Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 12

 

காதலும் கடத்தப்படும் – 12

 



Advertisement

 

பள்ளி முடிந்து வீடு திரும்பிய அர்ஜூனுக்கும், மதனுக்கும் இளமாறன் டீயும் பிஸ்கெட்டும் கொடுத்துக்கொண்டிருக்க, வெளியே ஏதோ கூச்சல் சத்தம் கேட்டது. பிள்ளைகள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்த இளமாறன், அவர்கள் உண்ட பின் வெளியே வந்தான். கண்கள் கலங்கியபடி வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள், இந்துமதி. 

 

Advertisement

பதறியடித்து அவளருகே அவன் செல்ல, அதற்குள்ளாக அவள் வீடு வந்தடைந்தாள். உள்ளே சென்று, அவளை அமர வைத்து நீர் கொடுத்தவன்,

Advertisement

“என்ன இந்து அங்க ஒரே கூச்சல் சத்தமா இருந்தது? நீ ஏன் அழற?” என்று பதைபதைத்தான்.

“தெருமுனை வீட்ல ஒரு சின்ன பொண்ணு இருக்கா, பார்த்திருக்கீங்களா?”

“ஒரு வருஷம் முன்னாடி புதுசா குடித்தனம் வந்தாங்களே…”

Advertisement

“ஆமா… ஆறு மாச கைக்குழந்தையோட அந்த பொண்ண போட்டு அவளோட புருஷன் அந்த அடி அடிக்கறான். புள்ளைக்கு அந்த பொண்ணோட வீட்ல நகை போடலனு கோவமாம். வேலைக்கு போகாம குடிச்சுட்டு ஊர் சுத்தறான். அந்த பொண்ணுக்கு காசும் கொடுக்கறதில்லை. இதுல சீர் செய்யலன்னு…” என்றவள் அழத்தொடங்கினாள்.

“ஏன் அழற இந்து?”

“என் கையில இருந்த ஐநூறு ரூபாயை கொடுத்து, இட்லி கடை போட்டுக்க சொன்னேன்… அன்னைக்கு ஒரு நாள் ஒரு போலீஸ்காரர் நமக்கு ஐநூறு ரூவா கொடுத்தாரு. அந்த காசை இன்னைக்கு நான் இந்த பொண்ணுக்கு கொடுத்தேன்…”

“நல்ல விஷயம் பண்ணியிருக்க இந்து…”

தனது கண்ணீரை துடைத்தவள், “என் அக்கா ஞாபகம் வந்துடுச்சுங்க. அவளும் இப்படித்தான். அடிவாங்கிக்கிட்டு காசு வேணும்னு பிள்ளையை தூக்கிட்டு வீட்டுக்கு அழுதுட்டே வருவா. என்ன வாழ்க்கை இது’னு சலிப்பா இருக்கும்ங்க…” என்றவள், அவனது தோள் மீது சாய்ந்துகொண்டு அமைதி கொண்டாள். 

 

மறுநாள் காலை, அவள் பள்ளிக்கு கிளம்ப,

“இந்து, நீ ஊருக்கு போய் உங்க வீட்ல எல்லாரையும் பார்த்துட்டு வா. அர்ஜுனை கூட்டிட்டு போ” என்றான், இளமாறன்.

“என்னங்க திடீர்னு? என்னாச்சு?”

“நேத்து நீ உன் அக்காவை நினைச்சு வருத்தப்பட்டல்ல…”

“அவளை நினைச்சு வருத்தம் தான் பட்டேன். யாரையும் பார்க்கணும்னு ஆசைப்படல…”

“அதுக்கில்ல…”

“இங்க பாருங்க, இப்போ நான் போனா நிச்சயம் உங்களை பத்தி தவறா பேசுவாங்க. காசுக்காக வந்து நிக்கறேன்னு என் அண்ணனே சொல்லுவான். என் அக்கா வரும்போதெல்லாம் அவன் ரொம்ப இளக்காரமா பேசுவான்”

“காசெல்லாம் யாரு கேட்டா?”

