Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 07

மறுநாள் காலை ஜிம்முக்கு போய்விட்டு வந்த வசீகரன், ஹாலில் அமர்ந்தபடி ஷூவை கழற்றிக் கொண்டிருந்தான். சின்னபொண்ணு அன்றைக்கும் பாவாடை சட்டையணிந்து கொண்டு சமையலறைக்கும் சரவணன் அறைக்கும் சென்று வந்து கொண்டிருந்தாள்.
‘டிரஸ் எடுத்து கொடுத்தா போடாம வச்சு பூஜை பண்ணிட்டு இருக்காளா’ என்று மனதிற்குள் அவளை திட்டியவனுக்கு புரை ஏறிவிட சின்னபொண்ணு அவசரமாக தண்ணியை எடுத்துக் கொண்டு அவனெதிரே வந்தவள் தன்னையும் மறந்து அவன் தலையில் தட்டினாள்.


Advertisement

கண்கள் மிளர அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனெதிரே தண்ணியை நீட்டினாள். அவனும் நீரை வாங்கி பருகினான். அவன் குடித்து முடிக்கும்வரை காத்திருக்காமல் அவள் அந்த இடத்தை விட்டு விலக பார்க்க, “டம்ளரை யார் எடுத்துட்டு போவாங்க?” என்றதும் நின்றாள்.
“அண்ணி உனக்கு டிரஸ் எடுத்து கொடுத்தாங்களே, அத போட்டுக்கலயா?” என்றான் ஆழ்ந்த குரலில்

Advertisement

Advertisement

“காலேஜ் போகும் போது போட்டுக்கறேன்”
“இங்க பாரு, உன் பேரு சின்னபொண்ணு தான், ஆளும் சின்ன பொண்ணா தான் இருக்கே. இல்லங்கல. அதுக்காக பாவாடை சட்டையே தான் போடணுமா?” என்றவன் ‘மனுஷன நல்லவனா இருக்க விடமாட்டா போல’ என்று வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு “போ, போய் நான் எடுத்து கொடுத்த டிரஸ்ஸ போட்டுட்டு வா. இனிமே அத தான் நீ போடணும்?”

