மரியாதையுடன் அழைத்துத் தன்மையாக விசாரிக்கும் அவன் தோரணையில் சிறு நம்பிக்கை துளிர்விட,
“ஷ்ரவனுக்கு இன்னும் எதுவும் நியாபகத்துக்கு வரல தருண். நான்தான் ரம்யாவைப் பற்றி எடுத்துச்சொல்லி, அவன் அவளை எந்தளவுக்கு நேசிக்கிறான்னு புரியவச்சு, ரியாலிடியை அக்செப்ட் பண்ணிட்டு அவகிட்ட மனசவிட்டுப் பேசிப் பழகச் சொல்லிருக்கேன்.
Advertisement
அவன் ஓரளவுக்குத் தயாராத்தான் இருக்கான். ஆனால் ரம்யா எப்படின்னு தெரியல்… அவ வந்ததும் எடுத்துச்சொல்லி ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கலாம்னு நெனச்சேன்,” கவலை தோய்ந்த குரலில் விவரித்தாள்.
ஷர்மிலாவிடமிருந்து அழைப்பு வந்ததும், தன்னவனுக்கு நினைவு திரும்பிவிட்டதாக நினைத்து வந்திருக்கும் ரம்யாவின் எதிர்பார்ப்பை அவன் அறியவே செய்தான். ஆனால் அதையும் தாண்டி அவள் ஷ்ரவன் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான அன்பை அசைபோட்டவன்,
“அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்,” கூறி, “வாங்க! நாம கேன்டீன் வரைக்கும் போயிட்டு வரலாம்,” எனக் கண்சிமிட்டினான்.
“தருண்…” கலவரமானவளை உளமார ரசித்தவன்,
“அட வாங்க ஷர்மிலா!” உரிமையோடு அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
“வாய்விட்டு சாரி கேட்டால்தான் மன்னிப்பீங்களா?” கடனே என்று வந்தமர்ந்தவளின் செயலலில் வருந்தினான் தருண்.
“ஷ்ரவன் ரம்யாகிட்ட எதையுமே மறைச்சதில்ல. ஒருத்தனால தன் ஃப்ர்ஸ்ட் லவ் பற்றி மனைவிகிட்ட இந்தளவுக்கு வெளிப்படையா சொல்ல முடியுமான்னு நானுமே பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியப்பட்டிருக்கேன்,” என்றாள்.
அண்ணணின் இந்த வெளிப்படையான குணம் அவனுக்குமே ஆச்சரியத்தை விளைவித்ததுதான். அதேசமயம், தன்னிடம் எதுவுமே சொன்னதில்லை என்ற ஆதங்கம் மேலோங்க,
“ப்ரேகப் ஆச்சுன்னு சொன்னானே தவிர, யாரை காதலிச்சான், என்ன பிரச்சனைன்னு எதுவுமே சொன்னதில்ல. தோண்டி கேட்டாலும், முடிஞ்சுபோன விஷயம்ன்னு எரிஞ்சு விழுவான். முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்க ரெண்டுபேரையும் அப்படியே விட்டிருக்க மாட்டேன்,” என்றான் ஆற்றாமையுடன்.
“நாங்க சேர்ந்திருந்தா உன் அண்ணனோட வாழ்க்கை இத்தனை ரம்மியமா இருந்திருக்காதே, பரவாயில்லையா,” வேண்டுமென்றே சீண்டினாள்.
உண்மைதான் என அசடுவழிய தலையசைத்த போதும், ஷர்மிலாவின் திருமண வாழ்க்கையும் இதே அளவிற்கு நிறைவாக அமைந்திருக்கலாமே என வருந்தியவன்,
“உங்கள ரெண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சுக்கத்தானே உங்க அக்கா புருஷன் ஜாதி மதம், வாரிசுகள்ன்னு சாக்குச் சொல்லி நாடகம் ஆடியிருக்காரு” ஆதங்கத்தில் பொங்கினான்.
“அம்மாடியோ! உன் ஃப்ரெண்டுக்கு மேலே உனக்குக் கோபம் வருதே!” ஷர்மிலா ரசித்துச் சிரிக்க,
“என்ன சொல்றீங்க?” கண்கள் அகல வினவினான்.
“ம்ம்… என்னை முதன்முதலில் பார்த்தப்ப ரம்யாவும் இப்படித்தான் கொந்தளிச்சா!” என்றாள் பற்கள் மின்ன.