“யாரும் கேட்கல. ஆனா அவங்க அப்படி நினைப்பாங்க. நான் போக மாட்டேன்…”

“உன் அம்மாவையாவது போய் பார்த்துட்டு வா…”

“வேண்டாம்… அவங்க இத்தனை வருஷமா என்ன தேடல… நான் எதுக்கு புதுசா உறவாடணும்? அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல ‘நீ செத்துட்டதா நினைச்சுக்கறேன்’னு என் அப்பா சொன்னபோது ஏதோ கோவத்துல சொன்ன வார்த்தைன்னு தான் நினைச்சேன். ஆனா உண்மையாவே அவங்க எல்லாரும் நான் செத்துட்டதாதான் நினைக்கிறாங்க போல…”

“என்னைக்காவது இந்த பிரச்சனை முடிவுக்கு வர வேண்டாமா? நீ உன் குடும்பத்தோட சேர வேண்டாமா?”

“குடும்பமா? நீங்க தாங்க என் குடும்பம். என் பிள்ளைங்க தான் என் குடும்பம். நான் கொஞ்ச லேட்டா ஸ்கூல் விட்டு வந்தா என் பிள்ளைங்க என்னை தேடறாங்கல்ல?! அதுதான் குடும்பம். இத்தனை வருஷத்துல நான் இருக்கேனா செத்தேனானு யோசிக்காதவங்கள… ப்ச்… இப்போ எதுக்கு தேவை இல்லாத பேச்சு, நான் கிளம்பறேன்” என்றவள், தனது பையை எடுத்துக்கொண்டு பணிக்குச் சென்றாள்.

 

இளமாறன் சரியான வேலை வாய்ப்பு கிட்டாமல் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானான். இந்துவை பற்றியே சதா சிந்தித்துக்கொண்டு, குற்ற உணர்வு கொண்டான். தன்னால் அவளது வாழ்க்கை வீணாகிவிட்டதோ என்றொரு எண்ணமும் தோன்றியது. அனைத்தையும் மறைத்துக்கொண்டான். ஹோட்டலில் சர்வர் வேலை, வாட்ச்மேன் வேலை என்று சொற்ப வருமானமாக இருந்தாலும் கிடைக்கும் பணிகளை செய்தான். இந்துவிற்கும் அடிக்கடி உடம்பு சுகமில்லாமல் போனது. வேலையை விட்டு நின்றுவிட அவன் எவ்வளவோ கூறியும், அவள் கேட்பதாக இல்லை. தன்னால் முடிந்தமட்டும் ஒவ்வொரு ரூபாயையும் சேர்த்து அவளிடம் கொடுத்தான்.

 

ஓர் நாள் உடம்பு சுகமில்லாமல் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாள், இந்து. அவள் உடல் சுகமில்லாமல் இருப்பதைக் கண்ட இட்டிலி கடை பெண், அவளுக்கு உண்ண உணவு வழங்கி துணைக்கு அருகில் இருந்தாள். மகன்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துவந்து விட்டுவிட்டு ஹோட்டல் வேலைக்கு செல்வதை சில நாட்களாக வழக்கமாக கொண்டிருந்தான், இளமாறன். வீட்டினுள் நுழைகையில், 

“அண்ணே, அக்காவுக்கு ஜுரமா இருக்கு, ரெண்டு இட்டிலி கொடுத்தேன். ஒண்ணுதான் சாப்பிட்டுச்சு. ஏதாவது வேணும்னா குரல் கொடு” என்றுவிட்டு சென்றாள். வேலைக்கு செல்லாமல் அவள் அருகிலேயே இருந்தான், இளமாறன். இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று மருத்துவரை பார்க்க மறுத்துவிட்டாள், இந்து. நான்கு நாட்கள் ஆகியும் அவளது நிலை கவலைக்கிடமாக இருந்தது. 

 

அதற்கு மேல் பொறுமை இழந்தவனாய், அவளை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான்கு ஐந்து நாட்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் கூற, அவன் பெரும் கவலையுற்றான். 

