Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநி

ரிதம் 4

ரிதம் 4

அங்கு ஓரமாக சோபாக்கள் போடப்பட்டிருக்க, அதில் சென்று இளைப்பாறினாள் நத்தாஷா.



Advertisement

எல்லோரும் அவளிடம் வந்து பேச ஆரம்பித்தார்கள். தங்களுக்கு நடந்த ஏமாற்றங்கள், போராட்டங்கள் என்று பகிர்ந்து கொண்டார்கள். அந்த நேரத்தில் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தார்கள், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பதையும் கூறினார்கள். கிட்டத்தட்ட அவளின் நிலைதான்.

அவன், அதேபோல போட்டியின் முடிவில் அவர்களிடம் கார்டை நீட்டி விட்டு வர, அவர்களும் தயக்கத்தோடுதான் இங்கு வந்து சேர்ந்தார்கள். வந்த பிறகு பிடித்து விட்டது. இப்போது பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

ஏமாற்றப்பட்ட சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அதை ஒரு மியூசிக் ட்ரூப்பாக மாற்றி, அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து, அவர்களை சிறந்த பாடகர்களாக்கி, தானும் சிறந்த படைப்பாளியாக, மியூசியனாகத் திகழ்ந்து, பெரிய மியூசிக் அகாடமி ஆரம்பிப்பதுதான் அவனுடைய எண்ணமாக இருந்தது.

அவ்வப்போது சிறிய பட்ஜெட் படங்களில் பாடல்கள் பாடுவது, அதன் பிறகு பெரிய பெரிய ப்ரோக்ராம்களில் பாடல்கள் பாடுவது என்று மியூசிக் ட்ரூப் போலத்தான் இப்போதைக்கு உருவாக்கி வைத்திருந்தான். எதுவும் யாருக்கும் எளிதில் கிடைத்து விடாது. அவனுக்கு கிடைத்தும் அதை புறக்கணித்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிறான். தன்னைப் போல போராடுபவர்களை ஒன்று திரட்டி, அவர்களையும் மேலே கொண்டு வர முயற்சிக்கிறான் கௌதம் என்ற இளைஞன்.

Advertisement

மியூசிக் டைரக்டராகவும் இரண்டு படங்களில் அறிமுகமாகி இருந்தான். எல்லாம் இவர்கள்தான் பாடியிருந்தார்கள். பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு படங்கள் ஓடவில்லை. அதனால் இவர்களும் சற்று அமுக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்று ஒரு காலம் வரும். அப்போது உலகத்திற்கு தங்களை நிரூபிக்கக் காத்திருக்கிறார்கள்.

இப்போதுதான் அவளுக்கு அந்தக் குரல் எங்கே கேட்ட குரல் என்பது தெளிவானது. அவளுக்குப் பிடித்த பாடல், அதை அவன்தான் பாடி இருக்கிறான் என்று புலப்பட்டது. இளைஞர்களின் மியூசிக்கில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் காதல் பாடல் அது.

ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும். மகாலட்சுமி என்ற அவனுடைய தாயார்தான் அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

எல்லோரும் கீழே சென்றார்கள். பெரிய டைனிங் டேபிளில் அமர வைத்து அனைவருக்கும் சாப்பாட்டைப் பரிமாறினார்கள். அவளுக்குத்தான் மிகுந்த சங்கடமாக இருந்தது. இவர்கள் மூவரும் வந்திருப்பதால், அவனும் மகாலட்சுமியும் அமரவில்லை.

“சார், நீங்க சாப்பிடலையா?” ப்ரீத்திதான் கேட்டாள்.

“நாங்க ரெண்டு பேரும் ஸ்பெஷலா சாப்பிடுவோம். நீங்க சாப்பிட்டுட்டு இதேபோல ரிலாக்ஸா பேசிட்டிருங்க. அதுக்குள்ள சாப்பிட்டுட்டு நான் வந்துடுவேன். அதுக்கப்புறம் கண்டின்யூ பண்ணலாம். உங்களுக்கு போகணுமா?” என்று ப்ரீத்தியைப் பார்த்துக் கேட்டான்.