தருணின் இந்தப் புது அவதாரத்தில் பூரித்தவள், “ரம்யாக்குச் சொன்ன அதே பதில்தான் உனக்கும். நீயே வீட்டுக்கு வந்து பாரு!” எனக் கண்சிமிட்டினாள்.
லேசான மனத்துடன் அளவளாவியபடி மருத்துவ அறையை நோக்கி நடந்தவர்கள், அறை வாசலில், முகத்தை இரு கைகளில் புதைத்துக்கொண்டபடி தேம்பி அழும் ரம்யாவைக் கண்டதும் பதறியடித்து அவளருகே ஓடினர்.
“என்ன ஆச்சு ரம்யா?” ஆளுக்கொரு புறமாக அவள் தோளினைப் பற்றி ஆசுவாசப்படுத்தினர்.
விருட்டென தலை நிமிர்த்தி ஷர்மிலாவை ஏறிட்டவள், “ஷ்ரவனுக்குக் குணமாகுறதுக்கு முன்னாடியே என்னை ஏன் இங்க வரச்சொன்ன?” எகிறினாள்.
“அதனால என்ன ரம்யா…” சமாளித்தபடி, அழுது சிவந்திருந்த அவள் கண்களைத் துடைத்துவிட்டாள்.
“என்னவா!!!” நீ ஃபோன் பண்ணதும் அவருக்கு நினைவு திரும்பிடுத்துன்ற சந்தோஷத்துல ஓடி வந்தேன். ஓடி வந்து….” வார்த்தைகளுடன் குரலும் சரிந்தது.
“வந்து….” ஷர்மிலா எடுத்துக்கொடுக்க,
“அது… அது வந்து அவர கட்டிப்பிடிச்சு….” ரம்யா திணற,
“கட்டிப்பிடிச்சுசுசு…..” கண்கள் விரிய இழுத்தான் தருண்.
“சும்மா இருடா!” அதட்டிய ஷர்மிலா, ரம்யாவின் கன்னத்தை வருடி, “அவன் உன் புருஷன் ரம்யா; இதுல சங்கடப்பட என்ன இருக்கு,” மென்மையாகப் பேச்சுக்கொடுத்தாள்.
“என்னை யாருன்னே தெரியாத ஒருத்தர்கிட்ட போய், நான்தான் உங்க மனைவின்னு ஐ.டி.கார்ட் காட்டி நிரூபிக்குற மாதிரி இருக்கு ஷர்மிலா,” மனம்நொந்து விசும்பினாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி, “சரி! நீதான் அவன் மனைவின்றத தெரிஞ்சுக்க ஷ்ரவன் வேற என்ன செய்யணும்னு எதிர்பார்க்குற… நீயே சொல்லு,” தீர்வையும் தரச் சொன்னாள்.
வழி ஏதும் புலப்படமால் மௌனத்தில் கரைந்தாள் பேதை.
“புரிஞ்சுக்கோ ரம்யா! இது மருந்து மாத்திரையால் குணமாக்ககூடிய வியாதியில்ல. மனசு சம்பந்தப்பட்டது. சம்பந்தப்பட்டவங்க களத்தில் இறங்கி சிகிச்சை தந்தால்தான் காயம் ஆறும்,” நிதர்சனத்தை எடுத்துரைத்தாள் ஷர்மிலா.
ஒரு நலன் விரும்பியாக, ஒரு மருத்துவராக எனத் தங்களுக்காக மெனக்கெடும் ஷர்மிலாவின் அன்பில் தோற்றுப்போனவள்,
“என்ன செய்யணும்னு நீயே சொல்லு,” சரணாகதியானாள்.
வேலை சுலபமாகிவிட்டது என மென்னகைத்த ஷர்மிலா, “அவன்கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிப் புரியவச்சிட்டேன் ரம்யா. உன் நினைவு இல்லையே தவிர, நீதான் அவன் மனைவின்ற எதார்த்தத்தை ஒத்துக்குற அளவுக்குப் பக்குவமா இருக்கான்.