“எதுக்குங்க இப்படி ஆஸ்பத்திரியில இருக்கணும்? வீட்டுக்கு போலாம்” என்று அவனிடம் மன்றாடினாள், இந்து.

“சும்மா இரு. இத்தனை நாள் உன் பேச்சுக்கு மறுவார்த்தை பேசினது இல்லை. இந்த விஷயத்துல எதுவும் கேட்க மாட்டேன். ஒரு நாள் கூட நீ தலை வலின்னு படுத்தது இல்லை. உனக்கு என்னவோ ஏதோன்னு கவலையா இருக்கு…”

“வீட்டுக்கு போனா சரியாயிடும்…”

“போலாம்… டாக்டர் சொன்னதும் போலாம்” என்று அவளை சமாதானம் செய்தான்.

 

அவளுக்கு பல சோதனைகள் செய்யப்பட்டன. சோதனை முடிவுகள் பற்றி அவனிடம் கூற, மருத்துவர் அவனை அழைத்தார். ஊரில் உள்ள கடவுள்கள் அத்தனையும் வேண்டியபடி அவன் மருத்துவர் எதிரே சென்று அமர்ந்தான்.

“இளமாறன், உங்க மனைவி டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வந்துடுச்சு. அவங்களுக்கு மார்பக புற்றுநோய்… கடைசி ஸ்டேஜ்…” 

அதிர்ச்சியானவன், கைகள் நடுங்க, தலை சுற்ற, கண்கள் கலங்க, முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினான்.

“அழாதீங்க இளமாறன். எங்களால முடிஞ்ச வைத்தியம் செய்யறோம்…”

“அவ பொழைச்சுடுவாளா?”

“அது… கஷ்டம்…”

“டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவால்ல. ப்ளீஸ் என்னோட மனைவியை காப்பாத்துங்க…”

“எங்களால முடிஞ்சதை செய்வோம். ஆனா எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு”

மருத்துவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தவன், இந்துவைக் காண திராணி அற்றவனாய், மருத்துவமனைக்கு எதிரே இருந்த கோவிலுக்குச் சென்று அழுது தீர்த்தான்.

 

“உனக்கு வேணும்னா என்னை எடுத்துக்க வேண்டியது தான? அவ என்ன தப்பு செஞ்சா? என்னை வாழ வைக்கற குலசாமி அவ. கல்யாணம் பண்ண நாள்லேர்ந்து குண்டுமணி தங்கத்துக்கு கூட என் தங்கம் ஆசைப்பட்டதில்லை. என்னை ஒரு மனுஷனா தூக்கி நிறுத்துனா. உன் பாசம் மட்டும் போதும்னு சொல்லுவா. பாசத்தை தவிர அவளுக்கு நான் எதுவுமே கொடுத்ததில்லை. இப்ப சாகக்கிடறவள காப்பாத்த கூட வக்கில்லாதவனா இருக்கேன். அனாதை பயலா வாழ்ந்தவனுக்கு பெத்தவளா கூட இருந்த பார்த்துக்கிட்டவ அவ. அவளை பறிச்சு என்னை திரும்பவும் அனாதையாக்கிடாத…” – ஏதேதோ புலம்பியபடி அவன் அழுது தீர்த்தாலும், அனைத்தையும் கேட்டுக்கொண்டு அந்த தெய்வம் அமைதியாக நின்றிருந்தது.

 

அவள் வாழும் மிச்ச நாட்களை, அவளது விருப்பம் போல் வாழும்படி மருத்துவர் அறிவுரை கூறி இந்துவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி இளமாறனிடம் கூறினார். வேறு வழியின்றி அவளை அழைத்து வந்தவன், மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தவித்திருந்தான். 