Advertisement

“நீங்க எடுத்தீங்களா?” என்றாள் அவள் அதிர்ச்சியாக
“நாங்க எடுத்ததுனு சொல்றதுக்கு நான் எடுத்ததுனு சொல்லிட்டேன். எங்க அண்ணி எடுத்தத நாங்க எடுத்ததுனு சொல்லலாம் தானே?”
ஆமாம் என்று தலையாட்டினாள்.
“போய் அண்ணி எடுத்த டிரஸ்ஸ போட்டுட்டு வா. இல்லனா கோவிச்சுக்க போறாங்க” என்று சொல்லி அவளிடம் டம்ளரை கொடுத்து விட்டு சென்றான்.
லதா மேடம் கோவிச்சுக்கிட்டா என்ன பண்றது என்று யோசித்தவள் உடனே உள்ளே சென்று சந்தனநிறத்தில் தங்கஜரிகையால் வேலைப்பாடு செய்யப்பட்ட சுடிதாரையும் அரக்கு நிறத்தில் ஷாலையும் அணிந்து கொண்டு கண்ணாடி முன்னே தன்னை பார்த்தாள். அந்த உடை அவளின் மாநிறத்தை பொன்னிறமாக எடுத்து காட்டியது. அந்த ஆடை அவளின் உடலுக்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்தது.
எப்போதுமே அவளின் ஆடைகள் பெரிய அளவில் தான் இருக்கும். இப்படி உடலுக்கும் அவள் நிறத்திற்கும் பொருந்திய உடையை அவள் உடுத்தியதே இல்லை. தலைமுடியை தளர பின்னி சிறு பொட்டை வைத்ததற்கே அழகாக தெரிந்தாள். இதுக்கு தான் ஆள்பாதி ஆடை பாதி என்று சொல்றாங்களோ? என்று நினைத்தவள் முதன்முறையாக வெகுநேரம் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வேண்டா காபி எடுத்துட்டு வாம்மா” என்ற சரவணன் குரல் கேட்கவும் சமையலறைக்கு ஓடி காபி கலந்துக் கொண்டு வெளியே வந்தாள். வசீகரனும் குளித்து அரக்கு நிற டிசர்ட்டும் சந்தன நிற பேண்டும் அணிந்து கொண்டு படியிறங்கினான். சின்னபொண்ணுவின் புதிய தோற்றத்திலும் பொலிவிலும் அங்கேயே நின்று அவளை சிறிது நேரம் பார்த்துவிட்டு கீழே இறங்கி நீள் இருக்கையில் அமர்ந்தான்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அலமேலு ரஞ்சனியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு கிளம்பியிருந்தார். நடராஜன் குளித்துக் கொண்டிருந்ததால் ஹாலில் அவனை தவிர யாருமில்லை.
சரவணனுக்கு காபி கொடுத்துவிட்டு வந்த சின்னபொண்ணு ‘இவரும் காபி கேப்பாரோ’ என்று வசீகரனை பார்க்க, அவன் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, தன்னை முறைப்பதாக நினைத்துக் கொண்டு, “உங்களுக்கும் காபி வேணுமா சார்” என்றாள்.
அவளை வம்பிழுக்கவே காத்திருந்தவன் அவளாக வாண்டடாக வந்து வண்டியில் ஏறவும் “ம்” என்றான்.
ஓடிச்சென்று தன்னெதிரே காபிகப்புடன் வந்து நின்றவளை அழுத்தமாக பார்த்தவன், “சின்னபொண்ணு, அதுவும் படிக்கிற பொண்ணுனு பாக்கறேன், உன் படிப்பு முடியறவரைக்கும் நான் தனியா இருக்கும் போது வந்துடாதே, கடத்திட்டு போயிர போறேன்” என்றான் கண்களை உருட்டி
அவள் புரியாமல் விழிக்கவும், “என்ன முழிக்கற? இப்பவே கடத்திட்டு போகவா?” என்று எழமுயற்சித்தான்
“ம்ஹூம்” என்று பதட்டத்துடன் வேகமாக தலையாட்டி ரெண்டடி பின்னால் சென்றாள்.
“பயப்படாத, சும்மா சொன்னேன்” என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து பெரிய கேட்பரிஸ்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான்.
வேண்டாமென்று அவள் மறுப்பாக தலையாட்டவும், “இன்னைக்கு என் பர்த்டே, ஸ்வீட் கொடுத்தா வாங்க மாட்டியா?” என்றான் கோபமாக