அவன்கிட்ட மனசவிட்டுப் பேசு; உங்களோட ஸ்வீட் மெமரிஸ் எல்லாத்தையும் ரீக்ரியேட் பண்ணு. நீ எத்தனைக்கு எத்தனை அவனோட நேரம் செலவிடுறீயோ, அத்தனைக்கு அத்தனை சீக்கிரம் உன்னுடய ஷ்ரவனா உன்கிட்டயே திரும்பி வந்துடுவான்,” மென்மையிலும் மென்மையாக விளக்கினாள்.
இனிமையான நினைவுகள் என்றதும், ஆயிரமாயிரம் காதல் பரிபாஷைகள் மனக்கண்ணில் தோன்ற, மறுகணமே புத்தி நிகழ்காலத்தை நினைவூட்ட, குழம்பித்தவித்த பாவையின் விழிகளில் நீர் கோத்துக்கொண்டது.
“ஷ்ரவன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஷர்மிலா. ஆனால் இந்த நிலையில் ரெண்டு நிமிஷம் சேர்ந்தா மாதிரி அவர் கண்களைப் பார்த்துப் பேசவே தர்மசங்கடமா இருக்கு. இதுல எங்கத்த ஸ்வீட் மெமரிஸ் ரீக்ரியேட் பண்ணறது,” பயம் கலந்த குரலில் நொந்துபேசினாள்.
“அதுக்குத்தான் இந்த தடியன் இருக்கான்ல! இவனைப் பக்கத்துலேயே வச்சுக்கோ,” என தருணை ஓரக்கண்ணால் சுட்டிக்காட்டிய ஷர்மிலா,
ரம்யா பக்கம் திரும்பி, “மிஸ்டர். ரோமியோ ஏதாவது சில்மிஷம் செஞ்சான்னா, அண்ணன்னு கூடத் தயவு தாட்சனை பார்க்காமல் வெளுத்து வாங்குற நட்பின் சிகரமாச்சே!” எனச் சீண்டினாள்.
“அவங்க பஞ்சாயத்துல என் தலையை ஏன் உருட்டுறீங்க!” முறுக்கிக்கொண்டான் தருண்.
“கடவுளே! நான் அந்த அர்த்தத்துல சொல்லல. ஷ்ரவன் பக்கா ஜென்டில்மேன்,” ரம்யா இடைபுக,
“பார்ரா! புருஷனை விட்டுக்கொடுக்க மாட்டேன்றா!” என இருவருமாய் கூட்டுச்சேர்ந்து சரமாரியாக ஓட்டினர்.
அவர்கள் சீண்டல்கள் ஒரு முடிவே இல்லாமல் நீடிக்க, வெட்கத்தில் திணறிய பெண், இரு காதுகளையும் பொத்திக்கொண்டு, “ரெண்டு பேரும் விளையாடாம என் பயத்துக்கு ஒரு வழிச்சொல்றீங்களா,” செல்லமாக அதட்டினாள்.
“வகுப்பில் பாடம் மறந்துபோன பிள்ளைக்கு என்ன செய்வீயோ அதையே உன் புருஷனுக்கும் செய். அவ்வளவுதான்,” கண்சிமிட்டினாள் ஷர்மிலா.
“அது உன் இஷ்டம். ஆனால் இவன் பெஸ்ட் ஸ்டூடென்ட். எடுத்த காரியத்தில் எப்படியாவது முன்னேறி ஜெயிக்கணும்னு கடினமா உழைக்கும் ஹார்ட் வர்கிங்க் ஸ்டூடென்ட்,” நன்மதிப்பு சான்றிதழ் தந்தாள் ஷர்மிலா.
ஜாடை மொழியில் பேசி அண்ணனைக் கலாய்க்கும் பெண்களின் குறும்பை ரசித்த தருண், “குட் ஸ்டூடென்ட்டா இல்லை குட்டு வாங்குற ஸ்டென்ட்டான்னு நேருலேயே போய் பார்த்துடுவோம்,”அவர்கள் பாணியிலேயே அழைத்தான்.
“நீங்க மட்டும் போங்க,” எனக் கூறி ஷர்மிலா விலக,
“நான் சொன்னத இன்னும் மனசுல வச்சிருக்கீங்களா?” தருணின் குரல் சரிந்தது.
“ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லடா,” என அவன் தோளில் தட்டியவள், “குழம்பித் தவிக்கும் அவன் முன்னாடி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நின்னு அவனைத் தர்மசங்கடமான நிலையில் தள்ள வேண்டாம்னு நினைக்கிறேன்,” வெளிப்படையாகவே பதிலுரைத்தாள்.
