எனக்கு தெரியுமே…. ஏதோ புதுசா சொல்ற மாதிரி சொல்றீங்க?”
“ஐயோ, அது இல்லடா…. எப்படி சொல்றது….”
“என்னம்மா? என்ன யோசிக்குறீங்க?”
“எனக்கு ஆழினியை இந்த வீட்டு மருமகளாக்கனும் சிவா…. நீ ஆழினியை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்….” என்று கூறிய தன் அன்னையை தீயாய் முறைத்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
“என்ன விளையாடுறீங்களா? தேவையில்லாத ஆசையெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க? நான் தான் சொல்லிருக்கேன்ல ‘எனக்கு கல்யாணம் வேண்டாம்னு’ மறுபடியும் மறுபடியும் ஏன் அதை பத்தி பேசுறீங்க?” என்று சிவமாறன் கோபமாக வினவ, அவனை தீயாய் முறைத்தவர்
“இன்னும் எத்தனை நாளுக்கு இதையே சொல்லலாம்னு முடிவு பண்ணியிருக்க சிவா? உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா?”
“எனக்கு எந்த துணையும் வேண்டாம்….”
“விதாண்டாவாதம் பண்ணாத சிவா…. ஆழினியை பிடிக்காததுக்கு ஒரு காரணம் சொல்லு பார்ப்போம்?”
“அம்மா…. நான் எப்படிம்மா ஆழினியை கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஆழினியோட அப்பாவும் அம்மாவும் அவங்க பொண்ணோட கல்யாணத்தை பத்தி எவ்வளவு ஆசை வச்சிருப்பாங்க? அவங்களை விடுங்க, தனக்கு இப்படிப்பட்டவன் தான் கணவனா வரனும்னு ஆழினி மனசுல எவ்வளவு ஆசையை வளர்த்து வச்சிருப்பாங்க? அதையெல்லாம் விட்டுட்டு நீங்க கேட்டதும் ஆழினியை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களா? அதுவும் ரெண்டாந்தாரமா?” என்று சிவமாறன் கூறியதை கேட்டவர் தன் மகனை இயலாமையுடன் பார்த்து கொண்டிருக்க, அவரது கைகளை இறுக்கமாக பற்றியவன்
“ஆழினி இங்கிருந்து போற வரைக்கும் இதைப்பத்தி பேசாதீங்க…. அவங்க உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க, முக்கியமா ரொம்ப ரொம்ப பாசமாயிருக்காங்க…. உங்க மனசுல இப்படியொரு எண்ணமிருக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்சா அப்புறம் தேவையில்லாத மனக்கஷ்ட்டம் தான் வரும்….” என்று சிவமாறன் முடிவாக கூறிவிட, அவன் கூறியதை கேட்ட பருவதம்மாவின் மனமோ தன் ஆசைகள் அனைத்தும் தவிடுபொடியானதை நினைத்து வெதும்பி கொண்டிருந்தது.
பருவதம்மாவை நகரும் நாற்காலியில் அமர வைத்தவன் இல்லத்தின் கூடத்திற்கு அழைத்து செல்ல, அங்கு இவர்களுக்காக ஆழினியும் செல்வி அக்காவும் காத்து கொண்டிருந்தனர்.
“செல்வி அக்கா, டின்னர் எடுத்து வைங்க, நான் போய் ஃபிரஷப்பாகிட்டு வரேன்….” என்று சிவமாறன் கூறிவிட்டு மாடியிலுள்ள அவனது அறைக்குள் சென்றுவிட, இங்கு கூடத்தில் மௌனமாக அமர்ந்திருக்கும் பருவதம்மாவின் முகத்தில் குடியேறியிருக்கும் சோகத்தை கண்டுக்கொண்டுவிட்டாள் ஆழினி.
“பருவதம்மா, என்னாச்சு? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க? கால் எதாவது வலிக்குதா?” என்று வினவிய ஆழினியை கண்டு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்
“ஒன்னுமில்லம்மா…. கொஞ்சம் அசதியா இருக்கு….” என்று கூறியவர் நேரம் இரவு எட்டு மணியை கடந்திருப்பதை பார்த்துவிட்டு
“டைமாகிடுச்சே ஆழினி…. நீ எப்படி வீட்டுக்கு போவ? நான் வேணும்னா நம்ம வீட்டு ட்ரைவர் வர சொல்லட்டா?”
“இல்லம்மா வேண்டாம், என் தம்பி வெளிய தான் வெயிட் பண்றான்…. உங்க கிட்ட சொல்லிட்டு போகத்தான் நான் வெயிட் பண்ணேன்….”