“ஹாப்பி பர்த்டே சார்” என்று சாக்லெட்டை வாங்கி கொண்டாள்.
“பிரிச்சு சாப்பிடு”
“நான் அப்புறமா” என்றவள் அவன் முறைக்கவும் பிரித்து அதில் கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
“உனக்கொரு விஷயம் தெரியுமா? இன்னைக்கு என்னோட பர்த்டேவே இல்ல, அப்புறம் ஏன் சாக்லெட் கொடுத்தேனு பாக்கறீயா? இந்த சாக்லேட்ல மயக்க மருந்து கலந்திருக்கேன். நீ மயங்கினதும் உன்னை தூக்கிட்டு போயிருவேன்” என்று சொல்லவும் தூக்கி வாரிப் போட, கையிலிருந்த சாக்லெட்டை கீழே போட்டு, வாயில் விழுங்கியதை துப்பிவிட்டாள்.
“என்ன நீ? நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா?” அவன் சிரித்துக் கொண்டே அவள் கீழே எறிந்த சாக்லெட்டை எடுத்து சாப்பிட்டான்.
“ஏன் சார் இப்படி பண்றீங்க?” என்றாள் மனம் தாங்காமல்
“நான் என்ன பண்ணேன்? நீ தான் நான் போட்டிருக்க கலர்லயே மேட்சிங்கா டிரஸ் போட்டுட்டு வந்திருக்க, அதுக்கு தான் சாக்லெட் கொடுத்தேன்” என்று இருபுருவங்களையும் ஏற்றிஇறக்கினான்
அப்போதுதான் தன்னையும் அவனையும் பார்த்தாள். அவள் ஆடையின் நிறத்திற்கு எதிர்பதமாக அணிந்திருந்தானே தவிர, ரெண்டுமே ஒரே நிறத்தில் இருந்தது.
‘அச்சோ எல்லாரும் ஒன்னா சாப்பிடறப்போ அலமேலு அத்தே இத கவனிச்சா வேற மாதிரி நினைச்சுப்பாங்களே’ என்று நினைத்தவள் அப்போதே தன்னுடைய அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
‘வசி அவ பாவம்டா ரொம்ப சீண்டாதே, படிக்கறபொண்ணு, சின்ன பொண்ணுவேற’ என்று அவன் மனசாட்சி அவனை இடித்துரைக்க, ‘அவள பாத்தாலே சீண்டனும் போலருக்கே, கொஞ்சநாளைக்கு தள்ளியிருக்கறது தான் அவளுக்கும் எனக்கும் நல்லது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் அலமேலுவும் ரஞ்சனியும் வந்துவிட, அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். சின்னபொண்ணு இப்போது இளஞ்சிவப்புநிற சுடிதாரும் வெண்ணிறத்தில் ஷாலையும், கால்சட்டையும் அணிந்திருந்தாள். வசீகரன் அவளை முறைக்கவும் தலையை குனிந்தவள் நிமிரவே இல்லை. ஆனாலும் வசியின் பார்வை அவளை விட்டு அகன்றிருக்கவில்லை.
லதாவும் இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்தாள். காலைல குளிச்சதும் பாவாடை சட்டைல இருந்தா, அப்புறம் சந்தனகலர் சுடிதார், இப்போ இந்த சுடிதார். கொஞ்ச நேரத்துல மூணு டிரஸ் மாத்தியிருக்கா. வசி மாடிய விட்டு கீழ இறங்க மாட்டான். இப்போ என்னடான்னா ஹால்லயே கிடக்கறான் என்று இருவரையும் சந்தேகத்துடன் கவனிக்க தொடங்கினாள்.
சின்னபொண்ணு தன்வேலையில் கவனமாக இருக்க, வசீகரனோ அவள் மீது கவனமாகயிருந்தான். அவனின் அழுத்தமான பார்வை சின்னபொண்ணை விட்டு அகல்வதாக தெரியவில்லை. அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பும் வரை அமைதியாக இருந்தாள்.
அனைவரும் சென்றதும் அலமேலுவின் அறைக்கு சென்று, “அத்தே உங்க கிட்ட பேசணும்”
“சொல்லும்மா லதா? என்ன விஷயம்?”
“நம்ம வீட்ல வேலை செய்யற சின்னபொண்ணு மேல வசிக்கு ஒரு கண்ணு இருக்கற மாதிரி தோணுது” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்
அலமேலுவுக்கு தூக்கிவாரி போட நாற்காலியிலிருந்து சட்டென எழுந்து கொண்டார். “எப்படி சொல்றே?” என கேட்க