இத்தனை தெளிவாக உறவாடுபவளை பழித்துப் பேசிவிட்டேனே எனக் குற்றவுணர்ச்சி மேலோங்க, “யூ ஆர் ரியலி க்ரேட் ஷர்மிலா,” என்றான் குளமான கண்களுடன்.
உதடு பிரிக்காது புன்னகைத்தவள், “மறக்காம வீட்டுக்கு வாடா!” என வாஞ்சையாக அவன் தோளில் தட்ட, அவனும் மென்சிரிப்புடன் தலையசைத்தான்.
இருவரின் பரிபாஷைகளைக் கவனித்த ரம்யா, “வீட்டுக்குக் கூப்பிடுற அளவுக்கு நெருங்கிட்டானா,” பூரித்துப்போனாள்.
அவளை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது தானும் இப்படித்தானே அலப்பறைகள் செய்தேன் என தனக்குள் சிரித்துக்கொண்டாள். அந்த நினைவுகள் நிகழ்காலத்தையும் சேர்த்து நினைவூட்டியதில், ஷர்மிலாவுடன் தனிமையில் பேச எண்ணியவள்,
“நானும் உன் கூட வாசல்வரைக்கும் வரேன்,” என்றாள்.
“ஷ்ரவன் ரொம்ப நேரமா தனியா இருக்கான்,” அவள் தடுக்கவும்,
கணவருடன் பேச சங்கடப்பட்டு தவிர்க்கிறாள் என யோசித்த தருண், விட்டுப்பிடிக்கலாம் என ஷர்மிலாவுக்குக் கண்ணசைத்தான்.
மின்தூக்கியின் கதவுகள் மூடியதும், “நேத்துதான் என்னோட ரிப்போர்ட்ஸ் பார்த்தேன் ஷர்மிலா. என் கருப்பையை எடுத்தத பற்றி சொல்லவே இல்ல,” மடக்கினாள் ரம்யா.
“அது…அது வந்து ரம்யா….” பதில்சொல்ல முடியாமல் திணறினாள்.
“இடிமேல இடியைத் தாங்கிட்டு இருக்குற இவகிட்ட இதை வேறச் சொல்லி அழவைக்கணுமான்னு என்மேல இருக்குற அக்கறையில்தான் மறைச்சிருப்பன்னு எனக்குத் தெரியும் ஷர்மிலா,” ரம்யாவே பதில்சொல்லவும், அவர்கள் இறங்கும் இடமும் வந்தது.
குளமான கண்களுடன் அமைதியாக வாசல் வந்த ஷர்மிலாவின் வலது கரத்தைப் பற்றிக்கொண்ட ரம்யா, “முன்னாடி தெரிஞ்சிருந்தால் கண்டிப்பா மனசு உடைஞ்சு போயிருப்பேன். ஆனால் ஷ்ரவன் இப்போ இருக்கும் நிலையில், கருப்பை இருந்தால் என்ன இல்லேன்னா என்னன்னு விரக்திதான் மிஞ்சுது,” கசந்த குரலில் கூறவும், பதறிப்போனாள் ஷர்மிலா.
“ஏய்! அப்படியெல்லாம் யோசிக்காதே ரம்யா. அவனுக்குச் சீக்கிரமே குணமாகி உன்னோட இன்னும் காதலா வாழத்தான் போகுறான்,” பரிவுடன் அவள் கன்னத்தில் வருடினாள்.
“குணமாகி வந்தாலும், இன்னும் காதலா வாழ்ந்தாலும், இது பட்டுப்போன மரம்தானே,” விரக்தி, ரம்யாவின் பேச்சில் தொக்கி நின்றது.
“போதும் நிறுத்து ரம்யா. உன் ஜென்டில்மேன் கணவன் இதை புரிஞ்சுக்காமலா போவான்,” சற்று அதிகாரமாகவே கண்டித்தவள், உடனே ஷ்ரவனிடம் நடந்த அனைத்தையும் பகிர்ந்து, பேசித் தீர்த்துடலாம் எனத் திரும்பினாள்.
“ப்ளீஸ் வேண்டாம் ஷர்மிலா! இப்போதைக்கு அவருக்கு எதுவுமே தெரியவேண்டாம். சமயம் பார்த்து நானே சொல்லிக்குறேன், இரு கரங்களையும் கூப்பி மன்றாடினாள்.