“இல்ல சார், இந்த அட்மாஸ்பியர் நல்லா இருக்கு. இவளை சமாதானப்படுத்த நான் எங்கெங்கோ கூட்டிட்டு போனேன். ஆனா மியூசிக்கால மட்டும் தான் இவளை சமாதானப்படுத்த முடியும்னு இப்போதான் உணருறேன். இன்னிக்கு முழுக்க இருந்துட்டு போறோம்,” என்று கூறினாள் ப்ரீத்தி.

அதே மனநிலைதான் நத்தாஷாவிற்கும் இருந்தது. அந்த இடம் அவளை சாந்தப்படுத்தியது. பாடலும் இசையும் அவளை நிலைபெறச் செய்திருந்தது.

ஆனால் தயக்கமும் சேர்ந்தே இருந்தது. அந்தத் தயக்கம் தேவையற்றது என்று அன்று மாலைக்குள் மற்றவர்கள் அவளுடன் சகஜமாகப் பழகிப் புரிய வைத்திருந்தார்கள்.

அவன் பெயர் கௌதம் என்பதும், அந்த அறையில் ஒலிக்கப்படும் பாடல்களும், மியூசிக்கும், வெளியில் கேட்காத அளவு சவுண்ட் ப்ரூப் அறையாக அந்த அறை வடிவமைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. மீண்டும் ஒரு இனிய இசைக் கச்சேரி துவங்கியது. வாசுவும் ப்ரீத்தியும் கூட தங்களை மறந்து அதில் லயித்திருந்தனர்.

மாலை மங்க ஆரம்பித்தது. அவர்கள் கிளம்ப வேண்டிய நேரமும் நெருங்கியது. மற்றவர்கள் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். எல்லோரும் அடுத்தடுத்து கிளம்ப, இவள் நின்று கொண்டிருந்தாள். இவள் அருகில் வந்து நின்றான் கௌதம்.

“டிசைட் பண்ணிட்டீங்களா? அந்தக் கார்டுல இருக்கிறது என்னோட அபிஷியல் நம்பர்தான். பொறுமையா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. உங்களுக்கு எந்த உதவியும் செய்ய நான் தயாரா இருக்கேன். நம்மளோட ஆம்பிஷன் போல, படிப்பும் ரொம்ப முக்கியம். அதே சமயத்துல நம்மளோட கோல் எதுன்னு தெரிஞ்சிட்டு, நாம அதை நோக்கிப் போயாகணும். படிப்பையும் பார்த்துட்டு இதையும் பார்க்க முடியுமானு யோசிங்க. எதுவும் கட்டாயம் இல்ல. இங்க காலேஜ்ல சீட்டு வாங்கிக் கொடுக்க என்னால முடியும்,” என்றான்.

ஒருவரை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர்.

“இல்ல, படிப்பை முதல்ல முடிச்சிட்டு வரதுனாலும் ஓகேதான். படிப்பை முடிச்சிட்டு வாங்க,” என்றவன் தோள்களைக் குலுக்கினான்.

அந்த மேனரிசத்தில் அவன் இன்னும் அழகாக இருந்தான். ப்ரீத்தி மனதினுள்ளாக அவனை ரசித்தாள். நத்தாஷாவிற்குமே ஒரு நொடி அந்த எண்ணம் தோன்றி மறைந்தது.

“யோசிச்சிட்டு சொல்றேன் சார். அம்மா அப்பாவோட அனுமதி கேட்கணும். இங்க எனக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் இல்லை. அப்படி இங்க தங்கி படிக்கணும்னா ஹாஸ்டல்லதான் படிக்கணும். ப்ரீத்தியோட சித்தி வீட்ல ரெண்டு மூணு நாள் தங்கலாம். ஒரேடியா தங்க முடியாது. சோ அதுக்கு கண்டிப்பா எங்க அப்பா அனுமதிக்க மாட்டாருன்னுதான் நினைக்கிறேன்,” என்று தயக்கத்தோடு கூறினாள்.

அவளுடைய நிலை புரிந்தது. அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் வேறு பாணியில் என்று நினைத்தான். ஆனால் தாய் தந்தையைப் பிரிந்து, படிப்பும் முடியாத நிலையில் வருவது மிகவும் கடினம் என்று தோன்றியது.