“நேத்து அந்த பொண்ணு என்கிட்ட டிரஸ் எடுக்க பணம் வேணும்னு கேட்டுச்சு. நான் ரஞ்சனிது பழைய டிரஸ் வாங்கி கொடுக்கறேன்னு சொன்னேன். அதுக்குள்ள உங்க சின்னமகன் அவளுக்கு பதினைஞ்சு டிரஸ் எடுத்துட்டு நமக்கு சந்தேகம் வரக்கூடாதுனு நம்ம எல்லாருக்கும் துணி எடுத்துட்டு வந்து இருக்காரு. அதை நம்ம கையாலயே அவளுக்கு கொடுக்க வச்சிட்டாரு”
மகனை மருமகள் முன்பு விட்டுத்தர மனம் இடம் தரவில்லை.
“வசிக்கும் சரவணன் மாதிரி இளகின மனசு. பாவம் புதுத்துணி எடுத்து கொடுக்கலாம்னு கொடுத்திருப்பான். அவனா கொடுக்காம நம்மகிட்ட கொடுத்து தானே கொடுக்க வச்சான். இத தப்பா நினைக்காதம்மா”
“நானும் முதல்ல அப்படி தான் நினைச்சேன் அத்தே. ஆனா வசியோட பார்வையும் பேச்சும் வேற மாதிரி இருக்கு. நானும் சரவணனும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. எனக்கு பார்வையோட வித்தியாசம் நல்லாவே தெரியும். எனக்கென்னவோ வசி அந்த பொண்ணுகிட்ட மயங்கிட்டான்னு தோணுது.
இதை ஆரம்பத்துலயே கிள்ளி எரியலனா ஆலமரமா வளர்ந்து நிக்கும். நவ்யாவுக்கு நான் என்ன பதில் சொல்றது? அது கூட பரவாயில்ல. என்கிட்ட வேலை செய்யற பொண்ணு எனக்கு ஓரகத்தியா வர்றதுக்கு நான் ஒருக்காலும் சம்மதிக்கமாட்டேன். நானும் அவளும் சமமா இந்த வீட்டோட மருமகளா வாழற நிலைமைய என்னால நினைச்சுக்கூட பாக்க முடியாது அத்தே”
“லதா நீ யோசிக்கற அளவுக்கெல்லாம் போக விட்டுடுவேனா? நீ சிபாரிசு செஞ்ச பொண்ணாச்சேனு தான் இவ்வளவு நாளா வாய மூடிட்டு இருந்தேன். நீயே சொன்னதுக்கு அப்புறம் அவளை வீட்டை விட்டு அனுப்பாம விட்டுடுவேனா? நீ சரவணன மட்டும் பாத்துக்க, நான் அவளை வெளிய அனுப்பறத பாத்துக்கறேன்”
“அத்தே வசி சும்மாயிருக்கமாட்டார்னு தோணுது”
“நான் அந்த பொண்ணுகிட்ட பேசி அவளே வீட்டை விட்டு போற மாதிரி பாத்துக்கறேன். வசி என்னை மீறி எதுவும் பண்ண மாட்டான்”
“சரிங்க அத்தை” என்று லதா தன்அறைக்குள் சென்றுவிட அலமேலுவுக்கு ஆத்திரமாக வந்தது.
வசீகரன் வேண்டுமென்றே அவளுக்கு துணி எடுத்து கொடுத்தானா? கோயிலுக்கு போய்விட்டு அவரும் ரஞ்சனியும் வீட்டிற்கு வரும்போது கூட ஹாலில் வசி மட்டும் தனியாக தானே இருந்தான்? வேறென்னவெல்லாம் அவளுக்கு வாங்கி கொடுத்திருப்பான்?
சின்னபொண்ணு இருந்த அறைக்குள் சென்று அவளின் பெட்டியை எடுத்து ஆராய்ந்தார். அதற்குள் இருந்த அனைத்து துணிகளையும் எடுத்து வீசியபோது பெட்டியின் அடியில் ஒரு கவர் இருப்பது தெரிந்தது.
******* 
சின்னபொண்ணு கல்லூரிக்கு சென்றதும் அவளின் வகுப்பு தோழிகளும் தோழர்களும் அவளை ஆவென பார்த்தனர்.
“வேண்டா, இன்னைக்கு உனக்கு பர்த்டேவா?”
இல்லையென தலையசைத்தாள்
“புதுடிரஸ் போட்டிருக்க? என்ன விஷேசம் இன்னைக்கு? யார் எடுத்து கொடுத்தாங்க? உனக்குள்ள இவ்ளோ அழக ஒளிச்சு வச்சிட்டு அம்மாஞ்சி மாதிரி வந்துட்டு இருந்தியா?” என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டு துளைத்தனர்.
“சரவணன் சார் வைஃப் லதா மேடம் தான் எனக்கு டிரஸ் எடுத்து கொடுத்தாங்க, அவங்க ரொம்ப நல்லவங்க” என்றாள்
“அவங்க ஏன் உனக்கு எடுத்து கொடுத்தாங்க? நீ அவங்க வீட்ல தான் தங்கியிருக்கியா?”