தன்னையே மறந்திருக்கும் கணவனுக்குத் தான் கருவுற்றதா நினைவில் இருக்கப்போகிறது எனத் தர்க்கம் செய்யும் ரம்யாவிடம் அவளால் வாதாட முடியவில்லை. அவள் தவிப்பும் நியாயம்தானே என உணர்ந்த ஷர்மிலா,
“சரி! சொல்லவேண்டாம். ஆனால் நீ இனிமேல் இப்படிக் கண்டபடி யோசிக்கமாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணு,” எனக் கையை நீட்டினாள்.
அவள் வலது உள்ளங்கையைப் பற்றி சத்தியம் செய்த ரம்யா, “பை தி வே, கருப்பை எடுக்கத் தெரிஞ்ச உனக்கு அதுலேயே புதைஞ்சுபோனது ரெண்டு ஜீவன்றதும் உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்,” என்றாள் பீடிகையுடன்.
இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத் தரப்போகிறாய் என்ற பாவனையில், “ட்வின்ஸ்ன்னு முன்னாடியே தெரியுமா!” வினவினாள்.
“ம்ம்… விபத்து நடந்த அன்னைக்குக் காலையில்தான் செக்கப் போயிட்டு வந்தேன். டாக்டர் கன்ஃபர்ம் பண்ணத வாய்விட்டுச் சொல்லி சந்தோஷப்படுறத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு,” என்றவளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே ஷர்மிலாவுக்குப் புரியவில்லை.
தலைகுனிந்து நிற்கும் அவள் கையைப்பிடித்து தன் வயிற்றின் மேல் அழுந்த பிடித்துக்கொண்ட ரம்யா, “இந்த ரகசியம் எங்களோடவே போகட்டும். யார்கிட்டயும் சொல்லிடாதே!” கெஞ்சினாள் கண்கள் சுருக்கி.
சம்மதம் எனத் தலையசைத்தவள் கனத்த மனத்துடன் நகர்ந்தாள்.
இதற்கிடையில் அண்ணனைக் காண வந்த தருண், “கட்டிப்பிடிக்க வந்தவள என்னடா செஞ்ச. இப்படி மிரண்டு போயிருக்கா,” எடுத்த எடுப்பிலேயே ஓட்ட, திருதிருவென முழித்தான் ஷ்ரவன்.
நெருங்கி வந்து அண்ணனின் முகத்தை ஆராய்ந்தவன், “கன்னம் பழுக்கல… உள்காயாம் ஏதாவது இருக்குமோ,” உச்சுக்கொட்டிக் கொண்டே அவன் முகத்தில் பரவலாக முளைத்திருந்த தாடி முடியைச் சோதித்துக் கலாய்த்துக்கொண்டிருந்தான்.
அத்தனை ஆவேசமாக உறுமிவிட்டுச் சென்றவனின் மனம் மாறியிருப்பது எப்படி என அசைபோட்டவன், “உனக்கு உன் அண்ணின்னா ரொம்பப் பிடிக்குமா. இத்தனை சீக்கிரத்தில் மனசு மாறிட்ட,” என்றான்.
அதுதானே அவன் மண்டையையும் குடையும் விடை தெரியாத புதிர். ரம்யாவின் அலமாரியில் அண்ணனின் நாட்குறிப்பு; சற்றுமுன் ஷர்மிலா குறிப்பிட்ட ஒளிவுமறைவில்லாத அவன் குணம் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்தவன்,
“நீங்க என்ன செஞ்சீங்கன்னு தெரியல ப்ரதர். ஆனால் உங்க மொத்த சினிமாவையும் அவளுக்கு ஓட்டிருக்கீங்க. பெண்கள் ரெண்டு பேருக்கும் ஆறேழு வருஷமா சகவாசம்ன்னு மட்டும் தெரியும். எப்படின்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கதான் நினைவுபடுத்தி கண்டுபிடிக்கணும்,” துப்பு கொடுத்தான்.
ஆறேழு வருட பழக்கமா என மிரண்டவன், “எங்களுது அரேஞ்ச்ட் மேரேஜா இல்ல….” கேள்வியை முடிக்கும் முன், கதவு திறக்கும் சப்தம் கேட்க,