வளர்ந்த இளைஞன் ஒருவன் முடிவெடுப்பதற்கும், அதே வயதில் இருக்கும் இளம் பெண் முடிவெடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அது அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் தன்னால் என்ன முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த நினைத்தான். அப்போதுதான் முடிவெடுப்பதற்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று தோன்றியது.

“வெல் மிஸ் நத்தாஷா, நீங்க முதல்ல உங்களோட படிப்பைப் பாருங்க. கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற பேரன்ட்ஸோட அந்தக் கஷ்டத்தையும் நாம புரிஞ்சுக்கணும். பேஷனை அதுக்கப்புறம் கூட தொடரலாம். இந்த இடத்துல உங்களுக்கான வாய்ப்பு எப்பயும் காத்துட்டிருக்கும். நீங்க உங்களோட படிப்பை முடிச்சுட்டு தாராளமா வரலாம், இல்ல வேற ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சாலும் போகலாம். எங்ககிட்ட கமிட்மென்ட் கொடுத்துட்டதா நினைக்க வேண்டாம். இது ஜஸ்ட் ஒரு டாக், அவ்வளவுதான்,” என்று கூறினான் கௌதம்.

மீண்டும் ஒரு வாய்ப்பு! அதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றியது.

இதுபோல புதிதாக ஒருவர் சாதிக்க வேண்டும் என்றால், ஒன்று அவர்களிடம் நிறைய அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அல்லது யாராவது ஒருவர் தூக்கி விட வேண்டும்.

தூக்கி விடுவதாகக் கூறுபவர் உண்மையில் அதை செய்வதில்லை. இங்கு எல்லாமே கண்துடைப்பு. எல்லாமே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு இல்லாத உதவி என்பது இல்லை என்றுதான் தோன்றியது.

அப்படியும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கிறார்கள் என்றால், அதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைமையில்தான் நாம் இருக்கிறோம். ஒன்று அவர்கள் தோழமையாக இருக்க வேண்டும், அல்லது அவர்கள் நல்லவராக இருக்க வேண்டும்.

இவர்கள் ஜெயித்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஜெயிக்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள். கண்டிப்பாக போராட்டத்தில் வெற்றி அடைவார்கள் என்று நம்பிக்கையோடுதான் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

“சார், ரெண்டு வருஷம் கழிச்சு வந்தா கண்டிப்பா உங்களோட டீம்ல இவளை சேர்த்துப்பீங்களா? இவளுக்கு நல்ல குரல் வளம் சார். இந்த போட்டிக்கே அவங்க அப்பா அம்மா கிட்ட சண்டை போட்டுட்டுத்தான் வந்தாள். அதுலயும் தோத்து போய் நிக்குறாள். இந்த உலகத்தைப் பொறுத்த வரைக்கும் அவள் தோத்ததா இருக்கலாம். என்னைப் பொறுத்த வரைக்கும் அவள் ஜெயிச்சதாதான் தோணுது. அவங்க அப்பா அம்மா இங்க வந்து தங்கி படிக்கிறதுக்கு, இதெல்லாம் பண்றதுக்கு கண்டிப்பா அனுமதிக்க மாட்டாங்க. அவள் படிப்பு முடிஞ்சா வேணா திரும்பவும் அடம் புடிச்சு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா இந்த ரெண்டு வருஷத்துக்குள்ள எது வேணும்னாலும் மாறலாம். நீங்க மாறலாம், உங்க சூழ்நிலை மாறலாம், ஏன் அவளோட வாழ்க்கைகூட மாறலாம். அவள் வந்தா நீங்க வாய்ப்பு கொடுப்பீங்களானு மட்டும் எனக்கு உறுதி சொல்லுங்க,” என்று கேட்டாள் ப்ரீத்தி.

தோழமைக்காகப் பேசும் அவளைப் பாசமாகப் பார்த்தான்.