“வேண்டா என்னோட வீட்ல பேயிங் கெஸ்ட்டா இருக்கா. என்னோட வைப் தான் டிரஸ் எடுத்து கொடுத்தா, அதுக்கென்ன?” என்றபடி சரவணன் உள்ளே வந்திருந்தான்.
அதற்குபின் பேச்சு தடைப்பட்டு விட, அவன் வகுப்பை முடித்து செல்லும்வரை அமைதியாக சென்றது. அதன்பின் தோழி செல்வி அவளருகே வந்து அமர்ந்து, “வேண்டா இந்த டிரஸ்ல நீ நல்லா இருக்கே. வாயேன் வெளியே கார்டன்ல ஒரு போட்டோ எடுத்துக்குவே”
“இல்ல வேணாம்” தயங்கினாள். ஆனாலும் புது ஆடையில் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசையாகவும் இருந்தது. வெளியே கார்டனில் அழகாக அவளின் இடுப்பளவுக்கு வெட்டப்பட்ட செடிகளுக்கு நடுவே நின்று பெண்கள் எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது அவளுக்கும் ஆசையாக இருக்கும். தோழிகளிடம் சொன்னால், “நீ போட்டு இருக்கற டிரஸ்க்கு அந்த தோட்டத்துல வேலை செய்யற பொண்ணு மாதிரி இருக்கும், எதுக்கு வேண்டா இந்த வேண்டாத ஆச?” என்று அவர்கள் சொல்லிவிட அமைதியாகி விட்டிருந்தாள்.
வேணாம் என்று சொன்னாலும் அவள் கண்களில் தெரிந்த ஆவலை உணர்ந்து கொண்ட செல்வி அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றாள். சின்னபொண்ணு வட்டமாக வெட்டப்பட்டிருந்த செடிகளுக்கு நடுவே நின்று கொள்ள செல்வி தன் கைப்பேசியில் புகைப்படம் எடுக்கும் சமயம் பேராசிரியர் ஒருவர் ஏதோ வேலையாக அவளை அழைக்கவும், அந்த பக்கம் சென்று கொண்டிருந்த மாணவனிடம், “ப்ரோ, அது என் பிரெண்ட், அவளை போட்டோ எடுங்க, இதோ வந்திடறேன்” என்றாள்
“ப்ரோவா? ப்ரோனு சொன்னா எடுக்க மாட்டேன்” என்று அவன் முறுக்கி கொள்ள,
“சரி மச்சி, போட்டோ எடு, வந்திடறேன்” என்று அவள் ஓடிச்சென்றாள்.
சின்னபொண்ணு புன்னகையுடன் அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு செடிகளுக்கிடையே நின்றிருக்க அந்த மாணவன் கைப்பேசியில் கேமரா வழியே அவளை பார்த்த போது யாரே நடுவில் நிற்கவும், “ப்ச், போட்டோ எடுக்கறது தெரியலயா? எதுக்கு நந்தி மாதிரி வந்து நிக்கறீங்க?” என்றபடி தலையை உயர்த்தினான்.
அவன் தலையில் நங்கென்று குட்டியிருந்தான் வசீகரன். 
“யார் சார் நீங்க? எதுக்கு தலையில கொட்னீங்க?”
“நான் யார்ங்கிறது இருக்கட்டும், எதுக்குடா அவள போட்டோ எடுத்துட்டு இருக்கே?” அடிக்குரலில் கர்ஜித்தான்.
“போட்டோ எடுக்க ஹெல்ப் கேட்டாங்க, பண்ணேன். தப்பா? அதுக்கு வளர்ற பையன் தலையில கொட்றீங்க?”
“வளர்ந்தவரைக்கும் போதும், போய் படிக்கற வேலைய பாருடா” என்று அவனிடமிருந்து போனை பிடுங்கினான்.
வசீகரனையும், வேண்டாவையும் முறைத்தவன், “நான் பாட்டுக்கு சிவனேனு கிளாஸ்க்கு போயிட்டு இருந்தேன். என்னை கூப்பிட்டு வச்சு அடிவாங்க வைக்கறீங்களா நீயும் உன் பிரெண்டும், உங்கள அப்புறமா கவனிச்சுக்கறேன்” என்று திட்டிவிட்டு தலையை தேய்த்துக் கொண்டே சென்றான்.
அவள் செடிகளுக்கிடையே நுழைந்து வெளியே வர முயற்சிக்க, “அங்கேயே நில்லு” என்று அதட்டிவிட்டு அவளெதிரே சென்றான்.
“யார் போட்டோ எடுக்க கூப்பிட்டாலும் போஸ் கொடுக்கறதுக்கு போய் நின்னுக்குவியா?” என்றான் லேசான கோபத்துடன்