“அட, ஏன் தம்பியை வெளியிலேயே நிக்க வச்சிருக்க? வீட்டுக்குள்ள வர சொல்லு….”
“இல்லம்மா…. இன்னொரு நாள் கூட்டிட்டு வரேன்….”
“ப்ச்ச்…. நான் தான் சொல்றேன்ல? தம்பியை வீட்டுக்கு வரசொல்லு….” என்று பருவதம்மா கூறியதை கேட்டவள் தன் அலைபேசியின் வாயிலாக இன்பனின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்து அவனை இல்லத்திற்குள் வருமாறு கூறியிருந்தாள்.
ஆழினியின் தம்பியினது வருகைக்காக பருவதம்மாவும் செல்வி அக்காவும் காத்திருக்க
“அம்மா….” என்று சத்தமாக அழைத்தவாறு இல்லத்திற்குள் ஓடி வந்த குழந்தையை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
தன்னருகில் ஓடி வந்த மகனை தூக்கி செல்லம் கொஞ்சி முத்தம் வைத்தவளை
“ஆழினி….” என்று அழைத்த பருவதம்மாவை கண்டு சிரித்தவளிடம்
“இவன் உன் பையனா?” என்று அதிர்ச்சி மாறாமல் வினவியவரிடம் ஆமென்பதை போல் தலையசைத்தவள்
“இவன் பெயர் ஆதவ் கிருஷ்ணன்…. ஆது கண்ணா, பாட்டிக்கும் செல்வி ஆன்டிக்கும் வணக்கம் சொல்லுங்க….” என்று ஆழினி கூறியதை கேட்ட நீலவிழி கண்ணனும் கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்தவாறே கைகள் கூப்பி இருவருக்கும் வணக்கம் சொல்ல, அந்த சுருள் முடி அழகனின் மழலை சொல்லை கேட்ட இருவருக்கும் ஆதவ் கிருஷ்ணனை மிகவும் பிடித்துவிட்டது.
ஆதவ் கிருஷ்ணனின் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சியவர்
“ஆது குட்டி, எந்த கிளாஸ் நீங்க படிக்குறீங்க?” என்று வினவிய செல்வி அக்காவிடம்
“யுகேஜி….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூற, அவனை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தவளிடம்
“ஆழினிம்மா, உன்…. உன் ஹஸ்பென்ட்?” என்று பருவதம்மா தயக்கமாக வினவ, அவரது கேள்வியில் தன் புன்னகையை தொலைத்தவள் எதுவும் கூறாது தன் தலையை இல்லை என்பது போல் இடவலமாக அசைத்து வைத்தாள்.
ஆழினியின் பதிலை கேட்ட பருவதம்மா மற்றும் செல்வி அக்காவின் மனமோ அவளை நினைத்து கலங்க ஆரம்பிக்க, அச்சமயத்தில் ஆழினியின் தம்பி இன்பன் இல்லத்திற்குள் நுழைந்திருந்தான்.
“வா இன்பா…. பருவதம்மா இவன் தான் என் தம்பி இன்பன், ஐடி கம்பெனியில வர்க் பண்றான்….” என்று ஆழினி கூறி பருவதம்மாவிடம் அறிமுகப்படுத்த, இன்பனிடம் நலம் விசாரித்தவர்
“ரெண்டு பேரும் கண்டிப்பா சாப்பிட்டு தான் போகனும்…. செல்வி டிஃபன் ரெடி பண்ணு….” என்று கூறிய பருவதம்மாவிடம்
“இல்லம்மா இப்போவே டைமாகிடுச்சு, இன்னொரு நாள் கண்டிப்பா நாங்க சாப்பிடுறோம்….” என்று இன்பன் கூற, ஆழினியின் கைகளில் தவழ்ந்திருந்த ஆதவ் கிருஷ்ணனிடம்
“ஆது கண்ணா, நாளைக்கு சன்டே தான? பாட்டியோட விளையாட வரீங்களா?” என்று பருவதம்மா வினவ, அவரது கேள்விக்கான பதிலை தன் அன்னையிடம் பார்வையால் வினவினான் அந்த குட்டி கண்ணன்.
ஆதவ் கிருஷ்ணனை கண்டு அழகாக சிரித்தவள் பருவதம்மாவை கண்டு
“கண்டிப்பா கூட்டிட்டு வரேன் அம்மா…. அப்போ நாங்க கிளம்புறோம், சார் கிட்ட சொல்லிடுங்க….” என்று கூறிய ஆழினி தன் மகன் மற்றும் தம்பியுடன் பருவதம்மாவிடமும் செல்வி அக்காவிடமும் விடைப்பெற்று சென்றிருந்தாள்.