“இந்த வாய்ப்பை நானாதேடி வந்துதான் உங்களுக்கு கொடுத்தேன். எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. உண்மையான குரல் வளம் இருந்து வேற காரணங்களால் ரிஜெக்டாகுறவங்களுக்குத்தான் நான் இந்த வாய்ப்பு கொடுக்கிறேன். நாங்க எல்லாரும் சேர்ந்து போராடுறோம். கண்டிப்பா ஒரு நாள் வெற்றி அடைவோம். உங்க பிரண்டோட நிலைமை புரியுது. அங்க இந்த ஊரைச் சேர்ந்தவங்க இல்லைன்னு தெரியுது. நான் ஒரு வாக்கு கொடுக்கிறேன். இதோ என் அம்மா முன்னாடியே கொடுக்கிறேன். அவங்க படிப்பு முடிஞ்சு, என்னை தேடி வந்தாங்கனா கண்டிப்பா அவங்களுக்கான வாய்ப்பு இருக்கும். அவங்க குரலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். என்னோட போன் நம்பர் மாறப் போறதில்ல, இந்த வீடும் மாறப்போவதில்லை. அவங்க கண்டிப்பா என்னைத் தேடி வரலாம்,” என்றான்.

முடிந்தவரை தாயிடம் போராடி கேட்பதாகக் கூறிவிட்டு, அவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

போட்டியில் தோற்றுப் போனதற்காக யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் எங்கோ சென்று படிக்க அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

அவளுக்கு ஒரு தங்கையும் இருந்தாள். அவள் பள்ளிதான் படித்துக் கொண்டிருந்தாள். “படிச்சு முடிச்சிட்டு, வேலைய தேடிக்கிட்டு, கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு, நீ என்ன வேணா பண்ணு,” என்று கூறிவிட்டார்கள்.

இங்கு பெற்றவர்களிடம் சம்மதம் கேட்டே கிடைக்கவில்லை. யாரோ ஒருவன் தனக்குத் தாலியைக் கட்டி சம்மதித்து விடுவானா?

‘தன் தந்தையே பாடுவதற்கு என்னவெல்லாம் சொன்னார்? கூத்தாடி கும்பல் வேண்டாம் என்று தானே கூறினார்? சிறுவயதில் தன்னை ஆசை ஆசையாக பாட்டு வகுப்பில் சேர்த்து விட்டவர். பெரிதாகும் போது அதுவே கூத்தாடித்தனமாகத் தெரிந்து விட்டது.

முதலில் படிப்பை முடிக்கலாம். அதன் பிறகு சென்னையில் வேலை தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தவள், ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டாள்.

பிறகு அந்த கார்டில் உள்ள அலைபேசிக்குத் தொடர்பு கொண்டாள்.

“சார், நான் நத்தாஷா பேசுறேன்,” என்றாள்.

அவன் அவளை சோதிக்கவில்லை. “சொல்லுங்க நத்தாஷா, என்ன உதவி நான் உங்களுக்கு பண்ணனும்?” உடனே கேட்டான் கௌதம்.

“சாரி, அம்மா அப்பா ஒத்துக்கல. ரொம்ப கோபப்படுறாங்க,” என்றாள் அவள்.

“ஐ நோ, ஐ நோ யுவர் சிட்டுவேஷன். அவங்க கிட்ட ரொம்ப போராடாதீங்க. ரெண்டு வருஷம் படிப்பை முடிங்க, அப்புறம் பாத்துக்கலாம்” என்றான்.

“சார், உங்ககிட்ட மரியாதைக்காக இதை சொல்லலாம்னுதான் போன் பண்ணேன். நான் கண்டிப்பா வருவேன். என் படிப்பை முடிச்சுட்டு சென்னையிலேயே வேலை தேடிட்டு வரணும்னு மனசுக்குள்ள யோசிச்சு வச்சுட்டேன். வாய்ப்புகள் எப்பயாவது தான் நம்ம கதவைத் தட்டும். அதை நாம கெட்டியா பிடிச்சுக்கணும். கண்டிப்பா எனக்கும் பிடிச்சுக்கிறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். ஒரு நாள் நான் என்னோட பேஷனைத் தேடி வருவேன்,” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

துண்டித்தவள் மீண்டும் தொடர்பு கொண்டாளா? அல்லது காலத்தின் சுழற்சியில் மாட்டிச் சிக்கிக் கொண்டாளா? வாழ்க்கை அவளுக்கு என்ன வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!