“என் பிரெண்ட் செல்வி தான் போட்டோ எடுக்கலாம்னு கூப்பிட்டா. அதுக்குள்ள புரபசர் கூப்பிட்டாங்கனு அந்த அண்ணாகிட்ட போனை கொடுத்து போட்டோ எடுக்க சொல்லிட்டு போனா”
“அவன் அண்ணாவா?”
“ம்”
“அப்ப சரி, நான் யாரு?” அவன் குரலில் மென்மை கூடி போயிருந்தது.
தலையை குனிந்து கொண்டு மெளனமாக நின்றாள்.
“சொல்லு நான் யாரு?”
அவள் தலை நிமிரவே இல்லை. 
“நீ மெளனமா இருந்தா, டேஷ் போட்ட மாதிரி, அந்த இடத்துல நான் என்னவேனா நினைச்சுப்பேன், சொல்றீயா? இல்ல நானே நினைச்சுக்கவா?”
அப்போதும் மெளனம்
“சரி போய் முன்னாடி நின்னுட்டு இருந்த இடத்துல நில்லு. நானே போட்டோ எடுக்கறேன்”
“இல்ல வேணாம்”
“போய் நில்லுனு சொன்னேன்” அதட்டலாக சொல்லவும் அங்கே போய் நின்று கொண்டாள்
அடர்ந்த பச்சை நிற செடிகளுக்கிடையில் அன்றலர்ந்த செந்தாமரையென இளஞ்சிவப்பு நிறத்தில் நின்றிருந்தவளை கைப்பேசியில் விதவிதமாக படமெடுத்தான்.
“வசி என்னடா பண்ணிட்டு இருக்கே?” சரவணனின் அதிர்ச்சியான கேள்வியில் தொண்டையை செருமிக் கொண்டான்.
“ஸ்காலர்ஷிப் எக்ஸாம் ஒன்னு அறிவிப்பு வந்திருக்குடா. இந்த பொண்ணுக்கு யூஸ் ஆகும்னு நினைச்சேன். அதுக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அப்லோட் பண்ணனும் அதான்”
“நம்பிட்டேன்டா, பிரின்சிபால் உன்னை வரச்சொல்றாருனு போன் பண்ணிட்டு நான் அவர் ரூம்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா, நீ என்னென்னவோ கதை சொல்லிட்டு இருக்கே. சரிவா. வேண்டா நீ கிளாஸ்க்கு போம்மா” என்று சரவணன் சொல்ல சின்னபொண்ணு ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்குள் சென்றாள்.
அன்று மாலை கல்லூரி முடிந்து பேருந்தில் செல்கையில் வசீகரன் கேட்ட “நான் யாருனு சொல்லு” என்ற கேள்வி காதுக்குள் ரீங்காரமாய் ஒலித்தது.
இப்போதும் அந்த கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. 
வசீகரன் பேசும்போதும் அதட்டும் போதும் பயமும் பதட்டமும் இருந்தாலும் அதில் ஒரு பிடித்தமும் இருக்கிறதே அது ஏன்? அவளின் மனதில் எழுந்த கேள்விகள் கேள்விகளாகவே இருக்கட்டும், அதற்கான பதில் அவளுக்கு வேண்டாம். முதலில் இனிமையானதாக தோன்றும் முடிவு கசப்பாக இருக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். என்னதான் சின்னபெண்ணாக இருந்தாலும் தனக்கு முன் பிறந்த நான்கு அக்காக்களின் வாழ்க்கையை பார்த்து வளர்ந்தவளாயிற்றே!
ஆனாலும் வசீகரனின் இன்றைய சீண்டல்களால் பருவ வயதின் உணர்வு குவியல்கள் அவளை அலைகழித்தது. பேருந்து பெரும் சத்தத்துடன் குலுங்கி நிற்கவும், சட்டென தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தாள். மன உணர்ச்சிகளை அங்கேயே இறக்கிவிட்டு, தான் மட்டும் இறங்கி வீட்டிற்கு சென்றாள்.
அவளுக்காகவே காத்திருந்தது போல அலமேலு அவளை கண்டதும், “உன்கிட்ட பேசணும், என் ரூமுக்கு வா” என்றுவிட்டு அறைக்குள் சென்றார்.
என்ன காத்திருக்கிறதோ என்ற திகிலோடு சின்னபொண்ணு அவர் பின்னால் சென்றாள்.
(தொடரும்)

One thought on “மெளனம் 07

  • Buvana Buvana

    Ayyayo enna pottchhu Ennatha pesa poraloo Theriyalaiey

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!