ஆழினி சென்றதிலிருந்து சோகமாக அமர்ந்திருந்த பருவதம்மாவின் அருகில் வந்தவர்
“சிவா தம்பி பேசுனதை நினைச்சு கவலைப்படுறீங்களாம்மா?” என்று வினவிய செல்வியை விழியகலாமல் பார்த்தவரிடம்
“எனக்கு தெரியும் அம்மா…. சிவா தம்பிக்கு தண்ணீ கொடுக்க ரூம்க்கு வரும்போது நீங்களும் தம்பியும் பேசுனதை நான் கேட்டேன்…. சிவா தம்பி ‘ஆழினியை நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு’ சொன்னதை நினைச்சு தான சோகமா இருக்கீங்க?” என்று செல்வி வினவ, அவரிடம் மறுப்பாக தலையசைத்தவர்
“ஆழினியை நினைச்சா கஷ்ட்டமாயிருக்கு செல்வி…. சின்ன வயசிலேயே புருஷன இழந்துட்டு ஒரு பையன வச்சிக்கிட்டு கஷ்ட்டப்படுது…. அந்த குட்டி பையன பார்த்தியா? எவ்வளவு துறுதுறுன்னு இருக்கான்? அப்பா இல்லாம வளரது எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா? மனசு கேக்கல செல்வி…. கொஞ்சநாள் பழகினாலும் என் மேல அவ்வளவு பாசத்தை காட்டுன பொண்ணு…. எப்பயுமே சிரிச்சிக்கிட்டே இருக்கிற பொண்ணோட வாழ்க்கையில இவ்வளவு பெரிய கஷ்ட்டமிருக்கும்னு நான் எதிர்பார்க்கல செல்வி…. ஏன் தான் அந்த பொண்ணோட வாழ்க்கை இப்படியாச்சோ? எல்லாம் விதி….” என்று கண்கலங்கியவாறு கூறிய பருவதம்மாவிடம்
“நீங்க நினைச்சா ஆழினியோட விதியை மாத்தலாமே ம்மா….” என்று செல்வி பீடிகையுடன் கூற, அவரை பருவதம்மா புரியாமல் பார்த்து கொண்டிருந்தார்.
“சிவா தம்பி உங்க கிட்ட என்ன சொன்னாரு? ‘ஆழினியோட அப்பாவும் அம்மாவும் மட்டுமில்ல குறிப்பா ஆழினியே தன்னை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கமாட்டான்னு’ தான சிவா தம்பி உங்க கிட்ட சொன்னாங்க? இப்போ சிவா தம்பிக்கும் சரி, ஆழினிக்கும் சரி அவங்களுக்கு நடந்த முதல் கல்யாணம் பாதியிலேயே முடிஞ்சிடுச்சு…. பேசாம அவங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கம்மா…. உங்க ஆசைப்படி ஆழினியும் இந்த வீட்டு மருமகளாகிடுவா, கூடவே லட்டு மாதிரி பேரனும் கிடைக்கும்போது கசக்குமா என்ன?” என்று செல்வி அக்கா கூறி சிரிக்க, அவர் கூறியதை கேட்டு புன்னகைத்தவரின் மனதில் சற்று நேரத்திற்கு முன்பு மடிந்து போன ஆசையானது துளிர்வி அரம்பித்துவிட்டது.
இருள் பூசியிருந்த வானத்தில் ஜொலிக்கும் நிலவினை தன் அறையிலிருந்த பால்கனி வழியாக வெறித்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன். அவன் மனதில் கடந்த கால நிகழ்வுகள் யாவும் கண்முன்னால வந்து செல்ல, அவை அனைத்தையும் துரும்பென புறம் தள்ளும் விதமாய் அவன் முன்னால் ஆழினியின் பிம்பம் தோன்றியிருந்தது.
ஆழினியின் பிம்பத்தை அழிக்கும் வழியறியாதவன்
“ஏன் ஆழினி மறுபடியும் என் வாழ்க்கையில வந்த? உன்னை சாகுற வரைக்கும் பார்த்துடவே கூடாதுன்னு இருந்தேன் ஆழினி, ஆனா….” என்று நினைத்த விஜய சிவமாறனின் மனம் மட்டுமல்லாது அவனின் கண்களும் கலங்க தொடங்கிவிட்டது.
ஒளி வீசும்….