“என்னங்க இது புதுசா கட்டிலும் மெத்தையும்”

“உனக்குத்தான்…”

“எனக்கா? நாம எப்பவும் தரையில தான படுப்போம்…”

“இனி தரையில படுக்காத… மெத்தையில் படுத்துக்க இந்து”

படுக்கை அறையில் அவள் கட்டிலின் மேல் படுத்துக்கொள்ள, பிள்ளைகள் இருவரும் தந்தையோடு தரையில் படுத்துக்கொண்டனர். சாளரத்தின் வழியே நிலா உலாவுவதை பார்த்திருந்தாள், இந்து.

“பிள்ளைங்க தூங்கிட்டாங்களா?”

அவளது குரல் சன்னமாக ஒலித்ததில், அவளது நோயின் வீரியம் அவனுக்கு விளங்கியது.

“ம்ம்…” அவனது குரல் உடைந்தது.

“அழறீங்களா? ஏன்? எனக்கு என்ன ஆச்சு? எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க? நான் எத்தனை காலம் இருக்க போறேன்னாவது சொல்லுங்க”

பிள்ளைகளை அருகில் கிடத்திவிட்டு அவளருகே தரையில் அமர்ந்தபடி அவளது கைகளை பற்றியவன், 

“நீ நூறு வருஷம் நல்லா இருக்க போற… உனக்கு ஒன்னும் இல்ல… நான் இருக்கேன்” என்றான்.

“அப்புறம் ஏன் அழறீங்க?” என்றபடி அவனது விழிகளை துடைத்துவிட்டாள்.

“நான் ஒன்னு கேட்பேன் மறுப்பு சொல்லக்கூடாது”

“என்னது?”

“இந்த வீட்டை வித்துடலாமா? உனக்கு ஒரேயொரு ஆப்பரேஷன் பண்ணா போதும்னு டாக்டர் சொன்னாங்க…”

அவள் அமைதியாக இருந்தாள்.

“உனக்கு ஒண்ணுமில்ல. சின்ன ஆப்பரேஷன் தான். பெரிய ஆஸ்பத்திரி போய் செஞ்சுக்குவோம்” என்றான்.

அவள் அமைதி காத்தாள்.

“ஏதாவது சொல்லு இந்து”

அவனது தலையை வருடியவள்,

“எனக்கு என்னனு தெரியாதுன்னு நினைக்கறீங்களா? எனக்கு ரொம்ப நாள் இல்லைனு தெரியும். என்கிட்டே எதுவும் நீங்க மறைச்சதில்லை. இதை எதுக்கு மறைக்கறீங்க? எல்லா கஷ்டத்தையும் ஒண்ணா சேர்ந்து தான சமாளிச்சோம்? இப்ப மட்டும் நீங்க தனியா எதுக்கு போராடணும்? எனக்கு எல்லாம் தெரியும்… இந்த வீட்டை வித்து செலவு செஞ்சும் பயனில்லாம போச்சுன்னா என் புள்ளைங்க என்ன பண்ணுவாங்க? நீங்க என்ன பண்ணுவீங்க? ரெண்டு வேளை காஞ்சி குடிச்சாலும், நம்ம வீட்டுக்குள்ள குடிக்கணும். நான் ஆசையாசையா வாழ்ந்த வீடு. இதை எக்காரணம் கொண்டும் விக்க கூடாது”

“உன்னை விட இந்த வீடு பெருசில்ல…”

“நான் இல்லாம போனாலும், இந்த வீட்ல தான் நிறைஞ்சிருப்பேன்” 

அவன் அவளது கைகளை பற்றிக்கொண்டு குலுங்கிக்குலுங்கி அழுதான்.

 

பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு செல்லாமல், தாயோடு இருந்தனர். அவள் எவ்வளவோ கூறியும், விட்டுச் செல்ல முடியாது என்றனர். இளமாறன் தன்னால் முடிந்த வரை பல இடத்திலும் பணத்திற்காக முயற்சி செய்தான். தனக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால், அவள் பிழைப்பதற்கு 50% சாத்தியம் உண்டு என்று அரசு மருத்துவர் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு பெரும் முயற்சி செய்தான். எவ்வளவு முயன்றும் பலனில்லாமல் போக, வேறு வழியின்றி அவளது பெற்றோரை தேடிச்சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!